மீன் பிடிக்கும் தொழில், மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுவதற்கு முன்பே நடைமுறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வேறு நீர் நிலைகளின் கரைகளிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தால், நீர் வாழ் உயிரினங்களே அவர்கள் உணவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே, தொழில், வாழ்வு, கலை, பண்பாடு எல்லாம் அமைந்து விடுகின்றன.
தமிழகத்தின் நெய்தல் நில மக்களாக, பரதவர்கள் என்ற பிரிவினரைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் தூத்துக்குடி என்று இந்நாள் வழங்கப்பெறும் முத்துக்குளித் துறைப் பகுதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும் உள்ள கடற்கரையோரங்களில் வாழும் மக்கள், தம்மை அவ்வாறு தொன்மையான ‘பரதவர்’ என்றே கூறிக் கொள்கின்றனர். கடல் மீது கலம் கொண்டு சென்று புதிய நிலம் காணும் ஆர்வத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ‘வாஸ்கோடகாமா’ என்ற போர்த்துகீசியர் இந்தியக் கரையில் வந்து இறங்கிய பிறகு, போர்த்துகீசியர் இத் துணைக்கண்டத்தின் மேற்குக் கரையோரங்களில் தமது நிலைகளைத் தோற்றுவித்துக் கொண்டு, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். கடல் துறைகளில் அவர்கள் அடி வைத்ததும் அவர்கள் தொடர்பு கொள்ளக் கூடிய மக்கள் பரதவ மக்களாகவே இருந்தனர்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கமாகிய அக்காலத்தில், பாண்டிய நாட்டின் தென்பகுதி முகமதியர் படையெடுப்பின் காரணமாக ஆட்டங்கண்டு, சிறு சிறு குறுநில மன்னர்களின் ஆட்சியிலே பிளவுபட்டுக் கிடந்தது. கடல் ஆதிக்கம் குறித்து, தமிழ்நாட்டு வாணிபத்திலும் அரசியலிலும் செல்வாக்குப் பெற்று வந்த முகமதியர்களுக்கும், பாண்டியப் பேரரசு வீழ்ந்த பின் தம் செல்வாக்கை இழந்த பரதவருக்கும் இடையே வேறுபாடுகளும் பகைமையும் தோன்றின. இந்நிலை முற்றி, பூசல்களும் தகராறுகளும் வன்முறையில் கொண்டு வந்து விடவே, போர்த்துகீசியரிடம் பரதவர் உதவி கோரும் சந்தர்ப்பமும் வாய்த்தது. கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்திருந்த போர்த்துகீசியர் இவ் வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
மெல்ல மெல்ல, கோவாப் பிரதேசத்துடன், தெற்கே கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பரதவ மக்கள் அனைவரையும் கிறிஸ்தவ மறை தழுவச் செய்தனர். இவ்வாறு சமயம் மாறியவர், பெயரளவில் கத்தோலிக்கராக இருந்தாலும் நடைமுறையில் இந்துக்களாகவே இருந்திருக்கின்றனர். கி.பி. 1542 ஆம் ஆண்டு புனித சவேரியார், யேசு சபைக் குருவாக, பரத குல மக்களிடையே பணியாற்றி வந்த பின்னரே இவர்கள் முறையாகக் கிறிஸ்தவ சமயத்தினராக வாழத் தலைப்பட்டனர்.
வேற்று நாட்டிலிருந்து, அந்நியக் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இந்திய மக்களிடையே வேரூன்றி நிலைக்க வந்த சமயத் துறையில், அந்நாளைய யேசு சபைப் பெரியோர்களாகிய புனித சவேரியார், ஹென்றிக்கஸ் அடிகளார் ஆகியோர், இவ்வெளிய மக்களுக்காக இந்தியப் பண்பாடுகளைக் கொண்டதாகவே மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனவரி முதல் தேதியை, தை முதல் நாள் என்று கொள்ளுமாறு காலக் கணிப்பு நாட்களை அமைத்தும், தமிழைக் கற்று, கிறிஸ்துவ சமயப் பெரியாரின் வரலாறு போன்ற நூல்களை இப்புதிய சமயக்காரருக்காக இயற்றியும் ஹென்றிக்கஸ் அடிகளார் அருந்தொண்டாற்றியிருக்கிறார். இன்றும், இக்கடற்கரையைச் சார்ந்த பரதவர் கிராமங்களில், கோயில்களில் தேர் - திருவிழாக்கள் போன்ற பண்டிகைகள், மணச்சடங்குகளில் இடம் பெற்றிருக்கும் சில பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால், இந்தியப் பண்பின் வேர் நிலைத்திருக்க, சமயம் மட்டுமே மாற்றம் பெற்றிருப்பதை உணரலாம். கோயிலில் நேர்த்திக் கடன் கொடுப்பதிலிருந்து மொட்டையடித்துக் காது குத்துவது வரையிலும், கிறிஸ்துவ சமயம் இந்தியம் தழுவி இருப்பது கண்டு வியப்புத் தோன்றுகிறது.
பொதுவாக, மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு, மொழி ஆகியவற்றில் அவர்களில் அந்நியக் கலப்பு இடம் பெறும் போதுதான் ஏற்படுகிறது என்பது தெளிவு. அந்நியக் கலப்பு, ஒரு வகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் பெறுவதற்கும் வழி வகுக்காமல் இல்லை. முத்துக் குளித்துறைப் பரதவர்கள், தமது பிழைப்புக்காக வேறு இடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை.
வடமாநிலங்களில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக இடம் பெயர்ந்து தென் பகுதிகளில் வந்து குடியேறினாற் போன்றோ, தெற்கு மாநிலங்களிலிருந்து பஞ்சம் காரணமாகப் பிழைப்பை நாடி வடக்கு நகரங்களில் சென்று குடியேறினாற் போன்றோ, இப்பரதவ மக்களுக்குத்தமக்கு வாழ்வளிக்கும் கடல் துறைகளை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் அவசியம் ஏதும் நேரிட்டிருக்கவில்லை. எனவே, போர்த்துகீசியரின் ஆதிக்கம் நாட்டை விட்டுச் சென்று வெகு நாட்களான பின்னரும், நாட்டின் அரசியல் சமுதாயக் களங்களில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்ட பின்னரும், இக்கடல் துறை மக்களின் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வந்திருக்கவில்லை. கடலை நம்பி, உடல் வலிமையை நம்பி வாழும் இவர்களிடையே, உலகின் ஏனைய பகுதிகளில் எய்திவிட்ட பல நூற்றாண்டுகளின் அறிவு மலர்ச்சியும், தொழில் நுணுக்க முன்னேற்றங்களும், அண்மைக்காலம் வரையிலும் கேள்விப்பட்டிராத செய்திகளாகவே இருந்திருக்கின்றன.
கடல் தொழிலில் இயற்கையோடிணைந்த வாழ்வில் உரம் பெற்று விளங்கும் இப் பரதவரின் கட்டுமரங்கள் சென்னையைச் சார்ந்த கடற்துறைகளில் உள்ள தொழிலாளிகளின் கட்டுமரங்களைக் காட்டிலும் நீண்டும் அகன்றும் ‘கொங்கை’ எனப் பெறும் கீழ்ப் பகுதியில் இரு சிறகுகள் போன்று அழகிய செதுக்கு மரங்கள் இணைக்கப் பெற்றும் விளங்குகின்றன. இக் கட்டுமரங்கள் மூன்று கட்டைகளால் பிணைக்கப் பெற்றவை. இதில் பாய் பொருத்திக் கொண்டு ஆழ்கடலுக்குச் சென்று அந்நாளைய ‘தட்டுமடி’ என்ற கயிற்று நூல் வலை போட்டு, நாற்பது, ஐம்பது மடங்கு எடையுள்ள சுறா மீன்களைப் பிடித்து வந்த நிகழ்ச்சிகளை இன்றும் முதியவரான பரதவர் நினைவு கூறுகின்றனர். அக்காலத்தில், சுறா வகை மீன்களின் செதில்கள் - வால் பகுதிகளை (துவி என்று இவர்கள் வழங்குகின்றனர்) கோயிலுக்கு வரியாக விட்டுக் கொடுத்துவிடும் வழக்கம் இருந்தது. இப்பொருள்கள், கீழை நாடுகளான ஜப்பான், மலேயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரத் தொடங்கியதும், கழிக்கப் பெற்ற ‘துவி’க்கு மீனை விட அதிக மதிப்பு உண்டாயிற்று. கோயிலுக்கு துவியைத் தவிர வேறு வகையிலும் பரதவராகிய கடல் தொழிலாளிகள் வரி செலுத்தி வந்தனர். 1960-க்குப் பிறகு, சில தொழிலாளர், விழிப்புணர்ச்சி பெற்று, கோயில் வரியை எதிர்க்கத் தொடங்கினர். 1965-66 கால கட்டத்தில், சுறா மீன் துவிகளைக் கோயில் வரியாக விட்டுக் கொடுப்பதில்லை என்று ஒரு போராட்டத்தை ‘இடிந்தகரை’ என்ற ஊரில் உள்ள மக்கள் நடத்தினர். அதன் பயனாகச் சில பரதவ மக்கள் சில கிறிஸ்தவக் குருமாரின் கோபத்துக்கு ஆளாகி திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப் பெற்றதும், பின்னர் ‘விசுவ ஹிந்து பரிஷத்’ என்ற அமைப்பு அவர்களை இந்துக்களாக மாறச் செய்ததும் வரலாற்று உண்மைகளாகும். அண்மைக் காலங்களில், இறால் மீன் ஏராளமாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பொருளானதும், அரசு இத் தொழிலை இயந்திரமயமாக்குவதற்கு நல்கும் ஆதரவும் உடல் பாடுபடும் மீனவரான பரதவ மக்கள் முன்னேற்றம் காண உதவவில்லை.
ஒரு நாவல் என்பது, நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனை கதைதான்; ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளிலும் நிலைகளிலும் ‘பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அநுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன். இவ்வாறு புதிய புதிய அநுபவங்களை நாடி நான் புதிய களங்களுக்குச் செல்கிறேன்.
அவ்வாறு இந்த நவீனத்தை நான் உருவாக்குவதற்கு, முதன் முதலில் எனக்குத் தூண்டுதலாக இக்களத்தை நான் தேர்ந்து கொள்ளச் செய்தவர், பேராசிரியர் திரு.சிவ சுப்பிரமணியம் (சிவம்) அவர்கள். பின்னர், ஒவ்வொரு கட்டத்திலும் உவந்து எனக்குப் பல செய்திகளைக் கூறியும், உடன் பயணம் செய்தும் உதவியளித்த அவர், மணப்பாடு, உவரி போன்ற கடற்கரை ஊர்களில் நான் தங்கிச் செய்திகள் சேகரிக்கவும் பல நண்பர்களை எனக்கு அறிமுகமாக்கி வைத்தார். இத்தகைய பேருதவிக்கு எவ்வாறு நான் நன்றி தெரிவித்துக் கொள்வேன்? வெறும் சொற்களாகி விடுமோ என்றஞ்சுகிறேன். தூத்துக்குடி, அமலிநகர், மணப்பாடு, உவரி, புன்னைக்காயல், ஆலந்தலை, போன்ற பல ஊர்ச் சோதரரும் சோதரியரும் மனமுவந்து நான் கேட்ட விவரங்களுக்கெல்லாம் தகவல் தந்து உதவியிருக்கின்றனர். மீன் என்றாலே விலக்கப்பட வேண்டியதொரு சொல் என்ற பழக்கத்தில் வளர்ந்த நான் கவிச்சி வாடையிலேயே மூழ்கினாற் போன்று சில ஆண்டுகள் கோவாவில் வாழ்ந்திருக்கிறேன். என்றாலும் நெருங்கிப் பழகித் தொழிலைப் பற்றிய அறிவும், நுணுக்கங்களும் தெரிந்து கொள்ள, அவர்களிடையே சில காலம் ‘வாழ்ந்து’ இருக்க வேண்டியது அவசியமல்லவா? மணப்பாட்டில் நான் தங்கியிருக்கையில் அன்றாடம் காலையில் கடற்கரை மீன்வாடியில் சென்று நான் நிற்கையில் திரு. பிச்சையா வில்லவராயன் அவர்களும், திரு.குருஸ் பர்னாந்து அவர்களும் ஒவ்வொரு வகை மீனையும் கொண்டு வந்து எனக்குக் காட்டிப் பெயரும் விவரங்களும் எடுத்துக் கூறியதை எவ்வாறு மறக்க இயலும்! தொழில் செய்யும் இளைஞர் எல்லோருமே எனக்கு உற்ற சோதாரராகப் பழகியதையும் மிகக் கருத்துடன், இரவானாலும் எனது இருக்கை தேடி வந்து, விட்டுப் போன செய்தியை அக்கறையுடன் எடுத்துக் கூறியதையும், நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறேன். எனது நாவல் எழுதும் முயற்சிகளில் இத்தகைய மனித உறவுகள் என்றுமே மறக்க இயலாப் பசுமையுடன் நெஞ்சத்தில் நிலைத்திருப்பவையாகும்.
இவர்களுடைய பேச்சுவழக்கை ஆராய்ந்து அறிவது, மிகவும் உளம் கவர்ந்ததோர் அநுபவமாக அமைந்தது. இந்நாள் நம் பேச்சு வழக்கிலில்லாத தனித்தமிழ் சொற்களும் போர்த்துகீசியம், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து வந்த சொற்களும் கலந்ததோர் தனி வழக்கு மொழியைப் பேசும் பரதவ சோதரர் தோற்றத்தில் உறுதியும் உரமுமாகக் காட்சியளித்தாலும் சிறிது பழகும் போதே கவடில்லாத குழந்தை உள்ளம் கொண்ட இயல்பினர் என்று தெரிந்து கொள்ளலாம்.
உவரி, மணப்பாடு, அமலிநகர் போன்ற எல்லாக் கடற்கரை ஊர்களிலும், நான் சந்தித்துப் பேசிய நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் கடல் தொழிலாளிகளும், விசைப்படகை ‘விசப் படகு’ என்றே குறிப்பிட்டனர். கடலின் மீது செல்லும் இம் மக்களிடம், வாழ்வின் முன்னேற்றத்துக்கான நிச்சயமில்லாததொரு நிலையையே நான் காண நேர்ந்தது. கூலியாகத் தொழில் செய்து, கூலிக் காசைக் குடிக்கக் கொண்டு செல்லும் ஆண்கள்; கல்வி பயின்று முன்னேறி நல்வாழ்வு பெற வேண்டும் என்ற ஊக்க மலர்ச்சிக்கு இடம் தராத சூழலில் உருவாகும் ஆண் குழந்தைகள்; ‘சீதனம்’ என்ற கொடுமைப் பேயை விரட்ட வழி தெரியாமலே கன்னிமை பறி கொடுக்கும் இளம் பெண்கள் என்ற நிலை, இக்கடற்கரை ஊர்களில் பரவலாக இருக்கிறது. கடலிலே உடற்பாடுபட்டு வரும் தொழிலாளிக்கு நிச்சயமானதொரு வருவாயில்லை. வாழ்வின் ஏமாற்றங்களையும், நிராசைகளையும் மறக்கப் போதையை நாடுகிறான். மதுவிலக்கு அமுலிலிருப்பதாகப் பெயரளவுக்குத்தானிருக்கிறது. போதைச் சரக்கு எந்த நிலையிலும், எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன. உடற்பாடுபட்டு வந்தவனின் சிந்தையை மனங்கவரும் நல்வழியில் செலுத்தவோ இளைப்பாறி தெம்பு கொள்ளச் செய்யும் நோக்குக்கான பொழுது போக்கும், அத்துடன் கல்வி முன்னேற்றத்துக்கான நற்கருத்துக்களை ஊன்றச் செய்யும் சாதனங்களோ இல்லை. பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். ஆணோ வினாத் தெரிந்தும் கடலில் மீன் குட்டியாகத் திளைக்கச் செல்கிறான். பணம் சம்பாதிக்கக் கற்று, பல்வேறு கவர்ச்சிகளுக்கும் அடிமையாகிறான். பெண்களுக்கென்று சில ஊர்களில் கூட்டுறவுத் தொழில் நிலையங்கள், வலை பின்னுதல், பன ஓலைப் பொருள்கள் செய்தல் என்று வாய்ப்புகளைத் தந்து ஓரளவு பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளித்திருந்தாலும், ‘சீதனம்’ என்ற கொடுமை, இந்துவானாலும், கிறிஸ்தவரானாலும் முறைகேடான வாழ்க்கைக்கே வழி செய்கிறது. உடல் பாடுபட்டு ‘இறால்’ கிடைக்கவில்லை என்று திரும்பும் ஒவ்வொரு பரதவ சோதரனும் பொங்கெழுச்சி கொண்டு செய்வதறியாமல் திகைக்கிறான்.
இயந்திரமயமாக்கும் படகுத் தொழில் இவர்களுடைய வண்மைக்கே உலை வைப்பதாகக் கருதுகின்றனர். இப்பிரச்னைக்கு எத்தனையோ வகையாகத் தீர்வு காண யோசனைகள் கூறப்பட்ட போதிலும், தீர்வு எளிதாக இல்லை. மீன்பிடித் தொழில் படகுச் சொந்தக்காரர் கையிலும் அதற்கு வேண்டிய பணம் முடக்குபவர் கைகளிலும் இருக்கும் வரையிலும் பாடுபடும் கடல் தொழிலாளிகளின் நியாயமான பிரச்னைகள் தீர்வு காணுமா என்பது ஐயத்துக்குரியது. வலிமையுள்ள பிள்ளையே மேலும் மேலும் அன்னையின் சாரத்தை முட்டி முட்டி அருந்த வாய்ப்பிருக்கிறது.
இக்காட்சிகளைக் கண்ட பின்னர், எனது கற்பனையிலே உயிர்த்த மக்களை நான் நடமாடச் செய்து இக் கதையைப் புனைந்துள்ளேன். உண்மையான நிகழ்ச்சிகள் ஆதாரமான புள்ளிகளே; கோலங்கள் முழுதும் கற்பனையே.
இறுதியாக நான் எனக்குப் பேருதவி புரிந்த பல நண்பர்களுக்கும் சோதர சோதரியருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துக் குளித்துறை வரலாறு பற்றிய தகவல்களை எனக்களித்து உதவிய பங்குத்திரு அவர்களுக்கும், உவரியூரிலும், மணப்பாடு, ஆலந்தலை, இடிந்தகரை, அமலி ஆகிய இடங்களில் அன்புடன் எனக்குப் பல தகவல்களையும் தந்துதவிய நண்பர்களுக்கெல்லாம் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலைப் பெருமளவு வரவேற்று நல்ல மதிப்புரைகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் நல்கி பல ஆய்வாளரும் இலக்கிய நண்பர்களும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
வழக்கமாக எனது நூல்களை வெளியிட்டு நல்லாதரவளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இந்நூலின் மூன்றாம் பதிப்பையும் இப்போது கொண்டு வந்துள்ளனர். சிறந்த முறையில் மீண்டும் இந்தப் பதிப்பைக் கொண்டு வந்திருக்கும் வெளியீட்டாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நூலை வாசகர் முன் வைக்கிறேன்.
ராஜம் கிருஷ்ணன்.
இருளும் மழைக்காரும் சற்றே திரை விலக்குகின்றன; தாயின் மடிக்குரிய கதகதப்பைக் கொண்டு வர கிழக்கே எழும்பும் சுடரின் ஒளி எங்கும் பரவுகிறது. தன்னிலே வாழ்வை எழுதிக் கொண்ட மானிடக் குழந்தைகளைக் கடலம்மை சோதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாற்போல், தன் எண்ணற்ற அலைக்கரங்களால் தாங்கித் தாங்கிக் கட்டுமரங்களைக் கரைக்குத் தள்ளி வருகிறாள். மரியான் கால்களை அகற்றி அனியத்தில் ஊன்றி நின்று பாயை விரித்துக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துத் தண்டில் சுருட்டிச் சாய்ந்தாற் போல் தோளில் ஏந்திக் கொள்கையில் புறதலையில் நிற்கும் நசரேன் சாய்ந்த தண்டை ஏந்திக் கீழே வைக்கிறான். அலைகளில் உயர்ந்தும் வழுகினாற்போல் தாழ்ந்தும் அந்தப் பூவாகை மரம் பூவாக மிதந்து கரையை நோக்கி வருகையில் நிறைவின் உருவங்களாக அவர்களுடைய முகங்கள் காட்சியளிக்கின்றன. இருவரும் இளைஞர்கள். செம்பழுப்பான திறந்த மார்புகளும் வலைக் கயிற்றை இழுத்தும் தண்டு வலித்தும் உரமேறித் திரண்ட தசைகளுமாக ஆண்மைக்கும் உடலுழைப்புக்கும் இலக்கணமாகத் திகழும் மேனியர். மரியான் தலையில் வண்ணத் துண்டைச் சுற்றியிருக்கிறான். கருத்த சுருள் முடிக்கற்றை அந்தக் கட்டை மீறிக் கொண்டு நெற்றியில் தவழுகிறது. இடையில் கச்சை; வெற்றிலை பாக்குப் புகையிலை வைத்திருக்கும் சிறிய பைபோன்று பன ஓலையால் முடையப் பெற்ற மடிப்பெட்டியைக் கச்சையில் செருகியிருக்கிறான். நசரேன் மரியானை விட முதிர்ச்சி பெற்றவனாகக் காட்சியளிக்கிறான். ஒட்டிய வயிற்றில் கறுப்பான கச்சை போன்ற சல்லடம் மட்டும் அணிந்து சுக்கானை இயக்குகிறான்.
தென்கரையில் ஈயாகக் கூட்டம் மொய்த்திருக்கிறது. மரத்துக்கும் வலைக்கும் கடன் கொடுத்த வட்டக்காரர்களும் மீனை ஏலம் போடும் ஏலக்காரர்களும், வியாபாரிகளும், ‘பாச்சான்’களாகிய சிறுவர்களும், சுண்டல் கடலை என்று தீனிகள் விற்க வந்திருக்கும் எளிய பெண்களும், சிறு தொழில்காரரும் கூடும் காலை நேரம். பின்னணியில் விண்ணுயர் கூம்பாய் உச்சியில் சிலுவையுடன் மாதா கோயில் விளங்குகிறது. வீடுகள்... குடில்கள்...
மரியான், நீண்ட கொம்பை நீருக்குள் குத்தி மரத்தை வடக்கே கொண்டு செல்கிறான். கரையிலிருந்து நூறுகஜம் தொலைவுள்ள அந்த நீண்ட - அகலம் குறுகிய பகுதி அவர்களுக்கு ஒரு தடை. அவர்களுடைய உரத்தையும் நெஞ்சுறுதியையும் விடா முயற்சியையும் சோதனை செய்யும் தடை. ஆழ்ந்து அடியில் பாறைகள் உள்ள அந்தத் தடையில் அலைகள் சுருட்டிக் கொண்டு உள்ளே செல்லும். கட்டுமரங்களைக் கவிழ்த்துக் கரைப் பக்கமே எறியும். ஆனி ஆடிக் காலத்தில் இந்தப் ‘பாரை’த் தாண்டிச் செல்வதே பெரிய கண்டம். ஆவணிக் கடைசி; ஆறுகளில் புதிய வெள்ளம் புரண்டு வர, கடலில் மீன்கள் ‘கலித்து’ப் பெருகும் நாட்கள்.
பார்* - தடையை தாண்டி லாகவமாக மரத்தைச் செலுத்துகிறார்கள். கரைநோக்கி வருகையில் தடை தடையாகவே இல்லை.
(*பார் - கடலுக்கடியில் உள்ள பாறைத்தொடர்)
பாய்ச்சல் பிள்ளைகள் கடலில் நீந்தி வந்து மரத்தில் ஏறிக் கொள்கின்றனர். இருவரும் மரியானின் தம்பிகள்.
“எலேய்? பள்ளிக்கொடம் போவ இல்ல?”
“என்ன மீன் பட்டிருக்கி?”
“ஏன்லேய் பள்ளிக்கொடம் போவ இல்லங்கறேன்?”
அவன் அதற்குப் பதிலே கூறாமல் தடுப்பால் மரத்தைக் கரைக்குத் தள்ளுகிறான். கரையில் ஒதுங்கியதும் பாய்த்தண்டை இழுத்து இருவருமாக வீசுகின்றனர். நசரேனின் தம்பி ஜான் பெரியவன். அவன் வலைகள் அடங்கிய ‘கோட்மாலை’* மரியானுடன் இழுத்துக் கரையில் போட்டு மீனை ஓமலில் தட்ட உதவுகிறான். கொம்பு, தாவுகல்@ ஆகிய சாதனங்களை அகற்றிய பின் அடக்காவியை# வைத்து மரத்தை மணலில் இழுக்க அந்தப் பையன்களுடன் நசரேன் முனைகையில் மரியான் வலைகளிலிருந்து மீன்களைத் தட்டுகிறான்.
(*கோட்மால் - வலைகளை வைத்துக் கட்டும் பெரிய வலைப்பை. @தாவுகல் - கடலுக்கடியில் ஆழத்தையும், பாறையையும் பரிசோதனை செய்யும் கயிற்றில் இணைந்திருக்கும் சிறுகல். #அடக்காவி - கட்டுமரத்தைக் கரையில் ஏற்றப் பயன்படும் முட்டுக்கட்டை.)
வெள்ளித்துண்டுகள் போல் சாளை மீன்கள், இடையே அங்கே கரையில் கருப்பட்டித் தண்ணீருடன் காத்திருக்கும் ஆத்தாளின் பக்கம் கறிக்கு வாக்காக இருக்கும் பிள்ளைச்சுறா ஒன்று மின்னல் வேகத்தில் கூடையில் விழுகிறது.
இவர்கள் கோளா வலைதான் கொண்டு சென்றிருக்கின்றனர். மரியானின் ஆத்தா கரையில் மீனெடுத்துச் சிறு தொழில் செய்வாள். அவள் கருப்பட்டி நீரை லோட்டாவில் ஊற்றி மகனிடம் கொடுக்கிறாள்.
“குடிச்சுக்கலேய்! இன்னிக்குச் சாளை பன்னண்டுதான் வெல...”
மரத்தை தள்ளிவிட்டு வரும் நசரேனுக்குக் கருப்பட்டிக் ‘கோபி’யை அவள் ஊற்றிக் கொடுக்கிறாள். மேலே நீர்க்காகங்களும், கருப்பு காகங்களும் வட்டமிடுகின்றன. மீன்களைத் தட்ட உதவி செய்யப்புகும் சாக்கில் ஒரு பயல் நான்கைந்து சாளைகளைக் கையில் லபக்கென்று தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
எல்லா மீன்களையும் ‘ஓமல்’ என்ற பன ஓலைக் கூடையில் தட்டிய பிறகு, ஜானும் மரியானும் அதை ஆளுக்கொரு புறம் பிடித்துக் கொண்டு கூட்டம் மொய்த்திருக்கும் மறு ஓரத்துக்கு விரைகின்றனர். அங்கே தான் மீன்களை ஏலம் விடுவதற்குக் காத்திருப்பார்கள். இவர்களைக் கண்டதுமே பிச்சைமுத்துப்பாட்டா ஏலம் கூற வருவாரே? அங்கு ஏதோ சண்டை நடக்கிறது. குருஸ் மாமன் பெண்சாதி சம்சலம்மா பேரன் சக்கிரியாஸிடம் மன்றாடி அழுகிறாள்.
“இவெ ஆத்தா பெத்திருக்கா. மருந்துசரக்கு வாங்கக் கூடத் துட்டில்ல... எல்லாக் காசையும் எல்லாரும் கொண்டு போயிட்டாங்களே! கஞ்சிக்கு அரிசியில்ல. ஆணம்* வய்க்க ஒண்ணில்ல...”
(* ஆணம் - குழம்பு)
சக்கிரியாஸ் பயல் அவள் பிடியை விட்டு ஓடியே போய் விட்டான். வெள்ளைச் சட்டையும் தங்கக் கடியாரமும் சிறு நோட்டுப் புத்தகமுமாக அங்கே வந்திருக்கும் வட்டக்காரரைப் பார்த்து சம்சலம்மா அழுகையைத் தொடருகிறாள். “உளுவை ஸ்றா கொண்ட்ட்டு வந்தா. ஏக்ளாஸ் துவி*, ஏலக்காசு, அஞ்சு மீன் துட்டு, வட்டக்காசு எல்லாம் போயி மிச்சமிருக்கிறதை இவெ அவெ ரெண்டு பேரும் கொண்டிட்டுப் போயிட்டானுவ... நாலணாத் துட்டு வீசி எறிஞ்சிருக்யானுவ...”
(*துவி - சுறாமீனின் துடுப்பு செதில் ஆகிய பகுதிகள்)
அவளுடைய ஓலம் மரியானின் செவிகளில் வேதனையின் அழுகுரலாக விழுகிறது. ஓமலைச் சூழ்ந்து கொண்டு வியாபாரிகளும், சிறு பயல்களும் நெருக்க பிச்சைமுத்துப்பாட்டா, “ஏழு... ஏழரை எட்டு...” என்று குரலை உயர்த்துகிறார்.
கோயில்காரன் ஒண்ணரைக்கண்ணன் *அஞ்சுமீன் தெறிப்பாக @மடிக்காரர்களிடம் வசூல் செய்த மீன்களை ஒருபுறம் ஏலம் கூவுகிறான். #சம்பையாகிய குலசைச் சாயபு, துவிகள் கழிக்கப் பெற்ற உளுவைச் சுறாவைப் பெட்டியில் கட்டி, சைக்கிளில் தூக்கி வைக்கிறார். சுறா மீன்களின் செதிள்களான துவிகளையும் கோயிலில் பணம் கட்டி அவரே குத்தகை எடுத்திருக்கிறார். அவருடைய தம்பி மீரான் மல்சட்டையும் தங்கக் கடியாரமுமாக அந்தக் கரையில் மன்னனுக்குரியதொரு மிதப்புடன் நடக்கிறான்.
(*அஞ்சுமீன் தெறிப்பு - கோயிலுக்குச் செலுத்தும் வரி. @மடிக்காரன் - கடல் தொழிலாளி. #சம்பை - மீன் வணிகன்.)
ஜான் ஏலக்காரர் காசைக் கொடுத்த பின் மீதியிருக்கும் பன்னிரண்டு ரூபாயில் ஆறு ரூபாயை மரியானிடம் கொடுக்கிறான்.
மரம் நசரேனுக்குச் சொந்தம்; வலைகள் மரியானுடையவை. மணற்கரை சற்றே ஏற்றமாக இருக்கும் தொலைவில் அவர்களுடைய வீடுகள் இருக்கின்றன. சில வீடுகள் வெறும் கீற்றுக் குடிசைகள். முன்னும் பின்னும் ஒழுங்கில்லாத வரிசைகள்.
மூக்கொழுகிக் கொண்டும் பரட்டைத் தலைகளுடனும், அழுக்குச் சட்டைகளுடனும், ஒன்றுமில்லாமலும் சிப்பிகளும் சங்குகளும் பொறுக்கிக் கொண்டு மணலில் விளையாடும் சிறுவர் சிறுமியர்; காயவைத்த வலைகள்; பாய்கள்; கோழிகள்; சாக்கடைகள்; நாய்கள்; குந்தி உட்கார்ந்திருக்கும் முதிய தலைமுறையினர்; இளித்துக் கொண்டும், நெளித்துக் கொண்டும் ‘உலகமே நம் காலடியில் விழும்’ என்ற உள்ளுணர்வின் இளமை மதர்ப்போடும் கிணற்றுக்கு நல்ல நீரெடுக்கச் செல்லும் இளங்கன்னியர் எல்லோரையும் கடந்து முதல் வரிசைக்குப் பின் சந்து போன்ற இடத்திலுள்ள நசரேனின் வீட்டுப்பக்கம் மரியான் செல்கிறான். ஜான் காசை ஆத்தாளிடம் கொடுத்துவிட்டுப் போகிறான். ஆடொன்று முன் முற்றத்தில் கத்திக் கொண்டிருக்கிறது.
ரோசிதா ஓரமாக அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருக்கிறாள். பாய்த்தண்டை கீழே அவிழ்த்தது விரிக்காமல் கிடத்தியிருக்கின்றனர்.
“என்னம்பு, மச்சான் ஒரு நாளுமில்லாம அபுறுவமா உள்ளிய வந்துட்டீங்க?” என்று சிரிக்கிறாள். வஞ்சனையில்லாமல் தீனிக்கு ஆசைப்படும் சுபாவம் அவள் உடலில் செழித்திருக்கிறது. கண்களும் கறுத்த இதழ்களும் எப்போதும் சிரிப்பைச் சிந்திக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்தாலே மரியானுக்கு ஏதோ போலிருக்கும். அவளைச் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகர்கோயிலானுக்குக் கட்டிக் கொடுத்த பிறகு, அவன் அவள் வந்திருக்கிறாளென்றாலே முற்றம் கடந்து வருவதில்லைதான். இவர்கள் வீடு ஓடு வேய்ந்து, உள்ளே மச்சம் கட்டிய வீடு. விசாலமான நடுக்கூடமும், பின்னால் குசினிப் பகுதியும், காமிரா அறையும், புறக்கடையும் உள்ள பெரிய வீடு. புறக்கடையில் கடலைப் பார்த்த வாயிலுள்ள வீடு. இவளைக் கல்யாணம் செய்து கொடுத்ததுமே நசரேனின் தந்தை சீக்கில் விழுந்து இறந்து போனார். இவளுக்கு அஞ்சாயிரம் சீதனம் கொடுத்து இருபது பவுன் போட்டு ஆடம்பரமாகக் கல்யாணம் செய்தார்கள். அவர் மிகுந்த செலவாளி; பெருத்த கை. நசரேனின் ஆத்தா வீட்டார் இவர்களைப் போல் கடல் தொழிலிலேயே ஊன்றி வாழும் *கம்மாரக்காரரல்ல. அவர்கள் ‘ஸிலோனில்’ வாணிபம் செய்து பொருள் சேர்த்து உயர்தட்டில் பழக்கமுடைய @மேசைக்காரர்கள். எனவே, அம்புரோஸ் பர்னாந்து, கடன்பட்டேனும் தம் மதிப்பைக் குறையின்றிக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பரக் கொள்கையிலேயே வள்ளச் சொந்தக்காரராக இருந்து, அதை விற்று, வலையை விற்று, கட்டுமரம் மட்டுமே எஞ்சிய நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
(*கம்மாரக்கார - எளிய மீனவரைக் குறிப்பிடும் சொல். @மேசைக்காரர் - பழைய நாட்களில் போர்த்துகீசிய அதிகாரிகளுடன் சமமாகப் பழகி உயர் வகுப்பினரென்று பெயர் பெற்ற வியாபாரிகள்.)
“நசரன் எங்கிய?”
இவன் குரலைக் கேட்டு நசரேன் பீடியும் கையுமாக வெளியே வருகிறான். அவன் கையில் இரண்டு ரூபாய் நோட்டு இருக்கிறது.
“இன்னா மச்சான்?”
மரியான் நோட்டைக் கையில் வாங்காமல் அவனை விழித்துப் பார்க்கிறான்.
“இம்புட்டுத்தானா?” என்று கேட்கும் பார்வை அது.
“புடி மச்சான்! தலையக் கிள்ளிட்டுத்தான் த்லாக் கொல்ல நிறுக்கிறான். ரெண்டு கிலோக் கூட வார இல்லை.”
“மாப்ள? ஆரோடு கதெ? எடு துட்டை! நா எண்ணி வச்சேன், இருவத்தி மூணுறால் இருந்திச்சி? எம்புட்டு வெல இன்னிக்கு?”
“க்லோ ஒண்ணரை ரூவா?...”
இவன் பாய்ந்து அவன் இடுப்புத்துணியை அவிழ்க்க முயலுகிறான். மரியானின் கட்டுமத்தான உடலும், நசரேனின் முறுகிய தசைகளும் விம்மிப் பொருத, அவர்கள் முற்றத்தில் மோதி உருள்கின்றனர். ஆட்டை உதைத்துத் தள்ளிக் கொண்டு மரியான் வசை மொழிகளை உதிர்க்கிறான். அவன் சும்மாயிருப்பானா?
ரோசிதாவுக்கு இது விளையாட்டாக இப்போதும் சிரிப்பாகவே இருக்கிறது.
ஆத்தாதான் சத்தம் கேட்டு உள்ளிருந்து வருகிறாள்.
ரோசிதாவைப் போலின்றி, தாய் சிவப்பாக இருக்கிறாள். முன் பக்கம் சிறிதே நரை கண்ட முடியை எண்ணெய் தொட்டு வாரி முடிந்து கொண்டு, வெளுத்த நீலச் சேலையைப் பாங்காக உடுத்து இருக்கிறாள். கழுத்தில் ஓரிழைப் பொற் சங்கிலியும் அவளுடைய சுத்தமும் அவளை அந்தக் கடற்கரைப் பெண்களிடமிருந்து இனம் பிரித்துக் காட்டுகிறது.
“என்னம்புலேய்! எதுக்காவ இப்பம் கட்டிப் புரளுதீங்க?”
“உள்ள துட்டைக் குடுக்கச் சொல்லுங்க மாமி! மாதா சத்தியமா ரெண்டு ரூவா தான் ஆளுக்குக் கிடச்சிச்சிண்டு சத்தியம்வுடச் சொல்லுங்க...!”
“மாதா சத்தியம்... சாணாப்பயமவெ, சத்தியம் கேக்கான்.” மரியான் முடியைப் பிடித்து உலுக்கிக் கீழே தள்ளியபோது அவனுடைய பல் உதடுகளில் அழுந்தியதால் குருதி கசிகிறது. அது உப்புக்கரிப்பாக நாவில் படுகிறது.
“சத்தியம் வுடச் சொல்லுங்க மாமி? றாலுக்கு அந்தச் சம்பை எம்மாட்டுக் குடுத்தா? கரையில் வச்சிட்ட, அஞ்சு மீன் தெறிப்பிண்டு கோயில் காரப்பய அள்ளி அள்ளிப் போட்டுக் கிடுதாண்டு இங்கிய கொண்டிட்டு வந்து சம்பையிட்டத் தெரியாம கொடுக்கேண்டு, என்னிய ஏமாத்தறா மாமி?”
“இம்பிட்டுத்தானே? அதுக்கு ஏன்லேய் இப்பிடி அடிச்சிட்டு உருளுதீங்க!... சேசுவே! ரத்தம் ஒழுவுது லேய்!” நசரேன் உதட்டைத் துடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான். இதற்குள் வாயிலில் சிறுவர் சிறுமியர் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர்.
யேசம்மா அவர்களை விரட்டுகிறாள்.
“என்னம்புலே வேடிக்கை பாக்குறிங்க? போங்க? அவனவனுவ சண்டை போடுவா, கூட்டுக் கூடுவா...!”
மரியானுக்கு கையில் சிறாய்ப்புக் காயங்கள்.
“வீரிசா மச்சானும் மாப்பிள்ளையும் சண்டை போடுதாக...” என்று ரோசிதா அம்மியைக் கழுவிக் கொண்டு சிரிக்கிறாள்.
“எண்ட துட்டைக் குடுங்க மாமி! இன்னும் ஒரு ரூவாண்ணாலும் இருக்கு...”
“ரெண்டு கிலோ றால் தானிருந்திச்சு. இதபாரு. இப்பத்தான் மூலையில் தலையக் கிள்ளிப் போட்டத கூட்டித் தள்ளினம். ஒண்ணு ரெண்டுண்டு காசப் பதுக்கி வய்க்கிற கூலிப் புத்தி எங்களுக்கில்லலேய்? அது *கூலி மடி செய்யிற கிளாசாளுகளுக்கு இருக்கும். நாங்க ஏதோ காலவசத்தால இன்னிக்கு இந்தால இருக்கிறோமுண்ணு நீ எதும் சொல்லிப் போடுதா? இவெ பப்பா மாதா கொடைண்ணு ஆயிரம் கூட எடுத்துக் குடுப்பாரு. குடுத்துக் குடுத்துத்தா இன்னு, இந்தால கிளாசாளுங்களுக்கு சமமா நிக்கிறோம். ஏன்லே அநாசியமா கண்டதும் நினச்சிட்டு நிக்கே!”
(*கூலி மடி - கூலிக்கு மீன் பிடிப்பவன்.)
மரியானுடைய முரட்டுத்தனமான உடலுக்குள் மென்மையான தொரு நெஞ்சப் பகுதியில் அவள் சொற்கள் தைக்கின்றன. அவனுடைய மனசுக்குள் அன்று மீன்பாடு பத்து ரூபாய்க்கு குறையாமல் வரும் என்று அசைக்க முடியாததொரு கணிப்பு இருந்தது. எங்கோ குறை விழுந்தாற் போல் அவனால் நம்ப இயலவில்லை. கடற்கரையில் ஏலம் விட்ட போது அவன் கவனிக்காமல் சம்சலம்மாளின் அழுகை ஓலத்தையும், சக்கிரியாஸின் ஓட்டத்தையும், வட்டக்காரனின் அழுத்தத்தையும் நினைத்துக் கொண்டிருந்ததாலும், கடற்கரையில் அவ்வாறு கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள மாட்டார்கள். கொடுக்க மாட்டேன் என்று கள்ளுக்குக் காசு எடுத்துக் கொண்டாலும், அதற்காக அடித்துக் கொண்டாலும், தெரியாமல் மோசம் செய்யும் வழக்கம் அவர்களில் இல்லை. இவ்வாறிருக்கையில் நசரேனிடம் தான் அவ்வாறு நடந்து கொண்டு விட்டதாக உள்ளூற நாணியவனாகச் சற்று நின்றுவிட்டு, உற்சாகம் குன்றிய முகத்தோடு வெளியே வருகிறான்.
கால்கள் சூடு பிடிக்கும் மணலில் புதைய நடந்து வருகையில் அவனுக்கு அவமானமா, ஆத்திரமா என்று புலப்படவில்லை. சற்று எட்ட ஏலி நீரெடுத்துக் கொண்டு செல்கிறாள். கையில் தோண்டிப்பட்டை, கயிறு, இடுப்பில் குடம் - பெரிய பித்தளைக் குடம். மெல்லிய உடல் அந்தக் கனம் தாங்காமல் வளைந்து, அசைய, கால்கள் மணலில் புதைய அவள் செல்கிறாள். அருகில் சென்று அந்தக் குடத்தை வாங்கிக் கொண்டு அவளை அந்தச் சுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்றோர் ஆசை முகிழ்க்கிறது. அவனது ஆசையைப் புரிந்து கொண்டுவிட்டாற் போன்று பிச்சைமுத்துப்பாட்டா குறுக்கே வருகிறார்.
“என்னம்ப்புலேய், எங்கிய பார்த்திட்டு நடக்கே? அப்பெ எப்படியிருக்யா? கொஞ்சம் வாசியா? அலவாய்க்கரைப் பக்கம் கால்குத்தி எத்தன நாளாச்சு?”
“ஒடம்பில பெலம் புடிக்கல, பாட்டா இன்னம். இந்த முட்டாப்பய காச்ச ரொம்பக் குலச்சுப் போட்டிச்சி. ஆத்தா *பொதும எல மாதா பாதத்தில வச்ச ரச்சிக் கலக்கிக் குடுக்யா. கூடங்கொளம் சர்க்காராசுபத்திரில மருந்து வாங்கி வந்திச்சு மேரி. டாக்டர் குடிக்யக் கூடாதுண்டு சொன்னாருண்ணு சொல்லுதா. அப்பெ கஞ்சுத் தண்ணி கோப்பித்தண்ணி ஒண்ணும் வாணாமிண்டு இரிஞ்சாலும் இரிப்பா... சாராயம் இல்லாம ஒரு நாக்கூட இருந்து கூடாரே...!”
(*பொதும எல - வேப்பிலை)
வயிற்றில் பசி உணர்வு நினைத்த மாத்திரத்தில் கிண்டுகிறது. அவன் மறுகோடியிலுள்ள வீட்டுக்கு விரைந்து நடக்கிறான்.
தொழிலுக்குச் சென்று வந்ததும் கையுடன் தெற்குக் கோடியில் உள்ள பெரிய கிணற்றில் குளித்துவிட்டுத்தான் அநேகமாகப் பலரும் வீடு திரும்புவார்கள். அதிகாலையில் தொழில் செய்யும் நாட்களில் கட்டுமரத்தில் உணவு ஏதும் அவர்கள் அநேகமாக எடுத்துச் செல்வது வழக்கமில்லை. குளித்து நீராகாரம் அருந்திவிட்டு வெயிலில் பாயையும், வலைகளையும் காய வைத்துக் கொண்டு, அன்றாடம் அறுந்த பகுதிகளைப் பார்த்துச் செப்பம் செய்ய வேண்டும்.
மரியான் அந்தக் கடற்கரையில் அபூர்வமான ஒரு இளைஞன். அவன் குடிக்கச் செல்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன், குரல் உடைந்து வாலிபம் மீறி வரும் கிளர்ச்சியுடன் அவனைப் போன்ற பிள்ளைகள் சிலருடன் அவன் பனவிளையில் சென்று குடித்தான். முதலிலேயே அவனுக்குக் குமட்டிக் கொண்டு எப்படியோ வந்தது. வாயிலெடுத்துக் கொண்டு சாய்ந்து விட்டான். நள்ளிரவுக்கு மேல் அவன் ஆடிக் கொண்டு வீடு வந்த போது ஆத்தா அவனை மொத்தி விட்டாள். இதெல்லாம் கடற்கரையில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிகளே. ஆனால், மரியானுக்கு அதற்குப் பிறகு கள், சாராயம் என்று யார் குடிக்கத் தூண்டினாலும் உடனிருக்கப் பிடிக்காமல் போய்விட்டது.
வீட்டு வாயிலில் பீற்றர் வலையைக் கோட்மாலில் கட்டியபடியே கொண்டு போட்டிருக்கிறான். கருவாட்டுப் பெட்டி கீழே சாய்க்கப் பெறாமல் வெயிலுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மணல் முற்றத்தை அடுத்த சிறிய ஓலைக் கூரைத் தாழ்வரை; நடு விடென்ற பகுதி சுமாரான கூடம், பின்னால் ஒரு ஓரமாகக் குசினி. அது ஓட்டுக் கட்டிடமல்ல; புறக்கடை வாயில் வழியே கடலை எப்போதும் பார்க்கலாம். புறக்கடையில், உரல், குந்தாணி, முன்னாள் கட்டுமரம் இருந்ததை அறிவிக்கும் வகையில் அடக்காவிக்கட்டை, பாய்க்குத் தூர் (* தூர் - புளியங்கொட்டையின் தோலிலிருந்து தயாரிக்கப் பெறும் சாயம்.) நனைத்து வைக்கும் பெரிய ஆமை ஓடு, கிழிந்த வலைகளின் குவியல் என்று உபயோகமுள்ளதும் இல்லாதவைகளுமான, எறிய மனம் வராத சாமான்கள் இடம் பெறும் முற்றம். வலப்பக்க அடுத்த சந்திலுள்ள பொதுக் கிணற்றிலிருந்துதான் புழங்க நீர் கொண்டு வரவேண்டும். நல்ல குடிநீர்க் கிணற்றுக்குக் கோயில் பக்கம் உள்ள பொதுக் கிணற்றுக்கோ செல்ல வேண்டும்.
பின் முற்றத்தில் கொடிகளைக் கட்டி மேரி துணி துவைத்து உலர்த்தியிருக்கிறாள். அவள் துணி துவைக்காத நாள் கிடையாது. போன பிறவியில், இவள் வண்ணாத்தியாகப் பிறந்திருக்க வேண்டும்! வாசலிலிருந்தே பூப்போட்ட சேலை தெரிகிறது. “அண்ணே, தொடாதே, அளுக்காயிரும்...” என்று அருகில் போனாலே எச்சரிக்கை செய்வாள்.
“ஏக்கி, மேரி? சருவத்தில் வெந்நி இருக்கா? குளிக்கத் தண்ணி வச்சியா? பசி எடுக்கு...”
அப்பன் அப்போது நார்க்கட்டிலில் ஓர் இருமலுடன் எழுந்து உட்காருகிறார். அவனுடைய இன்னொரு தங்கை, செயமணி, நாடார் விளையிலிருந்து பன ஓலைகளுடன் வருகிறாள். இந்த ஓலைகளைச் சன்னமாகக் கிழித்து அந்த நாரினால் பெட்டிகளும் தட்டுகளும் முடைந்து செபஸ்தி நாடாரிடம் கொடுக்கிறார்கள். நாகர்கோயில், தூத்துக்குடி என்று அவன் கடைகளில் விற்க இதை வாங்குகிறான். இவர்களுக்கு வாரத்தில் நான்கு, ஐந்து என்று பணம் வருகிறது. செயமணி பள்ளிக்கூடத்தில் ஏழுக்கு மேல் படிக்கவில்லை. இந்த வருஷம் எட்டுப் போக வேண்டும். மேரி இரண்டு வருஷம் முன்பே எட்டு முடித்துவிட்டு ஜோசஃபின் சிஸ்டருடன் கள்ளிகுளம் கான்வென்டில் பத்து படித்து டிரெயினிங் எடுக்கப் போவதாக இருக்கிறாள். அவளைத்தான் நசரேனுக்குக் கட்டுவதாக முடிவு செய்திருக்கின்றனர்.
கடைசித் தம்பி சார்லசு, கையில் நாலைந்து நகரை மீன்களும், சட்டைப் பையில் வேர்க்கடலையுமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டு அப்போது வருகிறான்.
மரியான் அவனைப் பிடித்திழுத்து வேர்க்கடலைகளை எடுத்துக் கொண்டு, “நவரையா? சுட்டிக் கொண்டா. நல்ல தீயில போடு...!” என்று அனுப்புகிறான்.
“ஏக்கி மேரி, குசுனில என்ன பண்ணுதா இவெ? எம்பிட்டு நேரமாச்சு, நா கருப்பட்டித் தண்ணிகேட்டு... இந்த இருமலு...” என்று அப்பன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமுகிறார்.
“காரலவிச்சிச் (*காரல் - சிறுமீன் வகை) சாறெடுத்துத் தாரேண்டு உங்காத்தா சொல்லுதா. ஆனா, அவக்குப் பொளுதெங்கே இருக்யு? கரெக்குப் போவுறதும், கடய்க்குப் போவுறதும், கருவாடு போடுறதும், எந்தக் களுத வெள்ளாடு குட்டி பிதுக்கறாப்பல பிதுக்கினாலும் இவ மருத்துவம் பார்க்கப் போவுறதும்... எங்கியலேய் உன்னாத்தா?...”
மேரி லோட்டாவில் சுக்கும் மல்லியும் கருப்பட்டியும் கலந்து இறுத்த கசாயத்தைக் கொண்டு வருகிறாள்.
“ன்னாருங்க...”
அப்பன் அதைப் பருகிவிட்டு லோட்டாவை மகளிடம் தருகிறார். காய்ச்சலடித்து, இப்போதான் தேறி வருகிறார். அப்பன் ஒரு நாள் கூடக் காரணமின்றிக் கடலுக்குப் போகாமலிருந்ததுமில்லை. முழுசாக ஒரு மாசத்துக்கு மேலாகி விட்டது. காலெல்லாம் வெளுத்துப் போயிருக்கிறது. முகத்திலும் செம்மை வாய்ந்த உரம் கரைந்து விட, கண்கள் குழிய, முகத்தில் தாடி ஏற, அப்பனைப் பார்க்கவே அடையாளம் தெரியவில்லை.
“குடிமவெ இன்னாசிய வரச் சொல்லிச் சவரஞ் செஞ்சிக்கணும்...” என்று முகத்தைத் தடவிக் கொண்டவராக அவனிடம், “ஏன் லேய், இன்னிக்குப் பாடு எம்புட்டு?...” என்று கேட்கிறார்.
மரியான் வேர்க்கடலைத் தொலியை ஒதுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறான்.
“ஒண்ணும் வாசீல்ல. சொந்த மரத்தில் தொழில் செய்யணும் - கோயில் தெறிப்பு. குடிமவமீனு அது இதுண்டு போயி, ஆளுக்குப் பாதிண்ணா, இந்த மீன் படுற காலத்திலும் நாளுக்குப் பத்து ரூபா இல்லேண்ண? அவனக்க மரம்; சம்மாட்டியாட்டம் பேசுதா!” (*சம்மாட்டி - கட்டுமரச் சொந்தக்காரன்)
அவனுடைய உள் மனதில் நசரேனுடைய தாய் கூறிய சொல் இப்போதும் ‘சுருக்’கென்று உறுத்துகிறது.
‘கிளாசாளுங்களுக்குச் சமமா ‘நிக்கிறோம்’ என்று சொன்னாளே?’
“ரொம்பக் கெருவம் பிடிச்ச பொம்பள... நாம தன்னத் தான் பேணிக்கிட்டு நிக்கிறதுதாஞ் சரி...”
அப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னிய லேய், திடீர்ன்னு? என்னாச்சி?”
“நமக்கு ஒரு மரம் கூட்டணும். பெஞ்சமின் மச்சாங்கூடச் சொன்னா. சர்க்காரு கடங்குடுத்து வள்ளங்கூட வாங்கலாமிண்ணு...”
“அது லாஞ்சில்ல? அஞ்சு வருச முன்னியே நசரேன் அப்பா கூட ஆளுக்கு நூறுதான். கட்டிவய்ப்போமிண்ணாரு. பின்ன சருக்கார் நாலாயிரம் கடன் தந்து போட்டுக் குடுக்காங்க. தொழிலுக்கு விருத்தியிருக்கும். வருசமுளுக்க மட (*மட - மடை - கடலில் சேறாக உள்ள பகுதி) பாத்துத் தொளில் செய்யமிண்ணாரு. பெஞ்சமின் கெட்டினா, சந்தியாகு கெட்டினா. ஆருக்கும் ஒண்ணும் இது வரய்க்கும் வார இல்ல. லாஞ்சி அப்படியே கவருமென்டு கடனுக்குக் குடுத்தாலும், இங்கிய தொழில் செய்ய முடியாது லேய், ஊரோடு ஒத்து வாழு...”
“இல்லியப்பா. நாம இப்பம் சர்க்காரு கடன் குடுக்குதாண்டு விசாரிச்சி, தனிச்சு மரமோ வள்ளமோ, லாஞ்சோ வாங்கணும்...”
அவனுக்குத் தன்னை அவள் கூலியாள் என்று சொன்னது பிடிக்கவில்லை. வலை போடுவதிலும், இழுப்பதிலும், அவன் சிறந்த தொழில்காரனென்று பெயர் பெற்றவன். நசரேன் புறதலையில் நின்று மரத்தைச் செலுத்தினாலும் ஆணையிடும் நிலையிலிருந்தாலும், வலை வைப்பதிலும் இழுப்பதிலும் இவனைப் போல் அவ்வளவுக்குத் திறமில்லாதவன். பீடியைக் குடித்துக் கொண்டு தான் ஆணையிடுவதற்கே நிற்பதாக அவனுக்கு இப்போது தோன்றுகிறது.
“அதென்னலேய் நிக்கிறது? வட்டக்காரன்னாலும் ஆணத்துக்கு மீனெடுத்திட்டு. முன்னப்பின்னப் பாத்து வட்டக்காசு வாங்கிக்கிடுவா. சர்க்காருக்கு மாசத் தவனை தலய அடவு வச்சானும் கட்டித் தீரணுமில்ல?”
“அப்பா, வட்டக்காரம் பேச்ச எடுக்காதேயும்! அவெ என்ன செய்யிறா? சம்மாட்டி - சொந்தக்காரன்னாலும் மரம் பாரில பட்டு ஒடஞ்சாலும், வலகிளிஞ்சாலும் பொஞ்சாதி தாலிய வித்துண்ணாலும் நட்டம் குடுக்கான். இவெ ஒண்ணுமில்லாம ரிஷ்டுவாட்சும், உருமாலுமா கடக்கரயில வந்து நம்ம பாட்டைக் கொள்ளடிக்யா. ஆறில ஒண்ணு வட்டக்காசு, பின்ன இவெ கடன் வேற அப்படியே நிக்கு... சர்க்காரு அப்பிடியில்ல, அதில நாயமிருக்கும். தொழில் வாரப்ப தவணை கட்டுறம்?”
“அட போலேய், சர்க்காரு கடன் அம்மாட்டும் சுளுவா வந்திடுமா? வட்டக்காரரைப் பேசுதே. இந்தக் கரயில அட்டியில்லாம எப்பம் போனாலும் பணத்தக் குடுக்கிறவம் பின்ன ஆரு? கடம் வாங்கி லாஞ்சு வாங்குவே. பொறவு வல...? அதுக்கு வட்டக்காரங்கிட்டப் போவியா?...”
செயமணி பன ஓலையை மிக அழகாக நார் கிழிப்பதைப் பார்த்துக் கொண்டே எதுவும் பேசத் தோன்றாமல் மரியான் நிற்கிறான். யார் மீதென்று சொல்லத் தெரியாதோர் ஆத்திரம் பொங்குகிறது.
“ஒரு பய மரத்தில ஏறுதோமின்னுதான் கூலி, கிளாசாளு, அது இதுண்டு பேசுதா அந்தப் பொம்பிள? நசரேண்ட ஆத்தா?”
அப்பனுக்கு இப்போதுதான் புரிகிறது.
“சொல்லிட்டா என்னியலேய்? மரக்காரன், வலைக்காரன், வள்ளக்காரன் எல்லாம் கடலை நம்பிக் கஞ்சி குடிக்கிறவதா. இன்னைக்கு வரும்; நாளைக்குப் போவும். கடலை நம்பியிருக்கிறவனுக்கு எதுலே சாசுவதம்? ஒண்ணில்லாம போவே. கடல் நாச்சி மடி நிறைய அள்ளிக்கண்ணு குடுப்ப. ஒருக்க, கெளுத பட்டிச்சி பாரு... செங்கலடுக்கி வச்சாப்பல. அத்தினிக்கத்தினை உசரம் அவலம் - மடி இளுக்குது கீள. நசரேண்ட அப்பெ அம்புரோசு மச்சானும் நானுந்தான் இளுத்தோம் வலய. அந்த ஒரே நாளில, நாலு நூறு அந்தக் காலத்தில் சம்பாதிச்சோம் லேய். தட்டு மடியில! (*தட்டுமடி - பழைய நாளைய வலை) த்தா பெரிய இலுப்பா (*இலுப்பா - ஒரு வகைச் சுறாமீன்) கட்டி இழுத்திட்டு வந்திருக்கோம். மரத்துல தூக்கி வக்ய முடியாது பளு... வள்ளச் சொந்தக்காரனுக்கு லாப நஷ்டமிண்டு பயம். இன்னிக்குப் பாடு இருக்காது. வல பாரில பட்டு அந்து போவும். அவந்தா கடன்பட்டுப் புதுவலை வாங்கி வருவா. மக்யாநாளு அந்நூறு ரூபா மீன்படும். அப்ப வலக்காரனுக்கும் தண்டுக்காரனுக்கும் (* தண்டுக்காரன் - கொம்பால் கட்டுமரத்தைச் செலுத்துபவன்) மொதநா நஷ்டத்தைக் கணக்காக்கிக் குறைக்கிறானா? இல்ல, முந்தினநா நஷ்டம் அவனோட, இன்னக்கு பங்கு, இன்னக்கிப்படி... இன்னைக்கிக் கடல் நாச்சி குடுக்கும். நாளாக்கிப் பட்டினி போட்டாலும் போடும். அது நாளயப் பாடு. இதான்லேய் கடல் தொழிலாளிக்கு வரச்ச வரை. கடப்புறத்தில் காத்தையும் அலையையும் எதிர்த்து ஆழில போறவனுக்கு, ரோதமும் பகையும் உண்மயாம்படியே கெடயாதுண்டு வச்சிக்க. கோவம், பாவம் எல்லாம் இந்தக் கரையோட. தண்ணில போகையில, மன்னாடி மன்னாடிதா. (* மன்னாடி - படகுத் தலைவன்) காணாக்காரன் காணாக்காரந்தா. (* காணாக்காரன் - கட்டுமரத் தலைவன்). வலக்காரன் வலக்காரந்தா. (*வலக்காரன் - வலைக்காரன்) அவெஞ் சொல்லுக்குக் கட்டுப்படுகிறது தொழில். அங்கிய போய் ஒருத்தம் பேச்சு ஒருத்தன் கேக்க மாட்டோமிண்ணா தொழிலா நடக்கும்?...”
“அது சரிதாப்பா, இப்பம் இல்லையிண்டு நாஞ் சொன்னனா?”
“பின்ன எதுக்குச் சொணங்குத? அவ உசந்த எடத்திலேந்து வந்தவ. அவங்கல்லாம் ஸ்லோன்ல ‘ஸ்டீவ்டோரா’ ஆயிரம் ஆயிரமாச் சம்பாதிச்ச குடும்பம். இப்பம் கூட அவ அண்ணன் தம்பி, சித்தாத்தா பெரியாத்தா மக்க எல்லாம் ஸ்லோன்லயும் இருக்காங்க. தூத்துக்குடியில வியாபாரம் பண்ணுறாங்க. புன்னக்காயல்ல பெரீ... யவூடு நாம் போயிருக்யே. அவ கிளாசாளுன்னா என்னாயிரிச்சி? தண்ணிமேல கோடைக்காத்துக்கு முன்ன மரம் மறியறப்ப மரக்காரன் காணாக்காரண்ணும் வலைக்காரன் தண்டுக்காரண்ணும் வித்தியாசமில்லலேய்! இதுக்குப் போயி சல்லியப்படுதே?...”
“அண்ணெ, வெந்நி எடுத்து வச்சிருக்கே... துணி மேல தெறிக்யாம குளிச்சிக்க...” என்று மேரி குரல் கொடுக்கிறாள்.
“இவெ பெரிய கவுணரு மவெண்ணு நெனப்பு. துணியெல்லாம் எடுத்துப் போடு. இல்லாட்டி வெளியே வந்து இந்தப்புறம் குளிப்பே...”
“ஆத்தா சிலம்பும், கருவாடு காய வய்க்கணும் அண்ணே. நாந்துணியெல்லாம் ஒதுக்கிப் போடுறே...” என்று பின்புறக் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய பூப்போட்ட வாயில் சேலை, பாவாடை, பிளவுஸ், பாடீஸ், செயமணியின் பாவாடை, அப்பனின் லுங்கி எல்லாவற்றையும் ஒதுக்கிப் போடுகிறாள் மேரி.
பாய்த்துண்டைத் தூக்கியும் குத்தி வைத்தும் தண்டு வலித்தும் துடுப்புப் போட்டும் வலை இழுத்தும் தசைகள் இயங்கி நொம்பரப்படுவதை மறக்கவே கடல் தொழிலாலர் எல்லோரும் திருட்டுச் சாரயத்தை நாடுகின்றனர் என்பது முடிவான தீர்ப்பு. மீன் குட்டிபோல் கடலிலேயே முக்குளித்துத் துள்ளும் சிறு பிராயத்தில் அந்த அயர்ச்சியும் நோவும் உறைக்காது. ஆனால் வாலிபம் கிளர்ந்து மண்ணின் உப்புக்கள் உணர்வில் உறைக்க வேக எழுச்சிகள் சக்திகளாய் வெளிப்படும் காலத்தில், பாடுபட்டு அயர்வு காண்பதற்கு ஒரு மாற்றையும் நாடுகிறான். அப்போது உடலின் ஆற்றலும் வேட்கைகளுமே அவனை ஆட்டிப் படைக்கின்றன. மரியான் சாராயத்தை நாடுவதில்லை. ஆத்தாள் அவனுக்குக் கடல் பாடு கண்டு வரும் போது சருவம் நிறைய வெந்நீரைக் காய வைத்து மேலே ஊற்றுவாள்.
சருவத்து நீரை வாளியிலும் தொட்டியிலும் வளாவிக் கொண்டு அவன் குளிக்கிறான்.
அவன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே ஆத்தா வந்து விடுகிறாள். கரையில் மீனெடுத்து, மேட்டுத் தெருவில் வாத்தியார் வீடு, தபாலாபீசு மாஷ்டர் வீடு, நாடார் விளை என்று விற்று விட்டு, கடையில் தேவையான உப்பு புளி எண்ணெய் என்று வாங்கி வந்திருப்பாள். இவனுடைய பணத்தை மேரியிடம் தான் கொடுத்திருக்கிறான்.
குளித்துவிட்டு வந்ததும் நேராக அவன் குசினிக்குள் நுழைகிறான். கிழங்கு போல் மாவாக, நெருப்பிலிட்டுச் சுட்ட நகரை மீனைத் தம்பி அடுப்படியில் தின்று கொண்டிருக்கிறான்.
ஆத்தா கூடையில் இலைப் பொதியில் அவனுக்காக வாங்கி வந்திருக்கும் ஆச்சிகடை இட்டிலிகளையும், துவையலையும் வைக்கிறாள். அடுப்பிலே இப்போதுதான் அரிசி போட்டிருக்கிறாள் மேரி. நீர்ச்சோறு கருவாடும் இட்டிலியும் பசித்தீயை அவிக்கையில் சிவப்பி நாய் அப்போதுதான் சோலிமுடிந்து வந்தாற் போன்று நேராக அவனிடம் குசினியில் வந்து ஒட்டிக் கொண்டு படுக்கிறது.
“ந்தா. போ...!” என்று ஆத்தா விரட்டிவிட்டு, ஆணம் கூட்ட மசாலைப் பொருள்களை எடுத்து வைக்கிறாள்.
அது போகாது. குட்டியாக இருந்த நாளிலேயே கொண்டு வந்த நாய் அது. அவன் உண்ணும் போது ஒரு துண்டு மீனானும் அவனிடமிருந்து பெற வேண்டும்.
வயிறு நிறைந்ததும் வாயிற் பக்கம் ஆத்தா கருவாடு காய வைப்பதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தவனாகப் பீடியைப் பற்ற வைத்துக் கொள்கிறான். உப்பிட்ட சாளை. வெயில் தீவிரமாக இல்லை. இனி நினைத்தால் வானம் மூடிக்கொண்டு தூற்றல் போடும் நாட்கள். கருவாட்டு வியாபாரம் எதுவும் செய்ய இயலாது.
ஆத்தா அப்பனைப் போல் வாய் திறந்து பேச மாட்டாள். நசரேன் ஆத்தாளுக்கும் இவளுக்கும் எத்தனை வித்தியாசம்? இவளுக்குப் பிறந்த வீட்டிலும் வண்மை கிடையாது. சித்தாத்தா மகன் ஒருவர் ஆல்ந்தலையில் கொஞ்சம் செயலாக இருக்கிறார். வேறு யாரும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. குடிக்கக் காசில்லை என்றால், இந்த அப்பன் அவளை முடியைப் பிடித்து இழுத்து அடிப்பார். குடித்துவிட்டுச் சில நாட்களில் எங்கேனும் நிலை மறந்து விழுந்திருப்பார். யாரேனும் தாங்கலாகக் கூட்டி வருவார்கள். ஆத்தா ஒரு பெருமூச்செறிவாளே ஒழிய எதுவும் பேசிவிடமாட்டாள். அப்பனுக்குக் கையில் காசு கிடைத்த நாளில், குடித்துவிட்டுச் சந்தோஷம் கொண்டாடுகையில் ஆத்தாளிடம் சல்லாபம் செய்வதையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். “ஏக்கி, நமக்குக் கலியாணங்கெட்டி இருபத்தஞ்சு வருசமாவப் போவு. அத்தைக் கொண்டாடணும். பெரி...சாக் கொண்டாடணும்... அப்பமும் ஒயினும் காணிக்கை வச்சி, சாமிகிட்டக் குடும்பத்தோட ஆசிர் வாங்கணும்... எல்லாம் சுவடிச்சி... தனி பூசை...” என்று வித்தாரமாக நீட்டுவார்.
ஆனால் ஆத்தாளின் சேலையில் அழுக்கு; தலை சீவி முடிவதில்லை. கன்னங்கள் தேய்ந்து, கண்கள் குழி விழுந்து, மெலிந்து கிடக்கிறாள்.
சட்டென்று ஏலியின் நினைவு வந்து விடுகிறது.
அவளும் இப்படித்தான் மெலிந்து கிடக்கிறாள். அவள்... இப்போது... உள்ளமெல்லாம் கதகதப்பாக நிறைகிறது.
வலைகளை விரித்து வெயிலில் போடுகையில் ஆத்தா அவளிடம், “எதுக்காவலேய் ரெண்டு பேரும் கட்டி உருண்டிங்க? கோயில் தெறிப்புக்குக் கள்ளம் செஞ்சு துட்டு மிச்சம் புடிக்கிறீங்களாலேய்?...” என்று கேட்கிறாள்.
அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டாற் போலிருக்கிறது. ஆத்தாளைத் திரும்பியே பாராமல், வலையில் அறுந்துபோன பொத்தலைப் பரிசீலனை செய்கிறான்.
“இப்பிடித் துட்டு மிச்சம் புடிச்சி, கண்ட களுதய்க்கும் கொண்டு கொடுக்கே?...”
அவன் முகம் ஜிவுஜிவென்று சொலிக்கிறது.
“என்னம்பும் சொல்லிப் போடாதேயும்! ஆருக்குக் கொண்டு குடுக்யா? மேரியிட்டக் குடுத்தேம்...”
அப்போது நசரேனின் குட்டித் தங்கை, லிஸிப்பெண் வருகிறாள். “மரியானண்ணயக் கூட்டிவரச் சொல்லிச்சி ஆத்தா. மாமெ வந்திருக்யா...”
அவன் நிமிர்ந்து பார்க்கிறான். அம்மையைப் போல் இந்தத் தங்கை அழகுப் பெண். குண்டு முகம்; உருண்டைக் கண்கள். கிறிஸ்து பிறந்த நாளில், இவளை மாதாவைப் போல் ஜோடித்து ஒரு வருஷம் தீபாலங்கார வண்டியில் ஏற்றி ஊர்வலம் கொண்டு வந்தார்கள்.
“எந்த மாமெ...?”
“என்னக்க மாமெ... மச்சாது மாமெ... தூத்துக்குடிலேந்து வந்திருக்யா... பிளசர் காருல...”
மரியான் உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறான். ‘பிளசர்’ காரில் வந்து இருக்கும் மாமன் அவனை எதற்குக் கூப்பிட வேண்டும்?
“போயி என்னியெண்டு கேட்டிட்டு வா லேய்!”
ஆத்தா முந்திக் கொள்கிறாள். நசரேனுக்கு லில்லியைக் கட்டி வைத்துவிட வேண்டும். அவனுக்கும் அவள் மீது ஈடுபாடு தான். சென்ற லீவுக்கு அவள் இங்கு வந்திருந்த போது தினமும் எதானும் காரணம் கொண்டு வருவான். அவள் தான் ‘கன்யாஸ்திரீகள்’ கூடவே இருந்து இருந்து எப்போது பார்த்தாலும் படிப்பதும், தனியே உட்காருவதுமாகப் பிடிகொடாமல் இருந்தாள். “என்ன படிப்பு இனியும் அவளுக்கு? போய்க் கூட்டி வந்துவிட வேண்டும். கடனோ, உடனோ வாங்கிக் கல்யாணம்...”
ஆத்தா மீனைக் கொத்தவரும் காக்கையை ஓட்டுகிறாள். மரியான் முற்றம் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறான்.
வாசலில் பளபளவென்ற அந்தக் கறுப்புக் கார் நிற்கிறது.
வடக்குத் தெருவே வாசலில் அந்தக் காரை வரவேற்று உபசரித்துக் கொண்டு கூடியிருக்கிறது. மேனியில் எதுவுமில்லாத குழந்தைகள் அதன் கதவுகளை, விளக்குக் கண்களைத் தொட்டுப் பார்க்கையில், “தொடாதேட்டீ? அளுக்காவப் போவுது?” என்று வாசலில் அந்தக் காரையே பார்த்துக் கொண்டு காவல் நிற்கும் ரோசிதா அவர்களை இழுத்து விடுகிறாள். அவளுக்கு அப்போது பெருமை பிடிபடவில்லை. மச்சாது மாமன், ‘பிளசர்’ எடுத்திட்டு வந்திருக்கிறார். அவருடைய சிநேகிதரும் வந்திருக்கிறார். இங்கே யார் வீட்டுக்கேனும் இப்படி உறவினர் பிளசர் காரில் வரும் உறவினர் இருக்கிறார்களா?
மரியான் உள்ளே செல்கிறான். நாற்காலியில் வீற்றிருக்கும் இந்த மாமனை ரோசிதாவுக்குக் கலியாணம் நடந்த போது மரியான் பார்த்திருக்கிறான். அச்சாக நசரேனின் அம்மையைப் போலவே முகஜாடை. ஆனால் இளமை இல்லாமல் சுருக்கம் கண்டு வற்றிப் போயிருக்கிற முகம். உடல் தடிமனானாலும் சில்க் சட்டைக்குள் தொய்ந்து விழுந்த தோளையும் தொந்தியையும் கணக்கிடலாம். இன்னொருவர் கறுப்பாக இருக்கிறார். அவரும் தடித்த உடலும், தொந்தியுமாகத்தானிருக்கிறார். கையில் தங்கப்பட்டை, கடியாரம், விரலில் மோதிரம் என்று பார்க்க மதிப்பாக, அந்தக் கார் சவாரிக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர்.
நசரேன் கைலியும் பனியனுமாகச் சுவரில் சாய்ந்தாற் போல் நிற்கிறான். ஜானும், சிமோனும் அருகே நிற்கின்றனர். வாங்கிப் பலகையில் தட்டில் பழம், சவுந்தரி விலாஸ் ஓட்டலில் காராசேவு செபஸ்தி நாடார் கடைக்கலர் எல்லாம் காட்சியளிக்கின்றன.
“பழம் சாப்பிடுங்கண்ணே. இங்கே கலர் நல்லாயிருக்காது. கோபித்தண்ணி கொண்டாரேன்...” என்று குசினியிலிருந்து வரும் ஆத்தா மரியானைப் பார்த்ததும், “வா மக்கா*!” என்று வரவேற்கிறாள்.
(* மக்கா - பையா. ‘மகனே’ என்னும் விளிச்சொல்)
“இவெதான் இப்பம் ரெண்டு பேருமாத்தான் தொழில் செய்யிறானுவ...”
“அப்பிடியா?... பார் தம்பி, இப்பிடித் தொழில் செஞ்சி ஒண்ணுக்கும் ரெண்டுக்குமாப் பாடுபடுறதல என்னிக்கு மின்னுக்கு வரது? இல்லியா?”
மாமன் எதற்குப் பீடிகை போடுகிறார் என்று மரியானுக்குப் புரியவில்லை. மரியான் நசரேனைப் பார்க்கிறான். நசரேன் அவனைச் சந்திக்க விரும்பாதவன் போல் எங்கோ பார்வையைப் பதிக்கிறான்.
மாமன் சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்து லிஸிக்கும், சிமோனுக்கும் நீட்டுகிறார்.
“சும்மா இரிக்கட்டும். நீங்க சாப்பிடுங்கண்ணே...”
சிநேகிதர் ‘கலரை’ அருந்திவிட்டு நாசுக்காக மேல் வேட்டியால் உதட்டை ஒத்திக் கொள்கிறார்.
“இப்பம், இந்த வெள்றால், சிங்கிறால், கல்றால், இதுங்களுக்கெல்லாம் நல்ல கிராக்கி. கிலோ சாதாரணமா ரெண்டு மூணுக்குத்தாம் போவுதுண்டிருக்ய வேணா, வெளிநாட்டுக்கு ஏத்துமதியாவுது. சென்ட்ரல் கவர்ன்மென்ற்றில் ஃபாரின் எக்ஸ்சேஞ்சிண்ணு இதுக்குத் தொழில் அபிவிருத்திக்குத் திட்டம் வச்சிருக்யா. கொச்சிக்காரந்தா, இப்ப மொத்தத்துக்கு எக்ஸ்போர்ட் கன்ட்ராக்ற்ற எடுத்திருக்யா. நாமும் கவர்ன்மென்ற்ற தர்ற ஒதவியப் பயன்படுத்திட்று மின்னுக்கு வரணுமிண்டு எனக்கு ஆச. நான் முன்னமே இந்தக் கடன் திட்டம் பார்த்துக் கொஞ்சம் பணம் கெட்டி வச்சேன். ஒரு லாஞ்சி வந்து தொழில் நடக்கு. எங்க பைய ட்ரெயினிங் எடுத்திட்டு ஓட்டறான். இவெ பையனும் லாஞ்சித் தொழில்தா, இப்ப மின்னொரு லாஞ்சியும் வார இருக்கு. ஆளுக்குக் கொஞ்சம் முன் பணமாக் கெட்டி, இன்சூரன்ஸ் அது இதுண்டு செலவுக்குப் போட்டா, நாலு பேரு லாஞ்சி சொந்தக்காரங்களாகவே தொழில் செய்யலாம். வருசம் மிச்சூடும் தொழில் இருக்கும், தவணை அது பாட்டில் கட்டுறோம். அதாம் நசரேனைக் கூட்டிட்டுப் போவலாம். இன்னும் இங்கிய, இந்தக் கரயில வலைக்காரங்களையும் கேட்டுத் தொழிலுக்கு ஒரு விருத்தி கொண்டாரலாமிண்ணு வந்தம்...”
மரியானுக்குக் கேட்க நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது. ஆனாலும்... மேலே பார்க்கிறான்.
மேலே சுவரில் நசரேனின் தந்தையின் படம் பெரிது பண்ணி மாட்டியிருக்கிறார்கள். சரிகை உருமாலும் முழுச்சட்டையுமாக அவர் காட்சி தருகிறார். வகிடெடுத்து வாரிய முடியும், மழுமழுப்பான முகமும், அந்தப் பார்வையும் அச்சாக இருக்கின்றன. இது எப்போது எங்கே எடுத்தார்களோ? அந்தப் படத்தில் அவரைப் பார்க்கையில் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆராளிக் கடலில் மடிக்காரராகத் தொழில் செய்தவரென்று சொல்லிவிட இயலாது. நசரேனை இவர் அழைத்துச் செல்வதென்ற முடிவுடன் வந்திருக்கிறார். அவனும்போகலாம். இவர்கள் மரத்தைச் சொந்தமாக வாங்கிக் கொண்டு அப்பன் சொந்தத் தொழில் செய்யலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் பணம்... அது வேண்டுமே?
“மொதக்க எம்பிட்டுப் பணம் தேவப்படும்?”
மரியான் மௌனத் திரையை மெதுவாக அனக்குவது போல் கேட்கிறான்.
“ஐநூறு ரூபாய் இப்பம் கொடுக்கணும். பொறவு சிறுகச் சிறுக வர்ற லாவத்தில் கட்டிக்கலாம்...”
“தவணை கட்டுறது எம்பிட்டு?”
“அது நாலு பேர் தொழில் செஞ்சீங்கன்னா, பொது. சருக்காருக்கு மாசம் முந்நூறு கட்டணும். பின்னால டீசல், அது இதுண்ணு செலவு போக மிச்சம் வாரதை நாலுபேரும் பங்கு போட்டுக்கலாம். ஒரே நாளில் ஐநூறுக்கும் பாடு வரும். உங்க மரம், வெள்ளத்தில் இப்பிடி வராது. கொல்லம் பக்கம், மன்னாருமடை, இங்கே எல்லா எடத்திலும் தொழில் செய்யப் போகலாமே?...”
“நான் அப்பாவைக் கேட்டு ரோசிச்சிச் சொல்றே. சொந்தமா இல்லாத போனா கூலி மடிண்ணும் ஆளெ வச்சிக்கலாமில்ல?”
“அதுந்தா, அதுக்கு அறுபது நாப்பதுண்ணு. அறுபது பங்கு சொந்தக்காரங் கூட்டு. பொறவு மிச்சம் வலைக்காரங்க பங்கு. அப்படி வந்தாலும் வரலாம்...”
“ஏன் நிக்கிறீங்க எல்லாம் நட்டமா? இரிந்து பேசும், கீழ இரு மரியான்...” என்று உபசரித்தவாறு ஆத்தா அவனுக்கும் கிளாசில் கோபித்தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.
மரியான் கீழே அமர்ந்து அந்தக் காபியைப் பருகிவிட்டு, “நா எதுக்கும் அப்பனையும் கலந்து ரோசனை செஞ்சி, பொறவு வந்து சொல்லுற.... வாரமுங்க... வாரம் மாமி!...”
ஆத்தா எட்வின் வீட்டு வாயிலில் ஜெசிந்தாளுடன் பேசிக் கொண்டு நின்றாலும், அவனை எதிர்பார்த்துத்தான் பரபரத்துக் காத்திருக்கிறாள் என்று புரிகிறது.
“என்னிய லேய்? ஆரு வந்திருக்கிறது?”
அவன் வீட்டுக்குள் வந்து முன் தாழ்வரையில் குந்திய வண்ணம் “ஏக்கி மேரி, தீப்பொட்டி எடுத்தா!...” என்று அவளை உசுப்புகிறான்.
பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, கட்டிலில் சிறு குறட்டையுடன் உறங்கும் தகப்பனைப் பார்க்கிறான் மரியான்.
“நசரேனுக்கு மாமன் பொண்ணு கொடுக்கிறதப் பத்திப் பேச வந்திருக்கிறாரா?... எனக்கு அப்பமே மனசில கெடந்து கொழப்பிட்டே இருக்கு. வார ஞாயித்துக்கிளம நீ போயி லில்லிப் பொண்ணக் கூட்டியாந்துடு. இவ படிச்சிப் புடிச்சி என்ன பொரட்டப் போறா? கடல்ல போறவனுக்கு வாக்கப்படுற களுதக்கிப் படிப்பு இன்னம் எதுக்காவ? போன லீவுக்கு வந்தப்பவே நாஞ்சொன்ன படிச்சது போதுமிண்ணு. நொம்பப் படிச்சி, சாதிசனமில்லாம எந்தப் பயலண்ணாலும் கட்டிட்டுப் போறமும்பா. நசரேன் பய ஆச ஆசயா வருவா. இவ புறக்கடப் பாரில இருந்திட்டுப் புய்த்தகம் படிச்சிட்டு மொவத்தை முறிக்கிறாப்பல போவா. அவெ என்னம்பாய் நெனச்சிப்பா? கேக்கா... நசரேன் நல்ல பய. தப்புதண்டா தொடுப்புண்ணு ஒண்ணில்ல. என்னியலே நாஞ் சொல்லிட்டே இருக்கே, நீ மானத்தைப் பாக்கே?”
மரியானுக்கு இப்போதுதான் சுருசுருவென்று உறைக்கிறது. மாமனுக்கு மகள் இருக்கிறாள் போலிருக்கிறது. லாஞ்சி வாங்கிக் கொடுத்து அவனை அழைத்துப் போவது அதற்கா?
“அதில்லேம்மா, மிசின் போட்டு வாங்கித் தொழில் பண்ண வாரக்காட்ட வந்திருக்யாரு மாம.”
“யார நசரேனையா? பின்னென்னியலே நாஞ் சொன்னது மட்டக்கு ரெண்டு கீத்துண்ணு?...”
“நசரேனை மட்டுமில்ல, சர்க்காரு தொழில் முன்னேறக் கடங்குடுக்குறாங்க, றாலுக்கு ரொம்ப வெலயாவுமா. அதுனால இப்பம் நா ஒரு அஞ்சு நூறு கெட்டி, மிசின் போட்டுக் கூட்டாளியானேன்னா, நாளொண்ணுக்கு அஞ்சு நூறு ஆயிரமின்னு கூடப் பாடெடுக்கலாமா?...”
“ஆமா...?” என்று வியந்தாற் போல் ஆத்தா பார்க்கிறாள்.
“அஞ்சு நூறுக்கெங்கியலே போவ? நா எதோ இந்தப் பொண்ணுவ ஒல கொண்டு வந்து கூட, தட்டுப் பின்னிச் சம்பாரிக்கும் துட்டைப் போட்டு வச்சிருக்கே. ஒரு பொன் தோச்ச மணியில்ல வீட்டில. மூணும் பொட்டப்புள்ள. கலியாணமிண்ணு காலத்தில் செய்யலேண்ணா அதும் இதுமிண்ணு பேரு கெட ஏடாகூடமாப் போயிருமோண்ணு பயமாயிருக்கு. முதல்ல, அந்தப் புள்ளயப் போயிப் படிச்சது போதுமிண்ணு கூட்டிவா. கோயில் திருநாள் வரும், அப்ப வருவா. அமைத்துவக்கலான்னிருந்தே. இப்பம் அம்மாட்டுக்குக் கூட வேணாண்டு மனசில ஒரு நெனப்பு. பிச்ச நாடார் மவ, இப்பிடித்தான் படிச்சிட்டிருந்திச்சி. இப்பம் ஊருக்கு வந்திருக்கு. மூணு மாசம் கருப்பம். வாயத்தொறந்து ஏதும் உசும்பினாத்தானே? ஆச்சி பாவம். மொவத்தில ஈயாடல. கடனோ உடனோ வாங்கி அவளக் கட்டிக் குடுத்திரணும். நசரேனுக்கு லில்லியத் தான் முடிக்கணுமிண்டு அவெப்பாவுக்கும் ஆச. அந்தக் குடும்பத்துத் தொடுப்பு இன்னிக்கு நேத்தக்கி வந்ததா? ஒங்கக்க அப்பெனும் அவெக்க அப்பனும் கடல் கரயில மரத்தப் புடிச்சிட்டு மீன்குஞ்சு போல முக்குளிச்ச நாள்ளேந்து வந்தது. இவெ குடிச்சிட்டுக் கண்ணு மண்ணு தெரியாம கிடக்கையில் அவரு எத்தினி நாளு வீட்டுக்கு வாரக்காட்டியிருக்காரு? இப்பமில்ல, வீடு தேடி வந்து சாராயம் சப்ளை பண்ணுறானுவ! அப்பம் அவரு சம்மாட்டியா இருந்தாலும், இவரக் கொண்டாந்து வீட்டில விடுவாரு...”
“அவரு பாவிக்க மாட்டாரா?...”
“பாவிப்பாங்களா இருக்கும். தெரியாது வெளிக்கி. எங்கப்பன், சித்தப்பன், அண்ணே எல்லாரும் கடல் தொழில் செய்தவங்கதா, பாவிக்கிறதுதான். சிலபேரு அளவோட நிப்பாங்க. ராவில அசந்து உறங்கணுமிண்ணு எல்லாரும் ஒறங்கின பொறவு புள்ளங்களுக்குத் தெரியாம பாவிப்பாங்க. இவருக்கு ஒண்ணுங் கெடயாது. ஒருக்க, நீ மூணு வயிசுப் பிள்ள. அப்ப மணப்பாட்ல நசரேன் அப்பச்சி வள்ளச் சொந்தக்காரரு. கோடக்காத்துக்காலம். ராக்கடைத் தொழிலுக்குப் போனவரு உங்கக்கப்பெ, வார இல்ல. ரெண்டு நாளாயிற்று. அப்பம் இவரு தொளில்லேந்து வந்து நேராப் போயிக் குடிச்சிட்டு வுழுந்து கெடக்கா, தேடோ தேடுண்ணு தேடி, நாடாக்குடிலேந்து கூட்டியாந்தாரு. நல்ல மனிசர். ஒரு நா இவெ தொழிலுக்குப் போக - உசும்பியிருக்கலேண்ணா, ‘மாப்ளே’ண்ணு வந்திடுவாரு. அவங்க மச்சு வீட்டில எப்படி எப்படியோ வாழ்ந்தவங்க. நசரேனக்க அப்பனப் பெத்த பாட்டா கூட கடல் மேல போறவரில்ல. தரவு வியாபாரம் தான். நல்ல சொத்து இருந்திச்சி. இவெ எல்லாம் தங்கச்சிங்களைக் கட்டிக் குடுத்து, ஆடம்பரமாச் செலவு பண்ணி அல்லவாக்கிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி யேசம்மா நாலு வரிச் சங்கிலி, கல்பதிச்ச முவப்பு அட்டியல், லாங்செயின், முழங்கை மாட்டும் வளையல் எல்லாம் போட்டு, புட்டாச் சேலை உடுத்துக் கோயிலுக்கு வருவா, பாத்திருக்கேன். ரோசிதாவுக்குக் கூட பவுனெல்லாம் அதாம் போட்டிருக்கா. ரோசிதாவையே உன்னக்க கெட்டணுமிண்டுதாம் ஆச. இவெல்லாம் மாதா தேருக்குப் போன காலத்தில், அந்தப் பொண்ணு எப்பிடியோ கொலஞ்சு போச்சி. சரிதாண்ணு நான் உசும்பாம இருந்திட்டோம். அங்கியே கெட்டி வச்சிட்டாங்க. ஒண்ணும் சொகமில்ல. அவனும் குடிச்சிப்போட்டு அடிக்யான். நவை நட்டெல்லாம் அல்லவாக்கிட்டாண்ணு சொல்லிக்கிறாங்க. கவடறியாத பொண்ணு. அஞ்சு மாசம் முழுவாம இருந்து கரு கலைஞ்சி போச்சி. பொறவு ஒண்ணுங் காணம்...!”
ஆத்தாள் தானாகவே பேசிக் கொள்கிறாள்.
மரியானுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. துணிந்தடித்து லாஞ்சியில் தொழில் செய்ய ரூபாயைக் கட்டி முதல் பங்குதாரனாகலாம். இல்லையேல் இப்படிக் கூசிக் கொண்டே ஏறவும் இயலாமல் இறங்கவும் இயலாமல்... ‘லோலுப்’பட வேண்டும்! நசரேன் தூத்துக்குடிக் கடலுக்கோ மன்னார் மடைக்கோ போய்விட்டால், அவன் இவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்டுவது என்பது கை நழுவிய காரியம் தான். லில்லிப் பெண்ணையேனும் கட்டிக் கொடுக்காமல் அவன் எவ்வாறு தன் கல்யாணத்தைப் பற்றி நினைப்பான்? ஆத்தாளுக்கு ஏலியைப் பற்றி, அவன் தொடர்பைப் பற்றி தெரியும். சூசனை அதிகம் அவளுக்கு. அவன் நேரம் சென்று வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வந்து முற்றத்தில் பாய் விரித்துப் படுக்கும் கோடை நாட்களில் - சென்ற ஆண்டே கண்டுபிடித்து விட்டாள்.
கைவிளக்கைக் கொண்டு வந்து அவன் முகத்தின் பக்கம் நீட்டிச் சோதனை செய்தாற் போல் பார்த்தாள். அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். நெஞ்சில் ஓர் துடிப்பு. “ஏ, வெளக்க ஏன் மூஞ்சில காட்டுறீம்? என்னத்தப் பாக்குறிங்க...?”
“எந்தப் பரச்சி எச்சியாக்கியாண்ணு பாத்தேலே, ஒங்க்கக்க அப்பனுக்குப் புள்ளேண்ணு...”
“பரச்சி ஒண்ணில்யா சொம்மா இரும்...” என்று விடுவிடுப்பாகப் பேசினான்.
எச்சி எச்சி என்று வெகுநேரம் அன்று முழுதும் மனசு மந்திரித்துக் கொண்டிருந்தது. இந்தக் கடற்கரையில் எச்சியாகாத பரவன் - அல்லது பரவத்தி இருப்பார்களோ என்று மனசுக்குள் கேட்டுக் கொள்கிறான்.
இப்போது ஏலிப் பெண் கருப்பமாக இருக்கிறாள். அவன் கல்யாணம் கட்டாமலே பிள்ளை வளருகிறது.
இந்த நாளில் அவன் வட்டக்காரனிடம் கடன் வாங்கிக் கொடுத்து லாஞ்சிக்குப் பங்காளியாவது சரிதானா?
பகலில் சோறுண்ட பிறகு சற்றே அவன் படுத்து உறங்குவது வழக்கம். அப்பனிடம் யோசனை கேட்பதாகச் சொன்ன அவன் அதைப் பற்றியே பேசவில்லை. ஆத்தாளும் என்றுமே அவனிடம் குடும்பக் காரியங்களைச் சொல்ல மாட்டாள். அப்பனுக்குக் கடலுக்குச் செல்வதும் வீடு திரும்பிக் குடுப்பதும், நன்றாக உண்பதும், ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளையாக வேட்டியும் சட்டையும் தரித்துக் கோயிலுக்குத் தவறாமல் திருப்பலிப் பூசையில் பங்கெடுக்கச் செல்வதும்தான் வாழ்வு. மற்ற நடப்புகளெல்லாம் அவனை ஆழ்ந்து பாதிக்காத மேலோட்டமான அலைகள் தாம்.
அப்பனுக்கு இன்னமும் ருசித்து உண்ணும் ஆரோக்கியம் திரும்பவில்லை. தேங்காயரைத்துக் கூட்டியிருந்த ஆணம் சுவைக்காமல் இரண்டே கவளத்துடன் கையைக் கழுவி விட்டார். மரப்பெட்டியைத் துழாவுகிறார். “ஏக்கி, வெத்தில, பொயில ஒண்ணில்லடீ...”
மரியான் வலைகளை விரித்துப் பார்த்துக் கொண்டு, நைலான் நூல் குச்சியுடன் அமர்ந்திருக்கிறான். அப்பனுக்குத் தன் பெட்டியைத் திறந்து வெற்றிலை புகையிலை எடுத்துக் கொடுக்கிறான். பக்கத்து வீட்டில் எட்வின் இப்போதே மூக்கு முட்டக் குடித்துவிட்டிருக்கிறான். “சவோதர சவோதரிகளே... இப்பம்...” என்று மீட்டிங்கு பேசத் தொடங்கிவிட்டான். எட்வின் அந்தக் காலத்தில் எட்டு வரையிலும் படித்துவிட்டு, மாணவர் இயக்கம் என்றெல்லாம் பங்கு கொண்டிருந்தான். ஏழெட்டு வருஷங்களுக்கு முன் அந்தக் கரையில் அவன் தான் வீர வாலிபன்.
கோயில் திருவிழா சமயத்தில் அவனே நாடகம் எழுதித் தயாரித்து நடத்தியிருக்கிறான். அப்போது மேட்டுத் தெருப்பக்கம் தரகர் அந்தோணிசாமியின் மருமகன் ஒருவன் பட்டணத்திலிருந்து படித்துவிட்டு வந்தவன், இவனுடைய நாடகத் திறமையைப் புகழ்ந்து, சினிமாவில் சான்ஸ் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லவே, ஒருநாள் இவன் ஆத்தாளின் கைக்காப்பைக் கையாடிக் கொண்டு போய்விட்டான். பிறகு நான்கு வருஷங்கள் வரையிலும் அவனுடைய விலாசமே தெரியவில்லை. ஒரு வாடைக் காலத்து மாலை நேரத்தில், இருள் படர்ந்த நேரத்தில், தாடியும் மீசையுமாக அடையாளம் தெரியாமல் ஒரு அழுக்குப் போர்வையைப் போர்த்துக் கொண்டு கோயில் பக்கம் வந்து நின்றான். மரியானின் ஆத்தாள் தான் அவனைக் கண்டு பிடித்தாள். “லே, எட்வின் பயயில்ல? பூனக்கண்ண... அப்படியே இருக்கே...” என்றவள் இரைக்க இரைக்க ஓடி வந்து மாவாட்டிக் கொண்டிருந்த மாமியிடம் சொன்னாள். வந்த புதிதில் பைத்தியக்காரனைப் போல் தான் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விழித்தான். பிறகு மாமி நேர்ச்சைகளெல்லாம் கொடுத்து, *தொள்ளாளியிடம் சென்று மந்திர தாயத்தெல்லாம் கட்டிக் கொஞ்சம் செலவு செய்தாள். தேய்ந்து மெலிந்திருந்தவன், ஆத்தாளும் அக்காளும் அளித்த ஊட்டத்தில் உரம் பெற்றான். நான்கு வருஷகால இருண்ட வாழ்வின் மர்மத்தில், பட்டணத்தில் சாப்பாடு தண்ணீரின்றி அலைந்ததும், பிறகு ஏதோ அரசியல் பொதுக்கூட்டத்தில் கலாட்டாவில் அகப்பட்டதும், பிழைக்க வழியில்லாமல் சிறைக்குச் சென்றதுமான நிகழ்ச்சிகள் புதைந்திருந்தன. அதெல்லாம் அவன் கடலுக்குப் போகத் தொடங்கித் ‘தண்ணியும்’ போட்டுச் சூர்பிடித்ததும் இருட்டறையை விட்டு வெளியேறும் வௌவால்களைப் போல் சிறகடித்துக் கொண்டு வரலாயின. சினிமா மோகம் போய், பொதுக்கூட்டத்தில் பேசும் தலைவனாக வேண்டும் என்ற மோகம் தான் எட்வினைப் பீடித்திருக்கிறது.
