akkavum vanna pudhayalum

அக்காவும் வண்ணப் புதையலும்

குப்பைக்கிடங்கின் அருகில் வாழும் இந்தச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் நாள் முழுதும் குப்பையினூடே ஓடித் திரிகின்றனர். ஒரு நாள் அந்தக் குப்பைக்கிடங்கிற்கு வரும் அக்கா, அவர்களது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறாள். வாருங்கள்! புத்தகங்களையும் படித்தலையும் கொண்டாடும் இக்கதையில் அக்காவையும் அவளது இளம் நண்பர்களையும் சந்தியுங்கள்.

- Bhuvana Shiv

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு காலத்தில் சில சிறுவர்கள் ஒரு நகரின் எல்லையில் இருந்தனர். அவர்கள் ஒரு பெரிய  குப்பைக்கிடங்கின் அருகே வசித்தனர். அந்த குப்பைக்கிடங்கு மிக மிகப்பெரியது. கண் எட்டும் தூரம் வரை பரந்து விரிந்தது.

அச்சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. நாள் முழுவதும் அந்த குப்பைக்கிடங்கிலேயே ஓடித்திரிந்தனர்.

சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். மற்றும் சிலர் துணிகளை வகைப்படுத்தி எடுத்தனர்.

அவர்கள் அனைவரும் குப்பையைப் பற்றி பல விஷயங்களை அறிந்திருந்தனர்.

ஒரு நாள் அக்கா அந்த குப்பைக்கிடங்கிற்கு வந்தாள். அவள் ஒரு சிவப்பு நிற சால்வை அணிந்திருந்தாள்.

இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த  சிறுவர்களைப் பார்த்தாள். பிறகு உட்கார ஓர் இடம் தேடினாள். தன் பையைத் திறந்து எதையோ எடுத்தாள்.

அங்கிருந்த சிறுவர்கள் ஆர்வம் தூண்டப்பட்டு சிறிது அருகே வந்தனர்.

அக்கா நிறைய வண்ணமயமான புத்தகங்கள் வைத்திருந்தாள். அவற்றுள் கதைகள் இருந்தன.

சிறுவர்கள் மெள்ள மேலும் நெருங்கி வந்தனர்.

அக்கா தினமும் அங்கு வரத்தொடங்கினாள். சிறுவர்கள், அவள் வரும் சமயத்தில் அலைந்து திரியாமல் அவளருகே அமர்ந்து கதைகள் கேட்டனர்.

விரைவிலேயே அவர்களால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் படிக்க முடிந்தது.

சிறுவர்கள் அக்கா அமரும் இடத்தை அழகுபடுத்த முடிவு செய்தனர்.

ஒரு சிறுமி குப்பைக்கிடங்கிலிருந்து நாற்காலி கொண்டுவந்தாள்.

மற்றொரு சிறுவன் ஒரு கம்பளம் கொண்டுவந்தான்.

இன்னும் சிலர் திரைச்சீலைகள் கொண்டுவந்தனர்.

சீக்கிரமே அக்காவின் இடம் பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.

ஒரு நாள் அக்கா வரவில்லை. அடுத்த நாளும் அவள் வரவில்லை.

சிறுவர்கள் காத்துக்கொண்டே இருந்தனர்.

புத்தகங்களைத் தாமாகப் படித்தனர்.

ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் படித்துக் காண்பித்தனர்.

ஒரு நாள் அக்காவின் முகவரியை ஒரு புத்தகத்தில் கண்டுபிடித்தனர் அச்சிறுவர்கள். அவளைக் காண அனைவரும் புறப்பட்டனர். ஒரு மூட்டைப் புத்தகத்தையும் சுமந்து சென்றனர்.

அவர்களால் பேருந்தில் பெயர்ப்பலகையைப் படிக்க முடிந்தது. அவள் வீட்டு எண்ணையும் தேடிப்பார்த்தனர்.அக்கா அவர்களுக்கு படிப்பதற்கு நன்றாகக் கற்பித்திருந்ததால் அவர்களால் இவற்றைச் செய்ய முடிந்தது.

சிறுவர்கள் அக்காவின் வீட்டைத் தேடி அலைந்தனர். ஒவ்வொரு வீதியிலும் முழுதாகத் தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

சோர்ந்து போய் திரும்பும்போது யாரோ ஒரு சிகப்பு சால்வையைப் பார்த்தனர்.

ஒரு சன்னலின் அருகே கொக்கியில் தொங்கிக்கொண்டு இருந்தது.

அந்த வீட்டினுள் அக்கா படுக்கையில் படுத்திருந்தாள்.

அவள் உடம்பு சரியில்லாமல் மிகவும்  சோர்வாகக் காணப்பட்டாள். கண்களில் சோகத்துடனும் முகத்தில் புன்னகை இல்லாமலும் இருந்தாள்.

மருத்துவர் மருந்து மாத்திரைகள் கொடுத்திருந்தார். ஆனாலும் அவள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சிறுவர்கள் அக்காவைக் கண்டதும் அவளிடம் ஓடிச் சென்றனர். அவளைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டனர்.  அவளுடைய புத்தகங்களை அவளிடம் கொண்டு சென்றனர்.

அக்கா எழுந்து அமர, சிறுவர்கள் அவளுக்குப் புத்தகங்களைப் படித்துக் காண்பித்தனர். மெல்ல, அவள் கண்களில் ஒளியும் உதட்டில் புன்னகையும் திரும்பின.

இப்பொழுது மீண்டும் முன்போலவே அக்கா தினமும் வருகிறாள். சிறுவர்களும் வருகின்றனர்.

தினமும் மாலையில் நீங்கள் அவர்களைப் பார்க்கலாம். அவர்களின் சிரிப்பையும் கேட்கலாம்.அவர்கள் படிப்பதைக் கேட்கலாம். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது உங்களுக்கு கண்கூடாகத் தெரியும்.

சிறுவர்கள், அவர்களது அக்கா மற்றும் அவர்களது புத்தகங்கள்.