மாலை நடைப்பயிற்சிக்கு ஆயத்தமானார் அஜ்ஜா.
“எல்லாவற்றையும் ஞாபகமாக எடுத்துக்கொண்டீர்களா அஜ்ஜா? உங்கள் கைக்கடிகாரம், தொப்பி, பை...?” என்று ஞாபகமறதிக்கு பெயர்போன தனது தாத்தாவைப் பார்த்துக் கேட்டாள், சுஜ்ஜு.
நடைப்பயிற்சிக்குச் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த அஜ்ஜா அண்ணாந்து பார்தார். அவர் எதற்காக மறுபடியும் வீட்டுக்கு உள்ளே விரைகிறார்.
அஜ்ஜா ஜன்னலின் மேலே உள்ள அலமாரியில் தேடினார். கீழே உள்ள பெட்டிக்குள்ளே பார்த்தார்.
அஜ்ஜா எதைத் தேடுகிறார்? யாருக்கும் தெரியவில்லை. ஆனால், யாரும் அவர் வழியில் வரவில்லை.
நேரம் தவறுவது அஜ்ஜாவுக்கு அறவே பிடிக்காது.
அஜ்ஜாவின் பை வழக்கத்தைவிட நிரம்பி இருக்கிறது. அவர் அதைத் தரையில் கவிழ்த்து காலி செய்கிறார்.
ஆனால், அதிலும் அவர் தேடுவது கிடைக்கவில்லை.
அஜ்ஜாவுக்கு மேலும், மேலும் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. அஜ்ஜா தலையை ஆட்டுகிறார்; பல்லைக் கடிக்கிறார்; உறுமுகிறார்; உச்சுக்கொட்டுகிறார். ஆனால் அவர் தேடுவது கிடைத்தபாடில்லை!
ஸோஃபாவின் அடியிலே தேடுகிறார். சிக்கம்மாவின் தலைக்கு மேலே உள்ள புத்தக அலமாரியில் பரபரப்பாய்த் தேடுகிறார்.
அடடே! தாத்தாவின் கால் கட்டைவிரல், டிங்க்கு அக்காவின் மூக்கின் முன்னால் இருக்கிறது!
அப்பாடி!
தாத்தா அப்படியே நகர்ந்து கதவின் பின்னால் மறைந்துவிட்டார்.
அவர் மாடிப்படிகளின் கீழ்ப்புறத்திலே உற்றுப் பார்க்கிறார்.
பின்னர், குளிர் சாதனப்பெட்டியின் மேற்புறத்திலே தேடிப் பார்க்கிறார்.
அப்படி அவர் எதைத்தான் தேடக்கூடும்?
அவர் குப்பைக்கூடையின் அருகில் கூடத் தேடினார்.
அவர் எதைத்தான் தேட முயற்சிக்கிறார்?
அவருக்கு பயந்து, எல்லோரும் தொலைவில் போய்விடுகிறார்கள்.
“அஜ்ஜா, இவ்வளவு நேரமாக எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் சுஜ்ஜு.
சுஜ்ஜு, அஜ்ஜா தேடியதைக் கொடுத்து ஒருவழியாக அவரை நடை பயில அனுப்பி வைத்தாள்.
“அவருடைய குடை இவ்வளவு நேரமும் அவரிடத்திலேயே இருந்தது!” என்றாள் சுஜ்ஜு.
எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.