(* தொள்ளாளி - மந்திரவாதி)
“சவோதர சவோதரியளே... இப்பம்... கோயில் தெறிப்பு... நாம ஏங்குடுக்கணும்? அஞ்சு மீன்... அஞ்சு மீனில்ல அய்யா! அஞ்சு குத்து அள்ளிப் போடுவா? கொலகொலயா அள்ளிப் போடுவா? - இவ நெத்தம் கக்கிக்கடல்ல போயிக் கொண்டாரன்... ஒண்ரக்கண்ணம்பய... இவெக்கு ஏழ்ன்ன உரிமை... உரிமையிண்டு கேக்கேன்!...”
“ஐத்தரிகை... அளவாத்தாம் பேசுதான்!” என்று வாய் விட்டு மெச்சிக் கொண்டு மரியான் வெளியே வந்து பார்க்கிறான். வாயிலில் ஒற்றை ஆளாகத்தான் நின்று அவன் பிரசங்கம் கொடுக்கிறான்.
இவனைக் கண்டதும், “என்னியலே எட்டிப்பாக்கே? தலைவர் பேசையில் சோடா உடச்சுக் கொடுக்காண்டாம்...? போழ்டா... சோடா... சோடா கொண்டா?” என்று தலையைத் தட்டுகிறான்.
“பாழாப் போற பய, இப்பிடிக் குடிச்சு அழியுறா. அந்தப் பொண்ணு தண்ணி வய்க்கிற சருவம் கூட வித்துப் போட்டா. வயித்தில எட்டுமாசப் புள்ள. சைத்தான் மவெ. நேத்து இப்பிடித்தான் குடிச்சிட்டுப் போட்டு அடிச்சிருக்யா. சவண்டு கிடக்கா இந்தப் பய ஊருதேசம் போனவெ திரும்பி வந்து ஓறாங்க்காயிராம இப்பிடிக் குடிச்சிச் சீரளியிறா!” என்று ஆத்தா புருபுருக்கிறாள்.
“அம்மா, அவெ நெல்லாத்தாம் பேசுதா. அப்பெ குடிச்சிட்டா வாயில பண்ணியே நாயேண்ணு கெட்ட பேச்சுத்தாம் வரும். எட்வின் குடிச்சா முத்து முத்தாப் பேசுதான். அஞ்சு மீன் தெறிப்பு நெசமாலும் அநியாயந்தா. ஆரும் உள்ளபடி மீன் கொண்டாரதில்லை. பெரீ மீனாயிருந்தா பத்துக் கொண்ணு அவனுக்கு. அது தவிர துவி...”
பீடியை வாயில் வைத்து இழுத்துப் புகையை விட்ட வண்ணம் மரியான் பார்வையை எங்கோ பதிக்கிறான்.
ஆத்தா வெயில் பூனைக் கண்ணாகப்படும் இடத்துக்குக் கருவாட்டுச் சாக்கை இழுக்கிறான். அப்பன் மெள்ள வெளியே வந்து குந்தி வெற்றிலைச் சாற்றை மூலையில் உமிழ்கிறார்.
“நசரேன் தங்கச்சி எதுக்குலே உன்னெயக் கூட்டிட்டுப் போச்சி? ஊரிலேந்து ஆரு வந்திருக்கா?”
அவன் குனிந்து அறுந்து போன நூலைக் கூரான கல்லைக் கொண்டு சீராக்குகிறான். பிறகு நூல் குச்சியைக் கண்ணிகளில் கொடுத்து வாங்கிப் பொத்தல்களை இழுத்துப் பிரைகிறான்.
“கேக்கேன் பதிலில்ல?... யாருலே வந்தது?”
“மாமெ. மோட்டார் லாஞ்சி வாங்கியிருக்யா. நசரேன் தூத்துக்குடிக்குத் தொழில் செய்யப் போறாம் போல என்னியும் கூப்பிட்டாரு...”
அப்பனை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. கண்கள் உருண்டு நிற்கச் சிறிது நேரம் பிரமித்தாற்போல் வீற்றிருக்கிறான் அப்பன்.
“ஆமா...? நீ என்னம்புலே சொன்ன?”
“உங்ககிட்டப் புத்தி விசாரிச்சிச் சொல்றமிண்டு சொன்னே...”
“நீ அதுக்கெல்லாம் போகண்டாம். மாதா ஆசீரும் கடல் நாச்சி கருணயுமிருந்தா எங்கியும் நல்ல தொழிலிருக்கும். இந்தக் கரயவுட்டு இன்னொரு கரயா? நீ ஒண்ணும் போகண்டாம்!”
பூனைக் கண்ணாகத் தெரிந்த சூரியன் மேகப் படுதாவுக்குள் ஒளிந்து கொள்கிறான்.
வானில் சந்திரனைச் சுற்றி யாரோ பூவட்டம் இட்டிருக்கின்றனர். அவ்வாறிருந்தால் மேகங்கள் குவிந்து, மழையைக் கொண்டு வரும். காலையில் கடற்கரையிலும், மாலையில் தெரு மணலிலுமாக விளையாடிய ஊர்ச் சிறுவர் சிறுமியர் வீடுகளுள் தம்மை மறந்து அயர்ந்துவிட்ட நேரம். மரியான் கூடங்குளத்துக்குப் போய்க் கயிறு வாங்கிக் கொண்டு பஸ்ஸில் வந்து இறங்கிப் பாதையில் நடந்து வருகிறான். பனந்தோப்பில் யார் யாரோ குடித்துவிட்டு நடக்கின்றனர். அமலோற்பவத்தின் வீட்டில் பச்சைச் சுவர் தெரிய விளக்கொளி பரவியிருக்கிறது. மாடி முகப்பில் பூச்சட்டிகளும், கொடிகளுமாக அழகு கொஞ்சும் வீடு. ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது. முன் வீட்டில் சோபாவில் அமலோற்பவம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். குச்சுநாய் வாசற்படியில் படுத்திருக்கிறது.
அமலோற்பவம் என்ற பாவனமான பெயரை உடைய அவள் ஒரு காலத்தில் ஏலியின் ஓலைப்புரை போல் ஒரு புரையில் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திக்கற்றவளாக நின்றவள் என்றால் யாரேனும் நம்புவார்களா? புருஷன் இறந்து போனபின் தொழிலெதுவும் செய்யத் தெரியாமல் நாலும் இரண்டுமாக ஒரு பெண்ணும் ஆணும் கஞ்சிக்கு அழ, அவள் நாடார் விளையில் கூலி வேலை செய்யப் போனாள். அப்போதுதான் நாடு முழுதும் மது விலக்கு என்ற ஒன்று வந்திருக்கிறதென்றும் அதை “அமுல்” படுத்த அதிகாரிகளுண்டு என்ற விவரங்களும் புதிய தொழில்களுக்கு வழி வகுத்திருக்கின்றன என்றும் அவள் கண்டு கொண்டாள்.
காளியப்பன் பழக்கமானான்.
கள்ளுக் கடைகளை மூடிவிட்டதால் நெஞ்சுலரத் தடுமாறிக் கொண்டிருந்த கன்னிபுரம் கடற்கரை மக்களுக்கு அவள் ஆறுதலும் புத்துணர்ச்சியும் அளிக்க முன் வந்தாள். இந்தப் பெரிய வீடு - இரட்டை வீடாக வளர்ச்சி பெறுமுன் சிறு குடிலாகத்தானிருந்தது. கடற்கரை ஓரத்துக் குடிசையைப் பெயர்த்துக் கொண்டு, நாடார் விளைக்குப் போகும் வழியில் இந்தத் தோப்பில் புரை சமைத்துக் கொண்டாள்.
மொத்தத்துக்கும் இவள் ‘கன்டிராக்ட்’. அந்த நாளில் வீட்டுக்கு வீடு சரக்கைக் கொண்டு கொடுக்க இவளிடம் சிறு பயலாய் வேலைக்கு வந்த அடைக்கலசாமி, பத்துப் பதினைந்து வயசு மூத்தவளான அவளுக்குத் தாலியைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான். அவள் பழைய அமலோற்பவமா? ஆள் தடித்து, மேனியில் ஒரு மினு மினுப்பு மேவ, ராணி போல் நடக்கிறாள். கூந்தலைக் குழைய வாரி முடித்த முடிப்பில் செல்வச் செழிப்பு மின்னுகிறது. கழுத்தில் வரி வரியாகச் சங்கிலி, நெக்லேசு, கைகளில் முழங்கை வரை வளையல்கள், விதவிதமான சேலைகள்... மூத்த பெண் ரூபியே எப்படி வளர்ந்து உருண்டு திரண்டு நிற்கிறாள்? அடைக்கலசாமி, கடல் தொழில் செய்யாமல், சம்மாட்டி என்ற நிலையில் லாப நஷ்டக் கணக்கில் மாயாமல், வட்டக்காரனாகச் சங்கலியும் சில்க் சட்டையும் உருமாலுமாகக் கடற்கரையில் கொடிகட்டிப் பறக்கிறான். இவனை அப்பனென்று கூப்பிட ஒரு பெண்ணும் ஆணும் இருக்கின்றன. ஊரில் பெரும்புள்ளி; பஞ்சாயத்து உறுப்பினன்; பங்குச்சாமி மதிக்கும் ஆள். மாதா கோவில் கொடை என்றால் தாராளமாகத் தருகிறான். எனவே, வட்டக்காசு பிரிக்க இவன் கடன் கொடுத்தவனிடம் எப்படி நடந்து கொண்டாலென்ன? மீன் பாட்டில் ஆறில் ஒரு பங்கு கண்டிப்பாக வசூல் செய்துவிடுவான். வட்டக்காசு அன்றாடம் மீன் பாட்டில் கடன்பட்ட பரவன் கொடுக்கும் வட்டிதான். இது தவிர நல்ல மீனாகப் பார்த்து கறிக்கும் கொண்டு போவான்.
மரியான் பாடுபடும் தொழிலாளியின் நிலையையும், வளமை கொழிக்க வாழும் வட்டக்காரனுக்குமுள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கிறான். காட்டிலே மரப்பட்டை, கெட்டுப் போன பாட்டரிசெல், அழுகிய வாழைப்பழத்தோல், குப்பை கூளம் எல்லாவற்றையும் மூலப்பொருளாக்கிச் சாராயம் காய்ச்சுபவன் வேறு ஆள். அவன் காவல்காரன், அதிகாரி எல்லாருக்கும் வாய்க்கரிசி போட வேண்டும். இவர்கள் அங்கிருந்து வாங்கி இங்கே விநியோகம் செய்கின்றனர். தரகு - ஒரு குப்பிக்கு ரெண்டு ரூபாய் வருகிறதாம். அதே போல் வலை வாங்கவில்லை; கயிறு வாங்கவில்லை - அல்பிசா மரம் வாங்க மலையாளம் போகவில்லை; லாரி தேடவில்லை. பாரில் எவனுக்கேனும் வலைபட்டுக் கிழிந்தால் இவனுக்கு யோகம்... கயிற்றுச் சுமையைக் காட்டிலும் இந்த எண்ணங்களின் சுமைதான் அவனை அழுத்துகிறது.
கோயில் பக்கம் குடி தண்ணீர்க் கிணற்றில் இப்போதும் எவனோ நீரெடுக்கிறான். நீல விளக்கு ஒளியை உமிழ்கிறது. கோயிலின் முன்புறம் கெபி. விளக்கொளியில் சோகம் கவியும் மாதாவின் முகமும் பாடுபடும் ஐயனின் சொரூபமும் பளிச்சென்று தெரிகின்றன. துன்பப்படுபவர்களுக்காக யேசு பெருமான் முள் கிரீடம் அணிந்து சிலுவை சுமந்து சென்று ஆணிகளால் அறையப் பெற்றார். அப்படி இருக்கையில், பாடுபடும் தொழிலாளிகளின் மீன் பாட்டில் பெரும் பகுதியைத் தனக்கு வேண்டும் என்று கேட்பாரா?...
அப்படி விதித்தவர்கள் மனிதர்கள்; உறிஞ்சிகள்.
குடிமகன்... நாசுவன்... அவனுக்கு உரிமை கொடுப்பது நியாயம். அவன் முடி திருத்துகிறான்; வைத்தியன், மருத்துவம் செய்கிறான்; பரவன் கண்ணை மூடினாலும் அவன் தான் அடக்கம் செய்யக் குழி தோண்டுகிறான். ஏலக்காசு, ஏலம் விடுபவனுக்கு நியாயம். அஞ்சுமீன் தெறிப்பு, கோயிலுக்கு. அதுதான்போகட்டும். துவி... சுறாமீனின் செதில்கள் - மீனுக்கு மேல் இப்போது அவை விலைக்குப் போகின்றன என்பது உண்மை. சிங்கப்பூர், ஜப்பான் என்று வியாபாரிகள் வெளிநாட்டுக் கிராக்கிக்காக மீனுக்கு மேல் விலை கொடுத்து வாங்குகின்றனர். அது அப்படியே கோயிலுக்குக் குத்தகை எடுத்த சாயபு, கரையில் வந்து உரிமையுடன் சுறாத் துவிகளை வெட்டிப் போகிறார்.
துவி உரிமை அவர்களுக்குச் சேருவதாக இருந்திருந்தால், ஐநூறு ரூபாய் புரட்ட வழியில்லாமல் இருப்பானா?...
செபஸ்தி நாடான் கடை. வாயிலில் சுருட்டுக் குடித்துக் கொண்டு குந்திப் பேசிய பெஞ்ஜமினும் பிச்சை முத்துப் பாட்டாவும் இவனைப் பார்த்துவிட்டு, “போறானே, மரியான்!” என்று சொல்லும் குரல் கேட்கிறது.
“மாப்ள...? எங்கிய? கூடங்கொளம் போயி வாரியா?”
“ஆமா, மச்சா! தாவுகல்லுக்குக் கவுறு வாங்கியாரம். அந்து போச்சி...”
“இப்புடி இரியும் மாப்ள. என்னிம்ப்பு, ஊரில் எதேதோ பேச்சு காதில வுளுகுதே?...”
கயிற்றுச் சுமையைக் கண்டவாயிலில் இறக்கிவிட்டு அவன் காட்டிய பெஞ்சி முனையில் அமருகிறான். கயிற்றுமுனைக் கங்கை பெஞ்ஜமின் நீட்ட பீடி கொளுத்திக் கொள்கிறான்.
“என்னம்ப்பு காதில வுளுகுது?”
“நசரேன் மாம மகளைக் கெட்டப் போறா, சீதனம் லாஞ்சி கொடுக்யா... மரியானும் லாஞ்சித் தொழிலுக்குப் போறாண்ணு காதில வுழுந்திச்சி...”
“அதொண்ணும் முடிவாகல மச்சா... நீங் கூடத்தா முன்னம் லாஞ்சிக்குப் பணம் கெட்டி வச்சிருக்கேண்ணு சொன்னே... நானும் கேக்கணுமிண்டுதா இருந்தம்.”
பிச்சைமுத்துப் பாட்டா கெல் கெல்லென்று இருமுகிறார். ஏலி கடைப் பக்கம் வருவது தெரிகிறது.
மரியானுக்கு அங்கு உட்கார்ந்திருக்க நாணமாக இருக்கிறது. பெஞ்சமின் பேச நினைத்தவன் யாரோ தடுத்துவிட்டாற் போல் எழுந்து சென்று தொண்டையைச் சுரண்டிக் கொண்டு ஒரு பக்கம் காறி உமிழ்கிறான்.
ஏலியை அருகில் கண்டதும் மரியானின் நெஞ்சம் எப்படித் துடிக்கிறது! அவளது மேனி வெளுத்துக் கண்கள் உள்ளே போயிருக்கின்றன. வயிறு முன்புறம் பொங்கிக் குவிந்திருக்கிறது. பிளவுஸ் போட்டிருப்பது கூடத் தெரியாமல் மினு மினுத்த கறுப்புச் சேலையால் மூடிக் கொண்டிருக்கிறாள். முடியை அவிழ்த்து விட்டால் முழங்காலுக்கு வரும்... குப்பியைக் கொடுத்து “மண்ணெண்ணெய் அரை லிற்றர்...” என்று மெல்லிய குரலில் கூறுகிறாள்.
மரியான் அங்கே நிற்பதை அறிந்து திரும்பிப் பார்க்க ஆவல் இருந்தாலும் அவள் பார்க்கவில்லை.
“அதுக்குள்ள, மச்சாது மாமெ, மரியானக்க கொடுக்கப் பொண்ணு போறாண்ணு வேற பேச்சுக் கிளம்புது. ஏ, மாப்ள...?”
ஏலி சில்லறையை அவனிடம் வைத்துவிட்டு நடந்து செல்கிறாள்.
“கடல்கரையில இவ எம்மாட்டுத் தயிரியமா இருக்கா பாரேன்? சினிமாக் கொட்டச் சண்டையிலே அடிபட்டு இவ புருசன் இன்னாசி செத்துப் போயி மூணு வருசமாச்சி. இவ தனிச்சிப் பொழய்க்கிறா” என்று பெஞ்ஜமின் மரியானின் வாயைக் கிளறத்தான் அவலைப் போடுகிறான்.
“இந்தக் கரையில இருக்கிற பொண்ணுவள்ளாம் காட்டியும் அது மோச இல்ல. இந்த ஊருப் பயலுவளச் சொல்லு. முதுகெலும்பில்லாதவனுவ; பொட்டப்பயலுவ. அலவாய்க் கரையில அது ஒரு மனிசாள நிமுந்து பாத்து அநாவசியமாப் பேசுதா? எந்தப் பயலேம் ஏதும் பேசினா திரும்பிப் பார்க்காம போயிரும். வேற கொமப்புள்ளிக இருக்கிறாளுவளே, சேலதுணி போன எடந்தெரியாது. இளிப்பாளுவ...” என்று யார் மீதோ ஆத்திரப்படுகிறார் பாட்டா.
பெஞ்ஜமின் தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறான். மரியானுக்கு முகத்தில் சூடேறுகிறது.
“அப்ப நான் வாரம்...”
மரியான் கயிற்று வரிகளை எடுத்துக் கொள்கிறான்.
“இரி மாப்ள. தொழில் பத்திப் பேசணுமிண்ணுதான் கூப்பிட்டே. நசரேன் கூட நீயும் போறியா?” பெஞ்சமின் அவன் தோளைப் பற்றிக் கொண்டிருக்கிறான்.
“நான் போவ இல்லை. அப்பெ வேணாமிண்ணு சொல்லுதா. போனா பங்காளியா பணம் கெட்டணும். அச்சாரமா ஐநூறு கெட்டணுமா. லில்லிப் பொண்ணுக்குக் கலியாணம் கெட்டணும்னு இருக்கு. இப்பம் லாஞ்சிக்கு வேற வட்டக்காரரிடமோ, தரகரிடமோ கடம் வாங்க எனக்குக் கொந்தலா இருக்கி. பெறவு, கோயில் தெறிப்பு போதாதுண்ணு, இவெ வேறே அப்பங்கிட்டியே வட்டக்காசு பிரிக்க வந்திடுவா. அவெ ஆளு இல்லாட்டியும் நாம தொழில் செய்ய்ம் எடத்துக்கும் வருவா. லயனல் தம்பிக்கு ஜீப்பு வாங்கிக் கொடுத்திருக்கா. இனியும் கடற்கரையையே வெலைக்கு வாங்கிப் போடுவாம் போல இருக்கு?”
“அதா... மாப்ள. இப்பம் செப்டம்பர் இருவத்தஞ்சில குத்தவை - கோயில் தெறிப்பு ஏலம் வுடும் நாள். இந்த வருசம் நாம ஒன்னிச்சி சேந்து நிண்ணமுண்ணா, துவிக்குத் தலையை நிப்பாட்டிரலாம். மெனக்கு நாள்ள*, தம்புரெடுக்கச்# சொல்லி நாம ஒரு கூட்டம் போடுவம்... என்ன சொல்றே மாப்பிள?”
(* மெனக்கி நாள் - விடுமுறை நாள் - ஞாயிற்றுக்கிழமை
# தம்புரெடுக்க - தமுக்கடிக்க)
மரியான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கிறான்.
“ஆமா?... பாட்டா என்னம்ப்பு சொல்லுறாரு?”
“பாட்டாதா நமக்குத் தலவரு... முன்னக்காலம் துவி ஆறு காசுக்குப் போச்சி, கோயிலுக்கே விட்டுக் குடுத்தம். இப்பம் காலம் மாறிப் போச்சில்ல?”
“செய் மச்சா. இன்னிக்குக் காலம் கூட, மானுவல் மாமனுக்குக் களர் பட்டிருந்திச்சி. ஒண்ணரைக்கண்ணன் அள்ளிப் போட்டுக்கிட்டா. வட்டக்காரன் வேற. இவெ ஏச, அவெ ஏச, புளுத்த நாயி குறுக்க போவாது” என்று மரியான் ஒத்துக் கொள்கிறான்.
இனம் தெரியாமல் எங்கோ செல்லும் உணர்வுக்கு இலக்குக் கிடைத்துவிட்டாற் போன்று உற்சாகமாக இருக்கிறது. அவன் உள்ளமும் வெளியும் அந்த மகிழ்ச்சியின் இலயத்தோடு ஒன்றியிருக்க வீட்டுக்கு வருகிறான்.
அந்தக் கரையில் கடல் தொழில் செய்பவர்களிடையே பெஞ்ஜமின் கொஞ்சம் மதிப்பானவன் தான். பத்துப் படித்துத் தேறி, திருச்செந்தூர் ஆபீசில் கொஞ்ச காலம் எழுத்து வேலை செய்தவன் அவன். அண்ணன் பெரிய படிப்புப் படித்துப் பாளையங்கோட்டையில் வாத்தியாராக இருக்கிறான். அப்பா இங்கே தான் இருந்தார். உடம்பு சரியில்லாமல் வயிற்று நோவுக்கு வைத்தியம் செய்து கொள்ளப் பெரிய மகனிடம் சென்றிருக்கிறார். இவனுக்குக் கூத்தங்குளிப் பெண்ணைக் கட்டி மூன்று குழந்தைகள். பெண் கட்டிய இடமும் பசையுள்ள குடும்பம். அவன் முன்னின்று சில நாட்களுக்கு முன்பரதவர் முன்னேற்ற சங்கம் என்று ஒன்று அமைக்க வேண்டும் என்று எல்லோரையும் கூட்டிப் பார்த்தான். இந்தக் கரையில் இலகுவாக அப்படி ஒரு செயல் செய்துவிட முடியுமா என்ன? எல்லோரும் தலைக்குத் தலை பேசி அடுத்தவன் சொல்லுவது காதில் விழாமல் காக்காய்க் கூட்டம் போல் கத்தினார்கள்... எல்லோரும் சேர்ந்து... கோயில் தெறிப்பை நிறுத்துவது!
இப்போது தெரியாமல் திருட்டுத்தனம் செய்கின்றனர். பாதி மீனை ஒளிக்கின்றனர். நேரம் சென்று வந்தால் தூண்டியில் சுறா பிடித்து வந்தால், கடற்கரையில் துவியைத் தாமே கழித்துத் தெறிப்புக்காரரை ஏமாற்றவில்லை என்று கூடச் சொல்ல முடியாது. ஆனால் இதனாலெல்லாம் கரையில் சண்டைக் குரல்களும் ஏசல்களும் சவால்களும் மோதல்களும் தான் மிஞ்சுகின்றன. திருப்பலிப் பூசையில் சாமியார் கோயிலை ஏமாற்ற கூடாது என்று பிரசங்க உரையில் ஒவ்வொரு தடவையும் சொல்லுகிறார். எல்லோருமாக முடிவெடுத்து கோயில் குத்தகை கூடாது என்று சொல்வது நியாயமான செயல் அல்லவா?...
பக்கத்து வீட்டில் விளக்கெரிகிறது. யார் யாரோ பெண்கள் நடமாட்டம். முற்றத்தில் கட்டிலைப் போட்டுக் கொண்டு எட்வினும் அவன் சின்னாத்தா மகன் சாமுவேலும் அமர்ந்திருக்கின்றனர். எட்வினின் முதல் குழந்தை. இரண்டு வயசுப் பிள்ளை அழுது கொண்டிருக்கிறது. அவன் அந்தப் பக்கம் என்னவென்று கேட்காமல் உள்ளே வருகிறான். தாழ்வரையில் வலைகளும் மிதப்புக் கட்டைகளும் இருந்த இடத்தில் கயிற்றை வைக்கிறான். பீற்றரும் சார்லசும் நடு வீட்டில் ஒருபுறம் அடித்துப் போட்டாற்போல் உறங்குகின்றனர். செயமணி சிம்னி விளக்கடியில் கண்களைக் கவிழ்த்துக் கொண்டு நார்த்தட்டு - இறுதி வரியை முடித்துவிடுவது என்ற நோக்கில் கோத்து வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
அப்பன் அவனைக் கண்டதும் கட்டிலில் எழுந்து உட்காருகிறார். நெருங்குகையிலேயே சாராய வாடை அடிக்கிறது.
“ஏக்கி, இருட்டில இன்னுமா இந்த எளவு? போயிச் சோறு வெய்யி! எல்லாரும் எங்கே போயிட்டாங்க?...” என்று வெடுவெடுத்தவாறு அவன் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டுகிறான். மேலே கண்ணாடிக் கூண்டுக்குள் அன்னை மேரி கையில் பாலுடன் இருக்கும் சிறிய “சுரூபம்” இருக்கிறது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளாக இருக்கும் சொத்து அது. வீட்டுக்கு ‘எலக்ட்ரிக் லைட்டு’ போட்டு, அந்தக் கூண்டில் சிறு நட்சத்திரம் மின்னுவது போல் ஒரு விளக்கும் போட வேண்டும் என்பது அப்பனின் அவா.
“ஜெசிந்தாளுக்கு நோவு கண்டிருக்கு. மாசம் ஆவலியாம்...” என்று செயமணி கூறிவிட்டு, ஓலை கத்திரி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்று மூலையிலுள்ள பெரிய ஓலைப் பெட்டியில் போட்டு வைக்கிறாள்.
“அதுக்கு இந்த மேரிக் களுத என்னிய செய்யப் போனா?...”
“மேரியக்கா புள்ள அளுதிச்சி, தூக்கிட்டுப் போச்சி...”
அவள் சொல்லி முடிப்பதற்கும் மேரி உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கிறது.
அப்பன் வயிற்றையும் நெஞ்சையும் தடவிக் கொண்டு “யேசுவே, யேசுவே... ஏலாது இனி...” என்று நோவால் தவிக்கிறார்.
“ஏக்கி மேரி, அடுப்புச் சூட்டில சுக்குத்தண்ணி வச்சிருந்தா இம்பிட்டுக் கொண்டாடி... யேசுவே என்ன... ஏனிப்படி வாதைப் படுத்துறீம்...!”
மரியானுக்கு அவரைப் பார்க்கையில் அப்போது பரிதாபமாக இருக்கிறது.
மரியான் அருகில் சென்று முதுகுத்தண்டில் தடவிக் கொடுக்கிறான். “பாழாய்ப் போன தண்ணிய ஏன் குடிச்சுத் தொலக்கிறீம்! டாக்டர் குடிக்கவே கூடாதுண்ணு சொல்லல...?”
“ஆமா...? அந்த நெட்டயன் வீட்டுக்கேல்ல வந்து குடுத்து தொலைக்கிறான்? அவெ வார இல்ல - சரக்குக் கொண்டு வரலேண்ணா இவரு என்னியோ கடலையோ மீனையோ காணாதது போலச் சொணங்கிப் புரு புருக்கிறாரு?...” என்று மேரி அண்ணனிருக்கும் தைரியத்தில் அப்பனைச் சாடுகிறாள்.
“இவெ... மயிரு எனக்குப் புத்தி சொல்லுதா? செறுக்கி மவ, போட்டீ உன்னியக்கட்டப் போற மயிரானுக்குப் புத்தி சொல்லு...!”
இவருடைய நாவிலிருந்து சில அர்ச்சுனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு மேரி சுக்குத் தண்ணீரைக் கொண்டு வருகிறாள்.
அதைக் குடிக்கையில் அப்பன் கண்களிலிருந்து நீர் வழிகிறது. மரியான் படுக்கையிலிருந்து துண்டை எடுத்துத் துடைக்கிறான்.
“கண்ட அழுவலையும் குப்பையும் போட்டுக்காச்சுதா... அத்தைப் போயிக் குடிச்சா குடல் அழுவிப் போவும். பெஞ்ஜமினுக்க அப்பச்சிக்கு ‘ஆபரேசன்’ செய்யணுமா. அவெ பத்தந்நூறு ரூபா செலவு செஞ்சி செய்ய ஆளுங்க இருக்கு. நீரு அப்படி அழுவ வச்சிட்டீருண்ணா என்ன செய்யிவம்?...”
அப்பன் மனவெழுச்சியுடன் மகனுடைய கைகளைப் பற்றிக் கண்களில் வைத்துக் கொள்கிறான்.
“இனி அந்த எளவு வேணாமுண்டு தா நிதம் நினக்கேன், பொறவு அதெல்லாம் சரிப்பட்டு வாரதில்லே. பிராந்து புடிச்சாப்பல இருக்கு... நீ குடிக்காதே. உனக்கு ஒரு நெல்ல பொண்ணைக் கெட்டணும். சீதனமாப் பத்திருவது பவுன் சங்கிலி எல்லாம் போட்டு வார பொண்ணைக் கெட்டணும். நாலு பேருக்கு மதிப்பா கோயில்ல பறவாசிச்சு, சுரூபமெல்லாம் சுவடிச்சி, கலியாணம், பஸ்ட் கிளாஸ் கலியாணம், நா சாவுறதுக்குள்ள எம் பேரப்புள்ளயப் பாக்கணும்... மாதாகிட்ட ஒரு நாளன்னியே மன்னாடிக் கேக்கேன்...”
மரியான் உருகிப் போகிறான். அவனைப் படுக்கையில் மெல்லப் படுக்க வைத்து, “பேசாம ஒறங்கும், நோக்காடு சாஸ்தியாவும் இல்லேண்ணா...”
“அந்த ரோசித்தா குட்டிய உனக்குக் கெட்டிக்கணும், லில்லிய நசரேனுக்குக் கெட்டணுமிண்ணு மனசோடு நெனச்சம். அது நடக்கல. வயசில கெட்டிப் போடலெண்ணா இந்த ஒடம்பு வீச்சம் அப்பிடித்தான் வரமொற மீறிப் போவும். கடல் மேல அல்லாடிட்டுத் திரும்புறவனுக்குச் சூடுகேக்கும் ஒடம்பு... ராசா... நீ குடிக்காம பரிசுத்தனாயிருக்கே... உனக்குப் பரிசுத்தமான பொண்ணா கெட்டணும்...”
அப்பனின் கரடுமுரடாகக் காய்த்துப் போன கை அவன் மீது படுகையில் மரியானுக்கும் உடம்பு சிலிர்க்கிறது.
“பரிசுத்தமிண்ணா என்ன அருத்தம்...” என்று மனசோடு கேட்டுக் கொள்கிறான்.
அப்பன் அவனாகப் பேசிக் கொள்கிறான்.
“மாதா சுரூபத்தின் கீழ இருக்கும் தேவதை மாதரி இருக்கணும் மொவம். அவ வெள்ளாப்புத் தொழிலுக்குப் போவணுமிண்டா ஓர்லோசு* முடுக்கி மணி வைப்பா. மச்சான் எந்திரிங்கண்ணு எழுப்பிச் சுடுத்தண்ணி வச்சி மொவம் கழுவச் சொல்லி நீராரம் குடுப்பா. ராக்கடைத் தொழிலுண்ணு சோறு நீரெல்லாம் எடுத்து வச்சிப் பிரியமா வழியனுப்புவா. வாரப்ப கோப்பித்தண்ணி காச்சி வச்சிக் காத்திருப்பா. கடல் வாங்கலா இருந்து# போனவங்க வார நேரமாச்சிண்ணா மாதாகிட்ட முட்டுக்குத்தி இருந்து மன்னாடிட்டிருப்பா. பாவ நெனப்பு இல்லாம எம்புருசனவுட இந்த ஒலகத்துல யாரும் ஒசத்தி இல்லேண்டு நினைக்கிறவளா...” அப்பனின் கண்களிலிருந்து வெம்பனி உருகி வழிகிறது.
(* ஓர்லோசு - கடிகாரம்
# வாங்கலா இருந்து - சிறிதளவு கொந்தளிப்பாக இருந்து)
மரியானுக்கும் நெஞ்சிலிருந்த பாறை கரைந்து உருகி வருவது போல் உணர்ச்சி முட்டுகிறது.
கடல், காற்று, மீன் - காசு, கள்ளுக்கடை, இல்லாவிட்டால் மனைவி என்ற பெயரில் இவர் கொந்தளிப்புக்களைத் தாங்க இருக்கும் பாறை போல் ஒரு பெண்... இதற்கு மேலும் இவருக்கும் ஒரு மென்மையான நெஞ்சம் இருக்கிறதா?
மரியான் பள்ளிக்கூடம் என்று சார்ந்திருந்த நாட்களிலும் மரத்தை அடக்காவி வைத்துத் தள்ளுவதிலும் ‘போயா’ போட்டு நிறுத்துவதிலும், வலை மீனைத் தட்டி எண்ணுவதிலும் மடிக்காரருக்கு உதவுவான். அதற்கு மீன் கிடைக்கும். அதை விற்றுக் கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பான்.
“லே மக்கா, உலைக்கிப் போட ஒண்ணில்லே... லேய், துட்டு இருந்தாக் குடுலே... ராசால்ல...” என்று ஆத்தா கொஞ்சுவாள்.
“போம்மா, என்னக்க சல்லி வச்சிருந்தா எப்பமும் புடுங்கிக்கிடுதே...” என்று அவன் சிணுங்குவான்.
“நாளைக்கு அப்பன் துட்டுக் குடுத்ததும் உன்னக்க காசைத் தந்திடுதேன் லே... ராசால்ல...” என்பாள் அம்மை. “எனக்குக் கடியாரம் வேணும்” என்பான் அவன்.
“வாங்கிக்கலாம்...” என்பாள் அவள்.
கையில் கடியாரம் கட்டிக் கொண்டு நல்ல மடிப்புச் சட்டையும் குட்டையுமாக, கோயிலில் முன்பக்கம் மதிப்பாக இருக்க வேண்டுமென்று அவனுக்கு அந்த நாட்களில் ஆசை. அவன் இன்னமும் கடிகாரம் கைக்குக் கட்டிக் கொள்ளவில்லை. வெள்ளாப்புத் தொழிலுக்குப் போகவே மணி பார்க்கக் கடியாரம் கிடையாது. கோழியும் பழக்கமான முன்னுணர்வும் தான் கடியாரங்கள்.
மாற்றி மாற்றி வலை வாங்கவும் சாப்பிடவும் தான் வருமானம் செலவாகிறது...
அவன் எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.
செவிகளில் கிணு கிணுவென்று மணி ஒலிக்கிறது.
“மச்சான்... எந்திரிங்க, ஓர்லாசு மணி அடிக்கிது பாருங்க தொழிலுக்குப் போவாணாம்?...”
எழுப்பும் மலர்க்கரங்களைக் கண்களைத் திறக்காமலேயே முகத்தில் வைத்துக் கொள்கிறான்.
“தொழிலுக்குப் போ வாணாம் போல இருக்கி. உன்னண்டயே இருக்கா மிண்ணிருக்கி...”
“நெல்ல ஆளு...! இத பாருங்க, ஒங்கக்க பயவந்து உசுப்புறான், மக்கா, அப்பச்சிய எளுப்பிரு...”
குழந்தையைக் கொண்டு மலர் போல் விடுகிறாள். ஏலி... ஏலிதான். அவளைத்தான் கல்யாணம் கட்டி விட்டானே? அப்பாடா, நிம்மதியாக இருக்கிறது. மஸவாதி கெட்டு*... விடிய முன்னே கோயிலில் வச்சி கொட்டு முழக்கெல்லாம் இல்லாம கெட்டிட்டா... அப்பனும் ஆத்தாளும் மொதல்ல சொணக்கமாத்தான் இருந்தாங்க... பொறவு செரியாப் போச்சு... பொறவு...
(* மஸவாதி கெட்டு - முறை மீறிய பின் நடக்கும் கல்யாணம்.)
“தா... புள்ளயத் தூக்குட்டீ... மேல உடுதா...”
“அவெ நேரங்களிச்சித்தான் ஒறங்கியா...”
“உள்ளார வாங்க நசரேண்ணே, ஏன் அங்ஙனயே நிக்கி? கோபித்தண்ணி வச்சிருக்கே... உள்ளாற வாங்க...” என்று மேரி கூப்பிடுகிறாள்.
“பொளுது சேர விடிஞ்சிரிச்சி. மாமா எப்பிடி இருக்கீங்க?...”
“தூத்துக்குடி போறேண்ணு சொல்லிட்டாங்க?...”
“ஆமா. ஆத்தாளும் போ போண்ணு முடுக்குதா. போயிதா பாப்பமே எண்ணிருக்கே. ஜான் பய இங்கதா இருப்பா...”
குரல்கள் செவிகளுக்குக் கேட்கின்றன. ஆனால் கண்களை விழிக்க இயலவில்லை.
“அப்பம் நா வாரம்...”
“லே, பீற்றர், வலைய எடுத்திட்டுப் போலே...?”
பூட்டுத் திறந்தாற் போல் இப்போதுதான் அவனுக்கு விழிப்பு வருகிறது. சட்டென்று எழுந்து உட்காருகிறான்...
அதே வீடு... சுவரில் மாதா சுருவம். வெள்ளைக் கண்டு எத்தனையோ நாட்களாகிவிட்ட சுவர்கள். மூலையில் நார்ப் பெட்டிகள் - அலுமினியம் வட்டை. தகரப் பெட்டி... சுருட்டிய பழம் பாய்கள்.
அவன் இன்னும் ஏலியைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கவில்லை.
முள் நிறைந்த மரத்திலிருக்கும் பழங்களாக அந்த வாழ்க்கை அவன் மீது கவிந்திருக்கிறது.
வலக்கையில் சாமுவேல் வீட்டுக்கும் இவர்கள் வீட்டுக்கும் இடையில் பாறைப் படிவமாக ஒரு முடுக்கு... குப்பையும் முள்ளிச் செடிகளும் உடைந்த ஓடுகளுமாகக் கிடக்கும் அந்த முடுக்கில் தான் அவர்கள் இயற்கைக் கடன் கழிப்பார்கள். நாய் செவியடித்து உடலை வளைத்துக் கொண்டு ஓடுகிறது. பொதுக் கிணற்றில் நீரெடுக்கக் கூட்டம் கூடிவிட்டது. மரியான் சில்லென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கோப்பித் தண்ணீரைக் குடித்துவிட்டு மடிப்பெட்டியைப் பார்த்து இடுப்பில் செருகிக் கொள்கிறான். தலைத் துணியைக் கட்டிக் கொண்டு, புறக்கடையில் இறங்கி ஓடுங்கிறான். அலுமினியம் தூக்கில் மேரி வைத்திருக்கும் சோற்றையும் வெங்காயத் துவையலையும் கூட எடுத்துக் கொள்ளாமல் ஓடுகிறான்.
காற்று மணலை வாரி வீசி அடிக்கிறது. இவன் கரைக்குச் செல்லும் நேரத்தில் மரத்தை நீரில் தள்ளி விட்டார்கள். வெயில் சுடரின் பரப்பாகப் பாய் விரிந்திருக்கவில்லை. கடல் சற்றே ‘வாங்கலா’கவே இருக்கிறது. கடலில் ஆங்காங்கு கூம்பு கூம்பாக பாய்ய்கள் விரிந்து மரங்களைத் தள்ளிச் செல்கின்றன.
ஆழிப்பாரில் மடக்கலை யார் மரத்தையோ மறித்து மறித்து விட்டு விளையாடுகிறது. முட்டாப் பயல்கள் தென்கிழக்காகப் போக வேணாம்? பார் தடையில் சிக்குவதை நினைத்தால் இன்று கடலுக்குப் போக வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. ஆனால்... கடலில், அலையெறியும் கடலில் தொழிலில்லை என்றால் அவர்களுடைய வீடுகளில், அடுப்புகளில் உலையேறாது; பூனை உறங்கும்.
ஆற்று வெள்ளம் கடல் மடைகளில் பாயும் இந்நாளில் மடக்கலைக்கு அஞ்சிப் பரவன் இருக்க முடியுமா?
“மச்சான் சொகமாக் கெனாக்கண்டு உறக்கம் புடிச்சிருக்கியா, வாரதில்லண்டு நினைச்சம்...” என்று கொம்பைப் பற்றியிருக்கும் ஜான் சிரிக்கிறான்.
மரத்தில் எல்லாவற்றையும் பொருத்திக் கட்டியிருக்கின்றனர். அவனும் பாய்ந்து ஏறிக் கொள்கிறான்.
“மடக்கலையே மாரிஸா...” என்று ஜான் பாட்டை முண முணக்கிறான். நசரேன் எப்போதும் போல் புறதலையில் நிற்கிறான். இவர்கள் கொம்பைக் குத்தித் துடுப்பைப் போட்டு மரத்தை இயக்குகின்றனர்.
மரத்தின் மீது தண்ணீரை நாற்புறங்களிலும் வாரியடிக்கிறது அலைகள். ஏற்றம் ஏறி அந்தப் பக்கம் இறங்குவதற்குப் பதிலாக, கரைப் பக்கமே சரிக்கின்றன. பாரின் தடைகடக்கும் வரையிலும் கண்டம் தான்.
நசரேன் தலைத்துணியை அவிழ்த்துக் கொண்டு ‘மாதாவே இரக்கமாயிரும்’ என்று பிச்சை கேட்கிறான்.
தடை மீறிவிட்டால் கடல் ஆத்தாளைப் போல் அடுத்து உறவு கொண்டதுதான்.
மிகவும் சாமர்த்தியமாக ஒரே நோக்காய்ப் பணிந்து தண்டுவலித்துத் தடை கடக்கின்றனர். மரம் ஒரு முறை கூட மறியவில்லை. பெரிய கண்டம் தப்பிவிட்ட மாதிரியில் நன்றி செலுத்துகின்றனர். கச்சான் காலம். ஐப்பசி பிறந்தால் தான் கச்சான்* அடையில்# விழும் என்பார்கள். பாய்த்தண்டை நிமிர்த்தி, மரியானும் நசரேனுமாக அனியத்தில் ‘நெட்டமாக’ நிற்கக் குத்தி வைக்கின்றனர். கால்களை அகற்றி நின்று தோளில் மாற்றி மாற்றிச் சாய்த்துப் பாயை விரிக்கையில், ‘பிலன்சு’ இல்லை என்றால் அலைகளும் காற்றும் காலை வாரி வீழ்த்திவிடும்? ஜான் பாய்க் கயிற்றை இழுத்து மரத்தில் கட்டுகிறான். பாயை உந்தித் தள்ள அலைக் கரங்கள் தாங்கித் தாங்கிவிட மரம் செல்கிறது.
(* கச்சான் - மேல்காற்று
# அடை - அட மழைக்காலம்)
‘வாணி வாடு... அரிநிவாடு*...’ என்று நசரேன் முணமுணக்கிறான்.
(* வாணி வாடு... அரிநிவாடு - நீரோட்டம் கிழக்கிலிருந்து மேற்கே வருவதைக் குறிக்கும் சொல்.)
தாவு கல்லை இளக்கிவிட்டுப் பார் அளந்து, நீரோட்ட இயல்பறிந்து, மரத்தைப் பையப் பையக் கிழக்கே கொண்டு செல்கின்றனர்.
மீன்கள் பகல் நேரத்தில் ஆழ்கடலை நோக்கிச் செல்லும்.
செம்பழுப்பாக மடை தெரிகிறது. இன்னும் தொலைவில் கடல் கோடு இழுத்தாற்போல் கருநீலம் பாய்ந்து தெளிந்திருக்கிறது. அது அழிப்பார்... அங்கே கடலுக்கடியில் மலைகள் மூழ்கியிருக்கும் பகுதி கல் றாள் போன்ற மீன்களிருக்கும். ஆனால் இந்த வலைகள் சிக்கினால் அவ்வளவுதான்... இந்த மரம் கொண்டு அங்கே தாக்குப் பிடிக்க ஏலாது. லாஞ்சியானால் ஆழியில் தொழில் செய்யத் தொலைவு செல்லலாம்.
‘அண்ணே...! ஓங்கலு... தா... ஓங்கலு...!’ ஜான் தான் காட்டுகிறான்.
‘முட்டாப் பய மவெ... எருமை கணக்க புசுபுசுண்ணு முட்டி மூச்சு விட்டுட்டு ஆராளியாக்க... இங்கிய வருது?...’
‘சொம்மாரு... போயிரும்...’ என்று நசரேன் சாடை செய்கிறான். ‘மாதாவே...! யேசய்யா, இரக்கமாயிரும்...’
அது வலைகளைக் கிழிக்கும்; மரத்தை மறிக்கும்... வலிமையுள்ள முரட்டுக் கடல் பிராணி.
நசரேன் பதமறிந்து, ஓட்டமறிந்து மரத்தைச் செலுத்திச் செல்கிறான்.
உயர்ந்து தாழ்ந்து, உயர்ந்து தாழ்ந்து மரம் நாற்புறமும் எல்லை விரிந்த கடல் நடுவே செல்கையில் அவர்கள் வேறு உலக மனிதர்கள். தங்கள் தொழிலே கண்ணுங் கருத்துமாக இருக்கும் இயந்திரங்கள். கரை கண்களை விட்டு மறைந்து விடுகிறது. இதே கோட்டில் வடக்கே சென்றால், மணப்பாட்டு மலையின் சிலுவையார் கோயிலும், இன்னும் மேலே திருச்செந்தூர்க் கோயிலும் கூட மங்கலாகப் புலப்படும்.
சற்று எட்ட, நீரில் மீன்கள் அமர்ந்திருக்கும் ‘மாங்கு’ தெரிகிறது. இரவானால் ‘புள் பாச்சிலில்*’ தான் கண்டுகொள்ள வேண்டும். பகலில் எண்ணெய் படிந்தாற் போன்று இருண்டிருக்கும் ‘மாங்கு’ புலப்படும். சில சமயங்களில் கணவாய் மீன்கள் ஒருவித மசியைப் பீச்சியடித்து நீரில் அவ்வாறு தெரிவது போல் ஏமாற்றி விட்டுப் போய்விடும்... மாதாவே...!
(*புள் பாச்சல் - கடலின் மீது பறவைகள் பறந்து மீனைக் கொத்த வருதல்)
வேண்டிக் கொண்டு அவர்கள் மளமளவென்று வலைகளை அவிழ்த்து ஒவ்வொன்றாய்ப், படுதல் கீழும் மிதப்பான்கள் மேலும் தெரிய நீரின் ஆழத்தில் இறக்கி விரிக்கின்றனர். இன்று கொண்டு வந்திருப்பது சாளை பிடிக்கும் வலையல்ல. வாளை மீன்கள், வஞ்சிர மீன்கள் படக்கூடிய சற்றே பெரிய கண்களை உடைய வலைகள். பழைய விலைக்கு வாங்கிய வலைகள். சீராக்கி முடிந்து வலுவான இணைக்கயிறுகள் தொடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர்.
பத்து வலைகளையும் இணைத்து கயிற்றை நீளமாக விட்டு மரத்தின் கொங்காட்டில் முடித்து வைத்துக் கொள்வதற்குள் பொழுது உச்சிக்கு வந்து விடுகிறது. மேக மூட்டத்திலிருந்து கதிரவன் தலை காட்டுகிறான். உடலின் உரமெல்லாம் உருகிவிட்டாற் போன்று வயிற்றில் பசி குடைகிறது. தலைத் துணியை உதறி மேலெல்லாம் துடைப்பது போல் மரியான் இழுத்து விட்டுக் கொள்கிறான்.
ஜான் மரத்தோடு இணைந்த அலுமினியத் தூக்கைத் திறந்து கருவாட்டுத் துண்டைக் கடித்துக் கொண்டு சோறுண்ணுகிறான்.
இவனுக்கு இப்போதுதான் மீசை லேசாக அரும்புகிறது. நசரேனைப் போல் அப்பனின் சாடையில்லை. ஆத்தாளைப் போல் சிவப்பாக இருக்கிறான். ஜான் உண்டு நீர் பருகிய பின் நசரேன் நாலு வாய் சாப்பிடுகிறான். “மச்சான், நீனும் உண்டுக்கோ...”
“வாணாம் மாப்ள...”
வலைகளை இழுக்குமுன் மரியான் சோறுண்ண மாட்டான். கச்சையில் செருகியிருக்கும் மடிப்பெட்டியைத்* திறந்து வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்கிறான். சுண்ணாம்பு சேர்த்து மென்று கொண்டே, புகையிலைத் தூளைக் கையில் எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்கிறான். மடிப்பெட்டி புதியது. செயமணி சிவப்புச் சாயம் தோய்த்த ஓலையை ஈர்க்குப் போல் மெல்லியதாகக் கிழித்து, இங்கிலீசில் ‘மரியான்’ என்று பளிச்சென்று தெரிய பின்னியிருக்கிறாள்.
(*மடிப்பெட்டி - பனைநாரினால் முடையப் பெற்ற வெற்றிலை பாக்குப் பை)
“ன்னா... வேணுமா மாப்ள...?”
நசரேனுக்கு வெற்றிலையை விடப் பீடிதான் அவசியமாக வேண்டும். ஜான் அதை வாங்கிக் கொள்கிறான்.
“மச்சான், என்னம்பாய் முடிவு பண்ணிப் போட்டே?” நசரேன் கேட்கிறான். “எதுக்கு?”
“மாமெ லாஞ்சி பத்திச் சொன்னதுக்கு...”
புகையிலைச் சாற்றை உமிழ்ந்து விட்டு அவன் பேசுகிறான்.
“அப்பெ அதுக்கு ஒத்துக்கல. எனக்கும் இந்தக்கரய விட்டுப் போறது ஏலாதுண்டு தோணுதா... நானொண்ணு உங்கிட்ட முடிவா கேட்டுடணுமிண்டிருக்கே. இதுல ஒளிக்காம உண்மையாம்படியே சொல்றது மேலு. தங்கச்சி லில்லிப் பொண்ண நீ கெட்டுறதுண்ணு முன்னமே உங்கப்பச்சி இருக்கிறப்பவே சொன்ன பேச்சி. அத்தெ எங்கக்கப்பெ, ஆத்தா இன்னம் நப்பிட்டிருக்கியா. மின்ன அது மெனக்கிண்டு வந்தப்பகூட, நீ எங்க வீட்டுக்கு அத்தத் தேடி ஆசையா வந்ததை இப்பமும் சொல்லிட்டிருக்கா ஆத்தா. ஆனா, ஊரில எல்லாம் இப்ப மாமெ லாஞ்சி வாங்கி விட்டிருக்கிறதப் பத்தியும், நீ மாமெ மகளைக் கட்டப் போறேண்ணும் பேசிக்கிறது காதில வுழுகுதா. அதாம் கேக்கேன்...” நசரேன் பீடியைக் கையிலெடுத்துக் கொண்டு புகையை எங்கோ பார்த்துக் கொண்டு விடுகிறான். சிறிது நேரம் சென்ற பின் அவனைப் பார்க்காமலே கூறுகிறான்.
“ஊருல சொல்லுவா. ஊருக்காரங்களுக்கு என்னம்பு அதப்பத்தி - ஆத்தாளுக்கு அண்ணெ மவளைக் கெட்டணுமிண்டிருக்கு... எங்க மாமி சாகும் வரயிலும் மைனியும் இவளும் எலியும் பூனையுமாச் சண்டை போட்டிட்டிருந்தா. இப்பம், அங்கே பெரியவ ஆருமில்ல. மாமெ எல்லாம் யோசிச்சித்தான் வந்திருக்காரு. ஆனா...”
பேச்சு இழை அறுந்து போனாற்போல நிற்கிறது. வானில் யாரோ அல்லிப் பூக்களை விசிறியடித்தாற் போன்று கடற்காகங்கள் பறக்கின்றன.
“மாமெ மக சிலோன்ல படிச்சிட்டிருந்திச்சில்ல?”
“ஆமா, பி.எ. படிச்சிருக்கா. அதான் வாணாமுன்னே. அவ மதிக்க மாட்டா. மேசையிலதா சாப்பிடுவா, கட்டில்லதா ஒறங்குவா. கவுனு, லுங்கிதா உடுத்துவா. எங்கம்மா சீதனம் வருமிண்ணு பாக்கா. ஆனா, எனக்கு இட்டமில்லிய. நா லில்லிப் பொண்ணத்தா மனசில வச்சிருக்கே. தொழில் மேம்மைய நினச்சித்தா தூத்துக்குடி போறேனே தவுர, எனக்கு லில்லிப் பெண்ணத்தா நினப்பு.”
மரியானுக்கு இதைக் கேட்க உள்ளம் குளிர்ந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
“எப்பிடின்னாலும் நீங்க ஒசந்தவங்களாப் போயிட்டீங்க...”
“அப்பிடிக் கொண்ணும் வித்தியாசமாப் பேசாதே மச்சான். நாம இப்ப நடுக்கடல்ல நிண்ணு பேசுதோம். மாம மகளைக் கெட்ட, மனசோடு இஷ்டமில்ல. நா தொழில நினச்சிப்போறாம். இங்க ஜான் வரான். இதே மரத்தில் நீங்க தொழிலைத் தொடர்ந்து செய்யிங்க...”
அவன் பேச்சு மிக இதமாக இருக்கிறது. நடுக்கடலில் வாக்குக் கொடுப்பது போல் பேசியிருக்கிறான். கடலின் அலைகளனைத்தும் சாட்சியாக ஆசீர் அருளுகிறது. அந்த இரைச்சல் மென்மையாக விழுகிறது. பிறகு வலைகளை இழுக்கத் தொடங்குகின்றனர்.
வியர்வையும் உப்பு நீரும் ஒன்றாகக் கரைய அவர்கள் தசைகள் முறுக வலைகளை இழுக்கின்றனர். இவர்களுடைய உடலுழைப்பின் சாறாக உவர் நீர் கலந்துதான் கடல் உப்பாகிப் போயிற்றோ?
வாளை, சூடை... என்று வெள்ளிக் குருத்துகளாகக் கடலின் மடியிலிருந்து வரும் செல்வம்.
ஐந்தாவது வலையில் மூன்று சுறாக்கள்.
பொடி மீன்களுக்கிடையில் அரச குடும்பத்துப் பிதிர்க்களாகச் சுறாக்கள். இரண்டு ஆண்; ஒன்று பெட்டை. ஒவ்வொன்றும் நான்கு நாலரையடி நீளமுள்ளது. நைலான் வலைக் கயிறுகளை ஆத்திரத்தில் கடித்துக் குதற முயன்றிருக்கிறது. கயிறு கழுத்தில் பட்டு அறுத்து இரத்தம் கசிய, துடுப்புகளால் வளைந்து அடித்துக் கொண்டு போராடுகின்றன.
மரியானும் நசரேனும் கணக்குப் போடுகின்றனர்.
அன்றையப்பாடு... நூறு ரூபாய் கொண்டு வரலாம்.
ஆளுக்குப் பாதி பிரித்துக் கொண்டு, தங்கள் பகுதியில் கால் பங்கை இருவரும் ஜானுக்குக் கொடுப்பார்கள்.
கரை வரவர உற்சாகம் கரை புரண்டோடுகிறது.
ஏலே லோ ஏல ஏலோ
ஏலே லோ தாந்தத்கினா...
ஏலே லோ லவங்க மொடு தாந்தத்தினா
இஞ்சி மஞ்சள் க்ராம்பு ஓமம் தாந்தத்தினா
வால் மிளகு சீரகமும் தாந்தத்தினா
வங்காள பச்சையுடன் தாந்தத்தினா
வேளரிசி கருட பச்சை தாந்தத்தினா
வீரி சிங்கி வசம்பு ஓமம் தாந்தத்தினா
தால மதி அக்கரா சித்திரத்த ஓமம்
தாளிச பத்திரி சாதிக்காய் ஏலம் - நாதமுடன் கப்பலின்
மீதினில் ஏற்றி - நளின சிங்காரமொடு வருகிறது பாரீர்...
ஜானுக்குப் பாட்டு உற்சாகமாக வருகிறது.
இவர்கள் கரையேறி வலைகளைத் தட்டுமுன் இந்தக் கடற் செல்வத்தைக் காணப் பிள்ளைகள் கூட்டம் சூழ்ந்து விடுகின்றனர்.
அந்தோணியார் பட்டத்தலையும் ராயப்பர் வாளிக்காதுமாகப் பொடிப்பயல்கள் எத்தனை பேர்? எல்லோரும் கடல் தொழிலுக்கு ‘வாரிசு’கள். சுய பலத்தையும் தன்னம்பிக்கையும் படித்துத் தரும் இந்தக் கடல் தொழிலுக்கு, அந்தப் பள்ளிக் கூடத்தின் ஏட்டுப் படிப்பைப் புறக்கணித்துவிட்டு வந்திருக்கின்றனர்.
வாய் பிளக்க, இரத்தக் கீறல்களுடன் சுறாக்கள் மணலில் விழக் கண்டதும் கூட்டம் வேடிக்கை பார்க்க மொய்க்கிறது.
“...ஸ்றா!... மேச்சுறா...!”
எத்தனையோ மடிக்காரர், எத்தனையோ மேச்சுறாக்களைப் பிடித்து வந்து இக்கரையில் கிடத்தியிருக்கலாம். ஆனாலும் “ஸ்றா” என்றால் ஓர் புத்தார்வம். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மரங்களின் வருகையை எதிர்பார்த்து, அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலுக்கு மக்கள் கூடுவது போல் குழுவி விடுகின்றனர். கதிரவன் மலை வாயில் விழ விரைந்து கொண்டிருக்கிறான். பிச்சைமுத்துப்பாட்டா விரைந்து வருகிறார். மீன் கொட்டடியிலமர்ந்திருந்த குலசைச் சாயபு துவி கழிக்க வளைந்த கத்தியுடன் விரைந்து வருகிறார்.
அற்பமாகப் பட்டிருக்கும் காரல் மீன்களை நிராகரித்து கோயில் ஒண்ணரைக் கண்ணன் பத்துக் கொன்று கணக்குப் போட்டுக் கொண்டு பிடுங்க நிற்கிறான். குடிமகன் சக்கிரியாஸ் சில பொடி மீன்களைப் பெற்றுக் கொள்ள வருகிறான்.
“பத்து... பத்து... பதினொண்ணு... பதினஞ்சு, இருபது...” உயர்ந்து கொண்டு செல்கிறது, பாட்டாவின் குரல்.
“இருவத்தஞ்சி, நுப்பது, நுப்பத்து மூணு, நுப்பத்தஞ்சு, நுப்பத்தெட்டு... நாப்பது... அம்பது, அறுபது” வரையிலும் சென்று இரண்டிரண்டாக உயர்ந்து ‘எழுபத்திரண்டில்’ சென்று நிற்கிறது.
ஆனால் மரியானின் முகத்தில் உற்சாகமில்லை.
துவிகள் இன்னும் ஐம்பது ரூபாயைக் கொண்டு வரக் கூடும். ஒன்பது துவிகள் வெட்டியிருக்கிறார்.
“மாப்ள நீ நாயராட்சை, நாளச் செண்டு தூத்துக்குடி போ. பெஞ்சமின் நாமெல்லாஞ் சேந்து ஒன்னிச்சிப் பேசி இந்தத் தெறிப்புக் கெள்ளய நிப்பாட்டணுமிண்டு சொல்லிருக்யா. நீ போயிராத...”
“சரி...” என்று நசரேன் தலையசைக்கிறான்.
ஆனால்... அவன் அன்று ஊரிலில்லை.
கடலின் இடைவிடாத இலய இசைக்கு ஏற்ப பனைகள் சுருதி கூட்டும் கன்னிபுரக் கடற்கரையில் ‘மெனக்கி’ என வழங்கப் பெறும் ஓய்வு நாள், உடற்பாடுபட்டு, மீன் ‘பாடு’ காணும் தொழிலுக்கும், அன்றாட வாழ்வின் நியமங்களுக்கும் மேலாக வாழ்க்கையில் ஓர் பற்றுக்கோல் தேவை என்று உணர்த்தும் ஓர் வாராந்தர நாள் கடலைப்பற்றிக் கவலைப் படாமல் காசு மட்டுமே குறியென்று வாணிபம் செய்பவர்கள், வாத்திமைத் தொழில் செய்பவர்கள், பல்வேறு வழிகளில் பொருளீட்டி ஓய்வாக ஊரில் மச்சு வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் ஆகியோருக்கு, கோயிலுக்குச் சென்று பங்குப் பூசையில் கலந்து கொள்ளல் அந்தச் சிறு ஊரின் சமுதாய வாழ்வின் முக்கியமானதோர் பகுதியாகும். பெண்டிருக்கு, தத்தம் புதிய ஆடையணிகளை விளம்பரம் செய்து கொள்வதற்குரிய வாய்ப்பான தருணம் இந்தக் கோயில் கூட்டம்தான். திருப்பலிப் பூசையில் கலந்து கொண்டு தன்னை நல்ல கிறிஸ்துவன் என்று காட்டிக் கொள்வதால் எந்த வகையான செயலைச் செய்யவும் அது காப்பாக, ‘லைஸென்ஸ்’ போன்று பயன்படும் என்று நினைப்பவரும் உண்டு.
மரியான் கோயில் மணி அடிக்கையிலே படுத்துத்தானிருக்கிறான். ஆத்தா அம்மியில் மருந்தரைக்கும் சாக்கில் கல்லையே இழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
“மாதாவே எரக்கமாயிரும்...” என்று சொல்லிக் கொண்டு அப்பன் மெள்ள எழுந்து புறக்கடைப் பக்கம் போகிறார்.
“எட்வின் பொஞ்சாதிக்கு என்ன புள்ள பெறந்திருக்கு?” என்று மரியான் செயமணியிடம் விசாரிக்கிறான்.
“கழுத்தோட வந்து நிண்ணு வகுத்திலியே செத்துப் போச்சாம்; மைனி அளு அளுண்ணு அளுவுதாம்...”
சில்லென்று அவனுள் ஓர் அச்சம் விறைக்கிறது.
ஏலி... ஏலிப்பெண்... எல்லோராலும் வெறுத்து இகழப்பெறும் ஒரு பெண்... அவன் கருவைத் தாங்கியிருக்கிறாள்.
முதல் நாள் கடலிலிருந்து திரும்பி வந்ததும் அவன் நேராக வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டதும் அங்குதான் போனான்.
அவனைப் பார்த்ததும் சிறு விளக்கைத் தூண்டிவிட்டுப் பேதையாகச் சிரித்தாள். கை நீட்டி அவளைத் தீண்ட முன்னின்ற அவனுடைய ஆர்வத்தில் ஓர் உணர்வு குறுக்கிட்டுப் பின்னிழுத்துக் கொள்ளச் செய்கிறது.
கண்கள் குழியக் கன்னம் தேய, கழுத்துக்குழி தெரிய மார்புகள் பொங்கி முனைத்திருந்தன. முரட்டுத்தனம் கிளர்ந்தெழ, உடற்பசியின் வெப்ப மிகுந்த அந்தப் பரவன், அன்று மலரைப் போற்றி அரவணைக்கும் புறவிதழாக மாறி அவளைக் கவிந்து போற்றத் துடிக்கும் மென்மை மிகுந்தவனாக மாறிப் போனான்.
அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
அவள் கண்கள் உருகி ஒளி சுடர்ந்தன.
“என்னிய எல்லாரும் வேசண்டு சொல்லுதா. ஆனா இப்பம் நானு சத்தியமா அப்படிக்கில்ல. ஒங்க புள்ளத்தா இது...”
அவனுக்கு உடல் முழுதும் ரோமாஞ்சனம் உண்டாயிற்று.
“ஒங்கக்க... நல்ல எடத்திலேந்து சீதனத்தோட பொண்ணு கெட்டணும். நானு பாவம் செஞ்சிருக்கே. மாதாவோட மனஸ்தாபப்பட்டு நிதம் ஜபம் சொல்லுதேன்...”
அவன் அப்போது அவள் வாயைப் பொத்தினான்.
“சொல்லாத புள்ள, நாம பாவம் எதும் பண்ணல. நம்ம மனசுக்கு ஒளிச்சி எதும் செய்யக் கூடாததைச் செஞ்சாத்தா பாவம். நம்ம மன்சு மாதாக்குத் தெரியும்...”
அவள் கண்களிலிருந்து நீர் பெருகி வந்தது.
“ஏனளுகா புள்ள?...”
“இந்தக் கரு... நீங்க இல்லண்ணாலும் பாவத்தில் ஜனிச்சதா. சாமி ஞானஸ்நானம் கொடுக்குமா? புள்ளக்கு அப்ப பேருண்டு ஒங்கக்க பேரச் சொன்னா ஒங்கக்கு அது கொறயில்லியா?”
அப்போது அவன் மெழுகாய்க் கரைந்து போனான்.
“ஏலி, நாம ரெண்டு பேரும் கெட்டிட்டா ஆரு என்ன சொல்ல இருக்கு? எனக்கு இப்பம் ஒன்னிய நெம்பப் புடிச்சிருக்கு...”
“ஒங்கக்க ஆத்தா அப்பனெல்லாம் ஏச மாட்டாங்களா? ஒங்கக்க வூட்டில நான் காலு குத்த ஏலுமா?... வாணா ராசா! நீங்க நல்ல பெண்ணாக கெட்டி இந்தக் கரயில மேம்மயா இருக்கணும். என்னக்க இந்தப் புள்ள... ஒண்ணு போதும்... நெல்லபடியா. என்னக்க ஒரே ஆசதா...”
“என்னிய ஆச ஏலி?”
அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டு விரலால் நிலத்தில் கீறிக் கொண்டு சொன்னாள். மென்மையான அந்த சன்னக்குரல் அவனுடைய உள்ளத்தின் உள்ளே மட்டும் சென்று நுட்பமான இழையை மீட்டிச் சங்கீதம் பாடச் செய்வது போல் சொன்னாள்.
“ஒங்கக்க ஆத்தா இந்தப் புள்ளக்கி, வெள்ள சட்ட போட்டுக் கையில வச்சிட்டு கும்பாதிரி* யாத்தாவா வந்து ஞான ஸ்நானம் குடுக்கணும்...”
(* கும்பாதிரி ஆத்தா - God Mother)
இந்தக் காலை நேரத்தில் கோயில் மணி ஒலிப் பூக்களைக் காற்றிலே சிதற விடும் பொழுதிலே அந்தச் சொற்கள் நினைவிலெழ அவன் கண்கள் பசைக்கின்றன.
கோயிலுக்குப் போகலாமா என்று நினைக்கிறான்.
முன்பெல்லாம் அவன் கோயிலுக்கு ஞாயிறு தவறாமல் அப்பனுடன் செல்வான். இவருக்கு முன்பு ஒரு பாதிரி இருந்தார். பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரு பெண் சென்ற போது, அவளுடைய பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தார். அவள் அதைத் தன் அண்ணனிடம் சொல்லிவிட்டாள். அவன் காலோடு தலை சேலையால் போர்த்து மூடிக் கொண்டு பின் தோட்டத்து வழியாகச் சென்று நின்று கொண்டிருந்தான். சாமி வந்ததும் உள்ளே சென்று அவரை வலைகளிழுத்து வயிரம் பாய்ந்த கைகளாலும் கால்களாலும் நன்றாக ‘உபசாரம்’ செய்துவிட்டு வெளியே வந்தான். அந்த ‘மச்சான்’ பெஞ்ஜமின் தான். அவனுடைய சின்னாத்தா பெண் அற்புதத்தைத்தான் அந்தச் சாமி அவ்வாறு தன் வலைக்குள் வீழ்த்தப் பார்த்தார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகின்றன.
அந்தப் பங்குச்சாமி சாமிதாஸ் போய், இந்த சேவியர் சாமி வந்திருக்கிறார். மரியானுக்கு அதற்குப் பிறகு சாமியார்களும் வெறும் மனிதர்கள் தாம் என்ற எண்ணம் உறுதியாயிற்று. அவனால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்று அவர்களுடைய மீன்பாட்டில் உரிமை கேட்கும் விஷயம். அப்பனிடம் இதைப் பற்றிச் சொன்னாலே அவருக்குப் பிடிப்பதில்லை. “லே, திருச்சபையையோ, குருவையோ சந்தேகப்படக் கூடாது...”
திருப்பலிப் பூசைக்குச் சென்று நற்கருணை வாங்காமல் வரமாட்டார். ஆத்தாளை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல இயலாது. அவன் மனதறிந்து கோயில் தெறிப்புக்கு அஞ்சி, மீன்பாட்டை மறைக்கத் தொடங்கியிருப்பதால், கோயிலுக்குப் போனாலும் ஒதுக்கமாக நின்றுவிட்டு வந்து விடுகிறான்.
எத்தனையோ பேர் எத்தனையோ பாவம் செய்கிறார்கள். எல்லோரும் நற்கருணை வாங்குவதுமில்லை.
அப்பன் முகம் கழுவிக் கொண்டு வந்து விட்டார். ஆத்தா அரைத்த விழுதை வழித்து எடுத்துக் கொண்டு நடு வீட்டின் வழியே குசினிக்குப் போகிறாள்.
“எங்கட்டீ, சீப்பு? எண்ணெய் கொண்டாட்டி, தலைய சீவிக்கிறதே. ஏக்கி மேரி, வெள்ளையா சரட்டு மடிச்சி வச்சியே! நார்ப் பொட்டிலேந்து என்னக்க உருமாலை எடுத்துக் குடுட்டி?”
ஆத்தா முட்செடி மிலாறை அடுப்பில் தள்ளிச் சுருசுருவென்று எரியவிட்டுக் கஷாயம் காய்ச்சுகிறாள்.
“நீரு இன்னிக்குக் கோயிலுக்குப் போவணுமா?...” என்று கேட்டுக் கொண்டு மரியான் எழுந்திருக்கிறான்.
“கோயிலுக்குத்தாம் போறம்; பூசைக்குப் போனாலே தெம்பாயிருக்கும். ஏக்கி மேரி, முட்டையொண்ணு போட்டு நெம்ப வெவிக்யாவ தண்ணி கொதிச்சதும் எடுத்துக் கொண்டா...”
ஆத்தா அப்போது சேலை முன்றானையைச் சுற்றிக் கொண்டு வருகிறாள்.
“கையும் காலும் வாதம் புடிச்சாப்பல ஆடுது. அம்மாட்டுக்கு மணல்ல நடப்பீரா? எங்கியாலும் வுழுந்துவச்சா?”
“நீ சொம்மா கிடடி கிளட்டுச் சவம். நீ எனக்கு ஒண்ணும் செய்யண்டா? ஏக்கி மேரி, சட்டயும் சாரமும் எடுத்துக் குடுட்டீ!”
செயமணி குப்பியில் தேங்காயெண்ணையும் சீப்பும் கண்ணாடியும் கொண்டு வருகிறாள்.
முதல் நாள் தான் குடிமகன் வந்து சவரம் செய்திருக்கிறான். முகம் மழுமழுப்பாக இருக்கிறது. நல்ல கறுப்பு. மீசை எப்போதுமே கிடையாது. அந்தோணியார் பட்டத்தலை போல் நடுவில் நல்ல வழுக்கை பளபளப்பாகத் தெரிகிறது. முன்பக்கம் நாலைந்து பிசிறு முடிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக; கெளுது மீனை நினைப்பூட்டும் நெற்றி, உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றி, மண்டை பளபளக்கத் தடவிக் கொள்கிறார்.
மரியான் இதற்கு மேலும் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து வெளியே செல்கிறான்.
கடல் அலைகள் இன்று ‘மெனக்கி... மெனக்கியில்ல?’ என்று கேட்பது போல் கரையை வந்து தழுவுகின்றன. கரையோரம் எல்லா மரங்களும் அணிவகுத்து நிற்கும் கோலத்தில் காட்சி தருகின்றன. கடல் கண்களுக்கெட்டிய தொலைவுக்கு விறிச்சிட்டிருக்கிறது.
அப்பன், கடைசியாக அன்று ஆடி வெள்ளி நாளில் தொழிலாளியார் பூசைக்குப் போய்த் திரும்பி வந்து படுத்தவர் தான், மணற்கரையில் பந்தல் போட்டு, சாமியாரை அழைத்து, கடலையும் மரங்களையும் மந்திரித்து நீர் செபிக்கும் அந்நாளிலும் அவர்கள் தொழில் செய்யப் போக மாட்டார்கள். பூசை முடிந்தபின் வலைகளை எடுத்துக் கொண்டு அவன் தொழிலுக்குப் போகவில்லை. தலை நோவும் உடல் நோவும் அவன் வழக்கமாகக் குடிக்கும் சாராயத்துக்கும் தீரவில்லை. உடல் பொரியக் காச்சல். எட்டு நாட்கள் தன்னிலை தெரியவில்லை. கை வைத்தியங்கள் செய்தும் இறங்கவில்லை. வாயில் ஒரு கசப்பு. கண்களை விழிக்கவே வெறுப்பு. கூடங்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆத்தாளும் மேரியும் போய்ச் சொல்லி மருந்தும் மாத்திரையும் வாங்கி வந்தார்கள். காய்ச்சல் இறங்கியது. அவன் இந்தக் கண்டத்துக்கு உயிர் போய்விட்டதாகவே நினைத்தான். யேசுபிரான் அவனுக்குள்ள கடமைகளையும் ஆசைகளையும் மதித்து அவனுடைய மன்றாட்டுகளைச்செவியேற்றிருக்கிறார். இருதயராஜ் திருப்பலிப் பூசையில் பங்கு பெறப் போகிறார். அவர் கையை செயமணி பிடித்து அழைத்துப் போகிறாள்.
மணலில் கால்கள் படுகையில் ஓர் குறுகுறுப்பு. வெள்ளையும் சள்ளையுமாக ஆண்களும், வண்ணங்களாக முக்காடிட்டுக் கொண்டு பெண்களும் ஜெபப் புத்தகங்களுடன் மாதா கோயிலுக்குச் செல்கின்றனர். காலைப் பொழுதின் மனோகரம் இன்பமாக இருக்கிறது. பெண்களின் தோள்களிலும் கைகளிலும் சூழ்ந்தும் குலுகுலுவென்று குழந்தைகள் - ஓடியாடும் சிறுவர்...
“மாமோவ்! எப்படி இருக்கீரு? ஒடம்பு... எம்மாட்டும் கருவாடாப் போனீரு!”
“மாமோவ்! திருச்செந்தூராசுபத்திரில ஒடம்பக்காட்டி நாலு ஊசி போட்டுக்கும், நெல்லாயிடும்! அங்க நல்ல டாக்கிட்டர்...”
சிலுவை பிச்சையான் அவருக்கு நெடுநாளைய நண்பன். இவரைப் போலவே கூலி மடி செய்யும் தொழில்காரன். சம்சாரி, குடிக்கவும் வேண்டும், அவன் யோசனை...
“ஒண்ணும் வாணாம்வே. மாதா கிருவை இருந்தாப் போதும். போன பதினஞ்சா நாளு இருந்ததுக்கு இப்பம் கால்குத்தி நடப்பேண்டு நெனக்கல...”
செயமணியின் தோழிகளான புனிதா, விர்ஜின் ஆகியோர் பளபளக்கும் பாவாடைகளும் மேல் சட்டைகளும் அணிந்து கருப்பு லேஸ் நெட்டுடன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு முன்னே ஓடுகின்றனர்.
இவளுக்கு அப்பன் கையைப் பிடித்துக் கொண்டு அடிமேலடி வைக்க வேண்டியிருக்கிறது. பீற்றரோ, சார்லசோ அப்பனை அணுகி இவ்வாறு உதவமாட்டார்கள். அவர்கள் வீட்டு நிழலில் சோறுண்ணும் நேரங்களிலும் உறங்கும் நேரங்களிலும் தான் தங்குவார்கள். மேரி... மேரி அப்பனின் பக்கமே வரமாட்டாள்.
“ஏக்கி, என்னிய கய்ய வுட்டுப்போட்டு ஓடுத? செறுக்கிமவ, அங்கிய எந்தப்பய போறான்?” என்று கடிந்து கொள்கிறார். அவள் கையை கெட்டியாகப் பற்றிக் கொள்கிறார்.
கோயிலின் முன்பக்கம் வடக்கோரமாகக் கெபியில் விளக்கு எரிகிறது. பரந்துவரும் கதிரவனொளியில் அது மகிமை இழக்கிறது. உள்ளே பூசை தொடக்கமாகி விட்டது. வருகை சங்கீதம் ஒலிக்கிறது.
இருதயராஜின் உள்ளமெல்லாம் பாவன ரசம் போல அந்த ஒலி பாய்கிறது.
அவருக்குச் சங்கீதம் இசைக்கத் தெரியாது. ஆனால் அதில் முழுகிக் கரைந்து விடுவார்.
உயர்ந்த பீடத்தில், மாதா முடியில் கிரீடத்துடனும் கையில் தெய்வக் குழந்தையுடனும் காட்சி தருகிறாள். ரோசாப் பூக்கள் மலர்ந்தாற் போன்ற வதனங்களுடன் தெய்வக் குழந்தை. நீலக் கடலிலிருந்து ராஜாளிச் சங்கத்தில் உயர்ந்து நிற்கும் பீடம். இரு பெரிய மீன்கள் வளைந்து கவிந்து சுரூபத்தை அணி செய்கின்றன; மேலே விசிறி வடிவங்கள் போன்று ஆணி முத்தைத் தாங்கும் சிப்பிகள். பின்னணியின் அழகிய இவ் வண்ணக் கோலங்களில் மின் விளக்குகள் ஒளிருகின்றன.
இவ்வாறு பின்னணியை வண்ணந்தீட்டிச் சிறப்பு செய்து சில ஆண்டுகள் ஆகின்றன.
புருஸ் மிக்கேல் பயல்... இந்தக் கரை தான் பயலுக்கு. இப்போது நாகர்கோயிலில் ஸ்டுடியோ வைத்திருக்கிறானாம். அவன் தான் இந்த வண்ண ஓவியங்களைத் தீட்டுபவன்; சுரூபத்தை, அழகுறச் செய்பவனும் அவன் தான். கோயிலில் நவநாளுக்கு முன்பாகச் சுரூபத்தைத் தேங்காய்ப்பாலினால் அபிடேகஞ் செய்து, துடைப்பார்கள். அந்த அபிடேகப்பாலை அருந்தி, பயல் இந்தத் தெய்வப் பணியைச் செய்வான். முடியு மட்டும் கோயிலிலேயே கிடப்பான்.
ஆயிரமாயிரம் சங்கங்கள் குவிந்து ஒரே ஒரு ராஜாளிச் சங்கை ஏந்தியிருக்குமாம். அற்புதமாம் மரியன்னை, அவ்வாறு ராஜாளிச் சங்கம் போல் தெய்வப் பாலகனை ஏந்தி நிற்கிறாள். அவருக்கு உடல் சிலிர்க்கிறது.
பலிபீடத்தில், கறுப்பு அங்கி தரித்த பங்குக்குரு கைகளை ஆட்டி வித்தாரமாக, நாகரிகமான மொழியில் பேசுகிறார். அந்த மொழியின் ஒலி மட்டுமே அவர் செவிகளில் விழுகிறது. சொற்களின் உட்பொருள் புறப்பொருள் ஏதும் அவருக்குத் தேவையில்லை.
முன் வரிசையில் சட்டையும் கோட்டுமாக மேட்டுத் தெருக்காரரெல்லாம் நிற்கின்றனர்... ஆர்கன் மேடையில் வாத்தியம் வாசிக்கிறவன் மோசே... தபாலாபீசுக்காரரின் தம்பி... வாத்தியார் தானியேல் பக்கம் பூஷணம் நாடாரா? அவன் பெண்சாதியா அது, அங்கே புட்டாத் தலைப்பு முக்காடு போட்டுக் கொண்டு வருகிறாள்? அடேயப்பா! எத்தனை பவுன் தங்கம் போட்டிருக்கிறாள்! என்ன தடி! திருச்செந்தூர் தேர் போலல்லவோ அசைந்து வந்தாள்?... கத்தரினாளுக்கும் முதலில் இரண்டு வரிச் சங்கிலி இருந்தது. கையில் ஒரு பவுன் பட்டை வளையலும், கம்மலும் கூட இருந்தன. அதையெல்லாம் வாங்கி விற்றுச் சொந்த மரம் வாங்கினான். அதைக் கொண்டு அவளைத் தங்கத்தாலேயே ஜோடித்து விடுவதாகச் சொன்னான். ஆனால் அவனுடைய கடல் பயணத்தின் கால கட்டங்களில் எத்தனை முட்டல்கள், மோதல்கள்! மரம் முறிந்து பாரில் பட்டு அவன் உயிர் தப்பியதே பெரிதாகப் போயிற்று ஒரு முறை. வலைக்கு வாங்கிய வட்டக்கடன் தீரவேயில்லை. எளிதாகக் ‘கூப்பனி’ கிடைக்கவில்லை. கையில் இரண்டு ரூபாய் கிடைத்தாலும் குடிக்க வேண்டும். பத்து ரூபாய் கிடைத்தாலும் கடனடைக்கத் தோதில்லை... பிறகு கூலிமடிதான்...
சபைச் செபம் முடிந்து வாசகங்களெல்லாம் சொல்லியாயிற்று போலும்?
அல்லேலூயா சங்கீதம் பாடுகின்றனர்.
இஸ்பிரிசாந்துவை வாழ்த்தும் அவ்வொலி அவனுள் கடல் அலைகளின் நீர்முத்துக்களைச் சிதறினாற் போன்று சிலிர்ப்பை உண்டாக்குகின்றன.
மாதாவே! இனியும் அவன் எந்நாள் அந்தக் கடலின் மீது பூமரத்தில் ஏறி உந்திச் செல்லப் போகிறான்?
உயர்ந்தும், தாழ்ந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும்... நெஞ்சம் உயருகிறது; தாழ்கிறது.
பிரசங்கம்...
இந்தச் சாமிக்கு, முன்பிருந்த சாமி போல் கணீர்க் குரலில்லை. ஆனாலும் தெளிவாகப் பேசுகிறார். முந்தைய சாமியை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. இப்படிச் சில பேர் தான் குருப்பட்டத்துப் பதவிக்கே இழுக்காக நடக்கின்றனர். ஆனாலும் பால்சாமி போல் யாரேனும் சாமி இருப்பார்களா? எல்லாருஞ்சாமி, அவருஞ்சாமி என்று சொல்லிவிட ஏலுமா?
ஒவ்வொரு குடிசைக்கும் வந்து ஜபம் சொல்லுவார். போதனை சொல்லுவார், “ஏன் நீங்க குடிக்கிறீங்க? அது கெடுதல். கையில் இருக்கும் காசை எல்லாம் குடிச்சிட்டு நீங்க தானே கஷ்டப்படுறீங்க” என்பார். “ஏம்புள்ள, புருசன்கிட்ட பிரியமா இருக்க வேண்டாமா? கடல்லேந்து வாரப்ப, வெந்நீர் வச்சு உடல் குளிக்க ஊத்துறதில்ல? கருப்பட்டித் தண்ணி போட்டுக் குடுக்கறதில்லை? மச்சான் கூப்பனியத் தேடிட்டுப் போகாம பிரியமா இருக்கிறதில்ல?...” என்று பெண்களை எல்லாம் கண்டு போதனை செய்வார். குழந்தைகளைக் கூட்டி வைத்துச் சுத்தமாக இருக்கச் செய்வார். கையில் கஞ்சிக்குக் காசு இல்லாத நாட்களில், அந்தச் சாமி குடிசையில் வந்து பார்த்துவிட்டு அரிசி வாங்கக் காசு கொடுத்திருக்கிறார். அவன் குடித்துவிட்டு அவரிடம் சென்று தாறுமாறாகப் பேசியிருக்கிறான். அவர் இந்தப் பங்கைவிட்டு மாறிப் போனதும் எளியவர்களுக்கெல்லாம் யாரோ மிகவும் வேண்டியவர் அகன்று போனாற் போலிருந்தது.
மேட்டுத் தெருவில் ஒரு நாஸ்திகமான பயல் வந்து இளம்பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சங்கம் சேர்த்தான். பிச்சை முத்து மாமனின் பயல், கொலைப்பட்டுச் செத்தானே, ஆல்பர்ட், அவனும் இந்த எட்வின், எல்லாருமாக கிறிஸ்தவத்துக்கு விரோதமான கருத்துகளை, நாஸ்திகத்தைப் பேசினார்கள். இந்தப் பயல்கல் தருக்கித்திரிய, சாமியை மேற்றிராசனம் இந்தக் கரையைவிட்டு மாற்றிப் போட்டது...
நற்கருணைப் பாகத்துக்கு வந்துவிட்டார் சாமி. காணிக்கைத் தட்டு வருகிறது. தன் சட்டைப் பையிலிருந்து அவர் மிகுந்த விசுவாசத்துடன் எட்டணா நாணயம் எடுத்துப் போடுகிறார். பிறகு அவர் கிராதியின் அருகே சென்று நற்கருணை பெற்றுக் கொள்கிறார்.
“நானே பரலோகத்திலிருந்து இறங்கிய ஜீவிய அப்பம்... இந்த அப்பத்தில் யாதொருவன் புசிப்பானேயாகில் என்றென்றைக்கும் பிழைப்பான்...”
இந்த வாசகங்கள் அப்போது அவருள்ளத்தில் மின்னுகின்றன; செவிகளில் கேட்கின்றன.
முழந்தாளிலிருந்து எழுந்த அவர் நிற்கிறார். வலையிற்பட்ட மீன்கள் ஒழுகித் தப்பிவிட்டாற் போன்ற உணர்வு கவ்வுகிறது. மாதாவே! கடல்மேல் செல்லும் பிள்ளைகள்... சூசைராஜ், அகுஸ்தின்... மரியான்... அவனும் கூட, கருணை பெறாமலே கோயிலை விட்டுச் செல்கின்றனர்.
அவர்களுக்கு தேவ குமாரனின் திருச்சரீர ஆசீர் வேண்டாமா? அவர் திகைத்து நிற்கையில், சாமி அறிக்கை வாசிப்பது கேட்கிறது.
“நீங்கள் பலர் கோயில் நெறிப்புக் கொடுக்கக் கூடாதென்று சர்ச்சுக்குத் துரோகம் நினைப்பதாகத் தெரிகிறது. வலைகள் முன்னேற்றம் கண்டு தொழிலில் மேன்மை கண்டும் கோயில் வரி ஒன்றுக்கு நாலாகக் குறைந்து விடப் பலர் ஒளிக்கிறார்கள். துவிக் குத்தகை நிறுத்த வேண்டும் என்று சில அவிசுவாசிகள் துரோக எண்ணம் கொண்டிருக்கின்றனர். இது நீடித்தால் மேலே அபராதம் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். ஆகவே இது எச்சரிக்கையாக இருக்கட்டும்.”
இருதயம் விழிகள் நிலைக்கப் பீடத்தை பார்க்கிறார்.
பெஞ்ஜமின் வீட்டுக்கும் சந்தியாகு வீட்டுக்கும் இடையில் உள்ள மணல் வெளியில்தான் பரவர்கள் கூடியிருக்கின்றனர். கடற்கரையில் மீன் வந்து விழுகையில் சேரும் கூட்டத்தைப் போன்றுதான் பலசந்திக் கூப்பாடுகளாய் இரைச்சல்கள், கடலின் இரைச்சலை அமுக்கிக் கொண்டு கேட்கின்றன. சந்தியாகு பாய்க்குப் புளியங்கொட்டைத் தூர் காய்ச்சி முக்கி வைத்துவிட்டு வருகிறான். சிலுவைப்பிச்சை மணலில் குந்தி இருந்து புகையிலை போடுகிறான். பிச்சைமுத்துப்பாட்டாவும் கையில் சுருட்டுடன் நடந்து வந்து அங்கே குந்துகிறார். எட்வின் அப்போதே குடித்திருக்கிறான். “சவோதார சவோதரிகளே... சத்தம் போடாதீர்கள்...” என்று கத்துகிறான். சிலுவை மொடுதவம், பூபாலராயன், அந்தோணிராஜ், குருஸ் எல்லோரும் ஏற்கெனவே வந்து நின்று கொண்டும் இருந்து கொண்டும் மனம் போனபடி பேசிக் கொண்டிருக்கின்றனர். பெஞ்ஜமின் வீட்டு வாயிலில் ஊர்ப் பெண்டுகள் பலரும் வந்திருக்கின்றனர்.
“குடிமவன வுட்டுத் தம்புரெடுக்கச் சொல்றமிண்ணா ஒண்ணில்லாம கூட்டம் போட்டா யாருக்கிலே தெரியும்?” என்று மொடுதவம் கத்துகிறான்.
“குடிமெவ எப்படிவே வருவா? கோயிலை மீறிக் கூட்டம் போடுவீரு, தெறிப்பு நிப்பாட்டணுமிண்ணு நினைச்சாலே அவராதமிண்ணு சாமி அறிக்கை வாசிக்கல பூசையில?” என்று செபமாலையான் கேட்கிறான்.
“போடட்டுமே? அவுராதம் நாம ஏன் கெட்டணும்? சவோதர சவோதரிகளே, நாம ஒண்ணிச்சி இருக்கணும். அப்பம் இந்தச் சாமி சாயம் வெளுத்துப் போவும்?” என்று எட்வின் முழங்குகிறான்.
“யார்லே அவெ? திருடிட்டு ஜெயில்ல இருந்த தெண்டிப் பய, நாக்கு அழுவும்லே, சாமியப்பத்திப் பேசாதே!”
“அதும் இதும் சொல்லிப் படை பொராதீங்க! இப்பம் நாம ஒரு முக்கியமான விசயம் பேசக் கூடியிருக்கிறம். இது கோயிலை மதிக்காமயோ, துரோகம் செய்வதாகவோ விசுவாசமில்லாததாகவோ பேசல. நம்ம தொழில், நம்ம வாழ்வு... அதைப் பாதிக்கும் ஒரு விஷயம் பேசுதோம்...” பெஞ்ஜமின் சமாதானமாகப் பேச முற்படுகிறான்.
மொடுதவம் இடையில் எழுந்து சீறுகிறான். “கோயில் தெறிப்புக் குடுக்காண்டாமிண்ணு பேசுதீம்... அது மாதாவுக்குத் துரோவமில்லியா? ஆழிப்பார் வாரயில மாதா பேரைச் சொல்லிப் பிச்சை கேக்காம, உன்னக்க மயிரையா சொல்லுவே?”
“அதுக்கும் இவெ ஒண்ரக்கண்ணனும் அவெனும் இவெனும் நம்ம பாட்டக் கொள்ளயடிக்கிறதுக்கும் எம்மாட்டுத் தொந்தம்வே? கிறிஸ்தவம் மாதாண்ணும் யேசுவேண்ணும் சொல்லுதோம். இந்துண்ணா முருவாண்ணுவா? அதுக்காவ, துவி, கோயிலுக்குச் சொந்தமிண்ணு சொல்றது நாயமா? ஆத்தாகிட்டக் குடிச்ச பால முதக்கொண்டு ஆராளிக்கடல்ல கக்கிப் பாடுபட்டுக் கொண்டார மீனை இவனுவளுக்குக் கொளுக்கக் குடுக்கணமின்னா நாயமில்லியா...”
பிச்சைமுத்துப்பாட்டா, இவர் மூன்று தலைமுறையைக் கண்ட கிழவர். இரண்டு பெண்சாதி கட்டியவர். மூத்தவளின் மகன் நிறையப் படித்துத் தேவ அழைப்பு வந்து குருப்பட்டம் பெற்று, எங்கோ இமாலயப் பக்கம் தொண்டாற்றப் போய்விட்டான். இன்னொரு பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதல் மணம்புரிந்து கொண்டு பம்பாய்க்குப் போய்விட்டான். மகளைக் கன்யாகுமரியில் கட்டிக் கொடுத்திருந்தார். அவளுக்கு நான்கு குழந்தைகள். புருஷன் மீன் தரகன்தான். அவனும் இறந்து போனான். அவனுடைய பெரிய மகன் படித்து சென்னையில் வேலை செய்கிறான். அங்கே குடும்பம் போய்விட்டது. இளைய தாரத்துக்கு இரண்டு மகளும் ஒரு மகனும். மகன்தான் பட்டப்பகலில் பால்வடிய வெட்டப் பெற்ற இளமரமாகக் கொலையுண்டான். ஒரு மகள் மீன் வியாபாரம் செய்ய வந்த கொச்சிக்காரன் சாயபுவுடன் ஓடிப் போனாள். இன்னொருத்தியின் புருசனும் படித்தவன். தூத்துக்குடி துறைமுகத்தில் எழுத்து வேலை செய்கிறான். அவளுக்கு இந்தக் கடற்கரையில் இப்போது அப்பன் அம்மையிடம் வரவே பிடிக்கவில்லை. அப்பன் மீன் ஏலம் போடப் போவதும், முச்சந்தியில் மீன் கண்டத்தை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதும், நாகரிகமில்லாமல் அம்மையும் அவனும் சண்டையிட்டுக் கொள்வதும் அவளைக் கட்டிய மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. எனவே அனுப்புவதில்லை. கிழவருக்கு மகன் மகள் என்ற பாசங்களெல்லாம் வெறும் வேஷங்களென்றும், கடற்கரை ஒன்றுதான் நிலையானதென்றும் ஊறிப் போனவர். இவர் இரண்டிலொன்று என்று இவர்கள் பக்கம் சாய்ந்திருக்கிறார்.
“என்னம்புவே நாயம் கண்டீரு? உனக்கும் எனக்கும் முன்ன முப்பாட்டங் காலத்தில் வச்ச வளம நெறி இது. இப்ப நாயமில்லியா? பதிதக் களுதங்களா, நண்ணி வேணாம்? கோயில் தெறிப்புக் குடுக்கலேண்ணா, குருத்துரோவம், தெய்வத் துரோவம்?” என்று மொடுதவம் கோயில் சார்பில் உறுதியாகக் கூறுகிறான்.
மரியான் ஓரமாக நின்று காதைக் குடைந்து கொண்டிருக்கிறான். குறுகுறூவென்று காதில் நீர் புகுந்து கொண்டாற் போன்று ஓர் உணர்வு. பிச்சைமுத்துப்பாட்டா சளைக்கவில்லை.
