Aesop Neethi Kadhaikal: Thoguthi 1

ஈசாப் நீதிக் கதைகள்: தொகுதி 1

குழந்தைகளுக்கான சிறந்த நீதிகளை எளிய கதைகள் மூலம் சொல்வதில் 'பேரறிஞர் ஈசாப்' அவர்கள் மிகவும் தேர்ந்தவர். அவருடைய ஈசாப் கதைகள் சில எளிய தமிழில் இங்கு தொகுக்கப்படுகிறது.

- ஈசாப்

Source: tamilsurangam.in
Licesne: Creative Commons

ஆமையும் இரண்டு வாத்துகளும்

அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.

ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.

“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.

“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.

“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.

அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை

“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.

இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.

சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.

கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

**நீதி:**

வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

கெட்டிக்காரன் புளுகு

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது

.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”

நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

**நீதி:**

கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

**நீதி:**

நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

விவசாயி, மகன், கழுதை

ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள்.

செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார்.

அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார்.

உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார்.

இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’ என கேட்டார்.

தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர்.

சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?’ என எள்ளி நகையாடினர்.

அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள்.

மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர்.

கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.

விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது.

அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

**நீதி:**

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

பாம்பும் விவசாயியும்

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

**நீதி:**

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.

நாயும் அதன் நிழலும்

முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.

செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.

செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.

அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.

அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

**நீதி:**

பேராசை பெரு நஷ்டம்

சேவலும் இரத்தினக் கல்லும்

அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.

அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.

அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.

**நீதி:**

ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.

சிங்கமும், கரடியும், குள்ளநரியும்

அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.

அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் கரடியும் ஒரு ஒப்பந்தம் செய்தன. சிங்கம் கரடியிடம், "நாம் இருவரும் ஒன்றாக வேட்டையாடி இரையை சமமாக பிரித்துக் கொள்வோமா?" என்றது. கரடியும் சம்மதம் தெரிவித்தது.

ஒருநாள் சிங்கமும் கரடியும் வேட்டைக்குச் செல்லும்போது, வழி தவறிய கால் உடைந்த மான் குட்டி ஒன்று வழியில் அமர்ந்திருபதைப் பார்த்தன. சிங்கத்திற்கும் கரடிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சிங்கமும் கரடியும் உணவு சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது.

சிங்கமோ அந்த மானின் வயிற்றுப்பகுதி எனக்கு தான் என்றது. கரடியோ "இல்லை இல்லை அதன் வயிற்றுப்பகுதி எனக்கு தான்" என்றது. மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன.

அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன.

இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.

**நீதி:**

வீண் சண்டை என்றும் இரு தரப்பினருக்கும் தீமையாகும்.

முயலும் ஆமையும்

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.

ஒருநாள் காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது முயல் மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து போட்டிக்கு சம்மதம் தெரிவித்தது.

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் துவங்கியது.

முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

முக்கால்வாசி தூரம் வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்பு ஓடலாம் என நினைத்து ஒருமரத்தின் கீழ் உறங்கியது.

வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமை, முயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது.

ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

ஆமையை கண்டு முயல் வெட்கித் தலைகுனிந்தது.

**நீதி:**

நிதானம் அலட்சியத்தை வெல்லும்.

இரண்டு முட்டாள் ஆடுகள்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

**நீதி:**

விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.

நரியும் கொக்கும்

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது

நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது.

அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது.

நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது.

கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை.

நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது.

கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது .

கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது.

செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது.

அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது.

பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது.

அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது.

கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை.

குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது.

கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது.

அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது.

அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது.

அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

எறும்பும் வெட்டுக்கிளியும்

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

**நீதி:**

கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், "கொஞ்சம் பாடுவதை நிறுத்து" என்று கேட்டது.

வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, "நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்" என்று திட்டியது.

தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டுவந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து.

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர் களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சங்கீதம் இனிமையானது. அதை அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை.

ஆந்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது.

அருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

**நீதி:**

பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது.

சிங்கத் தோல் போர்த்திய கழுதை

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.

கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.

கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

**நீதி:**

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ''நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்'' என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். ''கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்'' என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், ''கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?'' என்ன என்று கேட்டான்.

அதற்குப் சோமு, ''ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது'' என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

**நீதி:**

ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

சிங்கத்தின் பங்கு

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன.

எல்லா மிருகங்களும் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே நடந்துகொண்டிருந்தது.

