ஆறுகள், காலப்பயண இயந்திரங்களைப் போன்றவை. அவற்றுக்குள் குதித்து, நீண்டகாலம் பின்னோக்கிச் சென்றால், வரலாறு உயிர்பெற்று வருவதைப் பார்க்கலாம்.
இரண்டு ஆறுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. பருவகாலத்தையும், அவை நாட்டின் எந்தப் பகுதியில் ஓடுகின்றன என்பதையும் பொறுத்து அவற்றின் ஓட்டம் வேறுபடும்.
சில ஆறுகள் குளிர்காலங்களில் அமைதியாக இருக்கும்.
சில ஆறுகள் கோடைக்காலங்களில் குறுகியும் அமைதியாகவும் இருக்கும்.
சில ஆறுகள் மழைக்காலங்களில் கோபமாக சீறும்.
ஆறுகள் பழுப்பு, சாம்பல், கருப்பு, நீலம், பச்சை அல்லது பல வண்ணச் சாயல்களிலும் காணப்படலாம். அவற்றின் உள்ளும், அவற்றைச் சுற்றிலும் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்து அவற்றின் நிறம் மாறும்.
சில நேரங்களில் அவற்றின் அடிப்புறத்தில் உள்ள பாறைகளின் நிறத்தையும், சில நேரங்களில் வானத்தின் நிறத்தையும் பிரதிபலிக்கும். காலப்போக்கில் ஆறுகள் தாங்கள் ஓடும் பாதையை மாற்றிக்கொள்ளும். கடந்த காலத்தில் ஓரிடத்தில் இருந்த ஆறு, எதிர்காலத்தில் வேறு எங்காவதும் இருக்கலாம்.
கங்கை போன்ற பல ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடுகின்றன. அவை மனிதகுலம் வளர்வதைப் பார்த்துள்ளன. ஆறுகளுக்கு அருகில் வாழ்வதும் வேலை செய்வதும் மக்களுக்குப் பிடித்தமானதாக இருந்து வந்துள்ளது. ஆறுகளுக்கு மனிதர்களைக் கவனித்துக்கொள்ளத் தெரியும்.
சில உணவுகள் ஆறுகளிலிருந்து கிடைக்கின்றன. பெரும்பாலான உணவுகள் ஆற்றுநீரைக் கொண்டே வளர்க்கப்படுகின்றன. உணவு செரித்த பிறகும், ஆறுகள்தான் நமக்கு உதவுகின்றன!
ஆறுகளால் பேச முடிந்தால், உங்கள் கழிவுகளை வேறு எங்காவது கொட்டுங்கள் என்று சொல்லக்கூடும்.
ஆறுகள் மனிதர்களை மட்டும் கவனித்துக்கொள்வதில்லை. பல பறவைகள், தாவரங்கள், விலங்குகள், மீன்கள், பூச்சிகள், பூக்களும் கூட ஆறுகளையே நம்பியுள்ளன.
ஆறுகள் இசைத் திறமையைக் கூட ஆதரிக்கின்றன. பூச்சிகள் நீருக்கடியில் விசித்திரமான, அற்புதமான பாடல்களைப் பாடும். அந்த ஓசைகள் வேறொரு உலகத்திலிருந்து வருவது போலிருக்கும்.
இந்தியாவின் பெயர் ஒரு ஆற்றின் பெயரிலிருந்து தோன்றியது. ஆங்கிலத்தில் இண்டஸ் என்று அழைக்கப்படும் சிந்து ஆறு, நம் நாட்டின் பெயரைத் தருவது மட்டுமில்லாமல், மிகப்பழைய மனித நாகரிகம் துவங்கிய ஒரு இடமாகும். பண்டைய மக்கள் நகரங்களை அமைக்க இந்த ஆறு உதவியது.
ஆற்றின் வழியாக பல அண்டை, அயல்நாடுகளுக்கு பயணம் செய்யவும் வியாபாரப் பொருட்களை எடுத்துச் செல்லவும் முடிந்தது.
சிந்து சமவெளி மக்கள் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதெல்லாம் முடிவுக்கு வந்தது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் அந்த நாகரிகம் மறைந்துவிட்டது. பேராசையால்தான் அந்த நாகரிகம் அழிந்தது என்று சிலர் நம்புகிறார்கள். காட்டையும் நீரையும் அளவுக்கு மீறி பயன்படுத்தியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சொல்கிறார்கள். வெள்ளங்கள் பயமுறுத்துபவைதான். ஆனால். வெள்ளம் பெருக்கெடுத்து பின் ஆற்றில் திரும்பச் சேரும்போது, ஆற்றங்கரையில் வளம் மிக்க மண்ணை விட்டுச்செல்கிறது. அது பயிர் வளர்க்கச் சிறந்தது!
ஆற்றுப்பெருக்கு உயிர்களையும் கட்டிடங்களையும் அழிக்கக்கூடும். சீறும் ஆறு மக்களைப் பயமுறுத்தும். ஆற்றை அமைதியாக்க பாடல்கள், பிரார்த்தனைகள் மற்றும் அன்பளிப்புகள் உதவும் என்று பழங்கால மக்கள் நம்பினார்கள். ஆனால், அது அவ்வளவு பயனுள்ள யோசனை இல்லை.