“பாட்டான் முற்பாட்டங் காலத்தைப் பத்திப் பேசுதிங்க. என்னலே தெரியும் ஒனக்கு? அவங்கல்லாம் இம்மாட்டு ஆயிரம் ரெண்டாயிரம் போட்டு வலை பிரைஞ்சாங்களா? தட்டு மடி, குதலி மடி, ஏழு ரூபாக்கும், எட்டு ரூபாக்கும் நூல்கயிறும் கொச்சக்கயிறும் போட்டுப் பிரஞ்சாங்க. உளுவைத் துவியானாலும் எந்த மயிரானாலும் ஆறு காசுக்கு மேல கெடயாது. இப்பம் மீனுக்குமேல துவிவெல போவுது...”
“முன்ன ஐநூறு அல்ல ஆயிரம், மரம் வலை எல்லாம். இப்ப பத்தாயிரம் முதல் வச்சாத்தான் மரமும் ஒரு செட் வலையும் சொந்தமா வச்சித் தொழில் செய்யலாம். இதுக்கே மாசம் இருநூறு ரூபாகூட நம்மால சம்பாதிக்க முடியாம அல்லாடுறோம். ஆனா, ஒரு வியாபாரி, மீன் ஏலம் எடுத்துத் தொழில் செய்யும் வியாபாரி, லட்சத்துக்கு பணம் புரட்டிச் செய்யிறான். ஆயிர ஆயிரமா லாபம் அடிக்யான். அவன் கெட்டுவது கோயில் வரிண்ணு வருசத்துக்கு ஆறுரூவாத்தான். இத்த நினைச்சிப்பாருங்க...” என்று பெஞ்ஜமின் அறிவுறுத்துகிறான்.
“என்னியடா நெனச்சிப் பாக்குறது? களுதப்பய மவனெ? நீ திங்கிற சோறு, உப்பு, மாதா கொடுக்கிறது? மாதா கருணயில்லேண்ணா, எத்தினி தபா வல போட்டாலும் ஒரு மயிரும் வுழுகாது” என்று மொடுதவம் கத்துகிறான்.
“அப்படியே, இருக்கட்டும் வச்சுக்குவம். அப்ப கோயில்காரங்க, சாதாரண மனிசங்களான நமக்கும் நாயம் பாக்கணும், துரோகமா நினைக்கக் கூடாது. யேசுநாதர் கஷ்டப்படும் மனுசங்கிட்ட இரக்கப்படணுமிண்ணுதாஞ் சொல்லியிருக்கிறாரே ஒழிய, புள்ளகுட்டி தவதண்ணிக்கில்லாம பாடு விழாம இருக்கையிலே, நாம கையில காசில்லாம இருக்கையிலே நெஞ்சில ஈரமில்லாம கோயிலுக்கும் கட்டணுமிண்டு சொல்லியிருக்கல. மாசத்தில நான் பத்து ஸ்றாபுடிக்கேன். நூறுரூவா கெடக்கக் கூடிய துவி கோயிலுக்கு அப்படியே போயிடுது. யோசனை செஞ்சி பாருங்க, ஆத்திரப்படாம, நெதானமா. இன்னிக்கு ஆவுரேஜ் தொழிலாளிங்க கடல் தொழில் செய்யிறவங்க கடன்காரனாத்தான் இருக்யான். வலைக்குச் சேதம் வந்தா, ஒரு நா மீன் பாடு இல்லேண்ணா, இவனுக்கு வட்டிக் கடன்தான் வாங்க வேணும், கடனுக்கு வட்டி கெட்டியே சீரழியுறான். பொஞ்சாதிமேல குந்துமணி தங்கமில்லாம வித்துப் போடறான். பொறவு. பொம்பிளப் பிள்ளையிருந்தா கெட்டிச் சிக்குடுக்க வழியில்லாம முழியக்யான். துவி, நமக்கு நாயமாச் சேரவேண்டிய சொத்து. வியாபாரி கொடுக்கிற வரிபோல நாமும் கொடுப்போம். ஆனா அதுக்குமேல் எல்லாமும் கொடுப்பது சரியாண்ணு கேட்டுக்குங்க...”
காலம் காலமாக, பங்குக்குரு, கோயில் என்று அசைக்க இயலாததொரு நெறியாக ஊறியிருக்கும் அரணை, மதிப்பை இவன் உண்மையான அடிநிலைகளில் இருந்து அவை எழவில்லை என்று அறிவுறுத்தி அசைத்துப் பார்க்கிறான்.
“சர்ச்சை எதித்துப் பேசுதே, திமிர்புடிச்ச பய? அந்தக் கடல் நாச்சி இந்தக் குலத்தையே அழிக்கணுமிண்ணு நினைச்சா அழிச்சிடுவாலேய்! முன்ன, எங்க பாட்டன் காலத்தில நுப்பத்தஞ்சு மரக்கானைத் திரும்பி உயிரோடு கரைக்கு வராம செஞ்சிட்டா. முப்பத்தஞ்சு பொம்பிளைங்க தாலி கயட்டினாளுவ. பின்ன அந்தக் கரையே வேணாமிண்ணு இந்தக் கரைக்கு வந்தாளுவ. அவளுவ சந்ததி தா இந்தக் கன்னியாபுரக் கடக்கரையில. இதாம் சரித்திரம்...!” என்று செபமாலையான் சரித்திரம் கூறுகிறார்.
“மாமா, சரித்திரம் பாத்திட்டிருந்தா தரித்திரம் தொலஞ்சிருமா?” என்று எட்வின் கேட்கிறான்.
“இவனுவ நெசமாவே யேசுநாதரைச் சிநேகிக்கிறவனுகளாயிருந்தா, நம்மையும் சிநேகிக்கணும். அவுராதம் போடுவமிண்டு பயங்காட்ட மாட்டானுவ! இவுனுவ கொள்ளக் கூட்டமில்ல...” என்ற பொன் மொழிகளைப் பின்னும் உதிர்க்கிறான்.
“லே, என்னியலே நாஸ்திகம் பேசுதே? நாக்கழுவிப் போயிரும்லே! ஊரில, கடக்கரயில கோயிலை எதிர்த்து இல்லாத நாயம் கொண்டுவரானுவ, நாய்க்கிப் பொறந்த பயலுவ...”
“ஒண்ரக்கண்ணன்பய வந்திருக்கான். இங்கிய வேணுண்டு தூண்டிவிட வந்திருக்யான்...” என்று அகுஸ்தின் ஓரமாக நிற்பவனைக் காட்டிப் பிச்சைமுத்துப்பாட்டாவிடம் கூறுகிறான்.
“எந்த மயிரான் வந்தா என்ன, பன்னாடைப் பயலுவ!” பாட்டா மணலில் காறி உமிழ்ந்துவிட்டுச் சுருட்டை வாயில் வைத்துக் கொள்கிறார்.
நீடிக்கவிட்டால் இந்தப் பேச்சுக்கள் கொலையில்கூடக் கொண்டு விட்டுவிடும். நசரேன் தம்பி ஜான் அப்போது அங்கே வருகிறான். அவன் தங்கச்சி லீஸி ஏற்கெனவே மணலில் பாட்டவினருகில் நின்று வேடிக்கை பார்க்கிறது. எட்ட மணலில் விளையாடிய குழந்தைகளும் கூட இங்கே சத்தம் கேட்டு வந்து நிற்கின்றனர்.
“ஜான்...? அண்ணெ வார இல்ல?...”
“அண்ணெ ஊருக்குப் போயிருக்யா... ஆத்தாளும் போயிருக்கா, தெறிப்பு நிப்பாட்டியாச்சா மச்சா?”
“அம்மாண்டி லேசாயிருமா? இது என்னப்பு வெட்டுப் பழி குத்துப்பழில கொண்டிட்டுவுடுமோ, ஏறூமாறுண்ணு சத்தம் போடுதா, மொடுதவமும் செபமாலை மாமனும்! ஆனா, இத்தவுடமாட்டோம்...”
பெஞ்ஜமின் ஆங்காங்கு எழும் முணமுணப்புகளைப் பொருட்டாக்கவில்லை.
“இப்ப கிறிஸ்தவம் எம்மாட்டோ சொல்லுது. அடுத்தவன் கஷ்டப்பட பார்க்கக் கூடாதுண்ணிருக்கு. கள்ளுக்குடிக் காண்டாமிண்ணு சொல்லுது. உம்பொஞ்சாதிய விட்டு வேறு ஒரு பொண்ணைப் பாக்காதேண்ணுது. இங்கே இருக்கிறவங்க எல்லாமே அப்படிப் பாத்தா கிறித்தவத்தில் விதிக்கப்பட்ட நாயத்தை எல்லாம் மீறுறவங்கதா. குடிச்சு வயிறு புண்ணானாலும், கடல் மேல போகலேண்ணாலும் அது இல்லாம இருக்க ஏலாது, ரொம்பப்பேருக்கு... பின்ன... இது, நம்ம கோரிக்கை நாயமான ஒண்ணு. நம்ம குடும்பங்களை நல்லபடி முன்னுக்குக் கொண்டுவர, நாம பாடுபட்டுக் கொண்டுவரும் மீன்பாட்டின் உரிமையக் கேக்குறம்... எல்லாருக்கும் உள்ள வரி வாங்கிக்கட்டும்; திருவிழா அது இதுகண்ணு கொடை குடுக்க மாட்டோமிண்ணும் சொல்லல. துவிதெறிப்பை நிப்பாட்டணும். நாம ஒத்துக்கப்படாது...”
இவன் பேச்சு, அலுத்துச் சோர்ந்த இளம் உள்ளங்களுக்குச் சாரமூட்டுவது போலிருக்கிறது. ஆனால் முதியவர்களில் பிச்சை முத்துப்பாட்டாவைத் தவிர யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
“நீங்க தீருமானம் பண்ணிப் போட்டா, சாமிகிட்ட யாபாரி துவியை எடுக்க விடலேன்னு சொல்லமாட்டானா? அப்பம் சாமி அவராதம் போட்டா எப்பிடிக் கெட்ட?”
“சாமியே வேணாமிண்ணு சொல்ல முடியுமா?”
“ஞானஸ்நானம் வேண்டாமா? கல்யாணம் கெட்டிவய்க்க ஆருவருவா? மைய வாடியில* எடம் கிடைக்குமா? சாமியாரு சாவுமுண்ண ஆத்துமம் நெல்லபடியாப் போவ அவஸ்தப்பூச# வருவாரா? மையமாகிப் போன பொறவு. சபம் சொல்லி மந்திரிச்சி குடிமவெ தோண்டிவச்ச குழியிலே இறக்கினதும் மொத மண்ணைப்போட அவுரு வருவாரா?” கூட்டத்தில் ஜபமாலையான் இவ்வாறு அடுக்குகையில் கொல்லென்றூ அமைதி படிந்து, கடலின் அரவம் மட்டுமே கேட்கிறது. சிறிது நேரம் யாரும் பேசவில்லை.
* மையவாடி - இடுகாடு # அவஸ்தை பூசல் - பிராயச்சித்தம்
பிச்சைமுத்துப்பாட்டா, சுருட்டைக் கையில் வைத்துக் கொண்டு மணலில் காறி உமிழ்கிறார்.
“அதுவுந்தாம் பார்ப்பமே? கலகம் வந்தாத்தான் நாயம் பொறக்கும். எதுமே கலங்கித்தான் தெளியும். இப்பம் கோயில் குத்தவை இருபத்தஞ்சாந்தேதி ஏலம் விடுவாங்க. நாம இதுக்கு ஒத்துக்கலே, துவித்தெறிப்புக் குடுக்க மாட்டோம். அந்தக் காலத்தில் - துவிக்கு வெலயில்ல. ஜாதித்தலவன் மாருன்னு குடுத்திட்டிருந்தாங்க வரி. பொறவு சர்ச்சுக்கு வரிண்ணாச்சி, அப்பம் கோயில் கட்டிடமொண்ணும் இப்படிக்கெல்லாமில்ல. சாமிக்கும் நாம கொடுக்க வேண்டியநிலை. இப்பம் அதெல்லாம் மாறிப்போச்சி. துவிவெல அதிகம். அதனால நாம ஒன்னிச்சி நிக்கணும். மீனை நாம ஏலம்விட்டுப் பணம் வாங்குறாப்பல துவியையும் ஏலம் விடுவோம். ஆனபடியால், இருவத்தஞ்சாந் தேதி கோயில் குத்தவைன்னு ஏலம்வுடுறத நாம நிப்பாட்டணும். ஒத்துக்கக் கூடாது. அஞ்சுமீன் தெறிப்பும் இல்ல...”
“செரி... செரி...” சந்தியாகு கை தூக்குகிறான். தொடர்ந்து பத்துப் பதினைந்து ஜோடிகள்... எல்லாமே உயருகின்றன.
எட்வின் கூட்டத்தை நன்றாக முடிக்க முன்வருகிறான்.
“இப்பம் எல்லாரும் ‘வாழ்க’ சொல்லிடுங்க. பிச்சமுத்துப் பாட்டா... வாழ்க! பெஞ்சமின் அண்ணெ... வாழ்க...!”
சிறு பிள்ளைகள் கத்துகிறார்கள். மற்றவர்கள் சிரிக்கிறார்கள். ஆத்திரமாகப் பேசினாலும் நியாயம் நியாயம் என்றுதான் மொடுதவம், ஜபமாலையான் எல்லாருக்கும் உள் மனதில் உரைக்கிறது.
மரியான் பெஞ்ஜமின் பக்கம் வந்து, “மச்சான், கொன்னிட்டீரு. சூரு புடிச்சிட்டுது...” என்று உற்சாகமாகத் தோளில் கை போடுகிறான்.
“சங்கம்னு ஒரு ஒளுங்கு முறையோட, அடுத்த ஊருக்காரங்களையும் கூட்டி நடத்தணுமிண்ணு இருக்கம் மாப்ள. இன்னக்கே ஸ்கூல் கெட்டிடம் மெனக்கிதானே. கூட்டம் வச்சுக்கலாமிண்ணு கேட்டே, சாமிக்குப் பயந்திட்டு குடுக்க மாட்டேன்னிட்டாரு வாத்தியாரு. ஸ்கிரிஸ்தான்* கிட்டப் போயிக் கேட்டேன். அவுரு உள்ளியே இருந்திட்டு இல்லேண்டு சொல்லச் சொல்லிட்டாரு... எனக்கு வுடறதில்லேண்ணாச்சி.”
* ஸ்கிரிஸ்தான் - மாதாகோயில் கணக்கன்
“பலே, சவாசு. புடிச்ச காட்ல விட்டிருவம்...” என்று பிச்சை முத்துப்பாட்டா தைரியம் கூறுகிறார்.
அநேகமாகப் பொழுது தாழ்ந்து விட்ட அந்த விடுமுறை நாளில் கலைந்து சென்ற கூட்டத்தினர் அமலோற்பவத்தின் ‘தண்ணி’யை நினைத்துக் கொண்டுதான் அவரவர் வீட்டுக்கும் கிடைக்கும் இடத்துக்கும் நடந்தார்கள். மரியானுக்கு நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு சாமியார் வீடு, கோயிலின் மேலண்டைப் பக்கம் மேட்டுத் தெரு, என்று போகத் தோன்றுகிறது. நடக்கிறான்.
செபஸ்தி நாடார் கடையின் முன் ஏழெட்டுப் பேர்... வியாபாரிகள் இருக்கின்றனர். குலசைச் சாயபுவும், வட்டக்காரரும் கூடத் தெரிகின்றனர். புகை குடித்துக் கொண்டு, ஒற்றைப் பெஞ்சியில் அமர்ந்து இந்தக் கன்னிபுரம் ‘கம்மாரக்காரப்’ பயலுவளுக்கு வந்துவிட்ட துணிச்சலைப் பற்றிப் பேசுகிறார்களோ?
சாமியார் வீட்டுப்பக்கம் ஈகுஞ்சில்லை. கதவடைத்துக் கிடக்கிறது.
கோயிலில் மாலைப் பூசை நேரம். யார் யாரோ பெண்கள் முக்காடிட்டுக் கொண்டு செல்கின்றனர். இவள்கள் முக்காடிட்டுவிட்டால், துருக்கச்சிகள் போலவே இருக்கிறார்கள்...!
கிணற்றடியில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்து தன் கந்தைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறான்... கன்னி மேரி துவக்கப் பள்ளி, சிவப்புத்தபால் பெட்டியுடன் தபாலாபீசு, எல்லாம் உறங்கிக் கிடக்கின்றன. நாலைந்து வால்கள் ஒரு ஓந்தானை அடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். பெரிய வாத்தியார் வீட்டு வாயிலில் சக்கிரிக் கிழவன் விறகு வெட்டுகிறான். இவனுக்கு ‘மெனக்கி’ இல்லையாக இருக்கும். குடிக்கக் காசு இருக்காது. மேலும் கடன் வாங்க வேலை செய்வான்.
இவர்கள் வாழ்வைப் பாதிக்கும் ஓர் ஏற்பாட்டை மீறுவதற்கான திட்டத்தை முடிவாக்கியிருக்கையில், எல்லாம் வழக்கம் போல்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
அவனுடைய கால்கள், ஏலியின் குடிசையை நாடி கடலோரத்துக்குச் செல்கின்றன.
ஐப்பசி அடை மழை கொட்டித் தீர்க்கிறது. பொழுது தெரியவில்லை. மழையானாலென்ன, பனியானாலென்ன? கடல் தொழிலாளிகளுக்கு ஏது விடுமுறை? நசரேன் தூத்துக்குடிக்குப் போனவன் அங்கேயே ஊன்றிவிட்டான். ஜானும் மரியானும் வெள்ளாப்புத் தொழிலென்று சென்றவர்கள் பொழுது சாயும் நேரமாகியும் வரவில்லை. கோயில் குத்தகை ஏலம் வழக்கம் போல் குலசைச் சாயுபுவே எடுத்தாலும், இவர்களெல்லோரும் துவி கொடுப்பதில்லை. அதை வாங்க வேறு வியாபாரி, ஒரு கொச்சிக்காரச் சாயபு வருகிறார். ஒரு மாசத்தில் துவியில் மட்டுமே நூறு ரூபாய்க்கு மேல் வந்திருக்கிறது. எனவே இரண்டாம் நம்பர் வலையை கொண்டு, ஆழ்கடல் பக்கம் பெரிய மீன் பிடிக்கவே செல்கிறார்கள்.
வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை, அப்பனுக்கு. அவருக்கு உடம்பு நன்றாகத் தேறிவிட்டாலும், முன்போல் கடலுக்குச் செல்லத் தொடங்கவில்லை. மழை விடட்டும், மழையில் நனையலாகாது என்று ஆத்தா தடுத்தாலும் கடற்கரையைப் பார்க்க ஓடிப் போகிறார்; மரம் தள்ளுகிறார்.
“எங்கேட்டி உங்கக்கப் பெயக் காணம்?...”
பிளாஸ்டிக் சீலைத் துணி ஒன்றால் கூடையையும் தலையையும் மூடிக்கொண்டு கடையிலிருந்து உள்ளே வரும் ஆத்தா சிலம்புகிறாள்.
“காச்ச வந்து ஒடம்பு இப்பம் தா, வாசியா வந்திட்டிருக்கி. கடக்கரயில என்னிய எளவிருக்கி, நனஞ்சிட்டு வந்து நம்ம உசிரை எடுப்பா...லே. பீற்றரு? போயி ஒங்கப்பயெ இழுத்திட்டு வாலேய்! பொளுது என்னியாச்சோ தெரில... மழ என்னப்பு இப்பிடிக் கொட்டுது...!”
கருவாடு காய வைக்க முடியாத காலம். விறகுச் சுள்ளி எல்லாம் நனைந்து போயிற்று. அடுப்பின் ஓரம் சாய்த்துச் சாய்த்து வைத்திருக்கிறார்கள். அடுப்பு எரிவதற்குப் பதிலாகப் புகைகிறது. முற்றத்தில் மழை நீருக்காக வைத்த சருவம், தகரம் எல்லாவற்றிலும் நீர் நிரப்பி, கண்ணாடித் திரவம் போல் வெளியே முத்துக்களைச் சிந்துகிறது.
பின்புறத்தில் மணல் மேட்டை அறுத்துக் கொண்டு நீர்ப் பெருக்கு செம்பழுப்பாகக் கடலுக்கு ஓடுகிறது. அந்த வாயிலில் நின்று அவள் கடலைப் பார்த்து மலைத்து நிற்கிறாள். அவள் மைந்தன் அந்தக் கடலில் எங்கோ போயிருக்கிறான்.
கடல் வானும் பூமியுமாக விசுவரூபம் கொண்டாற்ஓல் மழை பெய்கிறது. ஆனால், காற்றில்லை... இது வாழ வைக்கும் மழை... மழை நாளில் உலகில் பிறக்கும் ஜீவராசிகளனைத்தும் பல்கிப் பெருகுகிறது. மீன் குஞ்சியிலிருந்து, நாய்க்குட்டி வரை எல்லாமே பெருகும் காலம். ‘இப்படி ஒரு சாரல் மழைக் காலத்தில்தான் அவள் மரியாளைப் பெற்றாள்; பீற்றரைப் பெற்றாள்; மேரியும் சார்லசும் கூடக் கார்காலத்தில்தான் பிறந்தார்கள். வெளியே சாரல் விசிறியடிக்க, வயிற்றுச் சுமையும் நோவும் நொம்பரங்களும் கரைந்து உடலின் சோர்வே மகிழ்ச்சியின் ஆலவட்டங்களாகக் குளிர்விக்க, கந்தற் கருணையில் மகவை அணைந்து தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட அத்தனி உலகின் இலயத்தில் ஒன்றியிருந்த நாட்கள் நினைவில் உயிர்க்கின்றன. மரியான் கடல்மேல் போயிருக்கிறான்.
அப்போது பிளாஸ்டிக் சீலையைப் போட்டு மூடிக் கொண்டு புறக்கடைப்படியில்... ஏறி வருவது யார்? பிச்சை முத்துப்பாட்டாவின் பெண்சாதி ஸ்டெல்லா... அந்தக் காலத்தில் கரையில் இவள் ஆண்பிள்ளை மனங்களை அழியச் செய்யும் அழகியென்று பேர் பெற்றவள்...
“வாரும் மயினி... என்னப்பு இந்த மழயில நனஞ்சிற்று வாரீம்?...”
“உன்னியத்தான் அவுசரமா முடுக்கிட்டுப் போவ வந்தம். புள்ள குறுக்க வுழுந்தாப்பல இருக்கு. நாசுவத்தி தலமேல கைய வச்சிட்டா வலியே இல்ல. நிண்ணி போச்சி. நீ, வா இப்பம்... ஒனக்குத்தா நல்ல கை. அந்தப் புள்ளக்கி ரெண்டு முக்கு முக்கக் கூட வலுவில்ல...”
“ஆருக்கு?...”
“ஆரு எதுண்டெல்லாம் கேக்கால்தே கதரினா, ஆணானாலும் பொண்ணானாலும் யாரானாலும் ஒரு பொண்ணாப் புறந்தவ வவுத்திலே முட்டி மோதி சதையக்கிழிச்சி நெத்தம் வழிய நொம்பரப்படுத்திட்டுத்தான் வெளியே வருதா, அம்புட்டுப் பேருக்கும் இதான் கேக்காம வா...”
ஆத்தா அவளை உற்றுப் பார்க்கிறாள். இன்னும் இவள் அழகுதான். இவளுடன் தொடுப்பு வைத்துக் கொண்ட பலரில் நசரேனின் அப்பனும் உண்டு. புருஷனும் பெண்சாதியும் கரையே நாறுமளவுக்குச் சொற்களால் ஏசிக்கொண்டு சண்டை போடுவார்கள். இவள் பெற்ற பெண்ணையே மருமகன் அனுப்புவதில்லை...
“என்னம்ப்பு வாரியா, இல்லியா?...”
“யாருண்டு சொல்லாம புதுருப் போட்டா எப்பிடி? நானென்ன மருத்துவச்சியா? புள்ள குறுக்கில வுழுந்திச்சிண்ணா கூடங்கொளம் ஆசுபத்திரிக்கு ஆளனுப்பி டாக்கிட்டரைக் கூட்டியாரச் சொல்லும்...!”
ஆத்தாளுக்கு ஊகம் அதிகம்; நொடிக்கிறாள்.
“அப்ப நீ வார இல்லீயாக்கும்!”
“அட அந்தோணியாரே! நா அப்படியா சொன்னே! யாருண்டு வெவரம் கேக்கேன்...”
“வெவரம் எதுக்கு? ஒரு பொண்ணு, ஒன்னயும் என்னயும் எல்லாரையும் போல நொம்பரப்படுதா, நீ வந்து எதுண்ணாலும் சேஞ்சி புள்ளவேறு தாய்வேறுண்டு ஆவுமாண்ணு பாரு. பொறவு மாதாவிட்ட வழி...”
முன் வாயிற்படியில் சார்லசுக்கு செயமணி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான். சாரல் தாழ்வரையெல்லாம் நனைத்து, மண் தரையை ஊறச் செய்திருக்கிறது.
சுருக்குப்பையை அவிழ்த்துப் புகையிலைக்காம்பைத் தறித்து வாயில் அடக்கிக் கொள்கிறாள். பிறகு பிளாஸ்டிக் சீலைத் துணியை வாயில் கீற்றிலிருந்து எடுத்து உதறிப் போட்டுக் கொள்கிறாள்.
“ஏக்கி மேரி, நானிதா வாரம். அப்பெ வந்ததும் சோறு வையி...” என்று கூறிவிட்டுப் புறக்கடை வழியாகவே இறங்கிப் போகிறாள். மேரி குசினியிலிருந்து வருமுன் அவர்கள் படியிறங்கி விட்டனர்.
“யாரு வந்தது செயா?...”
“ஸ்டெல்லாமாமி. ஆருக்கோ புள்ளவலி வந்திருக்யாம்...”
“இவெதா இந்தக்கரயில நாசுவத்தி?...” என்று மேரி முணமுணத்துக் கொண்டு நடுவீட்டு ஈரத்தைத் துடைக்கிறாள். மழை சற்றே நின்றிருக்கிறது.
அப்பனை அழைக்கப்போன பீற்றர், கரைக்கு நேராகத் தரகர் வேலாயுத நாடாரின் கீற்றுக் கொட்டகையில்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
பிளாஸ்டிக் சீலையால் மூடிக்கொண்டும், தாழங்குடை சீலைக்குடைகள் பிடித்துக் கொண்டும் வியாபாரிகள் நிற்கின்றனர்.
சைக்கிளின் பின் மூங்கிற் பெட்டியில் ஒரு கூடை ‘களர்’ மீனை அமுக்கி அமுக்கி வைத்து அழுத்திக் கும்பாரமாக்கி, மெழுகு சீலையால் மூடிக்கட்டுகிறான் ஒரு சம்பை. மணலின் ஏற்றத்தில் பீற்றர் அவனுக்குச் சைக்கிளைத் தள்ளி விடுகிறான். ஒரு மரம் வந்து ஒதுங்குகிறது.
பெரிய கூரல்மீன்... மீனை இழுத்துக் கொண்டு வெற்றி வீரனைப் போல் வருகிறான் சந்தியாகு. இருதயம் கண்களை அகலவிரித்துக் கொண்டு பார்க்கிறார். புட்டாச் சீலை உடுத்துத் தலையோடு கால் போர்த்து வரும் மணவாட்டியைப் போல் அல்லவோ பளபளக்கிறது!
உடல் முழுதும் கண்ணாடிச் சில்லாய்ப் பளபளக்கும் அழகுசெதிலும் வாலும் அளவான அழகான மச்சம். சந்தியாகு வயிற்றைத் திருப்பி கத்தியின் நுனியால் கீறி, கைதேர்ந்த திறமையுடன் துல்லியமாக அதன் பள்ளையை எடுத்து விடுகிறான். இரத்தக்களரியாக அது கிடக்கிறது. பள்ளையைக் கடலில் நன்றாகக் கழுவிப் பையனிடம் கொடுத்து விடுகிறான். இப்போது இவர்கள் கோயில் தெறிப்பென்று கொடுப்பதில்லை.
“இருபத்தஞ்சு, நுப்பது, நுப்பத்தஞ்சு, நாப்பது...” சவரிமுத்து மூப்பன் ஏலம் கூறுகிறார்.
கடற்கரையில் தொழில் முடக்கமே கிடையாது. “இந்தப்பய ஏனின்னும் வார இல்ல?...”
“அப்பச்சி? ஆத்தா உன்னியக் கையோட கூட்டியாரச் சொல்லிச்சி!”
அவர் கடலில் ஆங்காங்கு தெரியும் பாய் மரங்களைப் பார்த்தவாறே எழுந்திருக்கிறார்.
தானும் கடலில் சென்று அலைகளின் இரைச்சலில், தாழ்ந்தும் உயர்ந்தும் போராடும் கட்டுமரத்தில் நின்று ஓடி ஒளியும் மீன்களை வாரி வரும் நாளை நினைத்தபடியே நடக்கிறார். மழை பிசுபிசுவென்று எப்போதும் திருப்தியுறாத பெண்சாதியைப் போல் பிடித்துக் கொள்கிறது. கடற்கரை மணலில், ஈரத்தில் அடிகள் பதிய நடக்கையில் ஒருவித சுகம் தோன்றுகிறது. யாருக்கோ வலையில் நச்சுப்பாம்பு விழுந்திருக்கிறது... பழுப்பு நிறமாகக் கரையில் கிடக்கிறது. நசுங்கிக்கிடக்கும் நண்டுக் கூடுகள், கடல் பாசிகள்.
பொழுது என்னவாயிருக்கும்? வயிற்றில் பசி குடைகிறது. மேரி முணமுணத்துக்கொண்டு அவருடைய ஈரம்பட்ட துணிகளை மாற்றச் சொல்கிறாள். கைலி ஒன்றைக் கொடுக்கிறாள். பிறகு உள்ளே தட்டு வைத்துச் சோறு வைக்கிறாள். ஆணம் எட்டூருக்கு மணக்கிறது. வாளை வறுத்திருக்கிறாள்.
தட்டில் சோற்றைத் தொடுமுன் அன்றன்றைய அப்பத்தைத் தருவதற்கான நன்றியைக் கூறாமல் அவர் தொடமாட்டார். உண்டதும் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகிறது. புகை குடித்துக் கொண்டிருக்கையிலேயே புலன்கள் மங்குகின்றன. நார்க்கட்டிலில் சுருண்டு முடங்குகிறார். உறக்க மயக்கத்தில் கடலில் செல்வது போல் உணர்வு.
இலுப்பா... இலுப்பா ஸ்றா... முட்டாப்பய மவெ, வலையில் பட்டுவிட்டது. தம் கட்டி இழுக்கிறார்... ஆ... தட்டுமடி...!
அதானே பார்த்தம்... இவனுவ தொழிலா செய்யிறானுவ? நிலான் கயிற்றை அது குதறிப் போடுமே? பொறவு, அது கழுத்து வாயெல்லாம் அறுத்து மீன் நெத்தம் சிந்திட்டா மீனுக்க இருசி இருக்குமா?...
“லே மக்கா! இலுப்பா, தட்டுமடில கொட்டாந்திருக்கேன். எம்மாட்டிருக்கி பாரு! மரத்துக் கொங்கயில கட்டி இளுத்தாந்தே... ஈரலைப் பினைஞ்சுவச்சுனா காச்சி நெய்மாதிரி துல்லியமா எண்ணெய்... பஷ்டாயிருக்கும்...”
“நீரு எளவு தண்ணியப் போட்டுப்பிட்டுப் பெனாத்தும்! ஒன்னக்கமவெ வேசகிட்டப் போயிச் சீரழியிறா! இந்தப் பொம்பிளங்களைக் கட்டிச்சுக் குடுக்கணும், குந்துமணி பவனில்ல...”
“நீ போடி அறுவுகெட்டவளே, அவெ ராஜாப்பய... அமலோற்பவத்தின் மவ, அந்த ரூபிக்குட்டி, எப்படீ மினு மினுக்யா! அவ அப்பெ, முன்ன, எனக்குச் சிநேகம்டீ! இப்பமும் இன்னு அந்தப் பக்கம் போனாலும் சங்கையோட வாங்கண்ணேன்னுதா அமலோப்பவம் கூப்பிடுதா. நானு முடிச்சி வச்சிட்டே. இந்தக் கரயில, இருதயம் கவுரவப்பட்டவன். பிரமாணிக்கியமா இருக்கிறவ. நினச்சிக்க. பறவாசிப்பே பர்ஸ்ட்கிளாஸ்ரி. பொறவு பர்ஸ்ட் கிளாஸ் கலியாணம். சுருபமெல்லாம் கோயில்ல சுவடிச்சு, பூவெல்லாம் வச்சி, எல்லாமணியம் அடிச்சி, பேண்ட் வாண வேடிக்கை சங்கீதமெல்லாம் வச்சி, நடபாவாடை குட சுருட்டி எல்லாமுமா பய கலியாணம்...
“அப்பச்சி கண்ண மூடிட்டே பெனாத்துது...”
“பய இன்னம் வார இல்லியா? பொளுது இருட்டிட்டு வருதே?... ஏக்கி மேரி எனக்குச் சோறொண்ணும் வாணாம் சுக்குப்பொடி நெம்பப் போட்டுக் கோபித்தண்ணி கொண்டா...”
ஆத்தாதான் நனைந்த சேலையை உதறிப்போட்டு விட்டுத் தலையைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அப்பன் கண்களை விழித்துப் பார்க்கிறார். மேரி சிம்னி விளக்கை ஏற்றிச் சுவரில் மாட்டிவிட்டுப் போகிறாள்.
“இன்னும் மரியான் வார இல்ல?...” “இல்லை” என்று செயமணி தலையாட்டுகிறாள். ஆத்தா பதிலே சொல்லவில்லை. விளக்கின் அடியில் முடியை விரித்துக் கொண்டு அமருகிறாள். “புள்ள பெற இல்லியா? ஆரு அது...?” என்று மேரி கோபித் தண்ணியை நீட்டிய வண்ணம் கேட்கிறாள்.
“ஆரு...! ஏதோ ஊர்க்களுத... காலுவந்திச்சி. இளுத்துப் போட்டுட்டு வந்தெ. அது ஆணா பொண்ணாண்டு கூடப் பாக்க இல்ல... சவம்...” அவளுக்கு வெறுப்பு குமைந்து வருகிறது.
ஆனால் அடுத்த கணமே அது ஆவியாகப் போவதுபோல் மனம் கரைகிறது. சுக்கு - மல்லி மணத்துடன் சூடான கோபி இதமாக இருக்கிறது.
இந்தக் கரையில் வாலிபம் கிளர்ந்து வர ஆணாய்ப் பிறக்கும் அத்தனை மக்களும் தங்கள் உழைப்பின் சூட்டைச் சுமையாக்கிக் கொண்டு ஒரு பெண்ணைத் தேடாமலில்லை. மனிதனாகச் செய்து கொள்ளும் கட்டுப்பாடுகள் வரம்புகளுக்கெல்லாம் அந்த வெப்பம் அடங்குவதில்லை.
நீரோட்டம் மாறி மரத்தை இழுத்தாலும், அலைகள் குப்புற மறித்தாலும், ஈடு கொடுக்கும் வலிமையுடன் ஒரு மகனை அவளுக்கு மாதா கொடையாகத் தந்திருக்கிறாள்... ஆனால், பதினெட்டுக்குள் ஒரு பெண்ணைக் கட்டி வைத்து வரம்பு முறை என்று அங்கே யாராலும் செய்து கொள்ள முடியாமல் எத்தனையோ தடைகள். சட்டி நிரம்பிப் பொங்கும்போது, தீ எரிந்து தளாங் திளாங்கென்று கொதிக்கையில் வெளியே பருக்கைகள் விழாமலிருக்கின்றவா? கடலின் அலைகளுக்கு ஒரு நேர் விளம்பு பிடிக்க இயலுமா? மனிதனின் இளமையின் குருதித் துடிப்புக்கும் பாடுபடும் ஆராளியில் எழும்பும் கனலுக்கும் வரம்பு பிடிக்கமுடிவதில்லை. அவளுக்குத் தெரிந்து அந்தக் கரையில் மேனிவளம் துளும்பும் இளம் பெண்கள் எவரானாலும் அஞ்சு பத்துமார் ஆழக்கடலின் கரையோரம் கலிக்கும் மீன்கள் போன்றவரே. எந்தப்போதில் எந்த இளைஞனின் உடற்சூட்டுக்கு உட்பட்டுப் போவார்கள் என்று சொல்ல இயலாது. கடற்கரையில் கடலின் உப்புநீர் படாமல் பனித்துளி புனிதம் காக்க ஏலுமோ?
தலிக்கட்டு இல்லாத மார்பிலும் பால் சுரக்கிறது. ஏலிக் குட்டி... பெற்றிருக்கிறாள். அவளுடைய பன ஓலைப்புரையில் துப்புரவான தையில் பாயில், கந்தல் கருணையில் புதிய உயிர் வந்து விழுந்ததுமே கைகளையும் கால்களையும் இழுத்து உதைத்துக் கொண்டு முதல் அழுகையினால் அந்தக் குடிலைப் பவனமாக்கியது...
ஏலியின் முகம்... அத்துணை நோவிலும் பொறுமை சுமந்த முகம், எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறது? பனிநீரில் குளித்த ரோஸாப்பூ போல...! குழந்தை ஆண் என்றாள் ஸ்டெல்லா. கருப்பு முடி நெற்றியில் கவிய, இந்த மேரிக் குட்டிக்கு அப்படித்தானிருந்தது...
சை!
ஆத்தா எழுந்து புகையிலைச் சாற்றைத் துப்புகிறாள்.
மரியான் வலைகளுடன் வருகிறான். புறக்கடையில் வலைகளைப் போட்டுவிட்டு உள்ளே வருபவன் கையில் ஒரு ‘கோமரயன்’ மீன் வைத்திருக்கிறான்.
“மக்கா...?”
அப்பன் எழுந்து உட்காருகிறார்.
“அண்ணெ, ஈரத்தை அவுத்து மாத்திட்டு வாண்ணே, நடுவூடெல்லாம் ஈரலிச்சிப் போச்சி...” என்று புருபுருத்துக் கொண்டு மேரி வருகிறாள்.
“வூட்டுக்குள்ள வாரயிலேயே ஒங்காருவாரு. ஏவே, ஒரு தும்பு கொண்டாலே, இத்தக் கெட்டி வைப்பம் வாசப்பக்கம்...”
“கோமரயனா? கெட்டிவை. மூஞ்சில முளிச்சா அதிட்டம்...”
“வெந்நி காச்சியிருக்கா? பசிக்கி...”
ஆத்தா ஒரு பேச்சும் அனக்கமும் இன்றி உட்கார்ந்திருக்கிறாள். இதற்குள் பரபரத்துக் கோபித் தண்ணீரைக் கொண்டு வருவதும், குசுனிக்கும் புறக்கடைக்கும் நடப்பதுமாகச் சலம்புவாளே?
“என்னிப்பு, ஆத்தா சொணக்கமாயிருக்கு?...”
மடிப்பெட்டியைத் திறந்து நான்கு பத்து ரூபாய் நோட்டுகளை அவள் முன் நீட்டுகிறான். அப்பனுக்குத்தான் கண்கள் அகலுகின்றனவே ஒழிய இவள் ஒரு காலைக் குத்திட்டு மடித்துக் கையில் தலையை வைத்துக் கொண்டு குந்தியிருக்கிறாள்.
பீற்றர் தும்பு தேடி வந்து கோமரயன் மீனை வாயிற்படியில் தொங்கக் கட்டுகிறான். மழை நின்று, இருளில் தெருவில் செல்பவர் நிழலுருவங்களாகத் தெரிகின்றனர்.
“என்னிய மீன்லே?”
“தள மீன் ரெண்டு, பொறவு வாளை. சீலா ரெண்டு பெரிசு. எல்லாமா நூத்துச் சில்வானம் போச்சி...”
“அஞ்சு ரூபா குடு லே. லேவியம் வாங்கித்தரமிண்ணா சக்கிரியா...”
‘குடுக்காதே, எளவு சாராயங் குடிச்சிப் பாளாப் போவாரு’ என்று ஆத்தா உடனே பாய்ந்து வரவில்லை. அவன் தனக்கு வைத்திருந்த இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை அப்பனிடம் கொடுத்துவிட்டு, நான்கு பத்து ரூபாய்களில் ஒன்றைத் தனக்கு வைத்துக் கொள்கிறான்.
“தங்காலம்* வருமுன்னம், திருக்கை வலை பிரஞ்சுக் கிடணும்... ஆத்தாக்கென்ன, ஒடம்பு சொகமில்லியா? ஏக்கி மேரி?”
(* தக்காலம் - சிறு மீன்கள் படாத மாசி, பங்குனி மாதங்கள்)
“என்னியோ ஒண்ணும் சொல்லலே. காலமே ஸ்டெல்லா மாமி வந்து யாருக்கோ புள்ள வலிண்டு கூட்டிப் போனா. விளக்கு வக்கையிலதான் வந்திச்சி. சோறு தண்ணி வாணாம். கோபித்தண்ணி போதுமிண்டு வாங்கிக் குடிச்சிச்சி...”
“ஆமா? ஒடம்பு நல்லாயில்லேண்ணா, இவ ஏம் போறா? ஊர் களுதங்களுக்கெல்லா இவ நாசுவத்தி! அந்த வேசச் சிறுக்கி ஏலிக்களுதக்கி இவ பேறு பாக்கப் போயிருக்யா? பாவத்தில ஜனிச்சது, அவெவ உத்தரிக்கிற எடத்துக்குப் போவு. இவக்கு என்ன? ஸ்டெல்லா, அவ ஒரு வேச. புருசன வச்சிட்டே ஊருப்பரவன் காசெல்லாம் தனக்குண்டு படுத்திட்டவ...”
சில விநாடிகள் மரியானுக்கு உலகத்து அசைவுகள் அனைத்தும் நின்றுவிட்டாற் போலிருக்கிறது. கடலின் அலைகளும் இரையவில்லை. அந்தத் தளைமீன்களின் சிறகுகள் போல் இரண்டு தனக்கும் முளைத்து வானில் பறந்து செல்வது போன்றதொரு கற்பனை உணர்வாக மாறுகிறது. அவன் பறந்து கொண்டிருக்கிறான்.
ஏலி... ஏலி பெற்றிருக்கிறாள். ஆத்தா மருத்துவம் பாக்கப் போனாள்! ஸ்டெல்லா மாமி, பிச்சமுத்துப் பாட்டாவின் சம்சாரம் வந்து அழைத்துப் போனாள்!
ஆத்தா... என்னக்க ஆத்தா...!
ஆத்தா தலை சீவி முடிந்து சிங்காரித்துக் கொள்ள மாட்டாள். ஸ்டெல்லா மாமியைப் போலவோ நசரேன் ஆத்தாளைப் போலவோ பாடி தெரிய பிளவுஸ் போட்டுக் கொண்டு மடிப்புக் கொசுவம் வைத்துச் சீலை உடுத்த மாட்டாள். கோயிலுக்கும் கூட நினைத்த போதுதான் போவாள். அவள் ஜபம் கூடச் சொல்ல மாட்டாள். ஆனால், என்னக்க அம்மா... எம்புட்டு அழவு நீ! கழுத்தில் கையில் ஒண்ணுமில்ல. அழுக்கான வெள்ள பிளவுஸ்... வட்டியும் இடுப்புமாக மீனெடுத்து வரும் கோலத்திலோ, கருவாட்டைச் சுமந்து நடக்கும் கோலத்திலோ, அப்பனுடன் சலம்பும் கோலத்திலோ ஆத்தா, ஆத்தாளாகவே முழுசும் இருக்கிறாள். இவளைப் போல் ஒரு ஆத்தா எங்கும் கிடையாது; யாருக்கும் கிடையாது...
“என்னியலே தெகச்சிப் போயி நிக்கே? போயிக் குளிச்சிட்டுச் சோறுண்ணுவே!” என்று முத்துதிர்த்து விட்டுத் தலைப்பை விரித்துப் படுக்கிறாள். என்ன பிள்ளை என்று கேட்கும் ஆவல் துள்ளுகிறது. குளிக்கப் போகிறான். பணத்தை செயமணி வாங்கி அவளுடைய பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கிறாள். ஏலி அவனுடைய மணவாட்டியாக வந்துவிட்டாற் போலும், அவள் இந்த நடுவீட்டில் பேறு பெற்றிருப்பதைப் போலும் நினைத்துப் பார்க்கிறான். உடல் புல்லரிக்கிறது.
அவனுக்கு அன்று சோறு இறங்கவில்லை. பக்கத்தில் முதுகை முட்டிக் கொண்டு உராய்ந்த வண்ணம் உட்காரும் நாய்க்குக் கவளம் கவளமாகப் போடுகிறான் கீழே.
“தா, போ வெளியே, குசுனிக்குள்ளாற வந்து சோறுண்ணும்போது படுக்கு...” என்று மேரி விரட்டுகிறாள்.
மரியான் சாப்பிட்டு விட்டுச் சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறான். கண்ணாடியைப் பாராமலே ஈர முடியைச் சீப்பெடுத்து வாரிக்கொண்டு வெளியே வருகிறான்.
மழை நன்றாக நின்று போயிருக்கிறது. வானில் எங்கோ ஒரு ஒற்றைத் தாரகை மினுக் மினுக்கென்று தெரிகிறது.
மழைக்கு முடங்கியிருந்த சைக்கிள் வியாபாரிகள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு செல்கின்றனர். கோயில்முன் தெரியும் குழல் விளக்கில் பூச்சிகள் பறக்கின்றன. செபஸ்தி நாடார் கடைப்பக்கம் சிறிது நேரம் பீடி குடித்துக் கொண்டு நிற்கிறான். பரபரப்பை அவனால் அடக்கிக் கொள்ள இயலவில்லை.
அவள் குடிலுக்குச் சோரனாக அவன் செல்கையில் தன்னை எவரேனும் பார்த்து விடுவார்களோ என்ற உணர்வு உறுத்தியதில்லை. ஆனால் இப்போது... அவள்... அவள் பெற்றிருக்கிறாள்.
அவளருகே அமர்ந்து நெஞ்சிலே பூவாகத் தாங்க வேண்டும் போலொரு வேட்கை. அந்தப் பூஞ்சிசு, எப்படி இருக்கும்?
இந்த வேட்கை எப்படி, அவனைப் பரபரக்க வைக்கிறதென்பதே நூதனமாக இருக்கிறது.
ஏலியின் வீட்டுக்கு முதன் முதலில் அவன் செல்லத் தொடங்கிய நாள்... சென்ற கோயில் பண்டியலுக்கு முன் ஒரு நாள்...
அவன் கூடங்குளம் சினிமாவுக்குப் போய்விட்டு, இரவு பத்துமணிக்குத் திரும்பிய பஸ் ஒன்றில் ஏறிச் சாலையில் இறங்கிய போது, அவளும் இறங்கினாள். அந்தச் சாலையிலிருந்து இரண்டு மைல் போல் அவர்கள் கடற்கரைக்கு நடக்க வேண்டும். அவள் வட்டியில் ஏதேதோ சாமான்களும், புதியதாக வாங்கியிருந்த அலுமினியம் தூக்குமாக நடந்தாள். இன்னும் இரண்டொருவரும் பஸ்ஸிலிருந்து இறங்காமலில்லை. ஆனால் கன்னிபுரம் கரைக்கு வருபவர்களாக அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ஏலியைப் பற்றி அவனுக்குத் தெரியும்.
சில ஆண்டுகளுக்கு முன் எங்கோ வடக்குக் கரையிலிருந்து இவளைக் கல்யாணம் செய்து கொண்டு புதிதாக அங்கு வந்து ஊன்றிய இன்னாசியின் மனைவி ஏலி. அவன் தாய் தகப்பனை மீறி கான்வென்டில் அநாதையாக வேலை செய்து கொண்டிருந்த இவளைத் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு இங்கே வந்தான். கூலி மடியாகத் தொழில் செய்தான். அரசியல் கூட்டங்களென்றால் பைத்தியமாகப் போவான். அவன் தொழில் செய்து குடும்பம் காப்பாற்றுவான் என்று தோன்றவில்லை. அப்போதே ஏலி கரையில் வடையோ பணியாரமோ போட்டுக் கொண்டு வந்து விற்றுக் காசாக்குவாள். சில பெண்களைப் போல் ஆணைத் தூண்டிவிடும் மேனி வளப்பம் கிடையாது. மெல்லிய கொடி போல், ஆழ்ந்த கண்களும், தேய்ந்த கன்னங்களுமாக, பற்றாக் குறையிலும் சிறுமையிலும் பதம் பெற்ற பெண்ணாகவே இருந்தாள். இன்னாசி அவளைக் கைப்பிடித்து ஓராண்டுக் காலம் முடியுமுன், உவரியூரில் சினிமா பார்க்கப் போனவனை அரசியல் கட்சிச் சண்டையில் ஏதோ ஆங்காரமாகப் பேச, நாடார்விளையில் வெட்டிப் போட்டு விட்டார்கள். ஏலிப் பெண் அந்தக் கடற்கரையோரக் குடிசையில் தன்னந்தனியே விடப்பட்டாள்.
தற்காப்புக்கு எந்த வழியுமில்லாத ஏலி கடற்கரையில் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள வழி இல்லாத பரவனுக்கெல்லாம் இரையானாள்.
ஆனால்... அவள் கடற்கரையில் மீன் வாங்க வந்தாலும் சிறு தீனி செய்து விற்க வந்தாலும் யாருடனும் எந்த உறவும் கொண்டவளென்ற பாவத்தையே காண இயலாது. கடற்கரைக்கு உள்ளம் துள்ளச் செய்யும் கோலத்தில் வந்து சிரிக்கச் சிரிக்கப் பேசும் குமரிகள் இல்லாமலில்லை. ஒருசமயம் குருசு மிக்கேல் இவள் கரையில் மீனெடுக்க வந்தபோது, அவள் வட்டியில் குத்துமீன்களை எறிந்தான். “பொளுது சாய வாரம் போ. வெல வாங்கிக்க!” என்று அடர்ந்த மீசையைப் பல்லில் கடித்துக் கொண்டு இளித்தான். அவள் மீனை அங்கேயே மணலில் தட்டிவிட்டு ஊசி பட்டாற்போன்று முகம் சுளித்துப் போனாள். அவன் அவளை அவ்வாறு கடற்கரையில் பலரறியப் பொதுமைப்படுத்தும் வகையில் பேசியதை அவள் ஏற்காமல் துவண்டு போனாள்.
“பெரீ... பத்தினி கோவிக்க...” என்று தொடங்கிக் காது கூசும் வசைகளால் தூற்றினான்.
இதெல்லாம் அப்போது அவனுக்கு நினைவு வந்தது. நல்ல இருட்டு. அந்த இருளில் அவன் ஒரு ஆண் என்று மட்டும் தெரிந்திருக்கும் அவளுக்கு. அவள் குடிலுக்கு மைய வாடியைச் சுற்றியுள்ள பனந்தோப்பைக் கடந்து செல்ல வேண்டும். காற்று கருப்பு பயங்களுண்டு. அவளாகவே அவன் காது கேட்கச் சொல்லிக் கொண்டாள்.
“பசு* ஆறு மணிக்கு வாராம, பத்து மணிக்கு வந்திச்சி... இன்னு அம்மாட்டுப் போவணும்...!”
(* பசு - பஸ்)
“எங்கிய போவணும்? தெக்குத் தெருவா...?”
“இல்லிய, அதா பாறமுக்குக்குப் பின்னக்க பிச்சிய முத்துப் பாட்டா, ஸ்டெல்லா மாமி வீடு தள்ளி... அந்தத்துல...”
அவன் புரிந்து கொண்டான். எதுவும் பேசவில்லை.
“என்னக்க பனவெடலி தாண்டிப் போயிற்றப் பயமில்ல. பொறவு வட்டக்காரர்வூட்ட வெளக்கெரியும், நீங்க... மேட்டுத் தெருவாளா?”
அவன் ஏதும் பதிலின்றி நடந்தான். மைய வாடியைச் சுற்றிக் கொண்டு பனைக்கூட்டம் கடந்து பின்னும் தொடர்ந்தான்.
“இனிம நீங்க ஒங்கக்க பாதைக்குப் போவலாம்’ என்று அவள் முணமுணத்தும் அவன் போகவில்லை. சினிமாவில் கண்ட காட்சிகள், வாலிப உள்ளங்களைக் கிளர்த்தும் காட்சிகள் அவனுள் ஒரு வெறியைக் கிளப்ப உயிர்த்தன.
அவள் பூட்டுத் திறக்க நெருப்புக்குச்சியைக் கிழித்துக் காட்டினான். கதவைத் திறந்ததும் உள்ளே போனான். அவள் கோழிமுட்டைச் சிம்ணியை ஏற்றி வைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதன் முதலில் யாருமாரும் இல்லாத வாழ்க்கையில் தன்னந்தனியாக நின்றபோது, கடலே அவளுக்குத் துணையாய் இரைந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வாள் செம்பழுப்பான மடைக்கு அப்பால் கருநீல ஆழி நீண்ட பாயல் விரித்தாற்போன்று அலைகள் நுரைக்கச் சிரிக்கும்...
முதன் முதலில் அவள் வீட்டில் நுழைந்து அவள் நிறையழித்தவன் சாமுவல். உயரமும் உறுதியுமாக ஒரு தடியன். அவளால் எதிர்ப்புக் காட்டவே இயலவில்லை. அவன் பெண்சாதி அப்போது பெற்றிருந்தாள். சாராய நெடியும் உடல் வெறியுமாக... புயலில் எழும் அலைகள் தோணியை மோதி மறிப்பது போல் அவன் அவளை வீழ்த்தினான்.
கட்டுக்காவலில்லாத வீடுகளில், அது எவ்வளவு பெரிய வீடானாலும் வேலிகள் போட்டாலும் ஆடுகள், நாய்கள் புகுந்து திண்ணையையேனும் இருப்பிடங்களாக்கிக் கொள்கின்றன; பெருச்சாளிகள் குழிபறிக்கின்றன. உடம்பு வேர்வையின் அழுக்குகளும் கவர்ச்சி நெடியையுமே இனி மணமாக்கப் போதையூட்டும் மானுடத்தின் பலவீன நெகிழ்ச்சிகளை அந்நியமாக்க இயலாத நிலைக்கு அவள் பலவந்தமாகப் பழக்கப்படுத்தப் பட்டாள். ஆனால் கருக்கலிலே அவள் குடிலுக்கு வந்தவனை அவள் வீதியிலோ, கடை வாயிலிலோ, மீன் தட்டும் நேரத்திலோ பார்த்தாலும் இனம் தெரிந்தாற் போன்று காண்பித்துக் கொள்ளமாட்டாள். மரியானின் தொடர்பு இவ்வாறுதான் தொடங்கிற்று.
கடல் தொழில் செய்து திரும்பும் ஒரு புருஷனை வீட்டில் உள்ள பரவத்தி மகிழ்ச்சியும் நிறைவும் பிரியமுமாக வரவேற்பது அரிது. ஆற்றாமையும் ஏசலும் பூசலுமாகத்தான் உரிமையைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், இவள் இவனுக்கே படைக்கப்பட்டவள் போல் நினைத்துக் கொள்கிறான். அந்த முதல் நாளில் அவளுடைய குரலைக்கூட இவன் கேட்கவில்லை. சுவரில் ஒரு பழைய காலண்டர் படம் இருந்தது. அந்தோணியார் யேசு பாலனை முகத்துக்கு நேராக ஏந்தினாற் போன்று ஒரு படம். சிம்னி விளக்கின் மங்கிய ஒளியில் அவளுடைய முகம், மங்கிய பூப்போட்ட வாயில் சேலை... கனவுக் காட்சிபோல் தான் நினைவில் நிற்கிறது. அன்று ஒரு ரூபாய்தான் அவனிடம் இருந்தது. விளக்கடியில் அந்தத் தாளை வைத்துவிட்டு வெட்கத்துடனும் நாணம் மிகுந்ததோர் புதிய அமைதியுடனும் அவன் வீடு திரும்பினான்.
இவன் ஒருவனை மட்டுமே அவள் ‘வருகிறானோ’ என்று எதிர்பார்க்கலானாள். இவனில் மட்டுமே கள்ளின் நெடியோ சாராய வெறியோ இல்லை. அவள் இவனுக்கே சொந்தமென்றான பிறகு, மற்றவருக்குக் கதவைத் திறக்காமலிருக்கத் துணிவு வந்தது. எது அருமையாகச் செய்தாலும் இவனுக்கே அதைச் செய்வதாகத் தோன்றிற்று. இவன் கதவைத் தட்டுவது இனிமையாக இருக்கும். அவளுக்கு இப்போது ஸ்டெல்லா மாமிதான் மிகுந்த நேயமுடைய துணை. புதிய மணவாட்டியைக் கேலி செய்வதுபோல் இவளைக் கிண்டு, நாணமுறச் செய்வாள். வேறு எவரேனும் அந்தப் பக்கம் குடித்துவிட்டு வந்தால், அவள் வாசலில் நின்று, நாவில் நரம்பின்றி வசைபாடுவாள்.
ஏலியா தாய்மைப் பேறு பெறப் போகிறாள் என்று தெரிந்த நாளில் அவனை எப்படி வரவேற்றாள்!...
“வாரும் மாப்ள! உன்னக்க சிங்கிறால்... சினைப்பட்டிருக்கு...” என்று பூ உதிர்த்தாள்.
உண்மையில் வலையிற்பட்டு அவன் கைக்கு வந்த சிங்கிறாலின் ஏலாமை மிகுந்த துடிப்பை அவளுடைய கண்களும் உதடுகளும் வெளியிட்டன. அவனைப் பார்த்துப் பேதையாகச் சிரித்தாள்...
‘பச்சையும் பகளமும் வச்சிழச்சாப்பல என்ன அழவு இந்தக் களுதை’ என்று சிங்கிறாலைப் பார்க்கையிலே நெஞ்சு வியக்கும். வலையில் பட்டுக் கரையில் வந்து உயிரின் கடைசித் துடிப்பு அடங்குவரை அது போராடும். நசரேன் அதன் துடிப்பைப் பார்க்கவே கண்களை விரலால் அமுக்குவான். வாலை வளைத்தடிக்கத் துடிக்கும். அவனுக்குப் பார்க்க ஏலாது.
“விடுமாப்ள! களுத எம்மாட்டுப் போராடுது!” என்பான்.
அவ்வாறு மௌனத் துடிப்பில் தவித்துக் கொண்டிருந்த ஏலிக்கு, ஆத்தா போய் பிரசவம் பார்த்திருக்கிறாள்...!
மரியானுக்கு என்ன அதிர்ஷ்டம்! கோமரையன் கிடைத்து வாயிலில் கட்டி வைத்திருக்கிறான்! நாற்பத்தைந்து ரூபாய்க்கு மீன்பாடு! தளைமீன்கள்... பெரிய நாரை அலகும் மிகப் பெரிய சிறகுகளுமாக மீன்கள்.
இருளில் அவன் அந்தக் குடிலின் கதவை மெள்ளத் தட்டுகிறான். விளக்கை எடுத்து வந்து ஸ்டெல்லா மாமி கதவைத் திறக்கிறாள். கூரை நனைந்து ஊறி இற்றுச் சொட்டுகிறது.
துணித்திரி எரியும் ஒரு சிறு கிரசின் விளக்கடியில் ஏலியாவும் குழந்தையும்... கருநீலமும் செம்மையுமாகக் கலந்த நிறம்... எவ்வளவு முடி...! அது உறங்குகிறது.
இந்த அதிசயத்தை அவன் கண்கள் பாலாய்ப் பொழியப் பார்க்கிறான். “அது ஒன்னுதுலே...!” என்று யாரோ மந்திரிக்கின்றனர் செவிகளில். அதன் அருகில் அமர்ந்து குனிந்து அந்தப் பச்சைச் சிசுவின் நெற்றியில் மிக மென்மையாக மோந்து பார்க்கிறான். தன் மடியிலிருந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அதன் கைமேல் வைக்கிறான்.
ஏலியாவின் குரல் நைந்து போயிருந்தாலும் பரவசமாக ஒலிக்கிறது.
“என்னப்பு இதெல்லாமும்?”
“இன்னிக்கு என் பங்கு அம்பதுக்கு - தளமீனும் சீலாவும் பட்டிச்சி. என்னக்க புள்ள... பையனுக்கு நொம்ப அதிர்ஷ்டமுண்டு...” அந்தப் பூங்கைகளை, கால்களை, பட்டைப் போல் தொட்டு மகிழ்ந்தான்.
“நெம்பப் பாடுபடுத்திட்டா. நாசுவத்தி தாம் பொறவு ஒங்கக்க ஆத்தாளை வாரக்காட்டச் சொன்னா. ஸ்டெல்லா மாமி போயி வாரக்காட்டி வந்தா... ஒங்கக்க ஆத்தா... கோயில்ல சுருபமாயிருக்யற மாதா எறங்கி வந்தாப்பல வந்தா...!”
கண்கள் பளபளத்துக் கண்ணீர் இறங்குகிறது.
“ஏனளுகா! நாம கெட்டிப்போம்... அளுவாத ஏலி...”
அந்தக் கண்ணீரை அவன் துணியெடுத்து ஒத்துகிறான்.
கோயிலின் முன் பூவரச மரத்தடியில் வைத்துக் கூட்டிய புது மரத்துக்கு ரொசாரியோ பூசை போட்டு அன்று நீரி இறக்கினான்.
“இருதயம் மாமோ, ஒங்கக்க ஆசீர் வேணும். மரத்தைத் தொட்டு ஜபம் சொல்லும் மாமோ!” என்றான்.
“நானின்னம் தொழிலுக்குப் போவ இல்ல. இப்பம் ஒடம்பு பெலமாத்தானிருக்யு. முதமுதல்ல ஒம்மரத்தில நான் தொழில் செய்ய வாரம். நாள அமாசி. பருவலை எடுத்திட்டு வா. வெள்ளாப்புத் தொழில்ல போவலாம்” என்றன. ரொசாரியோவிடம் ‘பீஸ்வலை’ எனப்படும் அயல் நாட்டு வலை இருக்கிறது. கண்ணிகள் ஒரேயளவாக இருக்கும். கச்சத்தீவுப் பக்கம் கடலில் யாரோ வியாபாரியிடம் வாங்கினானாம். இழுப்பதற்கு இலகுவானது; பட்ட மீன் நிச்சயமாகத் தப்ப ஏலாது.
அன்றிரவு அப்பன் நெடுநேரம் ஜபம் சொல்கிறார்.
நள்ளிரவைக் கடந்ததுமே அவருக்கு விழிப்பு வந்து விடுகிறது. சிறிது நேரம் கடல் அலைகளைச் செவியுற்றவாறே படுத்திருக்கிறார்.
திடீரென்று மனசில் ஓர் ஐயம் தட்டுகிறது. புறக்கடைக் கதவைத் திறந்து கொண்டு கீழிறங்கி வானைப் பார்க்கிறார்.
சூனியம் நிலவுவது போல் ஒரு பிரமை. ஆறாங்கோட்ட வெள்ளியில்லை... ஒரு வெள்ளி கூட வானில் தெரியவில்லை. வானம் ஸல்லென்றிருக்கிறது...
கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்து கட்டிலில் உட்காருகிறார். மடிப்பெட்டியைத் தேடி எடுத்துப் புகையிலையைச் சிறிது கிள்ளிப் போட்டுக் கொள்கிறார்.
மரியான் வழக்கம்போல் மூன்று மணி சுமாருக்கு எழுந்து விடுகிறான். ஆத்தா அடுப்பைச் சுள்ளியைப் போட்டு எரிய விடுகிறாள்.
“லே, மக்கா, இன்னிக்குக் கடலுக்குப் போகாண்டாம்!” அப்பனின் குரல்தான்.
“ஏ...?”
“ஏண்ணா... கடல்... காத்து செரியில்ல... மானம் சரியில்ல...” மரியான் வாயிலில் சென்று நின்று பார்க்கிறான்.
“பூ... இத்தெக்காட்டியும் ஒண்ணுமே தெரியாம இருந்தன்னிக்குக் கூடப் போயிட்டு வார இல்ல? முத முதல்ல, காச்சலாக் கிடந்தப்புறம் நீங்க இன்னிக்குத் தொழிலுக்குப் போகாண்டாம். அதுக்காவ என்னிய ஏம் போகண்டாமிண்டு சொல்லணும்?...”
“என்னியலே, நான் சொல்லுதே. நீ மதியாத போவே? காத்துல... ஒரு அமுக்கம் இருக்குலே...”
“ஒரு புல்லுமில்லிய. கடல் எப்பம் போலதா கூப்பிடுது...
அவர் வெளியே அவனைத் தொடர்ந்து வந்து வானில் கை உயர்த்திக் காட்டுகிறார்.
“அதப்பார். ரிஸ்க மேகம் போட்டிருக்கி...”
“என்னக்கு ஒரு மயிரும் தெரில. அமாசி... மீன்படும் நாள், போகாண்டாமிண்டு சொல்லாதீம்...”
“லே, அவசுரப்படுதே! செத்தப் பாத்திட்டுப் பொறவு போலே...”
“உக்கும். இவுரு நெட்டமா ஒண்ணு நெனச்சிட்டா அதுக்குக் குனியணும். என்னா எளவு? காத்து வழக்கம் போல அடிக்கி, கரை வழக்கம் போல இருக்கு...”
“ஆறாங்கோட்டம், குருசு ஒண்ணுமில்ய பாருலே...”
“அப்பிசி மழக்காலம்; இந்துக்க தீவாளி எறியுதாங்க. மழக் காலத்துல ஆறாங்கோட்டமும் குருசு வெள்ளியும் எங்ஙனக் காணும்? நீர் இன்னிக்குக் கடல் போகண்டாம். சும்மா பெனாத்தாதீம். கெடந்து ஒறங்கும்...”
ஆத்தா கோபித்தண்ணீர் கொண்டு வருகிறாள். கருவாடு வறுக்கச் சட்டியை அவள் போடுவதைப் பார்த்து மரியான், “சோறு ஒண்ணும் வேணாம். பொள்தோடு வந்திருவ. இவுரு வேறு கலக்கிவுடுதாரு. ஆழக்கடல் போக இல்லை...” என்று கூறுகிறான்.
பீற்றரை ஆத்தா எழுப்புகிறாள். “வே, மிதப்புக் கட்டயத் தூக்கிட்டுவா...”
மரியான் முன்னே செல்கிறான். கடற்கரையில் இன்னும் பலர் வந்திருக்கவில்லை. மரங்கள் பெரும்பாலும் கரையில்தான் நிற்கின்றன.
இவர்கள் மரத்தின் பக்கம்... ஜான் வந்துவிட்டானா என்ன? ஜானில்லை, நசரேன்!
“மாப்ளே?... எப்பம் தூத்துக்குடிலேந்து வந்தே...?”
“நேத்துத்தான் மச்சான்...”
“நீ வர மாட்டேண்டு நினச்சம் மாப்ள...”
மரியானுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
“ரொம்ப நாளாயிட்ட மாதிரி இருக்கி. ஆவணில போன... பொரட்டாசி அற்பிசி... தொழில் எப்படி இருக்கு?...”
“இருக்கு... காரல்தான் புடிக்கிறம்; கொல்லத்துப் பக்கம். கடன் அவதி கெட்டிச் சாப்பாட்டுச் செலவுக்குச் சரியாப் போவுது. றாலுக்கு அம்மாட்டொண்ணும் அவங்க சொன்னாப்பல இல்லிய.”
“அப்பிடியா?”
“போவப் போவத்தாந் தெரியும்...”
“துவிக் குத்தவை எடுத்தவருக்கு, துவி அஞ்சுமீன் இதெல்லாம் போடாதவருக்கு, அம்பது பேருக்குத் தலைக்கி அறுவது ரூபாவும் துவிக்கிரயமும் அவுராதம் கெட்டணுமிண்டு கோயில்ல சாமி சொல்லிச்சாமே? ஆத்தா சொல்லிச்சி!”
“சொல்லிற்றுப் போட்டம்...”
“அவுராதம் கெட்டலிண்ணா, கோயில் சம்பந்தப்பட்ட, சாமியார் சம்பந்தப்பட்ட எதும் நடக்க ஏலாதாம்...”
“பயங் காட்டுறாரே...”
“நமக்குத் துவி பத்து நூறு ரூபாய்க்கிக் கிடைச்சிச்சாமே?”
“ஆமா...?”
அவர்கள் மரத்தில் வலைகளை வைத்துக் கட்டிவிட்டு, பாய்த்தண்டு கொம்பு, எல்லாமாக மரத்தில் ஏறித் தள்ளுகின்றனர். பீற்றர் தள்ளி விடுகிறான். ஜான் வரவில்லை.
மரம் கரையை விட்டு அகன்று செல்கிறது. பார் தடையையும் கடந்து செல்கின்றன. நசரேன் ‘மாதாவே’ என்று தலைத் துணியை அவிழ்த்துக் கொள்கிறான். பிறகு பாய்த்தண்டை ஊன்றிப் பாயை இழுத்துக் கட்டுகின்றனர்.
“லாஞ்சில இம்மாட்டு உசிரைக் குடுக்காண்டாமில்ல மாப்ள?”
“ஆமா...? மாமெம்பய தோமை இன்ஜின் ஓட்றா, காரோட்டுற மாதிரி, ஆழக்கடலுக்குப் போவம். வாரத்துக்கு டிசில் நூறு ரூபாய்க்குச் செலவளியிது. பெரி... டிரம்மு டிசில் ஆனா, புன்னக்காயல் பக்கம், தொளில் செய்ய வந்தா கொன்னிடுவானுவ. அல்லாம் அம்மாட்டுக்குக் காட்டமா இருக்கானுவ!”
“இங்கேயெல்லாம் வள்ளம் வச்சித் தொழில் செய்ய தோதில்ல. மணப்பாடு, புன்னக்காயல், வீரபாண்டி, குலசைண்டு நிக்யணும். லாஞ்சி வந்தா இங்கியும் பொழக்க விடமாட்டானுவ...”
மரம் மடைப்பழுப்புக்கு மேலே மிதக்கிறது. நீரோட்டம் கிழக்கில் இருந்து மேற்கே - கரையை நோக்கிய ஓட்டமாகத்தான் படுகிறது. ஆழ்கடலுக்கு நசரேன் மரத்தைச் செலுத்துகிறான். தண்ணீர் தெளித்து ‘கவுர’டிக்கிறது. மினுங் மினுங்கென்று மத்தாப் பூச்சுடர் பொரிவது போன்று மீன் கூட்டங்கள் தெரிகின்றன. மனிதனின் ஆசை மொட்டுக்களை மலரச் செய்யும் காட்சி. அவசரமாக வலைகளை அவிழ்த்துப் பிரித்து வளைத்துப் போடுகின்றனர். ‘கல்யாண வீட்டில்’ கும்மாளியிடுவது போன்று மீன்கள்...!
ஆழ்கடலில்தான் எத்தனை எத்தனை மீன்கள்! கோடியில் ஒரு பங்கும் கூட இவர்கள் மலைகளில் முழுதும் நிறைந்தாலும் ஆகாது! கடல் நாச்சியின் பரந்த இதயம்... இவர்களின் வாழ்வும் மேன்மையும் அதில் இருக்கின்றன. அலைநீர் வாடி அடிக்கையில் கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சி இசைகிறது. பொழுது புலர்ந்து விட்டது. மடிப்பெட்டியைக் கேட்டுவாங்கி நசரேன் வெற்றிலை போடுகிறான்.
ஜனவரிஉடன் லில்லிப்பெண் கலியாணத்தை முடித்து விட வேண்டும். நசரேன் மலையாளக் கரையில் தொடுப்பு எதுவும் இல்லாமலிருந்திருப்பானா?... பரவன்... கல்யாணமில்லையென்றால் நங்கூரமில்லாத வள்ளம் போல்...
மரியான் எண்ணங்களைத் துரத்திப் பிடிக்கையில் நசரேன் பேசுவது அலைகளுக்கு மேல் செவியில் விழுகிறது.
“மாப்ள... நான் லில்லிப்பொண்ணைப் பார்த்தேன்...” திடுக்கிட்டாற் போல் தோன்றினாலும் மரியானின் இதழ்களில் நகை மலருகிறது. “எங்கிய?”
“அவ தூத்துக்குடிக்கி வந்திருந்தா. சின்னக் கோயில்ல, ஸிஸ்டர் கூடப் பார்த்தே. எம்மாட்டு வளத்தி...டா?”
“பொறவு...”
“என்னிய பொறவு? அம்புட்டுதா. சிரிச்ச, அவ சிரிச்சா. பத்தாவதில ஒரு பரிட்சையில் போயிற்றாம். மறுக்க எளுதிருக்யாண்டு சொன்னா. எப்பம் ஊருக்கு வார, பண்டியலுக்கு வருவியாண்ணு கேட்டே. ‘வாரனோ, இல்லியோ’ண்ணா...”
“சினிமாவுக்குக் கூட்டிப் போனியா மாப்ள...?”
“ம்... போயிற்று வாருமிண்ணு, ஸிஸ்டர் கூட்டியனுப்பி வச்சா... ஆளப்பாரும்! அந்தப் பொண்ணு ஒரு பேச்சுப் பேசு முண்ண கால்ல கஞ்சிய ஊத்திற்றாப்பல பறந்தா... ஒன்னக்க ஆத்தா கூட வந்து என்னக்க ஆத்தா கிட்டக் கேட்டாளாம். கலியாணமிண்ணா சீதனம், பவன் எல்லாம் எம்மாட்டுண்ணு. ஆத்தாளுக்கு நா வாக்குக் குடுத்திருக்யேண்டு தெரியாது...”
“மாமெ மவ... உன்னக்க மாம மவ எப்டீயிருக்யா?”
“நா ரெண்டுதபா தா ராத்திரியிக்குப்போனே. அவ அழவாத்தானிருக்கா. அத்தாண்ணு கூப்பிடுவா. கோபி பீங்கான்ல கொண்டாருவா. வூடு மங்களா போல இருக்கு. ஆனா, எனக்கு என்னியோ போல இருக்யு. லில்லிப் பொண்ணக் கட்டதா ஆச. பண்டியலுக்கு அவ இந்தக் கரய்க்கு வந்தா வசப்படுத்திடுவம் மச்சான்...” குறும்பாகச் சிரிக்கிறான்.
புகையிலைச் சாற்றை உமிழ்ந்து விட்டு, வலையிருக்கும் திசையைப் பார்க்கிறான் நசரேன். சட்டென்று வானத்தையும் பார்க்கிறான். “மச்சா, ஒரு மாதிரி அமுக்கமா இல்ல? காத்து... கெட்டிச்சிப் போட்டுக் குமுங்கினாப்பல... இல்லிய?...”
மரியானுக்கு மனதில் குளிர்திரிபோல் அச்சம் எழும்புகிறது. “போடா, மட்டிப் பயலுவளா? நான் சொல்லுதேன், நாப்பது வருசமா கடல்ல போறவ... காத்து அமுங்கிக் கெடக்கு. இப்பிடி இருந்திச்சின்னா சுழலி கெளம்புமிண்ணு... கேட்டியா...” என்று அப்பனின் குரல் அலைகளுக்கு மேல் மிதந்து வந்து காதில் விழுகிறது.
கடலில் வழக்கம் போல் நிறைய மரங்கள் மிதக்கவில்லை என்பதையும் அப்போதுதான் உணருகிறார்கள்.
இவனுக்கும் அலைகளே அமுங்கி விட்டாற்போன்று பிரமை தட்டுகிறது. இத்தனை அமுக்கமும் பீரிட்டுச் சுழலியாகக் கடலைக் கடைந்தெடுக்கும் தலைத்துணிகளை கைகளில் வைத்துக் கொண்டு, மாதாவையும், அந்தோணியாரையும் நினைத்து மன்றாடிப் பிச்சை கேட்கின்றனர். பிறகு வலைகளை இழுக்கத் தொடங்குகின்றனர். வலைகள் மிகப் பளுவாக, மீன்கள் நிறையப் பட்டிருப்பதை அறிவிக்கின்றன. கடலோட்டம் அவர்களை எதிரிட்டுத் தள்ளாமல் இழுத்த இழுப்பில் பெருஞ் சுமையாக வருகின்றன. எல்லாம் சீலா மீன். பத்துநூறு போல் ஒவ்வொன்றும் மூன்றடி போலும் மேலும் நீளமாகவும் கொழுவிய சீலா - கறிக்கு எடுத்த மீன். இது கனவோ? அல்லது பிரளய காலத்துக்கு முந்திய பேறுதானோ, அவ்வளவு வலைகளிலும் வெள்ளிப்பாளங்களாக, பொரி மத்தாப்புக்களாக மீன்கள். இத்தனையும் கொண்டுபோய்க் கரையில் சேர்க்க வேண்டுமே?... கவலைகளின் கனம், வளமையின் மகிழ்ச்சியின் ஆவல்களையும் கனவுகளையும் அழுத்தி விடுகின்றன. அவர்கள் வலைகளை இழுத்து மரத்தோடு வைத்துக் கட்டுமுன் காற்று சுழன்றடிக்கத் தொடங்குகிறது.
“வாங்கலெடுக்கு... அந்தோணியாரே! எங்களைக் கரை சேரும்...”
பாயை இறக்க முயலுகின்றனர். அது இலகுவாக இருக்கிறதா? யாரோ பெருமத்துப் போட்டுக் கடலைக் கலக்குவது போன்று கும்மாளியிடத் தொடங்குகின்றன அலைகள். பாயைத் தறி கொட இழுத்து வளைக்கின்றன.
“அப்பச்சி பேச்சைக் கேக்காம வந்தம் மாப்ள...”
அவன் பேச்சொன்றும் செவிகளில் விழவில்லை. அவர்கள் பாய்த் தண்டைச் சுருட்டுமுன் நீர் விசையுடன் அடித்து மரத்தை மறிக்கிறது. நசரேன் கடலில் நழுவி மூழ்குகிறான். இவ்வளவுக்கு மீன்கள் படும்போதே... இது சரியாகத் தோன்றவில்லை. சூழும் இருளுக்கு முன் அந்தியம் பொழுதின் செவ்வொளி மயக்கம் அழகாய் இருப்பது போல்... அலைவாய்க் கடலிடம் உதாசீனமாக இருக்கலாமா? கடலுக்கு ஆத்தாளின் கருணையுமுண்டு; அலட்சியமாக இருந்தால் அற்ப மனிதனைச் ‘சங்காரிக்க’வும் செய்யும்.
மரியானின் கண்களிலும் முகத்திலும் உப்புநீர் மோத, மரம் அலைகடல் துரும்பாய் நிலையின்றிச் சுழல்கிறது. நசரேன் முறிந்து போன பாய்த்தண்டைப் பற்றிக் கொண்டு வந்து மரத்தில் மீண்டும் தொற்றிக் கொள்கிறான். மரியான் மரத்தோடு மரமாகத் தன்னைப் பிணைத்துக் கொள்ளப் போராடுகிறான். வலைகளோடு - மீன்களோடு ஒரு கடல் தொழிலாளியின் இறுதி இலட்சியம் இதுதான் என்பதுபோல் - மரம் அவனோடு தூக்கி எறியப்படுகிறது. அலைகள் உயர்ந்து எழும்பி அவனோடு மரத்தையும் பந்தாடுகிறது; பிறகு மிதக்கிறது. “நசரேன்... நசரேன், மாப்ள... என்னக்க சேக்காளித் தோழா...! தூத்துக்குடி போனவன் இதற்குத்தான் வந்தாயா?...”
மூச்சடக்கி நீரின் மோதலோடு போராடுகிறான். இவன் காலோடு நசரேனின் உடலும் பிணைந்து கொள்கிறது.
தலை நிமிர அச்சம். மூடிய கண்களுக்குள்ளே, கடல் நீர் கரிக்கும் பிரளயச் சூழலில், மரணத்தின் தலைவாயிலில் நிற்கும் போராட்டத்தில், எங்கோ உள்ளே உள்ளே... உயிர்ச்சூடு மெல்லிய துடிப்பாகப் பிழைத்திருக்கிறது. அந்த இழையின் நினைவு. பயங்கரங்களாகத் தோற்றம் காட்டுகிறது. பல்வேறு வண்ணங்களின் பயங்கரச் சுவாலைகள் கவிய ஓர் அரக்கன் வாயினுள் புகுவது போன்ற தோற்றம். பெரிய மகர மீனின் வாயிலோ போகின்றனர்? அலைகளின் ஊங்கார ஊளைக்கும் பிரலாபத்துக்கும், இரைச்சலுக்கும் மேலே அப்பச்சி கையில் சாராயக் குப்பியை வைத்துக் கொண்டு சிரிப்பது போன்று ஒரு தோற்றம்.
‘அப்பமே சொன்ன; படு... அநுபவி...’ என்று சொல்வது போல் குரல்... “அப்பச்சி, மன்னாப்புத்தாரும்! ஒங்களை உதாசீனம் பண்ணினம்! மாதாவே இரக்கமாயிரும்! நா மனஸ்தாபப்படுதேன். ஒங்க வல்லமை இந்த இடங்கேட்டினும் கொந்தளிக்கையிலும் பரிசையா வந்து கார்க்கட்டும்...”
மரத்தை மாதா சுரூபத்தின் பாதத்தைப் பற்றியிருப்பது போல் உறுதியாகப் பிணைந்திருக்கிறான். இது பாறைகளில் போய் மோதுண்டால்... அவர்கள் மரணத்தின் வாயிலில் விழுவார்கள்.
ஏலி... ஏலிப் பெண்... அவன் குழந்தை... “மாதாவே கரைமேல் சேர்த்துவிடும். பாவமெல்லாம் செய்தவனை மன்னித்தருளும்... அம்மை...”
உணர்வுகள் தறி கெடச் சுழல்கின்றன. சிங்கிறாலின் கண்களைப் பிதுக்கும் கைகள்... கண்டா ஓங்கல் கூட்டம் கூட்டமாக மோதுகின்றன. அலைகளில்லை. கண்டா ஓங்கலோ, பனை மீனோ...? தோழ்ச வாதியாயிருந்தாலும், நல்லது சொல்ல இல்லிலே சேசுவே... கோயில் தெறிப்பை மறுத்தமிண்ணு தெண்டனியா?...”
உணர்வை அழிக்கும் பிரளயத்தில் நைந்து நைந்து அது எழும்பி எழும்பிப் புயலின் நடுவே திரியாக மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஏலி அந்தப் பச்சை மண்ணைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறாள், ஏணையை நீக்கிக்கொண்டு காயும் மழுவாய் கைபட்டால் பொரியும் சூடு. கைக்குச் சூடு கண்டு ஏணையில் விட்டாள். வானில் அனக்கமேயில்லாமல் மருமத்தைப் புதைத்துக் கொண்டாற்போல் ஒரு சூழல். ஸ்டெல்லா மாமியைத் தேடிப் போகிறாள்; மாமி, பாட்டன் இருவருமில்லை. கைமருந்தெல்லாம் ஒன்றும் தெரியாது... கடலில் அதிகமாக மரங்கள் போகவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ‘பொதுமை’ மரத்தின் இலைகளைப் பறித்து, கெபியின் முன் சுரூபத்தின் பாதம்பட வைத்துக் கொண்டு வரச்செல்கிறாள். அந்த மரம் பசுமையான இலைகளே இல்லாமல் கழிக்கப்பட்டிருக்கிறது. மேலே ஏறி இலை கழித்து விடுகின்றனரென்று, அந்த வேம்பின் அடி மரத்துக்கு மேல் முள் கட்டியிருக்கின்றனர்.
ஏலி அடி மரத்திலிருந்து கொஞ்சம் காய்ந்த பட்டையைப் பெயர்த்து எடுக்கிறாள். கெபியின் முன் வைத்து, முட்டு குத்தி, மன்றாடி ஜபம் செய்கிறாள். அவள் மணலில் நடந்து வருகையில் காற்று தூசையும் மணலையும் வாரியடிக்க வீசுகிறது. கடலுக்கு அநேகம் பேர் சென்றிருக்கவில்லை. செபஸ்திநாடார் கடை வாசலிலும், கோயிலுக்குப் பக்கத்தில் பூவரசு மரத்தடியிலும் யார் யாரோ குந்தியும் நின்றும் புகை குடித்துக் கொண்டு பேசுகின்றனர். மீன் சம்பைகள் வெற்று வட்டிகளுடன் அலைவாய்க்கரைக்குச் செல்கையில் பரபரப்பில்லாதவராகக் காணப்படுகின்றனர். கடலில் வாங்கலடித்துக் கொந்தளிப்பாக இருந்து ஒரு முறை ஏலி பார்த்திருக்கிறாள். மரியான் இன்று கடலுக்குப் போயிருப்பானோ?...
குடிலுக்குள் காய்ச்சலடிக்கும் சிசுவை விட்டிருக்கும் உணர்வோடு இந்தப் பீதியும் கவ்விக் கொள்கிறது. கரையுடன் அவள் நடக்க மேட்டில் இருந்து இறங்குகிறாள். சென்ற மரங்கள் அவசரமாகத் திரும்பி இருக்கின்றன. உறுதியாக ‘கல்லு வைப்’பதில் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது குடிமகன் ‘தம்பு ரெடுக்கும்’ ஒலி கேட்கிறது.
“இப்பம் காலமே, கடல் காத்து, சுழலி அடிக்குமிண்டு ரேடியோ அறிக்கை வாசிச்சிரிக்கிறதால, கடல் புறத்தில் ஆரும் தொழிலுக்குப் போகண்டாமிண்டு ஊரறிக்கை வுடுதாங்க... டும் டுடும் டுடும்... அலைவாய்க் கரையைத் தொட்டடுத்த வூடுக, புரைங்களெல்லாம் காலி பண்ணிட்டு புள்ள குட்டிங்களைக் கொண்டு எல்லோரும் கோயில் பக்கமோ, வேற தாவுக்கோ போயிக்கணுமிண்டு கற்பனையாயிருக்கு பஞ்சாயத்தில... டும் டுடும்... டுடும்...”
அவள் திரும்பிக் குடிலுக்குச் செல்லுமுன் காற்று ஹோவென்று கடல் அலைகளுடன் சேர்ந்து கொள்கின்றன. அலைகளின் ஆட்டமும் பாட்டுகளும், கிடுகுகளையும், கூரையில் இருக்கும் பன ஓலைகளையும் எழும்பி நடனமாடத் தூண்டி விட்டாற்போன்று பறந்து விழுகின்றன. அவளுடைய சேலை பறக்கிறது. மண் சுள் சுள்ளென்று விழுகிறது. ஓட்டமும் நடையுமாக அவள் குடிலுக்குள் செல்கிறாள். கடலுக்கு மிக அருகாமையிலுள்ள வீடு... குழந்தை ஒலியே எழுப்பச் சக்தியற்றாற் போன்று துவண்டு கிடக்கிறது. அவள் அந்த மரப்பட்டைத் துண்டைச் சிறு துணியில் முடித்து, குழந்தையின் உடலோடு போர்த்துக் கொள்கிறாள். அவள் இன்னாசியை மணந்து கொண்டு அந்தக் கரைக்கு வந்த நாளில் வாங்கிய பெட்டிக்குள் அருமையான சாமான்கள் - துணி - குழந்தைக்கு மரியான் வாங்கிக் கொடுத்த புதிய சட்டை, மினுமினுப்பாக அவளுக்கு வாங்கி வந்த கண்ணாடி பிளவுஸ் துணி, பிறகு ஒரு நாள் அவள் கடற்கரையில் பொறுக்கி வழுவழுப்பாகத் தேய்த்துப் பிள்ளைக்குப் பால் கொடுப்பதற்கென்று நினைத்து வைத்துக் கொண்ட சங்கு, அந்தோணியார் படம் - புதிய அலுமினியம் பாத்திரத் தூக்கு, எல்லாம் எடுத்துக் கொள்கிறாள். தோளில் குழந்தையும் கையில் பெட்டியுமாக அவள் கோயிலின் பக்கம் தான் நடக்கிறாள். அவள் வீட்டுக்கும் அப்பாலுள்ள குடிசைகள் - குடிமகன்மாரும், சிப்பி நொறுக்கிச் சுண்ணாம்பு நீற்றும் எளியவர்களும் வாழும் புரைகள், அவர்களில் சிலர் குழந்தை குட்டிகளுடன் கோயிலின் உள்ளே வந்திருக்கின்றனர். குழந்தையை மாதாவின் முன் கிடத்திவிட்டு ஜபிக்கையில் கண்கள் துளிக்கின்றன.
மரியானின் அப்பன், ஒரு முழுக்குப்பி சாராயத்தையும் குடித்துவிட்டுப் பொலபொலவென்று வசைகளாய் கொட்டுகிறார். மேரி கொடியில் காயப் போட்ட துணிகளை உருவி அவசரமாக மடித்து வைக்கிறாள். நடுவீடு ஒன்றுதான் ஓடு. கீற்றுக்களும் கிடுகுகளும் பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன. கடலலைகள் ஆங்காரமும் ஓங்காரமுமாக மேட்டை நோக்கிப் பாய்கையில் அச்சம் திகிலாய் நெஞ்சைக் கவ்வுகிறது.
கருவாட்டுப் பெட்டி, எண்ணெய், விறகு, பாய் படுக்கை, எல்லாம் எங்கே கொண்டு போவார்கள்.
“மாதாவே? உன் மக்கள் தோழ்சமெல்லாம் பொறுத்து, மன்னாப்பு கண்டு வேணும். பிள்ளை எட்டி ஒதஞ்சாலும் காலை முத்தம் வைக்கும் ஆத்தாளே, கடலம்மா? உம் புள்ளியள, ஒரு இடங்கேடுமில்லாமகாரும். உம் புள்ளியள்ளாம் கவடு இல்லாத மக்க. உண்மையாம்படியே ஆரையும் உதாசீனம் செய்யமாட்டா. நல்லபடியாக் காத்துக் கரைசேரும் தாயே!...” என்று ஆத்தா கடலைப் பார்த்து முழந்தாளிலிருந்து ஜெபிக்கிறாள்.
ஜான் ஓடி வருகிறான். கோயில் மணி ஒலிக்கிறது. இது சந்தோஷ மணியில்லை; துக்க மணியுமில்லை; அபாய மணி.
“மாமி? பொறப்படும். தம்பு ரெடுத்தது சொவில வுழ இல்லியா? ஆத்தா உங்க எல்லாரையும் அங்கிய வரக்காட்டுதா. லே, பீற்றர், எடு, பொட்டி சட்டி எல்லாம் தூக்கிட்டு வாரும்...!” என்று முடுக்குகிறான்.
சார்லசும் பீற்றரும் குடிபெயரத் துடிக்கின்றனர்.
“கடலுக்கு நீ போவ இல்லையா?” என்று ஜானிடம் கேட்கிறாள்.
ஆத்தாளுக்கு அவனைக் காணவே வியப்பாக இருக்கிறது.
“என்ன அமைத்து வச்சிட்டு, நசரேனில்ல போயிருக்யா?”
“நசரேனா? அவெ இங்கியா இருக்யா?”
“அவெ அந்திப்போதில வந்தா. கடலுக்கு நாம் போறண்டு கிளம்பிட்டா. பொழுது வெளுப்புக் குடுக்குமுன்ன பிறப்பட்டுப் போனா...”
ஆத்தா அதிர்ச்சியுற்றாற்போல் நிற்கிறாள்.
பெஞ்சமின் வந்து செய்தி சொல்கிறான். “ரேடியோவில் ராத்திரியே கேட்டு, காலம மேட்டுத் தெருவில போய்ப் பஞ்சாயத்து மெம்பரிட்ட சொன்னேன். ஒடனே குடிமவன வுட்டுத் தம்புரெடுன்னேன், ஆனா அதுக்குள்ளாற பொறப்பட்டுப் போனவங்க அநேகம் பேர் கொஞ்ச தூரம் போயிட்டுத் திரும்பி வந்திட்டாங்க. இவனுவளும் திரும்பி வந்திடுவானுவ. இல்லியேண்ணாலும் வேறு தாவில எந்தக்கரையில்லேன்னாலும் ஒதுங்கியிருப்பா. கவலிப் பொண்ணும் வேணாம் நீங்கல்லாமும் எச்சரிக்கயா நம்ம வீட்டுப் பக்கம் வந்திரலாம்...”
ஆத்தாளின் கண்கள் நிரம்பி வழிகின்றன.
“சோறு கூட எதும் வேண்டாமிண்டு பிறப்பட்டுப் போனா. அப்பச்சி அச்சானியம் போல போவாதேலேயிண்டு சொல்றாரேண்ணும் நினைச்சே. போகக் கிளம்பையிலே புரு புருண்ணாரு. நீங்க எல்லாம் போயிடுங்க. ஏக்கி மேரி, செயமணி, தம்பி, அப்பச்சியெல்லாரையும் கூட்டிப் போயிரு. எங்கண்ணான பய கடல்மேல் இருக்கையிலே, என்னக் கொண்டு மட்டும் என்னம்ப்பு...!”
அப்பனோ, அந்தக் கட்டிலை விட்டு நகர மறுக்கிறார்.
“நானிந்த எடத்தவிட்டு நவுர மாட்டே. நீங்க எல்லாரும் எங்கிய வேணாலும் போயிக்கிங்க. நா இதே எடத்திலே தானிருப்பே. இது உயிர்தம்...”
அப்போது, மீன் துவிவெட்டும் வளைந்த கத்தியுடன் செபமாலையான் வளைந்த மீசையுடன் சிவந்த விழிகளில் ஆங்காரமுமாகப் பாய்ந்து வருகிறான்.
“...ப்பயலுவ? கோயில் தெறிப்பை நிறுத்தினானுவ, சரித்திரம் சொன்னா, தரித்திரமிண்டு எகனை மொகனை பேசினானுவ. ஏலே, வாடா உன்னிய இப்பம் வெட்டிப் போடுவ, துவி கொடுக்காண்டாம், கோயில் வரமுற மதிக்காண்டாமிண்டு நீ தானேலே பேசுன?...”
அவன் பெஞ்ஜமினை நோக்கிப் பாய்கையில் ஜான் குறுக்கே இளங்கன்று பயமறியாது என்றூ பாய்கிறான்.
“ஐயோ, மாதாவே இப்பம் கொலை செய்ய வாறீரு, பசு பட்சிக் கூட்டம் கூட இப்பிடி ஒரு ஆவத்து நேரத்தில துரோவச் செயல் செய்யாதே? உமக்கு நெஞ்சு ஈரமில்யா? நீங்கல்லாம் மனிசனுவ இல்லியா?...” என்று ஆத்தா தவித்து ஜானை விலக்குகிறாள். அவனது அரிவாளுக்கு முன் தானே நிற்கிறாள்.
இதற்குள் பெஞ்ஜமின் பெண்சாதி அங்கே கையில் பிள்ளையுடன் கூந்தல் கட்டவிழ்ந்தலைய இவன் கத்தியுடன் அவள் கணவனைத் தேடி ஓடியது கண்டு ஓடி வருகிறாள்.
பெஞ்சமினே பாய்ந்து அவன் கை அரிவாளைப் பற்றி விட்டான்.
“சாத்தான் வெளயாடுது இந்தக்கரயில. இவனுவள வுட்டு வச்சா கரைய அழிச்சிடுவானுவ” என்று செபமாலையான் குதிக்கிறான்.
எட்வின், ரொசாரியோ, சாமுவல் எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டு செல்கின்றனர். சாராயம் வாங்கிக் கொடுத்தால் அடங்கிப் போவான்?
