பானு தன் அம்மாவிடம் சென்று, "என் பல் ஆடுகிறது", என்று சொன்னாள். அவள் பல் ஆடுவது அதுவே முதல் முறை. அதனால் அவளக்குச் சிறிது பயமாக இருந்தது.
அம்மா, "உன் நாக்கால் அதைத் தள்ளி விடு"என்று சொன்னார்.
பானு தள்ளித் தள்ளிப்
பார்த்தாள். ஆனால் பல் விழவில்லை .
"கொஞ்சம் பொறு. அது தானாக விழுந்து விடும்", என்று அம்மா சொன்னார்.
பானு அப்பாவிடம் சென்று," என் பல் ஆடுகிறது", என்று சொன்னாள்.
அப்பா அவள் பல்லை ஆட்டிப் பார்த்தார்.
பிறகு, "கொஞ்சம் பொறு. அது தானாக விழுந்து விடும்", என்று சொன்னார்.
ஆனால் பானுவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவள் ஒரு நூலை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் ஒடினாள்.
நூலின் ஒரு முனையை தன் பல்லில் கட்டினாள். மறு முனையைக் கதவில் கட்டினாள்.
பானு தரையில் அப்படியும் இப்படியும் உட்கார்ந்து பல் விழுவதற்காக வெகு நேரம் காத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் பல் விழுவதாக இல்லை.
கதவில் இருந்து நூலை எடுத்து விட்டுத் தன் படுக்கையில் சென்று உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவள் அக்கா அங்கு வந்தாள். "உன் பல் விழுவதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். நான் நூலைப் பிடித்து இழுக்கிறேன். உன் பல் வெளியே வந்துவிடும்", என்று கூறினாள்.
பானு கண்ணை மூடிக்கொண்டு வாயைத் திறந்தாள்.
ஒன்று, இரண்டு, மூன்று! என்று சொல்லி அவள் அக்கா நூலைப் பிடித்து இழுத்தாள்.
"ஆஆஆ!!" என்று பானு கத்தினாள். ஆனால் பல் மட்டும் வெளியே வரவில்லை.
"இந்தப் பல் விழவே போவதில்லை அம்மா", என்றாள் பானு.
"நாங்கள் சிறியவர்களாக இருந்த போது, எங்கள் விழுந்த பல்லை வீட்டுக் கூரையின் மேல் தூக்கிப் போடுவோம். பிறகு எலி அண்ணா மூசாவிடம் அவருடைய உறுதியான பல்லைக் கொடுக்கச் சொல்வோம்", என்று சொன்னார்.
பானு வெளியே ௐடிப் போய் மூசா! மூசா! என்று கத்தினாள்.
அன்று இரவு பானு கனவில் மூசாவைப்பார்த்தாள். அவன் வாயில் வெள்ளையாக ஏதோ ஒன்று இருந்தது. அவன் அவளைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுத் தன் வளைக்குள் சென்றுவிட்டான்.
பானு காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பார்த்தாள். என்ன ஆச்சரியம்!! அவள் பல்லைக் காணவில்லை!
எங்கே போயிற்று? அவள் அங்கும் இங்கும் தேடினாள்.
ஆஹா!! பல் அவள் படுக்கையில் இருந்தது.
பானு பல்லை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். "மூசா! மூசா! இந்தப் பல்லை எடுத்துக் கொண்டு புதிய பல் தா", என்று சொல்லிக் கூரையின் மேல் பல்லைத் தூக்கிப் போட்டாள்.