பட்டுவின் மதிப்பெண் அட்டையை, ஆசிரியை அனுரதாவிடமிருந்து, அப்பா இனிப்பு டப்பாவைப் பெறுவது போல ஒரு பெரிய சிரிப்புடன் பெற்றுக்கொண்டார்.
சென்றமுறை மதிப்பெண் அட்டையைக் கொண்டு ஒரு காகித விமானம் செய்து வீட்டுக்குப்
பறக்கவிட்டதாக பட்டு கூறினான். ஆனால் அது வீட்டுக்குப் போய்சேரவே இல்லை என்பது ஒரு புரியாத ஆச்சரியம்!
என்ன ஒரு வெதுவெதுப்பான கூடு செய்ய அந்த காகிதம் உதவியது என்று மரத்திலிருக்கும் குருவி ஒன்று நமக்கு சொல்லக்கூடும்; அல்லது அது கடலையைப் பொட்டலம் கட்ட எவ்வளவு நல்ல ஒரு கூம்பு செய்ய உதவியது என்று வேர்க்கடலை விற்பவர் சொல்லக்கூடும்!
ஆகையினால், இந்த முறை மதிப்பெண் அட்டையை வாங்க அப்பா பட்டுவுடன் தானே நேரில் சென்றார். மதிப்பெண் அட்டையைப் பார்த்த அப்பாவின் சிரிப்பு பப்பாளிப்பழத் துண்டின் அளவிலிருந்து மெல்லிய எலுமிச்சைப்பழத் துண்டளவுக்கு மாறியது.
வாசிப்பில் 10–க்கு 3 மதிப்பெண்கள். அப்பாவின் புருவங்கள் சண்டையிடும் இரு காளைகளைப் போல் முட்டிக் கொண்டன.
மனப்பாடத்தில் 10–க்கு 4 மதிப்பெண்கள். அவர் தலையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் புயலில் சிக்கிய மரத்தைப் போல் ஆட்டினார்.
பிழையின்றி எழுதுவதில் 10-க்கு 2. அவர் ரயில் என்ஜின் போல், ‘‘உஸ்...’’ என்று பெருமூச்சு விட்டார்.
இருவரும் வீடு திரும்புகையில், ‘இந்த மதிப்பெண் அட்டையை விமானம் செய்தால் போதாது. இதை ராக்கெட் செய்து வெகுதூரம் செல்லுமாறு விடவேண்டும். இதைப் பார்த்ததும் பட்டுவின் அம்மா என்ன சொல்லுவாள்? அவள் எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வந்தவள் ஆயிற்றே!’ என்று அப்பா யோசித்துக்கொண்டே நடந்தார்.
அப்பொழுது வழியில், பட்டுவின் தோழி சாம்பவி ஓடி வந்து பட்டுவுக்கு ஒரு மிட்டாய் கொடுத்தாள். “இது, நேற்று நான் பென்சில் எடுத்து வர மறந்துவிட்டிருக்கையில், என்னுடன் உன் பென்சில்களைபகிர்ந்து கொண்டதற்காக!” என்றாள் சாம்பவி.
'ஓஹோ இது தானா விஷயம்! பட்டு, பென்சில்கள் இல்லாமல் வீட்டுக்கு வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!’ என்று நினைத்துக்கொண்டார் அப்பா.
வீட்டுக்கு வரும் வழியில் சில நாய்கள் மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டிக்கொண்டு இவர்களுடனே ஓடி வந்தன. பட்டு, குனிந்து அவற்றின் தலையை ஆசையாகத் தடவிக் கொடுத்தான்.
“நான்… ம்ம்ம்… நான்... சிண்டு, பிண்டு, காலு ஆகியோருக்கு என் மதிய உணவுப்பெட்டியிலிருந்துசில பூரிகளைக் கொடுப்பேன்" என்றான்.
'ஆனால் உன் அம்மா நீ இன்னும் அதிக பூரிகளைக் கேட்கிறாய் என்று சந்தோஷப்படுகிறாள். அவளுக்கு மட்டும் அவை எங்கே மறைந்து போகின்றன என்று தெரிந்துவிட்டால்…' என்று நினைத்துக்கொண்டார் அப்பா.
பட்டுவும் அப்பாவும் வீட்டருகில் வந்தபோது, அவர்களது பக்கத்து வீட்டு தாஸ் மாமா, தோட்டத்திலிருந்து, “ஹலோ பட்டு! எனக்கு இன்று மருந்துகள் வேண்டாம்.” என்று குரல் கொடுத்தார்.
‘எங்களுக்குக் கூட மருந்துகள் வேண்டாம் தான். இவர் ஏன் மருந்துகளைப் பற்றிப் பேசுகிறார்?'என்று அப்பா ஆச்சரியத்துடன் யோசித்தார்.
“நான் உங்கள் மகனை அந்த மூலைக்கடையிலிருந்து எனக்கு மருந்துகள் வாங்கி வரச் சொல்லுவேன். அவன் எப்பொழுதும் சரியானச் சில்லறை வாங்கி வருவான். நீங்கள் அவனை நினைத்து மிகவும் பெருமைப்பட வேண்டும்!” என்றார் தாஸ் மாமா.
வீடு சேர்ந்ததும், அம்மா வெளியே வந்தபடி, “பட்டுவின் மதிப்பெண்கள் எப்படி?” என்று கேட்டாள். அப்பா கண்களை மூடிக்கொண்டே, “அடேடே! அது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி!” என்றார். பட்டுவின் முகம் நசுங்கிய திராட்சை போல் சிறியதாகிவிட்டது.
“பகிர்ந்துகொள்வதில் 10-க்கு 9 மதிப்பெண்கள். கருணை காட்டுவதில் 10-க்கு 10 மதிப்பெண்கள். மரியாதை கொடுப்பதில் 10-க்கு 11 மதிப்பெண்கள்,” என்றார் அப்பா.
பட்டுவின் முகம் ஆரஞ்சுபழம் போலவும், அம்மாவின் முகம் தர்பூசணிப்பழம் போலவும் பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறின.
அம்மா பட்டுவுடன் கீழே உட்கார்ந்தாள்.
“அம்மா! ஆனால் இது தான் என் உண்மையான ரிப்போர்ட் கார்டு!” என்று அட்டையை நீட்டினான் பட்டு.
அம்மா புன்முறுவலுடன், “நேர்மையில் 10–க்கு 12 மதிப்பெண்கள். இதை விடச் சிறந்த மதிப்பெண் அட்டை யாருக்கும் கிடைக்காது!” என்றார்.