இப்படியிருக்கையில் ஒரு நாள், சிங்கம் ஒரு பெரிய மானை வேட்டையாடி வீழ்த்தியது. உடனே எல்லா மிருகங்களும் கூடிவிட்டன.

சிங்கம் மானின் இறைச்சியை நான்கு பங்காகப் பிரித்தது. இருப்பதிலேயே சிறந்த பாகத்தை சிங்கம் தனக்கென எடுத்துக்கொண்டது. "இது எனக்கு, ஏனென்றால் நான்தான் சிங்கம்" என்று சொன்னது.

பிறகு, அடுத்த பகுதியையும் தனக்கென எடுத்துக்கொண்டது. "இதுவும் எனக்குத்தான் உரிமையாகிறது. காரணம் நான்தான் கூட்டத்திலேயே வலிமையானவன்" என்றது.

மூன்றாவது பங்கை எடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டு, "இருப்பதிலேயே வீரமானவனான எனக்கு இது" என்றது.

பிறகு நான்காவது பங்கை மற்ற மிருகங்களின் முன்பாக வைத்துவிட்டு, "யாருக்காவது தைரியம் இருந்தால் இதைத் தொடுங்கள் பார்க்கலாம்" என்றது.

பிற மிருகங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தன.

**நீதி:**

வலுத்தவன் சொல்வதே சட்டம்

இளம் நண்டும் அதன் தாய் நண்டும்

ஒருநாள் ஆற்றங்கரையில் இருந்த சிறிய நண்டு ஒன்று ஆற்றை நோக்கி மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அதனுடைய நடையே நேராக இல்லாமல் கோணலும் மாணலுமாய் இருந்தது. இதைக் கவனித்த ஒரு பெரிய நண்டு ஒன்று, சிறிய நண்டின் அருகே சென்று, “யப்பா மகனே! எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த சிறிய நண்டு, “நானா! நான் இந்த ஆற்றில் போய் நீந்திக் குளிக்கப்போகிறேன்” என்றது. உடனே அந்தப் பெரிய நண்டு, “நீ இப்படி கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக நடந்து போய்க்கொண்டிருந்தால், ஒருபோதும் ஆற்றை அடைய முடியாது” என்றது.

“அப்படியானால், நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்றது சிறிய நண்டு. “அப்படிக் கேள் என் செல்லம், இதோ பார் நான் நடந்து காட்டுகிறேன். அதன்பின்னர் என்னைப் பின்பற்றி நட” என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்து சென்றது. பெரிய நண்டு நடந்துபோன விதத்தைப் பார்த்துவிட்டு, சிறிய நண்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த நண்டும் கோணலும் மாணலுமாய் நடந்து போனது. அப்போது அந்தச் சிறிய நண்டு பெரிய நண்டைப் பார்த்து, “அம்மா! நம்முடைய இனத்தில் உங்களால் மட்டுமல்ல, யாராலும் சரியாக நடக்கத் தெரியாது போலும்” என்றது. இதைக் கேட்ட பெரிய நண்டால், எதுவும் பேச முடியவில்லை.

**நீதி:**

ஆம், சொல்வது அல்லது போதிப்பது யாருக்கும் எளியது. ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக்கடினம்.

நரியும் திராட்சையும்

ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது.

நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது.

ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது.

நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை.

தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள் புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

நமக்குக் கிடைக்காத பொருள் ஒன்றின் மீது தவறு கண்டுபிடிக்கும் குணம் கூடாது.

மேலும் நரி தன் மூளையை உபயோகித்து..வேறு வழிகளிலும் முயன்றிருந்தால் பழம் அதற்குக் கிடைத்திருக்கும்.

**நீதி:**

கிடைக்காவிட்டால் குறைகூறுவது சிலருக்கு வழக்கம்.

சிங்கமும் சிறு எலியும்

ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.

அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.

ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.

வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.

அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.

சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

**நீதி:**

உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது.

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

தவளையும் சுண்டெலியும்

அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.

ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், "எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா?" என்று கேட்டது. தவளையும், "நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம்... தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.

இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.

**நீதி:**

நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.

நட்புக்குத் துரோகம்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, "மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், "மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.

**நீதி:**

கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

தேளும் தவளையும்

அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

“நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!“, என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.

தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

தேள் தவளையைப் பார்த்து, “தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?” என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, “எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை” என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.

ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.

கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

**நீதி:**

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒரு ஓநாய் அதிக தாகத்துடனும் பசியாலும் தவித்துக் கொண்டு இருந்தது.

அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. அப்போது சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதைக் கண்டது.