இயற்கையின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் கரையில் காலம் காலமாக நிற்கும் பனந்தோப்புகளில் பல பனைகள் தலை கவிழச் சாய்கின்றன. கரையில் நாடாரும் குலசைச் சாயபுவும் போட்டிருந்த மீன் கொட்டகைகளைக் காற்று உருத்தெரியாமல் பிய்த்தெறிகிறது. அலைவாய்க் கரையோரமிருந்த கீற்றுத் தடுப்புகள் கூரைகள், யாவற்றையும் விட்டு வைக்காமல் பறித்துப் பந்தாடுகிறது. பகலா, இரவா என்பது புரியாமல் காற்று வெறியாடும் இந்த அரங்குக்கு மேகங்களும் குவிந்து வந்து மழைத் தாரைகளால் வானையும் வையத்தையும் ஒன்றாக்குகின்றன.
கடல்... கடலம்மை ஊழித் தாண்டவமாடத் தொடங்கிவிட்டாள். ஆடுகளும், கோழிகளும், மனிதக்குஞ்சுகளும் பாய், பரட்டை தட்டுமுட்டுகளுமாக மக்கள் இடம் பெயர்ந்து கோயிலுக்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
நசரேனின் வீட்டில் மேல் மச்சில் ஊர்ப்பிள்ளைகள் கொண்ட மட்டும் கூடியிருக்கின்றனர். மரியானின் ஆத்தாளும் அப்பச்சியும் கூட இங்கே நடுவீட்டில் வந்திருக்கின்றனர். ரோசிதா சோறு பொங்கி, காரல் கருவாட்டைப் போட்டு ஒரு ஆணமும் கூட்டி இருக்கிறாள். யேசம்மா சுவரில் கூண்டுக் குள்ளிருக்கும் ‘சுரூபத்’தின் முன் இரண்டு வத்திகளைக் கொளுத்தி வைத்திருக்கிறாள். இந்த வீட்டில் ‘கரண்ட்’ விளக்குகள் இருந்தாலும் சுழலிக் காற்றீல் கம்பிகள் தொடர்பறுந்து போய் ஊரை, கோயிலை இருளில் ஆழ்த்தியிருக்கிறது. கடற்புறம் பார்க்காத அந்த வீட்டில் வாயிற்கதவைத் தாளிட்டுக் கொண்டு, வத்தி ஒளியில், அவர்கள் முட்டுக்குத்தி ஜபம் சொல்கிறார்கள். மேரி ஜபப் புத்தகத்தைப் பிரித்து, தாவீதரசனின் எண்பத்தொன்பதாவது சங்கீதத்தைப் பாடிச் சொல்ல மன்றாட்டு செய்கிறார்கள்.
“ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்கு அடைக்கலம். மலைகள் இராமுன்னே, பூமியும் பூச்சக்கரமும் உண்டு பண்ணப்படா முன்னே, நீரே எப்பொழுதும் இப்பொழுதும் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். மனிதனை இழிவில் விடாதேயும், ஏனெனில் மனுமக்களே மனந்திரும்புங்களென்று தேவரீர் திருவுளம் பற்றினீர்.
“...உமது கோபத்தால் நாங்கள் சோர்ந்து போனோம்; உமது கோபாக்கினியால் நாங்கள் கலங்கிப் போனோம். நமது சமூகத்தில் எங்கள் பாவங்களையும் உமது திருமுகத்தின் வெளிச்சத்தில் எங்கள் சீவியத்தையும் நிறுத்தி வைத்தீர். ஆதலால் எங்களுடைய நாள்களெல்லாம் பறந்து போயின; உமது கோபாக்கினியால் நாங்கள் வாடிப் போனோம். எங்களுடைய வருஷங்கள் சிலந்திப் பூச்சி நூலைப்போல் நிலையற்றதாயிருக்கின்றன...
உம்முடைய கோபத்தின் பெருக்கத்தை அறியவும் அதன் கோரத்தைக் கண்டுபிடிக்கவும் யாராலே கூடும்! உமது வலது கரத்தின் வல்லமையைக் காட்டி எங்கள் இதயத்தில் நாங்கள் ஞான உணர்ச்சி கொள்ளும்படி செய்யும். ஆண்டவரே, எங்கள் பக்கமாய்த் திரும்பும். உங்கள் தாசர்களாகிய எங்கள் பேரில் தயவாயிரும்... எங்கள் தேவனாகிய ஆண்டவருடைய பிரகாசம் எங்கள் பேரிலே இருக்கக் கடவது. ஆழிக்கடலில் போயிருக்கும் மனுக்குமாரர்களுக்கு, இந்தப் புயலிலிருந்து ரட்சை அருளுவீர் - உந்நதஸ்தலங்களிலிருந்து எங்கள் கரங்களுடைய வேலையை நடத்தியருளும் ஆமென்...”
அந்தக் காள இரவு விடிகையில், கதிரவன் கடலுக்குச் செம்பொன் பட்டாடை விரிக்கிறான். தகத்தகாயமாக அது ஒளிர்கிறது. வெண்ணிறக் கடற்காகங்களும், நிலத்தின் கருங்காகங்களும் கரையில் பறக்கின்றன. மரியானிடம் வந்து சாப்பிட்டுக் குசினி மூலையில் படுத்துக் கொண்டு உறவு கொண்டாடும் சிவப்பி பெண்நாய், கரையில் வாய் பிளந்து செத்துக் கிடக்கிறது. அதன் குடல் கண்ணாடிக் குழாய்போல் ஆசன வாய் வழியே பிதுங்கியிருக்கிறது. மரங்களைத் தாறு மாறாகக் கடல் அடித்திருந்தாலும் அவை ஈடு கொடுத்திருக்கின்றன. நீர்ப்பாசிகளும், சிப்பி நண்டுகளும், மரத்துண்டுகளும், ஓலைப் பொடிகளும், ஒட்டு உடைசல்களும், பூண்டுகளும், உடைந்த சட்டித் துண்டுகளும், கரை நெடுக மணலில் காற்றுக் கடலின் விளையாட்டுக்குச் சாட்சியங்களாகக் கிடக்கின்றன. கூரைத் தாழ்வரைகளும் குடிசைகளும் வாய் பிளந்தாற் போன்று வெறும் வரிக்கம்புகள் தெரியச் சிதிலமடைந்திருக்கின்றன. ஏலியின் குடிலுக்குள் நீர் புகுந்து விளையாடி இருக்கிறது. மணலும் ஈரமும் பிரிந்த கூரையும் ஊறிய அடுப்புமாக அந்தக் குடிலில் குழந்தையைப் போடக்கூட இடமில்லை.
பிச்சைமுத்துப்பாட்டாவும் மாமியும் முதல் நாள் அமலோர்பவத்தின் வீட்டில் தங்கியிருந்தார்கள். நல்ல கல் கட்டுமான வீடாகையால் ஓதம் தங்கவில்லை. நடுவீட்டில் ஓடுகள் விலகவில்லை. புறக்கடையில்தான் சேதம். “மாமி...? இந்தப்புள்ளயப் பாரும்...!” என்று ஏலி குழந்தையுடன் வருகிறாள்.
“நாய்க்காத்து. நான் பனவிளக்கி ஓல கொண்டாரலாம் பிலப்பெட்டி முடஞ்சிக்கலாமிண்டு போனம். ஒரே காத்து... நாய்க்காத்து, ராவிக்கி எங்கட்டீ இருந்தே?...”
“கோயில்ல மாமி, புள்ள தீயாக் கொதிக்கி. தொட்டால அலண்டு போவு. முலெ சப்பல... ஏதேனம் மருந்து ஊத்தலா மிண்ணா ஒண்ணுந்தெரியல...”
மாமி ‘வாரியலை’க் கீழே போட்டுவிட்டுக் குழந்தையைத் தொட்டுப் பார்க்கிறாள்...
“அனல் காயுத! மாதாவுக்கு வித்துக் கொடுக்யேண்டு நேர்ச்சை முடிஞ்சி வையட்டீ!”
பிச்சமுத்துப்பாட்டா மூலையில் சுருட்டுப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
“தாலிக் கெட்டில்லாம புள்ள பெத்து ஞானஸ்நானமில்லாம நிக்யா! அதது உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போவு. போவட்டும்ட்டீ! புள்ள எதுக்காவட்டீ, புள்ள? அவெ அவெ எங்கெங்கியோ பாத்து ஓடுதான். ஆத்தாளப் பாக்குதா, அப்பெயப் பாக்குதா? புள்ள பொண்ணு ஆரும் ஒரு புரோசனமும் இல்ல. விருதாவா ஏன் சஞ்சலப்படுதே! மாதா குடுத்தா, எடுத்திட்டாப் போவு!...”
ஏலிக்கு, மரியான் கடல் மீது சென்றிருக்கிறானோ, ஊரிலிருக்கிறானோ என்றறியும் தவிப்பு மேலிட்டிருக்கிறது. ஆனால் அதை எப்படி யாரிடம் வெளியிடுவாள்? அவள் அவனைச் சாமி சாட்சியாகக் கைப்பற்றி மணவாட்டியாயிருக்கிறாளா?
அன்று ஞாயிற்றுக் கிழமை. புயலடித்து மீண்டபின் அவரவர் உடமைகளின் சேதங்களைப் பார்ப்பதும் சீர் செய்வதுமாக ஒன்றியிருக்கையில் திருப்பலிப் பூசைக்கான மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏலிக்கு அது... ஏனோ துயர மணியைப் போல் ஒலிப்பதாகவே தோன்றுகிறது. குழந்தையைக் கையிலேயே வைத்துக் கொண்டு கடலைப் பார்த்த வண்ணம் கூரையில்லாக் குடிலின் வாயிலில் நிற்கிறாள்.
பிரளயச் சுழற்சியில் அலைமோதுண்ட மரியானுக்கும் நசரேனுக்கும் தங்களைக் கடல் அலைகள் எங்கோ கொண்டு ஒதுக்கிய போது, தன்னுணர்வு இல்லை. வள்ளமாக இருந்தால் தன்னுள் நீரை நிரப்பிக் கொண்டு அவர்களைக் கடலன்னையின் ஆழ் மடிக்கு இழுத்துச் சென்றிருக்கும். நிலத்தில் உயிர் பற்றி வளர்ந்த உருவிலேயே சிதையாமல் இருந்த கட்டுமரம், கடலலைகள் மறித்தாலும் முழுகாமல் மிதக்கும் தன்மை கொண்டதால் அவர்கள் மரத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்ததால் மிதந்தார்கள். பாரில் முட்டிமோதி அவர்கள் உயிரைப் பறிக்காமல் கடல் நாச்சி தன் அலைக்கரங்களால் அவர்களைக் கரையில் ஒதுக்கியிருக்கிறாள்.
காற்றின் வெறியும், மழையின் உக்கிரமும் கடலின் ஆராளியும் அடங்கியதும் இருள் பிரியா அந்த நேரத்தில் அவர்கள் ஒதுங்கிய கரையில் குடிசைகளை விட்டுச் சென்றிருந்த குடிமகன்மார் இருவர் பந்தக் கொளுத்தி வந்து பார்த்த போது, மரமொன்று மனிதர்களுடன் ஒதுங்கியிருந்ததைக் கண்டார்கள்.
பரபரப்பாக இருவருமாகக் கடலிலிறங்கி மரத்தை இழுத்துப் பார்க்கையில் அவர்கள் தங்களை மரத்துடன் பிணைத்துக் கொண்ட நிலையில் உணர்விழந்து இருந்தனரென்று புரிந்தது. கட்டை அவிழ்த்து மணலில் கிடத்திக் குப்புறத்தள்ளி நீரைக் கக்கச் செய்தனர். மரியான் உணர்வு திரும்பக் கண்களை விழிக்கையில் திமிங்கலச் சுறாவின் வயிற்றிலிருப்பதாகவே கருதினான். வயிற்றை அந்தச் சுறா குதறித் தின்று விட்டதோ?...
அவர்களில் ஒருவன் இதற்குள் சத்தம் போட்டு ஆட்களைக் கூட்டலானான். பந்தம் கொளுத்திக் கொண்டு இன்னும் சிலர் ஓடி வந்தனர்.
“எந்தக் கரை, எங்கிருந்து வாறீம்?”
“கன்னியாபுரம்... இது எந்தக் கரை?”
“இது விடிஞ்சகரை...”
மரியானுக்கு அனலிடை மெழுகு உருகுவது போல் உள்ளம் உருகக் கண்ணீர் பெருகுகிறது. உப்பு நீர்... கடல் நீர்...
மாதாவே! சுழலியில்பட்டுப் பிழைக்கக் கரை சேர்ந்திருக்கிறானா? நசரேன் எங்கே... நசரேன்...
அவன் சுற்றுமுற்றும் பந்தத்தின் செவ்வொளியில் ஆட்களைப் பார்க்கிறான். மனிதர்களா இவர்கள்? விண்ணுலகின் பரிசுத்த ஆவியின் தூதுவர்களோ? சம்மனசுகளோ? ஆஞ்சுகளோ?
நசரேனையா கவிழ்த்துப் போட்டு நீரெடுக்கின்றனர்?
உள்ளங்காலைத் தேய்க்கிறான் ஒருவன்.
நசரேன்... அவனுக்கும் உயிர்... இருக்கிறது...
“எப்பம் கடலுக்குப் போனீம்?”
“நேத்துப் பொழுது வெள்ளாப்புக் குடுக்கு முன்னியே புறப்பட்டோம்...”
மீன்களை வாரி வலையில் இழுத்துக் கட்டியதும், வலைமேல் தன்னைப் பிணைத்துக் கொண்டதும் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.
யாரோ ஒருவன் மணலில் எழுந்து உட்கார்ந்தவனுக்குக் கருப்பட்டி நீரைக் கொடுக்கிறான்.
பொழுது வெளுத்து, சூரியன் வானில் கடை விரிக்கிறான்.
ஞாயிற்றுக்கிழமை. இங்கும் கோயில் மணி ஒலிக்கிறது.
நசரேனும் கண்களை விழித்துவிட்டான், கதை சொல்வதற்கு.
ஊர் முழுவதும் திரண்டு அவர்களை வேடிக்கைப் பார்க்க வருகின்றனரோ என்று தோன்றுகிறது.
“லே மரத்தில் சீலாமீன்... வலை தட்டணும்?”
சீலா... சீலா...!
சாமரம் வீசுவது போல், முத்தெறிவது போல் அந்தக் குரல் இனிமையாகச் செவிகளில் விழுகின்றன.
யாரோ ஒரு பெண் பிள்ளை கோபித் தண்ணீரைச் சுடச் சுட லோட்டாவில் விட்டுக் கொண்டு வருகிறாள் இன்னொரு முறை.
“மச்சான்... எப்படி இருக்கிய?”
“மாதா கிருபை. அந்தோணியார் கோடியற்புதர். நாம கரை வந்தம்...”
“இன்னாருங்க, பன் ரொட்டி தின்னுங்க...”
பசியும் - மனிதன் நெஞ்சீரமும், எவ்வளவு இனியவை!
கண்களில் நீர் வழிகிறது, இருவருக்கும். தின்று இனிய பான நீர் பருகுகின்றனர்.
“நெம்ப வந்தனமுங்க. மீனைத் தட்டிப்போட்டு நாங்க போறம்.”
“கொம்பு வாரிய்க்கல் மட்டும் குடுங்க. பொழுதோடு குடுத்துப் போடுறம்...” என்று நசரேன் நன்றி தெரிவிக்கையில், உரிமையுடன் சில இளம் பையன்கள் மீன் வலைகளைக் கட்டவிழ்க்கின்றனர்.
நூறுரூபாய்ப் பாடிருக்குமா இருநூறுரூபாய்ப் பாடிருக்குமா?... இன்று விலை அதிகமிருக்குமே?
ஏலக்காரரோ, சம்பையோ வருகிறார்களாவென்று அவர்கள் பார்க்குமுன் முதலில் இவர்களைத் தேடி வந்த குடிமகன்கள் இருவர் வந்து நிற்கின்றனர்.
உயிர் பிழைக்க, வேறு ஊர்க்கரையில் ஒதுங்கி மீனைத் தட்டினால் அந்தக் கரையிலுள்ள குடிமகன் மாருக்கு இவர்கள் உரிமை மீன் கொடுக்க வேண்டும். நூற்றுக்கு மேல் கொண்டு வரும் வஞ்சிரம்பட்டிருக்கிறது. ஆயிரத்தில் ஒருநாள் என்று மீன்பாடு காண்பதும், ஆயிரத்தில் ஒருநாள் என்று சுழலியில் படுவதும், ஆயிரத்தில் ஒரு கடல்தொழிலாளிக்குத்தான் வாய்ப்பு வரக்கூடும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு வந்திருக்கிறது.
“இன்னாருங்க, குடிமவ நாங்கதா - எங்க பாட்டிதா ஆளுவ அதிகம். அதுனால, மீன் உரிமை எங்களுக்குத்தான் போடணும்...”
“அப்படீண்ணா?...” என்று நசரேன் வினவுகிறான்.
இந்தக் கரையில் தொழில்காரர் இரண்டுபட்டுக் கிடப்பதைப் பற்றிச் செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இவர்கள் தாம் அவர்களைக் கண்டு முதலில் ஆட்களைக் கூட்டி அவர்களுக்கு உணர்வூட்டி, உயிர்ச்சூட்டை விளங்கச் செய்திருக்கின்றனர்.
“இங்க ரெண்டு பாட்டி. இன்னொண்ணு கோயில் பாட்டி, அவனுவ அதோ வரானுவ. நீங்க எங்களுக்கே போடுவமிண்டு உரச்சு மொழி சொல்லும்...”
இவர்கள் சொல்லி முடிக்குமுன் கையில் கருக்கரிவாளுடன் ஒருவன் வர, பின்னால் படைபோல் பத்திருபது பேர் வருகின்றனர்.
“அவனுவளுக்கு மீன் போட்டீங்கன்னா, இங்க அந்த மீனுக்கெல்லாம் ஒரு சல்லிகூட உங்க வசம் கிடைக்காது. கோயில் பாட்டிக் குடிமவனுக்குத்தா குடிமவ உரிமை சேரணும். இவனுவ துரோகிப் பயலுவ. இந்தக் கரைய நாசம் பண்ணும் பிசாசுங்க...”
“...லே, நாய்க்கிப் பொறந்த பயலுவளா? யார்றா துரோகி?...”
கம்பைத் தூக்கிக்கொண்டு ஒருவன் முரட்டுத்தனமாகப் பாய்கிறான். மரியானும் நசரேனும் அதிர்ச்சியினால் ஊமையாகி நிற்கின்றனர். சிறிது நேரத்துக்கு முன் புயலுக்குப் பின் மீட்சியாக, இனிமையிலும் இனிமையாக, உயிர்ச்சூட்டின் இணக்கங்களாக, மனிதத்துவத்தின் மாட்சிமைகளாக, கருப்பட்டியின் மகிமையிலும், ரொட்டியின் ருசியிலும் பசித் தீயவித்த பண்புகள் இப்போது சிதறிப் போய்விட்டன.
அவர்கள் பாடுபட்டுக் கொண்டு வந்த மீன்; உயிரையே பணயம் வைத்துக் கொண்டு வந்த மீன்...
அந்த மீனின் பக்கம் சென்று இவர்கள் ஆளுக்குப் பாதி உரிமை கொடுத்துவிட்டு ஏலத்துக்கு விடக்கூட அந்த இரு குழுவினரும் விடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. சொற்கள் மோதப் போர் நடக்கவில்லை. அடக்கி வைக்கப்பட்டிருந்த குரூர ஆவேசங்கள் அங்கே கட்டவிழ்கின்றன. ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக் கொள்ளக் குருதியும் சிந்துகின்றனர்.
மீன் ஏலம் எடுக்க வந்தவர் பின்னடைகின்றனர்.
“மச்சான், நாம இங்கே இருந்தா ஆவத்து, நாம இங்கிய விட்டுப் போயிருவம்...”
கடலின் மீது செல்ல மரத்துக்குத் துடுப்பில்லை; கொம்பில்லை.
இப்போதைக்கு இவர்கள் இந்தச் சண்டையில் அகப்படாமல் அகன்று விட வேண்டும்!
நீர்க்கண்டமும் சுழற்காற்றும் கூட இவர்களைக் கருணையுடன் கரைசேர்த்து விட்டன. ஆனால் மனிதனின் ஆவேசங்கள் கொலை வெறிகளாக மாறும் சூழலிலிருந்து மீட்சி காண வேண்டுமே? நசரேனும் மரியானும் மணற்கரையில் விரைந்து, கடுகி ஓடுகின்றனர். கொண்டு வந்த மீனைவிட்டு, உடமையை விட்டு, தங்கள் மண்ணை நாடி ஓடுகின்றனர்.
“மச்சான், ஊருக்குப் போனாலும் கொண்டமிருக்கு கோயில் தெறிப்புக்குத் துரோவமா நடந்ததால்தான் சுழலிக் காத்தடிச்சிண்ணு ஏசுவாங்க...” என்று நசரேன் அஞ்சுகிறான்.
“எதுக்காவ மாப்ள?... நான் நேத்து அந்தக் காலம்போற ஆராளியிலும் ஒண்ணு நெனச்சேன். நாம செய்யிறது சத்தியத்துக்கு ரோதமிண்ணா, கடல் நேத்து நம்மைக் கரையில் ஒதுக்கியிருக்காது. நாம செயிச்சிருக்கோம். இந்தப் போராட்டத்தில தோல்கல - செயிச்சிருக்யோம்...!”
பளிச்சென்று கதிரவன் இவர்கள் மேல் ஆசீர் அருளுவது போல் சிரிக்கிறான். முட்செடிகளெல்லாம் துளிர்த்துப் பசுமை பூரிக்கின்றன. முறிந்த பனைகள் கூட அதிகமில்லை. நாடார் விளையின் வாழைத் தோப்புகளும் கூட அதிகமாகச் சேதமாகவில்லை. குடில்களில் குழந்தைகள் விளையாடுகின்றன. பெண்களும் ஆண்களும் சுறுசுறுப்புடன் புயலுக்குப்பின் வீடு, மனைகளைச் சீராக்குவதில் ஈடுபட்டிருக்கின்றனர். மரியானும் நசரேனும் எதுவும் பேசாமலே நடந்து வருகின்றனர். ஒவ்வொருவனுக்கும் தனித்தனியே சிந்தனைகள்; பிரச்னைகள்... மனிதர்கள் தங்களுக்குள் பொதுவான அபாயம் நேரும்போது பிணைப்புண்டு நிற்கின்றனர். ஆனால் அடுத்த கணமே அவர்கள் சுயநலச் சுவர்களை எழுப்பிக் கொண்டும் வெட்டி மடிகின்றனர். வெட்டி மடிந்தபின் எத்தனை வருந்தினாலும் சென்றது திரும்புவதில்லை.
அலைவாய்க்கரையில் இவ்வாறு எவ்வளவு கொலைகள் சடுதியில் விழுந்து விடுகின்றன? அவனுடைய கரையில் கண் முன்பாகத் தெரிந்து பிச்சைமுத்துப் பாட்டாவின் மகன் ஆல்பர்ட் கொலையுண்டான். அவன் படித்திருந்தான். திருச்செந்தூர் விடுதியில் தங்கிப் பத்துப் படித்து முடித்து வந்தான். மீனவர் முன்னேற்ற சங்கம், எல்லோருக்கும் கல்வி என்று பிரசாரம் செய்தான். வாசகசாலை என்ற ஒன்றை மேட்டுத்தெரு ஆட்களுடன் சேர்ந்து கோயிலுக்குப் பின் ஸக்கிரிஸ்தான் வீட்டுக்குப் பக்கத்தில் கோயிலுக்குச் சொந்தமான ஒரு குடிலில் தொடங்கச் செய்தான். இவனும் அந்த மேட்டுத்தெரு ஆட்களைப் போல் சட்டை, வேட்டி அணிந்து சென்று நாகரிகமாக மாலை நேரங்களில் படிக்கப் போனான். மொடுதவத்தின் ஒன்றுவிட்ட தங்கச்சி, குளோரிந்தாளுக்கு மான்யுவலைக் கட்ட நிச்சயம் செய்திருந்தார்கள். அவள் ஆல்பர்ட்டைத்தான் கட்டுவேன் என்று சொன்னாளாம்.
“கடல்மேல் போற தொழிலாளி, மேட்டுத்தெரு ஆளைப் போல நாகரிகம் படிக்கான்! இந்தச் சிறுக்கிமவ அவனைக் கண்ணடிக்கா...” என்று கிளர்ந்த மான்யுவல், குடித்துவிட்டு வந்து அவனை அரிவாளால் வெட்டி மணலில் சாய்த்து விட்டான்.
மீனைத் தட்டி விட்டுக் குளிக்கக் கிணற்றடிக்குச் சென்றவன், அந்திசாயும் நேரத்தில் ரத்தக்குளத்தில் அத்தமன சூரியனைப் போல் விழுந்து கிடந்தான். உள்ளூற ஒரு பெண்ணே அவன் மனவெழுச்சிக்குக் காரணம். அவர்களுடைய உதிரத்தில் நீராகவும் காற்றாகவும் சேர்ந்துவிடும் கடலின் சாரம், நிலையில்லாக் கொந்தளிப்புகளுக்கும் சடுதியில் உணர்ச்சி வசப்பட்டுச் செயல் புரிவதற்கும் ஆளாக்கிவிடுகிறது. மான்யுவலுக்குச் சட்டம் ஆயுள் தண்டனை விதித்தது. பாளையங்கோட்டையிலோ, எங்கோ சிறையிலிருப்பான். இவ்வாறு எவ்வளவு கொலைகளைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கின்றனர்?
அவர்கள் இதற்கஞ்சி, உயிருக்குப் போராடிப் பிழைத்த நிலையில் ஓடி வருகின்றனர்.
ஊரின் மையவாடியைக் கடந்து வருகையில் பனந்தோப்பில் முதலில் அமலோற்பவத்தையும் வட்டக்காரரையும் தான் பார்க்கின்றனர்.
“எங்கேந்து இந்தத்தாவுல ஓடி வாரீம்? ஒங்கக்க ஆத்தா, அப்பன் புள்ளங்கள்ளாம் விம்மலும் பொதுமலுமா இருக்கா...” என்று அமலோற்பவம் வரவேற்கிறாள்.
“மரியானக்க ஆத்தா, நா முச்சூடும் தவதண்ணி பல்ல படாம, மலக்கமா வுழுந்திற்று. பொறவு, பல்லக் கிடுக்கியால தொறந்து கோப்பித் தண்ணி ஊத்தினாங்க. பய சோறு நீரெதும் கொண்டு போகாம, சுழலில போயிட்டான்னு அலவாய்க்கரையில நின்னு அழுகா...”
இறைச்சித் துண்டம் கண்ட காக்கைகளைப் போல கூட்டம் அவர்களைச் சூழ வருகிறது. அவர்கள் வெற்றி வீரர்களைப் போல் ஊரில் நுழைகின்றனர்.
கடல் நாச்சி அழிக்கும் ஆவேசத்துடன் பொங்கிய போதும் எதிர் நின்று தலை வணங்கி அவள் கனிவைப் பெற்றுத் திரும்பியிருக்கின்றனர். கோயிலில் பூசை முடித்துச் சாமி அப்போதுதான் வெளியே வருகிறார். எட்வின் கோயிலுக்கருகிலிருந்து வந்து விட்டான். எல்லோருக்கும் முன்பாகச் சென்று சுழலியை எதிர்த்து வெற்றியோடு திரும்பிய வீரர்கள், “வாழ்க!... வாழ்க சொல்லுங்கலே!” என்று முழக்குகிறான். நசரேன் ஆத்தா யேசம்மா, ரோசிதா எல்லாருக்கும் அழுது முகம் வீங்கியிருக்கிறது. மரியானின் ஆத்தாளை அடையாளமே தெரியவில்லை. சேலை அலைந்து குலைய, முடி பிரிந்து தொங்க, சித்தம் பேதலித்தவளைப் போல் தோன்றுகிறாள். அவர்களை வெறித்துப் பார்க்கிறாள். “உண்மையாம்படியே மரியானும் நசரேனுமா?...”
மரியான் உருகிப்போய் அவள் தோளைப் பற்றிக்கொண்டு மணலில் நடந்து செல்கின்றான்.
வீட்டில் திருவிழா மகிழ்ச்சி கரை பாய்கிறது. பெஞ்ஜமின், சந்தியாகு, குருஸ், ரொசாரியோ, ஐசக்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். பெண்டுகளுக்கும் பஞ்சமில்லை. நசரேன் அவன் வீட்டுக்குப் போகிறான். மரியான் முன் முற்றத்தில் குந்தி, ஒவ்வொருவரும் கொண்டுவந்து கொடுக்கும் உபசாரத் தீனியைத் தின்று கொண்டு தான் மரத்தோடு பிணிந்து கொண்டு உயிர் தப்பியதை விவரிக்கிறான்.
வெற்றிலை, புகையிலையைக் கேட்டு வாங்கிப் பகிர்ந்து கொண்டும் சுருட்டைப் புகைத்துக் கொண்டும், மணலில் துப்பிக் கொண்டும் அவனுடைய அநுபவங்களைச் செவிமடுக்கிறார்கள். ஒரு கடல் தொழிலாளியின் வாழ்வாகிய அலைமோதும் ஏற்ற இறக்கங்களில், இத்தகைய அநுபவம் வானத்து வெள்ளி போல் வந்து எய்துவதாகும். அந்த நட்சத்திரமேந்திய வீரனின் திரண்டதோளை வைத்த கண் வாங்காமல் பார்க்கக் கூடிய இளம் பெண்கள் சிலரும் அந்த முற்றத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிராமலில்லை.
“மச்சானும் மாப்பிள்ளையுமா, அம்புட்டு மீனையும் விடிஞ்ச கரைக்காரனுக்கா போட்டுப்பிட்டு வந்தீங்க?”
“அங்கே குடி மவ சண்டை. ஒரு பாட்டி எனக்கு உரிமைங்கா. இன்னொரு பாட்டி அவெக்கு உரிமைங்கா. நாம கடல்ல பிழைச்சிக் கரை வந்தம். கொலவுழும் எடத்தில இருக்காண்டாமிண்டு ஓடி வந்தம். மேலக்கிதான் போயி, மரத்தைத் தள்ளிட்டு வார வேணும்.”
“ஆனானப்பட்ட கடல், அதுவே ஒரு வரச்ச வரய்க்கி நிக்கி, மனுசன் ரோதமும் அசூயையும் வெறியும் ஏலாமையுமா ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிடுதான்...” என்று கூறும் அப்பன், தத்துவார்த்தமானதொரு நோக்குடன் சூனியத்தை வெறிக்கிறான்...”
“ஆமா? இங்கியும் நாம ரோசனை பண்ணிப் பார்க்கணும். சாமி இன்னிக்குப் பூசையில் கூட அறிக்கை வாசிச்சாரு. துவி குத்தவைக்காரருக்குக் கொடுக்காதவரெல்லாமும் இன்றறுதி துவி வித்தபணமும், அவதாரம் அறுபது ரூபாயும் கெட்டிப் போட்டு, கோயிலுக்கோ, திருச்சபைக்கோ துரோவம் செய்யாத நெல்ல கிறீஸ்தியானிகளா மாறணுமிண்டு வாசிச்சாரு...” என்று அங்கே வந்து குந்தியிருக்கும் மொடுதவம் கூறுகிறான்.
பெஞ்சமின் சுருட்டுச் சாம்பலைத் தட்டிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொள்கிறான். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அங்கே கூடியிருக்கும் பல இளைஞர்கள் எதுவும் பேச இயலாதவர்களாக இருக்கின்றனர். கோயில் குத்தகைக்காரரிடம் துவி கொடுக்காமலிருப்பதனால் ஏற்படும் ஆதாயத்தை உணர்ந்து பெஞ்சமினை அவர்கள் ஆதரிப்பவர்கள். ஆனால் மரியான் பேசுகிறான், சாவதானமாக லோட்டாவிலுள்ள இனிப்பு நீரைப் பருகிவிட்டுச் சொற்களைக் குழப்பாமல் கூறுகிறான்.
“இப்பம், நாங்க மாதாவுக்கு ஒரு துரோவமும் செய்யலேண்டு நிரூபமாயிருக்கி, நாங்க செஞ்சது நாயமிண்டு தெய்வம் ஒப்புக் கொடுக்குண்ணு ஆயிற்று. அல்லாம இருந்தா, ஆராளிக் கடல்லேந்து நாங்க கரய்க்கி வந்து இப்பம் இங்கிய பேசமாட்டம். சாமி சொன்னபடி அவுராதம் கெட்டணுமிண்டு நினைக்கிற வங்கல்லாம் கோவமில்லாம ரோசிச்சிப் பார்க்கணும். நாமெல்லாரும் ஒத்துமயா நிண்ணா, கடல் தொழில் செய்யும் நமக்குத் தான் லாவம், நமக்குத்தான் மேன்மை. வெள்ளைச் சட்டை போட்டு ரீடிங் ரூம்பில படிக்காண்ணு ஆல்பர்ட் பயல மானையுவல் வெட்டிப் போட்டான். ஆருக்கு லாவம்? நமக்கு கவுரமா, நாலுபேரு சங்கிக்க இருக்கணுமிண்டு எல்லாருக்கும் ஆச இருக்கு. அதுக்குத் தக்கன நாம நடக்கவும் வேணும் இல்ல? ஒருத்தனுக்கு வாழு கொறயாப் போச்சுண்ணா மொத்தப் பேருக்கும் நன்ம கூடாதுண்ணு சொல்றதக் காட்டியும் எல்லாருமே நல்ல படியாயிருக்கணுமிண்டு நினைக்கிறது சரியில்லியா?”
“இவெ, நேத்துப் பெறந்த பய எம்மாட்டுக் கதெக்கான்!” என்று அப்பன் பெருமிதமடைகிறான்.
“மக்கா, இம்புட்டுப் பேசனது போதும். அவெவ சோலியப் பார்க்கட்டும் போயி! நாளத் தொழிலுக்குப் போகண்டாமா?...” என்று கேட்கிறான். முணமுணப்புடன் அவர்கள் எழுந்து செல்கின்றனர்.
ஆத்தா இவனைக் கண்டபின் வெள்ளாட்டு இறைச்சி வாங்கி வந்து ஆணம் வைக்கிறாள். பப்படம் பொரிக்கிறாள். பண்டியல் சாப்பாடுபோல் உண்டு மகிழ்கின்றனர். அப்பன் நிறைவுடன் இளைப்பாறப் படுக்கிறார். ஆத்தாளும் நடு வீட்டில் முடங்குகிறாள். மேரி, புறக்கடையில் விறகைக் காயவைத்து, ஈரச் சாக்கை உதறிப் போட்டுக் கூட்டுகிறாள். கடலின் அலைகளின்மேல் வானத்து மேகங்களின் நிழல் படிகிறது.
மரியானுக்குப் படுத்தாலும் படுக்கை கொள்ளவில்லை. புறக்கடைப் பக்கம் வருகிறான். தாழ்வரைக் கூரையும் தடுப்புக் கீற்றுகளும் சேதமடைந்து தட்டு முட்டுக்களும் வலைத்துண்டுகளும் பழையதாகி ஒடிந்த நார்க்கட்டிலும் மேரிக்கு ஒழுங்கு செய்ய வாய்ப்பளிக்கின்றன. அப்போது அங்கே அந்தப் புறக்கடை வாயிலில் ஏலி வந்து நிற்கிறாள். அவளுடைய கண்ணீர் வடிந்த கன்னங்களும், சீவியிராத கூந்தலும், அவனைத் திடுக்கிடச் செய்கின்றன. அவனையும் மீறி, அந்தப் படியிறங்கி, காற்றில் நடுங்கும் தளிராக நின்ற அவளை ஆதரவாகப் பற்றிக் கொள்வதை மேரி பார்த்துத் திகைத்து நிற்கிறாள்; கடலும் காற்றும் வானும் சாட்சிகளாகப் பார்க்கின்றன.
“புள்ள... புள்ள... ஒங்கக்க மவெ... மாதாவே...!”
விம்மல் நெஞ்சைப் பிளந்து கொண்டு வருகிறது.
அவனால் எதுவும் பேச முடியவில்லை. அந்தச் சிசு, அவன் தனது உடலின் அணுக்களால் உருவானதென்று நம்பிய பூஞ்சிசு, மரித்துவிட்டது. அவளுடைய சோகத்தைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வை வெளியிட அவனுக்குச் சொற்கள் இல்லை.
“ஒங்கக்க மவெ ஞானஸ்நான மில்லாம இருட்டு ஸ்தலத்துக்குப் போவு என்னியல்லாங் கெனாக்கண்டே! புள்ளக்கி வெள்ளயுடுப்புப் போட்டு, கோயில் சுரூபமெல்லாம் வத்தி எரிய, எல்லா மணியும் அடிக்க, ஒங்கக்க ஆத்தா கும்பாதிரி ஆத்தாளாயிக் கையிலவச்சிக்க, சாமி நெம்பப் பரிமளத் தயிலமும் நீரும் வச்சி, இஸ்பிரி சாந்துவைக் கூட்டிப் பேரு சொல்லணுமிண்டு... எல்லாம் வெறும் கனவாப் போச்சி...”
“போனாப்போவு. அளுகா புள்ள” என்று ஆறுதல் கூற முற்பட்டாலும் அவனுக்கு நாவில் தடை கட்டினாற்போல் சொற்கள் எழும்பவில்லை.
‘போனால் போகிறது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்று சொல்வானா?
கூரை பெயர்ந்த அந்தக் குடிலில், ஒரு கீற்றின் மேல் துணிக்கந்தையைச் சுற்றி வைத்து, ஏனம் கவிழ்த்து மூடிவிட்டு வந்திருக்கிறாள். அவள் அதை எடுத்துக் காலன் திருகி எறிந்த அப்பூம் பிஞ்சைக் காட்டியதும் அவன் நெஞ்சம் பிரிய, “மாதாவே!” என்ற சொல் எழும்புகிறது. கூரையில்லா வாரிக் கல்லில் காகம் ஒன்று உட்கார்ந்து, இந்த வீட்டில் ஒரு உயிரில்லாப் பிண்டம் இருக்கிறதென்று கூவுகிறது.
இரண்டு அழகிய சம்மனசுகள் விளங்கும் பெட்டியில் அவை வைத்து வெண்ணுடை தரித்த அப்பன் அப்பூவுடலை ஏந்திச் செல்லவில்லை; வழியில் உப்பும் மிளகும் வாரி இறைக்கவில்லை. மண்ணையும் குழியையும் யாரும் மந்திரிக்கவில்லை. அங்கே பக்கத்திலே மரியான் குழி வெட்டினான். சிசுவை இறக்கி மண்ணைப் போட்டார்கள். அப்போது மாலைப் பூசைக்கான மணி முழங்கிக் கொண்டிருந்தது.
பங்குக்குரு சேவியர், தமது பங்களாவின் மாடி முகப்பிலுள்ள வராந்தாவில் தம்மைப் பார்க்கவந்த அன்புத் தோழன் ஜேம்ஸுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஜேம்ஸும் அவரும் பிரகாசபுரம் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாளிலிருந்தே ஒத்த தோழர்கள். பிறகு கல்லூரிக்குச் சென்று படிக்கையில் விடுதியில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர். ஜேம்ஸ் தூத்துக்குடியில் ஏற்றுமதி வியாபாரத்தில் பொருளீட்டிய செல்வக் குடும்பத்தில் பிறந்த பையன் படிப்பில் அத்துணை கெட்டிக்காரனல்ல. என்றாலும் அவன் பொறியியல் கல்வி பயின்று பட்டம் பெற்று, கல்பாக்கம் அணு மின் நிலையக் கட்டிட நிர்மாணப் பணியில் அமர்ந்திருக்கிறான். மனைவியும் பட்டம் பெற்றவள். அவளும் செல்வக் குடும்பத்தில் உதித்தவள். இளம் மனைவியுடன் உவரியூருக்கு வந்தவன், அணிமையில் கன்னிபுரத்தில் சேவியர் பங்குக்குருவாக இருப்பதறிந்து பார்க்க வந்திருக்கிறான். இரண்டு வயசுப் பெண் குழந்தையொன்று அவர்களுடைய இல்லற வாழ்வில் பூத்த புதுமலராக விளங்குகிறது.
சேவியருக்கு, இந்தச் சிறு வயதில் உலக இன்பங்களைத் துறந்து கிறிஸ்து ராஜனின் புகழையும் அருளையும் பரப்பும் குருப்பட்டம் பொறுப்பாக வந்தது ஓரளவுக்குக் கட்டாயமென்று தான் கூறவேண்டும். அப்பன் குடிகாரன். பன்னிரண்டு மக்கள். கடலிலிருந்து சிப்பிகளை அரித்தெடுத்து நீற்றித் தொழில் செய்யும் ஏழைக் குடும்பம். வாழைத் தோட்டத்திலோ வெற்றிலைக் கொடிக்காலிலோ அம்மை கூலி வேலை செய்யப் போவாள். இந்தப் பையன் எதற்கும் தெம்பில்லாத நோஞான். ஐந்து வயசு வரையிலும் அந்தோணியார்* பட்டத்தலையும் ஒரு காதில் மாதா வாளியும்# இன்னொரு காதில் ராயப்பர் வாளியுமாகச்$ சூணா வயிறும் பின் தங்கி நழுவிய கைகளுமாகவே இருந்த பிள்ளை. இவன் மீது முதலில் பள்ளி ஆசிரியையாக இருந்த ‘ஸிஸ்டர் அருள்மேரி’ அன்பைப் பொழிந்து இவன் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினாள். அவளுடைய ஆர்வமே அடித்தளமமைத்துப் பள்ளிக் கல்வியில் அவனை உயத்திச் சென்றது. பிறகு அங்கே பங்குக்குருவாக இருந்த கபிரியேல் சுவாமிகள் இவன் படிப்பிலும் மேன்மையிலும் உவந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டார். அந்த ஊரிலிருந்து இவர் குருப்பட்டம் பெற்று ஊர்ப்பேரை விளங்க வைக்க வேண்டும் என்பது அவருடைய அருளாசையாக இருந்தது. அந்த நாட்களில் இவனுக்குத் தனித்துச் சிந்தனை செய்யத் திறனேது? சாமி என்றால் தனி மதிப்பு. பங்குக்குரு என்றால் ஊரின் ஆட்சியே கைக்குள் அடங்கியது போன்றதோர் கௌரவம். இவ்வாறு மிடிமையும் சிறுமையும் நிறைந்த பிறந்த இடத்துக்குரிய கொச்சை மொழிகளையும், அசுத்தங்களையும், நாகரிகமற்ற நடவடிக்கைகளையும் அவர் கல்லூரிக்குச் சென்ற நாட்களிலேயே மறந்து போனார். குருமடத்தில் குருபட்டத்துக்கான பயிற்சி பெற்றுக் குருவாக வந்த பிறகு, இவருக்கு அந்த மக்கள் தம்மைச் சுற்றி இருந்தாலும், உள்ளூற வேறுபாடும் வெறுப்புமே மிகுந்திருந்தன. நாகரிகமாகப் பேசும் மேட்டுக் குடிமக்கள் சிறுவர்களே இந்தச் சாமியிடம் ஒரு புன்னகையேனும் பெற இயலும். முதல் ‘கிளாஸ்’ ஞான ஸ்நானம் - முதல் கிளாஸ் திருமணம் - முதல் கிளாஸ் - சாவிலும் கூட. அதற்கான கிரியைகளிலும் கூட நெறிமுறையாக்கப்பட்டிருந்தது. அந்த மேல் வகுப்புக்குரிய கட்டணத்தை வைக்காதவருடைய சடங்குகளுக்கு சாமி வரமாட்டார். ஸக்கிரிஸ்தானே அறிக்கை வாசிப்பது போன்ற கடமைகளை நிறைவேற்றி விடுவான்.
(* அந்தோணியார் பட்டம் - அந்தோணியாருக்கு வேண்டிக் கொண்டு குறிப்பிட்ட வயது வரையிலும் விளிம்பில் வரைகட்டி மொட்டைபோடும் பிரார்த்தனை.
# மாதா வாளி $ ராயப்பர் வாளி - மாதாவுக்கும் ராயப்பருக்கும் நேர்ந்து கொண்டு செவிகளைத் துளைத்துப் போடும் சிறு வளையங்கள்.)
ஜேம்ஸையும், அவனுடைய இளம் மனைவி குழந்தையையும் வரவேற்று அந்தப் பிற்பகலின் ஓய்வு நேரத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். உள்ளே ‘சீசப்பிள்ளை’யாகிய பணியாளன் தாவீது, தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது, அந்தப் பங்களா வாசலில், வராந்தாவில் ஒரு கூட்டம் புருபுருத்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் வந்து நிற்கிறது. சாமி அதைக் கவனித்தும் கவனியாததுமாகப் பழைய நண்பர்களைப் பற்றியே அளவளாவிக் கொண்டிருக்கிறார்.
தாவீது குரல் கொடுக்கிறான்.
“உள்ளே வாங்க; டீ சப்பிடலாம்...”
இவர்கள் தேநீருக்கு எழுந்திருக்கு முன் மாடிப்படியில் அவர்கள் ஏறி வரும் ஓசை...
சாமி விரைந்து படிக்குச் செல்கிறார்.
“சாமி... சாமி...!”
“வாழ்ளம் விழ்தேன்... வழ்லையும் விழ்தேன்... வாளா வழ்ல... பு...ண...யும் விழ்தேன்...”
ஒருவன் மூக்குமுட்டக் குடித்து ஆடிக்கொண்டும் குரல் இழைந்து தடுமாறியவனாகப் பாடிக் கொண்டும் அவர் காலைப் பற்றிக் கொள்கிறான்.
சாமியார் உதறுகிறார். “சீ, போடா! பட்டப்பகலில் திருட்டுச் சாராயத்தைப் போட்டுவிட்டுச் சாமியாரையே வந்து தாக்குகிறீர்கள்! இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் தெரியாது! எவ்வளவு பணம் சம்பாதிக்கட்டும்? அத்தனையும் குடி. டேவிட்! இவர்களை வெளியே கடத்தி விட்டு வா!”
தாவீது அவர்களைப் படிக்கப்பால் பிடித்துத் தள்ளி விட்டுக் கதவைப் போடுகிறான்.
“சை... என்ன இது? ஃபாதர் கிட்டக் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நடக்கிறாங்க?” என்று நண்பனின் மனைவி அதிசயப்படுகிறாள்.
“இப்படித்தான். திருப்பலிப் பூசைக்கு வரமாட்டாங்க. வந்தாலும் வெளியே நின்னிட்டுப் போவாங்க. வாயில வந்ததும் பேசுவாங்க. அதற்கும் மேலாக இப்போது திருச்சபைக்கென்று விதித்திருக்கும் மகமை கூடக் கொடுக்க மறுக்கிறார்கள். பாருங்கள், இப்படிக் குடிக்கிறார்கள். கோயில் வரிக்கான கொஞ்சம் மீன், கொடுக்கமாட்டோமென்று எதிர்க்கிறார்கள். அவர்களுக்குள்ளாவே வெட்டி மடிவார்கள்... ரொம்ப மோசம்...”
“எல்லாருக்கும் நல்ல எஜுகேஷன் கொடுக்கணும் ஃபாதர்” என்று இயம்புகிறாள் அவள்.
“கொடுக்கணும். கவர்மெண்டும் என்ஃபோர்ஸ் பண்ணணும். இப்போது திருச்சபையே தருமத்தில் இயங்குகிறது. திடீரென்று இந்த ‘மார்க்ஸிஸ்ட்கள்’ வேறு சந்து எங்கே பொந்து எங்கே என்று புகுந்து விஷவித்தை வைக்கிறார்கள். அவங்க முதல் ‘டார்ஜெட்’ அங்கிபோட்ட நாங்கள்தான்...”
தாவீது திரும்பி வருகிறான்.
“என்ன, போனாங்களா?”
“அவங்க போவாங்களா? யாரோ இறந்து போயிருக்கிறாளாம். அந்திமத்துக்கு சாமி வரணுமாம்...”
சாமி மாடி முகப்பிலிருந்து எட்டிப் பார்க்கிறார்.
எட்வின் தேர்ந்தெடுத்த வசை மொழிகளை உதிர்க்கிறான்.
ரொசாரியோ, “சாமி தோத்திரம். திருச்சபையைச் சேர்ந்த பிச்சியமுத்துவின் பெண்சாதி மரிச்சுப் போனா. அடக்கம் செய்யணும் சாமி...!” என்று உரக்க மொழிகிறான்.
“இப்பம் மட்டும் சாமி வேணுமோ? நீசப்பயங்க...!” என்று மறுமொழி உதிர்த்துவிட்டு, நண்பர்களிடம், “வாருங்கள் டீ சாப்பிடலாம்” என்று அழைக்கிறார் பங்குக் குரு.
மேசையின் மேல் நல்ல விரிப்பு இலங்குகிறது. ‘பந்தோல்’ எனப்பெறும் இனிப்புப் பண்டம், கூடங்குளத்திலிருந்து வந்த ரொட்டியைத் துண்டாக்கி வெண்ணெயும் பழப்பாகும் தடவி வைத்த கூறுகள், மிக்ஸ்சர் வாழைப்பழம் எல்லாம் மேசையை அணி செய்கின்றன. பூப்போட்ட பீங்கான் கிண்ணங்களில் தேநீரை வடிக்கிறான் தாவீது.
சாமியார் வெளியில் உள்ள கூட்டத்தை மறந்துபோக முயலுகிறார். ஆனால் கூட்டம் அவ்வாறு கலைந்துவிடவில்லை. வாயிலை விட்டுப் பின்புறம் தோட்டத்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறது. பெஞ்சமின் பின்வாயிலில் வந்து நிற்கிறான். ஸக்கிரிஸ்தானையும் கூட்டிக் கொண்டு வந்து அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு இவன் நிற்கிறான்.
தோட்டம் எவ்வளவு பெரியது? கிணற்றிலிருந்து மின் இறைவைப் பொறி ஆகாயத்தொட்டியில் தண்ணீரை நிரப்புகிறது. கீழே ஒரு பெரிய தொட்டி. தென்னை, வாழை, முருங்கை என்று தோட்டம். அரளி மலர்கள் கொத்துக் கொத்தாக அலர்ந்திருக்கின்றன. தோட்டத்தில் பெரிய கோழிக்கூடு, பன்றிக்கென்று ஒரு சிறு கட்டிடம். வைக்கோல் போர்; மாட்டுக் கொட்டில் - கூண்டில் வான் கோழி ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. ஒரு வேலைக்காரப் பெண் சாமான் கழுவிக் கொண்டிருக்கிறாள்.
ஒரு சாமியாருக்கு இத்துணை மாட்சிமை... என்று பெஞ்சமின் கருதிக் கொள்கிறான்.
அப்போது சாமி ஸக்கரிஸ்தானுடன் வருகிறார்.
“ஸ்தோத்திரம் ஃபாதர்!”
சாமி அவனைப் புரிந்து கொள்கிறார். அவன் தான் அங்குள்ள எளியரை உசுப்பி இணைத்து வைத்திருக்கும் சக்தி என்ற எண்ணம் அவனைக் காண்கையிலேயே தோன்றுகிறது.
“எங்கே வந்தே? உங்களுக்குத்தான் கோயிலை மீறிப் போகும் துணிச்சலும் மேதைத்தனமும் இருக்கிறதே? இப்பொழுது மட்டும் சாமியார் வேணுமா?”
“ஃபாதர், அப்படி நீங்க ஒரேயடியாச் சொல்லிடக் கூடாது. திருச்சபையில் ஒரு பெண் மரித்திருக்கிறாள். நியாயமான கிறிஸ்தவர்; அவள் திருச்சபையை அவமதித்து எதுவும் செய்து விடவில்லை. நீங்கள் அவளுடைய அடக்கக் கிரியைக்கு வரலேண்ணா... சரியில்லை. நீங்க நினைச்சுப் பார்க்கணும் ஃபாதர்!”
அப்போது பிச்சமுத்துப்பாட்டா, சற்று எட்ட இருந்தவர் தள்ளி வருகிறார். “நீர் எங்களுக்குக் குருவாயிருக்கிறீர் சாமி! நீங்க வார இல்லேண்டு சொல்லலாமா?”
“இறந்தவர் யாரு?”
“இவர் சம்சாரம்.”
“இப்ப இதைக் கேட்கும் நீங்கள் யாரைக் கேட்டுக் கோவில் குத்தகைகளை அலட்சியம் செய்தீர்கள்? உங்களிடம் சாமி வந்து கெஞ்சணுமோ? ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு, இதெல்லாம் முக்கியம் என்று தெரியாதா? அப்போது நீங்கள் யோசித்தீர்களா? எத்தனை தடவை அறிக்கை கொடுத்தேன்? நீங்கள் கோயிலை எதிர்க்க வேணும், சாமியை எதிர்க்க வேணும் என்றே நிற்கிறீர்கள். மகமை நிறுத்தினால் கோயில் எப்படி நடக்கும்? காலம் காலமாக உள்ள ஒரு ஒழுங்கு. அதை நீங்களாக நினைத்து நிப்பாட்டுவதா?”
சாமியாரின் கறுத்த முகத்தில், சிவப்போடுகிறது. விறுவிறென்று போகிறார்.
“ஃபாதர், நாங்கள் கடலோடு மன்னாடிப் பிழைக்கிறோம். கோயில் எதிர்ப்பு சம்பந்தமாக நீங்கள் எங்களோடு கூட்டம் போட்டுப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடுங்க ஏற்பாடு செய்யிறோம்; பேசுதோம். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல. அதற்காக நீங்கள் இப்போது கோபிச்சி மையம் மந்திரிச்சு, மரிச்சவருக்கு நீங்க குருவாச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம மறுத்தா வீணாகக் கலவரம் உண்டாகும். நீங்க இப்பம் கிருபையோடு இத்தை நிறைவேத்த வேணும். மேலும் மரித்தவள் பெண். அவள் புருஷன் கடல் போய் தொழில் செய்பவருமில்லை. அவர் ஏலக்காரர். சிறிய வியாபாரி. தெறிப்பு சம்பந்தமாகப் பின்னே பேசுவோம். நீங்க இப்போது வரணும்...”
சாமிக்கு அவன் கூற்றில் நியாயம் இருப்பது உறைக்கிறது.
“கோயிலுக்கு இப்பச் சேரவேண்டியதெல்லாம் கட்டுங்கள். கொஞ்சம் விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். அவர்களை அனுப்பிவிட்டு வருகிறேன்...”
சாமியாருக்குத் தெளிவாக ஒரு உண்மை பளிச்சிடுகிறது.
இந்த பெஞ்ஜமின் வெளியுலகு கண்டவன். படித்து வேறு தொழிலும் செய்தவன். இவனிடம் மீனவர் நாகரீகமாக முன்னேற வேண்டும் என்ற கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அது கிறிஸ்தவத்தை ஒட்டி, அவர் மதிப்பது போல் கோயிலை ஒட்டி, பரம்பரை நம்பிக்கைகளை ஒட்டியதாக இல்லை. பங்குச்சாமியை விரோதமாக நினைக்குமளவுக்கு ஒரு விஷக்கருத்தை இவன் அந்தக் கவடறியா மக்களைத் தூண்டி விடப் பயன்படுத்துகிறான்.
இன்று துவிக்கட்டளை நின்றால், நாளை ஞானஸ்நானம், திருமணம், மரித்தோர் சடங்கு இவற்றுக்கும் பங்குச்சாமிக்கு எதற்குப் பணமும் வரிசையும் கொடுக்க வேண்டும் என்று தூண்டி விடமாட்டான் என்பது என்ன நிச்சயம்? சிறு பொத்தலுக்கு இடம்கொடுத்தால் படகைக் கவிழ்க்கும் அளவுக்குப் போகும். நன்மை தீமை, பாவக் கிரியைகளில் பயம் இவை மீறுமளவுக்கு விடக்கூடாது. ‘நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ என்று அவர்கள் மனம் திரும்பிவிடலாகாது. அதேசமயம்... அதே சமயம் சாமிக்குப் பிரச்னைதான்.
சாமி, மையம் மந்திரிக்க வருகிறார். குடிமகனாகிய நாசுவன் மேளம் எடுக்கிறான். குடை சுருட்டி, குடை பாவாடை எல்லாம் தொடர, ஸ்டெல்லாவின் சடலம் மந்திரிக்கப்பெற்று மையவாடிக்குச் செல்கிறது. குடிமகன் குழியைத் தோண்ட பெட்டியை இறக்கியதும் சாமியார் ஜபம் சொல்லி முதல் மண்ணைப் போடுகிறார்.
கார்த்திகை முடிந்து மார்கழி பிறந்ததுமே வாடைக் காற்றின் தணுப்பு அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கடல் தொழிலாளரைக் குறுக்கி நடுக்க வாட்டுகிறது. புயலில் கீற்றுப்போன தாழ்வரைகளைப் புதிய கீற்றுக்கள் போட்டுக் கட்டவில்லை. புறக்கடைக் கதவைச் சற்றுத் திறந்தாலும் அப்பன் கோபிக்கிறார். “யாருட்டீ கதவைத் தெறந்து போடுதீங்க? வாடைக்கொந்தல் தாங்க இல்ல...” என்று இரு கைகளையும் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறார். அந்தப் போர்வைக்குள் சார்லசும் முடங்கி இருக்கிறான். மேரி, செயமணி, பீற்றர் எல்லாரும் கட்டிப் பிணைந்து கொண்டு கவடில்லாமல் உறங்குகின்றனர். ஆத்தா கோழிமுட்டைச் சிம்னியைப் பெரிதாக்கிக் கொண்டு குசினிக்குச் செல்கிறாள்.
மரியானும் குறுகிக்கொண்டுதான் கிடக்கிறான். பழக்கத்தில் விழிப்பு வந்து விடுகிறதேயொழிய, ‘இந்தக் காலையில் படுத்திருக்கும் சுகம் துறந்து ஏன் தான் தொழிலுக்குப் போக வேண்டுமோ’ என்ற அலுப்பு மேலிடுகிறது. ஆனால்... படுத்து முடங்கிவிட்டால் தொழில் முடங்கும். தொழிலில்லை என்றால் ஏது வாழ்க்கை? காற்றின் ஓலமும் கடலின் இரைச்சலும் அவர்களுடைய வாழ்க்கையின் ஜீவாதார நிலைகள். கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக அப்பனும் மடிக்காரராகத் தொழிலுக்குப் போகிறார். ஒரு கணக்காக இன்னாருடைய மரத்துக்கென்று போவதில்லை என்றாலும் தேர்ந்த அநுபவம் வாய்ந்த தொழில்காரராகையால், எவரும் அவரைக் கூப்பிடுகிறார்கள். ரொசாரியோவுடனோ, ஐசக்குடனோ, அல்லது பெஞ்ஜமின் மரத்திலோ கூலி கிடைத்துவிடுகிறது. குடிக்கக் காசு வைத்துக் கொண்டு மீதி என்ன இருந்தாலும் அதைச் செயமணியிடம் கொடுத்து விடுகிறார். அவளிடம் போனாலும் மேரியிடம் போனாலும் காசு கரைந்து விடாது. மேரிக்கானாலும் கூடங்குளம், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி என்று யாரேனும் போனால், ‘நாடா, ஸ்லைடு, மணிமாலை’ என்று அழகுப் பொருள்கள் வாங்கிவரச் சொல்லும் ஆசை உண்டு. செயமணிக்கு அந்தச் சபலமும் கிடையாது. அவள் பிலப்பெட்டி முடைந்து காசு சேர்ப்பதுதான் வாழ்வென்றே நினைத்தாற்போல் அதிலேயே நாள் முழுவதும் ஈடுபடுகிறாள்.
அன்றாடம் ஐந்து ரூபாயேனும் தேறும். நசரேன் நடுக்கடலில் பேசியிருக்கிறான். எனவே, பணத்தைச் சேர்த்துக் கொண்டு விடவேண்டும். வாடைக் காலத்தில் அவ்வளவுக்கு மீன் படும் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப்பின் மாசி, பங்குனி ‘தங்காலம்’, நீரோட்டம் அடங்கிக் கிடக்கும். சிறு மீன்களை விட பெரிய மீன்களைத்தான் பிடிக்கப் போக வேண்டும்.
தூண்டில்... அல்லது திருக்கை வலை ‘பிரய்ந்தால்’ தொழிலுக்கு முடக்கமிருக்காது... திருக்கை வலைக்குத்தான் பணம். திருக்கை நிறைய விழக்கூடும்; அல்லது சுறாவும் விழலாம். துவி... நல்ல விலை. கல்யாணத்தைப் பற்றிப் பிறகு சிந்திக்கலாம்.
திருக்கை வலையைப் பற்றிக் கோட்டை கட்டிக் கொண்டு அவன் எழுந்து சில்லென்ற நீரில் முகம் கழுவிக் கொள்கிறான்.
குசினியில் ஆத்தா ஒரு முட்டை அவித்து வைத்திருக்கிறாள்? கோப்பி இறுத்துவிடும் போது அவன் அங்கே போகிறான்.
“மக்கா...” முட்டைத் தோட்டை உரித்தவாறு அவள் ஆந்தரிகமாக அவனை அழைக்கிறாள். அவனிடம் ஏதேனும் ‘சங்கதி’ சொல்ல வேண்டுமென்றால் தொழிலுக்குச் செல்லு முன்பான இந்த நேரத்தைத்தான் அவள் தேர்ந்து கொள்வது வழக்கம்.
“என்னம்ப்பு?”
ஆத்தா நிமிராமலே பேசுகிறாள்.
“நேத்து கூத்தங் குளியிலேந்து சந்தியாகு கொழுந்தியா வந்திருந்தா. அவ அக்கா மவ மேபல் பொண்ணை ஒன்னக்கக் கெட்டலாமிண்டு கேக்க வந்திருந்தா...”
அவனிடமிருந்து எதிரொலி பிரிகிறதா என்று பார்க்க நிறுத்துகிறாள். எதிரொலி வரவில்லை.
“பொண்ணு நீ கூடப் பாத்திருக்கே கோயில் திருநாளுக்கு வந்திருந்தா. கறுப்பில்ல. செவப்பாவே கட்டுமத்தியா இருக்கா. வேலை எல்லாம் செய்யிவா, ஆறு படிச்சிருக்கா. பத்துபவன் நகை போட்டு, சீதனமா ஆயிரமும் தரேங்கா. நமக்குத் தக்கனயான எடம். அப்பனெண்ணவோ அமலோர்ப்பவத்தும் மக ரூபி ரூபிண்ணு சொல்றாரு. அவ இங்கே சம்பந்தக்காரியாவாளா?...”
அவன் முட்டையைத் தின்றுவிட்டுக் கோபித் தண்ணீரைப் பருகிக் கொண்டு இருக்கிறான்.
“மக்கா, நீ நெல்லபடியா நல்ல பொண்ணைக் கட்டி மேம்மையா இருக்கணும். வூடு நெரச்சிப் புள்ளிங்க பெறணும்... நீ அந்த ஏலிச் சிறுக்கியிட்டப் போறத நிறுத்தலியேண்டு மனசுக்கு நெம்பச் சடவாயிருக்கு. அவ கெட்டு ஊறின பண்டம். நாம நெல்லது நினைச்சாக் கூட, மாதாவே அந்தப் பிள்ளைகூடத் தக்காம எடுத்திட்டா. மக்கா, ஆத்தா மனம் அப்பெ மனம் நோவ நடக்கக்கூடாது...”
மரியானால் அந்தச் சொற்கள் எதையும் ஏற்க இயலவில்லை. கடலின் மேலமர்ந்திருக்கையில் இரைச்சலின் மேல் தவழ்ந்து வரும் சொற்களாக நிலைக்காமல் போகின்றன.
ஏலியின் மீது என்ன குற்றம்? ஒரு பெண் ஒரு ஆணுக்கு இன்றியமையாதவளாக இருக்கிறாள். அவன் அவளுடன் சுகித்திருக்கும்படி ஒரு நேரம் வந்து விட்டது. அவள் அவனை நேசிக்கிறாள். அவள் அவனைத் தொட்ட பிறகு வேறு யாருக்கும் கதவு திறப்பதில்லை. ஸ்டெல்லா மாமி, திடீரென்று கைகால் வீங்கி மரணமடைந்த பிறகு, பிச்சைமுத்துப்பாட்டா இவளுடைய குடில் வாயிலில் தான் கிடக்கிறார். குடிலுக்குப் பன ஓலை போட்டு மண்பூசிக் கட்டி விட்டாள். அவனுக்கு அவள் மீண்டும் மக்களைப் பெற்றுத் தரமாட்டாளா? அவன் தொழிலுக்குச் சென்று திரும்புகையில் நேசமுகம் காட்டிக் குளிக்கச் சுடுநீர் வைத்து ஊற்ற மாட்டாளா?
‘ஒங்கக்க ஆத்தா புள்ளக்குக் கும்பாதிரி ஆத்தாளா இருக்கணமிண்டு ஆச’ என்று அவள் மொழிந்ததை அவன் ஆத்தாளிடம் கூறவே அஞ்சினான். ஆனால் யாரோ ஒரு தெரியாத மேபல் பொண்ணு... அவள் எப்படி இருப்பாளோ? ஒரு பெண் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள் - அல்லது பாதுகாப்பில் இருக்கிறாள் என்பதனால் மட்டும் ஆண்களைத் தூண்டில் இரை போல் ஆசை கொள்ளச் செய்யும் ஒரு ‘வீச்சத்தை’ மனசிலோ, உடம்பிலோ வைத்துக் கொள்ளாதவள் என்று சொல்ல முடியுமோ? அத்தகையதொரு தன்மை ரோசிதாவிடம் உண்டு. வேறு பல பெண்களிடம் அது இருக்கிறது. ஆனால் ஏலி... அவளுக்கு அது இல்லை.
அவள் வேறு ஆண்களுக்குத் தன்னை உடன்படும்படி செய்திருந்தாலும் அது அவளுடைய ஆதரவின்மையான நிலையால் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள்தாம். காவலில்லாத தோட்டத்தில் கள்ளன் புகுந்து கனியைப் பறித்தால் அது மரத்தின் குற்றமாமோ? அவனும் கூட அன்று சினிமா பார்த்துவிட்டுத் தனிமையில் அவளுடன் வந்திருக்கவில்லையெனில் அவள் வீட்டுக்குள் சென்றிருக்கமாட்டானாக இருக்கும். கிணற்றடியிலும், மீன் வாடியிலும் தென்படும் எத்தனையோ குமரிப் பெண்களில் வேறு எவளேனும் ஒருத்தியுடன் அத்தகைய சந்தர்ப்பம் நேரிட்டிருக்கலாம். ஏலி மட்டும் எப்படிக் குற்றமுள்ளவள்? அவளை ஏன் அவன் தனக்குரியவளாக மணம் செய்து கொள்ளக் கூடாது?
“ஏலி நல்ல பொண்ணுதா ஆத்தா. எனக்கு ஏலியாட்டு இப்ப வேற ஆரும் நல்ல பொண்ணிண்டு தோணல...”
வானில் குமுறிய மேகம் தலையில் வந்து விழுந்தாற் போன்று ஆத்தா அதிர்ச்சியடைகிறாள். ‘சிறுக்கி அம்மாட்டுக்கு மோகம் குடுக்க என்னக்க பயல என்ன செய்திருப்பா? மாதாவே?’ என்று மனசோடு குலுங்கிப் போகிறாள்.
“மக்கா, நமக்கு அது கொறவு. வேணாம். அந்தச் சிறுக்கிய மறந்து போயிறு. நம்ம வீட்டில மூணு பொட்டப் புள்ளய வச்சிட்டிருக்கம். சம்பந்ததாரியா நல்ல குடும்பத்துக்காரவ வராண்டாமாலே?”
மரியான் அமைதியாக வாயைத் துண்டினால் துடைத்துக் கொள்கிறான்.
“நசரேன் கடல் மேல நிண்ணு வாக்குக் கொடுத்திருக்கான். லில்லிப் பொண்ணை அவன் கட்டிப்பான்...”
“நாம் போன அண்ணிக்கு யேசம்மா மொவம் கொடுத்தே பேச இல்ல, நீ வேசப் பொண்ணைத் தொடுப்பு வச்சிட்டிருக்யேணுதா அவ பேச இல்ல...” ஆத்தா குமுறி வெடிக்கிறாள்.
அவன் செவிகளிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கோட்மாலில் கட்டிய வலைகளையும், மிதப்புக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு புறக்கடை வாயில் வழி இறங்கிச் செல்கிறான்.
வாடைக்காற்று சில்லென்று முகத்திலடிக்கிறது. ஆத்தா பிரமைபிடித்து நிற்கிறாள்.
இது ஒரு சாபக்கேடா?... குடிப்பழக்கமில்லை என்று உள்ளூறப் பெருமிதம் கொண்டிருந்தாளே? குடிகேடி, எங்கிருந்து சைத்தானாக வந்து சேர்ந்தாள்! தன் மகனுக்கு எவ்வாறு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடக்குமென்று கனவு கண்டிருந்தாள்! அப்பனோ, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்! இந்தப் பயல் இவ்வாறு ஒரு உறுதியில் நிற்கிறானென்றால் இடிந்து விடுவாரே!
வாலிபத்தின் இரத்தச் சூட்டில் ஆண்களும் பெண்களும் இவ்வாறு கூடிப்போவது நடப்பதுதான். ஆனால், கல்யாணம் என்ற பந்தத்துக்கு ஒப்பாக அது ஆகுமா?...
இப்படி இது வலுவடையும் என்று அவளுக்கு அந்நாள் தெரிந்திருந்தால் அவளுக்குப் பேறு காலமென்று அந்தப் பிண்டத்தை இழுத்துப் போடப் போயிருக்கமாட்டாளே? அவள் மகன் எங்கோ ஒரு பெண்ணுடன் சுகிக்கப் போகிறான் என்று அலட்சியமாக மட்டும் இருந்து விட்டாளே? குழந்தை வெளிவராமல் மரித்திருக்கும். அவளும் ஜன்னி கண்டு... மரித்திருப்பாள்... ஏசுவே!
அவளுடைய பாட்டனார் மூன்று பெண்களைக் கட்டினார். அவளுடைய தாயைத் தவிர மற்ற இருவரும் வயிற்றுப் பிள்ளை கீழே விழாமலே மரித்தார்களாம். வயிற்றிலே பிள்ளை மரித்து இழுப்பு வருவதும், பின்னால் பிழைக்காமல் தாயே போவதும் நடக்கக் கூடியதுதான்.
அவள் மரித்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை எல்லாம் அன்னையுள்ளம் எண்ணமிடுகிறது. நசரேனின் ஆத்தாளிடம் கிறிஸ்துமஸ் பண்டியலுக்குப் பிறகு மீண்டும் போய்க் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டும்; அதற்குள் பண்டியலுக்கு அந்தப் பெண்ணும் வருவாள்... என்றெல்லாம் நினைத்திருந்தாளே?
இப்போது... அவளை, அந்தச் சிறுக்கியைத் தன் மகனின் நல்வாழ்வுப் பாதையிலிருந்து எப்படி அகற்றுவது?
பொழுது வெளுத்துவிட்டது. கோழிகள் ஒவ்வொன்றாக முறை வைக்கின்றன.
அப்பன் எழுந்து உட்காருகிறார்.
“மக்கா...? மரியான் போய்விட்டானா? ஒரு கொரல் என்னியும் எளுப்பியிருக்கக் கூடாது?...”
போர்வைக்கடியில் சார்லசைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கிறார் மெள்ள.
“நீரு ஒறங்கிட்டிருந்தீரு; பய பயண்ணிரிம். அவெ பெரிய கல்லாத் தூக்கித்தலமாட்டில போட்டிட்டா... பாவிப்பய, வேசக்கழுதயப் புடிச்சிற்றுப் போவேண்றா, ஒம்ம புத்திதா ஒம் பயலுக்குமிருக்கி... எலே, வேணாம். மேபல் பொண்ணு அழவாயிருக்கா, பத்து பவுனும் போட்டு சீதனம் ஆயிரமும் குடுக்கோங்கா, தூமை குடிச்சான், வாணாமிண்ணு போறான், அவளக் கொல்லணும் போல நெஞ்சு ஆத்திரமாயிருக்கி. எம் பொன்னான பயல, கெடுத்து வச்சிருக்கா, மூதி...!”
அவளுடைய ஆற்றாமை அடங்கவேயில்லை.
“மாமி, எதுக்காவ விடியலிலேயே மாமாவைக் காச்சுறீம்!” ஐசக்கு பாய்த்தண்டு தோளில் தங்க, மணற்கரையில் நின்று மாமாவுக்குக் குரல் கொடுக்க வந்திருக்கிறான்.
“மாமாவை ஒண்ணும் பேச இல்ல. அந்த மூளி. எம் மவெக்கு வலவிரிச்சிப் புடிச்சிருக்யா. அந்த வலயக் கிளிச்செறிவ நா...” கடல் கொந்தளிக்கும் போது சீறுவது போல் சீறுகிறாள் அவள். ஐசக்கு சிரிக்கிறான்.
“மாமி மரியானண்ணய யா ஏசுறீம்?”
“ஆமா, அந்தப்பய குடிக்காம இருந்துதான் தப்பிதமாப் போச்சி. புருசன் இன்னொரு பொம்பிளகிட்டப் போயிரக்கூடாதுண்டுதா எல்லாப் பொண்டுவளும் இப்பம் அவளவுளுவளே சாராயம் வாங்கி வந்து வக்கிறாளுவ...” என்று அப்பன் எழுந்து சந்துப் பக்கம் இயற்கைக்கடன் கழிக்கப் போகிறார்.
கடல் - கரை, பாடு - தளர்வு - உடலின் வேட்கைகள் என்று மனிதன் எவ்வாறு முட்டி மோதுகிறான்!
காலையில் ஆத்தா மீன் வாங்கக் கரைக்குச் செல்கையில், ஏலி அலுமினியம் வட்டையில் வடையும் பணியமும் போட்டுக் கொண்டு கூட்டம் நிரம்பும் இடத்துக்கு வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். பிச்சைமுத்துப்பாட்டா ஏலம் கூறும் இடத்தில்தான் அவள் வழக்கமாக நகர்ந்து செல்வாள்.
இன்று அவள் வரும்போது அவளை எவ்வாறேனும் சண்டைக்கிழுக்க வேண்டும் என்ற கொதிப்புடன் ஆத்தா மணலில் குந்தியிருக்கிறாள். ஏலிக்கு அந்த அம்மையைப் பார்க்கையிலேயே முகத்தில் ஒளி பரவும். ஆனால் அணுகுவதற்கு இடமில்லாமலே ஆத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுப்புடன் நகர்ந்து போவாள்.
இன்று, ஏலிக்கு நெருங்கி ‘தோத்திரம்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆத்தா பேய்போல் அவள் மீது பாய்ந்து வட்டையை எகிறித் தள்ளுகிறாள். மணலில் வடைகள் சிதறி விழுகின்றன. அடுத்து அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்துக் கன்னத்தில் அறைகிறாள்.
“சாமி... சாமி... மாதாவே...” என்று அவல் அலற, கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளும், நண்டு பிடிக்கும் சிறுவர் சிறுமியரும், நோட்டுப் புத்தகமும் கையுமாக நிற்கும் வியாபாரிகளும், வட்டக்காரரும் ஓடி வருகின்றனர்.
“நாரச் செறுக்கி, ஊர்ப்பயலுவ மானமா வாழ முடியாம கெடுக்கா!...”
அவள் உடல் துடிக்கிறது. முடி அவிழ்ந்து அலங்கோலமாக விழுகிறது. சேலைத் தலைப்புக் கட்டவிழ்ந்து மணலில் புரளுகிறது.
வட்டக்காரர் நெருங்கி, “ஏனாத்தா இம்மாட்டுக் கோவம் அந்தப் பொண்ணுமேல?” என்று சிரித்துக் கொண்டு விசாரிக்கிறார்.
“ஒங்கக்க பயகிட்ட கோவிச்சிக்கறத வுட்டு, பாவம் அந்தப் பொண்ணு...” என்று யாரோ ஒருவன் எரிகிற கொள்ளிக்கு நெய் வார்க்கிறான்.
ஏலி துயரத்தை அடக்கிக் கொண்டு மணலில் காக்கை கொத்தச் சிதறிய பண்டங்களை மணலைத் தட்டி வட்டையில் போடுகிறாள்.
ஆத்தாளுக்கு வாய் ஓயவில்லை.
“தொலைஞ்சு போட்டி, எங்கியாலும் தொலஞ்சு போட்டி” என்று கத்துகிறாள்.
மரங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சைக்கிள் வியாபாரிகள் - கத்தியோடு துவிக் குத்தகைக்காரர் - ஒண்ணரைக்கண்ணன் - எல்லோரும் அவரவர் அலுவலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆயிரமாயிரமாய் ஆழ்கடல் உயிர்கள் துடித்துச் சாகும் மணலில் மனித மனத்தின் உணர்ச்சிகளும் குருதி முனையில்தான் கொப்புளிக்கின்றன. வட்டக்காரர், வியாபாரி, தொழிலாளி இவர்களுக்கிடையே எந்தக் கணத்திலும் வார்த்தைகள் தடித்துவிடக்கூடும். பணப் பிரிவினை - கொடுக்கல் வாங்கல்களில் மயிரிழையின் வித்தியாசத்திலும் கூடக் கொழுந்து விட்டெரியப் பகை உணர்வுகள் மூண்டுவிடும். இன்று மரங்கள் திரும்பி வந்து அந்த அரங்கின் திரை விலகு முன்பே ஆத்தா இந்தக் காட்சியைக் கடை விரித்துவிட்டாள். பிச்சமுத்துப்பாட்டா செய்தியறிந்து வந்து கத்தரினாளைச் சாடுகிறார்.
“உம்பயலைக் கலியாணம் கெட்டிப் பூட்டி வச்சிக்க. அத்தப் போட்டு அடிக்கே? அறிவு கெட்ட ஜென்மம்?...”
“நீ அழுவாத மகளே, இந்தக் கரையில மேலிக்கு யாரேனும் எந்தப் பேய் மவளேனும் உம்மேல கைய வய்க்கட்டும், ஒடிச்சி எறியுதேன்!” என்று கத்துகிறார்.
கடற்கரையில் மேலோட்டமாகக் கிளரும் உணர்ச்சிகளே எத்தகைய நாக் கூசும் சொற்களைக் காற்றிலே பரப்புகின்றன? ஆனால் அலைவாய்க்கரை இவற்றைச் சட்டை செய்யாமலே மேலும் மேஉம் தன் ஓலத்தையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அன்று எல்லா வலைகளிலும் மீன் விழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் களர் மீன்கள் - சூடை, பன்னாகத்தாழை என்று கலப்படமாகச் சில, மொத்தமாக ஆறு ரூபாய்க்குக் கூடத் தேறவில்லை. ஆத்தாளிடம், இரண்டு ரூபாய் மரியான் கொடுத்தான். ஒரே சண்டை; ஏச்சுகளும் வசைகளும், வீட்டுக்குள் நுழையப் பிடிக்காமல் மரியானை வெறுக்கச் செய்கின்றன. கடற்கரையிலேயே வலைகளைப் பிரித்துப் போட்டு, நூல் குச்சியுடன் உட்கார்ந்து விட்டான். ஜானும் வந்து சேருகிறான், வலைகளைச் சீராக்க. வலை பாரில் பட்டு ஒரு மூலையில் கிழிந்திருக்கிறது.
பனி வெய்யில் மாலை நேரத்தைப் பொன்முலாம் பூசிக் கொண்டிருக்கிறது.
“அண்ணே, தங்காலத்துக்கு முன்ன திருக்கை வலை பிரஞ்சுக்கணும். ஒருமால் நூலெடுத்திட்டு வந்தா, இங்கே நாமே கூலி கொடுத்துப் பிராஞ்சுக்கலாம்...” என்று ஜான் கூறுகிறான்.
அப்போது மணலில் புதைய புதைய நடந்து ஒருவர் அவர்களருகே வருகிறார். கருத்த முகம் உப்பியிருக்கிறது. மேலே பட்டுச் சட்டை; இடையில் வேட்டி உருமாலணிந்து கொண்டிருக்கிறார்.
“வாரும் வாரும் கும்பாதிரியாரே? தோத்திரம்; என்னம்பு இம்மாந்தூரம்?” என்று மரியான் வரவேற்கிறான்.
“உங்களத்தான் தேடி வந்தேன். வீட்ட அந்தப் பொண்ணுவதான் இருக்கி. ஆத்தா, அப்பச்சி ரெண்டுபேரையும் காணம். அப்பச்சிக்கு ஒடம்பு வாசியா? கடலுக்குப் போறாரா?...”
ஜான் நிமிர்ந்து பார்த்துவிட்டு தோத்திரம் சொல்கிறான். “ஆலந்தலை மாமனில்ல...?”
“ஆமா!... என்ன விசேசம்?”
“தெரசாளுக்குக் கலியாணம். வர ஞாயிறு ஓலவாசிப்பு...”
“மாப்ள எங்கிய...?”
“தூத்துக்குடி உப்பு ஆபீசில வேலையாயிருக்யா. படிச்சிருக்கிறான். எல்லாமே படிச்சவங்க. கடல் தொழில் ஆருக்குமில்ல.”
“சீதனம் என்ன குடுக்கீரு?”
“அஞ்சாயிரம், மாப்பிள்ளைக்குச் செயின் போடுறம். அவங்க வதிலுக்கு மச்சானுக்குச் செயினும் பொண்ணுக்கு மோதரமும் போடுறாங்க... நானும் தெரசாளக் கட்டிக் குடுத்திட்டு, பையங்கூடப் போயிரலாமிண்டிருக்கே. செலவுக்குப் பணமும் வேணம். அதனால இந்தப் பருவலையெல்லாம் வித்துப் போடுதேன்...”
மரியான் இப்போது நிமிர்ந்து அவரைப் பார்க்கிறான். அவர் மணலில் குந்திக் கொள்கிறார்.
“அதா, கோளாவலை வாளைவலை - திருக்கை வலை எல்லாம் மூணு செட்டு இருக்கி. ஒண்ணொண்ணும் எட்டுப் பீஸ் செட்டு. திருக்கை இப்பம் ஒல்லுனது - எட்டு நூறாச்சி...”
“திருக்கைய நா வாங்கிக்கிற மாமா. ஒரு வெல சொல்லிக் குடுத்திரும். தெரசாள நா கெட்டியிருந்தா சொம்மாவே குடுத்திருப்பீர்...” என்று மீசையைப் பல்லுக்கிழுத்துக் கடித்தவாறு சிரிக்கிறான் மரியான்.
“எடுத்துக்க. பறவாசிப்புக்கு வந்திற்று, வலையப் பாத்து எடுத்துக்க!...”
“மரம்?”
“மரம் ரொம்பப் பழசாப் போச்சி, கொங்கை ஒடஞ்சி ஒக்கப் பண்ணினது. அங்கியே நானூறுக்குக் குடுக்கறேன். வலையும் அவங்களே எடுத்துப்பாங்கன்னாலும் இங்கே வந்து ஒங்களை எல்லாம் பார்த்திட்டுப் போவமிண்டு வந்தே. ஊரை விட்டுத் தொலவாப் போயிற்றா வாரப் போவ முடியுமா?”
“எங்கே, தோமை எங்கே இருக்கானிப்பம்?”
“மட்றாசில அவந்தா வீடு கெட்டியிருக்கா. குவார்ட்டஸ் வேற குடுத்திருக்யா ரயிலில. இந்தப் பொண்ணைக் கெட்டிக் குடுக்கற வரய்க்கும் தான் கடல் பாடுன்னிருந்த...”
“அப்ப வாரும் வீட்டுக்குப் போவலாம்...”
வலைகளை ஜான் வசம் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு அவரை அழைத்து வருகிறான். இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இவருக்கு; எல்லோரையும் கட்டிக் கொடுத்து, படிக்க வைத்து, ஆளாக்கிவிட்டார். இவர் மனைவி சொத்துக்காரி. சீதனமாகத் தோப்பு, தோட்டம் வந்தது. இவரும் குடிக்க மாட்டார். அவளும் சிக்கனமாக ஆடம்பரமில்லாமல் வாழத் தெரிந்தவளென்று ஆத்தா சொல்வாள். பையன்கள் இருவரும் அப்போதே ஒருவன் பி.ஏ.யும், மற்றவன் எம்.ஏ.யும் படித்து விட்டனர். தோமஸ்தான் ரயிலில் வேலையாக இருக்கிறான். ஆன்ட்ரூஸ், காலேஜில் வாத்தியாராக இருக்கிறானாம். பெண்களில் மூத்தவள் திருநெல்வேலியில் இருக்கிறாள். மருமகன் பள்ளிக்கூட வாத்தியார். இரண்டாவது பெண் மதுரையில் இருக்கிறாள். மருமகன் மில்லாபீசில் வேலை செய்கிறான். இந்தத் தெரசாளை ஆத்தாள் தன் மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான்கு வருஷங்களுக்கு முன்னரே கேட்டிருக்கிறாள். ‘கடல் தொழிலாளிக்கு இவளை மட்டும் கொடுக்கணுமா’ என்று மாமி கூறினாளாம்.
ஆத்தாளுக்கு அந்தச் சொல்லே அவமதிப்பாகத் தோன்றியது. ஏன் மரியானும் கூட அப்போது அப்படித்தான் நினைத்தான். கடல் தொழில் செய்பவன் எந்த விதத்தில் குறைந்து போகிறான்? இவர்கள் நாலெழுத்துப் படித்து விட்டு வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு காலில் தூசி படாமல் மேனியில் காற்றுப்படாமல் ‘ரூம்பு’க்குள் உட்கார்ந்து வேலை செய்வது மட்டும் எப்படிக் ‘கௌரவம்’ என்றாகும்? அலை கடலில் செல்வதில் உள்ள ஆனந்தங்கள் அதில் உண்டா? மனிதர் வாடைவிட்டகன்று ஆழிக்கருநீலத்தில் மரம் ஆடியும் குதித்தாற் போல் வழுகியும் செல்கையில் மனம் கட்டுக்கடங்காததொரு பரவசப்பட்டு வானில் பறக்கும் புள்ளாக மாறும். ஆணாகப் பிறந்ததன் இலட்சியமே அந்த ஆண்டவன் அளித்திருக்கும் பலத்தையும் தசை வலியையும் இயற்கையின் வேகங்கள் எதிர்த்து வருகையில் ஈடு கொடுத்துக் கொள்ளும்படியாக ஒரு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதுதானல்லவா? நாள் முழுதும் பெண்பிள்ளை போல் நான்கு சுவர்களுக்குள்ளமர்ந்து கையையும் காலையும் மாவு பொம்மை போல் வைத்துக் கொள்ளவா ஆணுக்குப் பலமும் வீரியமும் ஆண்டவன் அளித்திருக்கிறான்?...
ஆத்தா வீட்டில் தானிருக்கிறாள். ஆனால் வாராது வந்திருக்கும் மாமனைக் கூட முகமலர்ந்து உபசரிக்கவில்லை. பூச்சிக்கடி பட்டாற்போல் சுணங்கிக் கிடக்கிறாள்.
மேரிதான் கோபியும் பழமும் வைத்து உபசாரம் செய்கிறாள்.
“கதரினாளுக்கு ஒடம்பு வாசில்லியா?...” என்று கேட்கிறார் அவர்.
“ஒடம்பு மனசு ஒண்ணுந்தா வாசீல்ல. நாங்கல்லாம் எழிமைக்காரவங்க. எப்படி எப்படியோ இருப்பம்...”
நிட்டூரமாக ஆத்தா வந்தவரைக் குத்தும் பேச்சு மரியானுக்குப் பிடிக்கவில்லை.
வெளியே தாழ்வரையில் அமர்ந்து ஊர் நிலவரம் பேசுகிறார்கள். அப்பன் கடலிலிருந்து வருகிறார். அவருக்கும் அன்று அதிகமாகப் பாடு இல்லை என்று தோன்றுகிறது. “ஆரு?...” என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்.
“சால்மோன் மாம... ஆலந்தலையிலேந்து வந்திருக்காரு. தெரசாளுக்குக் கலியாணம்...”
“அதுக்கென்ன? அவுங்கல்லாம் நமக்குச் சம்மதயில்லியே? பின்ன எங்கிய வந்தா?...” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.
மரியான் மாமனைச் சமாதானப்படுத்தும் வகையில் அவருடன் நடந்து செல்கிறான்.
வட்டக்காரர் வீடு வரையிலும் செல்கையில் திருக்கை வலையைத் தான் உடனே வந்து வாங்கிக் கொள்வதாகவும், பெரியவர்கள் நடத்தைக்காக மனத்தாபப்படுவதாகவும் சொல்லிவிட்டு வருகிறான்.
திரும்பி வருகையில் ஆத்தா பெருங்குரலெடுத்து அழ, அப்பன் அவளை அடித்துக் கொண்டிருக்கிறார். மேரியும் செயமணியும் செய்வதறியாமல் வாசலில் வந்து, “ஜெசிந்தா அக்கா? எட்வின் அண்ணே...” என்று கத்துகின்றனர்.
“அண்ணே... அப்பச்சி குடிச்சிட்டு ஆத்தாளைப் போட்டு அடிக்கி...” அவன் உள்ளே செல்கையில் அப்பன் வெறி தணிந்து கட்டிலில் விழுகிறார். ஆத்தா கண்ணீரைச் சிந்திக் கொண்டு அழுகிறாள்.
மரியானுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
“எதுக்காவ இப்பம் ஆத்தாளைப் போட்டு அடித்தீரு? ஒமக்கு அறுவு இருக்கா...?” என்று கத்தினான்.
“அவெவ வீட்டில அவெவ பொஞ்சாதிய அடிக்காம யாரை அடிப்பா? போ லே...” என்று திட்டுகிறார் அவர் பதிலுக்கு.
“போவட்டும், ஏனிப்பம் அளுது சாவறீங்க? அவரு கொணந்தா தெரியுமே? ஏன் வாக்கொடுக்கணும்?... வரவர ரொம்ப மோசமாப் போச்சி. வூட்ட ஆயிரமிருந்தாலும் வந்த விருந்தாளியிட்டவா காட்டுவீரு...? மரியாதயில்ல?...”
ஆத்தா பதிலுக்கு எதுவும் சொல்லாமல், மேலே சுரூபமிருக்கும் கண்ணாடி கூண்டின் பின்னிருந்து ஒரு கடுதாசியை எடுத்து அவன் முன் போடுகிறாள்.
அவன் துணுக்குற்று எடுக்கிறான். “ஏக்கி, மேரி, விளக்கேத்திக் கொண்டா!...”
“யாரு? லில்லியா எழுதிருக்கு? பண்டியலுக்கு வார இல்லையா?...” மேரி பெரிய சிம்னியை ஏற்றிக் கொண்டு வருகிறாள்.
கடிதம் இதுதான்...
“தேவரீர் அப்பச்சி, அம்மா, அண்ணன் எல்லோருக்கும் லில்லி வணக்கம் செய்து தோத்திரம் சொல்லிக் கொண்டு எழுதுவது. இப்போது நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸிஸ்டர் யோஸிலின், ஸிஸ்டர் ஃபிரான்ஸிஸ்கா ஆகியோர் என்னிடம் பிரியமாக இருந்து கவனிக்கிறார்கள். எனது எதிர்காலத்தில் மிகவும் கருத்துள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய அன்புமயமான வாழ்க்கையைப் பார்த்து எனக்கும் அதுமாதிரி இறைபணியும் தொண்டும் செய்து கொண்டு, கன்னி வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் மேலிடுகிறது! எத்தனையோ பேரைப்போல் திருமணம் செய்து கொண்டு நான் நித்திய நரகத்தில் விழ விரும்பவில்லை. கல்யாணம் செய்து கொள்வதும் பிறகு பிள்ளைகளைப் பெறுவதும், கள் குடித்துவிட்டு வரும் புருஷனிடம் அடிபடுவதும், அழுக்கும் மலமுமாகச் சீவிப்பதும் ஒரு வாழ்க்கையா?... நான் நாள்தோறும் ஜபம் செய்கிறேன். மேலே கல்வி கற்க விருப்பமாக இருக்கிறேன். நான் படித்து, துன்புறும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ‘மதர்’ எனக்கு இங்கே அறிவுரை கூறுகிறார். எனக்கு மேலும் மேலும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. மேலும் நசரேன் ஃபர்னாந்து என்னைப் பார்க்க வருவது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே, நான் பண்டியலுக்கு வந்தால் பாவத்தில் முழுகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் கிறிஸ்துமஸுக்கு ஸிஸ்டருடன் கோயமுத்தூர் போகிறேன். நான் மேலும் தோத்திரம் சொல்கிறேன். எனக்கு உங்கள் அருளாசியைத் தாருங்கள். என் அன்பை மேரி, ஜயமணி, பீற்றர், சார்லஸ் எல்லோருக்கும் தெரிவிக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு ஏப்ரல் மாசம் வருகிறேன்.
அன்பு வணக்கங்கள்
லில்லி இருதயம் ஜபமணி
அவன் சிறிது நேரம் சிலைபோல் அசைவற்றுப் போகிறான்.
கடற்கரை மீன்வாடியில் காக்கைகளின் சந்தடியும் வியாபாரச் சந்தடியும் அலைகளின் ஓசையும் எவ்வாறு ஒழுங்கின்மைக்கு மாதிரியாக விளங்குமோ அத்தகையதொரு கத்தலும், ஆவேச மொழிகளும் அந்தக் கூட்டத்தில் கலகலக்கின்றன.
பங்களாவிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில் சாமியார் அமர்ந்திருக்கிறார். சிலர் மணலில் குந்தியிருக்கின்றனர். சிலர் எழுந்து நிற்கின்றனர். வயிரமேறிய தசை தளர்ந்தாலும் இன்னமும் உறுதி குலையவில்லை என்று வீம்புடன் நிற்கும் கடல் தொழிலாளிகள், முகத்தில் மீசை அரும்பாத இளம் பிள்ளைகள், வாலிபத்தின் கிளர்ச்சியில் துடிக்கும் உதடுகளும் தோள்களுமாக எழும்பி நிற்பவர், பிறந்த மேனியுடன் மணலில் விளையாடும் சிறு குழந்தைகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றனர். பெண்கள் எட்டியுள்ள வீடுகளில் வாயில்களில் நின்றவாறு வேடிக்கை பார்க்கின்றனர். காவல்துறையினர் இருவரும் முன்னேற்பாடாக வந்திருக்கின்றனர்.
பெஞ்ஜமின் முடியைப் பளபளக்க வாரிக்கொண்டு, நீல சட்டையும் கைலியுமாக, அங்கே குழுமியிருக்கும் இளந் தலைமுறையினரின் ஒன்றுபட்ட கருத்தை வெளியிடும் குரலாக ஒலிக்கிறான்.
“ஃபாதர் யோசனை செய்வதற்கு இதில் ஒண்ணும் புரியாதது இல்லை. நாங்கள் பல தடவைகள் உங்களிடம் இது விஷயம் பேசிய பிறகுதான் நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம். முன்போல் வலை தட்டுமடி இல்லை. விலைகள் அதிகமாகிவிட்டன. வாழ்க்கைச் செலவு ரொம்ப உயர்ந்து போச்சு. எங்கள் பெண்களுக்குச் சீதனம் தந்து கல்யாணம் கட்ட முடிவதில்லை. ஒரு வலை செட் அறுநூறு, எழுநூறு என்று தொழிலுக்கே அதிக முதல் முடக்க வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்தில் துவி ஒரு அல்ப விலைக்குத்தான் போயிற்று. இப்பம்...”
