“கிர்ர்ர்ர்!” பூமி அன்று கோபமாக இருந்தது. மிகமிகக் கோபமாக இருந்தது.
ஆரு விடாமுயற்சியோடு, இருபதாம் முறையாக காமிக்ஸ் புத்தகங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களைப் போல பறக்க முயன்று கொண்டிருந்தாள்.
இருபதாவது முறையாகக் கத்தினாள்.
“கிர்ர்ர்ர்! புவிஈர்ப்பு விசையே, நான் உன்னை வெறுக்கிறேஏஏஏன்!”
“இது நியாயமே இல்லை” என பூமி முணுமுணுத்தது.
“புவியீர்ப்பு விசை அற்புதமான ஒரு சக்தி! காற்று, தாவரங்கள், விலங்குகள், மலைகள், கடல்கள், நட்சத்திரங்கள், வாகனங்கள், பள்ளிக்கூடங்கள், ஆரு, நான் - யாருமே புவியீர்ப்பு விசை மட்டும் இல்லாவிட்டால் இப்போது இருக்கும் இடத்தில் இருக்க முடியாது. இதை எப்படி ஆருவுக்குப் புரிய வைப்பது?”
பூமி ஒரு திட்டம் தீட்டியது.
“வணக்கம் ஆரு! நான்தான் பூமி. உனக்குதான் புவிஈர்ப்பு விசையைக் கண்டாலே பிடிக்கவில்லையே. அதனால், அதை எடுத்துவிடலாமென முடிவு செய்துவிட்டேன். இப்பொழுது நீ உன் ஆசை தீர சுற்றிப் பறக்கலாம்.”
“முதலில் உன்னுடைய சூப்பர் ஹீரோ உடையில் பின்னால் தொங்கும் துணியைப் பிடிக்கப் பார்!”
“ஆஆஆஆஆஆ!”
“அய்யோஓஓஓ!”
“என்ன…”
“வேண்டாஆஆஆம்!”
“ஓஓஓஓஓஓஓ!”
“நிறுத்து. தயவு செய்து நிறுத்து! பறக்க விரும்பியதால்தான் புவியீர்ப்பு விசையை முட்டாள்தனமானது என்றேன். ஆனால் இப்போது எல்லாப் பொருட்களும் பறந்து கொண்டிருக்கின்றனவே!” என்றாள் ஆரு.
“ஓகோ! உன்னைப் பறக்கவிடாமல் தடுப்பது மட்டும்தான் புவியீர்ப்பு விசையின் ஒரே வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்றது பூமி.
“அப்புறம்? என்னைத் தரையிலேயே நிறுத்தி வைப்பது இல்லாமல் வேறு என்ன செய்கிறது அது?” என்று கேட்டாள் ஆரு.
“ம்ம்ம்! புவிஈர்ப்பு கண்ணுக்குத் தெரியாத ஒரு விசை. அது நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாப் பொருட்களும் ஒன்றையொன்று இழுக்கவும் ஈர்க்கவும் வைக்கிறது. எல்லாப் பொருட்களையும் அதனதன் இடத்தில் இருக்க வைக்கிறது.
புவிஈர்ப்பு விசை மட்டும் இல்லாவிட்டால், எல்லாப் பொருட்களும், ஏன் நீயும் நானும் கூட மிதந்து விண்வெளிக்குச் சென்று பூஃப் என்று மறைந்து விடுவோம்!”