ஆறு என்னும் காலப்பயண இயந்திரத்தில் நிகழ்காலத்துக்குத் திரும்பியபின், கடந்த காலத்தில் பார்த்த சில நிகழ்வுகள் இப்பொழுதும் நடப்பதைப் பார்க்கலாம். ஆறுகள் இப்பொழுதும் உணவுக்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் ஆறுகளை இணைக்கவும், ஆற்றிலிருந்து தூரமாக வசிப்பவர்களுக்கு தண்ணீர் கொண்டுசொல்லவும், ஆற்றுப் பயணங்களை எளிதாக்கவும் கால்வாய்களை அமைத்திருக்கிறார்கள்.
ஆறுகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தண்ணீரைச் சேமிக்கவும், அவற்றின் ஆற்றலில் இருந்து மின்சாரத்தை உருவாக்கவும் அணைகள் கட்டப்படுகின்றன.
இப்படி மனிதர்களின் குறுக்கீட்டால் ஆறுகள், தம் போக்கில் பாயமுடிவதில்லை. அணைகளும் கால்வாய்களும் கட்டப்படுவதால், தங்களைச் சார்ந்த உயிரினங்களை ஆறுகளால் சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை.
ஆறுகள் எவ்வாறு செயல்படுகின்றன, எவ்வாறு வாழ்கின்றன, எவ்வாறு இறக்கின்றன என்பது பலருக்கு புரிவதில்லை. சில பகுதிகளில், ஆறுகள் பாலைவனங்களைப் போல வறண்டுள்ளன. மற்ற பகுதிகளில், ஆறுகள் குப்பைத் தொட்டிகள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை மேடுகள் போல நடத்தப்படுகின்றன.
ஆறு என்னும் காலப்பயண இயந்திரம், எதிர்காலத்திற்கு மக்களை அழைத்துச் சென்றால், அவர்கள் என்ன பார்ப்பார்கள்?
பழங்கதைகளில் மட்டுமே வாழ்ந்த, வற்றிப்போன ஆறுகள்தான் அவர்களுக்குக் காட்சியளிக்கும். மாநிலங்களும் நாடுகளும், பிழைத்து மிச்சமிருக்கும் சில ஆறுகளுக்காக போரிடுவதைக் காண்பார்கள். வளமற்ற தரிசு நிலங்களில் அவர்கள் சுற்றித் திரிவார்கள்.
அதற்கு பதிலாக இயற்கையுடனும் ஒருவருக்கொருவருடனும் கூடி வாழும் ஒரு உலகத்தை மனிதர்கள் பார்க்கக்கூடும். அவ்வுலகத்தில் நல்ல நீர் சேமிக்கப்படும், கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்படும். இரண்டுமே பொறுப்புடன் பயன்படுத்தப்படும். அவர்கள் சுத்தமான ஆறுகளையும் அவற்றைப் பாதுகாக்கும் மக்களையும் பார்ப்பார்கள்.
இப்படி சுத்தமான ஆறுகள் உள்ள எதிர்காலத்துக்கு இன்னும் சாத்தியமிருக்கிறது. நமது திறமையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இறந்த ஆறுகளை நம்மால் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆறுகள் நம்மைக் கவனித்துக் கொண்டுள்ளன. இப்போது சில மனிதர்கள் ஆறுகளைக் கவனித்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.
சில நீதிமன்றங்கள், மனிதர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் எல்லாம் ஆறுகளுக்கும் உண்டு என்று தீர்ப்பளித்துள்ளன.
ஒரு ஆற்றை சேதப்படுத்துவது, ஒரு நபருக்கு தீங்கு விளைவிப்பதற்கு இணையாகும். ஒரு ஆறு மக்களுக்கு எதிராக புகார் அளிக்குமானால், அந்தப் பட்டியலின் நீளத்தைக் கற்பனை செய்து பாருங்கள்!
குற்றம்!
நல்ல எதிர்காலம் வேண்டுமென்று குழந்தைகள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். 2015ஆம் ஆண்டில், 11 வயதான ஸ்டெல்லா பவுல்ஸ் மாசுபடுத்தப்பட்ட ஆற்றைத் தனது உள்ளூர் அரசாங்கம் சரிசெய்யவேண்டுமென பிரச்சாரம் செய்தார். அவர்கள் தேவையான நடவடிக்கையும் எடுத்தார்கள்! பெரியவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆறு மல பாக்டீரியாவால் மாசுபட்டுள்ளது!
உலகெங்கிலும், குழந்தைகள் பெரியவர்களிடம் தங்களுக்காக விட்டுச்செல்லும் உலகை நன்றாகப் பராமரிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். நமக்கு இருப்பது ஒரே ஒரு உலகம்தானே!
அமேசான்
கடல் மட்டம் உயர்கிறது!
பருவநிலை ஸ்ட்ரைக்!
ஆறுகளை சுத்தம் செய்யும் பணிக்கு என்றும் முடிவே கிடையாது. இன்னும் நிறைய மனிதர்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் என இந்த எண்ணிக்கைகள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அனைவருக்கும் போதுமான தண்ணீர் உள்ளது நமது நல்வாய்ப்பு.
நாம் ஆறுகளைக் கவனித்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவரும் அக்கறை செலுத்த வேண்டும்.