சாமி அவன் முழுவதும் பேச விடாமல் குறுக்கிடுகிறார்.
“இதெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பயனில்லை. கோயிலுக்குச் சேர வேண்டிய வரிக்கு அந்த நாள் இந்த நாளிண்ணு கிடையாது. பங்குக் கோயில் உங்களுடைய ஆத்தும சீவியத்துக்காகவே ஏற்பட்டது. நீங்கள் பாவ வாழ்வு வாழாமல் நல்ல கிறிஸ்தவர்களாகச் சங்கையுடன் வாழ்ந்து மோட்சத்துக்குப் போக வேண்டும் என்பதற்காகவே சில விதிகளை, சவேரியார் சுவாமிகள் ஒழுங்கு செய்தார். கஷ்டப்பாடு என்று சொல்கிறீர்கள். கஷ்டப்பாடு உங்களுக்கு மட்டும்தானா? கஷ்டப்பாடுகள் என்று பாவ எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள்; உண்மையை மறைக்கிறீர்கள்; பொய் சொல்கிறீர்கள்; திருச்சபையும் பங்குக் கோயிலும் இன்றியமையாததாகின்றன. நிச்சயமாகத் தேவையாகின்றன.
ஆதியில் இந்தக் கடல்துறை ஊர்களில் மக்கள் இருந்த போதிலும் புனித சவேரியார் சுவாமிகள் வரும் காலம் வரையிலும் விசுவாச வாழ்வுக்காக நல்ல வழிகள் பற்றி மறை தழுவி எதுவும் தெரியாதவர்களாகவே இருந்தார்கள். விசுவாசப் பிரமாணம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், பத்துக் கற்பனைகள் இதெல்லாம் கற்றுக் கொடுக்கவும், பலி பூசை நிறைவேற்றவும் யாருமே இங்கு இல்லை. அவர் வந்த பிறகுதான் பரவர் விசுவாச வாழ்வில் மலர்ச்சி வந்தது. அந்தக் காலத்தில் மக்களாகவே ஒப்புக் கொண்டு கோயிலுக்கும் பங்குக்கும் இந்த வருமானங்களில் பங்கென்று பட்டயம் எழுதி வைக்கப்பட்டது. உங்களுடைய வரிகளில் சுமை குறைக்க முன்னம் செவ்வாய்க்கிழமைகளில் பாதிப் பங்கைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டுமென்றிருந்ததை நிறுத்தியாயிற்று. இப்போது இன்னும் இருக்கும் வரிகளையும், நீங்கள் அதிகமாகக் குடிப்பதற்கும் ஆடம்பரச் செலவுகள் செய்வதற்குமாக நிறுத்த வேண்டும் என்கிறீர்கள். இது நியாயம் இல்லை...”
சாமியார் இலக்கண சுத்தமாகப் பேசும் மொழிகள் பலருக்கும் புரியாமலிருந்தாலும், அவர் துவிக்குத்தகையை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை என்று மட்டும் புரிந்தாலும், சாமியாரின் நாவிலிருந்து பிறப்பது வேத மந்திரம் என்ற பக்தி விசுவாச உணர்வுடன் முதியவர் கேட்கின்றனர். மரியானுக்கு பெஞ்சமின் துவி என்று உச்சரிக்குமுன் சாமி குறுக்கிட்டுப் பாய்ந்ததில் ஆத்திரம். இப்போது அவன் சாமியைக் குறுக்கிடுகிறான்.
“அப்பம் துவி ஆறு காசுக்குப் போவ இல்ல. இப்ப துவி ஆறு ரூபாயிலேந்து மீனுக்கு மேல வெல போவுது. அத்தை அப்பிடியே கோயிலுக்குண்டு குடுப்பது என்னம்ப்பு நாயம்?”
“சாமியார் பேசுமுன்ன நாய் போலப் பாயுறா! சொம்மா இருறா நாய்ப்பயலே?” என்று ஜெபமாலையான் அடக்குகிறான்.
“நீ சொம்மா இரிலே! எதிர்க்கட்சியாடுதான், துரோகி!” என்று திட்டுகிறார் பிச்சைமுத்துப்பாட்டா.
பெஞ்சமின் கை தட்டி அமர்த்துகிறான். “நமக்குள்ள ஏன் சண்டை போடுறீங்க? சண்டை போட்டுக்கிட்டா மேன்மையில்ல. சாமியிடம் நான் கேட்டுக்கிடறது இதுதான். சமரசமா நீங்களும் விட்டுக் கொடுக்கணும். ஒவ்வொரு நாளும் கடல் தொழிலாளி உயிரைப் பணயம் வச்சுப் போறான். போவும் போது இன்ன வருமிண்டு நிச்சயமில்ல. கிடைக்கும்; கிடைக்காமயும் இருக்கும். நம்ம நெனப்புக்கு எட்டாத சங்கல்பம் அது. மடக்கலை வரும் போது மரியாண்ணு சொல்லுதோம். சுழலியில் லோலுப்படும் போது அற்புதம் புரிந்த அந்தோணியாரேண்ணு பிச்சை கேக்கிறோம். எங்க விசுவாசம் ஆதிக்கடவுள், சமுத்திரம் ரெண்டிலும் நிலச்சிருக்கு. இப்பம் பீஸ் வலை வச்சித் தொழில் செஞ்சாத்தான் நல்லது. முன்ன ஒரு தட்டுமடி பார்லபட்டுக் கிழிஞ்சிச்சிண்ணா நஷ்டம் அதிகமில்ல. இப்ப நூத்துக்கணக்கா, ஆயிரக்கணக்கா நஷ்டம். இங்கே கடல்கரையில் நீங்க கணக்கெடுத்துப் பார்த்தா, நூத்துக்கு அறுபது பொம்பிள மேல தாலி இருக்காது. இதெல்லாம் சாமி, கொஞ்சம் யோசித்துப் பார்த்து, அந்த வியாபாரிகளைப் போல் நாங்களும் வரி கட்டினால் போதுமிண்ணு வருஷாந்தர வரியாகப் பத்து ரூபாய் வாங்கிட்டு மற்ற குத்தவைகளை நிப்பாட்டுவதை நாயமாச் செய்யணமிண்டு சொல்றேன்...”
பிச்சைமுத்துவும், எட்வினும், அகுஸ்தீனும் முகமலர்ந்து கேட்கின்றனர். “சவாசு, பெஞ்ஜமின் மச்சான்! சாமியிடம் இப்படி விசயம் எடுத்துப் பேச இம்மாட்டும் ஆருக்குத் தெரியும்? நினைச்சா மயிரு மட்டைண்ணு வாயில கொட்டிருவம்!” என்று குருஸ் பாராட்டுகிறான்.
சாமிக்கு முகம் சிறுத்துப் போகிறது. ‘இவர்கள் சொல்லுவதெல்லாம் நியாயம் நியாயம்’ என்று மனம் மந்திரிக்கிறது. என்றாலும் இப்படி விட்டுக் கொடுக்கலாமா? திருச்சபையின் பங்குக் கோயில்களின் பெருவாரியான வருமானம் அல்லவோ இது? தமது வாழ்க்கையை இவ்வாறு ஒரு வெள்ளை அங்கிக்குள் சிறைப்படுத்திக் கொண்டு நியாயமான வேட்கைகளைக் கொன்று கொண்டு வாழும் வாழ்வில் இதைத் தவிர வேறென்ன லாபம்? குருப்பட்டம் பெற்று இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதற்குக் காரணமே வாழ்க்கையின் பொருளாதார வறுமையின் அவல நிலையிலிருந்து மேலோங்க வேண்டும் என்பதனாலல்லவோ?
கடல் மீது சென்று பாடுபடும் இவர்கள் குழந்தைகளைப் போல் அவ்வப்போதைய உணர்ச்சிகளுக்கேற்பத் தங்களை வெளியிட்டுக் கொண்டு விடுவார்கள். அப்படி ஓர் எழுச்சி தான் இது. இதை அடக்கிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.
“நீங்கள் கேட்பது இயலாத காரியம். நீங்கள் அபராதம் கட்டவில்லையென்றால், ஞானஸ்நானம், கல்யாணம், மரித்தோர் கடன் என்று சாமியார் வருவதற்கில்லை...”
சாமியார் சட்டென்று எழுந்து விட்டார்.
இருதயம் எழுந்து நிற்கிறார்.
“அவரு அம்மாட்டுக்கு விட்டுக் கொடுப்பாரா? இந்தப் பயலுவ என்னமோ கோழி சிலும்புதாப்பல சிலும்புறானுவ!”
கூட்டத்தில் கசமுசவென்றும் உரத்தும் குரல்கள் மோதிக் கொள்கின்றன.
பெஞ்ஜமின் சாமியாரைத் தொடர்ந்து சென்று அவரை நிறுத்த முயலுகிறான்.
“சாமி, நீங்க சமரசமா ஒரு ஏற்பாட்டுக்கு வரணமிண்ணு தானே கூட்டம் போட்டம்? நீங்க கோவிச்சிட்டுப் போயிட்டா எப்படி?...”
“இங்கே யாரும் கோபிக்க இல்லை. நீங்க கேட்பது நடக்காதது. இது சவேரியார் காலத்திலேந்து வரும் நடப்பு. இப்போது அதை மாற்ற முடியாது...”
“ஃபாதர், ஆண்டகையிடம் சொல்லி எதானும் ஏற்பாடு செய்யக் கூடாதா?”
சாமியார் கையை விரிக்கிறார். “நீங்க ஆண்டகையிடம் போய்ச் சொல்லுங்க. எனக்கு விரோதமில்ல. ஆனால் இது திருச்சபையைச் சேர்ந்த எல்லாத் துறை ஊரிலும் உள்ள நடைமுறை. அதை அப்படி மாற்றிவிட முடியாது...”
“ஆண்டகை தூத்துக்குடியில்தானே இருக்கிறாரு? நாங்களே ஆண்டகையிடம் போய்க் கேக்கிறோம்...”
“ஆண்டகை இப்போது எங்கிருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. நீங்கள் போய்ச் சொல்லுங்க, எனக்கு ஆட்சேபமில்லை.”
சாமியார் அங்கி விசிற வேகமாக நடந்து பங்களாவுக்குள் நுழைகிறார்.
பெஞ்ஜமின் திரும்பி வருகையில் சூரியனின் மாலைக் கதிர்கள் அவனுடைய குழம்பிய முகத்தில் விழுகின்றன.
கூட்டத்தில் அதிருப்திக் குரல்கள் உயருகின்றன; ஏசல்களும் பூசல்களும் தலை காட்டுகின்றன காவல் துறையாளர் இருவரும் இருக்கின்றனர். ஆனால் அவர்களே அஞ்சிவிடுமளவுக்கு இவர்களிடம் வன்முறைக் கிளர்ச்சி தோன்றிவிடும். “கிளிச்சான், இவெ. சாமியாரிட்ட இவெ மயிரு ஒண்ணுஞ் செல்லாது...” என்று சாமுவல் கூற, எட்வின் அவனைப் பிடித்துத் தள்ள, மற்ற இருவர் சவால்விட, கலகலப்பு கைகலப்பில் கொண்டு விடுகிறது. போலீஸ்காரர் புகுந்து விலக்குகின்றனர். பெஞ்ஜமினின் நெற்றி வரிகள் ஆழ்ந்து போகின்றன.
“நீங்க எல்லாம் அமைச்சலாயிருக்கணும். நாம் இப்பம் நாயம் சொல்லுதோம். இதுல எதும் அநியாயமிருந்தா அவ நம்பிக்கைப் படணும். ஆண்டகையிட்ட நம்ம வழக்கைக் கொண்டிட்டுப் போவம் - நம்ம சகலைக்குத் தெரிஞ்சவரு, வித்யாவதி ஊரில் போலீசு இனிஸ்பெட்டரு. அவரிட்ட நா இப்படிண்டு விசயம் சொல்லித்தான் இன்னைக்கே ரெண்டு பேர அனுப்பித் தந்தாங்க. அவரு அண்ணைக்குச் சொன்னாரு, நீரு ஒண்ணும் கவலிக்க வேணாம். இதொண்ணும் சரிப்படலேண்ணா நாம ஆண்டகையிட்டப் போவம், நானும் கூட வாரன்னு சொல்லியிருக்கிறாரு. நாம அந்தால ஒரு பிளசர் எடுத்திட்டுத் தூத்துக்குடி போயி - நாம முக்கியமா ஒரு நாலஞ்சு பேரு போயி ஆண்டகையப் பாத்து நம்ம வழக்கைச் சொல்லுவம்...”
பிச்சைமுத்துப்பாட்டா திறந்த வாயுடன் அவனையே பார்க்கிறார். எம்பிட்டு மேதையும் கெல்பும் துணிச்சலும் இந்தப் பயலுக்கு? இவெப்பனும் அவரைப்போல் கடல் தொழில் செய்தவர்தாம். அவருடைய பிள்ளைகள் யாருமே கடல் வாழ்வில் ஒட்டாமல் போய்விட்டார்கள். உப்பு ஒட்டாத, ‘நன்னி’யில்லாத வாழ்வு! ஆண்டவங் கிருவையால இந்தப்பய நல்லாயிருக்கணும். தனக்கு உடம்புல உப்பும் பெலமும் குடுத்த மண்ணுக்கும் தண்ணிக்கும் மனுஷ ஒறவுக்கும் நன்னியோட நல்லது செய்யணுமிண்டு நினைக்கான்...
பிச்சைமுத்துப்பாட்டா கண்களில் நீர் கசிய உணர்ச்சிவசப்பட்டுப் பெஞ்ஜமினின் தோளில் கை போட்டுக் கொள்கிறார்.
“மக்கா, கடலு மேலியே வட்டமிட்டுக்கேரும் புள்ளைப் போல, கரைக்குப் போவப் பெலமில்லாத புள்ளைப்போல, வெளி ஒலவ வெவகாரம் தெரியாம வாழுறம். கரைக்குப் போகவும் பெலமில்லாம பாஞ்செடுக்கவும் பலமில்லாம தண்ணி மேல மெதக்கும் சீதாப்புள்ளுவ போல, ஒலவ வெவகாரத்தில், மனுஷனாட்டுப் பெறந்த பல கோடிகளும் நமக்கு வேண்டப்பட்டவராயிருக்கணுமிண்டு கிறிஸ்து நாதர் சொல்லல?...”
அந்த முதியவரின் உள்ளத்திலோடும் உணர்ச்சிக் கோலங்களைப் பெஞ்ஜமின் முழுதும் புரிந்து கொள்ளவில்லை. எனினும் பெற்ற மக்களின் தொடர்பு துறந்து அந்தக் கடற்கரையே நிலைத்த இடமென்று வாழத் துணிந்த இவருடைய ஒட்டுறவு அவனது நெஞ்சின் மென்மையான உணர்வுகளைத் தொட்டு உயிர்க்கச் செய்கிறது. இந்தக் கரையில் கடல் தொழில் செய்ய வந்திருக்கும் அனைவரையும் அவர் அறிவார். அவர்களையே அவர் தம் பிள்ளைகளாகக் கருதுகிறார்!
“நீங்க எங்க பேச்சு நியாயமிண்ணு எங்ககூட இருப்பதே பெலம் தாத்தா!” என்று கரைகிறான்.
அமலோற்பவத்தின் மைத்துனன், அடைக்கலசாமியின் சிற்றப்பன் மகன் லயனல் ஜீப் ஓட்டுகிறான். கன்னிபுரத்திலிருந்து இடையன் குடிக்கும், கூடங்குளத்துக்கும், திசையன்விளைக்கும், திருச்செந்தூருக்கும் சினிமா, கடை வீதி, அவசரமான ஆசுபத்திரிக் காரியங்கள் என்று செல்வதற்கு வாய்ப்பாக, அமலோற்பவம் வாங்கி விட்டிருக்கும் வண்டி அது. சாமியாருக்கும், மேட்டுத் தெரு மக்களுக்கும் அது பேருதவியாக இருக்கிறது. இப்போது அந்த ஜீப்பில், பெஞ்ஜமின், எட்வின், மரியான், பிச்சைமுத்துக் கிழவனார் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். வித்யாவதி சென்று போலீஸ் ‘இனிஸ்பெட்ட’ரையும் கூட்டிக் கொண்டு அவர்கள் தூத்துக்குடி செல்லப் போகின்றனர். ஆளுக்கு ஒரு ரூபாய் என்று பங்கு போட்டுப் பணம் செலவுக்குப் பிரித்திருக்கின்றனர். கடைக்குச் சில சாமான்கள் வாங்குவதற்காக, செபஸ்தி நாடானும் ஜீப்பில் வந்தமர்ந்திருக்கிறான். வாழ்க்கையில் ஒரு புதிய ஏடு திரும்பி இருப்பது போன்று மரியானுக்கு உற்சாகமாக இருக்கிறது. “கட்டைக்கும் மீன் போடுவான் காயலான்” என்ற வழக்கு மொழிக்கு ஏற்ப, கோயில்காரன் ஒரு கட்டையை நிறுத்திவைத்துவிட்டுப் போனாலும் கூட இவர்கள் மீன் போடுவார்கள் என்ற வழக்கை மீறி, கண்மூடித்தனத்தை மீறிக் குரல் எழுப்புகின்றனர். பங்குக் குருவை மீறிக் கொண்டு ஆண்டகையைப் பார்க்கச் செல்கின்றனர். போலீசென்றால் ஆளைக்கண்ட நண்டுபோல் வளைக்குள் சென்றொளியும் மக்களாக இருந்த அவர்கள், போலீசு அதிகாரியையே துணையாக அழைத்துக் கொண்டு ஆண்டகையைப் பார்க்கச் செல்கின்றனர். ஜீப்பின் முன் ஆசனத்தில் ஓட்டியாக லயனல். இடையில் பெஞ்சமின், பிறகு போலீசு இனிஸ்பெட்டர்; அவரது காக்கி உடுப்பு மிகவும் கௌரவமாக இருக்கிறது. பின்புறத்தில் பிச்சைமுத்துப்பாட்டா, மரியான், எட்வின், செபஸ்தி நாடார் ஆகியோர் இருக்கின்றனர். சாதாரணமாக அந்த ஜீப் சவாரி போகிறதென்றால், குறைந்த பட்சம் இன்னும் நான்கு பேரேனும் இருப்பார்கள். பண்டிகை நாட்கள், அல்லது பேர் பெற்ற சினிமா என்றால், அந்த வண்டி முப்பது பேரையும் கூட ஏற்றிக் கொண்டு செல்லும்! பெரிய தொலைவு நடந்து வரவேண்டுமே? இது கோயில் முன் சென்று ஆளை இறக்கிவிடுமே?
‘இனிஸ்பெட்டர்’ முன்னால் அமர்ந்திருக்கிறார் என்ற உணர்வில் அவர்கள் யாருமே பின்புறம் பேசிக்கொள்ளவில்லை. இல்லையேல், “இவனுவ யாரு?...” என்று கூச்சல் போட்டுப் பேசுவார்கள்!
சாலையின் இருமருங்கிலும் கைப்பிள்ளைக்காரியின் தளர்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குலைதள்ளி முதிர்ந்து நிற்கும் வாழைத் தோப்பு; இந்த மண் எங்கள் உரிமை... என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு கடற்கரையோரமுள்ள அச்சாலையில் கண்களுக்கெட்டிய வரை குடிபிடிக்கும் பனைகள்; எங்களுக்குந்தான் உரிமை என்று தலை விரிச்சிகளாகப் போட்டி போட்டுக் கொண்டு காட்சிதரும் உடை மரங்கள்; இடையிடையே நீர்க்கால்கள் எல்லாம் வருகின்றன. அங்கெல்லாம் மனிதரின் உழைப்புக்கு உவந்து கொடையளிக்கும் பூமித்தாய் நெல்மணிகள் சாய்த்தாழ்ந்து வணங்கும் கதிர் குலுங்கக் காட்சியளிக்கிறாள். காற்றில் ஓர் இனிய கார மணத்தைக் கலந்து கொண்டிருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் மனதைப் பரவசத்திலாழ்த்துகின்றன. மேட்டிலும் பள்ளத்திலும் அதிர்ந்து குலுங்கிக் கொண்டு வண்டி விரைந்து செல்கிறது. உவரியூர், ஆலந்தலை, மணப்பாடு, திருச்செந்தூர் எல்லாம் கடந்து சாஹுபுரத்தில் எழும்பும் பெரிய தொழிற்சாலைக் காலனியருகில் சற்றே நிற்கின்றனர். பின்னர், பதினோரு மணிக்கெல்லாம் ஆத்தூர் வந்துவிட்டார்கள். தாமிரபருணியின் குளிர்ந்த நீர்க்கரை தென்னஞ்சோலைகள்... பின்னர் பரந்த ஏரி... ஆத்தூர் ஏரி. ஏரிக்கரை வழியே வண்டி செல்கிறது. தூத்துக்குடி எட்டிப் பிடிக்கும் தொலைவாகி விட்டது! என்ன இனிமை!
தூத்துக்குடியில் நசரேனைப் பார்க்க முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!
லில்லிப் பெண்ணைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறான். பண்டியலுக்குக் கோயமுத்தூர் போவதாக எழுதிவிட்டாள். அவனுக்கு நினைக்க வியப்பாக இருக்கிறது. அவனோடு கடற்கரை மணலில் பொத்திப்பூச்சி பிடித்து விளையாடிய தங்கச்சி, பாறை இடுக்குகளில் அழகிய சிறு பாரக்குட்டி, மீன்களைப் பிடித்து விளையாடிய தங்கச்சி, இன்று சேற்றிலிருந்து தலைதூக்கும் லில்லி மலராக ‘கன்யாஸ்திரியாவேன்’ என்று சொல்கிறாள்! அந்தக் கடற்கரை முழுவதும் அவளைப் போல் ஒரு பெண்ணும் இருப்பதாகத் தெரியவில்லை. அவளைப் போன்ற பல பெண்களும் ஆணொருவன் வந்து தொட மாட்டானா என்று ஏங்கும் சதைப் பசியுடன் மதர்த்து நிற்பவர்களாகவே கண்களுக்குப் படுகின்றனர். லில்லி, பாவக்கறை படக்கூடாது என்று ஒதுங்கி நிற்கிறாள் - அவள் பெரிய படிப்புப் படித்து, டீச்சராக - கன்னியாக வருவாள்!
தூத்துக்குடி நகரின் சந்தடியும் கூட்டமும் - பாரவண்டிகளின் நெரிசலும், அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. விண்ணை நோக்கி உயர்ந்த மாதா கோயில்களின் வெண்மையான குரிசுத்தூபங்கள் - உடல் சிலிர்க்கச் செய்கின்றன. கடைத் தெருவில் மிட்டாய் பழங்கள், பொரிகடலைக் குவியல்கள் எல்லாம் அவனுக்கும் இறங்கிவிடும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. வண்ண வண்ணங்களாக ஆடையணிகள், பளபளக்கும் பாத்திரம் பண்டங்கள் என்று நகரத்துக் கடைவீதி புதுமைக் கவர்ச்சிகளாக விரிந்திருக்கின்றன. ஆண்டகையைப் பார்க்கச் செல்வதால் பெஞ்ஜமின் திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் என்று பழங்கள் வாங்கிக் கொள்கிறான். பிறகு வண்டி செல்கிறது.
மாளிகை முகப்பில் போசன்வில்லா சுமைதாங்கவொண்ணாக் குவியல்களாக மலர்ப் பொதிகளைச் சுற்றுச் சுவரில் வைத்து இளைப்பாறுகிறது. ‘இன்ஸ்பெக்டர்’ முதலில் இறங்கினார். பிறகு பெஞ்ஜமின் இறங்கி வந்து, “நீங்கல்லாம் வெளியே இருங்க. நாங்க முதல்ல உள்ளே போய் ஆண்டகை இருக்கிறாரா, பேச வருவாராண்ணு பாத்துச் சொல்லுறம். பொறவு வரலாம்” என்று கூறிவிட்டுப் பழங்களுடன் உள்ளே செல்கிறான். அவர்கள் வண்டியிலிருந்து ஒவ்வொருவராக இறங்குகையில் இன்ஸ்பெக்டரும் உள்ளே செல்கிறார்.
பத்து நிமிடங்கள் ஆவலும் துடிப்புமாக அவர்கள் பொறுத்துக் கொண்டு வாயிலில் நிற்கின்றனர். அதற்கு மேல் பொறுக்க இயலாமல் மரியான் பூங்கொடிகள் அழகு செய்யும் வாயிலைக் கடந்து வராந்தாவின் மீது ஏறி நிற்கிறான்.
உள்ளே யாரோ பேசும் குரல் கேட்கிறது. ஆங்கிலத்தில் பேசுகின்றனர். வெளி ஜன்னல் வழியாக அலமாரிகளில் தோல் கெட்டி அட்டை போட்டுக் கில்ட் எழுத்துகள் பொறிக்கப் பெற்ற பெரிய புத்தகங்கள் தெரிகின்றன.
சம்மனசுகள் மாலையேந்தி, மரியம்மையின் இளம்பாலனுக்கு அழகு செய்யும் சிறு வடிவம் கண்ணாடிப் பெட்டியில் மிக அழகாக இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் சிறு ஜோதி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி ஒரு சிறு விளக்குப் போடவேண்டும் என்று அவனுடைய அப்பச்சிக்கு ஆசை.
இன்ஸ்பெக்டர் சாயபு என்று பெஞ்ஜமின் சொன்னான். அவர் ‘குட்மார்னிங் ஃபாதர்’ என்று சொல்வது செவிகளில் விழுகிறது. இப்போதுதான் வந்திருக்கிறாரோ?
பெஞ்ஜமின் வாயிற்படியில் வந்து அவர்களைப் பார்த்து, ஆண்டகை இருப்பதாகவும், தான் அழைக்கும் வரையிலும் வரவேண்டும் என்றும் சாடையால் சொல்லிவிட்டுப் போகிறான்.
கதவுக்கப்பால் இன்ஸ்பெக்டர் பேசுவது செவிகளில் விழுகிறது.
“உங்களுக்கு... விஷயம் தெரிஞ்சிருக்கும். கன்னிபுரம் ஊரிலேந்து ரெண்டாள் வந்திருக்காங்க. ஃபாதர்கிட்ட தொழில்பத்தியும் கோயில் மகமை பத்தியும் பேசணுமின்னு வந்திருக்காங்க. வெளியே நிக்கிறாங்க. வரச் சொல்லட்டுமா?...”
“எதுக்குக் கூட்டிட்டு வந்தீர்? அவங்களிடம் நான் பேச என்ன இருக்கு? அதெல்லாம் பங்குக்குரு என்ன சொல்றாரோ அப்படித்தான்...”
மரியானுக்கு அவர் பேசுவது நன்றாகப் புரியவில்லை. எனினும் சாதகமில்லை என்று புரிந்து அதிர்ந்து குலுங்குகிறான். பெஞ்ஜமின் வாயிற்படிக்கப்பாலே நிற்கிறான்.
யாரும் பேசவில்லை. மௌனத்திரை கலைகிறது. ‘நீர் போகலாம்!...’
“ஃபாதர்... நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. விசாரியாமல்...”
“எல்லாம் விசாரித்தாகி விட்டது, போகலாம்!”
இன்ஸ்பெக்டர் மிடுக்கு நடையுடன் திரும்பி வருகிறார். முகம் செவ செவ என்றிருக்கிறது. பெஞ்ஜமினை இன்ஸ்பெக்டர் ஏறிட்டுப் பார்க்கவில்லை. பெஞ்ஜமினோ அவருக்கு முன் எல்லோரையும் வண்டியில் சென்று ஏறிக் கொள்ளச் சைகை காட்டுகிறான்.
இப்போது இன்ஸ்பெக்டர் டிரைவருக்கு அருகில் அமருகிறார். பெஞ்ஜமின் இவர்களுடன் பின்புறம் ஏறுகிறான்.
“விடப்பா வித்யாவதிக்கு!” என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாகப் பணிக்கிறார்.
“ஸார் ரொம்ப மன்னிக்கணும். உங்களுக்கு ரொம்ப ரொம்ப சிரமம் கொடுத்திட்டம்...”
“இவனெல்லாம் பிஷப்பா? மனுஷனை மனுஷன்னு மதிக்கும் மரியாதை கூட இல்லாத இவனெல்லாம் மேய்ப்பன்களாம்!”
போலீஸ் அதிகாரிக்கு ஒரு அவமானமான நடப்பல்லவா இது? ஒருகால் இவர்கள் போலீஸ் அதிகாரியைக் கூட்டிச் சென்றதால்தான் ஆண்டகைக்குக் கோபம் வந்து விட்டதோ?
ஆனால் இன்ஸ்பெக்டரையே மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்ட ஆண்டகை, அவர்களை மதித்துப் பார்க்கவே அனுமதித்திருப்பாரோ?
வண்டி திரும்பிப் போகிறது. பெஞ்ஜமின் பழங்களை முன்கூட்டியே பங்களாவின் உள்ளே கொண்டு வைத்து விட்டான். ஏமாற்றம்...!
பிச்சமுத்துப்பாட்டா வண்டியிலிருந்து இறங்காமலே உட்கார்ந்தபடியே ஒரு உறக்கத்தில் இருந்திருக்கிறார். சட்டென்று அதிர்ந்தாற்போல் நிமிர்ந்து பார்க்கிறார். வண்டி செல்கிறது. நெருங்கிக் கொண்டு பெஞ்ஜமின்...
எட்வினோ ஆண்டகைக்குமுன் தனது மொழிவன்மையை எவ்வாறு காட்டிக் கொள்ள வேண்டுமென்று யோசனை செய்து கொண்டிருந்தான். இப்போது ஒன்றும் புரியவில்லை. ஒரு குப்பி அருந்திவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
“என்னம்ப்பு? ஆண்டகையிட்டக் கூட்டிப் போறோமிண்டு சொல்லிற்று மரிச்சுப் போறீங்க? ஆண்டகை தூத்துக்குடியில இல்லியா? வடக்கன்குளம், எங்கியானும் போயிருக்கா?” என்று பிச்சமுத்துப்பாட்டா கேட்கிறார்.
பெஞ்ஜமின் காதில் விழாததுபோல் முன்பக்கம் இன்ஸ்பெக்டரையே பார்க்கிறான்.
“ஆளுங்களைப் பாக்கண்டாமிண்டு ஆண்டகை சொல்லிட்டாப்பல...” என்று மரியான் முணமுணக்கிறான்.
“கிறீஸ்துநாதருக்கு இவங்கல்லாம் உண்மையாம்படி நடக்கிறானுவளா?” என்று கேட்கிறார் பாட்டா.
“ஸியா, (தாத்தா) இவனுவல்லாம் கிறீஸ்து நாதர்னு சொல்லிட்டு நம்ம நெத்தத்தை உறிஞ்சிறானுவ. நம்மகிட்ட நாயம் இருக்கிறதால பாத்துப் பேச பயமாயிருக்கு...” என்று எட்வின் பொங்குகிறான். திருச்செந்தூர் வரும் வரையிலும் வண்டி நிற்கவில்லை.
திருச்செந்தூரில் ஓட்டலில் இறங்கி, இன்ஸ்பெக்டரை ஓட்டலுக்குச் சாப்பிட அழைத்துச் செல்கின்றனர்.
“இங்கே வரும்போது நான் சமரசமாகப் போக பிஷப் வழி காட்டுவார்னு நினைச்சே. ஆளுங்களைப் பார்க்க மாட்டேன்னு சொல்லலாமா அவரு?...”
“ஸார், எங்களால உங்களுக்கு இப்பேர்க்கொத்த கொறவு வந்தது. மன்னிக்கணும். நானும் நம்பிக்கையோடு இருந்தேன். பத்தைம்பது ரூவா செலவுபண்ணிப் போடுறம். அது பெரிசல்ல. ஆளுகளை நேராகக் கண்டு, ‘அது சவுரியமில்லேப்பா. இப்போதைக்குக் கட்டுங்க’ன்னு சொல்லியிருந்தாக்கூடப் பரவாயில்ல...”
பெஞ்ஜமின் மிக வருந்துகிறான்.
“போவட்டும்லே. இவுரு மயிறு, பாக்காட்ட போறாரு? நம்மக்க ஆண்டவன், அங்கே இருக்காரு. அவருட வலிமைய நாம நெதமும் பாக்குறம்! நம்மக்க நியாயத்தையும் அந்தரங்க சுத்தியையும் நிதம் நிதம் சோதனைக்கு வய்க்கிறம். அதுனால, இவெ பாக்க மாட்டேன்னிட்டா, சவண்டு போயிர மாட்டம்...”
இனிய பயணம், கனவுகள், எல்லாம் பயனற்றவையாகி விட்டன. அந்த நிமிஷமே குதித்துச் சென்று அவர்களை அவமதித்த அந்த அங்கிக்காரனைக் கீழே தள்ளித் தாக்குவதற்குப் போதுமான பொங்கெழுச்சியால் அவர்கள் கொதித்தாலும், பெஞ்ஜமினின் நிதானமான அமைதியான பேச்சினாலும் நடப்பாலும் அவர்கள் அடங்கியிருக்கின்றனர்.
“என்னால் உங்களுக்கு எதுவும் செய்வதற்கு இல்லையேன்னு வருத்தமாயிருக்கு. நீங்க ஆனா தைரியமாயிருங்க. நியாயத்துக்கு விரோதமாக எதுவும் நடக்காதபடி நான் பார்க்கிறேன்...” என்று இன்ஸ்பெக்டர் விடைபெற்றுக் கொள்கிறார்.
இன்ஸ்பெக்டர் சென்றதும் கட்டவிழ்ந்த உணர்ச்சிகள் வசைச் சொற்கலாகப் பொலபொலக்கின்றன. பெஞ்ஜமின் அறிவுரை மொழிகிறான்.
“இப்பம் இதுக்கு நாம கோவப்பட்டாப்பல நடக்கக் கூடாது. ஏண்ணாக்க, சாமி இது சமயம் பாத்துத்தான் ஏதேனும் திரியா வரம் செய்யும். ஆனாக்க ஒண்ணுமட்டும் வெட்டிப்பாய் வெச்சுக்கும். ஆரும் அவுராதமும் கெட்டாண்டாம். துவியும் கொடுக்காண்டாம். ஆனா அமைச்சலா நடந்துக்கணும். நான் இது விசயமா பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் எல்லா எடத்திலும் வக்கீல்மாரைக் கலந்து புத்தி விசாரிக்கணுமிண்டிருக்கே. வுட்டுப் போட மாட்டம். இங்கியும் ஆலந்தலை, மணப்பாடு, கூத்தங்குளி, அமலி எல்லாக் கரைக்காரரையும் சேத்து ஒருமிச்சு இந்த முடிவுக்கு வாரக்காட்டணும். சும்மா அவுசரப்பட்டு வாய்க்கி வந்ததைப் பேசிடறதும், அந்தந்த நேரத்தில் தோணினதைச் செஞ்சிடறதுமா இருக்கம். ஒருமிச்சி ஒண்ணா எதுவும் செய்ய ஏலாம ஆயிப் போவு. இப்பம் நீங்கள்லாம் எதுவும் நடபடியானாப்பல காட்டிக்காண்டாம். போயி அவுங்கவுங்க சோலியப் பாருங்க...” கோயில் முன் ஜீப்பை விட்டு இறங்குகையில் பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது.
மரியான் காரியம் முடிந்து வரும்போது பண்டியலுக்குத் துணி வாங்கி வரவேண்டுமென்று செயமணியிடம் கேட்டு நூறு ரூபாய் பெற்று வந்திருந்தான். எதுவும் வாங்கவில்லை. ஆரஞ்சியும் திராட்சையும் வாங்கி, முகம் கொடுக்க மறுத்த ‘ஆண்டகை’க்கு வைத்துவிட்டு வந்தார்கள்! ஒரு அரையணா மிட்டாய் கூட வாங்கவில்லை. நூறு ரூபாய் பணம் பிரித்து வெட்டி செலவு செய்திருக்கின்றனர் என்று அத்தனை பேரும் அவர்கள் மீது பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை!
பிச்சைமுத்துவும் எட்வினும் நேராக அமலோற்பவத்தின் வீட்டுக்குப் பின்னாலுள்ள குடிசைக்குச் செல்கின்றனர். ஏமாற்றத்தைத் தவிர்க்க மூக்கு முட்டப் போட்டுவிட்டு வருவார்கள். பெஞ்சமின் லயனலிடம் பேசியபடி பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடக்கிறான்.
பீற்றர் அவனருகில் ஓடிவந்து, “அண்ணே படய்க்கம் வாங்கியாந்திருக்கியா?” என்று கேட்கிறான்.
“இப்பம் வாலேய் வாங்கித் தாரேன்?...”
“தூத்துக்குடிலேந்து வாங்கிச்சு வார இல்ல? இந்தக் கடை படய்க்கம் நெல்லா இல்ல. வாணாம்...”
மரியான் அவனை வெறித்துப் பார்க்கிறான். பிறகு மனம் இளகிப் போகிறான். “போவட்டும்லே. ஆலந்தலை மாமன் மவ பறவாசிப்புக்குப் போவையில எல்லாம் வாங்கி வாரம்...”
கோயில் தூபியின் மாடத்திலிருந்து புறாக்கள் கீழிறங்கி வருகின்றன. லயனலின் இளைய மகள், அவள் இறைத்த தானிய மணிகளை அவை கொத்துவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். மரியானும் எந்தவித எண்ணமுமின்றி அதையே பார்த்தவாறு வீட்டை மறந்து நிற்கிறான்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரவை முன்னிட்டு ஊரெங்கிலும் ஓர் கோலாகலம் எதிரொலிக்கிறது. செபஸ்தி நாடார் கடையில் மத்தாப்புக்களும் வாணங்களும் பட்டாசு வெடிகளும் வந்து நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் வண்ணக் காகிதத் தோரணங்கள் அமைப்பதிலும், நட்சத்திர ஒளிக் கூண்டுகள் கட்டித் தொங்க விடுவதிலும் இளைஞரும் முதியோரும் உற்சாகமாயிருக்கின்றனர். வலைகளும் கருவாட்டு மீன்களும் பரத்தியிருக்க ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் குந்தாணியும் உலக்கையுமாகப் பெண்கள் அரிசிமாவிடிக்கும் ஓசை பட்டாசுச் சத்தத்துக்கு இணையக் கேட்கிறது. மேட்டுத் தெருவின் வீடுகளில் பாலன் ஜோடிக்க பிள்ளைகள் சவுக்குத் தோப்பை நாடிச் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்கின்றனர். பிலாப் பெட்டியில் பாலிகை தெளித்து, காற்றும் வெயிலும் பட வெளியே வைக்கின்றனர். நாடார் குடிகளில் பாலிகைப் பெட்டிகளை வைத்து, கன்னிப் பெண்கள் முற்றத்தில் மரியன்னை மைந்தனின் புகழ் பாடிக் கும்மி அடிக்கின்றனர். ‘கோதம்பு’ அரைக்கவும், பண்டியல் சாமான் வாங்கவும், பெண்கள் கூடங்குளத்துக்கோ, இடையன் குடிக்கோ அணியணியாகச் செல்கின்றனர். லயனலின் ஜீப்பில் மாலை நேரங்களில் இருபது பேருக்குக் குறையாமல் அடைத்துக் கொண்டு செல்கின்றனர். பெஞ்ஜமினின் வீட்டில் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிக் கொண்ட அவன் தந்தை அண்ணன் தங்கை என்று வீடு கொள்ளாத கூட்டம் நிறைந்திருக்கிறது. நசரேனின் வீட்டில் எல்லோரும் தூத்துக்குடி போய் விட்டார்கள். ஜான் மட்டும் இருபத்து மூன்றாந் தேதி மாலையில் தொழிலுக்குச் சென்று வந்த பிறகு செல்கிறான்.
மரியான் ஆலந்தலை மாமன் மகள் கல்யாண ஓலை வாசிப்புக்குப் போய்விட்டு, திருக்கை வலையை நானூரு என்று பேசி வாங்கிவிட்டான். திருச்செந்தூரில் சென்று பெண்களுக்குச் சேலை ரவிக்கை, தம்பிகளுக்கு நிஜார் சட்டை அப்பனுக்கும் தனக்கும் வேட்டி துண்டு, எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். வலைக்கு இன்னமும் நூறு ரூபாயை அடுத்த மாதம் கட்டிவிடுவதாகச் சொல்லிப் பெற்று வந்திருக்கிறான்.
ஆத்தா, அரிசி மாவிடித்து, முட்டையை உடைத்து ஊற்றி, தேங்காய்ப்பால் குழைத்துப் பணியாரம் செய்கிறாள். கொக்குசு அச்சை மாவில் முக்கிக் காயும் எண்ணெயில் போட்டு, பொன்னின் பூச்சக்கரங்களாகப் பணியாரத்தை எடுத்து வைக்கிறாள். அதிரசம் சுடுகிறாள். சுரூபம் இருக்கும் கண்ணாடிக் கூண்டையும், முன் வாயிலையும் வண்ணக் காகிதத் தோரணங்கள் கட்டி மேரியும் செயமணியும் அலங்கரிக்கின்றனர். சிவப்பு நட்சத்திரக் கூண்டில் சிறு விளக்கேற்றி வெளியே தொங்க விடுகின்றனர். விடிந்தால் பெருநாள். அன்று அப்பன் விடியலில் தொழிலுக்குச் சென்று, பிற்பகல் மூன்று மணிக்கு வந்திருக்கிறார். மரியானோ, இரண்டு மணிக்கே வந்துவிட்டான். தெருவெல்லாம் தேங்காய் எண்ணெய் காயும் மணமும், வெல்லப் பாகின் மணமும் கவிர்ச்சியே இங்கு கிடையாது என்றியம்பும் வண்ணம் நாசியை நிரப்புகின்றன.
தபாலாபிசுக்காரரின் தம்பி மோசே, கரால் பாடும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் புதிய புதிய பாடல்களைப் புனைந்து பயிற்சி கொடுப்பான். இப்போதும் அந்த வீட்டில் இருந்து பாட்டுக்குரல்கள் கேட்கின்றன. கன்னிபுரம் சிறிய ஊராக இருந்தாலும், லாரியை ஜோடித்து, ஐயன் பிறப்பை ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். அதற்கென்று மின்னாற்றலைத் தரும் பொறியும், விளக்கு மாலைகளும் தனியாக இணைத்திருப்பார்கள். இவ்வாண்டு லயனலின் ஜீப்பில் இந்தக் காட்சி ஊர்வலம் நிகழ இருக்கிறது.
மைக்கு செட்டு கோயிலின் முன் கீதங்களை இசைக்கத் துவங்கிவிட்டது. உள்ளே பாலன் குடிலை சோடித்துக் கொண்டிருக்கின்றனர். கோயிலின் நாற்புறங்களிலும் குளுமையான ஒளி பரவிக் கிடக்கிறது. ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு மரியான் மீண்டும் வீட்டுக்கே வருகிறான். வாயிலில் மேரி வண்ணப் பொடிகள் தூவிக் கோலமிடுகிறாள்.
அப்பன் வழக்கம் போல் குடித்திருக்கிறார்.
“லில்லிப் பொண்ணு இருந்திச்சிண்ணா, நெல்லா இரிக்கும். அது கன்யாஸ்திரீயாப் போவு. அந்த ரோசித்தாப் பொண்ணை இங்கே மரியானுக்குக் கெட்டணுமுண்டிருந்தம். அதும் கூடிச்சில்லை. இப்பம், இவள நசரேனுக்குக் கெட்டுறதும் கூடிச்சில்லை.” எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு முணமுணக்கையில் ஆத்தா தட்டில் ஒரு அதிரசமும், பணியாரமும் கொண்டு வருகிறாள். “இன்னாரும்...”
அப்பன் அதை எடுக்கிறார். கண்களில் நீர் கசிகிறது.
“பண்டியலுக்கும் அவ வார இல்ல பாத்தியா?”
ஆத்தாளுக்கும் கண்கள் பசைக்கின்றன.
“அப்பமே நான் படிக்கப் போடண்டாமிண்ணே. கடல் மேல போறவனைக் கெட்டுறவளுக்கு என்ன படிப்பு? கன்யாஸ்திரீங்க கூடமே இருந்து தா, இப்பிடியாயிட்டா...”
“இந்த வீட்டிலேந்து அவ ஈசனுக்கு மணவாட்டியாப் போறாண்ணா, இந்தக் குடும்பத்துக்கு மாதாவின் ஆசீர் இருக்கில்லிய?...”
அவள் தேவதை போல் வெள்ளையுடுப்புடன் வருவது காண்பது போல் - அப்பன் உருகிப் போகிறார்.
“என்னிய இரிந்தாலும் இவ பண்டியலுக்கு வராண்டாமா? ஆத்தா, அப்பச்சி உடப்பிறப்பு ஆரையும் பாக்கண்டாமா? போன சித்திர லீவுக்கு வந்ததுதா...”
“இருக்கும். அவதா எளுதிப் போட்டாளே? அலவாய்க்கரையில பாவ எண்ணம் கொண்டு பாக்குறவந்தானே அம்புட்டுப் பயலுவளும்! உந்நத சங்கீதம் கேக்கும் ஒரு வாழுக்குப்போறா அவ. இன்றறுதி அவளுக்காவ ஒரு துட்டு படிப்புக்குண்டு நாம செலவு செய்யல...”
“அதனாலதா கன்யாஸ்திரீமாருக்கே சொந்தமிண்டு ஆயிற்றா...” என்று ஆத்தா ஆற்றாமையுடன் புலம்புகிறாள்.
“எல்லாரும் ஆசப்படும் லோகத்திலிருக்கிற சுகங்கள்ளாம் வேண்டாமிண்டு வய்க்கிணமிண்ணா, எம்மாட்டு மனசில தெம்பிருக்கணும்! இந்தக் கடக்கரையில இவ போல ஆரும் வாழு பாவமிண்டு சொல்லல. கடல் அலையில்லாம இருக்குமா? அதுக்காவ மர மெறக்க ஏலாதுண்டு கடல் கரையில பொறந்தவெ கூசி நிப்பானா? வாழு பாவந்தா. பாவத்தில நுலஞ்சி செயிக்கிறதுதாஞ்சுகிர்தம். பாவத்திலதாஞ் சுகம். பாவத்திலதாங் குடும்பம். எல்லாப் பயலுவளும் பொண்ணுகளும் இப்படித்தான் நினய்க்கா. எல்லாப் பொண்ணுவளும் இப்பிடித்தா ஒடலை ஒரு ஆம்பிளய்க்குக் குடுக்கா. ஆனா, இவ பாவமிண்டு நினக்யா...”
அப்பன் திரும்பத் திரும்ப அதை மொழிகையில் மரியானுக்குக் கண்களில் நீர் திரண்டு வருகிறது.
“இன்னிக்கு எம்புட்டிலே மீன்பாடு?”
“றால் கொஞ்சம் - பொறவு அயில, சாள, இதுகதா... மொத்தம் பத்து ரூவாயிக்குள்ள. பண்டியல் கழிஞ்சி திருக்கை வலை கொண்டிட்டு ஆழ் கடல் போவலாம்...”
“அண்ணே, படய்க்கம் வாங்கக் காசுண்ணே?”
பீற்றர் கை நீட்டுகிறான்.
“வாணாலே. அந்தப் பயலுக்கு ஒரு சல்லி குடுக்காதே! அவெ, அஞ்சு ரூவாக்கி வெடி வாங்கி கரியாக்கியிருக்கான்” என்று ஆத்தா தடுத்துவிட்டு அவனுக்கும் பலகாரம் கொண்டு வருகிறாள்.
செயமணி, நாடார் விளையிலிருந்து ஒரு வாழைக் குலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருகிறான். சார்லசும் அவளுடன் போயிருந்திருக்கிறான். பன ஓலைக்குப் போய்ப் பழக்கமான சிநேகிதி வீட்டிலிருந்து வாங்கி வருகிறாள்.
அவன் அதிரசத்தையும் பணியாரத்தையும் உண்டு கோபியைப் பருகுகிறான்.
அன்றிரவு யாருமே உறங்கமாட்டார்கள்.
வாடைக் காற்றில் குறுகிப் போர்த்துக் கொண்டு உறங்கும் குழந்தைகளை எழுப்பிக் கொண்டு கோயிலுக்குப் போவார்கள்.
‘இஸ்பிரி சாந்துவுக்கு நமஸ்காரம்’ என்ற பாட்டை மைக்கு தேன்குரலில் வான் முழுவதும் காற்றிலே ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. மரியானுக்கு ஒரு டிரான்சிஸ்டர் பெட்டி வாங்க வேண்டுமென்று கூட ஆசை. எத்தனையோ ஆசைகள்.
லில்லி கல்யாணமென்பதில்லை... ஆனால், மேரி... மேரியும் தான் வளர்ந்து விட்டாள். அவள் வயசுக்கு வந்து மைக்கு செட் போட்டுக் கொண்டாடியது இப்போது போல் தோன்றினாலும் இரண்டு பண்டிகைகள் ஓடிவிட்டன. செயமணிக்கு அந்த விழா செய்யவில்லை. அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்; பணமுமில்லை. மேட்டுத் தெரு மக்கள் இதெல்லாம் அநாகரிகம் என்று செய்வதில்லை. இரண்டு நழுவினால் மூன்றாவது கூடலாம். ஜானுக்கு மேரியைக் கட்டலாம்...
அவன் மீண்டும் எழுந்து வெளியே வருகிறான். கிணற்றுக் கரையில் ஜெசிந்தா, “பண்டியலா மச்சான்?” என்று கேட்கிறாள்.
எவ்வளவு மெலிந்து போய் விட்டான்! “விருந்தாளிங்க வந்திருக்குப் போல?”
“ஆருமில்ல, மாமிதான், பெருமணல்லேந்து வந்திருக்கா...”
பொழுது இருளின் வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. முகம் நன்றாகத் தெரியவில்லை. பிச்சமுத்துப்பாட்டா காகித நட்சத்திரம் வாங்கிக் கொண்டு இரு பேரப்பிள்ளைகளுடன் நடக்கிறார். விளக்கடியில் அவனைப் பார்க்கிறார்.
“ஆருலே? மரியானா? தூத்துக்குடிலேந்து ஃபிரான்ஸ்கா பண்டியலுக்கு வந்திருக்காலே! அவ பிள்ளைங்க...”
கழுத்தில் சங்கிலி, சட்டை, தலையில் கட்டிய ரிப்பன்... ஒரு பெண், ஒரு பையன் ஏழு வயசும் அஞ்சு வயசும்...
“ஏலிப் பொண்ணைத் தேடிட்டுப் போறியாலே? போ, போ... பண்டியல் வந்திருக்கு...” என்று கண்களைச் சிமிட்டிக் கேலி செய்கிறார்.
அவனுக்கு வெட்கமாக இருக்கிறது. அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை! புயலில் சேதமுற்ற வீட்டைப் பூசி மெழுகி, அந்தச் சுவருக்கு வெள்ளையும் தீட்டிப் புதுப்பித்திருக்கிறாள். வாழ்வில் அவள் பற்றும் தாங்கலெல்லாம் நழுவிப் போனாலும் வாழ்வின் மீது நம்பிக்கை மாயாமல் நிமிர்ந்து முனைகிறாள்.
அப்போதுதான் நல்ல நீரெடுக்கப் போய் வந்த ஏலி அவனைக் கண்டதும் முகம் மலரக் கதவைத் திறக்கிறாள். இருட்டில், பீற்றர் அவனைத் தொடர்ந்தே வந்திருப்பதை மரியான் அப்போதுதான் காண்கிறான். கோபத்துடன் “எங்கியலே வந்தே?” என்று அதட்டுகிறான்.
“படய்க்கம் (பட்டாசு) வாங்கத் துட்டுக்குடண்ணே!”
மரியான் தன் சட்டைப்பையிலிருந்து எட்டணா நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறான்.
“போ லே!”
இவன் ஆத்தாளிடம் சென்று தான் அங்கு வந்திருப்பதைக் கூறி விடுவானோ என்ற அச்சம்... ஏலி உள்ளிருந்தபடியே மகிழ்ச்சி கரை புரள, “அவெ... இங்கிய வரக்காட்டும்... லே, மக்கா...! வாலே...” என்று அழைக்கிறாள். பீற்றர் வருகிறான். புதிய சராயும், உள்ளே செருகிய சட்டையுமாக. இப்போதே புதிய உடுப்புப் போட்டுக் கொண்டு, முடியில் எண்ணெய் தொட்டுச் சீவிக் கொண்டிருக்கிறான். மரியானைப் போலவே அச்சு, மாநிறம்; வட்ட முகம்; சுருள் முடி...
பூசைக்குப் பூகு முன் உறக்கம் வந்துவிடும். உற்சாகச் சக்தியை முன்பே பரபரப்பாகக் கரைத்து விடுவார்கள். இந்தப் பிள்ளைப் பருவம்தான் எத்துணை இனிமையானது! கவலையற்றது!
மரியான் அங்கே நார்க் கட்டிலில் அமர்ந்தபடியே, “லே, ஆத்தாகிட்டப் போயிச் சொல்லாதே! சொன்னியோ கொண்ணிருவே!” என்று கட்டளை பிறப்பிக்கிறான்.
ஏலி ஏனத்தைத் திறந்து கைநிறைய வெல்லச்சீடை எடுத்துக் கொடுக்கிறாள். அவன் அவற்றை வாங்கிச் சராயின் இரு பக்கத்துப் பைகளிலும் நிரப்பிக் கொள்கிறான். ஒரு பெரிய பழம் வேறு. பையன் வாழைப்பழத்தை உரித்துக் கொண்டு ஓடிப் போகிறான்.
ஏலி முடியைச் சீவிக் கட்டிக் கொண்டு, பழைய வாயில் சேலையைத்தான் உடுத்தியிருக்கிறாள். கண்களில் ஒரு புத்தொளி. இதழ்களில் ஒரு மென்மையான நாணம் கவிந்த புன்னகை... இவளுக்குப் பண்டிகைக்கென்று ஒரு சேலையும் ஜாக்கெட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் திருக்கை வலை வாங்கிவிட்டதால் பணம் ஒதுக்க இயலவில்லை. சட்டைப் பையில் ஒரு பத்து ரூபாய் நோட்டு மட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறான். அந்நாள் ஆண்டகையிடம் விஷயம் பேசிச் சுமுகமாய்த் தீர்ந்திருந்தால், அவன் உற்சாகமாக அங்கேயே துணியெல்லாம் வாங்கி வருவதாக ஏலிக்கும் வாங்குவதாகப் பணம் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தான். எதுவும் திட்டமிட்டபடி நடப்பதில்லை.
“என்னம்ப்பு யோசனை செய்றீம்?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்குத் தட்டில் சீடையும் முறுக்கும் பழமும் வைத்துக் கொடுக்கிறாள். பிறகு அவளுடைய தகரப் பெட்டியைத் திறந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொண்டு வருகிறாள்.
பச்சையில் பெரிய பெரிய இலைகள் போட்ட வாயில் சேலை; மினுமினுப்பான பச்சைத்துணி, ரவிக்கைக்கு.
“என்னக்கு, சீலை, ஸியா மூட்டக்காரர்கிட்ட வாங்கித் தந்திச்சி, இருவது ரூவா. ஜாக்கெட் துணி மூணு ரூவா... நல்லாயிருக்கா?...” அவன் மௌனமாகக் கையால் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“இதத் தச்சிக் குடுக்கிறானாண்டு அந்த சூசையிட்டப் போன. அவெ எப்பிடியோ பாத்திட்டு, பொறவு வாரன் வூட்டுக்கு, அளவெடுக்கண்ணா, அவனைக் கொல்லலாமிண்டு வந்திச்சி...” அவளுடைய கரிய விழிகள் ஈரமாகின்றன.
“ஸியாகிட்டச் சொன்ன. அந்தப்பய முழியைத் தோண்டிப் போடறமின்னாரு. ஃபிரான்சிஸ்கா அக்கா, நாத் தச்சுத்தருவே. ஆனா, மிசின் தூத்துக்குடில இருக்கு, தச்சிக்குடுத்தனுப்புறேங்கா...” முட்களாய் குத்தும் ஒரு சமுதாயத்தில், மென்மை மிகுந்த அவள் வாழத் துடிப்பதை நினைக்கையில் மரியானுக்குத் தானே குற்றவாளியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. அவன் எழுந்து அவளைத் தாங்கி ஆறுதல் கூறுகிறான்.
“ஏலியா, நீ வருத்தப்படாண்டாம். நான் எப்பவும் உன்னக்க நெனப்பாகவே இருக்கே. லில்லிப்பொண்ணு பண்டியலுக்கு வார இல்ல. அவ கன்யாஸ்திரீயாப் போறமிண்டு எழுத்தனுப்பியிருக்கா. வூட்ட பண்டியலாவே இல்ல. கொஞ்சம் பொறுத்திரு. நாம எப்பிடியும் கெட்டிப்போம். பின்ன ஒரு பய மூச்சுப் பரியமாட்டா. எதுனாலும் எவனாலும் பேசுனா, அவென வெட்டி வரிப்புலியனுக்கு எரயாப் போடுவம்... ஓம் மனசு எனக்குத் தெரியும்... ஏனளுகாபுள்ள?...”
அவள் கண்களைத் துடைக்கிறான்.
அவள் முகத்தில் சம்மனசுகள் இறங்கிவிட்டாற் போன்று அழகிய ஒளி பரவுகிறது. காகிதப் பொட்டலத்திலிருந்து அவனுக்கு வாங்கி வைத்திருக்கும் கைலியையும் கூரான காலர் வைத்த சட்டையையும் பிரிக்கிறாள்.
“ஸியாதாம் நாஞ் சொன்னமிண்டு இது வாங்கியாச்சு வந்ததா... இது ஒங்கக்க புடிச்சிருக்கா? நல்லாயிருக்கா?...”
பச்சைக்கரை போட்ட அந்த வேட்டியையும் வழுவழுவென்று ஈரம் ஒட்டாத அழுக்கு ஒட்டாத அந்த நீலக் கலர் சட்டையையும் பார்த்து அவன் கண்கள் கசிகின்றன.
“நீ இம்புட்டுப் பிரியம் என்னிட்ட ஏம் வச்சிருக்கியே, நா ஒன்னக்க ஒண்ணுமே செய்யலியே?...” என்று கரைந்து போகிறான்.
“நீங்க ஒண்ணும் செய்யாண்டாம், ராசா. எனக்குப் பாடு படச் சீவனிருக்கி. அந்த அலவாய்க்கரயில, ஒவ்வொருத்தனும் துரிச்சிப் பாக்கறப்பதா நா குறுகிக் குன்னிப் போற. ஒருக்க காவலவிட்டு நா ஓடி வந்தே. பாவம் செஞ்சே. பின்னக்க நீ காவலில்லாம நில்லு. உன்னிய கழுவுகள் கொத்தட்டும். பாவிண்டு மனிசங்க சொல்லால சொல்லட்டுமிண்டு தனிச்சி நிக்கேன்...” அவள் விழி இதழ்களும், உதடுகளும் கண்ணுக்குத் தெரியாத காற்றில் துடிக்கும் தூசிபோல் துடித்து, கண்ணீரைக் கன்னங்களில் புதிதாகப் பெருக்குகின்றன.
அந்தக் கரிப்புக் கன்னங்களில் அவன் முகம் பதிகிறது.
“நானும் பாவஞ் செய்தேண்ணு எம்மேல கோவிச்சிக்கிறியா ஏலி?... நீ கவலிக்காத. நிச்சியமா நாம கெட்டிக்கத்தாம் போறம். ஒரு விடியக்காலயில, மஸனாவிக் கெட்டா, நா ஒனக்குத் தாலி கெட்டுவே...”
கடல் அலைகள் சூழ்ந்து அவர்களுக்கு ஆசீர் அருளுவது போன்று செவிகளில் அலையோசை துல்லியமாக விழுகிறது. விர்ரென்று காற்றுப் புகுந்து நடுக்க ரோமாஞ்னம் உண்டாகிறது.
அடுப்பிலே அவள் காப்பிக்கு வைத்த நீர் கொதித்து வற்றுகிறது. காய்ந்த முட்செடிச் சுள்ளிகள் எரிந்து தணிந்து சாம்பல் நீறுபூத்துவிட்டன.
இந்த உலகு மறந்த நிலையில் கடலோசையின் மலர்மாலைகள் மட்டுமே அவர்களுக்கு உண்மையாகத் தோற்றுகின்றன.
கணங்கள் நழுவினவா, யுகங்கள் தேய்ந்தனவா என்று உணர்வில் உறுத்தாத அந்த நிலையில் எங்கோ கனவுலகின் ஆழத்தில் ஒலிப்பதுபோல் குரல்கள் ஒலிக்கின்றன.
ஒரு தாயின் ஓலம்...
“ஐயோ, புள்ள... எம்புள்ள...!” துருப்பிடித்த ஆணி, குருதி புண்ணில் இறங்குவது போன்று அக்குரல் அவனுடைய பிரக்ஞையைக் குத்திக் கனவு நிலையைக் கலைக்கிறது.
யார் யாரோ பேசும் குரல்கள்.
“ஏதேனம் சண்டையா? கை கலப்பா?...”
அவன் சரேலென்று குடிலின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகிறான். பன மட்டைகள் உராயும் ஓசையும் கடலலைகளின் ஓசையும் பின்னணிக்குச் செல்ல, முன்னணியில் பல குரல்கள் மோதுகின்றன. அவன் மணலில் கால்கள் பதிய, கலவரமடைந்த இதயம் குலுங்க, விரைந்து கோயில் பக்கம் நடக்கிறான். என்ன கூட்டம்? கோலாகலங்களான ஆரவாரங்களும், உயர்ந்த ஒலி பெருக்கியிலிருந்தெழும்பிய தேன் குரலின் கீத ஒலிகளும் ஒரு தாயின் ஓலத்துக்கு இடமளிக்க மடிந்து வீழ்கின்றன.
“படய்க்கம் வாங்கக் காசு இப்பம்தானேலே கேட்டே. ஐயோ, மாதாவே நானென்ன பாவஞ்செய்தேண்டு இப்பிடிக்க தெண்டனை குடுத்தே...!”
உடலின் ஒவ்வொரு அணுவும் பீதியில் விறைத்து நிற்க மரியான் அது ஆத்தாளின் குரலென்று உணருகிறான்.
“என்னம்ப்பு... என்னிய என்னாச்சி?” அவன் நா தடுமாறுகிறது.
“மரியானா? உன்னக்க தம்பி... பீற்றர்தா. பய சீடையைப் பாக்கெட்டுக்குள்ளற வச்சிட்டுக் கடையிலா அடிபடய்க்கம் வாங்கியிருக்கான். ஒரு கையில படய்க்கம் - ஒரு கையில சீட, சீடைய வாயில போட்டிட்டுப் படய்க்கத்தக் கீழே போட்டிட்டு வந்திருக்கியா, தவறிப் போயி, படய்க்கத்த வாயில வீசிக்கிட்டா...”
“ஐயோ...!”
ஆயிரம் சாட்டைகளால் அவனை வீசினாற்போல் அந்த ஒலி பிறக்கிறது. அந்த அடி படய்க்கம் தன்னையே துண்டு துண்டாக்கிவிட்டாற்போல் வேதனை தோன்றுகிறது. மறுநிமிடம் அவன் கூட்டத்தை நோக்கிப் பாய்கிறான்.
ஆழக்கடலினின்று அமுதகலசமாய்ச் சந்திரன் எழும்பிய பொங்கிவருகிறான். இந்நேரம் கடலுக்கு யாரும் வரவில்லை; நாளைக்கு நாயராட்சை (ஞாயிற்றுக்கிழமை) என்று கடலின் மீது படிந்த நிலவின் கதிர்கள் அவன் செவிகளோடு மொழிகின்றன. கரை மணலில் யார் யாரோ பேசிச் செல்கின்றனர். இளங்குரல்களின் ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஆனால்... ‘அண்ணே, படய்க்கம் வாங்கத் துட்டு தாண்ணே...’ என்று கேட்டு வந்த இளங்குரல் கடைசியாகிவிட்டது. இனி அவன் குரல் ஒலிக்காது... இனி அவன் பேச்சு ஒலிப்பூக்களாக இக்கரையில் ஒலிக்காது...
நெஞ்சு வெடிக்கப் பெண்பிள்ளை அழுவது போல் அழுதாலேனும் துயரம் கரையுமோ என்று பார்க்கிறான். தொழிலுக்குப் போய்வந்த பின்னர், வீட்டுக்குள் இருக்கப் பிடிக்கவில்லை. ஏலியாவின் வீட்டுப் பக்கமே தடை கட்டினாற் போல் அந்த நினைவுகள் கவ்விக் கொள்கின்றன. செபஸ்தி நாடார் கடை வாசலில் பீடிகுடித்துக் கொண்டு வேறுபலர் பேசுவதைக் கேட்கப் பொருந்தவில்லை. கோயிலின் பின்புறச் சுவரில் சாய்ந்து நின்று, குடித்துவிட்டு வருபவரைக் கண்டு கேலி பேசவோ, ஏசவோ மனம் ஒன்றவில்லை. கடலின் பக்கத்தில்தான் சிறிது ஆறுதலாகத் தோன்றுகிறது. அது அவன் கால்களை வந்து அலப்புகையில், ‘பீற்றர் ஊமையாப் போனதற்கு நீ காரணமில்லை; விசனிக்காதே’ என்று தேறுதல் கூறுவது போல் இருக்கிறது.
என்றாலும்... அன்று அவன் ஏலியாவை நாடிச் சென்றிருக்கவில்லையெனின் பீற்றர் அங்கு வந்திருக்க மாட்டான். அவன் அங்கு வந்திருக்கவில்லையெனின் ஏலி சீடை கொடுத்திருக்க மாட்டாள். அவள் சீடை கொடுத்திருக்காவிட்டால், அவன் அடி படய்க்கத்தைச் சீடை என்ற நினைவில் வாய்க்குள் வீசிக் கொண்டிருக்க மாட்டான்.
அன்று அவன் கோயில் பக்கம் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், லயனலின் ஜீப்பை ஐயன் பிறப்போடு பவனி எழுந்தருளச் செய்ய அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். பாட்டுக் கேட்டுக் கொண்டு நின்றிருந்திருக்கலாம்.
கடந்த காலத்தை எவ்வாறு திருப்பி வைக்க இயலும்?
பீற்றர் ஊமையாகிவிட்டான். நாக்கு எட்டுத் துண்டாகக் கிழிந்துவிட்டது. ஆனால் உயிர் பிழைத்து விட்டான்.
செபஸ்திதான் நாடார் குடிலில் கிறிந்துமஸ்ஸுக்காகத் தகப்பன் வீடு வந்திருந்த ஒரு இளம் டாக்டரைச் சைக்கிளின் பின்வைத்துக் கூட்டி வந்தான். ஜீப்பை ஜோடித்திருந்தார்கள். அது உதவவில்லை.
அந்த டாக்டர், இவனைப் பார்த்துவிட்டு நாகர்கோயில் ஆசுபத்திரிக்குத் தூக்கிப் போனால்தான் எதேனும் செய்ய முடியும் என்றான்.
கன்னிபுரம் கடற்கரையில், கிறிஸ்து நாதர் பிறந்த அந்நாள் இரவு ‘பண்டியல்’ பீற்றரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற பின்னரே வந்திருக்கும். பெஞ்ஜமினும், அகுஸ்தீனும் டெயிலர் சூசையும், அந்நாள் செய்த உதவிகளை என்றுமே மறக்க இயலாது. எங்கோ சென்ற லாரியை நிறுத்தி, அதில்தான் பையனைக் கொண்டு சென்றார்கள். கிறிஸ்து நாதர் பிறந்த போது தொடங்கிய துன்பம் தவசு மாதத்தின் துக்க நாட்கள் அனைத்தும் துக்கமாகவே தொடர்ந்து சென்றது. ஆத்தா ஆஸ்பத்திரியோடு, பிள்ளையோடு இருந்தாள்.
ஆசையோடு வாங்கிய திருக்கை வலையை, நானூறு ரூபாய்க்கு விற்றான். ‘தங்காலம்’ ஓடிவிட்டது.
கிறிஸ்து நாதர் எப்போது பிறக்கிறார், எப்போது மரிக்கிறார்? உண்மையில் கிறிந்து நாதர் நற்கருணையாக மாறி எல்லோருடைய உடலிலும் கலக்கிறாராம். சாரத்தை அருந்தும் குரு...சாமி, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறார். பெஞ்ஜமின் தம்பிக்கு பிறந்த குழந்தை ஞானஸ்நானம் பெறவில்லை. ஊர் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறது. குடிமகன் உரிமை முதல், இரண்டுபட்டுவிட்டது. திருப்பலிப்பூசை தோறும் அபராதம் கட்ட வேண்டும் என்று சாமி சொல்கிறார்.
மனசில் விண்டுரைக்க முடியாத ஆற்றாமை அழுத்துகிறது. அவன் ஆஸ்பத்திரிக்கும் ஊருக்குமாக அலைந்து கொண்டிருந்த நாளில் அப்பன் சாளவலையை எடுத்துச் சென்று பாரில் போட்டுக் கிழித்துவிட்டார். நசரேன் ஒருநாள் நாகர்கோயில் ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தானாம். கன்னியாகுமரிப் பக்கம் தொழில் செய்வதாகவும், ‘நல்ல விருத்தி’ என்றும் சொல்லி ஆத்தாளிடம் செலவுக்கு ஐம்பது ரூபாய் பணமும் கொடுத்தானாம். கண்களில் கனிந்த முத்தைச் சுண்டி எறிகிறான் மரியான். இந்தத் தோழமை அன்புக்கு உவமை யேது? வலைகள் ஏதுமில்லாமல், கிடைத்ததில் பாதி எவ்வாறு கொண்டு வரமுடியும்? அறுபதுபங்கு மரச் சொந்தக்காரனுக்கு; பிறகு மிஞ்சியதிலும் பங்குதான் கிடைக்கும்.
இரண்டும் மூன்றும் கூலி வாங்கி அவன் எந்நாள் முன்னேறப் போகிறான்? அப்பன் இரண்டு, ஒன்று என்று கொண்டு வந்தால் குடிப்பதற்கே வைத்துக் கொள்கிறார். ஆத்தாளும் கூட முன்போல் மீன் வாங்கிக் கருவாட்டு வியாபாரம் செய்ய எல்லா நாட்களும் செல்வதில்லை. அப்பன் வாயில் வசை தவிர நற்சொல்லே பிறப்பதில்லை. அதனால் தானோ என்னவோ, கருத்தாக அப்பனுக்கு ஆத்தாளே சாராயம் வாங்கி வந்து வைத்து விடுகிறாள்; ஒருகால் அவளும் பாவிக்கிறாளோ என்று கூடத் தோன்றுகிறது அவனுக்கு. மேரியையும் செயமணியையும் நினைத்தால்தான் நெஞ்சு நைந்து போகிறது. எவ்வளவு பொறுமை! பன நார் கிழித்துக் கிழித்து விரல் தேயப் பெட்டியும் தட்டும் முடைந்து வாரத்துக்கு ஏழு எட்டு சம்பாதிக்கிறார்கள். அடுப்பில் அதனால்தான் பூனை தூங்கவில்லை.
மலையாளத்திலிருந்து அல்பிசாத்தபடி வருத்தி, பால் நாடான் கைத்திறத்தில் சந்தத்துடன் உருவாகப் போகும் மரத்தைப் பற்றி கனவு கண்டான். வலைகளே இல்லாமல் கூலி மடியாக மாறும் நிலைமைக்கு வந்துவிட்டானே!
முன்பு நசரேனின் மாமன் வந்து அழைத்தபோது இவனும் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. வலைக்காரனாக ‘மிசின் போட்’டில் இருந்தால் அதில் ‘பாடு’ கிடைப்பது அதிகமல்லவா?
புண்பட்ட நெஞ்சுக்கு இந்த எண்ணம் ஆறுதலாக இருக்கிறது. தூத்துக்குடிக்கோ வீரபாண்டிக்கோ சென்று அவன் அவ்வாறு ஒரு வலைக்காரனாகத் தொழில் தேடலாம்.
வீட்டிலே சோகம் கவிந்த சூழலை உருவாக்கியிருக்கும் ஊமைப் பையனையோ, ஆத்தாளையோ அப்பனையோ பார்க்க வேண்டாம்.
அவன் வீடு திரும்பி வந்து வாயில் முற்றத்தில் படுக்கிறான். நிலவு பாலாய்ப் பொழிகிறது. சித்திரைப் பௌர்ணமி. கோடைக்காற்று துவங்கும் காலம் வந்துவிடும்.
மேரி, தம்பிக்கு ஏனத்தில் சோற்றையும் ஆணத்தையும் மசித்து வாயில் ஊட்டி விடுகிறாள். துடிதுடிப்பாக இருந்த அந்தப் பையன், அடிபட்ட நாய்க்குட்டி போல் சுருண்டு ஆத்தாளின் அருகில் படுத்துக் கொள்கிறான்.
அவனுடைய வாழ்வு... இந்த ஊனத்துடன் எவ்வாறு செல்லப் போகிறது? சக்கிரியாஸின் தம்பி ஒரு பயல். அந்தக் கரையில் அரைப்பைத்தியமாகப் பேச்சு வராமல், உதடு தொங்க, உளறி உளறிப் பேசுவான். கடற்கரை நெடுகிலும் அந்தோணியார் பட்டத்தலையும் ராயப்பர் வாளியும், கோணல் உடம்புமாக அந்த அரைப் பைத்தியம் அலைவான். திடீரென்று ஒருநாள் வீட்டில் காலையில் அவனைக் காணவில்லை. மறுநாள் அலைகள் அவனை ஒதுக்கியிருந்ததைச் சிப்பி அரிக்கும் இசக்கிமுத்து கண்டுவந்து சொன்னான். அண்ணன் பெண்சாதியும், மற்றவர்களும் அவனை ஏசிப் பேசுவதும், சோறு போடவும் மனமின்றித் துன்புறுத்துவதும் காணச் சகியாமல் ஆத்தாளே அவன் இடுப்பில் கல்லைக்கட்டிக் கடலில் தள்ளிவிட்டாள் என்று கூடச் சொன்னார்கள். தாய்க்கும் கூடப் பாரமாகிவிடும் ஒரு அபாக்கியவானாக அப்படி இவனுமாகி விடுவானோ?
அவனையுமறியாமல் வானைப் பார்த்துக் கொண்டு முற்றத்தில் கிடந்தவன் கண்களில் நீர் வழிந்திருக்கிறது.
மேரிதான் அவனைத் தொட்டசைத்திருக்கிறாள்.
“அண்ணே, சோறுண்ணவாண்ணே... அண்ணே...?”
அவள் கையைப் பற்றிக் கன்னத்தில் வைத்துக் கொள்கிறான்.
“அண்ணே... அண்ணே, ஏனளுகா...! நீரு கண்ணீருவுட்டா, எனக்கும் அழுவையா வரும்...”
“இல்ல... இல்ல மேரி, தூள் விழுந்திற்று” என்று சொல்லுகையில் குரல் நெகிழ்கிறது.
“பொய் சொல்லுறீம். அண்ணே, நீங்க சிரிச்சிப் பேச இல்லேண்டா, எப்படியோ இருக்கி. எங்களுக்கும் வூடு கடுத்தமாப் போச்சி...”
“மேரி நாளைக்கு நான் இந்தக் கரைய வுட்டு வேற கரைக்குத் தொழில் செய்ய போவலாமிண்டிருக்யே... நீ யாரிட்டயும் சொல்லாத...”
“ஏண்ணே...? நீங்களும் வீட்டுக்கு வார இல்லேன்னா, நாங்கென்ன பண்ணுவம்...?”
“எம் மனசு முள்ளாப் புடுங்கிட்டிருக்கி. நா சுத்தவாளனாயிருக்யணுமிண்டு நினச்சாலும் இருக்க முடியாம தோழ்சவாளனாயிட்டம்... தொழில் சரியில்ல; நீ ஆத்தாகிட்ட இப்பம் ஒண்ணுஞ் சொல்லாதே. மேரிப்பொண்ணு, நான் எப்பிடியும் மரம் சொந்தத்துக்கு வாங்கணும். வலை பிரயணும். நாம் போறம். பின்னக்க ஒருநா வருவே...”
குசினிக்குச் சென்று சோறுண்ணுகிறான். மீண்டும் வெளிமுற்றத்தில் பாயை விரித்துத் திறந்த வெளியில் படுக்கிறான். சர்க்காரு கடனுக்குப் படகு வாங்கிக் கொடுத்தால் வாங்கித் தவணை கட்டிக் கொள்ளலாம். உடலில் வலுவும் நம்பிக்கையும் இருக்கின்றன. தொழில் செய்வான்; உழைப்பான்...
யாரோ முற்றத்துக் கதவைத் தள்ளிக் கொண்டு வரும் அரவம்...
“மச்சா...!”
விருட்டென்று மரியான் எழுந்து உட்காருகிறான்.
“நசரேனா...? மாப்ளே!”
“மேரி...? விளக்கெடுத்திட்டுவா புள்ள...”
நண்பனைக் கண்டதும் நெஞ்சம் உருகுகிறான்.
அவன் வாசற்படியில் நிற்கிறான். மேரி விளக்கைத் தூண்டுகிறாள். விளக்கொளியில் ஆத்தாதான் முதலில் எழுந்து அவனைப் பார்க்கிறாள்.
“தோத்திரம் மாமி! மாமா - தோத்திரம் சொல்லுதேன்...”
“வா மக்கா” என்று குரல் கொடுப்பவளுக்குக் குரல் நெகிழ்ந்து போகிறது. மேலே சொல் பிரியவில்லை.
“மாமி, எப்படி... இம்மாட்டு அடையாளம் தெரியாம போயிட்டீரு?... பீற்றர் இப்ப எப்படியிருக்யா? சோறு தண்ணீ சாப்புடறானா?...”
“மயிச்சி மயிச்சிக் குடுக்கா. பேச்சுதான் அடச்சிப் போச்சு...”
“அட, பேச்சுப் போனா மயிருபோச்சி. உயிர் பிளச்சது பாரும்? மாமா எப்படி இருக்காரு? தொழிலுக்குப் போறாரில்ல...”
அப்பன் குரல் கேட்டுக் கட்டிலில் எழுந்து உட்காருகிறார்.
“நசரேனா?...
“தோத்திரம் மாமா...”
“தொழில் எப்படியிருக்கி?...”
“பரவாயில்ல இப்பம் நாலு பேராத்தான் சேந்திருக்கம். விருத்தியாவுமிண்ணுதான் தோணுது. இன்னொரு மிசின் போட்டும் இது மாதரியே பங்காளியா நாலஞ்சு பேரு சேர்ந்தெடுத்துத் தொழில் பண்ணலாமிண்டு மாம ஜானையும் வாரக் காட்டிட்டிருக்யா... மாமா, கலியாணம் கூடி, பறவாசிப்பெல்லாமாயிற்று...”
ஒரு குற்ற உணர்வோடு அவன் இதைச் சொல்வது போலிருக்கிறது. சில நிமிடங்கள் கடலலைகளின் ஓசை மட்டுமே கேட்கிறது. “ஆமா...?” என்று மௌனத்தை மரியான் கலைக்கிறான்.
“வர்ற பொதங்கிளமை கலியாணம் அங்கியே எல்லாரும் போயிடலாமிண்டிருக்கம். லில்லிப் பொண்ணையும் சீமோனையும் தூத்துக்குடிலியே ஸ்கூல்ல சேர்த்துப் படிக்கப் போறதாவும் வீட்டக் காலிபண்ணிற்றுப் போயிடலாமிண்ணு நினச்சிருக்கம். மரத்தை விட்டுப் போட்டுப் போறம் மச்சா, நம்ம குடும்பங்களுக்குள்ள தொடுப்பு விட்டுப் போயிரப் படாதுண்டு எனக்கு... நீ ஒரு வெல போட்டு எடுத்துக்க.”
“மாப்ள...!”
“நீங்கள்லாம் கலியாணத்துக்கு வரணும். மாமி, உங்கக்க புள்ளயாட்டம் இங்கே இருந்தவே நா...”
ஆத்தா கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.
நசரேனுக்குத் தூத்துக்குடியில் கல்யாணம். ஓலை வாசிப்பு, நிச்சயதார்த்தம் பெண் - பிள்ளை வீட்டார் இருவர் சார்புக்கும் தூத்துக்குடியில் நிகழ்ந்துவிட்டது. கன்னிபுரத்தில் நசரேன் வந்திருக்கிறான்; மாப்பிள்ளை சவரம் செய்து கொள்ளும் வைபவம். மணமகனை மணையில் அமர்த்தி, ‘குடிமகன்’ வந்து சவரம் செய்யப் போகிறான். கன்னிபுரத்தில் எட்டுக் குடிமகன் குடும்பங்கள் உண்டு. பரவரின் வாழ்விலும், சாவிலும் வந்து பணி செய்யும் உரிமையுள்ள குடிமகன் பரம்பரையாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்டு. குழந்தை மண்ணுலகில் விழுவதற்கு மருத்துவம் பார்க்கவே இவர்கள் பெண்மக்கள் தாம் வருவார்கள். திருமணச் சடங்கில் இவர்கள் பங்கு மிக முக்கியமானதாகும். மேளம் வாசிப்பதும் குடை சுருட்டி, குடை பாவாடை ஆகிய சின்னங்களைத் தூக்கிக் கொண்டு ஊர்வலங்களில் முன் செல்வதும் குடிமகன் உரிமைகள்தாம். இறுதிச் சடங்கிலும் இவன் இன்றியமையாத பணியை ஆற்றுகிறான். ஒரு பரவனை மண்ணுக்குள் அடக்கம் செய்ய, மண்ணை அகழ்ந்து குழியெடுப்பவன் குடிமகன் தான். நசரேன் குடும்பத்தினருக்கு இந்த ஊழியங்களைச் செய்யும் உரிமையைச் சக்கிரியாவின் குடும்பத்தினர் பெற்றிருந்தனர். வழிவழியாக வந்த இந்தத் தொடர்பு, கோயில் தெறிப்புக் குத்தகை காரணமாக ஒரு சங்கடமான நிலையில் வந்து முடிந்திருக்கிறது. நசரேனும் ஜானும், மரியான், பெஞ்ஜமின் ஆகியோரைப் போல் கோயில் மகிமையைக் கட்டாமல் எதிர்க் கட்சிக்காரர்களாக இருந்ததால், அவர்களுக்குக் கோயில் ஆணையை மீறி ஊழியம் செய்ய அவன் வரவில்லை. சாமி, இக்குடிமகன்மாரைப் பிரித்து விட்டால், எதிர்க்கட்சி அமுங்கி விடுமென்று அவர்களை அழைத்து இவ்வாணை பிறப்பித்ததை நசரேனோ, மரியானோ அறியார். ஆனால், இந்தச் சடங்கில், குடிமகனுக்கு வரக்கூடிய வரிசைகள் குறைந்ததல்லவே?
சக்க்ரியா வரவில்லையானால் போகிறான், நான் வருகிறேன் என்று சவரப்பெட்டியை எடுத்துக் கொண்டு இசக்கிமுத்து வந்து விடுகிறான். வழக்கமாக இந்தச் சடங்குக் கோலாகலத்துக்கு ஊரைக்கூட்டும் அளவில் செய்தி பரப்புவதையே அவர்கள் தாம் செய்வார்கள். நசரேனின் வீட்டு முற்றத்தில் மணைபோட்டு, கடலைப் பார்த்து அவனை அமர்த்தி இருக்கின்றனர். குடிமகனுக்கும் புதிய வேட்டி போன்ற சிறப்புகள் உண்டு. பெண் வீட்டைச் சேர்ந்த இளைஞர், மைத்துனர்மார் இதற்கென்றே காரைப் போட்டுக் கொண்டு வந்து கூடியிருக்கின்றனர். நசரேனின் சோதரி, ரோசிதா, பெஞ்ஜமின் மனைவி, மேரி, செயமணி என்று இளவயசுப் பெண்கள் இங்கே வேடிக்கைக்கும் கேலிக்கும் வந்திருக்கின்றனர். பிச்சமுத்துப்பாட்டாவும், குருஸ் தாத்தாவும் முதியவர்களாக வந்து குந்திவிட்டனர். ஒரு பெரிய வெள்ளிக் கும்பாவைச் சந்தனத்துடன் கொண்டு வந்து ரோசிதா வைக்கிறாள். மாப்பிள்ளை மணைக்கருகில், இசக்கிமுத்து, தன் கடையைப் பரப்புகிறான். கத்தியைத் தீட்டுகிறான். சோப்பைக் குழைத்து அவன் கன்னத்தில் தடவிவிட்டு, கத்தியால் ஓர் இழுப்பு இழுத்துவிட்டுக் கீழே வைக்கிறான்.
உடனே மாமன் மகன் தோமை, பெண்ணின் அண்ணன், இரண்டு வெள்ளி ரூபாய்களை எடுத்து முதலில் வெள்ளிக் கும்பாவில் போடுகிறான். மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் மேலென்று காட்டிக் கொள்ள வேண்டாமா? நசரேனின் சிற்றப்பன் மகன் ஜார்ஜ் உடனே இரண்டு ரூபாய் நோட்டையும் மேல் ஒரு ரூபாய் நோட்டையும் சபைக்குக் காட்டிவிட்டுக் கிண்ணத்தினருகில் வைக்கிறான்.
உடனே பிள்ளை வீட்டான் கொடையில் பின் தங்குவானா? பிள்ளை வீட்டின் சார்பில் ஐசக்கு மூன்றரை என்று அதிகமாக்குகிறான். சே, எட்டணா என்ன? சில்க் சட்டையும் தங்கக்கடியாரமுமாக வந்திருக்கும் பெண்ணின் தாய்வழி மாமன்மகன் ஓர் ஐந்து ரூபாய் நோட்டெடுத்து வைக்கிறான். “பெரிய இவுரு, அஞ்சுரூவா நோட்டு வைக்கான்!” என்று ஐந்தோடு ஒரு குட்டியை எட்வின் சேர்க்க, மரியான் ஆறு ரூபாயாக வைக்கிறான். “லே, நாங்க கொடைக் குடும்பம்?...” என்று பெண்ணின் சின்னாத்தா மகன் அம்புரோஸ், பத்து ரூபாய் நோட்டெடுத்து வைக்கிறான். கூச்சலும் கோஷமும் சிரிப்பும் கைத்தட்டலுமாக முற்றம் கலகலக்கிறது. நசரேன் கையில் போட்டிருக்கும் முக்கால் பவுன் மோதிரத்தையே கழற்றிச் சந்தனக் கும்பாவில் போட்டு, இந்தப் போட்டியை முடித்து வைக்கிறான்.
இந்தச் சளைக்காத போட்டிக் கொடை, இசக்கிமுத்துவின் வாயெல்லாம் பல்லாக மலரச் செய்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்குச் சொகுசாக மீசையை அழகுபடுத்திச் சவரத்தை முடிக்கிறான். விருந்தினர் அனைவருக்கும் இலை போட்டுப் பழமும் இட்டிலியும் பணியமும் கொண்டு வந்து இளம் பெண்டிர் உபசரிக்கின்றனர். இசக்கிமுத்து, பலகாரம் உண்டு, மோதிரமும், முப்பது ரூபாய் பணமும் புதிய வேட்டியும் தலைச்சுற்றுமாகத் தன் குடிலுக்குத் திரும்புகிறான். ஏலியாவின் குடிலைத் தாண்டி அவன் செல்கையில், வழியில் சக்கிரியாவின் தலைமையில் ஏழெட்டுப் பேர் இவனை எதிர்த்து வழி மறிக்கின்றனர்.
“வையிலே கீழே, எல்லா வரிசையும்? நாய்மவெ. எங்க வளமைக்கார வீட்ட வரிசை வாங்கியார? எம்புட்டு? மோதரம், தலைக்கட்டு...”
சக்கிரியா பனை ஏறுவான். குடிமகன் குடுபங்களுக்கே தலைவன் போன்ற கர்வம் உடையவன். திரணையும் கரணையுமாகத் தசைகள் இறுகிய வாட்ட சாட்டமான ஆள். இசக்கியோ வலுவில்லாதவன். அச்சத்துடன் பணத்தையும் தலைக்கட்டு வேட்டியையும் எடுத்துக் கொடுத்து விடுகிறான். ஆனால் மோதிரம்... அதை எப்படிக் கொடுப்பான்?
“மரியாதியா மோதிரத்தையும் களட்டி வையி. இந்தா, சவரத்துக்குக் கூலி ஒரு ரூபா... எடுத்திட்டுப் போ...”
ஒற்றை ரூபாய்த்தாளைப் பறக்க விடுகிறான் சக்கிரியா. மோதிரத்தைக் கொடுக்கக் கூடாதென்று இசக்கி, தன் மகன் பச்சையைக் கூவி அழைக்கிறான். “லே பச்சேய்...!”
பச்சைக்குப் பதினாறு வயசு திகையவில்லை. கச்சலாக இருப்பான். ஆனால் இரும்பு உடல். கையால் ஒரு பிடி பற்றினால் எலும்பு நொறுங்கிவிடும். கடலுக்குப் போகிறான்.
“மோதிரத்தைக் கீளவையின்னா ஏண்டா மவனெக் கூப்பிடுதே? ஒன்னக்க முளிய நோண்டிக் கடல்ல தள்ளிருவம்! எடுரா...?” சக்கிரியா இவன் மீது பாய்ந்து விட்டான். கை மோதிரத்தை அவன் உருவி எடுக்கு முன் அவன் கழுத்தை நெறிக்கப் பச்சை அவன் பின் வருகிறான். பற்களைக் கடித்துக் கொண்டு முகம் பயங்கரமாக மாற, அவன் கழுத்தை நெறிக்க வருகையில் சக்கிரியா தன் இரையை விட்டு உயிர்தப்பும் விலங்காக அவன் கைகளைத் தன் வலுவான கையால் அகற்றப் போராடுகிறான். இசக்கி மெல்ல அவன் உடலின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு வந்து, அவன் தலை முடியை உலுக்க, சக்கிரியா திமிறித் தலையாலேயே அவனை மோதித் தள்ளுகிறான். இந்தக் கைகலப்பு, பெண்களைக் கிலியிலாழ்த்தி விடுகிறது. “ஐயோ, கொல பண்ணுறானுவளே, கொல... கொல...” என்று ஒருத்தி கத்துகிறாள். யாரை யார் அடிக்கிறார்கள் என்பது புரியாமல் மணலில் கட்டிப் புரளுகின்றனர். தடிகள் வருகின்றன. இசக்கியின் மேலெல்லாம் காயம். பல்லால் கடித்தும், கீறியும் மோதியும் குருதி கசிந்திருக்கிறது. சக்கிரியாவின் பயல் மதியாஸ் எங்கிருந்தோ மிதப்புக் கட்டை ஒன்றைத் தூக்கி வந்து பச்சையின் மண்டையில் போடுகிறான். அது படாத இடம் பட்டு, அவன் மணலில் வேர் பறித்த இளமரமாகச் சாய்கிறான். தலையில் குருதி ஒழுகுகிறது.
“ஐயோ கொல பண்ணிட்டானே...!”
ஓலக்குரல் கடலோசையில் பட்டு எதிரொலிக்கிறது. திருமண மாப்பிள்ளை, வெந்நீரில் நீராடிப் புத்தாடை தரிக்கவில்லை. இங்கே ஒரு கொலை விழுந்து விட்டது. மோதிரம் ரத்தக் களறியில் குளித்து மணலில் உருண்டு கிடக்கிறது. வேட்டி, ரூபாய்நோட்டுகள் எல்லாமே மணலில் சிதறி வீழ்ந்து தமக்குரிய மதிப்பை இழந்து அவலமாகக் காட்சி தருகின்றன.
மரியான் ஏலியின் குடிலைக் கடந்து சென்று பார்க்கிறான். நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது.
காலைப்பரிதியின் செங்கதிர்கள் அன்றாடம் கடற்கரையில் அரங்கேறும் காட்சிகளைக் காண விரைந்து வருகின்றன. ‘இந்நாள் உன் மைந்தருக்கு நான் அளந்திருக்கும் படி. பார்த்துக் கொள்’ என்று கடலலைகள் கரையை அலப்புகின்றன. மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் ஊர்த் தொழிலாளரும் ஆண்களும் பெண்களுமாக மொய்க்கும் கரையில், சாளையும், களரும், காரலும், நகரையும், கிளிமீனும், கீச்சாமீனும், குரங்கு மீனும், சப்பளி மீனும் பன்னாகத் தாழையும், பல்கிளிஞ்சானும் வண்ண அழகுகளாய் இரைந்து கிடக்கும் கரையில், அந்நாள் அப்பன் இருதயமும் மகன் மரியானும் நாயகராகத் திழக, ஆழ்கடலில் ஆயிரங்கால் தூண்டிலிட்டுப் பெரிய மீன்களைப் பிடித்து வந்திருக்கின்றனர். பல தூண்டில்களில் இரையை வைத்து விசிறிபோல் வீசி ஒன்றாக இணைத்து நங்கூரமிட்டுக் கொண்டு ஒரு பகலும் இரவும் காத்திருந்து போராடி, சிறியதும் பெரியவையுமாக, நான்கடி, மூன்றடி நீளங்களுக்குக் குறையாமல் ஐந்து சுறாக்களைப் பிடித்து வந்திருக்கின்றனர்.
ஸ்ரா...! ஸ்ரா...! பெரிசு...! என்று காற்றில் அலைகள் மந்திரிக்கும் குரல்கள் எத்துணை ஆனந்தத்தை இதயத்தில் நிரப்புகின்றன! கரையில் மரம் ஒதுங்குமுன் மீன்களை மணலில் வெற்றி வீரர்களாக இழுத்துப் போடுகின்றனர்.
துவிக் குத்தகைக்காரர் விரைந்து வருகிறார் - மொத்தம் பதினைந்து துவிகள்...
மரியான் மரத்தைச் செல்லமாகத் தொட்டு முத்தமிட்டு விட்டு அதைக் கரையேற்றும் பொறுப்பைப் பாச்சல் பிள்ளைகளுக்கு விட்டுவிட்டு விரைந்து மீனின் பக்கம் வருகிறான்.
“ஆரும் கிட்ட வராண்டாம்! இது எங்கக்க சொத்து... எங்கக்க உரிமை... உரிமை...” என்று முழக்குகிறான்.
“என்னியலேய், எங்கக்க சொந்தம்? நாலாயிர ரூபாய்க்குக் குத்தவைவிட்டுப் புடிச்சிருக்கே... போயி சாமியிடம் மோதிக்க! துவி எங்கக்க சொத்து!...” வளைந்த கத்தியுடன் மீரான் வருகிறான்.
“தொட்டிய இப்பம் கொலவுழுகும்!...”
வாள் வீச்சாகக் குரல் ஒலிக்கிறது. அந்த மாமிசங்களை இழுத்துக் கொண்டு வந்த முறுகிய ஆவேசம் அவனுள்ளிருந்து வெறிக் குரலாக வெடித்து வருகிறது. கண்கள் சிவப்பேற, உடலின் செம்மை மினுமினுக்க, உருட்சியும் திரட்சியுமான கருங்காலித் தசைகள் விம்மித் துடிக்க, காண்போரை அச்சங் கொள்ளச் செய்யும் வடிவினனாகத் திகழ்கிறான் மரியான். அவன் அவர்கள் கண்முன்பே, தன் கச்சையிலிருந்து உருவி எடுத்த கத்தியின் வளைந்த அலகினால் ஒவ்வொரு மீனின் செதில்களையும் - துடுப்பையும் வெட்டி எடுக்கிறான். எண்ணெயும் தண்ணீருமாய் கோத்துக் கொண்ட சுருள் முடிகள் நெற்றியில் தவழ, அவன் அவற்றைத் தனியாக வைக்கிறான். அவனைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் இருப்பது போன்று, யாரும் அணுக முடியாததோர் அச்சம் நிலவுகிறது.
