முஸ்னாவுக்கும் டாடுவுக்கும் மேகங்களைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம்.“உன்னுடைய பெயர் மேகத்தைக் குறிப்பது என உனக்குத் தெரியுமா? முஸ்னா என்றால், மழை தாங்கிய முகில் என்று அர்த்தம்” என்றார் டாடு.
மேகங்கள் பலப்பல வடிவங்களில் இருந்தன - பூக்கோசு, மீசை, பிறை நிலா.
முஸ்னா, நாய் போல் தோன்றிய ஒரு மேகத்தைக் காட்டி “இதற்கு மிகப்பெரிய்ய்ய மூக்கு!” என்றாள்.
“அந்த மேகத்தைப் பார்த்தாயா? அதைப்போலவே இருக்கும் ஒரு விலங்கை எனக்குத் தெரியுமே!” என்றார் டாடு.
“அப்படியா?” என்று உற்சாகமாகக் கேட்டாள் முஸ்னா.
“அதன் பெயர் திமிங்கிலம். அது கடலில் வாழ்கிறது.”
“அதைப்பற்றி இன்னும் நிறையச் சொல்லுங்கள்!” என்றாள் முஸ்னா.
“திமிங்கிலங்களில் ஏராளமான வகைகள் உள்ளன. ஆனால், இந்த மேகத்தின் அளவு எனக்கு நீலத்திமிங்கிலத்தை நினைவுபடுத்துகிறது. நீலத்திமிங்கிலம்தான் பூமியில் இதுவரை வாழ்ந்த எல்லா விலங்குகளிலும் பெரியது. அது, டைனோசரை விட மிகப் பெரியது; யானையை விட மிகமிகப் பெரியது” என்றார் டாடு.
“ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப் பெரியது!” என்றாள் முஸ்னா.
“அதனுடைய இதயத்துக்குள் உன்னால் உட்கார முடியும். அந்த அளவுக்கு அது மிகப்பெரிய விலங்கு” என்று டாடு விளக்கினார்.
“உன்னுடைய நாயின் மூக்கு மிதந்து செல்கிறது, பார்!” என்று சிரித்தார் டாடு.
“அந்த மூக்குக்கு நாயைப் பிடிக்கவில்லை போலும்!” என்று சிரித்தாள் முஸ்னா. “அட! நாயின் மூக்கு திமிங்கில மேகத்தை நோக்கி மிதந்து செல்கிறதே. மூக்கை வைத்துக்கொண்டு திமிங்கிலம் என்ன செய்யும்? மீன்களுக்கு நீருக்கடியில் மூச்சுவிடுவதற்கு தேவை செவுள்களே தவிர மூக்கு அல்லவே” என்றாள்.
“நீ சொல்வது மீன்களுக்குப் பொருந்தும். ஆனால் நீலத்திமிங்கிலம் மீன் அல்ல. அது காற்றை சுவாசிக்கிறது. அதனால் அதற்கு மூக்கு இருக்கிறது” என்றார் டாடு.
“அப்படியானால் அதற்குத்தான் இந்த உலகத்திலேயே பெரிய மூக்கு இருக்க வேண்டும்! நீருக்கடியில் வாழ்கையில், அதனால் எப்படிக் காற்றை சுவாசிக்க இயலும்?” என்று கேட்டாள் முஸ்னா.
“திமிங்கிலங்கள் தனித்தன்மையுடையவை. அவை கடலின் மேற்பரப்புக்கு வந்து மூச்சுவிடும்” என்று டாடு விளக்கினார்.
“ஓ… அப்படியானால் அது மல்லாக்க நீந்துமோ?” என்று கேட்டாள் முஸ்னா.
“உனக்கு மிகத்தெளிவான கற்பனைத் திறன் இருக்கிறது” என்று சிரித்த டாடு, “திமிங்கிலத்தின் மூக்கு அதன் முதுகில் உள்ளது” என்றார்.