உடனே அதற்குக் கோபம் வந்தது.

அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து " டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே " என்றது.

ஆட்டுக்க்குட்டு மிகுந்த பயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் பக்கத்தில் தண்ணீர் குடிக்கிறேன் நீங்களோ மேல் பாகத்தில் குடிக்கிறீர்கள் .நான் இங்கே தண்ணீர் குடிப்பதால் அங்கு தண்ணீர் எப்படி கலங்கும் " என்றது.

"ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். அதற்காக அவருடைய தோல் உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்" என்று கோபமாகச் சொல்லியது ஓநாய்.

ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது . அதன் உடல் நடுங்க ஆரம்பித்தது. " ஐயா! நான் சொல்வதைக் கேளுங்கள் தயவு செய்து என் பேச்சை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை" என்று மிகப் பணிவாகச் சொல்லியது.

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு " என்ன கர்வம். எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இனி நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் " என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்தது.

ஆட்டுக்குட்டி என்ன கத்தியும் விடாமல், அதனைக் கடித்துத் தின்றது ஓநாய்.

**நீதி:**

கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்

நன்றி ஓடுகளே

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

சிங்கமும் நரியும்

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன.

இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.

சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.

நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.

"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

**நீதி:**

ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

பேராசையால் உயிரிழந்த கொக்கு

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

**நீதி:**

மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

நாயும் சிப்பியும்

ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம்.

ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது.

ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

"எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் இருப்பதெல்லாம் முட்டை என்று நினைத்த என் முட்டாள்தனத்திற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று புலம்பியது அந்த நாய்.

**நீதி:**

முன்யோசனையின்றி ஒரு செயலில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

கோழியும் பெண்ணும்

ஒரு பெண் கோழி ஒன்றை வளர்த்து வந்தாள். அந்தக் கோழி தினமும் முட்டை ஒன்றை இட்டது.

அந்தக் கோழி நல்ல இனம் என்பதால், அதன் முட்டைகள் நன்றாக இருந்தன. நல்ல விலைக்கும் விற்றன.

திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியது. தினம் அந்தக் கோழிக்குப் போடும் தீனியைப் போல இரண்டு மடங்கு தீனியைப் போட்டால், ஒரு முட்டைக்குப் பதிலாக இரண்டு முட்டை இடும்; நமக்கும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்று நினைத்தாள்.

அடுத்த நாளிலிருந்து கோழிக்கு இரண்டு மடங்கு தீனி போடப்பட்டது. சில நாட்களில் கோழி பெருத்துவிட்டது. நடக்கக்கூட முடியவில்லை. முட்டை போடுவதையும் நிறுத்திவிட்டது.

**நீதி:**

உருவத்தை வைத்து எடைபோடக்கூடாது.

ஜூபிடரும் ஒட்டகமும்

கடவுளான ஜுபிடரிடம் ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வந்து புலம்ப ஆரம்பித்தது. "மற்ற மிருகங்களோடு ஒப்பிட்டால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, யாரையும் தாக்கவோ எதுவுமே எனக்கு நீங்கள் தரவில்லை" என்றது ஒட்டகம்.

"காளை மாட்டுக்கு கொம்பகள் இருக்கின்றன. கரடிக்கு நீண்ட பற்கள்; சிங்கத்திற்கும் புலிக்கும் வலிமையான நகங்கள். இதனால், எல்லா மிருகங்களும் இவற்றைப் பார்த்து அஞ்சுகின்றன. மரியாதை தருகின்றன. ஆனால், என்னிடம் எதுவுமே இல்லாததால், போகிறவர் வருகிறவர் எல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார்கள்" என்று புகார் செய்தது.

ஜூபிடருக்குக் கோபம் வந்தது. "கொஞ்சமாவது யோசனையிருந்தால், மற்ற மிருகங்கள் எதற்குமே இல்லாத பலம் உனக்கு இருப்பது புரிந்திருக்கும். முட்டாள்தனமாக என்னிடம் வந்து புகார் செய்ததால், உன் காதுகள் சின்னதாகப் போகட்டும்" என்று கூறிவிட்டார் ஜூபிடர்.

**நீதி:**

எது தனக்குச் சிறந்தது என தன்னை மட்டுமே வைத்து சிந்திப்பவர்களுக்கு தெரியாது.

ஜூபிடரும் தேனீயும்

தேனீ ஒன்று ஜூபிடரைச் சந்தித்து ஒரு பானை நிறைய சுத்தமான, சுவை மிகுந்த தேனை கொடுத்தது. கடவுளரான ஜூபிடரும் அதை அன்போடு வாங்கிக் கொண்டார். தேனீயின் அன்பால் மகிழ்ந்த அவர், தேனீ கேட்கும் வரத்தைத் தருவதாகவும் சொன்னார்.