இவர்கள் துவி கொடுக்கமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துத் துணிச்சலாகக் கொச்சிக்காரனுக்கு அவற்றை விற்கத் தொடங்கிய பிறகு, இன்றே இவ்வளவு துவிகள் சேர்ந்திருக்கின்றன. அதுவும் உளுவைச் சுறா. எல்லாம் உளுவைத் துவி; முதல் கிளாஸ்!...
“இந்தப் பயலுவ, கடக்கரைய ரெண்டு பண்ணுறானுவ; மீன யாரும் ஏலம் வுடப் போகாதிங்க! போனிங்க...? கொல... கொலவுழும்? வாங்குவாரில்லாம அழுவிப் புழுக்கட்டும்! கடல்ல இழுத்து வுட்டாத்தான் புத்திவரும்! வெள்ளாடுறானுவளா?...” என்று ஜபமாலையான் சவால் விடுகிறான்.
ஐசக் துவிகளை வலைப் பையில் போட்டுக் கொண்டு நிற்கிறான். அவனை அப்பால் செல்லவிடாமல் எதிர்க்கட்சி சூழ்கிறது. பிச்சைமுத்துப்பாட்டாவுக்கு ஏலம் கூற வருவதற்கு இயலாமல் இடுப்புப்பிடி நோவாக இருக்கிறது. ஏலி, வஞ்சிர மீன் ஒன்றை வாங்கி வந்து அவரிடம் கண்டம் போடக் கொடுத்திருக்கிறாள். கடற்கரையைப் பார்த்த குடிலின் வாயிலில் அவர் கத்தியால் அதை வெட்டிக் கொண்டும், இன்னொரு கையால் மீனின் மஞ்ஞையை வழித்து அருகிலுள்ள நாய் நக்கக் கொடுத்துக் கொண்டுமிருக்கையில் பிள்ளைகள் செய்தியைக் கொண்டு ஓடி வருகின்றனர்.
“ஸியா? உளுவைச்சுறா, நெம்பப் பட்டிருக்கி. மரியானண்ணே, இருதயம் மாம மரத்துல. குத்தகைச் சாயபு, கோயில் பாட்டியாளுங்க குக்கி விளிக்கியா... மரியானண்ண துவியை வெட்டிச்சி. பொறவு எல்லாம் கூடிட்டு கொண்டு போக ஏலாதுண்டு பட பொருத நிக்கியா...” சுருக்சுருக்கென்று மீனைக் கண்டமிட்ட கை நிற்கிறது. கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப் போன ஏலி பதறி வருகிறாள். அவளுடைய சீடை எமனாக வந்து பீற்றரின் நாவையும் சொல்லையும் பறித்துச் சென்ற பிறகு அவள் கடற்கரைக்குத் தின்பண்டம் செய்து கொண்டு போய் விற்பதில்லை. மீன் வாங்கி வந்து கண்டம் போட்டுக் கூறுகட்டி விற்றோ, உப்புப் போட்டு உலர் மீன் விற்றோ காசு தேடுகிறாள். சிறு பிள்ளைகள் கொண்டு வரும் மீன்களையே சில்லறைக்கு வாங்கி நாடார்விளையில் கொண்டு கொடுத்து வியாபாரம் செய்கிறாள்.
“ஸியா...? நீங்க... எந்திரிச்சிப் போவ ஏலாதா...? என்னக்கப் பயமா இருக்கி... தூண்டிக்கெளிக்கி ஈசாக்கோலு எல்லாம் வச்சிட்டு அடிச்சிக்கிடுதாண்ணு சந்தியாகு பொஞ்சாதி சொல்லிட்டு ஓடுதா...” பாட்டாவுக்கு இடுப்புப் பிடி நினைவே இல்லை. துள்ளினாற் போன்று எழுந்திருக்கிறார். மார்பின் தளர்ந்த சதை குலுங்க, மணலில் கால் பதிய அவர் விரைகிறார்.
பெஞ்ஜமின் ஈரத்தலையும் உருட்டிக்கட்டிய கைலியும் திறந்த மார்புமாகக் கைகலப்பை விலக்க முயலுகிறான்.
ஜபமாலையானின் கையில் இரத்தம் ஒழுகுகிறது. இருதயம் மாமன் மணலில் சுருண்டு கிடக்கிறார். ஆத்தா கத்துகிறாள். சம்சலம்மா யாரையோ வைது தீர்க்கிறாள். சிலுவை மொடுதவம் கையில் தடியுடன் ஒண்ணரைக் கண்ணனுடன் தான் கோயில் கட்சியாள் என்ற மட்டில் இவர்களை வேரறுக்க வேண்டும் என்று சூளுரைக்கிறான்.
“இந்த வருசன் எனக்கு அம்புட்டும் நஷ்டமாயிட்டு வருவு மாப்ள. படிக்கிப் பாதித் துவிண்ணாலும் குடுக்கச் சொல்லும், நாலாயிரம் குத்தவை எடுத்திருக்கே...” என்று பெரிய சாயபு வந்து பெஞ்ஜமினிடம் நயமாகக் கேட்கிறார்.
“உம்மிய நாங்க குத்தவை கேட்டுக் கட்டச் சொன்னமா? போன வருசம் ஏலம் வுடு முன்னமே நாங்க தீருமானமாச் சொல்லிப்போட்டம்...” பெஞ்ஜமின் உறுதியாகச் சொல்லிவிட்டு, ஐசக்கிடமிருந்து துவிப்பையை வாங்கிக் கொண்டு நடக்கிறான்.
“தரகனாரே? நீ ஏ இந்த மயிராங்கிட்டக் கெஞ்சுதிய? போலீசக் கூட்டிட்டுவாலே! இவனுவளக் குறுக்க முறிச்சிப் போடுவம்?...” என்று சிலுவை மொடுதவம் குடிமகன் சக்கிரியாஸூக்கு உத்தரவிடுகிறான்.
அப்போது இன்னாசியின் படை, தடியும் கோடரியுமாகக் கடற்கரையை நோக்கி வருகிறது.
பச்சையைப் பறி கொடுத்தவன் மற்றவனைப் பழிவாங்க இதுவல்லவா தருணம்? அந்தக் கூட்டத்தைக் கண்ட சாயபு மீரான் அனைவரும் பின்வாங்குகின்றனர். கொச்சிக்காரச் சம்பை இறால்பையுடன் வேடிக்கை பார்க்க நிற்கிறான். பயமறியாத இளம்பிள்ளைகள், சில சிறுமியர் ஆங்காங்கு மணலில் கிடக்கும் மீனையே பார்த்தவாறு நிற்கின்றனர்.
மரியான் புகையிலையைக் கிள்ளி வாயில் போட்டு அதக்கிக் கொண்டு மணலில் எச்சிலைத் துப்புகிறான்.
‘நாம நெத்தத்தக் கக்கித் தொளில் செஞ்சி இளுத்திட்டு வாரம். குத்தவை எடுத்தானாம்...’
மீன்கள் வாயைத் திறந்து கொண்டு கிடக்கின்றன. ஈக்கள் அவற்றின் தூண்டில் மாட்டிய காயத்தில் கசியும் இரத்தத்தில் கடற்கரை மீன்வாடியில் குழுமும் மனிதக் கூட்டத்தைப்போல் மொய்த்திருக்கின்றன. ஆனால், அப்போது மீனை ஏலம் கூறப் பிச்சைமுத்துப்பாட்டா வந்தாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளை அங்கே இழுக்கும் கவர்ச்சியோ வேகமோ இல்லை.
இன்னாசியின் படை மணலில் காவலர்போல் கம்பு குத்தி நிற்கிறது. “பாட்டா? நீரு ஏலம் கூவும்... எல்லாம் வாங்க? மீன் ஏலம் வுடுதா...” என்று சார்லஸ் கூவியழைக்கிறான் வியாபாரிகளை. சைக்கிளில் பெரிய மீன் கூடைகளுடன் கொச்சிக்காரச் சம்பைகள் இங்கொருவர், அங்கொருவராகச் சிலர் வந்து நிற்கின்றனர்.
“மக்கா? மாதா ஆசீரிருக்கு. நாம முடிவு பண்ணினா பண்ணதுதா. மடிப் பெட்டிய இப்படிக் குடு லே!” என்று பிச்சைமுத்துப்பாட்டா அவனை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் அப்பனோ, “என்னம்ப்பு முடிவு...? ஒரு பய தொடக்கூடாதுண்டு இவெ சொன்னா, அவனுவ, ஒரு வியாபாரி தொடமாட்டாண்ணு முடுக்கிட்டுப் போயிட்டா?...” என்று பிரலாபிக்கிறார்.
“அவனுவளக் கொல்லணும். நம்ப எனத்துக்கே துரோகம் செய்யிறானுவ. அவெ வியாபாரி லட்சக் கணக்கில் பணம் மொடக்கிறா. நம்ம ஒழப்பில... நீ ஒண்ணும் முசிக்காண்டாம் மக்கா... இன்னக்கி மட்டும் வியாபாரி ஆரும் வராம போவட்டும். இவனுவள மீனு கண்டம் வய்க்கிறாப்பல வச்சிருவம். நாய்க்கிப் பெறந்தவனுவ, துரோவிப் பயலுவ!”
பாட்டா கத்திக் கொண்டிருக்கிறார். மீனுக்குக் காவலாக நிற்பது போல் நிற்கும் மரியானுக்கு உள்ளத்தில் எரிமலை ஒன்று குமுறிக் கொண்டிருக்கிறது. உச்சிக்கு மேல் ஏலம் கூறிப் போட்டி மேலிட, விலை உயர்ந்து போகும் வாய்ப்பு இல்லாமல் கொச்சிக்காரச் சம்பை, துவி, மீன்கள் எல்லாவற்றையும் இருநூறுக்கு எடுத்துச் செல்கிறார். போட்டி இருந்திருந்தால் இன்னும் நூறு ரூபாய் வந்திருக்கும். மீனை விலை கூறிவிட்டுத் திரும்புகையில் அந்தக் கடற்கரையையே அழித்துவிடப் போதுமான ஆவேசம் அவனுள் கொந்தளிக்கிறது. சரியான ஏலம் போடப் போட்டி வந்திருந்தால் இன்னும் நூறு... நூறு ரூபாய்...?
சென்ற ஆண்டில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் அனைவரும் அவர்கள் பக்கமிருந்தார்கள். இப்போது பயப்படுகிறார்கள்? ஏனெனில் வியாபாரிகள் கோயிலுக்கு எதிராக முளைப்பவர்களுக்கு ஆதரவு காட்டினால் வாழ முடியாது... ஞானஸ்நானத்திலிருந்து, மையவாடியில் இடம் கிடைப்பது வரையிலும் தகராறாகி விடுகிறது.
அடக்க இயலாமல் ஆற்றாமை பொங்கி வருகிறது. கடல்... அதன் வலிமை இந்தக் கோயிலை விடப் பெரிதல்லவா? சாமியைவிடப் பெரிதல்லவா... கடல்... அதுவே மாதா. அதுவே பிதா... அதுவே கடவுள். அதை விட இவன் என்ன? கடல் அவனை ஆசீர்வதிக்கிறது; காற்று அவனுக்கு ஆசீரருளுகிறது.
அவன் முன்பு... சிறு பையனாக இருக்கையில் ஒருமுறை கையில் துட்டுடன் இப்போது நாகர்கோயிலில் வாத்தியாராகத் தொழில் செய்யப் போய்விட்ட நாடார்ப் பையன் அருள் தாசுடன் வடை வாங்கித் தின்றுவிட்டுச் சாராயமும் குடித்தான். பழக்கமில்லாதபடி தலை சுற்றி வாந்தியெடுத்தவனுக்கு அந்த அனுபவம் மிகவும் வெறுப்பாக இருந்தது. மறு சனிக்கிழமை, நல்ல பிள்ளையாகச் சாமியிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்து கொண்டான்.
இன்று அப்பன் சாராயம் ஊற்றித் தருகிறார். இரு நூறு கிடைத்திருக்கிறது. இரண்டு நாட்கள் கடலில் போராடி மீன் கொண்டு வந்திருக்கின்றனர். ஆத்தா பொடிக்காரல் கருவாட்டை வறுத்து வைத்திருக்கிறாள். அதைக் கடித்துக் கொண்டு குடிக்கும் அப்பன் மகனிடம், ‘குடிலே - ஒடம்பு லேசாயிரும்...’ என்று ஊக்குவிக்கிறார்.
அவன் குடிக்கிறான். அன்றுபோல ஓங்கரித்து வரவில்லை. இரண்டு ‘கிளாஸ்’ பருகியதும் ‘சூர்’ பிடிக்கிறது. உள்ளே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. வெளியே நிலா அடிக்கிறது. மணற்கரை சொப்பனபுரி போல் விரிந்திருக்கிறது. வெளியே செயமணியும் மேரியும் சார்லசும் குந்திக்கொண்டு ஏதோ கதை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அவன் இலக்கு இல்லாதபடி சுக்கானில்லாத மரம் போல் மிதந்து செல்கிறான். கடலலைகள் ஏற்றியும் இறக்கியும் அவனை மிதந்து செல்லக் கொண்டு செல்வது போன்றே செல்கிறான். கோயில் முன் எட்வின் வழக்கம் போல் கொடிக் கம்பத்தினருகில் நின்று பேசுகிறான்.
“சவோதர சவோதரிகளே... இப்பம் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... சவாசு! கை தட்டு மாப்ளே! கைதட்டு!” அவனைப் பிடித்துக் கொள்கிறான் எட்வின்.
இவன் கையைப் பலமாகத் தட்டுகிறான். “சவாசு மாப்ளே! சவாசு!”
“சவோதர சவோதரியளே! இந்தப் பாதிரிப் பயல் அயோக்கியன். இவெ கிறீஸ்துநாதர் சொன்னாருண்டு சொல்றான். கிறீஸ்துநாதர் எங்கிய இருக்காரு?...”
கேள்வியைக் கேட்டுவிட்டுக் கையை ஒரு பக்கம் சுட்டிக் காட்டுகிறான். “அதா கடல்ல இருக்கார். ஆமா... கடல்ல... கடல்ல மச்சம் தானிருக்குன்னு நீங்க சொல்றிய. நாஞ் சொல்லுதேன், மச்சமிருக்குண்ணு. மச்சம் பிடிப்பவனுக்கு மிச்சமில்ல... கேட்டுக்கும் மாப்ள. அதனால, அந்தப் பாதிரிப்பயல, ஒளிச்சிக் கெட்டணும்... வாரும் மாப்ள...? படை பொருதுவம்! போர்... போர்...”
அவர்கள் இருவரும் பாதிரியாரின் பங்களாவுக்கு முன் சென்று மண்ணை வாரி எறிகின்றனர். பிறகு வாயில் கேட்டின் மீதேறி நின்று ‘சாமியார் ஒழிக...’ என்று எட்வின் முறை வைக்க, மரியானும் சேர்ந்து கத்துகிறான்.
கதவைத் திறந்து கொண்டு தடியுடன் ‘சீடப்பிள்ளை’ வெளிப்படவே இருவரும் மணலில் ஓடுகின்றனர்.
மரியானுக்கு நல்லறிவு இல்லை. ஓட்டமும் நிலையாக இல்லை. தடுமாறிக் கொண்டும் விழுந்து கொண்டும் பழக்க வேகத்தில் ஏலியின் குடிலுக்கு வருகிறான். வாயிற்படியில் பனநார்க் கட்டிலில் படுத்திருக்கும் பிச்சமுத்துப்பாட்டாவின் மீது விழுகிறான்.
அந்த ஞாயிற்றுக்கிழமையில் திருப்பலிப் பூசைக்கான மணி ‘ணாம்...ணாம்’ என்று முழங்குகையில் ஒரு உட்பொருள் பொதிந்திருப்பதாக மரியானுக்குத் தோன்றுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் கோயில் கட்சியாருக்கும், இவர்களுக்குமிடையே மூண்ட பூசல்களில் பல கொலைகள் நிகழ்ந்து விட்டன. இவர்களை அதிகமாக உலுக்கிவிட்டது. பிச்சைமுத்துப் பாட்டாவைக் குத்திக் கொன்றுவிட்டு எவனோ ஓடி விட்டதும் அவர் தாமாகவே குத்திக் கொண்டார் என்று போலீசார் முடிவுகட்டக் கோயில் கட்சியாரும் சாமியாரும் சாட்சியம் கூறியதும்தான். பெஞ்ஜமின் பாளையங்கோட்டைக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் ஓடி ஓடிப் போனான். வக்கீல் இராமாமிர்தத்திடம் கலந்து யோசனை செய்தான். அவர் கொடுத்த ஆதரவுடன் வேறு சிலரையும் பார்த்து யோசனை கேட்டான். அதன் பயனாக வரும் ஆண்டில், ஊரில் கலவரங்கள் மிகுதியாக இருப்பதாலும், அதன் காரணமாகக் கொலைகளும் நிகழ்ந்திருப்பதாலும், கோயிலுக்கான தெறிப்பு - குத்தகை ஏலம் விட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றும், எனவே நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் தாசில்தாரிடம் இருந்து சாமிக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப் பெற்றிருக்கிறது. திருப்பலிப் பூசையில் இதன் எதிரொலியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். எல்லோரும் அந்நாள் கோயிலுக்குச் செல்வதாக முதல் நாளிரவே முடிவு கட்டியிருந்ததால், அவன் எழுந்து கோயிலுக்குச் செல்ல தயாராகிறான். அப்பன் உடல் ரீதியாக மிகத் தளர்ந்து இருந்தாலும் வாழும் உறுதியும், முன்னேற்ற நம்பிக்கையும் அவரது உழைப்பில் தளர்ச்சி கொண்டு வந்து விடவில்லை. மரியானும், அவனைச் சேர்ந்த மற்ற இளைஞரும் வழக்கமாகக் கோயிலுக்குச் செல்வதுமில்லை; சென்றாலும் நெருங்கி நற்கருணை பெறுவதில்லை. ஆனால், அப்பனோ, மிகுந்த விசுவாசம் உடையவர். கோயிலுக்குச் சென்று நற்கருணை பெறாத ஞாயிற்றுக்கிழமைகள் அவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளாகவே தோன்றியதில்லை.
அன்று கோயிலில் சிறப்பாகச் சுரூபங்கள் ஜோடிக்கப் பெற்றிருக்கின்றன. பூக்கள், செண்டு செண்டாகச் சுரூபங்களின் அருகில் மலர்ந்திருக்கின்றன. வண்ணக் காகிதத் தோரணங்கள் ஒரு மகிழ்ச்சிக்குரிய காரணத்தை விள்ளுகின்றன. வட்டக்காரரும், சரிகைச் சேலை காலோடு தலையாக இழைய அமலோற்பவமும், வானத்து நட்சத்திரங்களே வெண்பட்டுச் சேலையில் வந்து கண்களைப் பறிப்பது போன்று மின்னல் தேவதையாக ரூபிப் பெண்ணும் முன்வாயில் வழி வந்து உள்ளே சென்று முன் வரிசையில் நிற்கின்றனர்.
“கல்யாணம்; மாப்பிள பெரிய படிப்புப் படிச்சி தூத்துக்குடிக் கப்பலாபீசில இருக்கியா! சிப்பிகுளம். முப்பதாயிரம் சீதனம் குடுத்துக் கலியாணம்...” என்று மொடுதவத்தின் பெண்சாதி தெரஸாள் கதரினாளிடம் சொல்வது அப்பனின் செவிகளில் விழுகிறது.
கண்முன் உலகம் இருண்டுவருவது போன்று ஒரு தோற்றம்.
“சிப்பிகுளமா?...”
“ஆமா?... இந்த ஊரில் எவெ கட்டுவா? அது எச்சியான பொண்ணு!” என்று ஆத்தாள் தன் வெறுப்பை வெளியிடுகிறாள்.
அப்பன் எதிரே பீடத்தில் அன்னை கைகளில் பெம்மானைக் குழந்தையாக ஏந்தியிருப்பதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நெஞ்சுத் துயரம் இளகி விம்மலாக வருகிறது. சாமியின் வாசகங்கள், வருகை சங்கீதம், எதுவுமே அவருக்கு வேறு உணர்வைத் தரவில்லை.
அவருடைய ஆசைகள், கனவுகள், ஒன்று கூட ஏன் நனவாக மலரவில்லை? ரூபிப்பெண்ணை மரியானுக்குக் கட்டி வைக்கும் ஆசைக் கனவும் சரிந்து மண்ணாகிவிட்டது. அவர் வீட்டில் ஒரு கல்யாணமும் நடக்கப் போவதில்லையா?
ரூபிப்பெண்ணுக்குத் தூத்துக்குடி கப்பலாபீசில் வேலை செய்பவன் மாப்பிள்ளையாக வருகிறான். மரியானல்ல. சுருபமெல்லாம் ஜோடித்திருக்கிறார்கள். அறிக்கையை சாமி வாசித்ததும் எல்லா மணிகளும் முழுங்குகின்றன... ஓலை வாசிப்பு. முப்பதினாயிரம் சீதனம்... பக்கத்தில் எட்வின் அவர் தோளைத் தொட்டு இடிப்பது போல் ஒரு வசைச் சொலை உதிர்க்கிறான். கசமுசப்பு ஆங்காங்கு புகைகிறது.
சாமியார் யார் யார் பேரெல்லாமோ வாசிக்கிறார்.
“யோசுவாபர்னாந்து, பெஞ்ஜமின்பர்னாந்து, ஐசக் பர்னாந்து, இருதயராஜ், மரியான்தாஸ், எட்வின் பூபால ராயன், மிக்கேல்ராயன்...”
“இவர்களெல்லாரும் திருச்சபைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், திருச்சபையின் சட்டதிட்டங்களை மறுப்பதாலும், மற்றவரை அவிசுவாசிகளாகத் தூண்டிவிடுவதாலும் திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டிருக்கின்றனரென்று, மேற்றிராசன ஆண்டகையினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது - திருச்சபையிலிருந்து நிக்கம் செய்யப் பட்டிருக்கின்றனரென்று - இருதயராஜ், மரியான்தாஸ் - இருதயராஜ் திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறான்... இருதயராஜ்.”
அப்பனின் பார்வை அந்தப் பீடத்துச் சுரூபத்தின் மீதே ஒன்றியிருக்கிறது. இரு கண்களிலும் நீர் வழிகிறது.
சபையில் யார் யாரோ ‘ஏமென்’ கூறுகின்றனர்.
அவனுடைய நெஞ்சம் எழும்பித் தணிகிறது.
“ஆவே மரியா...? மாதாவே! உன்னக்க புள்ளங்கல்லியா நாங்க? எங்கள நீ எப்பிடி விலக்கம் செய்யிவே? நீ... எங்கள நீக்கம் செய்யிறதிண்டு வச்யா. ஒன்னக்க வலிமையுள்ள அலையால ஆழிப்பாரில அடிச்சி மோதிர ஏலாதா? இது பொய்யி...! பொய்யி...! ஆமா, பொய்யி... பொய்யிலே...! நாஞ் சொல்லுதேன், இவஞ் சொல்லுறது பொய்யி. இவனுவள மாதா விலக்கம் செய்யிவா! இவனுவள மாதா விலக்கம் செய்யிவா?”
அப்பன் சத்தம் போட்டுக் கத்துவது மேரிக்கு நாணமாக இருக்கிறது. அவர் கைகளைப் பற்றி அமர்த்துகிறாள். அவருடைய கழுத்துத் தசையின் தளர்ச்சியில் உருண்டையான மணி - தனியாத் தெறித்து விழுந்து விடுமோ என்று மேரி அஞ்சும் வண்ணம் அவர் ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும், துரித்து நோக்குகிறார்.
அது தெறித்து விழ அப்பன் அங்கேயே விழுந்து விடுவாரோ என்று திகிலில் அவர் கையைப் பற்றிக் கொள்கிறாள். “அப்பச்சி, நாம போவலாம்...!”
“போ...ட்டி. இவனுவ சொல்லுறது பொய்யி!” கையை உதறுகிறார். பலிபீடத்தின் பக்கம், சாமியின் பக்கம் முன்னேறிச் செல்கிறார். “என்னம்ப்பு, கோயில்ல லகள செய்யிறீம்” என்று அவரை நான்கு பேர் வெளியே திமிரத் திமிரக் கொண்டு வருகின்றனர்.
“அப்பச்சி, போவலாம். அண்ணெ, பெஞ்ஜமினண்ணே எல்லாம் போயிட்டாவ. ஆத்தாளும் போயிரிச்சி...”
“கருணை வாங்காம போவமாட்டே. கருணை வாங்கிற்று வாரம்...”
“கருணை குடுத்தாச்சியப்பா. பொறவுதா அறிக்கை வாசிச்சிருக்கு...”
“இல்ல. இவனுவ நீக்கம் செஞ்சா நீக்கமாகுமா?...”
வெளியே பெஞ்ஜமினும் ஐசக்கும் ரொசாரியோவும் அவனைத் தேற்ற முயலுகின்றனர். “இது எதிர்பார்த்ததுதா. இனிமே நாம கேசு கொடுப்பம். ஒண்ணும் ஆவாது. நமக்கு ஒரு போராட்டம் தொடங்கிச்சிண்ணா, விரிசா நடத்தணுமில்ல...? திருச்சபையவுட்டு நீக்கம் செய்யுவாண்டு தாம் எதிர் பார்த்தம், பாப்பம், எம்மாட்டுக்குப் போயி நிக்கிண்டுதா.”
அப்பன் அதை ஏற்கவே மறுக்கிறார். அவருடைய உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. சவேரியாரு காலத்தில், அவர் பாட்டனுக்குப் பாட்டன் கருணைவாங்கி, கிறிஸ்துவின் திருச்சரீர அணுவினால் அந்தப் பரம்பரை தொடர்ந்திருக்கவில்லையா? “எம்பொஞ்சாதியோடு கூடி நாம் பெத்த பயல ஒருத்தன் இல்லையிண்டு சொல்லிற்றா அவெ எம்பயலா இல்லாம போயிருவானா? ஏ...லே...?...”
கைகளை யாரு தொட்டழைத்தாலும் கோயில் வாசலை விட்டு அடி கூட வைக்காமல் நிற்கிறார். ரூபியின் திருமண அறிக்கை வாசிக்கப்பெற்று மணிகளனைத்தும் முழங்குகின்றன. கோயில் கட்சியாட்களுக்குத்தாம் மகிழ்ச்சி, கோலாகலம் எல்லாம். எதிர்க்கட்சிக்காரனுக்குத் திருச்சபை இல்லை... அவர்கள் கோயிலைவிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு ஞானஸ்நானம், திருமண மந்திரம், எதுவும் கிடையாது. கெபியின் முன் கண்கள் பெருக நிற்கிறார்.
பாடுபடும் கிறிஸ்து ராஜரே?...
தாமே பெரிய சிலுவையைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுவதுபோல் ஒருகணம் உடலில் சிலிர்ப்பேறுகிறது.
ஆண்டவரே! நீங்க எங்களுக்குள்ள இல்லியா? எவெனெவெ கருணைவாங்காம வந்தாலும் நா வார இல்லியே? நான் குடிக்கேன், முடியாம வாரப்ப கதரினாளை அடிக்கேன். கத்துதேன் - ஆனா, அப்பப்ப காபகப்பெரண்டக்கூட நான் நானில்லேண்டு ஆயிப்போயிருவனா? எம்புள்ளிய, மவெ, மவ இந்த அலவாய்க்கரை, ஆழி, பார், இதெல்லாம் எப்படி நிசமோ, அப்பிடி நீயும் நிசமில்லியா? இந்த நிசத்தத்தானே அப்ப மிண்டும் ரசமிண்டும் சொல்லுதா? அந்த அப்பம் இத்தினி காலமா, இந்த ஆத்துமத்துக்குள்ள போக இல்லியா? இப்பம் திருச்சபைய வுட்டு விலக்கமிண்டு எப்படிச் சொல்லுதா?...
கோயிலில் பூசை முடிந்து எல்லோரும் அகல அந்தச் சூழலே விறிச்சிட்டுப் போகிறது. கோழியும், வேறு இறைச்சியும் கூட்டி ஆணம் வைத்து, மெனக்கி நாளைக் கொண்டாடப் போய்விட்டார்கள். வட்டக்காரரின் வீட்டில் ஓலை வாசிப்பு விருந்து நடக்கும். மரியானோ, அந்த ஏலிப் பெண்ணிடம் தன் ஜீவ சத்தை விரயமாக்குகிறான். ஜீவிதம் இந்த எகனை முகனையில், பாரில்பட்டுக் கிழியும் வலைபோல் கிழிந்து போகிறது. லில்லிப் பெண் கன்யாஸ்திரீயாகப் போகிறாள்... உடல் சிலிர்க்கிறது. வெள்ளை உடுத்து, ஜபமணி மாலையும் புத்தகமுமாக சம்மனசு போல...
ஆனால் இவர்களைத் திருச்சபையை விட்டு நீக்கம் செய்வது எப்படி? இந்த வீட்டில் இருந்து ஒரு பெண், தேவ சேவைக்குப் போகிறாளே?...
வெகு நேரம் கெபியின் முன் முழந்தாளில் அமர்ந்திருக்கிறான். எட்வின் குடித்துவிட்டு வந்து ஒரு கல்லை எடுத்து வீசுகிறான்; வசைகள் உதிருகின்றன.
வீட்டில் அப்பச்சி பின்னே வந்து விடுவார் என்று மேரி நினைத்தாலும் அவர் வரவில்லை. ஆத்தா செயமணியையும் சார்லசையும் விரட்டுகிறாள். பெரிய துண்டாக ஆட்டிறைச்சி அகப்பையிலிருந்து விழ, ஆணத்தைக் கலக்கி விடுகிறாள். மெனக்கி நாளில் சேர்ந்தமர்ந்து, அப்பச்சி ஜபம் சொல்ல அவர்கள் உண்ணுவார்கள்.
கையைப் பிடித்து அவர்கள் அப்பனை அழைத்து வருகையில், மரியானும் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவனைப் போன்று வருகிறான். அப்பனுக்கு எதிரே கண்ணாடிக் கூண்டிலுள்ள அன்னையின் உருவத்தில்தான் கண்கள் நிலைக்கின்றன. அடக்க முயன்றாலும் இயலாதபடி கண்ணீர் வழிகிறது.
“ஏனளுகா? இவெ திருச்சபையை விட்டு நீக்கிட்டேண்டு சொன்னா நாம விசுவாசிகளல்லவாயிடுமா? அவெங் கெடக்கா! அவெ, எலி எண்ணெத்திரியக்கொண்டு ஓலப் புரயில வச்சாண்டு இந்தால இது செஞ்சிருக்கியா. இதுக்கெல்லாம் முசிக்காண்ட. கடலிருக்குமட்டும், மீனிருக்கும் மட்டும், நம்மள இவெ ஒண்ணுஞ்செஞ்சிர ஏலாது. கடல் இவனுதல்ல. மீனு இவெக்குஇல்ல. நம்மக்க திருச்சபை அதா ஆழிக்கடல்ல இருக்கி. மாதா அங்கெ இருக்யா! அப்பச்சி இப்பம் எதுக்காவ மனசு வாதனைப் படறீம்? இந்த ஒடம்புல ரசமிருக்கி. அப்பம் கடல்ல இருக்கி. இந்த ரசமிருக்கி மட்டும் பெலமிருக்கி, இந்தப் பெலம் இருக்கி மட்டும் அப்பமிருக்கி. அப்பச்சி அளுகாண்ட, சோகிக்காண்ட, சுணங்காண்ட...”
மரியான் சொல்லச் சொல்ல ஆத்தா அழுகிறாள். ஆத்தா அழுவது கண்டு அப்பன் விம்மி அழுகிறார். அது கண்ட மேரியும் செயமணியும் கூடக் கண்கள் பனிக்க நிற்கின்றனர். ஊமையாகிப் போன பீற்றருக்கும் கண்ணீர் முட்டுகிறது. பேச்சற்றுப் போன அந்தச் சூழலில் கடலலைகள் மட்டும் ஹோவென்று இரைகிறது.
பிச்சைமுத்துப்பாட்டாவின் மறைவை ஒட்டி, ஃபிரான்ஸிஸ்கா அங்கே மருமகனுடன் வந்து வீட்டிலிருந்த ஒன்றிரண்டு சாமான்களை அகற்றிவிட்டு, வீட்டை வந்த விலைக்கு விற்கிறாள் என்றறிந்ததும், ஐசக்கு அதை எண்ணூறு ரூபாய்க்குக் கிரயம் பேசிக் கொண்டான். ஃபிரான்ஸிஸ்கா அங்கு இருந்த நாட்களில் ஏலி அவளுக்கு உதவியாக வேலைகள் செய்வதும் நீரெடுப்பதும் பொங்கிப்போடுவதுமாகப் பழகியதால், ஃபிரான்ஸிஸ்கா அவளைத் தூத்துக்குடிக்கே கூட்டிச் செல்ல விரும்பி, தன்னுடன் வர வற்புறுத்தினாள். குழந்தைகள் லிண்டாவும், ரஞ்ஜனும் அவளிடம் பிரியமாக ஒட்டிக் கொண்டனர் என்றாலும், தூத்துக்குடியில் நாகரிகமான அந்த வீட்டில் கட்டிப் போட்டாற் போல் அவளால் இருக்க முடியவில்லை. மேலும் அந்தக் கடற்கரையில் அவளுடைய உயிரின் பகுதியையே விட்டுவந்தாற் போன்று ஒரு தாபம் அவளை வாட்டியது. ஃபிரான்ஸிஸ்கா தடுத்தும் கேளாமல் அவள் மீண்டும் ஒருநாள் தன் தகரப் பெட்டியையும் அலுமினியத் தூக்கையும் தூக்கிக் கொண்டு கன்னிபுரம் கடற்கரைக்கு பஸ் ஏறிவிட்டாள்.
அந்தக் கரையை அவள் விட்டு நான்கு மாதங்களுக்குப் பின் திரும்பி வருகிறாள். வானம் இருண்டு தூற்றல் போட்டுக் கொண்டிருக்கிறது. அவள் பெட்டி தலையிலும், கையில் தூக்குமாகப் பஸ்ஸை விட்டிறங்கி அந்த முற்பகல் நேரத்தில் நடந்து வருகையில் நெஞ்சில் இனம் தெரியாத அச்சம் படர்ந்து வருகிறது. அமலோற்பவத்தின் வீட்டுப் பக்கம் இரண்டு போலீசுக்காரர்கள் ஜீப்பின் பக்கம் நிற்கின்றனர்.
போலீசு எதற்கு வந்திருக்கிறது?
அவள் நேர்ப்பாதையை விட்டு, பனமரங்களின் ஊடாக, பேய்த்தலைகள் போல் முட்களுடன் கிளைவிரித்து நிற்கும் முள் மரங்களின் பக்கமாக நடக்கிறாள். போலீசுக்காரர்கள் அங்கும் இருக்கின்றனர். கிணற்றடியில் யாருமில்லை. தெருவில் சிறு குழந்தைகளைக் கூடக் காணவில்லை. தூற்றல் மழையானாலும் நனைவதையே ஆனந்தமாகக் கருதும் பிள்ளைகள் எங்கே போனார்கள்? பெரிய தொப்பிப் போலீசுக்காரர்களுக்கஞ்சி அவர்கள் வரவில்லையா?... வெளியில் பெண்கள் கூடிக் கூடிப் பேசுவார்கள்; பேன் பார்ப்பார்கள்; சண்டையிடுவார்கள். அவர்கள் இந்த மழையைப் பொருட்டாக்கித்தான் உள்ளே பதுங்கி இருக்கிறார்களா? போலீசு எதற்கு வந்திருக்கிறது?
செபஸ்தி நாடான் கடையிலும் காக்கிச்சட்டைக்காரர்களே தென்படுகின்றனர். அவள் எந்தப் பக்கமும் நோக்காமல் நேராக நடந்து செல்கிறாள். பின்னாலிருந்து அவள் இடுப்பில் ஓர் உதை விழுகிறது. பெட்டி கீழே விழுகிறது. தூக்கு நழுவுகிறது. மணலில் அலங்கோலமாக விழுகிறாள் அவள்.
அவள் எழுந்து சுதாரித்துக் கொண்டு உட்காருகையில் தன் குச்சியால் அவள் மார்புப் பள்ளத்தில் அந்தப் போலீசான் குத்துகிறான்.
ஒரு வசை மொழியால் விளித்து, “ஓம் மச்சாம்பய எங்கேட்டீ? இப்ப உண்மையைச் சொல்லலே, முளியப் பேத்துக் கையில கொடுப்பே. சொல்லு! எங்கே போனானுவ எல்லாம்?” என்று அதட்டுகிறான்.
“எனக்கு எதும் தெரியாது சாமி, நா நாலு மாசமா ஊரிலே இல்லிய. இப்பத்தா வாரம்...”
“இந்த மாய்மாலமெல்லாஞ் செல்லாது. எங்கே ஒளிஞ்சிருக்கானுவ நாய்ப்பயலுவ! சாமியார் பங்களாவை கன்னம் வச்சானுவ. சாமியாரைக் கொலை பண்ண வந்தானுவ... என்னடீ! ஒண்ணுந் தெரியாதது போல முளிக்கிறே?...”
“தெரியாது எஜமானே, ஆரு அப்படியெல்லாம் செஞ்சாங்க?...”
“ஏண்டி களுத. நீ என்னயா திருப்பிக் கேக்கற...?” கம்பால் அந்தக் கிராதகன் அவள் வயிற்றிலும் விலாவிலும் குத்தி மறித்து விழச் செய்து ரசிக்கிறான்.
“இந்தக் கரயில எல்லாப்பயகளுக்கும் எல்லாப் பொம்பிளகளுக்கும் மச்சாந்தானே? அதா எல்லாப் பொட்டப்பயலுகளும் எங்கே ஒளிஞ்சிட்டான்னு கேட்டேன்...”
“கடல் நாச்சி மீதாணையா எனக்கு ஒண்ணுந்தெரியாது சாமி. நா நாலுமாசமா ஊரில இல்ல...”
“ஆணை வக்கிறயோ ஆணை? எங்கிட்டப் பொய் சொன்னே, உன்னை தொலைச்சிடுவம். வீடு எதுடீ உனக்கு?...”
“தா... குடிசை... கடலோரம்...” என்று காட்டுகிறாள்.
“உம் மச்சாம் பேரென்ன...?”
அவள் ஒருகணம் தயங்குகிறாள். “செத்துப் போச்சி...”
“அப்பிடியா சமாசாரம்...?” என்று அவளை ஏற இறங்க ஒரு விரசமான பார்வையால் துளைக்கிறான். “அப்ப காவலில்லா கனிதா... எப்ப செத்துப் போச்சி...?”
“மூணு வருசமாச்சி. சினிமாக் கொட்டாயில சண்ட வந்து குத்திப் போட்டா...”
“அதானே பாத்தே! அப்ப இந்தக் கரையாளுங்கல்லாம் மச்சாந்தா... போ... பின்ன வந்து பேசிக்கிறம்...”
அவள் பெட்டியை எடுத்துத் தலைமேல் வைத்துக் கொள்கிறாள். கையில் தூக்குடன் மெல்ல நடக்கிறாள். கிணற்றுக் கரையைத் தாண்டி கடற்புறத்தில் இறங்குகிறாள். அவளுக்குக் கடற்கரை முழுதும் ஒரு கரிய நிழல் படிந்து கிடப்பதான திகில் புரிகிறது. மீன்வாடிப் பக்கம் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், கடற்கரையில் வழக்கமான கலகலப்பு இல்லை. கட்டுமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிகின்றன. கரையிலும் போலீசுக்காரர்கள் தென்படுகின்றனர். அவளுடைய குடிலின் முன் நாய் படுத்துக் கிடக்கிறது. பிச்சைமுத்துப்பாட்டாவின் வீடு - ஐசக்கு வாங்கிக் கொண்ட வீடு - அடைத்துக் கிடக்கிறது. அவள் அங்கே சென்று கதவை மெல்லத் தட்டுகிறாள்.
“மயினி...? மயினி...?”
கடலின் ஓசைதான் எதிரொலியாகக் கேட்கிறது. வீட்டுக்குள் யாரோ இருக்கின்றனர். ஆனால்...
“வூட்ட யாருமில்லிய...? மயினி...?
யாரோ வருவதாகத் தெரிகிறது. கதவைத் திறக்கக் கஷ்டப்படுவதும் தெரிகிறது. பிறகு மெள்ள அகன்று, ஒரு பிஞ்சு முகம், சோர்ந்து அந்தச் சிறு இடைவெளியில் காட்சி தருகிறது.
ஏலி உள்ளே புகுந்து கதவை மீண்டும் தாழிடுகிறாள். கிழிந்த நாராக ஐசக்கின் அம்மை படுத்திருக்கிறாள். அவனுடைய இளம் மனைவி இடையில் ஒற்றைத் துணியுடன் உட்கார்ந்து அவலமாகக் காட்சி தருகிறாள். கதவு திறந்திருக்கும் சிறுமி மதலேன் அவர்கள் குழந்தை.
“ஏலி...” என்று அழைக்கும் சிசிலி பேச முடியாமல் கண்ணீர் பெருக்குகிறாள். பிறகு ஒற்றைத்துணியை அகற்றிக் காட்டுகிறாள்.
“...ஓ... மாதாவே?”
நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது. இடுப்புக்குக்கீழ் அடித்து இரத்த விளாறாக்கியிருக்கின்றனர், பாவிகள்.
“எதுக்காவ? யாரு? போலீசா அடிச்சானுவ...?”
அவள் ‘ஆம்’ என்று தலையாட்டுகிறாள்.
“தண்ணிக்குக்கூடப் போவயில்ல. பாவம். மாமியையும் அடிச்சானுவ. இந்தக் கரயில போராட்டம் பண்ணின ஆம்பிளங்க யாரும் இப்பமில்ல. ஏலி, நீ எப்படி வார? எங்கிருந்து வார...?”
ஏலி பேசவில்லை. கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு கிணற்றுக்குச் செல்கிறாள். தான் ஒரு பொதுமகள் என்ற நிலையில் கட்டுப்பாடான அச்சத்தை மீறிவிட்டது இப்படியும் பயன்படுமென்று அவள் ஒருகாலும் நினைத்திருக்கவில்லை. மிஞ்சி மிஞ்சி என்ன நடக்கும்? போலீசான் அவள் பெண்மை நலமழிப்பான்... அவளுக்குப் பயமில்லை. தண்ணீர் கொண்டு வந்து வைத்து, அவர்களுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுத்துவிட்டு, ஏலி கதவைத் தாளிட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறாள். கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். செபஸ்தி கடை வாயிலில் குந்தியிருக்கும் போலீசான் இவள் கடையிலிருந்து வரும் நேரத்தில் இவளுடனே வருகிறான்.
பெஞ்ஜமின், ஐசக், எட்வின், மரியான், அகுஸ்தீன் எல்லார் மீதிலும் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அவர்கள் கோயிலில் கன்னம் வைத்துக் கொள்ளையடித்தார்கள்; சாமியார் பங்களாவில் கொள்ளையடித்தார்கள்; வைக்கோற் போரைக் கொளுத்தினார்கள்; சாமியாரைப் பல முறைகள் கொலை செய்ய வந்தார்கள்... சாமியாருக்குப் பாதுகாப்பளிக்கப் போலீசு அலைவாய்க் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் யாருமே அந்தக் கிராதகர்களின் கண்களுக்குத் தென்படவில்லை. ஏலி, அந்தப் போராட்டக்காரர்களின் மீதான போலீசானின் வெறிகளை ஏற்றுக் கொள்ளும் பலிபீடமாகிறாள். அவள் அந்தக் கரைக்கு வந்து ஏழெட்டு நாட்களாகியும் மரியானின் வீட்டுப் பக்கம் செல்ல இயலவில்லை. கோயில் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையில் ஒரு சீட்டு வைத்துக் கொண்டு நடமாடுகிறார்கள். அவர்களுடைய வீட்டுப் பெண்களும் கூட, அதிகமாக வெளிவருவதில்லை. கிழவிகள் தாம் கிணற்று நீருக்கு வருகின்றனர். அவளிடம் சராமாடிய போலீசான் அவளுக்கும் ஒரு சீட்டுத் தந்து இருக்கிறான். இவள் இரவிலோ, பகலிலோ, எப்போதோ எதிர்க்கட்சியான் வீட்டுக்குள் செல்வதை அவர்கள் பார்த்துவிட்டால் அவர்களையும் சித்திரவதைக்காளாக்குவார்கள் என்று அஞ்சி நேரம் பார்க்கிறாள்.
கடற்கரையோரமிருக்கும் மரங்கள் சிலவற்றை இழுத்துப் போட்டு, சக்கிரியா, உடைத்து விறகாக்கிக் கொண்டு போகிறாள். சாமியார் வீட்டுக்குப் பின்னே போலீசுக்காரர்களுக்காகப் பெரிய பெரிய கற்களை வைத்து அடுப்பு மூட்டிச் சமையல் செய்கிறார்கள். எதிர்க்கட்சி ஆட்கள் வீடுகளிலிருக்கும் ஆடு, கோழி, எல்லாம் அந்த அடுப்புகளில் அவர்களுக்கு உணவாக வேகின்றன. தின்பதும் குடிப்பதும் பெண்களை இழுத்து வந்து வெறி தீர்த்துக் கொள்வதுமாக அவர்கள் கொழுத்துத் திரிகிறார்கள்.
ஏலி ஒரு வட்டியில் மரவள்ளிக்கிழங்கும் கருப்பட்டியும் வைத்து மூடிக்கொண்டு அன்று காலோடு தலை போர்த்து, விடியற்காலையில் கடற்கரையோடு நடக்கிறாள். மரியானின் வீட்டுப்படியில் நின்று தட்டுகிறாள்.
“மாமி...? மாமி...”
கதவைத் திறக்க வருமுன் மீண்டும் “யாரு யாரு?” என்று குரல் கேட்கிறது.
“ஏலியா. கதவுத் தொறவுங்க...”
டக்கென்று திறந்து அவளை உள்ளே விட்டதும் மூடிக் கொள்கிறது கதவு. செயமணி... செயமணியா இது?
கண்கள் சோர, பட்டினியின் கொடுமையில் வாடிக் கிடக்கிறது அந்த மணி. மேரி அவளை வரவேற்பதுபோல் படுத்திருந்தவள் எழுந்து உட்காருகிறாள். சார்லஸ்தான் உறங்குகிறான். பீற்றரும் கூட எழுந்து வட்டியிலிருக்கும் மரவள்ளியை ஆவலோடு பார்த்து எடுக்கிறான்.
“மரியானண்ணெ ஒங்கூட்டுப் பக்கம் இருக்கா, ஏலி மயினி?”
ஏலி உதட்டைப் பிதுக்கிச் சாடை காட்டுகிறாள். கட்டிலில் துணிக்குவியல் போல் ஆத்தாள் அனக்கமேயின்றிக் கிடக்கிறாள்.
“அப்பச்சி எங்கே?”
“தெரியலியே? போலீசு வந்து எறங்கியதும் பெஞ்சமினண்ணே ராவோடு ராவா வந்து எல்லாரு பேரிலும் கேசிருக்கு. சாமி குடுத்திருக்குண்ணும், அவெவெ தன்னத்தானே பேணிட்டுத் தப்பிக்கணும், அவங்க கையில சிக்கிடக் கூடாதுண்ணு சொன்னாரு. அன்னைக்கு ராவெல்லாம் ஆரும் ஒறங்கல. காலமே எட்வின் அண்ணெயும் மரியானண்ணெயும் மரத் தெடுத்திட்டுக் கடல் மேலதாம் போயி வேறகரை ஏறுதோமிண்ணு சொன்னாங்க. ஆனா மரத்தில போவ இல்ல. தம்பி பாத்திட்டு வந்து சொல்லிச்சி. கொங்கையிலே ரோசிண்ணு எழுத்து வெட்டின மரம் மணல்ல இருக்குண்ணா. நேத்துக் கூட பெஞ்ஜமினண்ணே அப்பச்சியக் கூட்டிப் போறமிண்ணு சொன்னாரு. ஆனா அப்பச்சி இந்த எடம் வுட்டு நவுரமாட்டேண்ணிருந்தா. அப்பம் அண்ணைக்குக் காலமே போலீசு வந்திச்சி. ஆத்தா சயக்கொடியயும் என்னியும் நடுவீட்டில ஒளிச்சி வச்சி, வலைத்தும்பு பாயி எல்லாம் போட்டிச்சி. ஆத்தாளை அடிச்சாங்க. அப்பச்சியையும் அண்ணெ எங்கேயிண்டு விசாரிக்க இளுத்திட்டுப் போனாங்க. மயினி, நாங்க அன்னிக்கி பூர செத்தோமிண்ணே நினச்சம்...”
“பொறவு அண்ணெ வார இல்ல?”
“உஹும். பெஞ்ஜமின் அண்ணே அனுப்பிச்சாருண்ணு ஐசக்கு ஒரு பழக் கொல், பத்து ரூவால்லாம் கொண்டாந்து தந்தா. பீற்றரும் சார்லசும் மீன் வாடில மரம் தள்ளப் போனாக் கூட அடிகொள்ளும். பாவம். எதினாலும் பாரக்குட்டியோ, நண்டோ பிடிச்சாரும். ஆத்தா ராத்திரி போயி தண்ணி எடுத்தாரும். நாங்க எதுக்குமே வெளியே போவ இல்ல. கடலக் கூடப் பாக்க இல்ல மயினி மூணு மாசமா! பன ஓல கொண்டு வாரமிண்ணு சார்லசு போனா அவனைப் போட்டுக் காலமாடனுவ அடிச்சிருக்கா... ஒருக்க மூணு நாளாக் கஞ்சிகாச்சக் கூட ஒண்ணில்ல. பொறவு, சந்தியாகு மாம வீட்டேந்து புல்லு (கேழ்வரகு) வாங்கிற்றுவந்து கஞ்சி காச்சினம். புல்லெல்லாம் உண்டு பழக்கமில்ல - ஆத்தா வயித்து நோவுண்ணு படுத்திருக்கு...”
ஏலி குசினிப்பக்கம் போய்ப் பார்க்கிறாள். அடுப்பெருக்கச் சுள்ளி கூட இல்லை. வெளியே சென்று முதல் நாள் சக்கிரியா கட்டுமரத்தை வெட்டிய இடத்திலிருந்து சில்லுகள், சிறாய்கள் தெறித்து விழுந்ததைப் பொறுக்கி வருகிறாள். பிறகு கிணற்றுக்குச் சென்று தண்ணீர் தூக்கி வந்து வைக்கிறாள். அவளுடைய வாழ்க்கைக்கு இப்போது ஒரு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. புதிய பொருளை அவள் உணருகிறாள். போலீசுத் தடியன்கள் அவளை உடலெரிய மனமெரியச் சக்கையாக்கிப் போட்டாலும், அவள் அந்தக் கடலின் நீரிலே குளிர்ச்சி பெற்று அந்தக் குடும்பத்துக்கு உதவ வருகிறாள்.
வாழ்க்கையில் அந்தந்த நேரத்துக்கு உரியனவாக அவள் முன் கனவுகள் எழும்பியதுண்டு. கான்வேன்ட் சுவருக்குள் வெறும் அடிமைப் பெண்ணாக உடலுழைத்த காலத்தில், அந்த ஒளியற்ற வாழ்வுக்கு உதய ஞாயிறாக இன்னாசி தோன்றினான். பின்னர் அந்தக் கனவு சிதைந்த பின் கடற்கரையில் மரியானின் பொற்கரம் அவள் கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. குழந்தை பிறந்தது. ஆனால், பூ மலருமுன் கருகி உதிர்ந்தாற் போன்று அந்தக் கனவும் இருளில் மறைந்தது. அவளிடம் அன்பும் ஆதரவும் காட்டிய ஸ்டெல்லா மாமியும் பாட்டாவும் கூட இல்லாமலாகி விட்டனர். பனமரத்தின் மட்டைகள் வெறும் வரையை மட்டும் பதித்துவிட்டு விழுந்து விடுகின்றன. அவளுடைய வாழ்க்கையில் இப்போது மலர்ந்திருப்பது மட்டைகள் போன்ற கனவு அல்ல. இது மரத்தின் பயனை விள்ளும் கூம்பு... ஏலி அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற, போலீசுக்காரர்களுக்குத் தன்னை இரையாக்குகிறாள்.
நினைவு தெரிந்த நாளாய் அலைவாய்க் கரையில் பிழைத்தவர்கள், கடலின் மீது செல்வது தவிர வேறு வாழ்க்கை தெரியாது. பெஞ்ஜமின் அந்நாள் போலீசுப் படை வந்திருப்பது பற்றி எச்சரிக்கை கொடுக்க வந்ததும் இருதயம், “இவனுவ என்னப் புடிச்சி என்ன செய்வானுவ? மயிரானுவ?” என்று கூறிவிட்டுச் சாராயத்தின் ஆளுகையில் இழுத்துப் போர்த்துக் கொண்டார். ஆனால் என்ன நடந்தது?
அவர் கடலுக்குச் சென்று திரும்பியதும் போலீசார் கையைக் கட்டி இழுத்துச் சென்று சாமியார் பங்களாவின் பின்னாலுள்ள கிடங்கு அறையில் வைத்து மூன்று நாட்கள் அடித்தார்கள். அவர் வாயைத் திறக்கவில்லை. பெஞ்ஜமின், மரியான், எட்வின் இவர்கள் எங்கேயென்று கேட்டால் அவருக்கு எப்படித் தெரியும்?...
அடியினால் பட்ட புண்கள் காயவே இல்லை. அந்தக் கிடங்கு அறையில் இப்போது இந்த மூன்று மாத காலத்தில் எட்டு பேரிருக்கின்றனர். குடிமகன் இன்னாசி, அம்புறோசா, வெறுநாது, அகுஸ்தீன், ரொசாரியோ, பிரித்தோ, பிலிப்பு... எல்லோரும் இளையவர்கள். இன்னாசிப்பயல் வந்த அன்று இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ரொசாரியோ “மாமோ!” என்று அலறினான். சாமியார் வீட்டையே கொளுத்துவதாகச் சூளுரைத்தான். ஆனால் என்ன நடந்தது? போலீசுத் தடியர்கள் அவனைக் ‘குறுக்கை’ முறித்துப் போடுவதாக உறுதிகூறி அவனைக் குப்புறப் படுக்க வைத்துக் குண்டாந் தடியால் அடித்தார்கள். அவன் அடிவிழும் நேரத்தில் மூச்சடக்கி முதுகை வில்லாய் வளைத்துக் கொண்டான். அவனுடைய குறுக்கை உடைக்க முடியவில்லை. சிலுவைப் பிச்சையை உடைமரக் காட்டிலிருந்து இழுத்து வந்து அவர்கள் கண்முன் படுக்க வைத்து இரும்பு உருளை கொண்டு தொடைகளிலும் கால்களிலும் உருட்டினார்கள். அவன் சாகவில்லை. ஆனால் எங்கோ வேற்றிடத்திற்கு இழுத்துப் போனார்கள். கொன்று விட்டார்களா என்பது தெரியவில்லை. இவ்வளவுக்கு உதையும் அடியும் பட்டினியும் அனுபவித்தும் தாம் ஏன் இன்னும் சாகவில்லை என்பது அவருக்கு நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
அவர்கள் யாருமே அந்த அடியில் சாகவில்லை. கடலம்மை கொடுத்த உரம் அது. அவளுடைய அப்பத்தினால் உடலில் ஊறும் ரசமென்று பையன் சொன்னானே, அது உண்மை.
சாமியார் ‘பங்களா’வின் உயர்ந்த சுவர்களும் சுற்றுச் சுவர்களுக்கப்பால் வெளி வராந்தாக்களும் மாடி முகப்பும், கொல்லைத் தோட்டமும் தாம் இவர்கள் அந்நாள் வரை பரிசயப்பட்ட பகுதிகள். அந்த வராந்தாவில் நின்று பேசியிருக்கின்றனர். ஆனால் உள்ளே எத்தனை அறைகள் இருக்கின்றன என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை.
சாமியார் - குரு... அவர் கடவுளின் பிரதிநிதியாக அவர்களை ஆத்துமத்துக்கான உயர்வுக்கு நல்வழியில் இட்டுச் செல்ல அவர்களுக்கு மேய்ப்பராக இருக்கிறார் என்றதோர் அசைக்க இயலாத பெருமதிப்பை அரணாக்கி வைத்திருந்தனர். அவருடைய குற்றங் குறைகளைப் பற்றித் துருவுவது கூடப் பாவம் என்று மரியானைப் போன்ற இளந்தலைமுறையினர் ஏதேனும் சொல் உதிர்த்தாலே கண்டித்திருக்கிறார். இந்த நம்பிக்கை, பாறையில் மோதும் அலைகளாகச் சிதறுகிறது. இந்தச் சாமி, கோயிலின் பிரதிநிதியாக இன்னமும் திருப்பலிப் பூசை நடத்துகிறார். சுரூபம் ஒரு அற்புதம் புரியாதோ?
இருதயம், மாதாவின் கண்களில் நீரொழுகுவது போன்ற கற்பனையில் திடுக்கிட்டு உடல் விதிர்க்க, அயர்ந்து தூங்கும் போதும் எழுந்து குந்திக் கொள்கிறார். “நீரு வாரும். உம்மை வெளியே விட்டுட்டோம். நாசெஞ்சதுக்கெல்லாம் மன்னாப்பு...” என்று அவரைச் சாமியே வெளிவிடுவதுபோல் ஒரு கற்பனை செய்து கொள்வார். ஆனால் அப்படி எதுவுமே நிகழவில்லை.
அலைக்கும் கடலுக்கடியில், கூர்ச்சுக் கூர்ச்சாக மரங்களை உடைத்து வலைகளைக் கிழிக்கும் பாறைப் படிவங்களைப் போல், இந்த அங்கி போர்த்த இவர்களுக்குள் இவ்வாறு ஈரமே இல்லாத கரவுகளும் இருக்குமோ?... மனிதர்கள் இப்படியும் ஒரு நியாயமும் இல்லாமல் உயிர்களை வதைக்க விளையாடுவார்களா?
நாட்கள் நகருகின்றன. அடித்து அடித்துக் குற்றுயிராக்கிய பின்னரும் இவர்கள் மறைந்திருப்பவர்களைப் பற்றி ஒரு தகவலும் கொடுக்கவில்லை. காவலுடன் இவர்களைக் காலையில் இயற்கைக் கடன் கழிக்க சாமியார் தோட்டத்தின் பின்னே முட்செடிகளுக்கிடையே அழைத்துச் செல்லும் நேரம்தான் வெளி உலகைக் காணும் நேரம். புல்லரிசி - கேழ்வரகு கொஞ்சம் கொடுப்பார்கள். அதை இன்னாசி கஞ்சி காய்ச்சுவான். எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“விடியாலே நாம போறப்ப, அவனுவள முள்ளப் புடுங்கி அடிச்சிப் போட்டுட்டு நாம ஓடிரலாம்...” என்று ரொசாரியோவும் அகுஸ்தீனும் தினமும் சொன்னாலும், அகப்பட்டவர்களைக் கொன்றுவிடுவார்கள் என்பதால் அதைச் செய்ய இயலவில்லை.
“ஒடம்பில வலுவுள்ளவெ, இங்கிய விட்டுத் தப்பி இந்த அக்குருவங்கள வெளியே சொல்லலேண்ணா, நாம இப்பிடியே குத்துயிரும் கொல உசிருமாச் சாவுறதா? மாமோ? கலவம் பொறந்தாதா காலம் வரும். இப்பம்... பெஞ்சமினண்ணே சொம்மா இருக்கமாட்டா... நா தப்பிச்சிட்டும் போயிருவ...”
“அப்பம் மோட்டப் பிரிச்சிட்டுப் போவ ஏலுமாண்ணு பாரு?...”
“எங்கையில பன்னரிவா இல்லாம எறங்கிட்ட அதான் தப்பாப் போச்சி. இவனுவ அம்மாம் பேரையும் வெட்டிப் போட்டிருப்பம்...”
“எனக்கு ஒண்ணு தோணுது மாமோ...!”
“இவனுவ கிறிஸ்து நாதர் பேரைச் சொல்லி, குருப்பட்டம் வாங்கி கோயில்னு சொல்லி, நாம ரத்தம் கக்கிக் கொண்டாந்த மீன் பாட்டைக் கொள்ளையடிக்கானுவ. நாம் எதிர்த்தோம். மேற்றி ராணியாரும் இவனுவ பக்கமே இருக்கா. போலீசு, சர்க்காரு அல்லாம் இவனுவ கைக்குள்ள போட்டுட்டானுவ. இந்தக் கரயில, நம்ம கூட ஒண்ணா இருந்து தொளில் செஞ்சி சம்பந்ததாரியா பழகினவங்கல்லாம் பயந்திட்டு கோயில் பாட்டியாயிட்டானுவ... எல்லா சாமியாருமே இந்த அநீதம் சரிண்ணு சொல்லுமா? ஒருத்தருக்காவது இது அநியாயமிண்டு தோணாதா?...”
ரொசாரியோவின் இந்தக் கேள்வி இருதயத்தின் உள் மனத்தைச் சுண்டிவிடுகிறது.
பால்சாமி... அவரைப் போல் அவர்களிடத்தில் அன்பும் கருணையும் வைத்த சாமி யாருமில்லை. அந்தக் காலத்தில் ஸ்ரா கொண்டு வந்தால், இலுப்பா... அதன் ஈரலை எடுத்துப் பிசைந்து தண்ணீரோடு காய்ச்சுவார்கள், அதுதான் விளக்கெரிக்கும் எண்ணெய். தரையில் குழித்து களிமண் பூசி விளக்குப்போல் எண்ணெய் ஊற்றி ஒரு சீலைத்துணியைத் திரித்துப் போடுவார்கள். விளக்கு எரியும். மொடுவதம் கடலுக்குப் போயிருந்தான். அவன் பெண்சாதி விளக்கை அணைக்காமல் உறங்கிப் போனாள். எலி, மீனெண்ணெய்த் திரியை, அப்படியே கங்கோடு எடுத்துச் சென்று ‘மோட்டில்’ வைத்துவிட்டது. ஓலைக் கூரை பற்றி எரிவதைச் சாமி தன் வீட்டிலிருந்து பார்த்து ஓடோடி வந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வலை, கட்டை, போன்ற சாதனங்களையும் குஞ்சு குழந்தைகளையும் அவராகவே அப்புறப்படுத்தினார். குடிசை எரிந்து போன மொடுதவத்துக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார். பிறகு ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டுப் பக்கமெல்லாம் வருவார்.
“கள்ளுக்குடிக்காண்டாம்? ஏம்புள்ள, புருசனுக்கு வெந்நி வச்சிக் குடுத்தியா? விளக்க எரியவச்சிற்று ஒறங்கிடாதே! வத்திப் பொட்டியப் புள்ள கையில வச்சிருக்காம் பாரு!”ன்னெல்லாம் புத்தி சொல்லுவாரு. அப்பம் அவரு செறுப்பம்தா. அவருமேல ஒரு மாசு தூசு ஒட்டியிருக்கா? அவரும் சாமி, இவனுவளும் சாமியா?... உள்ளத்தில் சினிமாப் படம் போல் அக்காட்சிகள் தோன்றுகின்றன.
“மாமோ? ஏம் பேசாம இருக்கிறிய?”
“இல்லலே. பால்சாமியப் பத்தி நினச்சே. அவரு இத்தச் சரிண்ணு சொன்னாருண்ணா, இந்த அக்குருவங்கள நாயமிண்டு சொன்னாருண்டா, நா இந்தக் கோயில் சுருவம், அது இதெல்லாம் ஒடச்செறியுங்கடாண்ணுவ. வந்தது வரட்டுமிண்ணுவே...” அவர் கண்கள் உருகுகின்றன.
“அப்ப நாம இந்த இருட்டு ரூம்புக்குள்ளேந்து பால்சாமிய எங்கேந்து பாக்குறது?...”
“யாருண்ணாலு ஒத்தம் தப்பிச்சுப் போவட்டும்...”
அன்று புல்லரிசி பெற்று வரத் தோட்டத்தின் பக்கம் சென்ற இன்னாசி, ஏலி போலீசுக்காரர்களின் சமையல் பாத்திரங்களைத் துலக்கியதாக வந்து செய்தி சொல்கிறான்.
எழுத்து எழுதிக் கொடுக்க ரொசாரியோவுக்குத் தெரிந்திருந்தாலும் காகிதமில்லை; பேனாவில்லை; அறையில் வெளிச்சமுமில்லை. தோட்டத்தில் அரளிச் செடியின் பக்கம் இன்னாசிக்கு சீசப்பிள்ளை தாவீதுதான் படியளப்பான். தாழ்வரையில் சுள்ளியை வைத்து, அந்த மாவைக் கஞ்சி காச்சி உப்புப் போட்டுப் பருகுவார்கள். கருவாட்டு மீன் சில நாட்களுக்குக் கருணையோடு கொடுப்பான். ஏலிக்கு இவர்கள் இங்கு அடைபட்டிருப்பதைப் பற்றிய செய்தியை அமலோற்பவம்தான் கூறினாள். கிணற்றில் நீரெடுத்துக் கொண்டு திரும்புகையில், அவர்கள் குசினியில் வேலை செய்யும் விர்ஜின் ஏலியை எசமானியம்மா கூட்டி வருவதாகச் சொன்னாள்.
“இருதயம் மாமனையும் இன்னும் ஏளெட்டுப் பேரையும் சாமியார் வூட்ட வச்சி அடிச்சிக் கொல்றானுவளாம். போலீசுச் சவங்க!... சவந்து மாடனுவ, எருமமாடாட்டும் தீனி திங்கியானுவ. ஆடும் மாடும் வெட்டி ஆணம் வெக்கிறதும் அரிசி பொங்குறதும், மொடா மொடாவாக் குடிய்க்கிறதும்...! கோயிலுக்குப் போய் வாரயில, இந்த நீசனுவ, ரூபிப் பொண்ணப் பாத்துக் கண்ணடிக்கிறான். ‘எள்ளும் பருத்தியும் வெதயுமலா!’ண்டு சிரிக்கான், அவனுவளக் கடல் கொண்டிட்டுப் போவ? இந்தச் சாமிதான் இவனுவளுக்கு இம்மாட்டு எடங்குடுத்திச்சி? எனக்கு என்னமாண்டு வரும்...!” என்று வயிறெரியக் கொட்டினாள். அவள் தோப்பில் ஒரு தெங்கு இல்லை. அவளுடைய கோழிகள், ஆடுகள் எல்லாவற்றையும் போலீசுப் படை தின்றுவிட்டது. அவள் மூன்று ரூபாய்க்கு வாங்கி ஐந்து ரூபாய்க்கு விற்கக் கூடிய சரக்கு, விலையில்லாமலே கொள்ளை போயிற்று. கடற்கரையில் தொழிலில்லாமல் பல குடும்பங்கள் சிதறிப் போய்விட்டன.
இதைக்கேட்ட ஏலி, சாமியார் தோட்டத்துக்குப் பின் போலீசுக்குப் பொங்கல் நடக்குமிடத்துக்குக் குற்றேவல்காரியைப் போல் வரத்தொடங்கினாள். அந்தத் தடியன்களே தாம் பொங்கிக் கொண்டார்கள். இவள் பாத்திரம் துலக்கும் சாக்கில் தோட்டத்துக் குழாயடியில், தொட்டியடியில் நின்று அங்கே நடக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கிறாள். இன்னாசிக்குத் தாவீது புல்லரிசி படியளப்பதை நின்று பார்க்கிறாள். எட்டுச் சிறங்கை அள்ளிப்போட்டு, எட்டுத் துண்டு கருவாட்டு மீன் கொடுத்தான் தாவீது.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இருள் பிரியும் நேரத்தில் அவள் உடைமரக் காட்டில் அவர்களைக் கைதிகளாக அழைத்து வருகையில் எல்லோரையும் பார்த்து விடுகிறாள்.
அவர்கள் திரும்பி செல்கையில் ஏழுபேர் தாம் இருக்கின்றனர். ஏலியுடன் இன்னொரு பெண்ணுருவம் சேலையணிந்து இருளில் செல்கிறது. அவர்கள் சரக்கென்று வட்டக்காரர் வீட்டுப்புறக்கடை வழியே உள்ளே நுழைந்து விடுகின்றனர். ஏலி மட்டுமே ஓட்டமாகச் செய்தி சொல்ல விரைகிறாள்.
பஸ் ஆத்தூர் பாலத்தைக் கடக்கையில் தாமிரபரணியின் மேல் தவழ்ந்து வரும் நீர்க்காற்று உடலில் படும்போது அந்தக் குளிர்ச்சி புத்துணர்ச்சியை அளிக்கிறது. வயல்களில் பசுமை முதிர்ந்த மணிகள் தலைசாய்த்திருக்கின்றன. சென்ற ஆண்டு ஆண்டகையைப் பார்க்க வந்த பிறகு, பெஞ்ஜமினும் மற்றவர்களும் கூடிப் பேச, இரண்டு முறைகள் அவன் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறான். கடற்கரை ஊர்களை விட்டுத் திருநெல்வேலி, நாகர்கோவில் என்று சென்றாலும் கூட போலீசான் அவர்களைத் தனியே இனம் கண்டு கொள்வானோ என்ற அச்சம் மேலிடுகிறது. ஊரை விட்டு, தொழிலை விட்டு வந்த பின்னர், எங்கெங்கோ கூலி வேலை செய்து வயிறு பிழைத்திருக்கிறான். உடன்குடி, சாத்தான்குளம் என்று வயற்கரைகளில் கூலி வேலை செய்தான்; மூட்டை தூக்கினான். சென்ற சில நாட்களாக சாஹுபுரத்தில் கட்டிடம் கட்டும் இடத்தில் கூலி வேலை கிடைத்தது. எங்குமே பத்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. சவரஞ் செய்யாமல் முடி வளர்த்திருக்கிறான்.
தூத்துக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் தலையில் துணியைப் போட்டுக் கொண்டுதான் அடிப்பாடாக வருகிறான். பெரிய பஜார் வீதியைக் கடந்து வருகையிலும் கூட அச்சமாக இருக்கிறது. கடல் தொழிலாளிகளை முகத்தையும் தசைமுறுகிய உறுப்புகளையும் கண்டே இனம் புரிந்து கொண்டு விடுவார்கள் பிறர். நீண்ட சந்துகளிலும் குறுகலான தெருக்களிலும் புகுந்து கடற்கரைப் பக்கம் பெரிய கோயிலுக்கு அடுத்த சந்தில் நுழைகிறான். காலை நேரத்தின் சுறுசுறுப்பு எங்கும் இயக்கமாக இருக்கிறது. கோயிலில் யாருக்கோ துக்கமணி அடிக்கிறார்கள். அவன் குறிப்பிட்ட திருப்பத்தில் திரும்பிக் குறுகலான அத்தெருவில், ஒரு பச்சைக் கிராதி வீட்டின் வாயிலில் சாக்கடையை மூடிய படியில் நிற்கிறான். எட்வின் அங்கே பீடி குடித்துக் கொண்டு குந்தியிருக்கிறான்.
“உள்ளார யாரிருக்கா?”
“சாமுவல். ஊருக்கா போயி வார?”
“இல்ல...”
“லயனலப் பாத்தியா?”
“பாக்க இல்லியே?”
“பின்ன சேதி சொன்னது ஆரு?”
“பெஞ்ஜமின் தா. சீட்டு அனுப்பியிருந்தாரு லாரிக்கார்ட்ட. நான் சாஹுபுரத்தில் இருந்தம்...”
“ஒங்கப்பச்சிய சாமியார் வூட்டதா வச்சி அடிச்சிருக்கானுவ.”
“ஆரு சொன்னது?...”
“சாமுவல் தா. உள்ளார போவம் வா!”
ஒரு குறுகிய மர ஏணிப்படியிலேறி மச்சுக்குச் செல்கின்றனர். அங்கு பாயில் சாமுவல் படுத்துறங்குகிறான். சிறு அறை.
கீழே இருவரும் அமர்ந்து கொள்கின்றனர்.
“ஊருக்குப் போயிட்டு வந்திருக்கா. ஒரு சீட்டுக் குடுத்திருக்கானுவளாம். அது இல்லாம நடமாடினா, அடிச்சிப் போடுறானுவளாம். மூணு மாசமா, உன்னக்க அப்பச்சி, அகுஸ்தீன், இன்னாசி இன்னு யாரெல்லாமோ, உள்ள போட்டு அடி அடிண்ணு அடிச்சி நம்மப்பத்தின ஔவுசாரிச்சிருக்கானுவ. ஆரும் சொல்ல இல்ல. பொறவு, ஏலி இல்ல ஏலி, அதாம்ப ஒன்னக்க பொம்பிள, அவ... தா ஊரில நம்ம வூடுங்களுக்கெல்லாம் தவ தண்ணி எடுத்துக் குடுத்திருக்குதாம். ஐசக்கு பொஞ்சாதிய அடிச்சி இடுப்புக்குக் கீழ் புண்ணாக்கெடக்குதாம். எங்க வூட்டுக் காரியயும் அடிச்சானுவளாம். பேய் ராச்சியம் நடக்குதுண்ணு சொன்னா. எனக்கு இருப்பாவே இல்ல. நாம எல்லாம் ஆம்பிளகளா? எதுக்காவ இப்பிடி ஒளிஞ்சி வாழுதோம்? ஒரு கிளாசு சாராயம் கூடக் கெடயாது. இப்பிடி வாழுதக் காட்டி சாவலாம். இன்னக்கி நம்ம தலவர் வந்ததும் ரெண்டுல ஒண்ணு கேட்டு அவரு இப்பமும் ‘ஆக்ஷன்’ வாணான்னு சொன்னா, நா இவுரு தலமைவுட்டு நேராப் போயி அந்தப் போலீசுக்கார, சாமி எல்லாரையும் கூண்டோடு இருட்டு ஸ்தலத்துக்கு அனுப்பிட்டு செயிலுக்குண்ணாலும் போவ...”
இவன் குரல் கேட்டு சாமுவல் எழுந்து உட்காருகிறான்.
“மரியானா...?”
கண்களைத் துடைத்துக் கொள்கிறான் சாமுவல்.
“ஆமா, ஊரில ஆரெல்லாம் பாத்தே?...”
“அல்லாரையும் பாத்தேன். சீலயச் சுத்திட்டுப்போ, அப்பத்தான் கருக்கல்ல போயி வந்திரலாண்ணு பெஞ்ஜமின் சொன்னா.”
“நா போயி இவெ வீட்டுச் சந்தில நிற்கிறப்ப ஒரு போலீசுக்கார இவம் பொஞ்சாதி கிட்டக்காச்சுதா, ஆரு வந்ததுண்டு. ஆரும் வரலியே யேசுவே - கடல் சத்தியமா ஆரும் வரலண்ணு இவெ மாமியா கெடந்து கெஞ்சுதா. நா அப்படியே அவனக் கழுத்தப் புடிச்சிருப்பே. ஆனா, அவனுவ அதிகம் பேரு - கட்சி கட்டிட்டு கொழுத்துத் திரியறானுவ. இப்பமே நம்ம ஊரில நம்ம கூட இருந்து நம்ம தொழில் செய்யிறவனுவ நம்ம கூட சேராமதானே இப்பிடி அல்லாடுறோம்? நம்ம மரமெல்லாம் ஒடச்சிருக்கிறானுவ, மொடுதவமும் பிச்சையாவும் புதுமரம் வச்சிருக்கிறானுவ, பெஞ்சமினண்ண மரத்த ஆழக்கடல்ல கொண்டு போயி விட்டுட்டானுவண்ணு தெரியிது. செபஸ்தி சொன்னா, நீ தெரிஞ்சாப்பல காட்டிக்காதே. நா போது. ஊரில ஒருத்தருக்கொருத்தன் மோசஞ் செய்யிறானுவண்ணு.”
மாடிப்படியில் சத்தம் கேட்கிறது.
பெஞ்ஜமின், ஆல்பர்ட், ஐசக், பூபாலன், குரூஸ், பிச்சை. பெஞ்ஜமினைத் தவிர மற்றவர் யாரையும் அத்தனை நாட்களில் அவன் பார்த்திருக்கவில்லை.
பெஞ்ஜமினின் முகத்தில் பத்து நாட்களுக்குச் சவரம் செய்யாத முடி. கண்கள் உறங்காததால் சிவந்து சோர்ந்திருக்கின்றன.
“மரியான் எப்பம் வந்த...?”
“பத்து நிமிசமிருக்கும்... இனியும் இந்தால ஒளிச்சி மறச்சிப் பிடிக்கிறது செரிண்டு தோணல மச்சான்...!”
“ஆமா, ஊரில பெண்டு பிள்ளைகள், அவனுவகிட்ட அடிகொள்ள வுட்டுப்போட்டு நாம உசுரு புளைக்கிற சீவியம் ஒரு சீவியமா? இத்தக் காட்டிலும் நாந்துக்கிட்டு சாவலாம்!”
“ஒங்கக்க பொண்டு புள்ளயள்ளாம் பாளையங்கோட்டக்கி அனுப்பிச்சிக் குடுத்திருக்கீரு. எங்கக்கு எங்கள நாங்கதானே பேணிக்கணும்...?” மாறி மாறி எட்வினும் மரியானும் பாய்கின்றனர்.
“நீங்கல்லாம் அல்லாம் சொல்லுவீங்க. போயி கண்டமானிக்கும் அடிச்சி ஒடச்சித்தா இப்ப கேசு அது இதுண்ணு போலீசு வந்ததே. போலீசை நாம ஞாயத்துக்குக் கூப்பிட்டு வச்சுக்கப் போவ, சாமி லஞ்சம் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்கிட்டா. நம்ம அதிர்ஷ்டம், முன்ன இருந்த அந்த சாயபு இனிஸ்பெட்டரு அப்பமே மாத்திப் போயிட்டா. இப்பம் வக்கீலக் கலந்து நடவடிக்கை எடுக்கத் தீருமானம் செஞ்சிட்டம். பெரி... காரியம் செய்யிறப்ப சுதானம் வேணும். ஆத்திரப்பட்டா சிக்கலாப் போவுதில்ல?”
“கன்னிபுரக் கடக்கரையில போலீசு வெறியாட்டமிண்டு, சாமியார் குடுத்திருக்கும் சீட்டை போட்டோ பிடிச்சிப் பேப்பரில போட ஏற்பாடு செய்திருக்கே. நம்ம போராட்டம் நியாயமிண்ணு வெளி ஒலகம் தெரிஞ்சிக்கணுமில்ல?... இப்ப ஒரு சங்கட்டம் என்னண்ணா, நாம இப்பிடியே இருந்தா ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுண்ணு வக்கீல், தாசில்தார் எல்லாரும் சொல்றாங்க. ஏண்ணா, இப்பம் போலீசுக்காரரக் கைக்குள்ள போட்டுட்டாங்க. யாரானும் எதானும் கேட்டா, எங்க சர்ச்சு, அதுக்குரோதமா நடக்கிற ஆளுவண்ணு சொன்னா, மத விஷயத்தில் தலையிட வெளியாளுகளுக்கு உரிமை இல்லேம்பாங்க. ஆனபடியால, நீங்க கிறிஸ்தவத்தை விட்டு இந்துவாயி மாறிட்டீங்கண்ணா, தைரியமா வழக்குக் கொடுத்து, இந்தத் தெறிப்புக் குத்தகைய நிப்பாட்ட முடியும்னு சொல்லுறாங்க. அதுதான் இப்ப யோசனை. கிறிஸ்தவத்த விட்டு நாம விலகறோம்னாத்தா, முடியும். ஒரே வழி அதான். நானும் ஒங்ககிட்ட கேட்டு முடிவு செஞ்சிரணுமிண்டுதா வாரக் காட்டினம்...”
“பெரி... கிறீஸ்தவம், மனிசனைப் பிழைக்கவுடாத மதம் என்ன மதம்? விலகுவம் மச்சா? அப்படித்தா அந்த பாதிரிப் பயலுவளுக்குப் புத்தி காட்டணும்...” என்று எட்வின் கருவுகிறான்.
“அப்பிடி லேசா இந்துவாயிட்டம்னு சொன்னா அவங்க சேத்துக்குவாங்களா? அத்தை ரோசிச்சிப்பாரு மாப்ள, பொறவு அதுமில்ல, இதுமில்லண்ணு ஆயிப்போவும்? நாம நாலு பேரு இந்து வாயிட்டமிண்ணு அந்தக் காரயில இருந்தா சாமியாரு வாழ வுடுவாரா?”
“அது அப்பிடிக் கொண்ணுமாயிடாது, ஒரு நூறு இருநூறு பேருக்குக் கொறமாய இந்துவாயி, வெளியே இருக்கிற பெரிய கூட்டத்தில நாம சேந்திருவம். அப்பிடிக்கொண்ணும் விட்டிர மாட்டாங்க. இந்து பரிஷத்துண்ணு ஒண்ணிருக்கி. அவங்கத்தா இப்ப இந்தால சேரலாண்ணு சொல்லி, எல்லா ஒத்தாசையும் செய்யிறம்ணு சொல்லுறாங்க. நாமல்லாம் ஆதியில இந்துவா யிருந்தவங்கதானே? சவேரியார் காலத்தில வந்து கிறிஸ்தவமாக்கினாரு. அதனால் மேக்கொண்டு திட்டமாச் சொல்லி, கேசு கொடுக்கணும். நீங்க என்ன சொல்றீங்க. சொல்லும்...”
“நாங்க என்னத்தச் சொல்ல? மச்சான் எதாலும் ஒரு நடவடிக்கை முடிவா எடுக்கணும். நீட்டிட்டே போனா, பொஞ்சாதிபுள்ள, குடும்பம் ஒண்ணிருக்காது... கடக்கரயே மையவாடியாயிரும்...” என்று மரியான் முடிக்கிறான்.
“இதுநாள் பொறுத்தம்... இப்பமும் ஒரே ஒரு தபா... பால்சாமி நமக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா இருக்கிறவரு. அவருக்கிட்டப் போயி, விசயமெல்லாம் சொல்லுவம். இம்மாட்டு அநியாயம் நடக்கு. நாங்க இந்துவாயிரப்போறம். பொறவு நீரு விதனப்பட வேண்டாமிண்டு சொல்லிட்டு வரணும். ஏண்ணா, அவரு நிச்சயமா இத - சாமியின் அக்குருவங்களை ஆதரிக்க மாட்டார். நம்ம மேல ஒரு தாங்கல் அவருக்கும் இருக்கக் கூடாது...”
மரியானுக்கு அப்பன், ‘கிறிஸ்தவம் பால் சாமியிட்டதா இருக்கு’ என்று சொல்வது நினைவில் மின்னுகிறது.
“அது சரி. அவரு எங்கேயிருக்காரு. நாம போயிப் பாக்க?”
“ஒடம்பு சொகமில்லாம தாசரு மடத்தில தங்கியிருக்காராம். அங்கிய போயிப் பாக்கப் போறம். மொதிலியே நசரேன் அங்கே போயி நாம வாரதச் சொல்லியிருப்பான். இப்பம் நாம எல்லாம் அங்கிட்டுப் போவம்...”
ஆல்பர்ட் கீழிறங்கிச் சென்று தேநீர் வாங்கி வருகிறான். மிக இனிமையாக இருக்கிறது. சைக்கிள்களிலும், லாரியிலுமாக அவர்கள் உச்சிப் பொழுதுக்கு தாசர் மடம் செல்கின்றனர். சுற்றுச் சுவருக்குள் பூமரங்கள் நிலத்தில் பொன்னிதழ்களைப் பரப்பியிருக்கின்றன. அரளி கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கின்றன. பெரிய அழிக்கதவுக்கு நேராக சிறு கோயில்.
“அதா, காரு நிக்கி. நசரேனக்க பொஞ்சாதி பாரு...” குரூஸ் பிச்சையின் கிசுகிசுப்பு மரியானை வேறு பக்கம் நோக்கச் செய்கிறது. மரத்தடியில் அழகிய கருநீலம் காரொன்று நிற்கிறது. நீலப்பட்டுச் சேலையணிந்த பெண்ணொருத்தி வெளியே நிற்கிறாள். நசரேன் இவர்களை நோக்கி வருகிறான்.
நசரேன்... பழைய நசரேனா? பாம்புத்தோல் போன்ற மினுமினுத்த நாகரிகச் சட்டையும் சராயும், ஜோடும் அணிந்திருக்கிறான். முடியை எண்ணெய் தொட்டு அழகாக வாரி, அரும்பு மீசையை அழகாகக் கத்தரித்துக் கொண்டு விளங்குகிறான். கையில் பெரிய மோதிரம்; அகன்ற பட்டையுடன் கடியாரம்... அவனுடைய பெண்சாதியா அவள்? நீண்ட கூந்தலை அழகாக வாரிச் சேர்த்து, சாமியார் பங்களாத் திரைச்சீலையைக் கட்டினாற் போன்று வளையமிட்டுக் கட்டியிருக்கிறாள். செவிகளில் பொன் வளையங்கள்; கழுத்தில் மெல்லிய சங்கிலி; கையில் மெல்லிய இரு வளையல்கள்... ஆஸ்பத்திரியில் அவன் பார்த்த டாக்டரம்மா மாதிரியல்லவோ இருக்கிறாள்?
“வணக்கம்... வணக்கம்...” என்று எல்லோருக்கும் கை குவிக்கிறாள். வாட்ட சாட்டமாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் முகம் களங்கமில்லாத மலர்ச்சியுடன் விளங்குகிறது. அவர்கள் எல்லோரும் பால் சாமியைத் தேடி வராந்தாவின் பக்கம் செல்லுமுன் அவரே அவர்களை எதிர் நோக்கி மரத்தடியில் வந்து நிற்கிறார். மடத்துப் பணியாளன் ஒரு நாற்காலியை அங்கு கொண்டு வந்து போடுகிறான்.
“தோத்திரம் ஃபாதர்...!” என்று நசரேன், அவன் மனைவி, பெஞ்ஜமின் எல்லோரும் முழந்தாளிட்டு முதலில் ஆசிவாங்க நிற்கின்றனர்.
“காட் ப்ளஸ் யூ சில்ட்ரன்!”
வெளுத்து மெலிந்திருக்கும் சாமியின் கண்களில் மென்மையாம் ஒளி பூக்கிறது. ஒவ்வொருவராக அவர் நினைவு கூறுகிறார்.
“ஆல்பர்ட்... நீ மரியானில்லை? அப்பா இருதய ராஜ் எப்படியிருக்கிறாரு? முன்ன பையனுக்கு நாக்கு வெடி வெடிச்சிக் கிளிஞ்சி போச்சிண்ணு சொல்லிச்சி ஸிஸ்டர், பேச்சு வருதா?”
அவருடைய கனிவு மொழிகள் மரியானின் உள்ளத்தைத் தொடுகின்றன.
“பேச்சொண்ணும் வார இல்ல சாமி?”
“இங்கே தெரிஞ்ச அம்மா ஒருத்தர் அமெரிக்கா போயி வந்து ஸ்பீச் தெரபீன்னு தச்சிருக்கு. நான் லட்டர் தாரேன். கொண்டிட்டுப்போயி காட்டு. பேசுவான்...”
“சரி, சாமி...!”
“உன் தங்கச்சிதானே ஸிஸ்டர் யோசலின் கூட இருந்திச்சி?”
“ஆமா சாமி, கன்யா ஸ்திரீயாப் போவு...”
சிறிது நேரம் அங்கு மௌனம் படுதா விரிக்கிறது. எப்படி எதைத் துவங்குவதென்று தெரியவில்லை. பெஞ்ஜமின் தயங்கித் தயங்கி ஆரம்பிக்கிறான்.
“ஃபாதர் நாங்களெல்லாரும் கன்னிபுரக்கரையை விட்டு தொழிலைவிட்டு நாலு மாசமா அலையிறம்...”
சாமியின் முகத்தில் ஒரு புன்னகை கீற்றாக மலர்ந்து மறைகிறது.
“உங்க கரையில்தான் பெரிய வரலாறு நடத்திட்டிருக்கிறீங்களே?”
“அது விஷயமாகத்தான் உங்களிடம் வந்திருக்கிறோம் ஃபாதர்! துவி, அஞ்சுமீன் தெறிப்பில் எங்களுக்குச் சேர வேண்டியது அதிகம் போயிடுது. வலையெல்லாம் நல்லபடி முன்னேற்றமாயும், தொழிலில் நாங்க விருத்திக்கு வர ஏலாதபடி எல்லாம் கோயில் மகமைண்ணு வாரப்ப, நாங்க கஷ்டப்படுறம். இது சரியில்ல, மினக்கடை செய்யும் ஆளு வருசத்துக்கு ஆறுரூவாதா வரிகட்டுறா. அதுபோல நாங்களும் கட்டுறோம். கூடுதலாவே கூடக் கட்டுறோம். துவி முழுசும் எடுக்கக் கூடாதுண்ணு ரொம்பக் கேட்டோம். நாங்க சண்டை போடணுமிண்ணு இஷ்டப்படல. ஆண்டகையைப் பாத்துப் பேச வந்தம். போன பண்டியலுக்கு முன்ன அவரு பேச மறுத்திட்டார். பின்ன வேற வழியில்ல. தெறிப்புக்குத்தவை ஏத்துக்கலன்னோம். சிலரைத் திருச்சபையிலேந்து விலக்கம் செஞ்சு அறிக்கை படிச்சாரு சாமி. அத்தோடு கொலையெல்லாம் விழுந்து போச்சி. எங்கள்ள ஒரு பெரியவரை எதிர் பார்ட்டி கொன்னிட்டாங்க. பொதைக்க மையவாடில எடமில்லேன்னாங்க. நாங்க கதவ ஒடிச்சி மையவாடில கொண்டு புதைச்சோம்...”
சாமி முகத்தில் சலனமில்லாமல் அவன் கூறும் விவரங்கள் அனைத்தையும் கேட்கிறார். போலீஸ் வந்திருப்பதையும் ஊரில் நிகழும் நாசச் செயல்களையும் கேட்கிறார். சிலுவைப் பிச்சையான் தன்னை இரும்புருளை போட்டு உருட்டிக் காயத்துடன் முட்புதரில் போட்டு விட்டட்தைச் சொல்லி தன் காயங்களைத் துணியை நீக்கிக் காட்டுகிறான்.
“உங்களைத்தான் நம்பி நாங்க வந்திருக்கிறோம் சாமி. சாமியின் மனசு எங்களுக்குத் தெரியும். இப்படியெல்லாம் அநீதம் நடக்கம், கிறிஸ்துநாதர் திருச்சபை இடங்கொடுக்குண்டு நாங்க நம்பல. ஆனா எங்க கஷ்டப்பாடுகளுக்கு ஒரு முடிவு வேணில்ல? குடிமகன் சண்ட வந்து கிட்டத்தட்ட வருசமாவுது. கட்டுமரமெல்லாம் கொளுத்தியும் வெட்டியும் பாழ் பண்ணியிருக்காங்க. எங்க மரமொண்ணை ஆழில கொண்டுவிட்டு அது பாம்பன்ல சேந்திருக்குண்டு தகவல் தெரிஞ்சிருக்கு. போயிப்பாக்கல. ‘கஸ்டம்’காரங்க வச்சிருக்காங்களாம். பெண்டு பிள்ளையெல்லாம் பட்டினி, அடி கொண்டும் மான நஷ்டப்பட்டும் தவிக்கிறாங்க. நானும் இது விசயமா பல பேரிடம் புத்தி விசாரிச்சப்ப இது மத சம்பந்தப்பட்டிருப்பதால வெளியாளுங்க கேக்க முடியாது. நீங்க அந்த மதத்தை விட்டு வந்திட்டீங்கண்ணா கேக்கலாம். துவி கொடுக்க மாட்டாங்கண்ணு வாதாடலாம்ங்கறாங்க. எங்களுக்கு இப்ப திருச்சபையில எடமும் இல்ல. இந்துவாயிப் போறதா முடிவு செஞ்சிட்டு உங்ககிட்ட வந்திருக்கிறோம் சாமி!”
சாமியார் நெடுநேரம் எதுவும் பேசவில்லை.
பிறகு எழுந்து உள்ளே செல்கிறார். சிறிது நேரம் சென்று திரும்பி வருகிறார்.
“நீங்கல்லாம் இங்கியே இருங்க. நான் போயி இப்பம் ஆண்டகையிடம் இது விசயம் பேசுகிறேன். பிறகு அவசியமானால் நீங்களும் வரலாம்!”
பெஞ்ஜமின் நசரேனைப் பார்க்கிறான்.
“ஆமா, வண்டியில ஃபாதரை நாம் கூட்டிப்போவம், மற்றவர் இங்கே இருக்கட்டும்...”
பெஞ்ஜமின் அங்கு நிற்கும் நீலக் காரின் கதவைத் திறந்து சாமியைப் பின்பக்கம் ஏறி அமரச் செய்கிறான். பிறகு நசரேனின் பெண்சாதி அந்த முன் சீட்டை மடிக்க பெஞ்ஜமினும் பின்னே அமருகிறான். அவள் ஓட்டும் ஆசனத்தில் அமர்ந்து கொள்கிறாள். அவள் அருகில் நசரேனும் ஓரத்தில் எட்வினும் அமர்ந்து கொள்ள வண்டி செல்கிறது. மரியான் ஓர் அழகிய கனவு போல் அந்தக் கார் வாயிலை விட்டுச் செல்வதையே பார்த்து நிற்கிறான்.
நெஞ்சில் கிளர்ந்த உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறான். காரை அவள் ஓட்டிச் செல்கிறாள். தேவதைபோல் - ராணி போல் - இவன் லாஞ்சி சொந்தக்காரனாகி விட்டான் - சூட்டுப் போட்டு இங்கிலீசு பேசுகிறான்!
‘சே... அவங்கிட்ட ஏன் பொறாமைப்படணும்? நசரேன் நல்லவன். அவன் லில்லிப் பொண்ணைக் கட்டிக்கிறேண்ணுதா சொன்னான். கொடுப்பனயில்ல... ஆனா, வாழ்க்கையில எப்படியும் முன்னுக்குப் போவணும். மிசின் போட்டுன்னு அவன் போகலேண்ணா இவர்களுடந்தான் சீரழிஞ்சிட்டிருப்பான்!’
ஆல்பர்ட்டும் சாமுவலும் குத்திப் பேசுகின்றனர்.
“நசரேன் எப்பிடியாயிட்டாம் பாத்தியா? மாமனுக்கு நாலு லாஞ்சி இருக்கி. மன்னாரு மடையில இப்ப தொளிலு. பொஞ்சாதி பாத்தியா? அப்பச்சியவச்சிக் காரோட்டுதா. புருசனவச்சி ஓட்டுதா...”
“நசரேனக்க ஆத்தா மருமவளோட எப்படியிருக்கா?”
“படிச்ச பொண்ணு. சண்ட போட ஏலுமா? ஸ்லோன் யாபாரம் செஞ்சி சேத்த பணம் இப்பம் லாஞ்சில போட்டிருக்காவ. வலை நாலு, வாலாத்த, எல்லாம் வியாபாரம் மொத்தமா இவெ அண்ணெ ஒத்தன் சாளையப் பதம் பண்ணி டின்னில அடச்சு மேல்நாட்டுக்கு அனுப்ப ஃபாட்டரி வய்க்கப் போறானாம். அமரிக்கா போயிருக்கா...”