“திமிங்கிலம் மூச்சுவிடும் சத்தம் நீண்ட தொலைவுவரை கேட்கும்.
அது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு நீரின் உள்ளே செல்லும். மீண்டும் வெளியே வந்து ‘ப்ஃப்...’ என்று நீளமான சத்தத்துடன் மூச்சுக் காற்றை வெளியே விடும். மூச்சை வெளிவிடும் போது ஒவ்வொரு முறையும் அதன் மூக்கின் மேலே ஒரு நீரூற்றை உருவாக்கும்” என்றார் டாடு.
முஸ்னா அந்தத் திமிங்கில வடிவ மேகத்தை உற்றுப் பார்த்தாள் “டாடு! முதுகில் மூக்கு இருக்கும் அந்தத் திமிங்கிலம் நம் பக்கம் வருகிறது” என்றாள். முஸ்னா, மல்லாக்கப் படுத்துக்கொண்டு தன் கைகளைத் துடுப்பு போல வைத்துக் கொண்டு, “நானும் திமிங்கிலம்தான்!” என்று கூவினாள்.
“...ப்ஃப்... வணக்கம் திமிங்கிலமே!”
திமிங்கிலத் தகவல்கள்
திமிங்கிலத்தைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:
திமிங்கிலங்கள் நிறைய வடிவங்களிலும் அளவுகளிலும் இருக்கின்றன. அவை பூமியில் உள்ள எல்லா கடல்களிலும் வாழ்கின்றன.
அவை மூச்சுவிடும்பொழுது வித விதமான அமைப்புகளிலும் அளவுகளிலும்கூட நீரூற்றுகளை வெளியேற்றுகின்றன. மூச்சுவிடும் விதத்தை கவனித்தே விஞ்ஞானிகள் அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்பதைச் சரியாக சொல்லிவிடுவார்கள்.
நீலத்திமிங்கிலங்களுக்கு பற்கள் இல்லை! அதனால் அவை மிகச் சிறிய விலங்கினங்களை அதிக அளவு நீருடன் விழுங்கிவிட்டு, அவைகளைத் தகட்டெலும்புகளால் வடிகட்டுகின்றன. திமிங்கிலங்கள் பாலூட்டிகள். எனவே, நம்மைப் போலவே அவைகளுக்கும் குழந்தைகள் உள்ளன. அவை ‘கன்றுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
திமிங்கிலக் கன்றுகள், தங்கள் அம்மாக்களோடு பல ஆண்டுகள் நீந்தித் திரிந்து கடல்களில் மகிழ்ச்சியாக வாழத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்கின்றன.
கோட்டைத் தாண்டாத திமிங்கிலங்கள்
கோடைக்காலத்தில் அம்மா திமிங்கிலங்கள் தமது கன்றுகளுடன் உணவு மிகுதியாகக் கிடைக்கும் இடமான துருவப்பகுதிகளை நோக்கிச் செல்கின்றன. பனிக்காலத்தில் துருவப் பகுதிகளின் கடல்கள் உறையத் தொடங்கும்பொழுது, வெப்பமண்டலங்களை நோக்கிச் செல்கின்றன. ஆனால் தென்னரைக் கோளத்தில் வாழும் திமிங்கிலங்கள் வடவரைக்கோளத்திற்கும், வடக்கில் வாழும் திமிங்கிலங்கள் தெற்குதிசைற்கும் செல்வதே இல்லை. பூமத்திய ரேகை என்பது கடலில் இருக்கும் உண்மையான கோடு அல்ல. ஆனாலும் திமிங்கிலங்கள் ஏன் அந்தக் கோட்டைத் தாண்டுவதில்லை என்பது அவைகளுக்கே வெளிச்சம்! தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில் கூட அவை ஏன் அப்படிச் செய்கின்றன என்று நமக்கு இன்னமும் புரிந்தபாடில்லை.