தேனீ உடனே, தான் கொட்டியவுடன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டது.

தேனீ இப்படி மோசமான வரத்தைக் கேட்டதில் ஜூபிடர் கோபமடைந்தார். தேனீயின் கருணையில் பிற உயிரினங்கள் வாழ்வதா என்றும் யோசித்தார்.

பிறகு, தேனீ கேட்ட வரத்தைத் தருவதாகவும் ஆனால் அவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் சொன்னார் ஜூபிடர்.

"ஏன்?" என்று கேட்டது தேனீ.

"நீ யாரைக் கொட்டினாலும் மரணம் சம்பவிக்கும். அவர்களுக்கல்ல, உனக்கு" என்றார் ஜூபிடர்.

**நீதி:**

தீய எண்ணம் தீமையையே கொண்டுவரும்.

நாய்களும் மாட்டுத் தோலும்

காட்டுக்குள் சில நாய்கள் பசியோடு இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது ஆற்றில் ஒரு மாட்டின் தோல் மிதப்பதை அவை பார்த்தன.

உடனே தண்ணீரில் இறங்கி அந்தத் தோலை கவ்வ முயன்றன. ஆனால், தண்ணீர் நிறைய இருந்ததால் அது முடியவில்லை.

உடனே, ஆற்றில் ஓடும் தண்ணீரை எல்லாம் குடித்துவிட்டால் அந்தத் தோலை எடுப்பது எளிதாக இருக்கும் என அந்த நாய்கள் நினைத்தன. உடனே, எல்லா நாய்களும் சேர்ந்து தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன.

ஆனால், ஆற்று நீர் முழுவதையும் குடிக்க முடியுமா? ஆனால், அவை மேலும் மேலும் குடிக்க, அவற்றின் வயிறு வெடித்து இறந்துபோயின.

**நீதி:**

அடையவே முடியாததை முயற்சிக்கவே கூடாது.

கழுதையும், மனிதக் குரங்கும், துன்னெலியும்

ஒரு நாள் கழுதையும் மனிதக் குரங்கும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தன. இரண்டும் தங்கள் உருவம் பற்றி புலம்ப ஆரம்பித்தன.

"எனக்கு காது ரொம்பவும் பெரிதாக இருப்பதால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்" என்று வருந்தியது கழுதை. "மாட்டுக்கு இருப்பது போல எனக்கும் கொம்புகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றது அது.

"எனக்கு மட்டும் என்ன, என் பின் பக்கத்தை. யாரிடமும் காட்டவே வெட்கமாக இருக்கிறது. நரியைப் போல எனக்கும் அழகிய ரோமங்களுடன் வால் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றது மனிதக் குரங்கு.

"கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுங்கள்" என்றபடி அங்கு வந்தது துன்னெலி.

"எங்களுக்கு வாலும் கிடையாது. கொம்பும் கிடையாது. கிட்டத்தட்ட பார்வையும் கிடையாது. நாங்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்" என்றது அந்த துன்னெலி.

**நீதி:**

மற்ற சிலரைவிட நாம் நன்றாக இருக்கும்போது, இல்லாததை நினைத்து வருந்தக்கூடாது.

துன்னெலி: ஆங்கிலத்தில் Mole என்று அழைக்கப்படும் துன்னெலிகள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் சில பகுதிகளில் காணப்படும் எலிகளைப் போன்ற சிறிய விலங்கு. பார்வை மிகக் குறைவாக இருக்கும்.

சிங்கமும் சிலையும்

ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.

''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.

**நீதி:**

தனக்கென்றால் தனி வழக்குதான்.

நரியும் அதன் நிழலும்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது.

நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருபதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.

நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருபதனால் சிங்கம் என்னைகண்டு பயந்து சென்றது என நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது.

மாலை வீட்டிற்க்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.

யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம்” என்றது.

அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது.

சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று நரி கூறியது.

சிங்கமோ மிகவும் கோவம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.

நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அபொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.

**நீதி:**

முட்டாள் தனமாக பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.

முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,

பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.

**நீதி:**

முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…

உடைந்த பானை

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

**நீதி:**

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

முயலும் முட்டாள் சிங்கமும்

ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும்.

இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன.

சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்?

சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது.

அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது.

தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது.

அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது.

கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது.

சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம்.

பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது.