அக்கா! அக்கா! எனக்கு புரியலை...
என்ன புரியலை? சின்னத்தம்பி! என்ன புரியலை?
ஏன் பொருட்கள் மேல்நோக்கி விழுவதில்லை இதுதான் எனக்கு புரியலை!
நீ என்ன நினைக்கிறாய்? சின்னத்தம்பி!
நீ என்ன நினைக்கிறாய்?
நான் நினைக்கிறேன்,
நான் நினைக்கிறேன்...
என்ன நினைக்கிறாய்? நீ என்ன நினைக்கிறாய்? எனக்கும் சொல்லேன் சின்னத்தம்பி!
நான் நினைக்கிறேன்...
வெகு காலம் முன்னே பொருட்கள் எல்லாம் மேல்நோக்கி விழுந்தனவானம் மிட்டாய் உறைகளால் நிறைந்திருந்தது ஐஸ்கிரீம் குச்சிகளாலும்கூட!
நட்சத்திரங்கள் வாழைப்பழத்தோலில் சறுக்கி விழுந்தன.
கண்ணாடித் துண்டுகள்,
சிலசமயம் நிலவின் அழகிய பாதத்தைக் குத்தின துருப்பிடித்த ஆணிகள்
புரண்டோடும் அவள் வெள்ளி ஆடையைக் கிழித்தன.
நான் நினைக்கிறேன்...
வானில் வாழும் வயதான மூதாட்டிக்கு
குப்பையை சுத்தம் செய்து, செய்து களைத்துவிட்டது.
கோபத்தில் பூமிக்கு கொடுத்தாள் ஒரு சாபம்!
அன்று முதல் பொருட்கள் கீழே விழத் தொடங்கின.
அதனால்தான் பொருட்கள் மேல்நோக்கி விழுவதில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் வானில் வாழும் மூதாட்டிக்கு நாற்றமடிக்கும் கொட்டடியில் வாழ விருப்பமில்லை.
நான் பெரிய புத்திசாலி!
அப்படித்தானே அக்கா?
ஓ, நிச்சயமா! சின்னத்தம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னது சரியாகவும் இருக்கலாம்...
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
இப்படிச் சொல்லலையே!
என்ன சொல்லுது? அக்கா! என்னதான் சொல்லுது?
நீ என்ன நினைக்கிறாய்? சின்னத்தம்பி! என்ன நினைக்கிறாய்?
நான் நினைக்கிறேன்,
நான் நினைக்கிறேன்...
சொல்லு, சின்னத்தம்பி! நீ என்ன நினைக்கிறாய்?
நான் நினைக்கிறேன்...
நான் நினைக்கிறேன்
வெகு காலம் முன்னே பொருட்கள் மேல்நோக்கி விழுந்தன
ஒரு அம்மாவுக்குத் தலைவலியும் தந்தன.
அப்பாவின் சாவி,
அவளுடைய மூக்குத்தி திருகாணி,
தூக்கிப்போட்டு விளையாடிய காசு
(அம்மாவுக்கு தெரிந்தால் கோபிப்பாள் என்று தெரிந்தே செய்வது)
எல்லாமே மேல்நோக்கி விழுந்தன
காணாமலே போய்விட்டன.
நான் நினைக்கிறேன்
அம்மா தன் கடவுள்களை எல்லாம் வேண்டினாள்.
ஒரு கடவுளுக்கு அவள் மீது இரக்கமும் வந்தது.
எல்லா பொருட்களும் கீழே விழுந்தன, அதன்பின் காணாமலும் போகவில்லை.
அம்மாவுக்கு மகிழ்ச்சிதான் (அதுவும் கொஞ்ச நாள்தான்)இப்போது, தரையெல்லாம் குப்பையென புகார்.நான் நினைக்கிறேன்! இதனால்தான் பொருட்கள்மேல்நோக்கி விழுவதில்லை!எல்லாம் சில தொலைந்த காசுகள், திருகாணிகள், சாவிகளுக்காகஒரு பெண்ணின் வேண்டுதல்!
நான் பெரிய புத்திசாலி!
அப்படித்தானே அக்கா?
ஓ, நிச்சயமா! சின்னத்தம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னது சரியாகவும் இருக்கலாம்...
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
இப்படிச் சொல்லலையே!
என்ன சொல்லுது? அக்கா! என்னதான் சொல்லுது?
நீ என்ன நினைக்கிறாய்? சின்னத்தம்பி! நீ என்ன நினைக்கிறாய்?
நான் நினைக்கிறேன்,
நான் நினைக்கிறேன்...
சொல்லு, சின்னத்தம்பி! நீ என்ன நினைக்கிறாய்?
நான் நினைக்கிறேன்...
பூமிக்குள்ளே பேராசை பிடித்த ஒரு பெரிய பூதம் இருக்கிறான்! வாயைப் பிளந்து நாள் முழுவதும்
காத்து நிற்கிறான்!
மிக ஆழமாக நுரையீரல்களை நிரப்பும் வண்ணம் காற்றை உறிஞ்சுகிறான்...
அவன் இப்படி உறிஞ்சும் வரை
எதுவும் மேல்நோக்கி விழாது
எல்லாம் அவன் பிளந்த வாயை நோக்கியே விழுந்திடும்.
நான் நினைக்கிறேன்
பல பொருட்கள் நேராக உள்ளே போய்விடுகிறது
என்னுடைய கோலிகள், உன் ஹேர் கிளிப்புகள்,
அம்மா செய்யும் அருமையான லட்டுகள்
அவற்றை நீயும் சாப்பிடுவதில்லை!
நானும் சாப்பிடுவதில்லை!
ஆனாலும் மறைந்து விடுகிறது
எப்படியோ!
இதனால்தான் பொருட்கள் மேல்நோக்கி விழுவதில்லை,
அவையெல்லாம் பூமியை நோக்கி வேகமாய் வருது!
பூமிக்குள்ளிருக்கும் பூதத்தின் பசியைத் தீர்க்கவே!
நான் பெரிய புத்திசாலி!
அப்படித்தானே அக்கா?
ஓ, நிச்சயமா! சின்னத்தம்பி! நீ புத்திசாலிதான்!
நீ சொன்னது சரியாகவும் இருக்கலாம்...
ஆனால் நான் படித்த புத்தகங்கள்
இப்படிச் சொல்லலையே!
என்ன சொல்லுது? அக்கா! அவை என்னதான் சொல்லுது? இங்கே வா, சின்னத்தம்பி! அவை சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன்!
புத்தகங்கள் சொல்லுது,
அவையெல்லாம் சொல்லுது...
என்ன சொல்லுது? அக்கா! அவை என்னதான் சொல்லுது?
அவை சொல்கின்றன!
இந்த மாபெரும் அண்டத்தில் உள்ள எல்லாமே, அட எல்லாமுமே இந்த மாபெரும் அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அட மற்ற எல்லாவற்றையும் தன்னை நோக்கி இழுக்கிறதாம்.
அவை சொல்கின்றன!
சிறிய பொருட்கள் பெரிய பொருட்களை இழுப்பதை விட, மிகமிக பலமாக பெரிய பொருட்கள் சிறிய பொருட்களை இழுக்கின்றன.
ஆனால் அக்கா! ஏன் பொருட்கள் மேல்நோக்கி விழுவதில்லை? அதைத்தான் சொல்லப் போகிறேன் தம்பி! நீயும் கொஞ்சம் பொறுமையாய் இருந்திடு!
அவை சொல்கின்றன
நமது வீடென்னும் இந்த பூமி
மிகமிகப் பெரியது.
இதன் முன்னே நாமும் இங்குள்ள பொருட்களெல்லாமும் பறக்கும் விமானம், நீலத்திமிங்கலம், நமது கடல்கள்
எல்லாமே மிக மிகச் சிறியவை.
அதனால்தான் பூமி எல்லாவற்றையும் தன்னை நோக்கி மிகமிக வலுவாக இழுக்கிறது.நாமெல்லாம் பூமியை நம் பக்கம் இழுப்பதைவிட மிகுந்த வலிமையுடன்!
இதனால் நாம், நம் சாவிகள், திருகாணிகள், காசுகள் தப்பித்து மிதந்து செல்லவோ மறையவோ மேல்நோக்கி விழவோ முடியாது!
அவை சொல்கின்றன
இந்த பெரும் சக்தி இந்த மாபெரும் சக்திபூமி நம்மையெல்லாம் இழுக்கும் விசை நம்மோடு, பூமியின் எல்லையில் வாழும் பெங்குவின்களையும்
தன்னை நோக்கி இழுக்கும் விசை அதன் பெயர்தான் புவியீர்ப்பு விசை!
இது உண்மையாக இருக்குமா? அக்கா!
உண்மையாக இருக்குமா?
