ஆஷா ரொம்ப ரொம்ப குட்டிப் பெண்.
சூடான கல்லில் இருக்கும் ரொட்டியைத் திருப்பிப் போடமுடியாத அளவுக்கு அவள் சிறியவள். உப்பி வரும் ரொட்டியை விரல்களைச் சுட்டுக்கொள்ளாமல் அவளால் திருப்பவே முடியாது.
எனவே ரொட்டி மாவு சூடான பஞ்சுத் தலையணைகள் போன்று மாறும்போது அவள் சமையல் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஃபரீதா அத்தையையோ பிற அக்கம்பக்கத்தாரையோ ஃபோனில் அழைக்க முடியாத அளவுக்கு ஆஷா சிறியவள். அம்மாவின் கைபேசியில் இருக்கும் பெயர்களை ஆஷாவால் வாசிக்க முடியாது.
அம்மா அவர்களை அழைக்கும்போது அவள் அழைப்புப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஜோதி மேடமுடன் இன்று கிராமத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தை அம்மா எல்லாருக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வளருவதற்கான யோசனைகளோடு வருமாறு அம்மா எல்லோரிடமும் சொன்னார்.
கரீம் மாமாவின் கடையில் இருந்து எதுவும் வாங்க முடியாத அளவுக்கு ஆஷா சிறியவள். அவளுக்கு இன்னும் சில்லறையை எண்ணத் தெரியாது.
எனவே கனி அக்கா புதிய பேனாவை வாங்கும்போது, ஆஷா பொருட்கள் வாங்கும் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஆஷா ஒரு குட்டிப் பெண். அவளால் பல விஷயங்களைச் செய்ய முடியாது. ஆனாலும் அவள் சில விஷயங்களை செய்யும் அளவு பெரியவள்தான்.
கூட்டத்திற்கு வந்திருந்த அக்கம்பக்கத்தினருக்கு ரொட்டியும் பழச்சாறும் கொடுக்கும் அளவுக்கு ஆஷா பெரியவள்தான். கரீம் மாமாவும், ஃபரீதா அத்தையும் இன்னும் கொஞ்சம், இன்னமும் கொஞ்சம் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.
ஆஷா வயிறு நிறையும் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஆலமரத்துக்கு கீழே உட்கார ஜில்லென்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க முடிகிற அளவுக்கு ஆஷா பெரியவள்தான். தன் பக்கத்துவீட்டாரை அவள் அங்கு கூட்டி வந்தாள்.
ஆஷா இனிமையான ஜாலி பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.
பதிவேட்டில் பெயர் எழுதும் கனி அக்காவிடம் அக்கம்பக்கத்தவர்களின் பெயர்களைச் சொல்லும் அளவுக்கு ஆஷா பெரியவள்தான். அக்காவின் புது பேனா நோட்டில் கீறும் போது ஒரு தாளம் உருவாகிறது. ஆஷா தயாராவதற்கான பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஆலமரத்துக்கு கீழே ஆஷா காத்திருப்புப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஆஷாவுக்கு காத்திருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவளது பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் பெரியவர்கள். அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும்.
“நான் போய் சமைக்க வேண்டும்” என ஜமுனா அத்தை சொல்கிறார்.
“குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டும்” என ஃபரீதா அத்தை சொல்கிறார்.
“நான் கடையைத் திறக்க வேண்டும்” என கரீம் மாமா சொல்கிறார்.
அம்மா நாடாளுமன்ற உறுப்பினரை ஃபோனில் அழைக்கிறார். ஆனால் ஜோதி மேடம் வந்துசேர இன்னும் சிறிது நேரம் ஆகுமாம்.
கிராமவாசிகள் முணுமுணுக்கத் தொடங்கினர். அவர்களின் சத்தம் சிறிய புலம்பலாக இருந்தது. “ஏன் இவ்வளவு நேரம்?” “மதியத்திலிருந்து இங்கேதான் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் கேட்டனர்.
