“அச்சூ” குரங்கு தும்மினாள். அவளுக்கு மோசமாக சளி பிடித்திருந்தது. இலைகளுக்கு இடையிலிருந்து எட்டிப்பார்த்த குயில், “என்ன ஒரு சத்தமான தும்மல் இது! நான் மரத்திலிருந்து கீழே விழுந்திருப்பேன்” என்றான்.
“அப்படியா? இதுவே சத்தமாக இருக்கிறது என்றால், யானையின் தும்மல் எவ்வளவு சத்தமாக இருக்கும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டாள் குரங்கு.
“என்னால் யூகிக்கத்தான் முடியும். ஒருவேளை, இவ்வளவு சத்தமாக இருக்குமோ?” என்று கேட்ட குயில் தும்மிக் காண்பித்தான்.
“...ஆச்சூ!”
“இது அவ்வளவு சத்தமாக இல்லை! யானையின் தும்மல் இதைவிடச் சத்தமாக இருக்கும்!” என்றார் முள்ளம்பன்றி. “அச்சூ!”
அவர் தன் குட்டிக் கன்னங்களை ஊதிப் பெரிதாக்கி தும்மவும், அவரது கூர்மையான மூக்கு நடுங்கியது.
“கொர்ர், கொர்ர்” என்றாள் காட்டுப்பன்றி.
“இது அவ்வளவு சத்தமாக இல்லை! யானையின் தும்மல் ரொம்பப் பெரியதாக இருக்கும்!”
ஆழ மூச்சிழுத்து, “ஆச்சூ, கொர், கொர்” என்றாள்.
“என்ன ஒரே சத்தம்?” என்று கேட்டான் மான்.
“யானையின் தும்மல் எவ்வளவு சத்தமாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் குரங்கு.
“நான் எப்போதும் அடக்கமாகத்தான் தும்முவேன்,” என்று மூக்கைச் சுளித்தபடி சொன்ன மான், “ஆனால், யானையின் தும்மல் சத்தமாக, அருவருப்பாக இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
...ஆஆச்சூ ! ...ஆஆச்சூ!
மன்னிக்கவும்” என்றான்.
“ஆஆஆச்சூ!”
அனைத்து விலங்குகளும் குதித்தனர். காட்டெருதும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துகொண்டார்.
“யானையின் தும்மல் இப்படித்தான் இருக்கும்!” எனப் பெருமையாகச் சொன்னார் அவர்.
அவரை மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, குயில், குரங்கு எல்லாரும் பெருமிதத்துடன் பார்த்தனர்.
“ம்ம்… பரவாயில்லை! ஆனால் அவ்வளவு சரியாக இல்லை” என ஒரு மெதுவான உறுமல் ஒலி கேட்டது.
காட்டெருதுக்கு மூக்கு சிலிர்த்தது.
செடிகளுக்குப் பின்னாலிருந்து புலி பாய்ந்து வந்தாள். தலையைச் சாய்த்தவாறு, வாயை அகலமாகத் திறந்து நீங்கள் கேட்டே இருக்காதபடி அவ்வளவு சத்தமாகத் தும்மினாள்.
“ஆஆஆஆச்ச்சூசூ!”
அப்போது யானையும் அங்கே வந்தான். அவன் புலியிடன் சொன்னான், “மன்னியுங்கள். உங்களுக்கும் சளி பிடித்திருக்கிறதா? எனக்கும் பிடித்திருக்கிறது. நான் இப்போது தும்மப்போகிறேன்.”
“என்ன?” புலி உறுமினாள்.
“என்ன?” காட்டெருது முழங்கினார்.
“என்ன?” மான் குரைத்தான்.
“என்ன?” காட்டுப்பன்றி உறுமினான்.
“என்ன?” முள்ளம்பன்றி கீச்சிட்டார்.
“என்ன?” குயில் பாடினான்.
’ஆஹா!’ குரங்கு யோசித்தாள்.
“அ...ஆ...ஆஆ...” என்று யானை தொடங்கினான்.
காடே காத்திருந்தது. ’இதோ வருகிறது’ என்று எண்ணினாள் குரங்கு.
“ஆஆ.....ஆஆஆ.....
ஆஆ.....ஆஆஆ.....
ஆஆ.....ஆஆஆ.....”
“...ஹ்ஹ்ர்ரம்ப்!”
“அப்பாடா! இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது.தும்பிக்கையை சுத்தம் செய்ய தும்மலே சரி!” என்றான் யானை.
பின்னர் சுற்றிலும் பார்த்துவிட்டு, ‘எல்லோரும் எங்கே போய்விட்டனர்?’ என்று யோசித்தான்.
சிரித்துக்கொண்டே குயில் குரங்கிடம் கேட்டான், “இப்போது தெரிகிறதா யானையின் தும்மல் எவ்வளவு சத்தமாக இருக்குமென்று?”
“ஆமாம், ஆனால்...” எனத் தொடங்கினாள் குரங்கு.
“அய்யோ! இன்னொரு கேள்வியா?” என்று கூவிக் கொண்டே அவசரமாகப் பறந்தோடினான் குயில்.