அவர்கள் பேசுவதைக் கேட்கையில், வாழ்க்கையில் முன்னேற்றம் காணப் படிப்பும் வெளி உலக அனுபவமும் எவ்வளவுக்குத் தேவை என்று மரியானுக்கு உறைக்கிறது. தங்களுக்கு எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்ற நினைப்பில் பெருமூச்செறிகிறான். வலை, மரம் எல்லாம் போய் என்ன செய்வார்கள்?
கார் திரும்பி வருகிறது. ஆனால் சாமி வரவில்லை. மற்றவர்களுமில்லை. நசரேனின் பெண்சாதி மட்டுமே காரை ஓட்டி வருகிறாள்.
“அண்ணாச்சி, நீங்கல்லாம் வாங்க. எல்லாரும் நம்ம வீட்டில காத்திருப்பாங்க...” என்று கார்க் கதவைத் திறந்து மறுபக்கம் ஆசனத்தை மடிக்கிறா.
“சாமி...?”
“அவர் பிஷப்பிட்ட கதைக்கிறார்...”
ஆல்பர்ட், சாமுவல், குரூஸ் மூவரும் உள்ளே போய் அமருகின்றனர். மரியானுக்கு முகம் சிவக்கிறது. இவளிடம் போன காரியம் என்ன ஆயிற்றென்று கேட்காமல் உட்காருவதா?
“நீங்க உக்காருங்க அண்ணாச்சி...”
அவன் மறுபேச்சின்றி அமருகிறான். அவள் கார்க் கதவை அறைந்து விட்டு மறுபக்கம் சென்று ஏறிக் கொள்கிறாள். தொங்கும் சாவிக் கொத்தைத் திருப்பிக் காரைக் கிளப்புகிறாள். வண்டி சீராகப் போகிறது.
“என்னத்துக்காவ இந்தப் பொம்பிள எங்களக் கூட்டிட்டுப் போறா...” என்று கொச்சையான, மெருகழியாத உள்ளத்திலிருந்து சொற்றொடர் எழும்புகிறது. பெஞ்ஜமினையும் நசரேனையும் வசைபாடத் தோன்றுகிறது. அவள் கண்ணாடியில் அவன் முகத்தைக் கண்டு, சிரித்துக் கொள்கிறாள் உள்ளூற.
“நீங்கதா மரியான் இல்ல...? உங்களை அடிக்கடி சொல்லுவார் அத்தான். நீங்க ரெண்டு பேரும் ஒரு தபா புயலில் அகப்பட்டுப் பிழைத்தீர்களாம். நீங்கள் கல்யாணத்துக்கு வராதது அவருக்கு ரொம்ப வருத்தம்.”
அவன் மறுமொழியேதும் கூறவில்லை. அவள் பக்கத்திலிருந்து ரம்மியமானதொரு நறுமணம் மென்மையாகக் கமழுகிறது. கருவாட்டு மணத்தையும் கவிச்சி வாடையையும் தவிர வேறு மணம் தெரியாத அவனுக்கு அது நாகரிகமான நறுமணம் என்று உணர்த்துகிறது. அவனுக்குப் பழக்கமான அலைவாய்க் கரையில் பெண்மக்களிடம் கருவாட்டு வீச்சமும், ஆண்மக்களிடம் சாராய வீச்சமும்தான் அடிக்கும். பெண்கள் மேலுக்கு ‘பூதர்மா’ப்பொடியைப் பூசிக் கொண்டாலும் உடலோடு ஊறிக்கிடக்கும் கவிச்சி வாடையே முன்னுக்கு முரண்டு வரும். இந்த வாசனை...
இவன் நறுமண ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் வண்டி வீட்டு முன் வந்ததே தெரியவில்லை. மேலே குரோட்டன்சு பொங்கி வழியும் முகப்புடன் கூடியதொரு வீட்டின் முன் வண்டியை நிறுத்துகிறாள்; நசரேன் ஒலிகேட்டு வந்து பெரிய கேட்டைத் திறக்கிறான்.
நசரேன் கார்க் கதவை திறந்துவிட்டு, “வாங்க... வாங்கல்லாம்...” என்று வரவேற்கிறான்.
வாசல் வராந்தாவைக் கடந்து முன்னறையில் சாமியார் வீட்டிலிருப்பது போல் சோபா - நாற்காலிகள் விளங்குகின்றன. பெஞ்ஜமின் அங்கே சோபாவில் அமர்ந்து நசரேனின் மாமனுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.
“எல்லாரும் வாங்க. வந்து இப்படி சவுரியமா இரிங்க. உங்களுக்கெல்லாம் ஒரு விருந்து போடணும். கலியாணத்துக்கே வார இல்லேண்டு நெனச்சிருந்தம். இப்ப சந்தர்ப்பமிருக்கு. சவுரியமா இருங்க...”
அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறு சுற்றும் முற்றும் பார்க்கின்றனர். மரியானுக்குக் கோபம் வருகிறது. அதற்குள் நசரேனின் மனைவி, கண்ணாடித் தம்ளர்களில் சர்பத் எடுத்துக் கொண்டு - அந்தத் தட்டை ஏந்தி வருகிறாள். மரியானிடம் நீட்டுகிறாள். நசரேன் ஒவ்வொரு தம்ளராக எடுத்து எல்லோருக்கும் கொடுக்கிறான். கட்டி உருண்ட நசரேனிடம், மாப்ளே என்றழைத்து மடிப்பெட்டி வெற்றிலையையும் பீடியையும் பகிர்ந்து அனுபவித்த நசரேனிடம், கெருவிச் சண்டை போட்ட நசரேனிடம் இன்று பேசக்கூட நா எழவில்லை. அவன் எங்கோ உச்சிக்குப் போய் விட்டாற் போலிருக்கிறது. சாமுவேலும் எட்வினும் இவ்வாறு பதவிசா உட்கார்ந்திருந்தது உண்டா?
நசரேனின் ஆத்தா, யேசம்மா வருகிறாள்.
“வா மக்கா! கலியாணத்துக்கு வார இல்லியே? ஊரில என்னிய என்னியோ சொல்லிக்கிறா. ஆத்தாளையும் அப்பச்சியையும் புள்ளங்களையும் இங்கே கூட்டியாந்து வையேஎ? ஒரு நெலவரப்பட்ட பின்ன போயிட்டாப் போவு!”
மரியான் ஆரஞ்சுச் சாற்றைப் பருகிவிட்டுத் தம்ளரை வைக்கிறான்.
“எல்லாரும் அந்தாக்கில வந்திர ஏலுமா மாமி?” என்று கேட்கிறான் ஆல்பர்ட்.
“ஒரு கிளாஸ் சாராயம் குடுக்கப்படாதா, நாக்கு நனச்சு எத்தன காலமாச்சி!” என்று எட்வின் முணுமுணுக்கிறான்.
“போலீசுக்காரன எதுக்காவ ஊருக்குள்ள விட்டீங்க? ஆண்டகையிட்டப் போனதுக்கு என்னப்பு சொல்லுதா?...” மாமியின் கேள்விக்கு பெஞ்ஜமினே மறுமொழி கூறுகிறான்.
“இப்பம் பால் சாமிட்டப் போனம். அவரு ஆண்டகையிட்டதா கூட்டிப் போனாரு - எல்லாம் உங்க மருமவ இருந்தா. கேளுங்க என்ன சொன்னாருண்ணு?”
“பால் சாமி பேசறப்ப நாங்க வெளியேதான் இருந்தோம்.”
‘ஆண்டவரே, அவங்க கோரிக்கை நியாயமில்லையா, நீங்க விட்டுக் கொடுத்தாலென்னன்னு கேட்டாராம். நமக்கு ஒரு ‘பிரின்ஸிபல்’ வேணுமில்ல. கிறிஸ்துவன் கோயிலுக்கும் குருமடத்துக்கும் மகமை கொடுக்க வேண்டுமென்று திருச்சபைச் சட்டத்தில் வலியுறுத்தப்படவில்லையா’ன்னு கேட்டாராம் பிஷப் திருப்பி.
'அவங்க மாட்டோமுன்னு சொல்லலியே? அவங்க தரித்திர நிலைமையைப் பார்க்க வேண்டாமா? அது நம்ம பொறுப்பில்லையா?’ன்னு பால் சாமியார் கேட்டார்.
‘இது சேவியர் காலத்திலேந்து வர ஏற்பாடு, இப்ப மாற்ற முடியாது’ன்னாரு பிஷப்.
‘ஆண்டவரே, எனக்கும் சரித்திரம் தெரியும். சவேரியார் விசுவாசிகளாக்கினார். ஆனா இப்படி விதி செய்யல. இருந்தாலும் இதை மாற்றி அமைக்கணும்’னாரு சாமி விடாம.
‘முந்தின பிஷப் இது பத்தி யோசித்து இந்தக் குத்தகை எல்லாம் விட்டுக் கொடுத்துட்டா வருமானமில்லாம போயிடும்னுதான் உரக்கச் சொல்லியிருக்காரு...’ன்னாரு பிஷப்.
அதுக்கு நம்ம ஃபாதர், ‘ஆண்டவரே, அவங்க... வேதத்தை விட்டே போயிடுவோமின்னு சொல்லுறா. அதை நெனச்சு இதைச் செய்யணும்’ன்னாரு.
பிஷப், ‘ஐ டோன்ட் கேர்...’ன்னு முடிச்சிட்டார்...
மரியான் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். தங்கள் முயற்சிகள் வீணானது பற்றிக் கூட உறைக்கவில்லை.
ஒரு பெண், அங்கே நடந்த பேச்சை அப்படியே சொல்கிறாள்; காரோட்டுகிறாள்; ஆரஞ்சுத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறாள்; அவள் பேசுவதை எல்லோரும் குறுக்கே பாயாமல் அமர்ந்து கேட்கின்றனர்!
“பின்ன என்னன்னு தீருமானம் செஞ்சிருக்கீங்க?” என்று மாமன் விசாரிக்கிறார்.
“வேற வழியேயில்ல. கடசீவரைக்கும் பாத்திட்டம். இனிமே கைலாசபுரம் வக்கீல் யோசனைப்படிதான் நடக்கணும். திருநேலியில சாமிஜி இருக்காரு - பரிஷத் சாமிஜி - முடிவு இதா... அவங்க நாங்க மாறிட்டா நடவடிக்கை எடுத்துப் போராடலாம்ண்ணு சொல்லியிருக்கா...”
“அப்பம் இந்துவாயிடுறீங்க...?”
“வேற வழி?”
பெஞ்ஜமின் அவர்கள் எல்லோரையும் பார்க்கிறான். மரியான் எதிரே சுவரிலிருக்கும் படங்களைப் பார்க்கிறான். சரிகைப்புள்ளிகளும் கொடிகளும் அலங்கரிக்க, ‘GOD IS LOVE’ என்ற எழுத்துகள் ஒரு படத்தில் மின்னுகின்றன. நசரேனும் இந்தப் பெண்ணும் திருமணக் கோலத்திலான கலர்ப் படம் மாட்டியிருக்கிறது. கையில் செண்டும் சூட்டுக் கோட்டுமாக நசரேன் - இவள் மலர் வாயை முடியும் கீழே சரிந்து குவியலாக விழும் ‘வீலு’மாக.
“என்னம்பு, மச்சான் சொல்லுவது காதுலவுழுகுதா? மரியான் பேசாம இருக்கே?”
அவன் சுதாரித்துக் கொண்டு, “காதில வுளுகுது. இந்துவாயிடுறதுண்ணாரு” என்று மறுமொழி தருகிறான்.
“நாம் எல்லாரும் சவேரியார் இங்கு வருமுன், ஆதி இந்துக்கள்தா...” என்று நசரேனின் மனைவி சிரிக்கிறாள்.
“இவ சரித்திரம் படிச்சித்தா பி.ஏ. பண்ணியிருக்கா...” என்று தந்தை பெருமையுடன் கூறுகிறார்.
“நோ, இந்தச் சரித்திரம் இப்பதான் படிக்கிறேன். உண்மையில, அந்தக் காலத்துக் குறிப்புப்படி, நாம் இந்துவாக இருந்தோம். ஒரு முஸ்லிம் வந்து ஒரு பெண்பிள்ளை காதை அறுத்திட்டான். முஸ்லிம் தொந்தரவு பொறுக்காம, இவங்க, போர்ச்சுகீசியரிடம் உதவி கேக்கப் போனாங்க. அவரு சொன்னாரு, நீங்கல்லாம் கிறிஸ்தவத்துக்கு வந்திட்டா, உங்களை அவங்ககிட்டேந்து காப்பாத்தறோமின்னு சொன்னாரு. இவங்க சரின்னு விசுவாசிகளாயிட்டாங்க. இப்பிடி ஒரு பொம்பிளை காதுதா காரணமாயிற்று!”
“இவெ நெறயக் கதயடிப்பா! இதா வேலை. புஸ்தகம் படிப்பதும் கதயடிப்பதும்...” என்று நசரேன் அவளைக் கிண்டுகிறான்.
ஆனால் மரியானுக்கு ‘அப்ப, அப்பவும் ஒரு இடஞ்சல் வந்துதா எல்லாரும் விசுவாசிகளானாங்களா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.
“மதம்ங்கறது, மனிசனுக்கு உலக வாழ்விலே ஒரு பிடிப்பு உண்டாகணுமிங்கறதுக்குத்தானே தவிர வேறொண்னில்ல; நமக்கு இப்பம் வழியில்ல. ஒரே முடிவுதானிருக்கி.”
மரியான் திடீரென்று நினைவு வந்து கேட்கிறான் நசரேனிடம். “மாப்ள, நீ இங்க துவித் தெறிப்புக்குடுக்கிறியா?”
“இங்க ஆரு ஸ்றா புடிக்கிறாங்க? காரல், சாளை, இறால் - இது தவிர பெரிய மீனே புடிக்கிறதில்ல மச்சான். றாலுக்கு வெல கூடும்னு சொல்றாங்க. ஃபாக்டரி பதப்படுத்தத் தொறந்தா ஏறிடுமா. புன்னகாயல், மன்னாருமடை, கொல்லம், நீண்டகரைன்னு போயி சாளையும் காரலுந்தா புடிக்கிறம். அஞ்சுமீன் தெறிப்புன்னில்ல. ஒரு ‘போட்’டுக்கு மாதா கொடை இம்புட்டுன்னு மொத்தமா குடுத்திடறாங்க...”
நசரேன் இந்துவாக மாறுவானோ?
அன்று அவர்கள் வீட்டில் பிரியாணிச் சோறும், மீன் சொதியும், வறுகலும் பொரியலுமாக இவர்களுக்கு விருந்து நடக்கிறது. மேசையில் பெரிய பீங்கான்களில் சோறு பரிமாறுகின்றனர். உண்டதும் மரியானுக்குக் கண்களை இறுக்கிக் கொண்டு வருகிறது. ஆனால் பெஞ்ஜமின் மறுநாள் திருநெல்வேலியில் சந்திக்கலாமென்று விடைபெற்றுச் செல்கிறான். மற்றவரனைவரும் கூட வேறிடங்களுக்குச் செல்கின்றனர்.
நசரேன் அன்று மாலையில் கன்யாகுமரிப் பக்கம் மீன் பிடிக்கப் போகிறான்.
“வரியா மச்சான், லாஞ்சிக்கு? கடலுக்குப் போவலாமா?” என்று அழைக்கிறான்.
அந்த அழைப்பு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! கடலுக்குப் போய் எத்தனை நாட்களாகி விட்டன! அவன் போகிறான்.
கச்சான் காற்று பன மட்டைகளை அசைத்து விளையாடுகிறது. அதற்கிணையக் கடலலைகள் ஒத்திசை கூட்டிக் கொண்டு ஆரவாரம் செய்கின்றன. கடற்கரை மடிக்காரர் அனைவருடைய செவிகளிலும் அது, ‘றால், றால்’ என்று முழங்குகிறது.
றால்...! றாலேதான்!
கடலன்னை உவந்தளிக்கும் புதிய செல்வம் அது!
கடல் தொழிலாளிகளின் நடையில் ஓர் உற்சாகம்; கண்களிலே ஒரு புத்தொளி!
கன்னிபுரம் என்ன, கடற்கரையிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் அலைகள் வண்மையின் புதிய சங்கீதங்களை இசைக்கின்றன.
கோளா வலைகளைப் புறக்கணித்து, ‘செட்டு செட்டாக’ இரண்டாம் நம்பர் வலை பின்னுகின்றனர். ஆற்று நீர்முகங்களில் வந்து விழும் எருவும் வண்டலும் படியும் கடல் மடைகளில் ‘இறால்’ என்ற இனங்கள் ‘கலித்து’ப் பெருகுகின்றன. கடலம்மை கனிந்தளிக்கும் இச்செல்வங்களை மடிக்காரர் கட்டு மரங்களிலும், வள்ளங்களிலும், விசைப்படகுகளிலும் அள்ளி வருகின்றனர். கட்டுமரங்கள் கரைக்கு வருமுன்பே ‘இறால்’ ஏஜண்டுகளான பையன்கள் கரையில் வலைப் பைகளுடன் காத்திருக்கின்றனர். இவற்றுக்கு ஏலம் கிடையாது. எவ்வளவுக்குப் போகுமோ, என்ன ஆகுமோ என்ற நிச்சயமில்லாத தவிப்புகளோ, தணதணப்புகளோ இல்லை. ‘றால்’ வலையில் பட்டு விட்டால் கையில் கிடப்பது தங்கமேதான். கொச்சிக்காரச் ‘சப்பை’களின் ஆட்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு உனக்கென்று காத்திருக்கின்றனர்.
வலையில் கட்டித் தூக்கப் பெரிய இனமாக இருந்தால் ஒரு கிலோ எழுபது ரூபாய் வரையிலும் போகிறது! ஒரு கிலோ, பத்துப்பன்னிரண்டு எண்ணிக்கைக்கு வரும் றால், எழுபதுக்கும் மேலும் கூடப் போகிறது! ஒரே நாளில் ஐநூறு, அறுநூறு என்று வாரி வரும் செழிப்பு...
பழைய ஊர்களா கடற்கரை ஊர்கள்?
பெஞ்ஜமினின் வீடு மாடியும் கீழுமாக, மொசைக் தளமும் வண்ணமுமாகப் பளபளக்கிறது. அவன் இப்போது பெஞ்ஜமினில்லை; பஞ்சாட்சரம். ஆல்பர்ட், ஆதித்தனாகி விட்டான். அவர்கள் வீட்டுப் பெண்மக்கள் கழுத்தில் வரி வரியாகச் சங்கிலி - வளையல்கள் இழைகின்றன. ஐசக்கு பிச்சைமுத்துப் பாட்டாவிடம் வாங்கிய வீட்டை மீரான் சாயபுவுக்கு விற்றுவிட்டு, கடலை விட்டுத் தள்ளி நசரேனின் வீட்டை வாங்கிக் கொண்டு குடி பெயர்ந்திருக்கிறான்.
மீரான் சாயபு அந்த வீட்டைப் பெரிதாகக் கட்டி, ஒரு ஓட்டலும் நடத்துகிறார். றால் எடுக்க வரும் வியாபாரிகளும், லாரிக்காரரும் மற்றவரும் அங்கே வந்து உணவு கொள்கின்றனர். மரியானின் வீட்டிலும் மாற்றங்கள் இல்லாமலில்லை. புறக்கடையில் அதிக மாற்றம் இல்லையெனினும், முன்புறத் தாழ்வரையைச் சிமிட்டி பூசி மேலே ஓடுபோட்டுக் கட்டி, அழிக்கதவும் போட்டிருக்கின்றனர். வெகு நாட்களாக கனவு கண்ட மின் விளக்கும் போட்டாயிற்று. மரியான், சந்தியாகுவின் கொழுந்தியா மகள் மேபல் பெண்ணைத்தான் கட்டியிருக்கிறான். ஆனால் மரியான் சுப்பிரமணியனாகி விட்டான். சந்தியாகு வீட்டாரும் இந்துவாகி விட்டனர். சந்தியாகு சுந்தரமாக மாறியிருக்கிறான். மேபல் புனிதாவாக மாறி இருக்கிறாள். இவர்களுடைய மணவாழ்வில் மலர்ந்த மலராக, கணேசு அப்பனின் மடியிலும் ஆத்தாளின் இடையிலும், அத்தைமார்களின் கொஞ்சலிலும் துள்ளி விளையாடுகிறான். மேரி மேனகா எனப் பெயர் பெற்றிருக்கிறாள். ஜெயமணி, ஜெயலட்சுமியாக விளங்குகிறாள். இவர்கள் நுதலில் செஞ்சாந்துத் திலகமும், செவிகளில் பொன்னாலான தோடுகளுமாக ஒரு புதிய மலர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நடமாடுகின்றனர். பெரிய கோயிலுக்கு நேராக எழும்பியிருக்கும் கணபதி கோயிலின் சந்நிதியில் மாக்கோலமிடுவதும், மாலை தொடுப்பதும் இவர்களுக்கு உற்சாகமளிக்கும் பணிகள். அத்துடன் இவர்களுக்காகவே அங்கே நிலை பெற்றிருக்கும் பீடி ஃபாக்டரியில் இருந்து இலைகளும் தூளும் வாங்கி வந்து பீடி சுற்றுகின்றனர். ஜெயா மட்டும் வாரம் பத்து, பதினைந்து என்று சம்பாதிக்கிறாள். பாதங்களில் சல்சல் என்றொலிக்கும் பாத சரங்களும், வளையல்களுமாக மேனகா அந்தக் கரையின் வாலிபர்களுக்கெல்லாம் கனவுக் கன்னியாக நடமாடினாலும், முன்னர் அருஸ்தீனாக இருந்து இந்நாள் அநந்தனாகி விட்டவனே இவளை மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறான்.
மேனகா கோயிலில் கோலம் போடச் சென்றால் இவனும் பின்னால் அங்கு செல்கிறான். மணியை அடிப்பான்.
“சாமி! திருநூறு கொடுங்க!” என்று இவர்களுக்கு சமயப் பிரசாரகராக வந்து கோயிலில் இறைபணி புரியும் குலசேகர வாத்தியாரிடம் கையேந்தி நிற்பான். திறந்த மார்பு தெரிய இடுப்பில் பாங்காக வேட்டியுடுத்தி திருநீறும் சந்தனமும் துலங்க இவளை வட்டமிடும் பக்தனுக்கு படிப்பு பூச்சியம்தான். நாலாவது வரையிலும் பள்ளிக்குச் சென்றானென்று சொல்வார்கள். ஆனால் சுவரொட்டித் தமிழைக் கூடப் படிக்கத் தெரியாது. இறால் தரும் செழிப்பில், அப்பன், அம்மை, கூடப் பிறந்த அறுவர், மயினி, மச்சான் எல்லோருமாக நூறு ரூபாய்க்குப் பிளஷர் எடுத்துக் கொண்டு நாகர்கோயிலில் சினிமா பார்த்து ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள். தீபாவளிக்கு நூறு ரூபாய்க்குப் படய்க்கமும் மத்தாப்புவும் வாங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமைக்கு மறுநாள், கடலிலிருந்து திரும்பும் வரையிலும் அடுப்பில் பூனை படுத்திருக்கும். இந்தக் காரணங்களால், ஆத்தாளும் அண்ணனும் மேனகாவுக்கு அநந்தனைக்கட்ட விருப்பமில்லாமல் இழுக்கடிக்கின்றனர். தன் தங்கச்சி இந்த அன்றாட மேடுபள்ள அலைகளுக்கே ஈடுகொடுக்க இயலாத வாழ்வில் முன்னுக்குப் போக முடியாமல் மாயக்கூடாது என்பது மணியனின் எண்ணம். என்றாலும் வேறு மாப்பிள்ளை கிடைப்பானோ என்பது பிரச்னை.
இந்த ஐந்தாறு வருஷத்தில் நசரேனின் குடும்பம் தூத்துக்குடியிலேயே ஊன்றிவிட்டதென்றாலும் அவர்கள் மதம் மாறாமல் கிறிஸ்தவர்களாகவே இருந்தாலும் இறால் ஏஜ்ன்ட் என்ற நிலையில் ஜான் ஐஸ் வண்டியை ஓட்டிக் கொண்டு அந்தப் பக்கம் அன்றாடம் வருகிறான். அவர்கள் வீடு தேடி வராமல் போவதில்லை. மாலையோ, மதியமோ, முன்னிரவோ எப்போது வேண்டுமானாலும் வந்து, சிறு ஏஜன்டுகள் சேமித்து ஐஸ் பெட்டியில் வைத்திருக்கும் இறாலை வாங்க வருகிறான்.
“பர்ள் லாப்ஸ்டர்ஸ்...” என்ற எழுத்துகளைத் தாங்கி வரும் பெரிய மஞ்சள் நிறச் சரக்கு வண்டி - அதன் மீது பெரிய மீசையுடன் இரண்டு றால் ஒன்றையொன்று வளைந்து கவ்வும் மலைபோல் வண்ணச் சித்திரம் தீட்டப் பெற்ற வண்டி, மணியனின் வீட்டு வாயிலில் நிற்கிறது. பூத்துவாலையைத் தலையில் சுற்றிக் கொண்டு, கருத்த முடிச்சுருள்கள் வழிய, அரும்பு மீசைக்குக் கீழ் புன்னகை இலங்க, சட்டைக்குள் மார்பில் குரிசுடன் தங்கச்சங்கிலி தவழ, அவன் வருகிறான். அந்தி மங்கி இருள் பரவும் நேரம் அப்பன் கட்டிலில் அமர்ந்து சாராயம் பருகிக் கொண்டிருக்கிறார்.
“மாமோய்...! எப்பிடி இருக்கீரு!...” என்று விசாரித்த வண்ணம் அவரருகில் அமருகிறான்.
அப்பச்சி மிக நுட்பமாக அவனை எடை போடுவதுபோல் கூர்ந்து நோக்குகிறார்.
ஜான், அவரை விசாரித்துவிட்டுப் போகவா வந்திருக்கிறான்?
“வாலே, நிதம் கடாபுடாண்ணு இந்தக் காரு வண்டிய ஓட்டிட்டு வாரியே? ஆத்தா, அண்ணெய ஒருக்க கூட்டிவார தானே?”
“ஆத்தாளைப் பாக்குறதேயில்ல மாமோ! மாமியாளும் மருமவளும் பொழுது விடிஞ்சா மல்லு நின்னிட்டிருந்தா. இப்பம், ஆத்தா பெரிய கோயிலுக்குப் பக்கம் தனிச்சு வந்திரிச்சி. நா இங்கிய போன மயினி சொணங்குவா; அங்கிய போனா ஆத்தாளுக்குச் சுணக்கம். றால் கொண்டு போயி பாட்டரில் போட்டுட்டு அங்கியே எங்கனாலும் சோறுண்ணுப்போ... மாமோ... றாலுக்கு ஏகமா டிமாண்ட். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் கொண்டிட்டு வருதுண்ணு டெல்லி சர்க்காரில் மிசின் போட்டுக்குண்ணு மூணு கோடி சாங்சன் பண்ணியிருக்கா. மரியானண்ணெ லாஞ்சி வாங்கணுமிண்ணு அப்பமே சொன்னா. நா எப்பம் வந்தாலும் அண்ணெயப் பாக்குறதில்ல...”
அப்போது வெளியிலிருந்து வரும் மேனகா தூக்குப் பாத்திரத்துடன் உள்ளே செல்கிறாள்.
“...ஹ... மேரியா இது? பொட்டுதொட்டு, சலங்கையெல்லாம் போட்டிருக்கவே, ஆளே மாறிட்டாப்பல இருக்கி!”
அப்பன் எங்கோ பார்த்துக் கொண்டு பெருமூச்செறிகிறார்.
“நீங்கதான் மாறாம நிண்ணிட்டீங்க. எப்படியெல்லாமே நினைச்சிருந்தம். அந்தப் பொண்ணு கன்யாஸ்திரீயாயிட்டா. இல்லேண்ணா, நசரேனக்க அவதா பொஞ்சாதியாயிருப்பா. உங்கப்பச்சி எம்மாட்டுக்கு ஆச வச்சிருந்தாரு! எல்லாம் ஆண்டவ நெனப்பு. இப்பமும் கோயில் மணியடிக்கையிலே ‘யேசுவே’ண்டுதா வாயில வரும். இவங்கல்லாம் இந்தக் கோயிலுக்குப் போறாங்க, கணவதிங்கிறாங்க, முருவாண்ணு பாட்டுப் படிக்கானுவ, திருச்செந்தூர் கும்பிடப் போறானுவ, பஜன பண்ணி கல்பூரம் கொளுத்தறானுவ, துண்ணூறு பூசுதானுவ, எனக்கு அதொண்ணும் நெத்தத்தோடு பாந்தமாவல. எனக்குத் தெரிஞ்சி, அறிஞ்சி, அந்தக் கடலொண்ணுதா சத்தியமாயிருக்கி. அந்தச் சாமி ரூம்பில வச்சி, போலீசு எங்களை அடிக்கையிலே, மச்சிலே அவனுவ ஜபம் பண்ணிட்டிருந்தானுவ. என்ன ஜபம்? ஆருக்கு வேண்டிப் பண்ணினாரு? அப்பல்லாம் எத்தனையோ ராவில, கோயில் பீடத்தில் - மாதா சுரூவத்தின் கண்ணிலேந்து நீரொழுகுறாப்பல நெனச்சிட்டிருப்பே. அவனுவ பாத்திட்டு அறுவு ஒரச்சி மன்னாப்புண்ணு ஓடிவந்து கேக்கணுமிண்டு நெனப்பே. அதொண்ணும் நடக்க இல்ல - பின்னக்க இவனுவ கொடத்து தண்ணியத் தெளிச்சிட்டானுவ. சாமிஜி, தீச்சைண்ணு தண்ணியத் தெளிச்சி விபூதி இட்டுப் பேரை மாத்திச் சொல்லிட்டாரு...”
“நீங்களுந்தானே ஆனீங்க மாமோ?”
“ஆனம். இந்துண்டுதா சொல்றானுவ. பேரைக் கூடத்தா மாத்திப் போட்டானுவ...”
“ஒங்கக்க பேரென்ன மாமோ? எனக்கு எத்தினி தபா கேட்டாலும் பேருமட்டும் மறந்து போவு...”
அவர் சிரித்துக் கொள்கிறார்.
“என்னிய பேரு? என்னியோ பேரு ராமுசாமி, கிருஷ்ணசாமி, சுப்புரமணியண்ணு பேரு... பெறந்துதும் பாதிரி அப்பெயும் ஆத்தாளும் கையிலவச்சி இஸ்பிரி சாந்து வைச்சி சாமி கூட்டி ஞானஸ்நானம் குடுக்கிறப்ப இருதய ராஜிண்டு வச்சாங்க. இம்மாங்காலமா இருதயராஜ் இருதய ராஜிண்ணே ஒறச்சிருக்கி. கடக்கரையில எல்லாரும் இருதயமாமோண்ணு, இருதய மச்சாண்ணுந்தா கூப்பிடுவா. புதுப்பேரு இப்பமும் ஆருக்குச் சட்டுனு வருது! நா மேரிங்கே செயமணிங்கே, பீற்றர்ங்கே, சார்லசுங்கே...”
மேனகா இலைப் பொதியில் ஏதோ கொண்டு வருகிறாள்.
“என்னது?”
“வெள்ளிக்கிளம கோயில்ல பொங்கலு பெரசாதம்...” என்று ஜானுக்கும் அப்பனுக்கும் கொடுக்கிறாள்.
அவன் தலையாட்டிக் கொண்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.
“இந்துவானது நல்லாத்தானிருக்கு... மாமோய்! நா கூட இந்துவாயிரலாமிண்ணு பாக்கேன்!” என்று மேனகாவுக்குத் தெரியும்படி கண்களைச் சிமிட்டுகிறான்.
“நீங்கதான் அப்பமே ஒதுங்கிட்டீங்களே! வேற வழியில்லாம போச்சி. பெஞ்ஜமின் அப்பா உன்னக்க அப்பெ எல்லாரும் இருந்த காலம் வேற. துணிஞ்சி சண்டை போட்டானுவ. ஆண்டகையே எதுத்து இந்துவாவும் ஆனம். ஆருக்கும் துவி தெறிப்பு அஞ்சுமீன் ஒண்ணுமில்லேண்ணாச்சி. அந்த சாமியும் போயிற்றா. ஆண்டகையும் வேற தெசக்கி மாத்தமாயிட்டாருண்ணு சொல்றா. எல்லாம் மாறுது. கஷ்டப்பாடுண்ணு வந்து கலங்கறப்ப றாலுக்கு வளமை வருது. எது எப்படிண்ணாலும் கடல் சத்தியம். எப்பமேனும் கடல் நாச்சி வாங்கலாயிருந்தாக்கூட தாயேண்ணு நினைச்சிட்டா மோசஞ் செய்ய மாட்டா. நசரேனும் இவனும் சுழலியில் அம்புட்டு வார இல்லியா?... ஏக்கி உன்னக்க ஆத்தாளெங்கட்டீ?”
“பெரசாது மாம பொஞ்சாதிய ஆசுபத்திரில விட்டிருக்கியா. ஆத்தா போயிருக்கு...”
“இந்தக் கரயில முன்ன இவெதா நாசுவத்தி. இப்பம் ஆசுபத்திரி கெட்டி இருக்கு. கன்யாஸ்திரீங்க பிரசவம் பாக்க வந்திருக்கா. என்னியாண்டும் இவெ இடுப்புவலிப் படுறவளப் பாத்திட்டுப் போறா!”
ஜான் எழுந்திருக்கிறான்.
“அப்ப நா வாரம். இன்னும் தாழை, ஒவரி, மணப்பாடு எல்லாம் நிப்பாட்டி நிப்பாட்டிப் போவணும். மச்சா வந்தா நான் வந்து போன சங்கதி சொல்லும்...”
“நீயே வந்து சொல்லிக்கலே...”
மேனி சிரிக்கிறாள்.
“பாரு மேனி? நா வந்து சொல்லணுமா, வந்து போன சங்கதிய, மாமெ... ரொம்பக் குறும்பு...”
“பொறவென்ன? அவென்னியோ தோப்பு வாங்கதா போயிருக்கா, வாழத்தோப்பு. நா இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் கெட்டிச்சிக் குடுக்காண்டாமாண்ணிருக்கே. இப்பம் நாலு தாவில பாக்க ஏலாம, இத்துண்டு ஒரு தடக்க வேற ஆயிரிச்சி. அகுஸ்தீன் பயலுக்குக் கேக்கா. அவெ நட்டமா நிக்கியானே தவுர, ஒரு எழுத்துப் படிக்கத் தெரியாது. இது படிச்ச புள்ள. அவெ ஆத்தா சண்டக்காரி. அவெ குடிக்கான்னல்லாம் மரியானும் குறுக்கஞ்சொல்லிட்டுப் போறா. இந்தக் கடக்கரையில எந்தத் தொழிலாளி குடிய்க்காதவெ, எந்தப் பொம்பிள சண்டக்காரி இல்ல? அவளவுளுவ நாக்கக் கெட்டவித்து விட்டா புளுத்த நா குறுக்க போவாது. பனமட்ட சிலும்புது. கடல் எரயிதுண்டு ஒறக்கம் குலயிதுண்ணு சொல்லலாமா?”
“வார மாமோ... மேனி, வாரம்...”
அவன் பின் மேனகா தொடர்ந்து வாசலுக்குச் செல்கிறாள். ஐஸ் கட்டிகளிலிருந்து கீழே நீர் இற்றுச் சொட்டியிருக்கின்றது. அவன் முன்புறக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமருகிறான்.
அவன் புன்னகைச் சமிக்ஞையால் விடை பெறுவதை நிலவின் கிரணங்கள் அவளுக்கு உணர்த்துகின்றன.
உலகம் இன்ப மயமாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு அனுவிலும் மலர்ச்சியின் பூரிப்பு மத்தாப்புச் சொரியும் துளும்பல். வீடு திரும்புகிறாள். புறக்கடைக் கதவு சாத்தியிருக்கவில்லை. தொலைவில் கடலில் நட்சத்திரங்கள் விழுந்தாற் போன்று சில விசைப்படகுகள் தெரிகின்றன.
வாழ்க்கை முன்னேறுகிறது.
“நானும் இந்துவாவேன்” என்றல்லவா அவன் சொன்னான்? அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் இந்தக் கடற்கரையின் அத்துவான வாழ்வில் அல்லல்பட வேண்டாமே...!
தபால்காரர் இந்தப் பெயர் மாற்றம் வந்த பிறகு, இந்துப் பெயர்களானால் கணபதி கோயிலில் கொண்டு வந்து அவற்றுக்குரிய தபால்களைப் போட்டு விடுவார். மேனகா தினமும் அங்கு வந்து குலசேகர வாத்தியாரிடம் தபால் இருக்கிறதா என்று கேட்பாள்.
“இத பாரு. இது உங்கப்பாவுக்கான்னு பாரம்மா?”
‘இருதயராஜ் தெற்குத் தெரு கன்னிபுரம்’ என்று முத்து முத்தாக முகவரி துலங்குகிறது. அப்பாவுக்குக் கடிதம் எழுதும் ஒரே ஆள், அவருடைய மூத்த மகள் லில்லிதான். அவள் இப்போது ஸிஸ்டர் மோனிகாவாகி விட்டாள். தூத்துக்குடி கன்யாமடத்திலிருந்து, செவிலிப் பயிற்சி பெற்று, புனித அன்னம்மாள் மருத்துவமனையில் பணியாற்றுகிறாள். அவர்கள் இந்து சமயம் சார்ந்து விட்டாலும், அண்ணன் அவளை இடையில் பல முறைகள் சந்தித்துவிட்டு வந்திருந்தாலும், அவள் கடிதத்தை அப்பாவின் பழைய பெயருக்கு மட்டுமே எழுதுகிறாள். பழைய பெயரில்தான் அவள் தோத்திரம் சொல்கிறாள். அன்பு தெரிவிக்கிறாள். தோத்திரப் பட்டியலிலிருந்து அண்ணன் நீக்கம் பெற்று விட்டிருக்கிறார். அப்பச்சியைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாலும், மிகவும் விருப்பமாக இருப்பதாலும், ஒருமுறை அவர் தூத்துக்குடிக்கு வந்து போக வேண்டுமென்றும் கோரிக் கடிதம் எழுதியிருக்கிறாள். மதம் மாறிவிட்டதனால் தன்னைக் குடும்பத்திலிருந்து அப்பன் ஒதுக்கிவிடக் கூடாதாம். அவளுக்கு மேரி, செயமணி எல்லோரையும் பார்க்க ஆவலாக இருக்கிறதாம். அழைத்துவர வேண்டுமாம்...
மேனகா கடிதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள். ஆத்தா மீன்கண்டத்துக்கு மிளகாயிடித்துக் கொண்டிருக்கிறாள். முற்றத்தில் குங்கும இதழ்களுடன் விளங்கும் துளசிச் செடியில் மிளகாய்த்தூளும் பறக்கிறது. மயினி கணேசுவுக்குச் சோறூட்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டாவது குழந்தை அவள் வயிற்றில் வளருகிறது.
“அப்பா கடலுக்குப் போயி வந்தாயிற்றா?...”
ஆத்தா நிமிர்ந்து பார்க்கிறாள்.
“ஏ...”
“அக்கா எழுத்துப் போட்டிருக்கு...”
ஆத்தாளின் கண்களிலிருந்து மிளகாய் நெடி தாளாமல் கண்ணீர் வடிகிறது.
“ஆமா...”
“அக்காளுக்கு எல்லாரையும் பார்க்கணுமின்னிருக்காம். வாரச்சொல்லி எழுதியிருக்கு... போவம்மா...! எனக்கும் அக்காளைப் பார்க்கணமிண்டிரிக்கி, போவம்மா...”
“ஒங்கப்பச்சி வரட்டும் டீ...?”
அப்பச்சி, அண்ணன், தம்பி பீற்றர் மூவரும் வரத்தில் சென்றிருக்கின்றனர். புதிய வாழ்வின் துவக்கத்தில் கூட்டிய மரம், வலைகள்.
“சாமி, கணபதி, முருவா! ரொம்ப றால் பட்டிருக்கணும், எல்லாம் றாலாவே வாரணும்...” என்று வேண்டிக் கொண்டு அவள் புறக்கடையில் இறங்கி நிற்கிறாள். கடற்கரையை ஆராயும் கண்களுடன். அப்போது, கோளா வலையைத் தூக்கிக் கொண்டு, முடியில் எண்ணெயும், வாயில் வெற்றிலைச் சிவப்பும் வழிய, அகுஸ்தீன் அவளை அணுகி வருகிறான்.
“ஏம் மேனவா? ஆரைப் பாக்கே?”
அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். ஆனால் அவன் மிக நெருங்கி அவளுடைய கன்னத்தோடு இழையும் பாங்கில் வருகையில் அவள் சடக்கென்று திரும்ப முயலுகையில் முள்ளிச் செடியின் மீது விழுகிறாள். அகுஸ்தீன் அவளைத் தொட்டுத் தூக்கிவிடும் சாக்கில் அவள் கன்னத்தில் இதழ்களைப் பதித்து விடுகிறான். ஈரவலை அவள் மீது படிய, அவன் தன்னை வளைத்து விட்டதை உணர்ந்து வெறுப்புடன் பற்றித் தள்ளுகிறாள்.
“சீ...?”
அவன் அவள் பிடியை விட்டாலும், “சிக்கிட்டியா இன்னிக்கி?” என்ற வெற்றிச் சிரிப்புச் சிரிக்கிறான்.
அவளுக்கு அடக்க இயலாத கோபம் வருகிறது. உள்ளே வந்து புறக்கடைக் கதவை அறைந்து சாத்திவிட்டுப் போகிறாள். நடுவிட்டுக் கட்டிலில் விழுந்து கன்னத்தை அழுத்தி அழுத்தித் துடைக்கிறாள். மிருகம்...!
ஜானுடன் அவள் எதுவுமே பேச முடியவில்லையே? எப்படியேனும் இந்த மிருகத்திடமிருந்து அவளை விடுவித்து அழைத்துப் போய்விட வேண்டுமென்று அவனிடம் சொல்ல வேண்டாமா? வீட்டில் யாருமில்லாத சமயமென்று இருப்பதில்லை. அவனைத் தனிமையில் எங்கு, எப்படிச் சந்திப்பாள்? அவன் எப்போது வந்தாலும், ஆத்தா இருக்கிறாள்; இல்லையேல் அப்பா, இல்லாவிட்டால் மயினி, ஊமை, ஜெயா... யாரேனும் இருக்கிறார்கள். பீடி பாக்டரிக்குக் கூட அவள் தனியாகப் போக முடிவதில்லை. யாரேனும் வருகிறார்கள். மாதா கோயில் பக்கமுள்ள கிணற்றுக்கு இவர்கள் நல்ல தண்ணீருக்குச் செல்வதில்லை.
இவர்களுக்கென்று தனியாக ஒரு கோடியில் ‘போர்’ போட்டு ‘பம்ப்’ வைத்திருக்கிறார்கள். மையவாடியும் இவர்களுக்கென்று தனியாக முளைத்திருக்கிறது. ஒதுக்கலுக்குப் பெண்பிள்ளைகள் அதைத் தாண்டித்தான் முள்ளிக் காட்டு மறைவுக்குச் செல்ல வேண்டும். அங்கே நின்றால் சாலையில் வண்டிகள் வருவது தெரியும். அன்று மாலை அங்கே நின்றுதான் இறாலெடுக்க வரும் அந்த வண்டியோட்டியின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
“ஏக்கி, கெனாக் காணுத? வெய்யப் போயிட்டிருக்கி, முத்தம் பெருக்கி மூங்கிப்பாய விரிச்சிப் போட்டீ! இத பாரு, புள்ள ஒண்ணுக்கிருந்திருக்யான் சொளவில, தண்ணி ஊத்திக் கழுவி வய்யி? துணிகெடக்கு... தொவக்கிய இல்ல. ரெண்டு கொடம் நல்ல தண்ணி தூக்கியாந்து வக்கியாம, எட்டி மலச்சி மறிச்சி நிக்கே? எந்த பயலாண்டும் தொட்டுச் சிலுப்பினானா? ஏட்டி, மூஞ்சி நெத்தம் போலச் செவக்கு? உளுமையென்ன?...”
“ஒண்ணில்ல... நா அப்பச்சி வருதாண்ணு பாத்தே...” என்று மேனி முணமுணத்துக் கொண்டு சளகை நீரூற்றிக் கழுவி வைக்கிறாள். கணேசுவுக்குச் சோறூட்டி விட்டு அவன் முகம் கழுவி மயினி அவனை அவளிடம் நீட்டுகிறாள்.
“நீ இவனப் பாத்துக்க. நா தண்ணி கொண்டாரே, முத்தத்தில காய வக்கிறதயெல்லாம் மண்ணில கொண்டு போடுவா...”
மேனகா அவனைத் தூக்கிக்கொண்டு மயினியோடு பம்பு குழாயடிக்குப் போகிறாள். அவனுக்குக் கோழியைக் கண்டால் இறங்கி ஓட்ட வேண்டும்; ஆட்டைக் கண்டால் பிடிக்க வேண்டும்.
பைநிறைய சிங்கிறாலுடன் குரூஸ் பையன் போகிறான்.
“இன்னிக்கு நூறு ரூவாக்கி றால் படுமா, மயினி? ரெண்டு வெரல்ல ஒண்ணத் தொடும்...”
புனிதா நீண்ட விரலைத் தொடுகிறாள்.
“போ மயினி! கெடக்காதுண்ணிட்ட. இன்னிக்கு நூறு ரூபாக்கிக் கெடச்சிண்ணா, சினிமாவுக்குப் போவலாண்ணு அண்ணெட்டக் கேக்கலாமிண்ணிருந்தே.”
“நா வேற நெனச்சிருக்கே. மினுமினுண்டு ஒரு துணி புதிசா வந்திருக்கி. பிளவுஸ்போட்டா அளவா ஒடம்போட ஒட்டியிருக்கி. எங்க மாமி தச்சிட்டிருக்கா - பச்சையில நல்லாயிருக்கி.”
“எனக்கு அவுங்க மிசின்ல தச்சிக்குடுத்த பிளவுஸ் அளவா இல்ல. நா மிக்கேல் டயிலரிட்டக் குடுத்துத் தச்சுக்கப் போறம், இனி.”
“நாவர்கோயில் கடயில ஒரு மாதிரி தச்சாப்பல ப்ளவுசு வச்சிருக்கா. அப்பிடியே பிட்டா அளவா ஒட்டிக்கிது. இருவது ரூவாயாம. அன்னைக்கு நம்ம கோயிலுக்கு நாடார் விளையிலேந்து சம்முக நாடார் பொஞ்சாதி கூட, அவ கொழுந்தியாளைக் கூட்டி வந்திருந்தாளே, அவ போட்டிருந்தா. நல்லா இருந்திச்சி. நாமும் அப்பிடிக் கருப்பில ஒண்ணு வாங்கி வச்சிட்டா எந்தச் சீலையிண்ணாலும் ‘மேச்’ ஆவும். ஒங்கண்ணெ நீ சொன்னாத்தா சரிம்பா. நாங்கேட்டா ஒடனே ஆத்தா காதுக்கு எட்டிரும். ஆத்தா சிலும்பிட்டிருப்பா. ஒங்கப்பச்சி குறுக்க என்னியாலும் பேசுவா. சண்டை பெலக்கும்...”
“மயினி, அக்கா காயிதம் போட்டிருக்கி, எல்லாரையும் பாக்கணுமிண்ணு. நாம ஒருக்க தூத்துக்குடிக்குப் போவலாம். நாவர்கோயில்தான் பாத்திருக்கம். முன்ன இந்துவானப்ப எல்லாரையும் கூட்டிட்டு திருச்செந்தூர் போனப்பகூட நா ஒதுங்கியிருந்தால போவ இல்ல. இப்பம் எல்லாரும் ஒருக்க போவலாம் மயினி.”
“ஆமா, நசரேனக்க ஆத்தா ஏசம்மா மாமி எங்க பக்கம் ஒறமுற தா. எங்கக்க பாட்டாவும், யேசம்மா மாமி அப்பச்சியும் ஒரு முறைக்கி சகல தா.”
“நசரேனண்ண பொஞ்சாதி, அவெண்ணே, நசரேன்லாம் முன்னொரு நா ஆரோ வெள்ளக்காரங்களைக் கூட்டிட்டுக் காரில வந்தப்ப, அவ காதில மீனுமாதிரி ஒரு வளையம் போட்டிருந்தா. மீனு கண்ணு பச்சை. முழுக்க செவப்புக்கல்லெழச்சி நல்லாயிருந்திச்சி. அதுக்கு நூறுரூவா கூலிண்ணு ஜெயா சொல்றா, ரூபிக்கிக்கூட அப்பிடி ஒண்ணு இருக்கிண்ணு. அதுமாதிரி ஒண்ணு நமக்கும் பண்ணிக்கணும் மயினி... நீ பாக்க இல்ல?”
“நா என்னியாலும் ஒங்கண்ணெகிட்ட சொன்னேண்ணா ‘ஏட்டி கெடந்து புலம்புத, இப்ப ஒண்ணும் கெடயாது. தோட்டத்துல வாழ வச்சி அடுத்த பொங்கலுக்குக் கொல தள்ளுறப்ப நாவர்கோயில் சந்தக்கி ஏத்திவிட்டு வாரப்ப உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க’ம்பா!”
குழாயடியில் பெண்கள் சளசளப்புக்குக் குறைவில்லை. அடி பம்பை அடித்துக்கொண்டே சினிமா, சேலை, நகை என்று பேசுகிறார்கள். கம்பும் கையுமாக வாத்தியார் அங்கு வந்து ஆங்காங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரைப் பள்ளிக்கு விரட்டிச் செல்கிறார். அந்தோணியார் பட்டத் தலைகளும், திருநீற்று நெற்றிகளுமாக இருந்தாலும் மூக்கொழுகலும் அழுக்கும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன.
“ஏம்மா, பிள்ளைங்களைக் கொஞ்சம் சுத்தமாக் குளிப்பாட்டித் தலை சீவித் துடைத்து பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக அனுப்பக்கூடாதா?” என்று அவர் சொல்லிக் கொண்டு போகிறார். அது காற்றோடு செல்லும் சொற்களாகப் போகின்றன.
“அடுத்த வாசம் கணேசை, மேரி ஸ்கூலுக்குத்தா அனுப்பணும் மயினி. அங்கத்தா இங்கிலீசு சொல்லிக் குடுக்கா. குளோரிந்தா புள்ள மூணு வயசு, இங்கிலீசு பாட்டெல்லாம் படிக்கா... நூறு வரயிலும் இங்கிலீசில நெம்பர் சொல்லுறா...”
“ஒங்கண்ணா சாமியார் ஸ்கூலில போடுவாரா?”
“அண்ணெ கெடக்கு. நா எங்க கணேச, இங்கிலீசு பள்ளிக்குடத்திலதாம் போடுவ...” என்று கூறிக் குழந்தையின் கன்னத்தில் மேனகா முத்தமிடுகிறாள்.
சாலையில் பஸ் ஒன்று வருகிறது.
“மயினி, நீ தண்ணி அடிச்சிட்டு வார வரைக்கும் நா இங்கே நிக்கே. இவெ அங்கிட்டு வந்தா நாந்தா பம்படிப்பேண்ணு வம்பு பண்ணுவா!” என்று அவள் முட்செடிகளைக் கடந்து சாலையோரம் நடக்கிறாள்.
முன்பெல்லாம் அந்தப் பாதை குண்டும் குழியுமாக இருந்தது. லயனலின் ஜீப்பே தூக்கித் தூக்கிப் போடும். இப்போதோ தார் சாலையாகச் சீராக இருக்கிறது. நாகர்கோயில், தூத்துக்குடி, திசையன்விளை, என்றெல்லாம் செல்லும் பேருந்துகள் உள்ளே கிளைச்சாலையில் வந்து கன்னிபுரத்தைத் தொட்டுவிட்டுச் செல்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு பஸ்கள் வந்து செல்கின்றன.
அவள், பஸ் செல்வதை வேடிக்கை பார்த்தவளாகக் குழந்தையுடன் பேசிக்கொண்டு நிற்கையில் கடகடவென்று அதிர்ந்து கொண்டு அந்தக் கல்றால் படம் போட்ட வண்டி வருகிறது; தென்னமரத்தடியில் நின்றுவிடுகிறது.
ஜான் இறங்கி வருகிறான். தென்னமட்டையில் இரண்டு பச்சைக் கிளிகள் ஊஞ்சலாடுகின்றன. அந்த மரங்களெல்லாம் அமலோற்பவத்துக்குச் சொந்தமானவை.
மழை பெய்த பசுமை பொங்கிப் பூரித்திருக்கிறது; இறால் தந்த வண்மை செழித்திருக்கிறது.
“ஆரை எதிர்பாத்து தேவகுமாரி நிக்கி?”
மகிழ்ச்சிப் பொங்கலின் சிரிப்பு பூக்களாய்க் குலுங்கப் பூரித்துப் போகிறாள் அவள்.
“றாலெடுக்க வரும் ராஜ குமாரரைப் பாத்துத்தான்...” என்று மொழிந்து நிலம்பார்க்கத் தலைகுனிகிறாள் மேனி.
“அடி சிங்கிறாலே...!”
“நீங்க இந்துவாயிடுவீங்களா?”
கவலையும் ஏக்கமும் கனக்க உடனே தொடரும் கேள்விக்கு அவன் பதில் கூறாமல் கீழே குந்தி கட்டெறும்பைப் பிடிக்கும் கணேசுவைத் தூக்கிக் கொண்டு வண்டிக்குப் போகிறான்.
அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழலை அமுக்கிக்காட்டி, நிஜார்ப்பையில் கை விட்டு ஒரு மிட்டாயைக் கொடுத்து இருக்கையில் அமர்த்துகிறான். மேனகா மகிழ்ச்சியும் பரபரப்புமாக, வண்டிக்கருகில் ஓடி வருகிறாள்.
“என்னிய அவனத் தூக்கிட்டீங்க? மயினி இப்பம் தண்ணி எடுத்திட்டு வரும்...!”
“நா இவனக் கொண்டு போற. விரிசா ஏறு...”
காய்ச்சல் வேகப் பரபரப்பு. அவன் கையைப் பற்றி அவளை ஏற்றுகிறான்.
ஐஸ் பெட்டியிலிருந்து நீர் கீழே சொட்ட, வண்டி திரும்பி வட்டமிட்டு எங்கோ போகிறது.
வளைந்து அவன் கை அவளை நெருக்கி அழைக்கிறது.
“சும்மா இரீம்... புள்ள... அவெ பாக்கா... எப்பிடியோ இருக்கி...”
அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.
“பாத்தா என்ன? அவெக்கிப் புதிசா? அவெ ஆத்தாளும் அப்பனும் எப்படி இருப்பா?...”
கணேசு சிரிக்கிறது, அரிசிப்பல்லைக்காட்டி.
“வேணா வுடுங்க. நா... வூட்டுக்குப் போற...”
“பொறவு மனத்தாபப்படக் கூடாது...”
“இல்ல. நீங்க இந்துவாயிண்டு...”
“இந்து, இந்து, இந்து, இந்துண்ணா கொம்பு முளைக்கிதா?”
“எங்கண்ணெ கெட்ட சம்மதிக்கலேண்ணா?”
“நா சம்மதிக்கவச்சா?”
“அப்பச்சி சம்மதிக்கும். அண்ணே...”
“அப்பம் உனக்குதா சம்மதமில்ல...”
“ஐயோ...”
“என்னிய ஐயோங்கே?”
அவள் தலை குனிந்து செஞ்சாய நகத்தைக் கிள்ளுகிறாள்.
“உன்ன இப்பிடியே தூக்கிட்டுப் போயிற்றா சம்மதியாம என்ன செய்வா அண்ணே?”
“பயமாயிருக்கி...”
அவன் வண்டியை உடைமரக்காட்டினருகே நிறுத்திவிட்டு அவளை நெருங்கி அணைக்கிறான். கணேசு சிரிக்கிறது.
கன்னிபுரம் கடற்கரை ஊரில், கடல் தொழிலாளிகளில் பெஞ்ஜமின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் தோப்பு தோட்டமென்று வாங்கத் தலையெடுத்ததில்லை. மணியன் இப்போது ஆயிரம்போட்டு, தென்னந்தோப்பும் ஒரு சதுரம் வாழைத்தோட்டமும் வாங்கிவிட்டான். வயதாகிவிட்ட அப்பன் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டால், தான் மட்டும் கடல் தொழில் செய்யலாம் என்பது அவன் கருத்து. அரசு கொடுக்கும் கடனை வாங்கி ‘மிசின் போட்’டும் வாங்கித் தொழில் செய்ய வேண்டும் என்றும் அவனுக்கு ஆசை உண்டு. அநந்தனை, அகுஸ்தீன்தான், சேர்த்துக் கொள்ளலாம். மேனியைக் கட்டிக் கொடுத்து விடலாம். அவன் சீதனம் என்று பிடுங்க மாட்டான். விசைப்படகில் கூட்டென்றால், அவனை அவர்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். கணபதி கோயிலில் சமயப் பிரசாரகர் முன்னிலையில் தாலிகெட்டு நடத்தி விடலாம் என்ற எண்ணமும் அவனுள் முதிர்ந்து வந்திருக்கிறது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மீன் பாடு இல்லை என்றாலும், ‘தங்காலம்’ வந்தாலும், தோப்பு வருமானம் இருக்கும். பற்றாக்குறை வந்தால் நிரவிக் கொள்ளலாம். பஞ்சாட்சரம் அப்படித்தான் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறான். விசைப்படகு வாங்கி ஆதித்தனைத் தொழிலுக்கு விட்டுத் தவணை கட்டுகிறான். கடலில் போய் வந்ததும் தோட்டத்துக்குப் போய் உழைக்கத்தான் வேண்டும். பத்திரமெல்லாம் பதிவு செய்தாகி விட்டது. வாழை நடவுக்காக அவன் இப்போது கிளம்பி இருக்கிறான். தெற்கே ஏழெட்டுக் கிலோமீட்டர் அருகேதான் தோட்டம் இருக்கிறது.
கிறிஸ்துமஸ், பொங்கலெல்லாம் கழிந்துவிட்ட நாட்கள். பஸ் பெரிய கோயில் என்றழைக்கப்பெறும் மாதா கோயிலுக்கு முன் வந்து நின்று விடுகிறது. அது இன்னும் சற்று உள்ளே வந்து திரும்பினால் கணபதி கோயில் தெரியும். ஆனால் பஸ் திரும்பாது. பஸ் நிறுத்தத்துக்காகவே பிரயாணிகள் தங்க ஒரு கொட்டகை கட்டியிருக்கின்றனர். அதை அடுத்து செபஸ்தி நாடானின் கடை முன்பு அந்தக் கடையும் அதை ஒட்டின டீக்கடையும்தானிருந்தன. இப்போது, சாலையில் ஈசுவரி விலாஸ் டீ கிளப் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. செல்வம் நாடார் வைத்திருக்கிறார். வாயிலில் செங்கல் லாரி ஒன்று நிற்கிறது. மாதா கோயிலைச் சார்ந்த பள்ளிக்கட்டிடம் விரிவு படுத்தப் பெறுகிறது.
மணியன் டீ கிளப் பெஞ்சியில் வந்தமருகிறான்.
“சொகமெல்லாம் எப்படி, மச்சான்?...” என்று கேட்டுக் கொண்டு யேசுதாசன் உள்ளிருந்து வருகிறான்.
கலவர காலத்தில் இரண்டு பார்ட்டியும் வேண்டாமென்று மணப்பாட்டுப் பக்கம் கூலி மடியாகப் போனவன். இவனுடைய நடைஉடையிலும் ‘றாலின்’ வண்மை மெருகு ஏறியிருக்கிறது.
“நீங்க சொல்லும் மாப்பிள? அங்கெப்படி?” என்று மணியன் திருப்பிக் கேட்கிறான்.
“றால்தான் இப்ப சோறு போடுது. அதுக்கும் ஆவத்து வருது. சர்க்காரில் ஆறாயிரம் லாஞ்சிக்கி இந்தக் கரையில முன் பணம் குடுத்திருக்காங்களாமே? மணப்பாட்டில கடம் வாங்கி ரெடிமேட் வள்ளம் கொண்டாந்து தொழில் செய்யிறவங்களையே அது பாதிக்கி. போன றால் சீசனிலே ஏராளமான பேரு அள்ளிட்டுப் போக வந்தானுவ. கரச மொரசலா சண்ட கூட வந்திச்சி. அதுனால சருக்கார் நமக்குப் போட்டியா விசப்படவுகளக் கொண்டாரக் கூடாதுண்ணு வள்ளக்கார, மரக்காரங்கல்லாம் சங்கங்கூடி ஏற்பாடு செய்யப் போறதாச் சொல்லிட்டிருக்காணுவ...”
மரியானுக்கு இது புதுச் செய்தியல்ல. முதன் முதலில் நசரேன் மாமன் இங்கே விசைப்படகைப் பற்றிச் சொல்ல வந்தபோதே எதிர்ப்புக் காட்டினார்கள்.
“ஆனா சங்கமிண்ணு எதச் சொல்லிறீம்? மீனவர் முன்னேற்றச் சங்கமிண்ணு கரய்க்குக் கரை எவனானும் சொல்லி இவெ தலவர், இவெ செயலாளர்ண்ணு சொல்லுதா. அத்தோட செரி. முன்ன, தெறிப்புக் குத்தவைக்காகப் போராடின காலத்தில எதோ நடத்தினம். பொறவு ஒண்ணில்ல...”
“கடல் தொழிலாளி வழக்கம் போல கடலுக்குப் போறான், குடிக்கிறான். இப்ப றாலில் நல்ல காசுதா. ஆனா, ஆறாயிரம் விசைப்படவுக இன்னும் வந்து எல்லாக் கரையிலும் றால் புடிச்சிண்ணா மரக்காரனுக்கும் வள்ளக்காரனுக்கும் என்ன இருக்கும்?
மணியன் ஏதும் மறுமொழி கூறவில்லை.
தங்கள் நடைமுறையிலிருந்து எந்தவிதமான முன்னேற்றத்தையோ மாற்றத்தையோ, இவர்கள் ஏன் விரும்பாமலிருக்கின்றனர்? இன்னும் அப்பனைப் போன்ற வயசுக்காரர் தட்டுமடி, நூல்மடி, என்று பாடுபட்டதையே உயர்வாகப் பேசுகின்றனர்...!
“என்னம்பு, பேசாம இருக்கிறீம்? இங்கிய விசப்படவு வராதுண்ணிருக்கீறா? தொழிலுக்கு அவெ எல்லா மடைக்கும் வருவா!”
“வருமா வராதாங்கறது இருக்கட்டும். நாம அது வந்தா எல்லாம் போயிடுமிண்ணு ஏன் பயப்படணும்? கடல் நாம நினைக்கிறாப்பல சின்னது அல்ல. அதுல கோடி கோடியா மீனு இருக்கு. அவனுவ வந்தா அவனுவளும் புடிக்கட்டும். நாமும் புடிப்போம். சர்க்காரு நம்ம ஆளுவள முன்னேத்தம் காணணுமிண்ணுதானே கடங்குடுக்கா! வாணாம், நாம என்னுமே கூலி மடியாத்தான் சாவுறோமிண்ணு சொல்லறது செரியா?...”
மணியன் அபூர்வமாக எதிர்ப்புக் காட்டாமல் பேசுகிறான். இரண்டொருவர்தாம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள்.
“நீ வா மச்சான். மணப்பாட்டுப் பக்கம், ஒரு மெனக்கி நாள்ள, எல்லாம் விசைப்படகுக்காரனுவளத் திட்டுறானுவ...”
பஸ் வந்து விடுகிறது. மணியன் எழுந்து செல்கிறான்.
விடிந்தவரை ஊரிலிருந்து புயலிலடிபட்டு அவர்கள் நடந்து வந்த நினைவு வருகிறது. ஏலியுடன் அந்த இரவில் பஸ் சாலையிலிருந்து நடந்து வந்தானே...!
ஒரு பெண்... வாழ்க்கையின் எல்லா முனைகளிலும் மோதிக் கொண்ட பின்னரும் உயிர்வாழ எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தாள்! அதை நினைத்தால் மட்டும் அவனால் தாள இயலுவதில்லை. பெண்பிள்ளைகளை விடப் பங்காளிகளாக ஓடிப் போனார்கள். தன் உயிரையே அவள் அவர்களுக்காகக் கொடுத்திருக்கிறாள். அப்பனை மீட்டு வந்ததறிந்து அவளைப் போலீசான் என்ன பாடுபடுத்தியிருக்கிறான்! எத்தனை தடியன்கள் அவளை உருக்குலைத்துக் கொன்றார்களோ? மூன்று நாட்கள் அவள் வரவில்லையென்றதும் பீற்றர் தான் அவள் குடிலைத் திறந்து பார்த்தானாம்.
மூன்று நாட்களுக்கு நாற்றம் வந்து விட்டதாம். அப்பன் இப்போதும் அவளைப்பற்றி நினைத்தால் குரிசு போட்டுக் கொள்கிறார். மையவாடியில் இடமில்லை; குடிமகனை விட்டுப் பாட்டாவைப் புதைத்த இடத்துக்கருகில் புதைத்தார்களாம். பத்து நாட்களுக்குள் எல்லோருமே திரும்பி வந்துவிட்டார்கள். போலீசான் சாமிக்கு வேண்டியவன் மகளையே பதம் பார்த்து விட்டான். எல்லாரையும் சாமி ஓட்டி விட்டார்.
ஒரு போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடத்தியதன் காரணமாக அவர்களுடைய சமுதாயம் முழுதுமே இந்த அநியாய ‘மகமை’யிலிருந்து விடுபட்டிருக்கிறது. கோயில்காரர்களும் இவர்கள் மதம் மாறிவிட்டார்கள் என்று சூடுண்ட பூனையாகி நடக்கின்றனர். என்றாலும், இந்த விசைப்படகு பெரிய பிரச்சனையை அவர்கள் முன் கொண்டு வந்திருப்பது உறுதியாகிறது. யாரைப் பார்த்தாலும் இதையே பேசுகிறார்கள்!
பஸ்ஸுக்குள் கூட்டம் நெருங்குகிறது. அநந்தனின் ஆத்தா, தங்கச்சி தம்பி எல்லோரும் இருக்கின்றனர். மேட்டுத்தெரு செல்லையா, பஞ்சாயத்து உறுப்பினர் ஸாலமன் பர்னாந்து... குளோரிந்தா குஞ்சு குழந்தைகளுடன் புருசனுடன் இருக்கிறாள். எல்லோரும் றாலின் வாயிலாக வரும் செழிப்பைத் தம்பட்டம் போடுகின்றனர்... புனிதாவும் கூட எப்போதும் நகை சேலை அது இதென்று கேட்பது தவிர ஏலியைப் போல் உள்ளம் கனிய, அவன் கருத்துக்கு இணையப் பேசுகிறாளா?... அவன் வாழ்க்கையில் நிலைத்து முன்னேற வேண்டும் என்று கடல் தொழில் தவிர நிலத்திலும் காலூன்ற முயலுவது ஏலிக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!...
வெளியே முகத்தை நீட்டிக் கண்களின் கசிவை அடக்கிக் கொள்கிறாள். அப்போது, உடை மரங்களின் அருகே, பனங்காட்டின் அத்துவானத்தில் றால் வண்டி நிற்கிறது. ஜானின் வண்டிதான். வண்டியை ஏன் நிப்பாட்டி இருக்கிறான்? கோளாறாகி விட்டதோ?...
மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு.
அவன் அன்று சாப்பாட்டுக்கு வந்த போது மேனியைக் காணவில்லை. அவள் அவன் கண்களில் தட்டுப்படுவதேயில்லை. ஜயாதான் எப்போதும் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் திருப்பலிப் பூசைக்குத்தான் கோயிலுக்குப் போவார்கள். இப்போதோ கணபதி கோயிலில் எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம் என்றாகிவிட்டது. கோலம் போடுவதும் பஜனை படிப்பதும், வாத்தியார் கதை சொல்வதைக் கேட்பதும் சாக்காகி விட்டன. பெரும்பாலும் குந்தியிருந்து வம்பு பேசுகிறார்கள்.
மேனியை எந்தப் பயலேனும் தொட்டிருப்பானோ என்ற ஐயம் அவனுக்கு அப்போது தோன்றியது. டக்கென்று பொறி தட்டினாற் போன்று ஜானின் வண்டியை நினைத்து பஸ் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்...
பிறகு அவனுக்கு இருப்பாகவேயில்லை.
தோட்டத்தின் பக்கம் மணியன் இறங்கிக் கொள்கிறான். குடிமகன் இன்னாசியின் மூன்றாவது மகன், அந்தக் காலத்திலேயே கடற்கரையை விட்டு ஓடி வந்து இங்கே கூலி வேலை செய்யத் தொடங்கிவிட்டான். இப்போது கடலில் சிப்பி அரிக்கவும் செல்கிறான். அவன் பெண்சாதி சித்தாதி வாயிலில் குந்தி இருந்து மகள் தலையில் பேன் பார்க்கிறாள்.
“சம்முவம் இல்ல?...”
அவள் சட்டென்று எழுந்து நிற்கிறாள்.
“தோட்டத்தில் இருப்பா...”
அவன் சாலையோரம் அடர்ந்த அகத்தி மரங்களின் பின்னணியில் சீராக நடவு செய்யப் பெற்றிருக்கும் வாழைக் கன்றுகளைப் பார்க்கிறான். நாகர்கோயில் விவசாய ஆபீசில் எட்டு மாசத்தில் குலை தள்ளிவிடும் என்று சொன்னார்கள். நிலம் பண்படுத்தி எரு வாங்கி வைத்து, அவனும் சம்முவமுமே வேலை செய்திருக்கின்றனர். கடலில் மட்டுமே தன் வாழ்வைக் கண்டிருந்த அவனுக்கு இந்தப் புதிய அநுபவம் கிளர்ச்சியைத் தருவதாக இருந்தாலும் கடலினும் பெருங்கருணை பூமிக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறான்.
“வணக்கமுங்க...”
“தோத்திரம் கும்பாதிரியாரே” என்று சொல்பவன் இந்துவான பிறகு புதிதாகப் படித்த படிப்பு.
மணியன் எதுவும் கூறாமல் மடிப்பெட்டியை எடுத்துப் புகையிலையை அடக்கிக் கொண்டு ஓரமாக நடக்கிறான்.
“கொஞ்சம் அந்தத் தாவில பனங்கொட்டை நட்டா கிளங்கு எடுக்கலாம். புள்ளங்க தீனி கேக்கி... அதா...”
“விதச்சு வப்போம்...”
மண்வெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு சம்முகத்துடன் வேலையிலிறங்குகிறான்.
ஆயிரத்தைந்நூறு ரூபாய் போல் அவன் சிறுகச் சிறுக இதில் முடங்கி இருக்கிறான். அவ்வப்போது நீர் பாய்ச்சி, பூச்சி வராமல் பாதுகாத்துக் கண்டு முதல் செய்ய வேண்டும்.
ஆனால், எதுவுமே முயற்சியில்லை என்றால் முன்னுக்கு வர இயலாது. கையில் கிடைக்கும் பணத்தைக் குடித்து விட்டுத் தீர்த்தாலோ, நாகர்கோயில் கடைகளில் கரைத்தாலோ முன்னுக்கு எப்படி வருவது? பஞ்சாட்சரம் அன்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பத்து ரூபாய்த் துணி வாங்குவது கவுரக் கொறயிண்ணு உசத்தியாப் போடுங்கா. கடக்கார பத்து ரூவா துணிவையே இருபதுண்ணு இவனுவளப் பாத்ததும் உசத்தறா. நம்மவ ஏனிப்பிடி அன்னன்னிய காசை இப்பிடித் தீத்திட்டு பாடு இல்லேண்ணா பட்டினி கிடக்கணும்’ என்றான்.
அவன் திரும்ப பஸ் பிடித்து வருகையில் இரவு ஒன்பதடித்து விடுகிறது. கோயிலில் குலசேகர வாத்தியாரின் தலைமையில் பஜனை நடக்கிறது. பிள்ளைகள் கூச்சல் போடுகிறார்கள். யாரோ ஒரு பயல் மணியடிக்கிறான்.
நிலவு நாட்கள்.
பெரிய கோயில் கொடிக் கம்பத்தின் பக்கம் இப்போதும் எட்வின் - அவன் பெயர் சீனிவாசன், குடித்துவிட்டுப் பிரசங்கம் செய்கிறான். பஜனை இரைச்சலில் அவன் பிரசங்கம் எடுபடவில்லை. இந்து சமயத்தில் சார்ந்திராத சில கிறிஸ்தவ இளைஞர்கள் கணபதி கோயிலைச் சாராமலும், அப்பால் செல்ல விருப்பமின்றியும் கும்பலாக நிற்கின்றனர். இவர்கள் அங்கே வந்து பஜனையில் பங்கு கொள்ளும் இளம் பெண்களுக்காக நிற்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமான சங்கதி. திடீரென்று ஏதோ புதிய கௌரவமும் சுதந்திரமும் பெற்றாற் போல் பூவும் பொட்டும் மையும் மருதோன்றியுமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வதும், குறுக்கு நெடுக்காக வளைய வருவதுமாக இருந்த குமரிகளும் இளைஞர் உள்ளங்களைத் தூண்டி போட்டு இழுக்கிறார்கள். இது மதமாற்றம் மட்டுமல்ல; இறால் தரும் வளமையுந்தான்.
சாமுவல் இன்று ஜெயராமாக மாறிவிட்டாலும், குடிவெறியில் தள்ளாடியவண்ணம் மணலில் நின்று பஜனைக்குத் தாளம் கொட்டுகிறான். கோயிலில் ஏறித் திருநீறு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தில் மணியன் படியேறுமுன் பஞ்சாட்சரம் இவனை வழிமறிக்கிறான்.
“மாப்ள இப்பத்தான் வாரியா? தங்கச்சி மேனகாவக் காணமிண்டு தேடிட்டிருக்கா... வெளிய சொல்லல. நீ கூட்டிப் போனியா மாப்ள? தெரியுமா ஒனக்கு?”
அவனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.
“மேனகாவைக் காணமா?...”
“ஆமா... காலமேந்தே காணமின்னு புனிதா சொல்லுதா. ஒதுக்கலுக்குப் போயிருக்காண்ணு இவ எல்லா நினைச்சிருக்கா. இந்த ஊர் வெடலப்பய எல்லாம் இருக்கானுவ. இது யாருட தொடுப்புண்ணு புரியல. வேணுமின்னே பெரிய கோயில் பார்ட்டி ஆளுவ நம்ம பொண்ணுவள வலவச்சி இழுக்கச் சூழ்ச்சி செய்யிறானுவ...” மணியன் கோயில்படி ஏறாமலே வீட்டுக்கு விரைகிறான். அப்பன் சாராயம் குடித்திருக்கிறார். சின்னப்பயல் பஜனைக்குப் போயிருக்கிறான். ஊமைப் பையன் கடலுக்குப் போகிறான்; குடிக்கவும் பழகியிருக்கிறான். அவனிடம் எதுவுமே பேச முடிவதில்லை. வெறி கிளர்ந்து ஆக்ரோஷமாகக் கையில் கிடைத்ததைப் போட்டு உடைத்துவிடுகிறான்; அல்லது அடிக்கிறான்.
ஆத்தா தலையில் கைகளை வைத்துக் கொண்டு ஓய்ந்து கிடக்கிறாள். ஜெயா பீடி சுருட்டிக் கொண்டிருக்கிறாள். புனிதம் கணேசுவை மடியில் போட்டுத் தட்டுகிறாள். வீட்டில் ஏதோ ஒரு கனத்த படுதா சோகமாக விழுந்து மௌன ஆட்சியை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இவன் உள்ளே நுழைந்ததும் தாயின் மடியிலிருந்து எழுந்து வரும் கணேசு கால்களைக் கட்டிக் கொள்கிறான்.
“அப்பா, மித்தாயி!...”
“ஏன்லே, புள்ள இருக்கில்ல! நெட்டமா வெத்துக்கய்ய வீசிட்டுவார?” என்று ஆத்தா ஆத்திரம் கொண்டு வழக்கம் போல் கடியவில்லை.
அப்பன் வசைபொழியத் தொடங்குகிறார்.
யாரை என்று கேட்டால் அவருக்கே சொல்லத் தெரியாது. சாராயம் உள்ளே செல்ல, கட்டு அவிழ்ந்ததும் இந்த வசைகள் பொலபொலவென்று உதிரும். வாழ்வின் நெருக்கங்கள், ஆற்றாமைகள், நிராசைகள், சிதைவுகள் எல்லாவற்றினின்றும் எதிரொலிக்கும் வசைகள்.
“அவ... சிறுக்கி, அவெ மேல கண்ணு வச்சித்தா ஓடிட்டிருக்கியா. இந்துவாறேண்ணு சொன்னா. நசரேம்பய முதுகெலும்பில்லாதவ. அவெ சொம்மா இருந்தா. இவெ சொணையுள்ளவ. ஆம்புள, ஒரு பொம்புளய நாட்டமாயிருக்காண்ணா என் செய்யவா...?” அப்பன் சிரித்துக் கொள்கிறார். மணியனுக்கு ஆத்திரம் மூண்டு வருகிறது.
“நீங்கத்தா இதுக்கு உளுமாந்திரமா இருந்து கூட்டிக் குடுத்திருக்கீம்! துரோவத்தனமாக காரியம்! இந்தக் கடக்கரையில, நமக்குத் தலக்குனிவு வாராப்பிலல்ல இந்தச் சிறுக்கி பண்ணிட்டா?”
இவனும் வசை மொழிகளை வீசுகிறான்.
“போலே, என்னியோ, இந்தக் கடக்கரயில எப்பமும் நடக்காத புதுச்சேதி போலப் பேசுதான்! இவெ நேத்து அந்த ஏலிச்சிறுக்கியோட கும்மாளியிட்டத மறந்து போனா...! புறா ஒடிச்சிப் போயிருக்கி. வந்து கோயில்ல கொட்டு முழக்கில்லாம தாலி கெட்டு நடந்துட்டுப் போவு, நாயமா அததுக்குப் பருவம் வந்தாச்சி. கெட்டிச்சிக் குடுக்கணும். இவெ வாழத்தோப்பு வாங்கான், மயிருவாங்கான்!”
இதுபோன்ற சம்பவங்கள் அவர் கூறுவதுபோல் கடற்கரைக்குப் புதிய செய்திகளல்ல; ஆனால்...
மணியன் எண்ணிப் பார்க்கிறான். பெஞ்ஜமின் கூறினாற் போன்று, இந்தச் சில வருஷங்களில் இவ்வாறு மீறிய இளைஞர்களில், பெண்கள்... சமயம் மாறியவர்கள். ஆண்கள் மாறாதவர்கள்...
இதுவும் புதுச் சாமியாரின் சூழ்ச்சியோ?
மணியன் தூத்துக்குடிக்குக் கிளம்புகையில் நசரேனிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசிவிட வேண்டும் என்று தான் கிளம்பினான். தாயும் மகனும் இரண்டுபட்டுப் போனதை அவன் அறிந்துதானிருந்தான். என்றாலும், ஜானைப் பார்த்துப் பேசுவதைக் காட்டிலும், அவன் மனதில் ‘கர்வக்காரி’யாகக் கருத்தூன்றி விட்ட தாயிடம் பேசுவதைக் காட்டிலும், அவனுடன் நெருங்கிப் பழகிய நண்பனிடம் இந்தப் பிரச்னைக்கு முடிவு காணலாம் என்று இவர்கள் வீட்டைத்தான் முதலில் தேடி வருகிறான். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டலில் சாப்பிட்ட பின்னரே அவன் வருகிறான். நல்ல வெயில் நேரம். ஞாயிற்றுக்கிழமை.
பூக்கள் வாடித் துவண்ட முன் வாயிலில் அவன் வந்து நிற்கிறான். உள்ளிருந்து ரேடியோவோ, இசைத்தட்டோ, ஏதோ சங்கீதம் செவிகளில் விழுகிறது.
கறுப்புக் கண்ணாடியும் புள்ளிச் சட்டையுமாக ஒரு இளைஞன் உள்ளிருந்து வந்து வாயிலில் நின்ற ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறான்; இவனை யாரென்று கூடக் கேட்கவில்லை. மணியன் உணர்ச்சியை விழுங்கிக் கொண்டு, மணியடிக்கும் பித்தானைப் பற்றிய எண்ணமின்றி, கதவைத் தட்டுகிறான். உள்ளிருந்து ஒரு சடைநாய்க்குட்டி, வள்வள்ளென்று ஓடி வருகிறது. அது குலைக்கும் ஓசைதான் நசரேனின் மனைவியைத் தள்ளி வருகிறது. சென்ற முறை அவன் பார்த்ததுக் கிப்போது பருத்துவிட்டாள்.
“ஓ, வாங்க, வாங்க, மணியண்ணா, எங்களை ஞாபகம் வச்சுட்டு இப்போதாவது வந்தீங்களே?...”
“ஞாபகமில்லாம என்ன?... நசரேனில்லியா?”
அவள் அவனை உள்ளே சோபாவில் சென்று உட்கார வைத்து விசிறியைப் போடுகிறாள். குழந்தைக்கு, நான்கு வயசிறுக்கும்; பெண்; படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிகிறது. நசரேனின் குட்டித் தங்கை லிஸியைப் போல் அச்சாக இருக்கிறது. ‘பிள்ளைங்க இருக்கு, நெட்டமா வெத்துக் கையோட வந்திருக்கே!’ என்று ஆத்தா கூறுவது நினைவில் வருகிறது; வெற்றுக்கையுடன் தான் வந்திருக்கிறான்.
“அத்தானுக்கு மன்னார் மடையில் தொழில், மாசம் ஒருநாள் தான் வராரு. இப்பத்தா தம்பி போனா... ஸ்கூட்டரில் போயிருப்பானே, எங்க சித்தாத்தா மகன்... ஊரில எல்லாரும் சவுக்கியமா? எப்ப புறப்பட்டு வந்தீங்க? வாங்க, கைகால் கழுவிட்டு சாப்பிடலாம். கதைப்போம்...”
“இல்ல மயினு. சாப்பாடெல்லாம் ஆயிப்போச்சி...” அவளைக் கண்டதுமே அவனுடைய பொங்கெழுச்சி ஆறி, ஒரு பயபக்தி தோன்றிவிடுகிறது. அது பணத்துக்கு மட்டும் உரிய மரியாதையன்று. அவள் படித்தவள்; பண்பாகப் பேசத் தெரிந்தவள். காலைப் பரப்பிக் கொண்டு வாயிலில் அமர்ந்து பேன் பார்த்தவாறு பதில் சொல்லும் பெண் அல்ல.
“சாப்பாடெல்லாம் ஆச்சா? எங்கே... அத்தெயப் பாத்துட்டுத்தா வரீங்களா?...”
“இல்ல... எனக்கு அந்த வீடு எங்கேண்ணே தெரியாது...”
“பின்ன?... ஓட்டலுக்கா போனீங்க?...”
அவன் சிரிக்கிறான்.
“போங்க... உங்களிடம் பேசவே கூடாது. இவ்வளவுக்கு வேத்து ஆளா நினைச்சிட்டீங்க...?”
“இல்ல மயினி மன்னாப்பு. நானொரு அவுசரகாரியமா வந்த... ஜான் இங்க நிதம் வருவானா?”
அவள் புருவம் சுருங்குகிறது.
“இல்ல... மணியண்ணா, உங்ககிட்டச் சொல்லுறதுக்கென்ன? ஜானும் வரதில்ல. லிஸி, ரோஸிதா, சீமோன் யாரும் வரதில்ல. நாந்தா சர்ச்சுக்குப் போனா போயிட்டு வருவேன்...”
ஒரு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்து விடுகிறது. கரையில் துடித்து விழுந்த மீனின் பளபளப்பை நினைவூட்டுகிறது அந்தப் புன்னகை.
“அப்படியா?” என்று நெஞ்சுக்குள் கேட்டுக் கொள்கிறான்.
“அத்தைக்கு இங்கே எதுவுமே பிடிக்காமப் போயிற்று. எனக்கே இப்படி அவங்க தனியாகப் போனது நினைக்கவே வெக்கமா, வருத்தமாயிருக்கு. அவங்க அந்தக் காலத்தில இருந்தாப்பல எல்லாம் இருக்கணுமின்னா முடியுமா? என் தங்கச்ச் இங்கே இருக்கா. ஸ்கூலில் ‘வொர்க்’ பண்ணுறா. அவள் புருஷனும் ‘போட்’ தொழில்தான். ரோஸிதா புருஷன் வீட்டுக்கே போகல. நாஞ் சொன்னேன். தையல் படிச்சுக்கட்டுமே, சும்மா பொழுது போக்குவது நல்லதில்லன்னேன். லிஸியும் சீமோனும் ஸ்கூலுக்குப் போய் நல்லாப் படிக்கணுமின்னுதான் ஸ்கூலில் போட்டோம். லிஸி படிக்காது. நான் கண்டிச்சுப் படிக்கச் சொன்னே. அதெல்லாம் அத்தைக்குப் புடிக்கல.”
“நீ யாருடி என் பிள்ளைகளை அதிகாரம் பண்ணன்னு வாயில் வந்ததப் பேசினாங்க. தினமும் இதான். அவங்க பிள்ளைங்க படிச்சு முன்னுக்கு வந்தா அவங்களுக்குத்தானே நல்லது? புருசனிடம் சண்டை போட்டுட்டான்னு ரோஸிதாவை இப்படியே வச்சிக்கிறதும் நல்லதா? எதானும் நயம் சொல்லிச் சேத்து வைக்கணுமின்னு அப்பாவும் சொல்லிப் பார்த்தார். அப்பாவுக்கு என்னை யாரானும் கெடுதலாப் பேசினா கோபம் வந்திடும். போன வருஷம் ஏர்கிராஷில என் தம்பி இறந்து போனதிலேந்து அவருக்கு ரொம்ப மனசு ஒடுங்கிப் போயிற்று. தொழிலும் பாருங்க, லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஒரு தொழில் நடத்துறோம்னா அதுக்குத் தகுந்த பொறுப்பு இருக்குதில்லையா? திடீர்னு லாபம் வரும்; எதிர்பாராம நஷ்டமும் வரும். குடும்பத்தில் பெரியவங்க எல்லாம் பார்த்து, பொறுத்துப் போகலேன்னா என்ன செய்ய? என்ன சொல்லியும் கேக்காம போயிட்டாங்க. இப்பக்கூட என் தங்கச்சி சொல்லிட்டிருந்தா, லிஸி மார்க்கே எடுக்கலேன்னு...”
அவன் தன் பிரச்னையையே மறந்து போகிறான். கல்வியும், முன்னேற்ற மாறுதலும் ஆண்களிடையே மட்டுமின்றி, பெண்களிடையிலும் எத்தனை வேற்றுமையையும் மோதலையும் கொண்டு வந்திருக்கின்றன! நசரேன் அதிர்ஷ்டக்காரன்...
“வெளிலே பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இவ மாமியாளக்கூட அண்டவிடாம துரத்திட்டான்னு நினைப்பாங்க. உங்க சிநேகிதரிட்டச் சொன்னா, “நீயேம் புலம்பற. அம்மா தனியே போறன்னா வுடு”ங்கறாரு. இங்கே தம்பி அண்ணெல்லாம் கூடத் தனித்தனியே வீடு வச்சிட்டிப் போயிட்டாங்க. அப்பாவும் தங்கச்சியும் தான் இருக்கிறோம். இவங்க வேத்து ஆளா? நீங்க பாத்தா சொல்லுங்க அண்ணா, வெளியே பாக்குறவங்க கேவலமா நினைக்கும்படி இருக்கில்ல இது?...”
அவன் நெடுமூச்செறிகிறான். “நான் அங்கே போய்ப் பார்க்கத்தா போறேன்...”
“நான் எங்க கதையே படிச்சிட்டேன் இந்நேரம். மாமா, மாமி சுகமா? உங்க கொழுந்தியாளை ஒருநாள் பஸ் நிறுத்தத்தில பார்த்தேன். பக்கத்துத் தெருவில் அவ மாமி இருக்கா. எனக்கு அப்புறம்தான் தெரியும். பிறகு வீட்டுக்கு வந்தாங்க.”
“மதம் மாறிட்டா சிநேகம் கூடப் போயிடுமா அண்ணா?”
“அதெப்படி?... எங்களுக்கு முழுநேரமும் தொழில்லியே போயிடுது. நா வாழத்தோப்பு ஒண்ணு வாங்கி பயிர் செய்யிறே. செரியாப் போகுது. தங்கச்சி கான்வென்டிலேந்து காகிதம் எழுதிட்டேயிருக்கா... இப்ப பாத்துட்டுப் போவணும்.”
“ஆமா... நாங்ககூட அப்பாவுக்குப் போன மே மாசம் தம்பி போன செய்திகேட்டு ‘அட்டாக்’ வந்தபோது ஆஸ்பத்திரியில வச்சி ஆக்ஸிஜன்லாம் குடுத்தோம். அப்ப, இவங்கதா ஸிஸ்டர் மோனிகான்னு சொன்னாங்க... வந்ததுதான் வந்தீங்க. புனிதா, மேரி, எல்லாரையும் கூட்டிட்டுவரக் கூடாதா? நான் போன வருஷம் கொஞ்சம் நேரம் ஊருக்கு வந்திருந்தப்ப மாமா எவ்வளவு பிரியமா விசாரித்தார்? அவரையும் அழைச்சிட்டு வரக்கூடாதா?”
“அவரு சொல்லுவாரு. கிளம்ப மாட்டாரு. ஊரே ஆராளியானப்ப கூட, இந்தக்கரைய விட்டு வரமாட்டேண்டிருந்தாரு... அப்பம்... நசரேன் வந்தா சொல்லும்... நா வாரம்...”
“என்ன அப்படிக் கிளம்பிட்டீங்க? இருங்க... லிண்டாப் பொண்ணு, மாமாகிட்டப் பேசிட்டிரு...” என்று குழந்தைக்குச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்.
லிண்டா வெட்டிய அழகு முடியும், பாலாவித்துணியில் ஃபிராக்குமாக அகன்ற விழிகளால் பார்க்கிறது.
இவனுக்கு அந்தக் குழந்தையிடம் சரளமாகப் பேசக்கூட நா எழவில்லை...
தன் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் இந்த வீட்டையும் அவன் உள் மனதோடு ஒப்பிட்டுப் பார்த்துப் புழுங்குகிறான். பணம் ஒன்று மட்டும் முன்னேற்றமல்ல...
அவனுடைய வீட்டில் சுத்தமென்பதே கிடையாது. அவன் வீடு மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் கருவாட்டுச் சிதறல்... குழந்தை அசுத்தம் செய்தால் அப்படியே கிடக்கும். மேனி கொஞ்சம் சுத்தமாக இருப்பாள். ஆனால் அவளுக்கும் பண்பு போதாது. அவள் இந்த வீட்டுக்கு இவள் உறவாக வந்துவிடப் போகிறாளா?... கோபியும் பிஸ்கற்றும் தந்து உபசரித்து அவள் அவனை வழியனுப்புகிறாள்.
அழிப்போட்ட குறுகிய வீட்டின் வாயிலில் ரோசிதா இன்னும் ஒரண்டொரு பெண்களுடன் வம்படித்துக் கொண்டிருக்கிறாள். இவனைக் கண்டதும், “வாங்க வாங்க மச்சான்!... அம்மா? இங்கிய வந்து பாரு, ஆரு வந்திருக்காங்கண்ணு!” என்று கூவுகிறாள்.
ரோசிதா இன்னும் தடித்து, அன்று கண்டாற் போலவே இருக்கிறாள். யேசம்மாவை அவன் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன. முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, இளைத்துத் தளர்ந்து போயிருக்கிறாள்.
“தோத்திரம் மாமி?... சுகமா?...”
“வாப்பா... நீங்கத்தா வேறயாப் போயிட்டீங்க...” அவன் உள்ளே சென்று நீண்ட ஒழுங்கையிலுள்ள பெஞ்சில் அமருகிறான். எதிரே வாசற்படியில் அவளும் அமருகிறாள்.
“மேபல் பொண்ணு எப்படி இருக்கா? ஆத்தா இல்லாம சித்தாத்தா வளத்த பொண்ணு. பதவிசா இருக்கும்... ஒரு புள்ளத்தானே, ஆண்?...”
“ஆமா.”
“அப்பெ எப்படி இருக்கா! தொழிலுக்குப் போறாரா?”
“போயிட்டிருக்கா...”
விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. அதற்குள் அவளே பாடத் தொடங்கி விட்டாள்.
“அப்பமே நசரேனுக்கு லில்லிப்பொண்ணக் கட்டியிருக்கலாம். கதரினா வூடுதேடி வந்துகேட்டா, இவெ வந்து என்னக்க மண்டயக் கொழப்பி அடிச்சிட்டா. முன்னமே இவம் பொஞ்சாதி மேட்டிமத்தனம் தெரிஞ்சதுதான்? ஏதோ அவளும் காலம் போயிற்றா, தாயில்லாப் பொண்ணு புள்ளிக, அவெனும் வேற கலியாணம் தொடுப்பொண்ணில்லிய. பெறந்த வந்தா, அம்மாட்டுக் கூப்பிடுதான்னு சரின்னிட்டே. இவ புருசனைச் சட்ட செய்யிறாளா? எவெ எவெல்லாமோ வர்றா. மச்சிலேந்து குசினிவர போறா. வெள்ளக்கார வரா. கொச்சிக்கார வாரா. தாட்டு பூட்டுனு இங்கிலிசில பேசிட்டு அவனுவகூட நேரம் போது இல்லாம காரில போறதும், வாரதும்... அந்தக் கேடு கெட்ட பயலுக்குச் சொரணையில்ல. கரைக்கு வந்தா குடிச்சிட்டு மச்சில்ல போயிப் படுத்துப் புரளுவா. இங்கிய என்ன நடக்குண்டு ஒண்ணும் கவனிப்பில்ல. அதாம் போவட்டுமிண்ணா, இவவாயில நானும் எம்புள்ளிகளும் பேச்சுக் கேக்கணுமா? நா சுத்தமில்லியாம்; எங்கியும் எச்சித் துப்புறேனாம். எம் பிள்ளைங்களை செல்லங் குடுத்துப் படிக்காம கெடுக்கேனாம். ரோசிதா... இவக்கு ஒரு சொவமில்ல, இவளக் கண்டா ஆகாது. சொம்மாப் பொழுதுபோக்கா, வேல செய்யலேங்கா. அவப்பச்சி இருந்தா, மவ மொகஞ் சொணங்கச் சம்மதிப்பாரா? இவளுவ அக்காளுந் தங்கச்சியும் மச்சில படுத்துறங்கிட்டு ஏழு மணிக்கு எழுந்து வருவாளுவ. எம் பொண்ணும் நானும் காப்பி வச்சி முட்ட பொரிச்சி மேசல கொண்டு வக்யணும்... என் தலயெழுத்து... அப்பமே லில்லிப் பொண்ணைக் கெட்டி வச்சிருந்தேன்னா இப்படிச் சீரழியுமா? ஊரோடு நீங்க தொழில் செய்ய இல்லியா?...”
மணியனுக்கு ஒரு இலக்கு கிடைத்து விட்டது.
