இரவு உணவை சாப்பிட்ட பின்னர் அதிதி, படுக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே,வெளியே பார்த்தாள். கண்ணில் பட்டது முழு நிலா. " நான் நிலாவிற்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் " என்று நினைத்துக் கொண்டாள் .
நினைத்தது தான் தாமதம், தான் பறப்பதை உணர்ந்தாள் அதிதி.
இரவு உணவை சாப்பிட்ட பின்னர் அதிதி, படுக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே,வெளியே பார்த்தாள். கண்ணில் பட்டது முழு நிலா. " நான் நிலாவிற்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் " என்று நினைத்துக் கொண்டாள் .
நினைத்தது தான் தாமதம், தான் பறப்பதை உணர்ந்தாள் அதிதி.
பறந்து நிலாவை அடைந்தாள் அதிதி. சுற்று முற்றும் பார்த்தவள், விளையாட ஆரம்பித்து விட்டாள்.
நிலவில் அமர்ந்து அழகிய மணல் வீடு கட்டினாள். பின்பு அங்குக் கிடைத்த சிறுசிறு கற்களால் மணல் வீட்டை அலங்கரித்து மகிழ்ந்தாள்.
நிலாவில் இறங்கி நெடுநேரமானதால், அவளுக்குப் பசிக்க ஆரம்பித்தது. அங்குமிங்கும் அலைந்து சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தாள்.ஆனால் அவளுக்கு அங்கு ஒன்றுமே சாப்பிடக் கிடைக்கவில்லை
பசி வயிற்றைக் கிள்ளவும், உடனே வீட்டிற்குப் போக வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் எப்படி.....? வழி தெரியாததால் அழ ஆரம்பித்து விட்டாள் அதிதி.
சட்டென்று யாரோ தன்னைத் தொடுவது போல் உணர்ந்தாள் அதிதி. ஒரு அழகிய நீல நிற மேகம் மெத்தென்று அதிதி தோளைத் தொட்டு, " அழாதே அதிதி. நான் உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன். ஏறி உட்கார்ந்துக் கொள்" என்று சொன்னதும் அதிதி சந்தோஷமாக மேகத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் ஏறி அமர்ந்ததும் , மேகம் நகர ஆரம்பித்தது.சுற்று முற்றும் ஆர்வத்துடன் கண்களை சுழல விட்டாள். விமானம் ஒன்று தனக்கருகே, பறப்பதைப் பார்த்தாள் அதிதி. தன் கையை நீட்டித் தொட முயற்சித்தாள் . ஆனால் அவள் கைக்கு எட்டவில்லை அந்த விமானம். மேகத்தில் ஒரு பக்கமாக நகர்ந்து கொண்டு தொடலாம் என்று நினைத்து நகர்ந்தாள். மேகம் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. சாய்ந்து,......... சாய்ந்து........ கவிழ்ந்தே விட்டது.
மேகம் கவிழ்ந்ததும், தலைகீழாக அதிதி விழ, பயத்தில் அலற ஆரம்பித்தாள்.
அதே நேரம்", அதிதி , அதிதி எழுந்திரு. பள்ளிக்கு செல்ல நேரமாகி விட்டது பார்.எழுந்திரு ." என்று அவள் அம்மா எழுப்புவது அவளுக்குக் கேட்டது .
அதிதி எழுந்து படுக்கையில் அமர்ந்து கொண்டு திரு திரு என்று சுற்று முற்றும் முற்றும் பார்த்தாள்.
அட..... அத்தனையும் கனவு. அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிகிறது.