akkuvin aathiram

அக்கூவின் ஆத்திரம்

அக்கூவுக்கு அன்றைய தினம் மிக மோசமான தினமாக இருந்தது. அதனால் அவள் மிக மிகக் கோபமாக இருக்கிறாள். அக்கூவின் கோபம் குறைந்ததா, நீங்கள் மிகவும் கோபமாக இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டங்டங்டங்டங்... மணி ஒலித்தது, பள்ளி முடிந்தது.

எல்லாச் சிறுவர்களும் சிரித்தபடி மகிழ்ச்சியாக வீட்டை நோக்கி ஓடினார்கள்.

அக்கூ மட்டும் சிரிக்கவில்லை, மகிழவில்லை, அக்கூ கோபமாக இருக்கிறாள்!

அக்கூவும் அவளுடைய தந்தையும் வயல்வழியாக சென்றார்கள். "அக்கூ, அக்கூ, அதோ பார், சூரியகாந்திப் பூ அழகாக இருக்கிறது" என்றார் அவளுடைய தந்தை.

"ச்சே, இந்தப் பூக்களைப் பார்க்கச் சகிக்கவில்லை" என்றாள் அக்கூ, "எங்கு பார்த்தாலும் ஒரே மஞ்சள், எனக்கு கண் வலிக்கிறது!"

அவர்களுடைய வீட்டின் கூரையில் சில குரங்குகள் அமர்ந்திருந்தன.

"அக்கூ, அக்கூ, அதோ பார், குரங்குகள்" என்றார் அவளுடைய தந்தை.

"ச்சீ" என்றாள் அக்கூ, "இந்தக் குரங்குகளையெல்லாம் யார் பார்ப்பார்கள்? ஓடிப்போங்கள்!" என்று அவற்றை விரட்டினாள்.

"அக்கூ, ஏன் இவ்வளவு கோபம்?"

என்று சிரித்தபடியே, ”இந்தா, கொஞ்சம் மோர் குடி,

எல்லாம் சரியாகிவிடும்" என்றார் தந்தை.

"எனக்கு மோர் வேண்டாம்!" என்றாள் அக்கூ."ஒரே ஒரு துளி... கொஞ்சம் குடித்துப்பாரேன்!""சரி" என்று வாங்கிக்கொண்டாள் அக்கூ.

கொஞ்சம் குடித்தாள், அது ஓரளவு நன்றாகவே இருந்தது.ஆகவே, இன்னும் கொஞ்சம் குடித்தாள்... இன்னும் கொஞ்சம்...

இன்னும் கொஞ்சம்... விரைவில் தம்ளர் காலியாகிவிட்டது.

"கொஞ்சம் வடை சாப்பிடுகிறாயா?" என்று கேட்டார் தந்தை.

"வேண்டாம்" என்றாள் அக்கூ.

"ஒரே ஒரு கடி... கொஞ்சம் சாப்பிட்டுப்பாரேன்!"

"சரி" என்று வாங்கிக்கொண்டாள் அக்கூ. கொஞ்சம் சாப்பிட்டாள், அது நன்றாகவே இருந்தது.

ஆகவே, இன்னும் கொஞ்சம் சாப்பிட்டாள்... இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... விரைவில் தட்டு காலியாகிவிட்டது.

"சமத்து" என்று அவளைப் பாராட்டினார் அக்கூவின் தந்தை, "நீ ஏன் கோபமாக இருக்கிறாய்? அதைக் கொஞ்சம் சொல்லேன்."

"சொல்லமாட்டேன்" என்றாள் அக்கூ .

"நான் ஏதாவது தவறாகச் செய்துவிட்டேனா?"

"இல்லை!"

"அம்மா ஏதாவது தவறாகச் செய்துவிட்டார்களா?"

"இல்லை!"

"பள்ளியில் ஏதாவது நடந்ததா?"

"இருக்கலாம்!"

"ஓஹோ!"

"ஒன்று செய்யலாமா? நான் உனக்கு ஓர் அழகிய காகிதமும் வண்ணப் பென்சில்களும் தருவேனாம், நீ என்ன நடந்தது என்று எனக்கு வரைந்து காட்டுவாயாம். சரியா?"

"சரி, வரைகிறேன்" என்றாள் அக்கூ.

அக்கூ ஒரு செங்கல் வரைந்தாள். "இது ஒரு முட்டாள் செங்கல்" என்றாள்.

"ஏன்? அது உன்னை என்ன செய்தது?"

"இந்தச் செங்கல்தான் இன்று காலை என்னைத் தடுக்கிவிட்டது!" என்றாள் அக்கூ.

"அப்படியானால், அது ஒரு பெரிய முட்டாள்தான்" என்றார் அவளுடைய தந்தை.

அடுத்து, அக்கூ ஒரு பையனை வரைந்தாள்.

"இவன்தான் சூர்யா. இவன் ஒரு மிக மோசமான பையன், நான் கீழே விழுந்தபோது என்னைப் பார்த்துச் சிரித்தான்" என்றாள்.

"நீ சொல்வது சரிதான் அக்கூ. அவன் உன்னைப் பார்த்துச் சிரித்திருக்கக்கூடாது" என்றார் அவளுடைய தந்தை.

இப்போது, அக்கூ ஓர் இட்லியை வரைந்தாள்...

"இது என்னுடைய இட்லி. அந்த முட்டாள் செங்கல் என்னைத் தடுக்கிவிட்டபோது, இந்த இட்லி என்னுடைய மதிய உணவுப் பாத்திரத்திலிருந்து வெளியே விழுந்துவிட்டது!" என்றாள் அக்கூ.

அடுத்து, அக்கூ  ஒரு காக்கையை வரைந்தாள்...

"இது ஒரு மிக மோசமான காக்கை. என்னுடைய இட்லியைத் தூக்கிக்கொண்டு பறந்துவிட்டது!" என்றாள்.

"அடடா, அந்தக் காக்கைக்கு மிகவும் பசி எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்!" என்றார் அவளுடைய தந்தை.

அடுத்து, அக்கூ  தன் ஆசிரியையை வரைந்தாள்.

"இவர்தான் என்னுடைய ஆசிரியை, அமலா மிஸ். நான் கீழே விழுந்தபோது, இவர்தான் எனக்கு உதவி செய்தார், என்னைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்" என்றாள் அக்கூ.   "அடடா, அவர் ரொம்ப நல்லவர்போல!" என்றார் அவளுடைய தந்தை.   "ஆனால், அதன்பிறகு, அவர் என்னுடைய கன்னத்தைக் கிள்ளிவிட்டார். என்னுடைய கன்னத்தை யாரேனும் கிள்ளினால் எனக்குப் பிடிக்காது" என்றாள் அக்கூ.   "ஓ... ரொம்ப வலித்ததா?" என்று அக்கறையோடு கேட்டார் அக்கூவின் தந்தை.   "அப்போது கொஞ்சம் வலித்தது. ஆனால் இப்போது வலி இல்லை!" "நல்லது!"

"அக்கூ, நீ மிகவும் அழகாகப் படம் வரைகிறாய். நீ நல்ல ஓவியர்! இப்போது, உன் அம்மாவுக்காக ஒரு படம் வரைவாயா?" என்று அக்கூவின் தந்தை கேட்டார்.

"ஓ வரையலாமே" என்று சொல்லிவிட்டு அக்கூ விறுவிறுவென்று படங்களை வரைய ஆரம்பித்தாள், "இது ஒரு சிறிய வெள்ளெலி...இது ஒரு படகு... இது ஒரு தென்னை மரம்..."

அடுத்து இன்னொன்று... இன்னொன்று... இன்னும் பல..."இது ஒரு சூரியகாந்தி... இது உங்கள் சைக்கிள் அப்பா... இது ஒரு நாய்... இது ஒரு தவளை..."

இப்படி ஒவ்வொரு படமாக வரைய வரைய, அக்கூ  தன்னையே மறந்துவிட்டாள்... தன்னைத் தடுக்கிவிட்ட முட்டாள் செங்கல், அப்போது அதைப் பார்த்துச் சிரித்த மோசமான பையன், இட்லியைத் திருடிய காக்கை... எல்லாவற்றையும் மறந்துவிட்டாள்.

அக்கூவைப்போல் உங்களுக்கும் கோபம் வருவதுண்டா? அதுபோன்ற நேரங்களில் இவற்றைச் செய்துபாருங்கள்:

1. வாய்விட்டுச் சிரியுங்கள், கைகளை மேலே தூக்கிக் குதியுங்கள்!

2. மெதுவாக, மிக மிக மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள், வெளியே விடுங்கள்!

3. கொஞ்சம் தண்ணீர், அல்லது மோர், குடியுங்கள்!

4. ஒரு பழம் சாப்பிடுங்கள், ஒரு வடைகூடச் சாப்பிடலாம்!

5. உங்களது உணர்வுகளைப்பற்றிப் பெரியவர்கள் யாரிடமாவது சொல்லுங்கள்!

6. உங்களது உணர்வுகளைப்பற்றி எழுதுங்கள்!

7. படம் வரையுங்கள்! வண்ணம் தீட்டுங்கள்!

8. கொஞ்சம் களிமண்ணோடு விளையாடுங்கள்!

9. உங்கள் கோபத்தைப்பற்றி ஒரு பாடல் எழுதுங்கள், அதைச் சத்தமாகப் பாடுங்கள்!

10. ஒரு குரங்கைப்போல் நடனமாடுங்கள்!