என்னால் சொல்ல முடியாது சின்னத்தம்பி! என்னால் சொல்ல முடியாது! ஆனால் நான் படித்த புத்தகங்கள் எல்லாமும் சொல்வது இதைத்தான்!
மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!
எதுவும் ஏன் மேல்நோக்கி விழுவதில்லை? சுமார் 350 வருடங்களுக்கு முன், ஐசக் நியூட்டன் என்ற ஒரு பிரபலமான ஆங்கிலேய விஞ்ஞானி ஒரு ஆப்பிள் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்.மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று அவர் தலை மீது பட்டென்று விழுந்தது! வலியில் தலையை தடவிக் கொண்டவருக்கு, ஏன் பொருட்கள் மேலே செல்லாமல் கீழே விழுகின்றன என்ற கேள்வி எழுந்தது.
இந்த பூமி ஒரு பெரிய காந்தம் போல் இருக்க வேண்டும். அது சுற்றியுள்ள எல்லாவற்றையும் மிகுந்த விசையுடன் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த கண்ணுக்கு தெரியாத விசையை அவர் புவியீர்ப்பு விசை என்று அழைத்தார். அண்டத்தில் ஒவ்வொரு பொருளும் மற்ற பொருட்களால் கவரப்படுவதைக் கண்டுபிடித்தார். பெரிய பொருட்கள் சிறிய பொருட்களை மிக அதிக விசையுடன் கவர்வதாக சொன்னார். அதோடு பொருட்களின் இடையே உள்ள தூரம் அதிகரிக்க அதிகரிக்க இந்த விசையின் கவரும் சக்தி குறைகிறது.
புவிஈர்ப்பு விசை ஆப்பிள் கீழே விழ மட்டும் உதவுவதில்லை. சந்திரன் பூமியை சுற்றிச் செல்லும் பாதையிலிருப்பதற்கும், மற்ற எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவதற்கும், இந்த ஈர்ப்பு விசை உதவுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையின் சக்திதான் சந்திரன் பூமியை விட்டு விலகி சென்று விடாமலிருக்கவும் உதவுகிறது. அப்படியானால் சந்திரன் பூமியின் மீது வந்து மோதாமலிருக்கச் செய்வது எது? நிலவுக்கும் அதன் ஈர்ப்பு விசை உண்டு. இதனால் அது பூமியை தன் பக்கம் இழுக்கிறது.
ஆனால் பூமியின் ஈர்ப்பு விசை, சுற்றி வரும் சந்திரனின் ஈர்ப்பு விசையை விட பெரியது. இதற்கு மாறாக, சந்திரனின் ஈர்ப்பு விசை அதிகமாக இருந்திருந்தால் பூமி சந்திரனை சுற்றி வந்து கொண்டிருக்கும்!
செய்து பாருங்கள்!
தேவை:
சில ரப்பர் பேண்டுகள், ஒரு ரப்பர் பந்து, நீளமான கயிறு
செய்முறை:ரப்பர் பேண்டுகளை, ரப்பர் பந்தின் மீது இறுக்கமாக மாட்டுங்கள். கயிறை, பந்து மேலுள்ள ரப்பர் பேண்டுகளில் ஒன்றில் கட்டுங்கள். பந்தை எதிலும் இடிக்காமல் உங்கள் தலையைச் சுற்றிச் சுழற்றும்படி வசதியான இடத்தில் நின்று கொள்ளுங்கள். இப்பொழுது கயிறைப் பிடித்து விசையுடன் சுற்றினால் பந்து உங்கள் தலையைச் சுற்றி படுக்கைவாக்கில் நீள்வட்டமாகச் சுழலும்.
பாதிச் சுற்றில் கயிறை விட்டுவிடுங்கள், என்ன நடக்கிறது? பந்து ஒரு நேர்க்கோட்டு பாதையில் உங்களை விட்டு விலகிப் பறந்து செல்லும்.
காரணம் என்ன?கயிற்றில் உள்ள இழுவை விசை, பந்தை தலையைச் சுற்றிச் சுழல வைக்கிறது. கயிறை விட்டதும் இழுவிசை மறைய, பந்து உங்களை விட்டுப் பறந்து செல்௧ிறது.இப்பொழுது பந்தை நிலவாகவும் உங்களை பூமியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். பூமியின் ஈர்ப்பு விசை என்பது கயிற்றில் உள்ள இழுவிசை போல! இந்த இழுவிசை இல்லாவிட்டால், நிலவு வானில் பறந்து போய்விடும்!