ஆரு உடனே, “ஆனால், பார்ப்பதற்கு எந்தப் பொருளும் எதையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல் தெரியவில்லையே” என்று கேட்டாள். “சரியாகச் சொன்னாய் ஆரு! எல்லாப் பொருட்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து, ஒரே இடத்தில் நிலையாக வைத்துக் கொண்டிருந்தாலும் அதை நீ உணர்வதோ பார்ப்பதோ கடினம். ஏனெனில் இங்கு இருப்பதிலேயே நான்தான் கனமான பொருள். அதனால் என் ஈர்ப்புதான் இருப்பதிலேயே வலுவானது. எனவே, நான் எல்லாவற்றையும் என்னை நோக்கி இழுத்து தரையில் இருக்குமாறு செய்கிறேன். எனது நிறை மற்றவற்றை விட அதிகம் என்பதால்தான் எனது ஈர்ப்பு வலுவாக இருக்கிறது. ஞாபகம் வைத்துக்கொள் ஆரு! நிறை அதிகமாகும்போது ஈர்ப்பும் அதிகமாகும்!” என்றது பூமி.
ஒரு பொருளின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவாகும்.
“ஹ்ம்ம்ம்… அப்படியென்றால் நிலா? அதுவும் பெரிதாகத்தானே இருக்கிறது. அப்புறம் வியாழன் கோள்?” என்றாள் ஆரு.
“பரவாயில்லையே, டக்கென்று புரிந்து கொண்டாயே! நிலா என்னை விட இலேசானது. அதனால்தான் நிலாவை விட நான் உன்னை அதிகமாக இழுக்கிறேன். ஆனால், நிலா நமக்கு அருகில் இருப்பதால் கடல் நீரை இழுத்து அலைகளை உருவாக்குகிறது.”
“மேலும், ஒரு பொருள் எவ்வளவு தொலைவாக இருக்கிறதோ, அதன் ஈர்ப்பு விசை அவ்வளவு குறைவாக இருக்கும். வியாழன் கிரகத்தை எடுத்துக்கொள். நம் சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் அதுதான். அது மிகமிக அதிகமான நிறை உடையது. ஆனால், அது மிகத் தொலைவில் இருப்பதால் அதன் ஈர்ப்புவிசை நிலவை விடக் குறைவாக இருக்கிறது.”
இந்த அண்டத்தில் பூமியை விட கனமான பொருட்கள் பல உள்ளன - சூரியனைப் போல. அது பூமியையும் மற்ற கிரகங்களையும் ஈர்த்து, தன்னைச் சுற்றிவர வைக்கிறது. அதனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள், பருவங்கள், விடுமுறை நாட்களோடு பிறந்தநாட்கள் போன்ற சிறப்பான நாட்களும் நமக்குக் கிடைக்கின்றன. பூமியை விடப் பெரிய, கனமான கோள்களும் நட்சத்திரங்களும் உள்ளன. ஆனால், அவை மிகத் தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு நமது கோளின் மீது பெரிதாக தாக்கம் ஏற்படுத்துவதில்லை.
ஆரு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் கைகளை மேலும் கீழும் ஆட்டினாள். “ஆனால், எனக்கு பறக்க ஆசையாக இருக்கிறதே!
மேலே மேலே பறக்க வேண்டுமே!”
“ஒருநாள் உன்னாலும் பறக்கமுடியும். நீ வளரும்போது விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ளலாம். இல்லை, ராக்கெட்டில் ஏறி நிலவுக்குப் போகலாம்.”
ஆருவுக்கு அளவில்லா மகிழ்ச்சி. “ஆம், ஒருநாள் நான் நிச்சயம் பறப்பேன்! இப்பொழுது தயவுசெய்து புவிஈர்ப்பு விசையைத் திருப்பித்தந்து விடுகிறாயா?” என்றாள்.
“எதைப் போட்டு உடைத்தாய் ஆரு?”
“நான் இல்லை அம்மா. இது புவிஈர்ப்பு விசையின் வேலை!”
“கிர்ர்ர்ர்ர்ர்ர்!”
நிலா, வியாழன் கோளாக மாறிவிட்டால் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
பூமி ஏன் சூரியனுக்குள் விழாமல் இருக்கிறது?
நிலவு இன்னும் பத்து மடங்கு தூரம் தொலைவாகப் போய்விட்டால் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
காற்றே இல்லாவிட்டாலும் பறவைகளால் பறக்கமுடியுமா?