அவர்களின் சிறிய புலம்பல் பெரிய சத்தமாக மாறத் தொடங்கியது. பின்னர் அது கர்ஜனையாக மாறியது.
“இதற்கு மேலும் நம்மால் காத்திருக்க முடியாது” என்று கரீம் மாமா எழுந்தார்.
அம்மாவும், அப்பாவும், கனி அக்காவும் பதட்டமாக இருந்தனர். ஆனால் ஆஷா பதட்டமடையவே இல்லை.
ஏனெனில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிகிற அளவுக்கு பெரியவள்தான்.
ஆஷாவுக்கு அவள் அத்தை சொல்லிக் கொடுத்த பாடல் ஒன்று நினைவில் இருந்தது. அது அனைவரையும் ஒன்று சேர அழைக்கும் பாடல். மாற்றத்துக்கான பாடல். இந்த நேரத்தில் பாட அதுதான் சரியான பாடல்.
ஆஷா எழுந்து நின்று பாடத் துவங்கினாள்.
ஹம் ஹோங்கே காம்யாப், ஹம் ஹோங்கே காம்யாப்,
ஹம் ஹொங்கே காம்யாப், ஏக் தின்…
ஓ! மன் மெய்ன் ஹை விஸ்வாஸ், பூரா ஹை விஷ்வாஸ்,
ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின்.
நாம் வென்றிடுவோம், நாம் வென்றிடுவோம்
நாம் வென்றிடுவோம், ஒரு நாள்.
என் ஆழ்மனதில், நான் நம்புகிறேன்
நாம் வென்றிடுவோம் ஒரு நாள்.
முதலில் ஜமுனா அத்தை பாடத் தொடங்கினார். பின்னர் கரீம் மாமாவும் பாடினார். அடுத்து ஃபரீதா அத்தை, அம்மா, அப்பா எல்லாரும் பாடினர். பாட்டு பாடவே பிடிக்காத கனி அக்கா கூட பாடினாள்.
கொஞ்ச நேரத்தில் எல்லாருமே பாடத் தொடங்கினர். நேரமாவதைப் பற்றி யாருமே கேட்கவில்லை.
திடீரென அங்கு டபடபடபடப டுர்ர்ர்ர்ர்ர் எனும் சத்தம் கேட்கிறது.
ஜோதி மேடம் வந்துவிட்டார். அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வருகிறார். பாடலைக் கேட்ட அவரும் சேர்ந்து பாடத் தொடங்குகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமவாசிகளும் சேர்ந்து பாடலைப் பாடி முடித்தனர். எல்லாரும் உற்சாகமாக இருக்கிறார்கள்.
“ஒரு கூட்டத்தைத் தொடங்க எவ்வளவு அற்புதமான வழி இது” என்ற ஜோதி மேடம் “இது யாருடைய யோசனை?” என்று கேட்டார். “இது என்னுடைய யோசனை. என் பெயர் ஆஷா” என்று ஆஷா சொன்னாள்.
“உனக்கு வேறு ஏதாவது யோசனைகள் இருக்கிறதா ஆஷா?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டார், “ஆமாம், எனக்கு நிறைய யோசனைகள் இருக்கிறது” என்று ஆஷா பதில் சொன்னாள்.
ஆஷா ஜோதி மேடத்திடம் தனது யோசனைகளைச் சொன்னாள்:
அங்கன்வாடியில் சமூகத் தோட்டம் அமைக்க வேண்டும்.
சமூகக்கூடத்தில் நூலகம் அமைக்க வேண்டும்.
இலவசமாக பரிசோதனை செய்ய மருத்துவமனை கட்ட வேண்டும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இசை வகுப்புகள் வேண்டும்.
ஆஷா பேசிக்கொண்டே போனாள், ஜோதி மேடம் சிரிப்போடு அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆஷா சிறியவளாக இருக்கலாம்… ஆனால் அவள் குரல் மிகமிகப் பெரியது.