akka akka iravil suriyan engey pogiradhu

இரவில் சூரியன் எங்கே போகிறது?

சின்ன தம்பியின் விஷயதாகம் நிரம்பிய மனதில் எப்பொழுதும் பெரிய அக்காவிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகள் இருக்கும். அக்காவிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் இருக்கும் என்பதும் தம்பிக்கு தெரியும். ஏனென்றால் அக்காதான் எப்பொழுதும் பெரிய புத்தகங்களாக படிக்கிறாரே! இந்த புத்தகத்தில் சின்ன தம்பிக்கு சூரியன் இரவில் எங்கே செல்கிறது? என்று சந்தேகம். நாளெல்லாம் உழைத்து களைப்பில் ஒய்வெடுக்க உறங்க சென்றதா? இல்லை கடலின் ஆழத்தில், மிக ஆழத்தில் மூழ்கி அங்கு பகல் வெளிச்சத்தை உண்டாக்கி, கடல் தேவதைகள் அந்த ஒளியில் குதித்தாடுவதை பார்க்க போயிருக்கிறதா? கடைசியில் அக்கா சரியான விடையை சொல்கிறார். குதூகலமூட்டும் இந்த புத்தகத்தை படித்து விடையை தெரிந்து கொள்ளும் முன் நீங்களே சொல்லுங்கள்: சூரியன் இரவில் எங்கே செல்கிறது?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அக்கா! அக்கா!

எனக்கு புரியலை!

என்ன புரியலை? சின்ன தம்பி! என்ன புரியலை?

இரவில் சூரியன் எங்கே போகுதுன்னு என்க்குப் புரியலை.

என்ன நினைக்கிறே? சின்ன தம்பி! நீ என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்,நான் நினைக்கிறேன்...சொல்லு சின்ன தம்பி, நீ என்ன நினைக்கிறே?

நான்

நினைக்கிறேன்...

இருக்குது ஒரு பயங்கர பூதம்!

இருட்டு என்னும் கருப்பு பூதம்

சூரியனை சாப்பிடுது

இரவு நேர பசிக்கு தினம்!

அதனாலேதான், அஸ்தமன நேரம்

நீல நிற சூரியனுக்கு சிவப்பு நிறக் கோலம்!

ஆனால் இந்த சூரியன்...

தகதகவென ஒளி பொழியும் தங்கநிற சூரியன்

இருட்டு பூதத்தை எதிர்த்து சண்டை போடுது!

இரவு முழுவதும்,

ஒவ்வொரு இராத்திரி பொழுதும்!

காலையிலே கண்விழிச்சு, நாம பார்க்கும் போது முழுசாக சூரியன் மீண்டும் அரசாள வர்ராரு!

கருப்பு பூதத்தோடு சண்டைபோடத்தான்

இரவெல்லாம் போறாரு சூரியன்னு நினைக்கிறேன்!

புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்கள்

சொல்வது இப்படி இல்லையே!

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

நீ என்ன நினைக்கிறே? சின்னதம்பி என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்...

சொல்லு சின்னதம்பி! நீ என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்...

இப்படியும் இருக்கலாம்! உலகத்தில் இங்கே

இரவாகும் பொழுது

கடலின் மிக கருமையான ஆழத்தில்,

அது ஒரு அற்புத பகலாகும்!

கடல் தேவதைகள் கடலடி குகைகளை விட்டு

வெளியே வந்து சுறா மீன்களோடு

குதூகலமாய் நடனமாடி கொண்டாடும்!

நாமே இதை பார்த்தோமே!

ஞாபகம் இருக்கிறதா? மும்பாய்க்கு

கோடையில் சென்ற போது!

மாலை மயங்கும் நேரத்தில் சூரியன்

வானம் விட்டு நழுவி ஒசையின்றி கடலுக்குள்

சென்று மறைந்ததைப் பார்த்தோமே!

தங்க நிற ஒளியால் கடலில் ஆழத்தை

தகதக வென்று ஜொலிக்கச் செய்ய

அங்கேதான் சூரியன் இரவில் போகிறது!

புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்கள்

சொல்வது இப்படி இல்லையே!

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

நீ என்ன நினைக்கிறே?

சின்னதம்பி என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்,

நான் நினைக்கிறேன்...

சொல்லு சின்னதம்பி நீ என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்...

உண்மையில் இதில் எந்த மர்மமின்றியும் இருக்கலாம்!

சூரியன் நம் தந்தை போல உழைக்கலாம்.

நாள் முழுதும் அலுவலகத்தில் உழைத்த பின்

களைப்போடு இரவு வீட்டிற்கு

செல்லலாம்.

தினமும் விடியும் நேரம் சூரியனும்

நட்சத்திரப் போர்வையை உதறுகிறார்.

தூக்கம் வழியும் கண்களைக் கொண்டு

காலை வானத்திற்கு சிவப்பு நிறம் பூசிவிட்டு

வேலைக்கு மீண்டும் திரும்புகிறார்.

வெளிச்சம் வரும் வரை தான் படுப்பதற்கு,

தன் வீட்டிற்கு சூரியன் செல்வதாய் நினைக்கிறேன்!

புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்கள்

சொல்வது இப்படி இல்லையே!

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

இங்கே வா சின்னதம்பி! அவை சொல்வதை நான் சொல்கிறேன்!

புத்தகங்கள் சொல்வது...

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

புத்தகம் சொல்கிறது

பூமி என்பது ஒரு பந்தை போல !

சூரியனை அது சுற்றது, சுற்றது !

சனிக்கிழமை சந்தையில் அம்மா

உனக்கென வாங்கிய பம்பரம் போல !

ஆனால் மிக மிக மெதுவாக!

புத்தகம் சொல்லுது

அங்கேதான் சூரியன் இரவில் போகுது

அடுத்த பாதியும் நல்ல வெளிச்சம் காணுது.

இது உண்மைதானா அக்கா? இது உண்மைதானா?

என்னால் சொல்ல முடியாது சின்னதம்பி! என்னால் சொல்ல முடியாது!

புத்தகங்கள் எல்லாம் நான் படித்தபோது

சொன்னதென்னமோ

இதுதான்!

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!

சூரியன் இரவில் எங்கே செல்கிறது?

பூமி சூரியனைச் சுற்றி வரும் ஒரு கோளம். நமது சூரிய குடும்பத்தில் இன்னும் எட்டு மற்ற கிரகங்களும் இது போலச் செய்கின்றன. பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர ஒரு ஆண்டு காலம் ஆகிறது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் பொழுது, தன்னுடைய அச்சிலேயும் தானாகச் சுழலுகிறது. ஒவ்வொரு முறை பூமி தன்னைத்தானே சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. அதாவது ஒரு பகல் மற்றும் ஒரு இரவு.

பூமியின் எந்த பாகம் சூரியனை நோக்கி உள்ளதோ அங்கு பகலும், சூரியனிடமிருந்து மறைந்திருக்கும் அடுத்த பகுதியில் இரவாகவும் இருக்கும், பிறகு பூமி மெதுவாக சுழன்று, எங்கு இரவு இருந்ததோ அந்த பகுதி இப்பொழுது சூரியனின் முன்னே வருகிறது.

இப்பொழுது இங்கு பகல். சூரியனிடமிருந்து எதிர்புறம் சென்ற பகுதியில் இப்பொழுது இரவு.

உண்மையில் சூரியனுக்கு அடுத்த புறமாக செல்ல, இதுவரை அடுத்த பகுதியில் இருட்டிலிருந்த மக்கள் சூரியனின் முன் வருவதால், வெளிச்சத்துடன் கூடிய பகலை அனுபவிக்க முடிகிறது.

செய்து பாருங்கள்!

பூமி சூரியனைச் சுற்றி வருவது மற்றும் தன்னைத் தானே சுற்றி வருவது பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும?

எனிமையான இந்த சோதனையைச் செய்து பாருங்கள்.

தேவை:

ஒரு சிறிய ரப்பர் பந்து.

பெரிய டார்ச் விளக்கு.

சில ஃபெல்ட் பேனாக்கள்.

ஒரு நண்பன்.

செய்முறை:

ரப்பர் பந்தை பூமியாக கற்பனை செய்து

கொள்ளுங்கள். பேனாக்களை உபயோகித்து

ரப்பர் பந்தின் மீது உலக வரைபடத்தை வரையுங்கள்.

இப்பொழுது நண்பனிடம் டார்ச் ஒளியை செலுத்தச் சொல்லுங்கள். டார்ச் விளக்குதான் சூரியன் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது பந்தை டார்ச் விளக்குதான் சூரியன் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். மெல்ல பந்தை திருப்புங்கள். இந்தியா சூரியனின் பார்வையில் இருக்கும் பொழுது, அமெரிக்கா இருட்டில் இருக்கிறது.

ஆசியா சூரியனிடமிருந்து விலகிச்செல்ல செல்ல, ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும் சூரிய ஒளி படுகிறது. தொடர்ந்து பூமி சுழன்று கொண்டேயிருக்க, அமெரிக்கா இப்பொழுது வெளிச்சத்திற்கு வருகிறது. சிறிது நேரத்திற்கு பின், இப்பொழுது இந்தியாவிற்கு பகல் வெளிச்சத்தை காணும் அவகாசம்.

ஒவ்வொரு சமயமும் பூமி தனது அச்சின் மீது தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் பொழுது நடப்பது இதுதான். ஒவ்வொரு முறை பூமி சுற்றும் பொழுது இந்தியாவில் (இதே போல் உலகில் ஒவ்வொரு பகுதியிலும்) ஒரு பகலும், ஒரு இரவும் ஏற்படுகிறது.