“மாமி, இப்பம் ஒண்ணும் கெட்டுப் போயிடல. ஜானுக்கு மேனகா இஷ்டந்தா. அவனுக்கும் அவெமேல ஆசதா. நா இப்ப ஒங்களப் பாத்துக் கேக்கத்தா வந்தம்...”
யேசம்மா சற்றே திகைத்தாற் போல பார்க்கிறாள்... “அவனுக்கும் வயசு தெகஞ்சி போச்சி. அவனக்கப் பொண்ணு கெட்ட எடம் வந்திட்டுத்தானிருக்கி. இங்கியே எங்க கொழிந்தியாளுக்கு மாமமக இருக்கு. அவங்க... கன்யாமாரில வியாபாரம். சீதனமா பத்தாயிரம் தந்து இருபது பவுன் போடுறமிண்ணு சொல்லி வந்தாங்க... பின்ன, பெரிய தாழையிலேந்து அது உறமுறைப் பொண்ணுதா, உங்கப்பச்சிக்கெல்லாந் தெரியும். அவ பேத்தியா - அதும் நல்ல எடம். எட்டாயிரம் ரொக்கங் குடுத்து முப்பது பவுன் போடுறமிண்ணா. இந்தப்பய வண்டி எடுத்திட்டு றால் கொண்டார போறா, வாரா, வூட்ட வந்து பாத்து சோறுண்ணக்கூட நேரமில்லாம ஓடிட்டிருக்கா. பேசுறதுக்கில்ல... நீங்க மதம் மாறினவங்கல்லாம் திரும்பக் கிறீஸ்தவத்தில சேந்திட்டாங்கண்ணு சொல்லிட்டாங்க...? அப்பிடியா? நெசமா?...”
அவள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்களை ஆழம் பார்ப்பதை அவன் புரிந்து கொள்கிறான்.
“அது எப்படி மாமி? அதெல்லா ஒண்ணில்ல. அந்தக் கோயில்காரங்களுக்கு இவங்க பிரிஞ்சி போயிட்டாங்களேண்ணு சங்கட்டமாத்தா இரிக்கி. எதேனம் எல்லாத்துக்கும் தடசம் பண்ணிட்டுத்தானிருக்கா. நா இப்பம் விசயத்த உம்மகிட்ட வெளிச்சமாச் சொல்லிப் போடறம் மாமி. நீங்க மேரிப் பொண்ண ஜானுக்க கட்டிச்சிவய்க்க சம்மதப்படுவீங்களாண்ணு கேக்க வார இல்ல. இப்ப நெலம மீறிப் போயிரிக்கி. இந்துண்டும் கிறிஸ்தியன்னும் பாத்திட்டிருந்தா சிரிச்சிப் போயிரும். ஆத்தா சோறெடுத்து அஞ்சு நாளாச்சி. எம்மாட்டோ கஷ்டம் வந்திச்சி. இப்பம் இப்பிடி ஒரு தலக்குனிவு வந்திரிக்கி. ஜான் கலியாணம் கட்டிக்கிறே. இந்தவாரேண்ணுஞ் சொல்லுதா. ஆனா அதுக்கு மேல இங்ககிட்ட உளுமயச் சொல்லத் தவக்கமாயிருக்கியா...”
யேசம்மா சீறி விழுகிறாள்.
“அதெப்பிடி? ஒங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வாராளா, அல்ல இவெ அங்கிய வாரானா? நாயம் எது மக்கா? அவ கிறிஸ்தியானியாயிட்டு எங்க கோயில்லதா கலியாணம் நடக்கணும்...”
அவன் அதிர்ந்து போய் நிற்கிறான்.
“அம்மாட்டுக்கு அறிவில்லாதவளாவ ஒரு பொண்ணு தலக்குனிவா நடந்தா? இது இங்கெத் தெரிஞ்சா இன்னு கேவலம். கொட்டு முழக்கமில்லாம மஸ்வாதிகெட்டுண்ணு விடிகாலத் தாலி கட்டிப் போடக்கூட நா சம்மதிக்க மாட்டே. பொறவு அவ உசத்தி இவ தாழ்ச்சிண்ணாவும். பொண்ணுக்கு இருவது சவரன் போட்டு சீதனம் பத்தில்லேண்ணாலும் எட்டாயிரமிண்ணாலும் குடுத்து, கோயில்ல பர்ஸ்ட்கிளாஸ் கலியாணம் நடக்கணும். ஒங்கக்க குனிவ நாங்க ஏ ஏத்துக்கணும்?...”
அவனுக்குப் பேசவே நாவில்லை.
மேனி... இவளுக்கு என்ன வந்து விட்டது? பழைய துடிதுடிப்பும் சிரிப்பும் கலகலப்பும் எங்கே போயிவிட்டன? வீட்டின் மூலை முடுக்குகளைப் பார்த்து ஒட்டடை தட்டுவாரில்லை; அழுக்குத்துணிகளைப் பார்த்துச் சோப்புப் போடுவாரில்லை. இரண்டு ஆமை ஓடுகளும் பாய்க்குத் துவர் போட்டு வைக்கக் காலியாக இருக்கின்றன. இந்த வீட்டில் நேரும் கூருமாக எந்தக் காரியமும் நடக்காமல் ஏதேனும் சாபக்கேடு தடுக்கிறதோ? புனிதா அவனுக்கு வெந்நீரை ஊற்றிக் கொடுக்கிறாள். அவன் முன் முற்றத்தில் உடலைத் தேய்த்துக் குளிக்கையில் கணேசு சிரிக்கிறது. ஆத்தா வெற்றிலை புகையிலையை அடக்கிக் கொண்டு ஓர் ஓரத்தில் குந்தியிருக்கிறாள்.
புனிதாவுக்கு மூச்சு வாங்குகிறது. மடிச்சுமை கூடி வருகிறதே? வானம் நீலமாய், உக்கிரமாய்க் கொளுத்துகிறது. வைகாசி பிறந்துவிட்டது. உள்ளூரில் ராஜன் ‘மைக்கு செட்’ வியாபாரம் தொடங்கிய பிறகு தினமும் ‘மைக்கு’ செட்டு வைக்க ஏதேனும் விசேஷம் வந்துவிடுகிறது. கீறல் விழுந்ததொரு முன்னுரையுடன் “கணபதியே சரணம்...” என்ற பாட்டு துவங்குகிறது. உடனே நின்று போகிறது. தவறாகப் போட்டு விட்டானோ?... ஏனெனில் அடுத்து, “இஸ்பிரிசாந்துவுக்கு நமஸ்காரம்...” என்ற கீதம் ஒலிபரப்பாகிறது.
“கலியாணமா? ஆருக்கு?...” என்று அவன் விசாரிக்கிறான்.
“மேட்டுத் தெருவில், வாத்தியார் சூசைதாஸ் மகளுக்குக் கல்யாணம், தூத்துக்குடில முட்ச்சிட்டு இங்க வந்து பார்ட்டி கொடுக்கா...” என்று புனிதா விவரம் தெரிவிக்கிறாள்.
“அப்பச்சியக் கூட வந்து பத்திரிகை வச்சிக் கூட்டுப் போனா. போனா எதினாலும் மொய் வய்க்கணும். துட்டில்லண்ணு சொல்லிட்டிருந்தா. அந்தப் பொண்ணு ரெபகாவும் நம்ம மேரியும் வயசுக்கு வந்து அடுத்தடுத்த நாளில் கொண்டாடினம்... இங்கே மொடங்கிக் கிடக்கு. கடனோ ஒடனோ வாங்கிப் பொண்ணைக் கட்டிச்சிக் குடுக்காம நாமதா இரிக்கம்; கடல்ல அல ஓயுமா? வீடு, மரம் இருக்கு. எதா சாமி புண்ணியத்தில றாலுக்கு வெலயுமிருக்கி. இம்மாட்டும் வச்சிட்டு அந்தப் புள்ளயக் கண்ணு கலங்க அடிக்கலாமா?” ஆத்தா மொணமொணக்கத் தொடங்கிவிட்டாள்.
“...தா, இந்த வீட்டுக்குள்ள ஏன் காலுருத்தணுமிண்ணிருக்கி. யாரக் கேட்டிட்டு அந்தப்பய கூட ஓடிச்சிப் போனா, வந்தா? ஊருல அக்காளைப் பார்க்கப் போயிற்று வந்தாண்ணு சொல்லிவச்சிருக்கம். அந்தால மறச்சிவச்சிர முடியுமா? அவெ ஆத்தாக்காரி இருவதாயிரத்துக்குச் செலவு பண்ணணுமிண்ணு பட்டியல் குடுக்கா. வூடு, மரமிண்ணு நீங்க நினைச்சிட்டிருக்கீங்கண்ணா என்னக்க எதும் வேண்டாம். நீங்க சீதனம் குடுத்துக் கெட்டிச்சிக்குடுங்க. நா இன்னித்தேதியில சொல்லிட்டேன். என்னக் கொண்டு தடசமா நினைக்கவேண்டா. நா எந்தத் தாவுலானும் போயித் தொழில் செஞ்சிப்பே!...”
இது அப்போதுதான் புறக்கடை வழியாக உள்ளே வரும் அப்பனுக்குக் கேட்டுவிடுகிறது. கையில் சாராயக் குப்பியுடன் வருகிறார்.
“தொர... பெரிய சீமதொர, என்னியலே? நீ போயிட்டா ஒலவம் இருண்டிருமோ? மயிரு. போய்க்கிலே. இப்பமே போயிரு. ஊரரெண்டு பண்ணினிய, வீட்டரெண்டு பண்ணுத. நாய்ப்பயலுவ. என்னவோ பயங்காட்டுதா! இந்த ஒடம்பில பெலமிருக்குலே! எம்மவக்கு இருபதாயிரம் செலவு செஞ்சி நா கலியாணம் கட்டுவே. இந்த ஊரிலியே கெட்டுவ. நீ வராண்டாம்! அறுவு கெட்ட பயலுவளா! நீ வக்கத்துப் போயி ஒண்ணுமில்லாம இழுத்திட்டு வந்தே. அப்பிடி நான் கெட்ட மாட்ட. இந்தப் பெரிய கோயில்ல, எம்மவக்கு நா பர்ஸ்ட் கிளாஸ் கலியாணம் கட்டி வய்ப்பே...”
மணியன் உடலைத் துடைத்துக் கொண்டு பேசாமலிருக்கிறான்.
அவர் சண்டைக்கென்று கொடியேற்றிவிட்டார். அவன் எதிர்த்துப் பேசினால்தான் அவருக்குச் சமாதானமாகும். அவன் பேசாமலிருந்தால் மீண்டும் மீண்டும் கெருவுவார். ஆனால் அவன் பேசுவதாக இல்லை. உள்ளே சென்று வேட்டியை உடுத்துக் கொள்கிறான். ஆனால், மருமகளின் வீடாரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசினால் அவள் சும்மா இருப்பாளா? “வக்கத்துப் போயி ஒண்ணும் நா வந்திருக்கல. பேச்சை எதுண்ணாலும் கொட்டிராதீம்! இன்னிக்குப் பொழப்புக்கு மரம்வாங்கத் துட்டு எப்பிடி வந்ததுண்ணு ரோசிச்சிப் பாரும்! எங்கண்ணெ, பத்தாயிரம் அவுத்துக் குடுத்தாரு! நீங்க மரம் வாங்கினீங்க, வலை வாங்கினீங்க!...”
“இவ யார்ரீ... மயிரு, பேச வந்திட்டா?” என்று மொலு மொலுவென்று பிடித்துக் கொள்கிறார்.
“றால் காசு நூறா ஆயிரமா கொட்டினா எம்பய. ஒன்னக்கா ஆத்தாவூட்டந்து என்னத்தக் கொண்டாந்த? ஒரு கடலு உண்டா? ஒரு பீரோ உண்டா? ஒரு ரோடியோப் பொட்டி உண்டா? ஒரு வாங்கிப் பலவை உண்டா?”
“நீருதாம் அதெல்லா வேண்டா, பணம் வேணுமின்னிய...”
மணியன் விழித்துப் பார்த்து அதட்டுகிறான். தண்ணீர் தெளித்த அடுப்பு சுவாலை மாதிரி அவள் குரலடக்கிப் புகைக்கிறாள்.
“ஏக்கி... எதுத்தா பேசுதே...”
அப்பன் கையை ஓங்கிக் கொண்டு மருமகள் மீது பாய்கிறார். மணியன் வந்து அவர் கையைப் பிடிக்கிறான்.
“ஒமக்கு அறுவு இருக்கா? புள்ளதாச்சிப் பொண்ண கய்ய ஓங்கிட்டு வாரீம்? என்னக்கொண்டு பேசும்? அவ வழிக்கு ஏம் போறீம்?” சண்டையில் சூடு பிடித்து விட்டது. அப்பன் மகனைச் சுவரோடு மோதித் தள்ளுகிறார். ஆத்தா கூச்சலிட்டுக் கொண்டு வந்து அப்பனை இழுக்க, ஜெயா ஓடிச் சென்று தெருவில் போய்க் கொண்டிருந்த சாமுவல் மாமனைக் கூப்பிட, கூட்டம் கூடிவிடுகிறது. மணியனை, எல்லோருமாக இழுத்துக் கொண்டு கணபதி கோயில் முன் கூட்டி வருகின்றனர்.
அவனுக்கு நாணம் ஒருபுறம், ஆத்திரம் ஒருபுறம், அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை... சீ!
ஒரு மனிதனை வாழ்க்கையில் முன்னேற விடாமல் எத்தனைவகை முட்டுக்கட்டைகள்! இந்த அப்பனுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும், குடும்பம் சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இவரைப் போன்ற ஆளுகள் இந்தக் கடற்கரை சமுதாயத்துக்கே விரோதிகள்...
“அப்பெ அப்பெண்டு நா பேசாம பொறுத்தே. அந்த ஜான் பயலக்கூட்டு, மவளக்கூட்டி வச்சவரு இவருதா,” என்று பொருமுகிறான்.
குலசேகர வாத்தியார், “சமாதானமாயிருப்பா, உணர்ச்சி வசப்பட்டு எதும் பேசி, செஞ்சிட்டா திருப்பி நீக்கிட முடியாது. அவரு வயசானவர். பொறுத்துப் போயிடு...” என்று அறிவுரை நல்குகிறார்.
“பொறுத்துத்தான் இருந்த வாத்தியாரே, புள்ளத்தாச்சிப் பொண்ண குடிச்சிப் போட்டுக் கையை ஓங்கி அடிக்க வரலாமா? அவ ஆத்தாவூட்ட மயிருமட்டண்ணா அவளுக்குக் கோவம் வராதா?”
“போவுது. கொஞ்ச நேரம் போனாத் தணிஞ்சிடும். நீரடிச்சி நீர் விலகுமா? நீ பேசாம இரு. சரியாப் போயிடும்...”
அவன் பேசவில்லை. ஆனால்...
அந்த வீட்டிலிருந்து விலகுவதாக நிச்சயம் செய்து விடுகிறான். அவன் தொழில் தெரிந்தவன். எங்கே போனாலும் அவனால் பிழைக்க முடியும். நாளைக்கு இந்தக் கரையில் இந்த அப்பனுடன் மரத்திலே அவன் கொம்பு குத்தப் போவதில்லை.
எத்தனையோ கட்டங்களில் அவன் அப்பனுக்கு விட்டுக் கொடுத்துப் பணிந்து போனான். ஒட்டாத, கூடி வராத பந்தங்களை இழுத்துக்கொண்டு எதற்காக எதிர் நீச்சிப் போட வேண்டும்? புயல் வருகிறதென்று தெரிந்தால் பாயை இறக்கி விட வேண்டும். அப்போது பாய் ஆபத்தானது.
புனிதாவுக்குத் தாயில்லாததால், சந்தியாகு வீட்டில், பெரியம்மா மீனாட்சியிடம்தான் போயிருக்கப் போகிறாள். சம்பவம் நடந்த மறுநாளே அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அடுத்த தெருவுக்குப் போகிறாள். பஞ்சாட்சரத்தின் விசைப்படகு வீரபாண்டிப் பட்டணத்தில் நிலை கொண்டிருக்கிறது. ஆதித்தன் சில கூட்டுக்காரர்களுடன் தொழில் செய்கிறான். மணியனுக்கு இடமா இல்லை? வலைக்காரனாகத் தொழில் தேடி அன்றே போகிறான்.
ஆத்தா இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் சுணங்கிப் போனாலும், மனத்தாபப்பட்டு வருவான், இன்று, நாளை என்று எதிர்பார்க்கிறாள். அவன் ஒரு வாரமாயும் வரவில்லை.
மீன் வாடிக்குச் சென்று கருவாட்டு மீன் வாங்கிவந்து உப்புப் போட்டு வைக்கிறாள். அடுப்படியில் ஜெயா பொங்குகிறாள். மேனி பிரமை பிடித்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறாள். வீட்டில் கணேசு இல்லாமல் விறிச்சிட்டு விட்டது.
அந்தக் குடும்பத்துக்கு, நினைவு தெரிந்த நாளாக, ஆத்தாளுக்கு ஆதரவாக நின்ற பயல்... அவன்தான் குடும்பத்தையே தாங்கி இருக்கிறான். அவன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்க இயலவில்லை. அவனுடைய கல்யாணத்தில், ஆட்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணத்தை வீண் விரயம் செய்யக் கூடாதென்று ஒழுங்கு செய்தார்கள். முன்பு மதமாற்றத்துக்கு வந்து நீர் தெளித்து தீட்சை கொடுத்த சாமிஜியும் குலசேகர வாத்தியாரும் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். கொலு கட்டி, மொய்யெழுதி ஆசீர்வாதம் செய்தாலும், ஆடம்பர விருந்து, மேளம், ஊர்வலம, வாண வேடிக்கை, ஒன்றுமில்லை. அப்போது தொழிலுக்கு, எந்தச் சாதனமும் இல்லாத நிலையில் மதம் மாறிய எல்லாத் தொழில்காரரும் வறட்சியாக இருந்த நிலையில், சீதனமென்று தந்த முதல் கொண்டுதான் மரமும் வலையும் வாங்கினார்கள். பிறகு இவனும் அவளுக்குச் சங்கிலி, வளையல் எல்லாம் செய்து போட்டிருக்கிறான்.
இருபக்கங்களிலும் குறை, நிறைகள் இல்லாமலில்லை. அப்பன் அவ்வாறு மருமகளை ஏசியிருக்க வேண்டாம். ஆனால் அவர் குணம் அவனுக்குத் தெரியாதா? அவர் பேசுவது புதிசா? அவர் பிடித்ததுதான். இவர்கள் எல்லோரும் பேர் மாறி மதம் மாறுகையில் அவரும் திருநீற்றைப் பூசிக் கொண்டு நீர் வாங்கிக் கொண்டாரேயொழிய பின்னர் எந்தக் கோயிலுக்கும் போவதில்லை. சுவரில் இருக்கும் மரியம்மை சுரூபத்தைக் கூட எடுத்து விட அவர் சம்மதிக்கவில்லை. கணபதி படமும், திருச்செந்தூர் முருகன் படமும், லட்சுமி படமும் வாங்கி வந்து சுவரில் மாட்டி வைத்திருக்கிறான். அவருக்கு எதுவும் பற்றில்லை. கடலுக்குப் போவதும், வருவதும், குடிப்பதும், பெண்சாதி வெறி வந்தால் கண்மண் தெரியாமல் பாய்வதுமாக ஒரு குணம். ஊமைப் பையனுக்கு வயசு வந்தாயிற்று. அப்பனைப் போல்தான் பிடிவாத குணத்துடன் தலையெடுக்கிறான். நன்றாகக் குடிக்கிறான். நாக்குப் போய்விட்டதால் மூர்க்கத்தனம் அதிகமாகக் கோபம் வருகிறது. அருகில் நின்று பேச முடியவில்லை. இந்த அலைவாய்க்கரையில் அவன் எந்தப் பெண்ணையேனும் துரத்திக் கொண்டு ஓடாமலிருப்பானா? கோயிலில்தான் பஜனை அது இது என்று வண்ணமும் சண்ணமுமாக வந்து கும்மாளம் போடுகிறார்களே? அந்தக் கோயிலில் இல்லை என்றால் இந்தக் கோயில். அந்தக் கோயிலில் ஒரு மேய்ப்பன் இருந்து அதிகாரம் செலுத்தினான். இந்தக் கோயிலில் அந்தக் கட்டும் இல்லை. இந்த வாத்தியார் மீன், கருவாட்டு வாசமே பிடிக்காதவர். கோயிலைத் தவிர எங்கும் போவதில்லை. முகத்தைச் சுளித்துக் கொள்கிறார். பஜனை சொல்லித் தருவதும், கதை சொல்வதுமாகப் போக்கிவிட்டுப் போய்விடுகிறார் அவர் தமது ஊருக்கு. இரவுகளில் தங்குவதில்லை. இந்த வாழ்க்கையில் உள்ளிரைச்சல்களை அவர் எவ்வாறு அறிவார்? கடலைப் போன்றே இவர்கள் வாழ்க்கையும் இரைச்சல் மிகுந்தது.
மிளகாய்த்தூளையும் உப்பையும் தொட்டி மீனுடன் கிளறி மூடிவிட்டுச் சுற்றி வரும் நாயைக் குச்சி எடுத்து விரட்டுகிறாள். பிறகு வட்டியை எடுத்துக் கொண்டு உப்பு வாங்கப் போகிறாள். உப்புப் போதாதோ என்பது சாக்கு. அங்கே சம்பந்த தாரியின் வீட்டுப் பக்கம் போகவேண்டும். வாயிலில் தெருவில் குந்தி வலை பிரைகின்றனர் சுந்தரமும் குரிசுப்பிச்சையானும். கண்கள் அகல அகலமாக இருக்கின்றன. திருக்கை வலை, பெஞ்ஜமினின் வீட்டு வாசலில் கணேசு மண்ணில் படுத்துக் கொண்டிருக்கும் நாயின் மீது மண்ணைப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. வாயிற்படியில் மொடுதவத்தின் கடைப்பெண் நிமில்டாவும், புனிதாவின் தங்கை மலர்விழியும் பனநார் சீவிக்கொண்டு ஊர்க்கதை பேசிய வண்ணமிருக்கின்றனர். ஆத்தா வட்டியைக் கீழே வைத்துவிட்டுக் குழந்தையை எடுத்துக் குண்டுக் கட்டாகத் தூக்கி முத்தம் வைக்கிறாள்.
“எலே தங்கம், எத்தினி நாளாச்சிலே, உன்னக் காணாம்...!” அந்த இளம் மேனியின் அழுக்கும் உப்புக்கரிப்பும், அந்தத் தாயின் சுவாசத்தில் எத்தகைய இனிமை சேர்க்கிறது? அவனைக் கட்டி அணைக்கிறாள். அவன் வலையில் பட்ட வஞ்சிரம் போல் முரண்டுகிறான்; முட்டி மோதிக் கால்களை உதைத்து உந்தி அவளை விட்டு விடுதலையடையப் பார்க்கிறான். அவள் விடவில்லை. வட்டியுடன் அவனைத் தூக்கிக் கொண்டு கடைக்கு வருகிறாள். ஒரு பெரிய பழத்தையும் தேங்காய் பர்பியையும் வாங்கிக் கொடுக்கிறாள்.
“அத்தய வுட்டு பாட்டிய வுட்டு எங்கெவே போயிட்டே? வூடு இருட்டாப் போச்சிலே...” என்று பயல் பழத்தை உரித்துத் தின்ன முடியாமல் முத்தங்களை அப்புகிறாள். அவளுடைய அத்துணை ஆற்றாமையும் அந்தப் பிஞ்சிடம் இலக்காகத் தஞ்சம் புகுவது போன்ற உணர்ச்சி வெளியீடுகள்.
அவன் போய்விட்டல் அந்த வீடு எப்படி இருக்கும்? அந்தப் படகு எவ்வாறு நகரும்? தண்டும் பாயும் இல்லாத படகாக, குடிகார அப்பனும், ஊமைப் பையனும், கன்னிமை குலைந்த பெண்ணும்... உமை அப்பன் வழியிலேயே செல்கிறான். சிறியவன் பள்ளிக்குச் செல்கிறான் என்று பெயரிருந்தது. மதம் மாறிய பிறகு, அந்தப் பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் பேரில் தப்போ, இவனுடைய சாக்கோ, அந்த வாத்தியார்கள் மீது தினமும் புகார் கொண்டு வந்து கொண்டிருந்தான் சார்லசாக இருந்த ரமேசு. இப்போது பள்ளிக்கும் செல்வதில்லை; கடலுக்கும் செல்வதில்லை. இறால் சேகரித்துக் கொண்டு பத்துக்கு ஒரு ரூபாய் கமிசன் என்று திரிகிறான். வெற்றிலை, புகையிலை, பீடி சிகரெட்டு என்று செலவழிக்கிறான். சினிமா... பஸ் ஏறி இரவில்லை, பகலில்லை என்று சினிமா மோகம் பிடித்துத் திரிவதும் ஆத்தாளிடம் பணம் கேட்பதும், அயர்ந்து மறந்தால் அவனே ஜெயாவின் பெட்டியைக் குடைந்து கிடைத்ததை எடுத்து விடுவதுமாக உலவுகிறான். ஒரு கால்துட்டுக்கூட அவர்கள் தாய்க்கென்று கொடுப்பதில்லை...
மணியனை வீட்டை விட்டுப் போக விடக்கூடாது... கூடாது...
குழந்தையையே அந்தச் சங்கற்பமாக உருவகப்படுத்திக் கொண்டாற்போன்று அவனை இறுகப் பற்றிக்கொண்டு அவள் வீட்டுக்கு வருகிறாள்.
மேனி தேங்காய் திருகிக் கொண்டிருக்கிறாள். இவனைக் கண்டதும் பளீரென்று முகம்மலரப் பால் கசியும் துருவலை அவனுடைய பழம் பிசுபிசுக்கும் வாயில் அடைக்கிறாள்.
“அங்கே போயிருந்தியாம்மா?”
“ரோடில ஆடிட்டிருந்தா. மலர்விழியும் நிமில்டாவும் ஓல சீவிட்டிருந்தாளுவ. நா தூக்கியாந்தே. புள்ள வந்திருக்யா. கருப்பட்டி வாங்கியாந்திருக்கே. தேங்காய்ப் போட்டுப் பதப்பரிசி கொஞ்சம் பொங்குட்டீ!...”
கணேசு இந்த அன்பு முழுக்காட்டலில் அம்மையைத் தேடவில்லை.
அன்று கடலில் பத்துரூபாய்க்குக் கூட மீன் கிடைக்கவில்லை. இரண்டே இறால் எண்ணிக்கையாகப் பட்டிருந்தன. அது இரண்டு ரூபாய்... மிகுதி களர்மீன். ஏலக்காசு போகத் தேறியது எட்டே ரூபாய். அப்பனும் மகனும் குடிக்க ஐந்து ரூபாய் வைத்துக் கொண்டு மூன்று ரூபாய் வீட்டுக்குக் கொடுக்கின்றனர். ஜெயா தாயைப் பார்க்கிறாள்.
ஆத்தாளோ மனசில் குமைந்தாலும் சண்டை போடக் கூடாதென்று பல்லைக் கடித்து அடக்கிக் கொள்கிறாள்.
“ஏக்கி? இந்தப்பய எங்க வந்தா? நாய்க்கிப் பொறந்தவ. புள்ளயவுட்டுச் சமாதானத்துக்கு வாராளோ?” என்று சொற்களைத் துப்புகிறார் அப்பன்.
“நாயி பேயிண்டு ஏம் பேசறீம்? புள்ளமேல கையவச்சீம்? எனக்குக் கெட்ட கோவம் வரும்? நாந்தா தூக்கியாந்த...” என்று அம்மை சீறுகிறாள். அப்பனுக்கு ஜெயாதான் வட்டிலில் சோறு வைக்கிறாள். பிள்ளைஸ்றாக் கண்டமிட்ட ஆணம். வாழைக்காய் புரட்டியிருக்கிறாள். மேரி கணேசுவை இடுப்பில் வைத்து, கருப்பட்டியும் தேங்காயும்ம் போட்டுப் பொங்கிய பொங்கலை ஊட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது வாசலில் இறால் வண்டி தடதடவென்று ஓசையிட்டுக் கொண்டு செல்வது செவிகளில் விழுகிறது. மேனகைக்கு உடல் தூக்கி வாரிப் போட்டாற் போல் விதிர் விதிர்க்கிறது.
கன்னிபுரத்துக்கு எப்போதும் போல் அந்த வண்டி வருகிறது. ஆனால் அவர்கள் வீட்டுவாயிலின் முன் வண்டி நிற்பதில்லை! மேனகைக்கு, அந்த வண்டியின் கடபுடாவென்ற ஓசை இந்த உலகில் எல்லா ஒலிகளைக் காட்டிலும் இனிமையாக ஒலித்த காலமிருந்தது. இப்போது அந்த இனிமை, அச்சம் கலந்ததோர் ஆதூரமாக மாறிவிட்டது. அவளுள் ஒரு பிரளயத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அவள் நிராசையின் படிகளில் நம்பிக்கையிழந்து நிற்கிறாள்.
ஆண் வர்க்கம் இப்படித்தானிருக்குமோ? வந்து வந்து ஆசையைத் தூண்டி விட்டு, அவளைச் சொப்பனபுரியான ஓர் உலகுக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டவன், இங்கே வரமாட்டானா? இதே நடுவீட்டில் வந்தமர்ந்து, “எனக்குச் சீதனம் வேண்டாம். நான் இந்துவாய் மாறி உங்க மகளைக் கட்டுகிறேன்” என்று சொல்லக்கூடாதா?
கணபதியையும் முருகனையும் படத்தில் பார்த்து அவள் தினமும் கும்பிடுகிறாள். அந்தப் பெரிய துன்பங்களெல்லாம் வந்த போது, மாதாவையும் திருக்குமரன் யேசுவையும் ஆத்தா வாயோயாமல் ஜபித்தாள். கடைசில எப்படி எப்படியோ நடந்துவிட்டது.
இப்போது இந்தச் சாமிதான் மெய்யென்று துதிக்கிறார்கள். பிரசாது மாமனுக்குப் பஜனை பண்ணும்போது ‘சாமி’ வந்து விடுகிறது. கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறார்கள். இந்தச் சாமிகளை அவள் அந்தரங்க சுத்தத்தோடுதானே வேண்டிக் கொள்கிறாள்? ஜான் வராமலே போகிறான்; அண்ணன் வீட்டை விட்டுப் போய்விட்டான்...
தட்டிலே சோற்றை வைத்துக் கொண்டு கண்ணீர் துளும்ப அமர்ந்து விட்ட மகளைப் பார்த்து ஆத்தாள் நெஞ்சு கரைகிறாள்!
“ஏக்கி, கண்ணுகலங்குதே? கடல்மேல பறக்கும்புள்ள சீதாப் புள்ளும்பா; அதுக்குப் பெலமில்ல. அது கரக்குமேல பறக்கவாராது. வந்தா மனிசன் கல்ல எறிஞ்சி கொன்னிடுவா. பொண்டுவளாப் பெறந்தவா அப்பிடிக்கொத்தவா தா. அளுது கரஞ்சி என்ன செய்ய?...” சொல்லில் மிளகுப் பொடியின் காரம் இருந்தாலும் கையின் பரிவு கண்ணீரைத் துடைக்கிறது.
இந்த ஆத்தாளும் யார் மீதிலேனும் ஆசைவைத்த பின்னரே இந்தக் குடிகார அப்பனைக் கட்டியிருப்பாளோ? துடைக்கத் துடைக்கக் கண்ணீர் மாயாமல் பொங்கி வருகிறது.
மணியன் திரும்பவும் அந்த வீட்டுக்குள் வரவேயில்லை. குழந்தையைப் பாட்டி எடுத்துக் கொண்டுவந்த மறுநாள் அப்பன் கடலுக்குப் போயிருந்த நேரத்தில், புனிதமும் தங்கச்சியும் வந்தார்கள். ஆத்தாளும் மீன்வாடிக்குச் சென்றிருந்தாள். புனிதன் மணியனுடைய துணிகள், பெட்டி ஆகிய சாமான்களைத் தங்கையிடம் கொடுத்துவிட்டு, குழந்தையையும் கூட்டிச் சென்று விட்டாள். ஆத்தாள் வீடு திரும்பியதும் சண்டை சண்டையாகப் போடுகிறாள்.
“மண்ணுக்களி மொந்த போல நிக்கிறிங்க? ஏக்கி? எங்காத்தா இல்லாம எதும் இங்கிருந்து கொண்டிட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லுறதில்லியா? கடலல மண்ணப் பாத்துத்தானேட்டி வரும்? எம்மாட்டு நீரை அடிச்சு விட்டாலும் கரயில வந்துதா மோதும். ஆத்தா புள்ள பிரிஞ்சிபோகுமா? அவ பொட்டியெடுத்திட்டுப் போராண்ணு என்னக் கரயில வந்து ஒரு கொரகுடுக்கக் கூடாதாட்டீ?”
உள்ளூற அவள் உடைந்து போகிறாள். சம்பந்ததாரியின் வீட்டில் எடுத்துச் சொல்ல, முதியவரில்லை. அங்கே சென்று இளையர்களிடம் பேச்சுக்கேட்க மனமின்றித் துயரத்தை விழுங்கிக் கொள்கிறாள். மகன் வந்தது தெரிந்தால் அங்கே சென்று கத்தலாம். பெஞ்ஜமினும் கூட நிலத்தில் நடவென்று போயிருப்பதாகக் கேள்விப்படுகிறாள்.
வீடு வெறித்துக் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் பாறையை மோதுவது போல் அப்பனுடன் மோதுகிறாள்.
அப்பன் குடிக்கச் சாராயம் வாங்கி வந்து கிளாசில் விட்டும் போது அவள் அதைப் பிடுங்குகிறாள். அப்பன் அவளைப் பிடித்துத் தள்ளுகிறார். “நீர் என்னியக் கொன்னுபோடும்! அந்தப்பய பொட்டிசட்டியெல்லா எடுத்திட்டுப் போயிட்டா! இந்தப் பொட்டப்புள்ளகளயும் குடிக்கார அப்பனையும் மவனையும் வச்சி என்ன எளவு செய்ய?...” என்று அழுகிறாள். அப்பன் நிமிர்ந்து கண்கள் உருள விழித்துப் பார்க்கிறார். கழுத்துக்கோலி துரித்து நிற்கிறது. மேனி அஞ்சி ஆத்தாளை விலக்கும் பாவனையில் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்.
“போயிட்டானா? சவாசு, இந்தா, நாங்குடிக்கேன். நீயும் குடிடீ... சந்தோசம்ட்டீ!... அவெ என்னப்பதித மதத்தில சேக்கணுமிண்டிருக்காணில்லிய...?... அதாணில்ல, மேரிப் பொண்ணு - இதா, சந்தோசம்...” என்று தம்ளரில் சாராயத்தை விட்டு முழுதும் பருகிவிட்டு உதட்டை ஒத்திக் கொள்கிறார், துண்டால்.
“மேரிப்பொண்ணு? உன்னிய ஜான் பயக்குக் கெட்டி வச்சிடப்போறம். ஃபர்ஸ்ட்கிளாஸ் பறவாகிப்பு, கலியாணம் சுரூபமெல்லாம் சுவடிச்சி, இந்தப் பெரிய கோயிலில கலியாணம் நடக்கும். லில்லிப்பெண்ணு கன்யாஸ்திரீயாயிட்ட. அவ ஆசீர்குடுக்க வருவா. இவெ... பாக்கட்டும். இந்த வீடு, மரம், வல இருக்கு. ஏ ஒடலில பெலமிருக்கி, கடல்லறாலிருக்கி, அமலோற்பவம் எனக்கு முப்பதாயிரம்னாலும் குடுப்பா... இவெ மயிரில்லாம, நா எம்மவளுக்கு ஃபஸ்ட்கிளாஸ் கலியாணம் கட்டுவம்...”
ஆத்தாள் திகைத்து நிற்கிறாள். கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டுவிட்டது...! அவர் நார்ப்பெட்டியைத் திறந்து வெள்ளை இழை வேட்டியையும், முன்பு தீபாவளிப் பண்டிகைக்கு வாங்கிய சட்டையையும் அணிந்து கொள்கிறார். மேல் வேட்டியையும் போட்டுக் கொண்டு ஜயாவைத் தலைக்கு எண்ணெய் கொண்டு வரச் சொல்கிறான். முழுதும் வழுக்கையாகி வரும் மண்டையில் சில முடிகள்தாமிருக்கின்றன. எண்ணெய் மண்டையில் வழியப் புரட்டுகிறார். கையில் மடிப்பெட்டியுடன் அவர் கிளம்பி விட்டார் அப்போதே.
ஆத்தாளுக்கு எதிரிட்டுப் பேசவே அச்சமாக இருக்கிறது. எல்லா நடப்புகளும் அவளுடைய சங்கற்பங்களை மீறிக் கொண்டல்லவோ நடக்கின்றன? கடலும் வானமும் மழையும் காற்றும் மனிதனின் கருத்துக்கேற்ப இயங்கவில்லை. எனினும் அவற்றுக்கு ஒரு நியதியும் வரையறையும் இருக்கின்றன. எப்போதோ அபூர்வமாகத்தான் மனிதரை அச்சுறுத்துமளவுக்கு அவை வரை மீறுகின்றன. ஆனால் இந்தக் கடற்கரை மனிதர்கள் அநீதிகளை எதிர்த்துப் போராடுமளவுக்கு வலிமை பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்; அதே சமயம் உணர்ச்சிகளுக்குத் தாறுமாறாக இடம் கொடுத்து வலிமை இழந்தும் சீர்குலைகின்றனர். காலம் காலமாக வலியுறுத்தப் பெறும் அரண்களும் கூட அதனால் குலைந்து போகின்றன.
இருதயராஜ் இந்துவாகவே நிற்கவில்லை என்றும், குடும்பப் பிரிசல் அதனால் வலுவாகி விட்டதென்றும் செய்திகள் கடற்கரைக் காற்றில் விரிந்து பரவி, இருசாராருக்கும் ஆதரவுகளைத் தேடி வருகின்றன.
மணியன் ஆதித்தனுடன் விசைப்படகில் கூட்டுச் சேர்ந்து வேம்பார் மடையில் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அந்தப் படகில் ஆள் வலைதான். இயந்திரத்தினால் இயங்கும் இழுவலை அல்ல. ஓட்டியும் வலைக்காரருமாகப் பத்துப்பேர் இருக்கின்றனர். ஒரு நாளைக்கு டீசலுக்கு எழுபது எண்பது செலவாகிறது. ஆறு சிலிண்டர் இயங்கும் பொறி. ஒரே நாளில் ஆயிரம் ஆயிரத்தைந்நூறு, இரண்டாயிரம் என்று இறால் பணம் குவிக்கிறது. ஆனால் அங்கேயும் வள்ளக்காரர் வலை வைக்கு முன் இவர்கள் அள்ளி வந்து விடுகின்றனரே என்ற மோதல்கள் எப்போது நெருப்புப் பற்றி விடுமோ என்று புகைந்து கொண்டே இருக்கிறது.
மணியனுக்கு ஒரு நாளைக்கு அறுபது எழுபதும் கிடைக்கும். முப்பது நாற்பதும், பத்தும் பதினைந்தும் கூடக் கிடைக்கும். ஒரு மாதம் அவன் அயலூரில் சாப்பிட்ட பின் கையில் அறுநூறு ரூபாயுடன் ஊர் திரும்புகிறான். ஊரைப் பற்றிய விஷயம் எதுவுமே அவனுக்குத் தெரியாது.
திருச்செந்தூரில் இறங்கி சாமி கும்பிட்டு அருச்சனை வைத்துவிட்டு அவன் பஸ் நிலையத்துக்கு வந்தபோதுதான் குரூஸ் மாமன் மகனை - திருச்செந்தூரில் தையல் கடை வைத்திருப்பவனைப் பார்க்கிறான்.
“என்ன மச்சான்...? கலியாணமெல்லாம் கூடி வாராப்பில இருக்கி? பறவாசிப்புன்னாங்க...?” என்று அவன் இவனை ஆழம் பார்க்கிறான்.
“யாருக்கு?”
“மச்சான் வெளயாடுறியா? மேரி பொண்ணுக்குத்தா?”
“எந்த மேரிப் பெண்ணுக்கு?”
“இந்து வாயிட்டுண்ணு சொன்ன மேரிப் பொண்ணுக்குத் தா. செத்த முன்னத்தா எங்கப்பச்சி வந்து சொல்லிட்டுப் போவு. ஒங்கக்கப்பெ பெரிய கோயிலுக்கு வந்து கொம்பசாரிச்சிட்டுக் கருணை வாங்கிட்டாராம். வழி தவறிப்போன மறிகள் திரும்பத் திருச்சபையில் சேர்ந்ததுக்குச் சாமி சந்தோஷமா அறிக்கை விட்டாராம்...!”
மணியனுக்கு தான் அலைகடலின் நடுவே இருப்பது போன்றும், கரையில் செம்புழுதிப்படலம் கிளம்பி காட்சிகளை மறைப்பது போன்றும் சில கணங்கள் பிரமையாக இருக்கிறது. அவன் முருகனுக்கு அருச்சனை செய்து திருநீறும் குங்குமம் தரித்து. ‘அரோஹரா’ என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். வழி தவறிப் போன ஆடா? அப்பன் இவ்வாறு காலை வாரிவிடக் காத்திருந்தாரா?
அவர்கள் வேண்டுமென்றே செய்த சூழ்ச்சி என்று இப்போது அவன் உறுதியாக நம்புகிறான். பெரிய கோயில்காரர்கள், இந்துவாகி வந்தவர்களை அங்கே இழுக்கப் பல வகையிலும் தூண்டில் வைக்கின்றனர். கிணறு வெட்டக் கடன் கொடுக்கிறார்கள். ஆசுபத்திரிக் கட்டடம் பெரிதாகிறது. ஆனால் அதே சமயம், இவர்களுக்கும் ஒரு மருந்தகம் வந்திருக்கிறது. கூடங்குளத்திலிருந்து ஒரு டாக்டர் வந்து போகிறார். பஞ்சாட்சரத்தின் ஒன்றுவிட்ட சோதரி அற்புதமாயிருந்தவள் அமுதாவாயிருக்கிறாள். பாளையங்கோட்டையில் மருத்துவச்சியாகப் பயிற்சி பெறச் சென்றிருந்தாள். இந்நாள் வந்திருப்பாள். பெரிய கோயில் சாமிக்கு எங்கோ வெளிநாட்டிலிருந்தெல்லாம் மரிக்கன் மாவு, பால் பொடி, எண்ணெய் எல்லாம் வருகின்றன. முன்பெல்லாம் இல்லாம் இப்போது எளியவர்களுக்கெல்லாம் அப் பொருள்களை வழங்குகிறார். ஆனால் அப்பன் மகளை ஜானுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப் பணத்துக்கு என்ன ஏற்பாடு செய்திருப்பார்?...
மணியன் ஊருக்குள் நுழைகையில் மாலை நான்கு மணியிருக்கும். மழை பெய்து பூமி குளிர்ந்திருந்திருக்கிறது. பஸ் நிற்குமுன் சினிமாவுக்குச் செல்லும் கூட்டம் உள்ளிருப்பவர்கள் இறங்க இயலாமல் வளைந்து கொண்டு வாயிலிலும் ஜன்னல் வழியாகவும் நெருக்குகிறது. கண்களைப் பறிக்கும் வண்ணத் துணிகள், எண்ணெய் வழியும் தலைகள், கருவாட்டு வாடை, சாராய வாடை, முகப்பவுடர் மணங்கள் எல்லாம் சுவாசத்தைப் பிடிக்கும் நெருக்கடி. சின்னப் பயல் ரமேஷ் பீடியை விட்டெறிந்து விட்டு, ஒரு சன்னல் வழியாக உள்ளே புகுந்து விடுவதை மணியன் பார்க்கிறான். ஊமையும் சினிமாவுக்குப் போக நிற்கிறான். அவர்களைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளாமல், தூத்துக்குடியிலிருந்து வாங்கி வரும் பெரிய பயணப் பையுடன் அவன் வீட்டை நோக்கிச் செல்கிறான்.
கணபதி கோயிலில் யாரோ பிள்ளைகள் மணியை அடிக்கின்றனர். இங்கு கும்பிடுவதற்கும் மணியடிப்பதற்கும் ஓர் ஒழுங்குமுறை இன்னும் வரவில்லை. குலசேகர வாத்தியார் தொங்குபையுடன் பஸ்ஸுக்குக் கிளம்பி விட்டார். இனி காலையில்தான் வருவார். மாலைக்கும் காலைக்கும் கோயில் குருக்களாக ஒரு பண்டாரம் இருந்தார். அவருக்குச் சில காலமாகவே உடல் நலமில்லாமல் திருச்செந்தூர் போய் விட்டார். இப்போது பிரசாதுதான் கோயில் வேலையைப் பார்க்கிறான். குலசேகர வாத்தியாரும் இருக்கிறார்.
“மணியனை ரொம்ப நாளாகக் காணவில்லை...?” என்று ஒரு கேள்விக் குறியோடு குலசேகர வாத்தியார் அவனை நிறுத்துகிறார்.
“நா ஊரில் இல்ல வாத்தியாரே. வேம்பாரில தொழில்...”
“அதானா? ஏதேதோ சொல்லிட்டாங்க. அப்பச்சி அந்தக் கோயில்ல சேந்திட்டாராம். தங்கச்சிக்கு கன்யாகுமரியில் இப்போது உங்களைப்போல இந்துவான பையன் ஒருத்தன் ஸ்கூல்ல கிளார்க்கா இருக்கிறான். நான் முடிச்சு வக்கலான்னு இருக்கையில அவசரப்பட்டு விட்டீங்களே? அப்பசிய விட்டு நீ பிரிஞ்சு போயிருக்கலாமா?”
“வாத்தியாரே, அப்பன் சின்னப் புள்ளயா? எவ்வளவுதா பொறுக்கலாம்! இங்கத்த சங்காத்தமே வாணாண்டுதா போனம். எங்கே போனாலுந் தொழிலிருக்கி, ஆண்டவம் படியளக்கிறா...”
“சரி, போ, வீட்டுக்கு!”
அவனைக் கண்டதும் கணேசு வந்து கட்டிக் கொள்கிறான். புதிய பையைக் கீழே வைக்கு முன் அவன் என்னென்ன வாங்கி வந்திருப்பானோ என்று பார்க்கப் பெண்கள் கூட்டம் கூடுகின்றனர். பஞ்சாட்சரம் உடல் நலிவுற்றவனைப் போல் வருகிறான்.
“மாப்ள, இங்க எல்லாம் ஆராளிப் படுது; நீ மொள்ளமா வார?” அவன் பையிலிருந்து குழந்தைச் சட்டை, பட்டுநாடா, சீனிமிட்டாய், காராசேவு, சாந்துக்குப்பி, குச்சிலிப் பொட்டுக்கள் எல்லாவற்றையும் கடை பரப்பி விட்டு, அருச்சனை செய்த தேங்காய் பழம், திருநீறு குங்குமம் எல்லாவற்றையும் மனைவியிடம் கொடுக்கிறான். புனிதா கண்கள் இறங்க, நிறைந்த கருப்பம் குவிந்து தளரக் காட்சியளிக்கிறாள். முதலில் திருநீற்றையும் குங்குமத்தையும் அணிந்து கொள்கிறாள்.
“சங்கதி தெரியுமா? உங்க வீட்டில் எல்லாம் தாய் மதத்துக்குப் போயிட்டாங்க!” என்று வருகிறான் சுந்தரம்.
“தாய் மதமென்ன தந்தை மதமென்ன, நமக்கு இதுதா தாய்மதம்...”
“நாஞ் சொல்லல மாப்ள... அந்தப் பார்ட்டிக்காரங்க சொல்லிக்கிறாங்க அப்படி!”
“சொல்லிக்கட்டும்.”
“இது இந்த சாமியாரு சூழ்ச்சி மட்டுமில்ல. ஒன்னக்க தங்கச்சி வேற சம்பந்தப்பட்டிருக்கா. அவ கான்வென்ட்டிலேந்து காயிதம் போடுதா. துணி மணி பணம் எல்லாம் குடுத்து இந்தக் கலியாணத்துல முனப்பா இருக்காளுண்ணு சேதி. அந்த ஜான் பய, இங்க தினம் வந்திருக்கா, ஒரு மரியாதிக்கு, நீ இருக்கியாண்ணு விசாரிக்கல. ஒங்காத்தாதா பாவம், வந்து கணேச எடுத்திட்டுப் போவும். ஜயா வரும். வந்து கண்ணீர்வுட்டு அளுதிச்சி. அதும் தெரிஞ்சி அப்பெ அடிச்சாராம். பெரிய கோயில்ல அப்பச்சியும் மேரியும் ஊமப்பய்யனுந்தா கருணை வாங்கிட்டாங்களாம். நசரேனுக்குச் சித்தப்பன், சித்தப்பன் மவன் எல்லாரும் வந்து போயிருக்கா. ரோசிதா கூட வந்து போயிருக்கா. ஆரும் இங்க வார இல்ல. ஒங்கப்பா வட்டக்காரர்கிட்ட பத்தாயிரமோ பதினஞ்சாயிரமோ வாங்கிச்சிருக்காண்ணு வதந்தி. மாப்பிள்ளக்கி நாலுசவரன் சங்கிலி. அவங்க மச்சானுக்கு மோதரம் போடுதாங்க...” என்று சுந்தரம் விவரம் தெரிவிக்கிறான்.
“வாசற்படி மறியலுக்கு நா போகப் போற; எனக்கு உறமுற இருக்கு...” என்றும் கூறிக் கொள்கிறான்.
மணியன் வாயே திறக்கவில்லை. நெஞ்சு கனக்கிறது. ஒரு சவால் விடுவது போல், அந்தச் சமயத்தை விடுத்து அவர்கள் இந்த நிழலுக்கு வந்தார்கள். அந்நாள் சிலுவையாரே, மாதாவே என்றவர்கள், முருகா, கணபதி என்று அழைக்கிறார்கள். அதைத்தவிர ஒரு மாற்றமுமில்லைதான். அதே கடல், அதே வானம், அதே காற்று, அதே தொழில் பிரச்னைகள் - வாழ்வுப் பிரச்னைகள்...
இரவு, அவன் தங்கைகளுக்கென்று வாங்கி வந்திருக்கும் ரவிக்கைத்துணி, நாடா முதலியவற்றையும், மிட்டாய்களையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான். வாசல் விளக்கில் பூச்சிகள் பறக்கின்றன. முன் தாழ்வரையில் வலைகள் கிடக்கின்றன. கட்டிலில் எப்போதும் போல் அப்பனில்லை. மேரியும் ஜெயாவும் சீனிவாசன் மனைவி பாலாளும் இருக்கின்றனர். அவனைக் கண்டதும் திடுக்கிட்டாற்போல் மேரிதான் எழுந்து குரல் கொடுக்கிறாள்.
“அம்மா...! அண்ணெ... அண்ணெ வந்திருக்கா...”
“எப்பம் வந்திங்க? வீட்ட கலியாணம் வந்திருக்கு...” என்று எட்வினின் மனைவி பாலா சிரிக்கிறாள். ஜெசிந்தா பாலாளாகியிருக்கிறாள்.
ஆத்தா குரல் கேட்டு வரவில்லை. அவன் தான் நடு வீட்டுக்குச் செல்கிறான். அங்கேதான் கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து உட்காருகிறாள். மேரியன்னை சுரூபம், பிள்ளையார், முருகன் படங்கள் இருக்கின்றன. புதியதாக அந்தோணியார் படம் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது.
“அம்மா...!”
அன்றொரு நாள் சுழலியில் அகப்பட்டு அவனும் நசரேனும் மீண்டு வந்ததும், அந்த மகிழ்ச்சிக் களரியும் அவனுக்கு நினைவில் காட்சி தருகிறது. அவள் கைகளில் அவன் கருப்பட்டி மிட்டாயையும் காராசேவையும் வைக்கிறான். அம்மை குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். அவன் தாயின் கண்களைத் துடைக்கிறான். பேச்சு எழவில்லை. “மக்கா... உன்னக்கப்பெ, ஆட்டி வைக்கிறாருலே. எனக்கு மடுத்துபோவு. இந்தச் சீவியம் எதுக்காவண்டு மடுத்துப்போவு...”
“நீ என்னக்கூட வந்திரு. நாம வேற தாவுல வீடெடுப்பம்...”
“ஒரு பேச்சுக்குச் சொல்லிட்டா நீ பிரிஞ்சி போயிரலாமா மக்கா, இப்பிடி? வூடே விறிச்சிண்டாயிரிச்சி. அவ, உம் பொஞ்சாதி, நா இல்லாத நேரத்தில இந்த வீட்டேந்து உம் பொட்டி சட்டியெல்லா எடுத்திட்டுப் போயிற்றா. என்னைக்கு உள்ளாற அக்கினிக்கண்டமாட்டு வேவுது. விண்டு காட்ட ஏலாது லே...”
“நாந்தா கொண்டாரச் சொன்ன. போவட்டும். வேம்பாரில மிசின் போட்டுல மடிக்காரனாயிருக்கே. தொழில் சுமாராயிருக்கி. நீ வந்திரு...”
“நா எப்பிடிலே வார...! உன்னக்கப்பெ வீட்டமரத்து எல்லாம் பந்தகம் வச்சி, வட்டக்காரரிட்ட பதினஞ்சாயிரம் வாங்கியிருக்கா. இப்பம் நேத்து, மொடுதவங்கூட தூத்துக்குடிக்கிப் போயி லில்லியப் பாத்திட்டு, சாமாஞ்சட்டெல்லா வாங்கியாரப் போயிருக்கா. வர நாயராட்ச பறவாசிப்பு; சாமியாருக்கு வரிசை வய்க்கணும். விருந்து போடணுமிண்ணு குதிக்கியா. மயினி மாமிண்ணு ஆரிருக்கா? இந்தப் பொண்ணு மொவத்தப் பாக்குறப்ப வயித்த சங்கட்டமா இருக்கி. கெளுக்கியில மாட்டிக்கிட்டம். வேணுமிண்ணு இது நடக்கு...”
அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
“ஏ மேனி! இங்க வா?”
அண்ணனின் குரல் சாட்டையடி போலிருக்கிறது.
“இம்மாட்டு ஒரு தூண்டில் மாட்டி வச்சிட்டியே? ஆத்தாளை இப்படி நோவ விட்டு நீ கலியாணஞ் செஞ்சிக்கிறது நல்லாயிருக்கா? அந்தப் பயல நீ கலியாணங்கட்டிக்கணுமிண்ணா இந்துவாகணுமுண்ணு ஏஞ் சொல்லக்கூடாது நீ?”
அவள் ஊமையாக நிற்கிறாள்.
அவள் சொல்லாமலில்லை. ஆனால்... ஆனால்... அப்பன் முந்திக்கொண்டு குதித்தாரே?
“நீங்க எல்லாப் போயி திருச்சபையில சேந்துட்டியாக்கும்!”
“ஆத்தா வார இல்ல; ஜயா வார இல்ல...”
“அப்ப ஆத்தாளும் ஜெயாளும் என்னோட வரட்டும். நீ இங்க கலியாணம் கட்டிக்க...”
அவள் சொல் பிரியாமல் நிற்கிறாள்.
“என்னட்டீ, பேசாம நிக்கே? இந்தக் குடும்பத்தின் மானம், கவுரவம் எதுவும் ஒன்னக்க நினைப்பில இல்ல, இல்லியா? ஒன் சொகம்தானே பெரிசாப்போச்சி? நீங்க திருச்சபய வுட்டு நீக்கிட்டா செந்திர மாட்டமிண்ணு நாங்க வேற நெழலுக்கு வந்தம். இப்பம் மூஞ்சில கரியத் தீத்திக்கிட்டாணு, துப்பின எச்சிய முழுங்கிறதாண்டு போயி அங்கியவுழுகா. எம்மாட்டு தலக்குனிவு?... அப்பெ... அப்பெ, ஆர எண்ணி நம்பி வீட்டயும் மரத்தயும் பந்தகம் வச்சாரு?...”
அவனுடைய குரல் கடல் அலைகளுக்கு மேல் ஒலிக்கிறது.
“நா அத்துச் சொல்லிட்ட. இந்தக் கலியாணத்தில் எனக்கொரு பந்தமுமில்ல... ஆமா, நா ஆத்தாளையும் ஜயாளையும் கூட்டிப் போயிருவ... அம்மாட்டுக்கு ஒரு சாதன வாழுவா, சாவாண்ணு வந்த சமயமெல்லாம் கெட்டிச்சி ஒண்ணா நின்ன குடும்ப. ஆரும் வரமாட்டம்...!”
இருதயராஜுக்கு எத்தனை நாளையக் கனவு ஈடேறுகிறது? ஃபர்ஸ்ட் கிளாஸ் ஓலை வாசிப்பு! நூறு ரூபாய் கட்டியிருக்கிறார்! கோயில் முழுதும் வண்ணக் காகிதத் தோரணங்களாய் அலங்கரித்திருக்கின்றனர். பீடத்தில் மலர்கள்... விளக்கு ஜோடனைகள் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் எல்லா ‘சுரூபங்’களிலும் மலர் வைத்து விளக்குப் பொருத்தி இருக்கின்றனர்.
அப்பன் இதைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். சாமியார் உற்சாகத்துடன் வழி தப்பித் திரும்பி வந்த செம்மறியாக வந்து சேர்ந்த இருதயராஜ் ஃபர்னாந்துவின் திருக்குமாரி செல்வி மேரி செல்வமணி அம்மாளுக்கும், இதே திருச்சபையைச் சேர்ந்த... யேசம்மா அம்மாளின் திருப்புதல்வன் செல்வன் ஜான் செல்லப்பாவுக்கும் என்று பெயர் சொல்லித் திருமண ஓலையைக் கணீரென்ற குரலில் வாசித்த போது, உயர்ந்த அந்தக் கோயிலின் கூரையளவும் தம் இருதயம் பொங்கி வியாபித்து அந்தக் கோயில் முழுதும் எதிரொலிக்கும் ஒலியில் ஒன்றியதாகவும் உணருகிறார். பெரியமணி, சிறியமணி எல்லா மணிகளும் வசந்தகாலத்துத் தென்றலில் மகரந்தங்கள் சிதறி மணம் அவிழ்ந்தாற்போல் ஒலிப்பூக்களைச் செவிகளில் அநாதமாகப் பொழிந்து மகிழ்ச்சியின் கரங்களை மீட்டுகின்றன. இந்தப் புதிய சாமியார் அவருடைய திருக்குடும்பத்துக்கு ஆசீர் வழங்குகிறார்.
கிறிஸ்தவர்களாகவே நின்று கோயில் ‘பார்ட்டியார்’ என்று வழங்கப் பெற்றவர்தாம் இப்போது இருதயராஜுக்கு வேண்டிய நண்பர்களாக இருக்கின்றனர். அந்நாளில் இவர்கள் மரத்தை எரியவிட்டவர்கள், வலைகளைத் தூக்கிச் சென்றவர், போலீசுக்கு உளவு சொன்னவர், ஆகியோர் அனைவரும் நிச்சயதார்த்தத்துக்குக் கூடுகின்றனர். நசரேனின் தாய் வரவில்லை. நசரேனும் அவன் மனைவியும் கூட வரவில்லை. ரோசிதா, அவள் தங்கை, தம்பி இன்னும் இரண்டொரு அந்நியமில்லாத உறவினர் வந்திருக்கின்றனர். மணப்பெண்ணுக்கு மோதிரம் போடுகின்றனர்.
மூன்று ஓலை வாசிப்புக்கு முன்பே கல்யாண நாளை வைத்துக் கொண்டு விட்டனர். ஆத்தா உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அடுப்படியில் பலகாரம் செய்கிறாள். அவளுக்கு ஊரெல்லாம் சிநேகம். எத்தனை பிள்ளைப் பேற்றுக்காரிகளுக்கு மருந்து இடித்து ஊற்றியிருக்கிறாள்? பாலாளும், குருஸ்மாமன் பெண்சாதி சம்சலம்மாவும் ஊர்வம்பு பேசியபடி ஆத்தாளுக்கும் உதவுகின்றனர். மாவிடித்து முறுக்கும் அதிரசமும் பணியமும் செய்கின்றனர். வீட்டில் கால் வைக்க இடமில்லாமல், கூடைகள். வலைகளை எட்வினின் வீட்டில் போட்டுவிட்டு, முற்றத்தையும் தாழ்வரையையும் ஒழித்து ஜெயாதான் சுத்தமாக்குகிறாள்; வேலாண்டி நாடான் பந்தல் கட்டுகிறான். மேரியின் உள்ளம் பட்டமாகப் பறந்தாலும், பட்டத்து வாலில் கல்லைக் கட்டுகிறான். மேரியின் உள்ளம் பட்டமாகப் பறந்தாலும், பட்டத்து வாலில் கல்லைக் கட்டி வைத்தாற் போன்று சோகம் கவிந்து அமுக்குகிறது.
“உன் சுகந்தானேட்டி பெரிசாப் போச்சி?” என்ற அண்ணனின் சொல் நினைக்குந்தோறும் தீயாய்ச் சுடுகிறது.
ஒரு பெண் ஆணின் சுகத்தையும், ஒரு ஆண் பெண்ணின் சுகத்தையும் நாடிச் செல்வது மழை பெய்வது போல, காற்றடிப்பது போல, வெயில் கொளுத்துவது போல, காலங் காலமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு விலையாகத் துன்பமாகிய அனுபவங்களையும் பெற வேண்டியிருக்கிற தென்பதை அவள் புரிந்து கொள்கிறாள்.
அண்ணன், ஏலியிடம் அனுபவித்த சுகத்துக்காக எத்தனை சுமை சுமந்திருப்பான்? ஏலி... அவள் அண்ணனுக்கு வேண்டி எத்தனை துன்பம் அனுபவித்தாள்? பிச்சைமுத்துப்பாட்டாவும் போன பின்பு அவள் எதற்குத் திரும்பி வந்தாள்? வேறு எங்கேனும் சென்று பிழைத்திருக்கக் கூடாதா? இதே கரைக்குத் திரும்பி வந்து, அவர்களுக்காக ஈனப் பெயர் வாங்கினாள், பாடுபட்டாள். குடிசைக்குள் ஈ மொய்த்து அழுகி நாற்றமெடுக்கச் செத்துக் கிடந்தாள்...
இதை எல்லாம் அவள் எதற்காக இப்போது நினைக்க வேண்டும்? அவள் கூடாத சம்பந்தம் கொண்டாள், இவள் அப்படியா? அண்ணன் இவ்வளவு கடுமை காட்டலாமா? அண்ணனுக்குச் சட்டையும் சாரமும் எத்தனை நாளைக்குத் துவைத்து மடித்துக் கொடுத்திருக்கிறாள்? ராக்கடைத் தொழில் என்றால் சோறு கட்டி வைத்து, அவனுக்குப் பிடித்த அணமோ, துவையலோ செய்து வைத்திருக்கிறாள். காலை நேரங்களில் காப்பி வைத்துக் கொடுக்காமல் அண்ணனை அனுப்பியிருக்கிறாளா? என்றுமே மேரிக்கு அப்பச்சியை அவ்வளவாகப் பிடிக்காது. அவருக்குப் பணிவிடைகளை ஜயாதான் செய்வாள். முதுகு சொறிவதிலிருந்து சாராயக்குப்பி வாங்கி வைப்பது வரையிலும் கூட அவள் செய்வதுண்டு. அந்தப் பிடிக்காத் அப்பன் இப்போது கல்யாணம் நடத்துகிறார். அந்த அண்ணன் வரவில்லை.
நினைக்க நினைக்க துயரம் ஆறாமல் மண்டுகிறது. ஜானும் அண்ணனும் எத்தனை நாட்கள் ஒன்றாய்ச் சேர்ந்து தொழிலுக்குப் போயிருக்கின்றனர்! ஜானே அண்ணனிடம் சென்று கல்யாணத்துக்கு வரவேண்டும் என்று முடுக்கிக் கூட்டி வரக்கூடாதா? என்றோ குடும்பத் தொடர்பைக் கத்தரித்துக் கொண்டவள்; லில்லியக்காவும் கூடக் கன்யாஸ்திரீ என்ற மேன்மையுடன் வரப்போகிறாள். இவர்கள் ஒரு வேளை கஞ்சிக்கு இல்லாமல் ஏலி எங்கிருந்தேனும் புல்லரிசி வாங்கி வருவதை எதிர்பார்த்துத் தவித்த காலத்தில் அவள் இவர்கள் உயிருடனிருக்கிறார்களா என்று கூடக் கவலைப்படவில்லை...
கைநீட்டக் கால் நீட்டக் கூட இடமில்லாமல் சாமான்கள் நிரம்பிவிட்ட நடுவீட்டில் மேரி இரவில் கண்களைக் கொட்டவும் உறக்கம் பிடிக்காமல் விழித்திருக்கையில், கடல் அலைகளின் ஓசைமட்டுமே செவிகளில் விழுகிறது. ‘ஜானை நான் கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை... இந்துவாகவே இருக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொள்கிறாள். கண்ணீர் செவிகளில் வடிகிறது.
கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்லப் புறக்கடைப் பக்கம் வந்து கதவைத் திறக்கிறாள். கடலைப் பார்ப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது. கடலில் வானத்து நட்சத்திரங்களே பூப் பூவாய் விழுந்தாற் போன்று எத்தனை லாஞ்சிகள்! ஆனி ஆடி ஆவணி புரட்டாசி எல்லாம் இறால் காலமாயிற்றே? வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள லாஞ்சிகளனைத்தும் வந்துவிட்டிருக்கும்!
அப்பனும் பீற்றரும் போயிருக்கின்றனர். கடலிலிருந்து அத்தனை இறாலையும் வாரி வந்து பத்தே நாட்களில் கடனடைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தோடு அவர் கடலுக்குப் போகிறார். இத்தனை லாஞ்சிகளும் ‘போயா’ போட்டு, தங்கள் தட்டுப் போன்ற சாதனமுள்ள வலைகளை நீருக்குள் இறக்கியிருப்பார்கள். அது அடியோடு அள்ளிக் கொண்டு வந்துவிடுமாம். அப்பனுக்கு ஐம்பதுக்குக் குறைந்து பாடு வந்தால் அன்று முழுதும் வெறி பிடித்துக் கத்துகிறார்; சாராயத்தை மேலும் மேலும் குடிக்கிறார். கரையில் வட்டக்காரர் கொடுத்திருக்கும் பணத்துக்கு அமலோற்பவத்தின் மகன் தானியலே வந்துவிடுகிறானாம். வட்டக்காசு கறிக்கு மீன் இரண்டையும் வாங்கிக் கொள்வான். இவர்கள் பெரிய கோயிலைச் சார்ந்துவிட்டதால் வியாபாரி கட்ட வேண்டிய ‘அடிகாசு’ என்ற சில்லறை வரியை வேறு வாங்கிக் கொள்வான். லாஞ்சிக்காரர்களையும், அண்ணனையும் அப்பன் திட்டிக் கொட்டுவார். மறுநாளைக்கு மறுநாள் கல்யாணம். எனவே கல்யாணத்துக்கு முந்தைய நாளான இன்று நிறைய றால் பட வேண்டும், சாமி, முருகா... யேசு... கணபதி...
“ஏக்கி? புறக்கடக் கதவத் தொறந்திட்டு... ஏக்கி, நீ இம்மாட்டு வருந்தி வச்சது காணாதா? இன்னு காத்து கருப்பு புடிச்சி பேயாட்டணுமா? எவண்டி இந்நேரம் காத்திருக்கேண்ணா?”
ஆத்தா அவள் கையைப் பிடித்து இழுத்து முகத்தில் இடிக்கிறாள்.
“சாமி... ஐயோ... இல்லம்மா...”
“கத்தாதேடி... கத்தாத... போ உள்ளால! அன்னியே உன்னிய அடக்காத வாசிதா நீ துளுத்துப்போன. கண்ணான பயல வீட்டவிட்டு வெரட்டின. போட்டி...!”
இரவின் தணிந்த அந்த மோனத்தில், அவள் விம்மலைக் கடலலைகள் தாம் அமுக்க முயலுகின்றன.
காலையில் அலைகள் குதிக்கும் வண்ணம் காற்று வீசுகிறது. அப்பனுக்கு அன்று இறால் படவில்லை. வலையை எவனோ ‘லாஞ்சிக்காரக் கழுத மவன்’ காத்தாடியால் அறுத்துவிட்டான் என்று கத்துகிறார். அந்த அறுந்த வலையைக் காட்டி அவனிடம் இரண்டாயிரம் நஷ்ட ஈடு வாங்க வேண்டும் என்று பீற்றரிடம் சொல்லிக் குதிக்கிறார். லாஞ்சிக்காரன் இறாலைப் பிடித்துக் கொண்டு அவன் வலையில் பட்ட காரலும் களரும் இவருக்குக் கொடுக்க வந்தானாம். பிச்சை வேண்டியதில்லை என்று அவன் முகத்தில் விசிறுவது போல் கடலில் கொட்டி விட்டு வந்தாராம். வீடு நிறைய விருந்தாளிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அப்பன் யாரிடம் பேசாமல் ஆத்திரம் தீரக் குடித்துவிட்டுப் படுக்கிறார்.
மாலை நெருங்கும் நேரத்தில் வீடு நிறைய குஞ்சும் குழந்தைகளுமாகக் கலகலக்கின்றனர். ஆத்தாளின் ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட சோதரியர், சோதரர்கள் ஆலந்தலையிலிருந்தும், பெருமணலிலிருந்தும் வந்திருக்கின்றனர். தேங்காய் உடைத்துத் திருவுவதும், காபி காய்ச்சுவதும், காய் நறுக்குவதுமாகப் பெண்கள் பேசித் தீர்க்கின்றனர். நெடுநாட்கள் சென்று சந்திக்கும் உணர்ச்சிப் பொங்கல்களில் ஏசலும் பேசலும் இல்லாமலில்லை. புறக்கடை முற்றத்தில் கல் கூட்டிவைத்த அடுப்புகள் திகுதிகுவென்று எரிகின்றன. வெள்ளை உடை தயாராக வந்துவிட்டது. ‘நெட்’டைத் தூக்கி வர மணப்பெண்ணின் தோழிகளாகச் சித்தாத்தா மக்கள் ரீதாவும் விக்டோரியாவும் தங்களைத் தாங்களாகவே நியமனம் செய்து கொண்டுவிட்டனர்.
“பய கல்யாணத்துக்கு வார இல்லியா?” யாரோ அங்கலாய்ப்புடன் கேட்கிறார்.
“நீரு பேசாம இரிம். அவெ இந்துவா நிக்யாணேண்ணு அவ வேதனப்பட்டு நீறிட்டிருக்யா. நாளக்கோயில்ல வருவா இல்லிய, தாலிகெட்டி வூட்டுக்குக் கூட்டி வாரப்ப, மாப்பிள கால் கழுக மச்சான் வருவா. மோதிரம் போடுவாங்க இல்லை?” என்று கேட்ட மாமனின் பெண்சாதி பதில் கொடுக்கிறாள். யார் யாரோ புதிய முகங்கள்.
கலியாணச் சடங்கும் பூசையும் பத்துமணிக்கு மேல்தான் நடக்க இருக்கிறது. காலையில் இட்டிலியும் குருமாக் குழம்பும், பழமும் காப்பியுமாக எல்லாரும் பலகாரம் செய்தாலும், மணப்பெண்ணும், தாயும் தகப்பனும் எதுவும் உண்ணார். சமையலுக்கென்று அமலோற்பவத்தின் மேற்பார்வையில் வந்திருக்கும் ஆட்கள்தாம் பொறுப்பேற்றிருக்கின்றனர். அதிகாலையிலேயே மைக்செட்டுக்காரன் வந்தாலும், எட்டு மணிக்குத்தான் பாட்டுகளை ஒலிபரப்பத் தொடங்குகிறான். பாண்டு வாத்தியக்காரர் வேறு முழக்க வந்து விட்டனர்.
ரோசிதா, மணமகனின் தாய், மணமகன் தோழர்கள் எல்லோரும் பத்துமணி சுமாருக்குத்தான் ஒரு வண்டியில் வந்திறங்குகின்றனர். நசரேனும் அவன் மனைவியும் குழந்தைகளும் தனியாக வந்திருக்கின்றனர். மாமனுக்கு உடல் நலமில்லாததால் வரவில்லை. இரண்டு பிள்ளைகளும் மயினிமாரும் வந்திருக்கின்றனர். மணமகன் வாயிலில் பெண்ணழைக்க வரும் நேரத்தில், ஸிஸ்டர் மேனிகா, ஒரு ஜீப்பில் வந்திறங்குகிறாள். தாய் தகப்பனுக்கு முன் அவள் வருகையில் அவர்கள் தோத்திரம் சொல்லுகின்றனர்.
அப்பன் பட்டு உருமாலைக் கட்டிக் கொண்டு வெண்மையான சரிகை இழை வேட்டியும் சட்டையும் கையில் இடுக்கிக் கொண்ட தோல்பையுமாக எல்லோரையும் பார்த்து அளவளாவுகிறார்.
“சம்பந்ததாரியாயிட்டோம். எல்லாம் மாதா கிருபை. இந்தக் குடும்பத்தில் ரெண்டு கலியாணந் தட்டி மூணாவதா நாம சம்பந்ததாரியாறோம்...” என்று யேசம்மாளிடம் அப்பன் மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
“ஆமா? மரியாம்பய எண்ணாண்டு இப்பிடி அசிங்கியமா நடக்கான்? அவெம் பொஞ்சாதி, பெஞ்ஜமின், சந்தியாகு ஆரும் வார இல்ல?”
“எந்த மயிரா வந்தாயென்ன, வாராட்டி என்னிய. நா எம்மவக்கு ஃபஸ்ட்கிளாஸ் கலியாணம் முடிப்பே. கோயில் ஜோடிச்சிருக்கு” என்று இறும்பூது கொள்கிறார்.
மணப்பெண்ணை அலங்கரிக்கிறாள் பாலாள். அவள் இந்துவாகியிருந்தாலும் அடுத்த வீட்டுத் தோழியல்லவா? ‘நெட்’டணிவித்து முடிவில் வெண்மையான மலர் வளையத்தை வைக்கிறாள். அந்த மலர் வளையமே சுமையாக அழுத்துவது போல் மேரிக்குத் தோன்றுகிறது. எதிரே குழுமிய கூட்டத்தில் வெண்ணுடை கன்யாஸ்திரீ... லில்லி... லில்லி அக்காள்... கல்யாணமே வேண்டாம் என்று எவ்வளவு சுளுவாகச் சொல்லிவிட்டாள்!... கழுத்தில் கட்டம் போட்ட குட்டையை மடித்துக் காலரில் செருகிக் கொண்டு உயரமும் முரட்டுத்தனமாக வளர்ந்துவிட்ட பீற்றர் நிற்கிறான்... மேரிக்குக் கைகள் கசகசவென்று வேர்க்கின்றன. திடீரென்று நா வறண்டு போகிறது. தண்ணி... தண்ணி... என்று சைகை செய்கிறாள். ரமேசு சோடா உடைத்துக் கொண்டு வருகிறான். ஜயா விசுறுகிறாள். கோஷங்கள் காது செவிடாகிவிடும் போல் ஒலிக்கிறது. வெளியே மணலை வாரியடிக்கிறது காற்று. கேலிகளும் கிண்ணாரங்களும் செவிகளில் விழாத பாண்டு... ‘நெட்டும் வீலும்’ படபடக்கிறது; சேலைகள் பறக்கின்றன. கோயிலுக்குள் செல்கின்றனர்.
ஆத்தா... அந்த மண ஊர்வலத்தைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்லவில்லை. அவள் தன் முடியை எண்ணெய் தொட்டு வாரியிருக்கவில்லை; புதிய சேலை உடுத்தியிருக்கவில்லை. அவள் தெற்குத்தெரு திரும்பி கணபதி கோயிலின் வலப்புறம் பஞ்சாட்சரத்தின் வீட்டுப் படியில் சென்று நிற்கிறாள்.
“மாமி...? நீங்க கலியாணத்துக்குப் போக இல்லியா?” மருந்தகத்தில் வேலை செய்யும் அமுதாதான் கேட்டுக் கொண்டு வருகிறாள்.
“கணேசு புள்ள எங்க? புனிதம் எங்க? எம்பய மக்கா...!”
அவள் அழவில்லை. ஆனால் சொல்லெழும்பாத உணர்ச்சி நெஞ்சைப் பிடிகிறது.
“புனிதத்துக்கு ஒடம்பு சுகமில்ல மாமி. திருச்செந்தூர் ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போனா... மாமியும் போயிருக்கா...”
அவள் அந்த நடையிலேயே மண் குவியலைப் போல் உட்கார்ந்து விடுகிறாள். நெஞ்சம் வெடித்து வருகிறது.
மகள் ஒரு மணவாளனுடன் இணையும் காட்சியை அவள் பார்க்கவில்லை.
வண்ணான் நடை பாவாடை விரிக்கிறான்; குடிமகன் புதிய துணி உடுத்தி, குடைசுருட்டி குடைபாவாடை பிடித்து வருகிறான். பாண்டு முழங்குகிறது. வீட்டு முன்முற்றப் பந்தலில் கொலுகட்டி இருக்கிறார்கள்.
பெண்ணுக்கு ஆத்தாளெங்கே? பால் பழம் தந்து சந்தனம் பூசி மணமக்களை வரவேற்க அம்மையெங்கே? மருமகனின் காலைக்கழுவ, மச்சான்... ஒரு மரத்தில் தொழில் செய்த பிள்ளைகள்... ஒரே ஏனத்தில் சோறு கட்டிச் சென்று மச்சான் மாப்பிள்ளை என்று பழகிய பிள்ளைகள். அந்த மச்சான் கேலியும் பரிகாசமுமாகக் கால் கழுவவில்லை. ‘நீ மோதிரத்தை முன்னே வை; நான் கழுவுவேன்’ என்று சிரித்து மோதிக் கொள்ளும் சந்தோஷங்கள் இல்லை... அவன் மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான்... அவள் தலைக்குள் கடல் பிரளயமாகப் பொங்குவது போலிருக்கிறது.
கரும்பட்டுச் சேலையைப் போர்த்துக் கொண்டு காற்றுக்கு ஆடிக் குலுங்கும் இரவுக் கடல், பளீர் பளீரென்று மின்னும் ‘கவுர்’, வங்கக்கடலின் கீழ்க்கரைப் பகுதியின் நீண்ட ஓட்டமான மடையில் இறால் என்ற தங்கத்தை வாரி எடுக்க, நீ, நான் என்று கட்டுமரக்காரர்களும், வள்ளக்காரர்களும் விசைப்படகுக்காரர்களும் மொய்க்கின்றனர். எனக்கு எனக்கு என்ற பேராசையின் ஆவல் வெறியுடன் தசைகள் விம்மித்துடிக்கப் பரதவர்கள் கடலம்மையின் மடியைச் சுரண்டுவதற்குப் போட்டி இடுகின்றனர். அந்தப் போட்டியில் விசைப்படகுக்காரர்கள் இவர்களை முறியடித்துக் கடலைத் தமக்கே சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இயந்திர அரக்கன் இந்த ஏழைப்பிள்ளைகளுக்கு எதிரியாகிறான்.
அப்பன் பதினையாயிரம் ரூபாய்க்கடனை ஒரே மாசத்தில் அடைத்துவிடக் கனவு கண்டார். ஒருநாள் நூறு ரூபாய்க்கு இறால் கிடைத்தால், தொடர்ந்து ஏழெட்டு நாளைக்கு ஐந்தாறு ரூபாய்க்கு வருவதில்லை. வலை கிழிந்ததென்று சண்டை போட்டு வலையைக் காட்டி, குலசேகரப் பட்டணத்து லாஞ்சிக்காரனிடம் முந்நூறு ரூபாய் வாங்கி வந்தார். புதிய வலை வாங்கிச் செல்கிறார், இன்னும் கடன்பட்டு. இன்றில்லையேல் நாளையுண்டு, இந்த இருதயம் கடலுடன் மல்லாடப் பிறந்தவன்... றால்... நாலு கிலோவுக்குப் பட்டாலும் கூடப் போதுமே? றால்... சிங்கிறால், ஆழிப்பாரில் இருக்கு கல்றால்... ஆனால் இந்த ‘மிசின் படகு’க்காரர்கள் எந்நேரமும் பத்துநூறு பேராய்க் கடலைச் சுரண்டி எடுக்கலாமா? எல்லோரும் கடல்நாச்சியின் பிள்ளைகளானாலும் ஒரு வலிமை உள்ள பிள்ளை தான் கொழுத்து மற்றவரைப் பட்டினி போட அத்துவானத்தில் நிறுத்தலாமா?... அப்பனும், அப்பனைப் போன்று அந்தக் கரைகளில் தொழில் செய்யும் ஆயிரமாயிரம் பேரும் இந்த இயந்திர அரக்கனை எதிரிட்டுக் கொள்ளவும் இயலாமல், வாழவும் இயலாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சின்னாபின்னமாகின்றனர்.
பீற்றருக்குக் கண்கள் மிகக் கூர்மையான பார்வை உடையவை. நாக்குப் போன புதிதில், இவன் பள்ளிக்குச் சென்று ஏதோ பேச முயன்றபோது மற்ற பிள்ளைகள் கேலியாகச் சிரித்தார்கள். அது அந்த இளம் உள்ளத்தில் ஆழமாகத் தைத்துவிட்டது. அதற்குப் பிறகு இவன் பேசுவதில்லை. இவனுடைய பேசும் ஆற்றலனைத்தும், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அனைத்தும் மொழிகளாக வெளிவராததனால், உடல் தசைகளில் அவ்வாற்றல் குடிகொண்டாற் போல் வலிமை பெற்றிருக்கிறான். அப்பன் சுக்கானைப் பிடிப்பவராகவும் இவன் தண்டும் துடுப்பும் போட்டு மரத்தைச் செலுத்துபவனாகவும் இருந்தாலும், அவ்வப்போது மரத்தை இயக்கச் சாடைகாட்டி அப்பனைத் தொட்டிழுப்பான்.
ஒரு விசைப்படகு, கண்மண் தெரியாமல் அடியில் விசிறியைச் சுழலவிட்டுக் கொண்டு வருகிறது. இவர்களை வலை போட்டு ‘போயா’ போட்டிருக்கின்றான். அப்பன் “மரங்கெடக்கு, மரங்கெடக்கு!” என்று கத்தி வசை பாடுகிறார். ஆனால் இந்த இயந்திர அசுரனின் இரைச்சலில் கடற்காற்றின் கெக்கலியில், விசைப்படகுக்காரனுக்கு எதுவும் புரியவில்லை. மரத்தின் மீது நேராக ஏறிவிட்டான்.
பீற்றர் பயல், ஒதுங்கியவன் படகின் மேல் மூச்சடக்கி ஏறிக் குதிக்கிறான்.
“யார்றாவன்?”
இன்ஜின் ரூமிலிருந்து வரும் ஆள் யாராக இருந்தால் என்ன? அவன் மூக்கில் ஒரு குத்து, இடுப்பில் ஒரு குத்து...
“ஏன்லே மரத்தும் மேல வுழுதே? உனக்குக் கண்ணு மண்ணில்ல? வஞ்சமா தீக்கிற?...” என்று பேசாமல் பேசும் குத்துகள், உறங்குவதுபோல் அயர்ந்திருந்த வலைக்காரர்கள் திடுக்கிட்டு இவனைத் தாக்க எழுந்திருக்கின்றனர்.
பீற்றர் ஒருவனைக் காலை வாரித் தூக்கிக் கடலில் எறிய முற்படுகிறான். அடுத்த கணம் இவனே கடலில் விழுகிறான். கடலில் முக்குளிப்பவன் கட்டுமரத்தைப் பற்றிக் கொள்கிறான். கொம்புவாரிக்கல்லால் அவனைக் குத்தி அடிக்க முயலுமுன் படகு விரைந்து செல்கிறது.
அப்பனோ, மரத்தின் ஓரம் மோதப்பட்டாலும் ஒட்டிக் கொண்டு ஆற்றாமை அனைத்தும் சொற்களாகப் பொல பொலக்க இருட்டுக் கடலில் செய்வதறியாமல் நின்றிருக்கிறார். அன்றும் அவர்களுக்கு இறால் கிடைக்கவில்லை; வலைகளும் படகுக்காரனின் காற்றாடியில் கிழிந்து போயின. வீடு திரும்பியதும் குந்திக் கொண்டு ஏனம் கழுவும் ஆத்தாளைக் காலால் நெட்டிக் குப்புறவிழச் செய்கிறார்.
“ஏக்கி? போயிச் சாராயம் வாங்கிட்டு வா!”
குப்புற விழுந்தவள் எழுந்து குமுறுகிறாள். அவள்தான் எப்படியாகி விட்டாள்? முடிகொட்டி மண்டை தெரிய, கண்கள் குழிய, பழையதாக நைந்த அழுக்குச் சேலையில் எலும்பும் தோலுமாக நிற்கிறாள்.
இவன் குடித்துக் குடித்து உடலழுகிச் சீக்கிரத்தில் சாக வேண்டும் என்று நினைக்கிறாள். இவன் உயிருடன் இருக்கும் வரையிலும் அவளுக்கு விடுதலையுண்டோ?
சாராயத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறாள். அந்தப் பையன் மரத்தைத் தள்ளிவிட்டுக் குடிக்கப் போவான்... கடற்கரை நியதி இதுதான்...
மேரி கல்யாணமாகிச் சென்று ஒரு மாசத்துக்கு மேலாகி விட்டது. புனிதம் இம்முறை பெற்றுப் பிழைத்திருக்கிறாள். திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்தார்கள். மணியன் அவளை அங்கு அழைத்துச் சென்று குழந்தையையும் அவளையும் காட்டிய போது, அப்பன் பெண்ணையும் மருமகனையும் அழைத்துக் கொண்டு கோட்டாறு சவேரியார் கோயிலுக்குப் போனார். அவர்கள் வேறுபட்டு விட்டார்கள். ஆனால், ஜயா... அவளுக்கு ஒரு கல்யாணம் கட்ட வேண்டும். சின்னப் பையன் ரமேசு, சினிமாக் கம்பெனியில் சேருவதாகச் சொல்லி கல்யாண அமளியில் கலகலத்த காசில் நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு எங்கோ ஓடி விட்டது. இது புதிதா? அடுத்த வீட்டு எட்வின் பயல் போல் ஒருநாள் திரும்பி வருவானாக இருக்கும். ஊமைக்கு ஒரு கல்யாணம் கட்ட வேண்டும். அந்தக் குழந்தை... உமையாய்ப் போனவனல்லவா? அவர்களுக்காக ஆத்தா இந்த வீட்டிலிருக்கிறாள்.
சாராயத்தை ஊற்றிக் குடித்தவனுக்குச் சூர் பிடித்த வெறியில் நாவில் சொற்கள் புரளவில்லை. மனிதர்களை, மகனை, தொட்டு உறவாடி மகிழ்ந்த மனைவியைச் சொற்களால் குத்தி உதைத்துப் பந்தாட முடியவில்லை. வயிற்று வலி கொல்லுகிறது. இரும்பாக உறுதி பெற்றிருந்த தசைகள் கனிந்து பழமாகிப் பின் சத்தும் குறைந்த் தோலும் எலும்புமாக உடல் ஆட்டம் கண்டாலும், வாழ்க்கையைத் தொடங்கிய கோட்டிலேயே நின்று எதிர் நோக்கும் அடம் முறுகியிருக்கிறது. இயலாமையை அவரால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. அதற்குப் போதையை மாற்றாகக் கொள்கிறார். அது இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் குலைத்தாலும், அந்தக் காந்தல் தெரியாமலிருக்க மீண்டும் மீண்டும் குடிக்கிறார். அந்தப் போதையையும் மீறி ஆற்றாமை உறுத்தாமலிருக்க, வாழ்க்கையைப் பழைய நடைமுறையிலேயே வைத்திருக்கும் வெறி மீறி நிற்கிறது. அதனாலேயே அவர் கடற்கரை விட்டுப் போகாமல் சாமியாரின் வீட்டில் அடிபட்டிருக்கிறார்; இந்துவாக எல்லோரும் மாறினாலும் இவர் மாறாமல் நின்றிருக்கிறார்; மகளைக் கட்டிக் கொடுக்க இருந்த உடமைகளை இழந்திருக்கிறார். ஆனால் ஒரு பழைய நடைமுறையில் மண்ணரிப்பு ஏற்பட்டு விடுகிறது. கற்களை அடுக்கித்தான் வீடு கட்டுகின்றனர். நாடார் விளைக்குச் சென்று களிமண் சுமந்து வந்து தரைமெழுகி அடுப்புப் போட்டு, விளக்குப்பிரை குழித்து எந்தப் பெண்பிள்ளை உடல்நோக வேலை செய்கிறாள்? மாவரைக்க முதற்கொண்டு இயந்திரம் வந்துவிட்டது. மீன் ‘பிதிர்’களைப் போல் எத்தனையோ தினுசாக அச்சுகள் துணிகளில் கண்களைப் பறிக்க மின்னுகின்றன. இவர்கள் சிங்காரித்துக் கொண்டு சினிமா பார்க்கச் செல்கிறார்கள். நாகர்கோயிலுக்கு எப்போதோ ஒரு பஸ்... அதுவும் நடக்க வேண்டும். வண்டி கட்டிக் கொண்டுதான் மணப்பாட்டுச் சிலுவையார் கோயில் பெருநாளுக்குச் செல்வார்கள். பனங்காடும் முள்ளிப் புதர்களும் உடை மரங்களுமாக இருந்த கடற்கரையாகவா இந்நாளிருக்கிறது? எல்லாம்... மாறிவிட்டன. ‘மடி’கள் மாறி விட்டன. கும்பிடும் சாமி மாற்றம். படகு... விசைப்படகு... அவரால் தாளவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு புரளுகிறார்... தரையில் விழுந்து புரளுகிறார்.
“ஏக்கி என்னத்தையட்டீ குடுத்துக் கொல்லாமிண்டு ஊத்தித் தந்தே... மாதாவே...”
ஆத்தா அவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, மருமகளுக்கு - குழந்தைக்குப் பாலில்லை என்று, பிள்ளைச் சுறா அவித்துச் சாறெடுத்துக் கொடுக்க சட்டியைக் கழுவி அடுப்பில் போட்டிருக்கிறாள். தாய்ப்பால் பெருக, அந்தப் பிள்ளை வண்ணம் வைத்து நேர்த்தியாக வளர வேண்டும். முதற் குழந்தையும் பையன் கணேசு. இவனும் பையன் - முருகனென்று பெயரிட்டுக் கூப்பிடப் போகிறார்கள். அவனுக்கு மாதாவின் ஆசீர் இருக்கிறது. எல்லாத் தெய்வங்களின் ஆசீரும் இருக்கின்றன. கடலின் ஆசீரும் இருக்கிறது. அவன் குடிக்க மாட்டான்; குடித்துவிட்டுப் பெண்ணை ஏசமாட்டான் - அதுவும் அந்தப் பெண்ணரசியின் பாக்கியம்தான். அவள் இந்த மணவாளனைப் பெறப் புண்ணியம் செய்திருக்கிறாள்.
“ஏக்கி? நாஞ் சொல்லுதே, நீ என்னட்டி மெத்தனமா இருக்கியே? அம்மாண்டு ஒன்னக்க பவுரா வந்திற்று? ஏக்கி, திமிரு புடிச்சவளே, இங்கிய இப்பம் வாரியா இல்லியா?...” அப்பன் அருகிலிருக்கும் லோட்டாவை அவள் மீது விட்டெறிகிறார். அவள் அசையவில்லை.
அவருடைய கோபம் எல்லை மீறி விடுகிறது. கொம்பு சீவ வைத்திருக்கும் வெட்டுக்கத்தியை எடுத்து கொண்டு வருகிறார். “உன்னியக் கொண்ணு போட்டிருவ...” ஆத்தா பேய் போல் பாய்ந்து அந்த அரிவாளைப் பிடுங்குகிறாள்.
‘தூமை குடிச்சான்? எங்கண்ணான பயல வீட்டை விட்டுத் துரத்தின. இப்பம் என்னியக் கொல்ல வார! உன்ன நாயிமாருதிச் சாவுண்டு வெளியே இழுத்துக் கடாசுவ! நீ செத்திட்டேண்டு நா நிம்மதியாயிருப்பே; அடிதிண்ணு அடிதிண்ணு நா ஏஞ் சாவணும்? எம்புள்ள - அவெ ஆண்டவந் தந்த மணி, நீ வீட்டவித்து வலையவித்து அந்தப் பொட்டப் பொண்ணு மனசக் கலங்க அடிச்சி என்னியெல்லாம் செஞ்சு போட்ட!...’
மனதாலும் உடலாலும் நோவும் நொம்பரமும் பட்டுப் பொறுத்துப் பொறுத்து நீறாகக் குமுங்கியவள், இன்று சீறுகிறாள். அவனைக் கைப்பிடித்த நாள் தொட்டு அடங்கிக் கிடந்த ஆற்றாமை பொங்கி வருகிறது.
அப்பனால் இப்போது எழும்பிக் குதிக்க இயலாமல் வயிற்றில் நாகமாய்ச் சுருண்டு எழும்பும் நோவு கொல்லுகிறது. குடலைக் குதறிக் காந்தசெய்யும் அக்கினித் திராவக நோவு அவரைக் கீழே தள்ளுகிறது. விழுந்தவர் வாயிலிருந்து செம்பட்டுத் துணி பிரிந்து நாலியாக வருவது போல் நூலிழைகளாக இரத்தம்... குருதிச் சிவப்பைக் கண்டதும் ஆத்தா நடுநடுங்கி விடுகிறாள். ஜெயா கணேசுவைப் பார்த்துக் கொள்ளப் போயிருக்கிறாள். வாசலுக்கு ஓடி வருகிறாள். வெயில் வானில் நீலம் துலக்கிக் கொண்டு உக்கிரமாகக் காய ஏறும் நேரம்.
“ஏ மக்கா... பாலாப் பொண்ணே... மாம நெத்தம் கக்கிவுழுந்திற்றா. ஓடியாங்கடீ...”
காக்கை ஒன்று கூரை விளிம்பிலிருந்து காள் காளென்று கத்துகிறது. அதற்குள் அவருடைய இரத்தம் தெரியும் உதட்டில் ஈ வந்து குந்துகிறது. அவரைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருக்கிறது. யார் யாரோ உள்ளே ஓடி வருகின்றனர்.
“மூச்சிருக்கு, விசிறி கொண்டாங்க... தண்ணி தண்ணியத் தெளியிங்க...!”
அவரைத் தூக்கிக் கட்டிலில் விடுகின்றனர்.
ஆத்தாளுக்கு உலகமே பூச்சக்கரக் குடையாக, இரத்த நாளிகளுடன் செம்பருத்திப் பூப்போல் சுழலுவதுபோல் தோன்றுகிறது. மருமகளிருக்கும் சுந்தரத்தின் வீட்டுக்கு ஓடுகிறாள். அவன் அப்போதுதான் தொழில் முடிந்து வீடு திரும்பியிருக்கிறான்.
“மணி... அவ அப்பச்சி நெத்தமாக் கக்கி வுழுந்திற்றா...” பிள்ளை பெற்றவள் வாயிலுக்கு ஓடி வருகிறாள். ஜயா கணேசுவுக்கு எண்ணெய் முழுக்காட்டிக் கொண்டிருக்கிறாள்.
சித்தாத்தா அடுத்த வீட்டுப்பக்கம் சென்று, “அமுதா...? அமுதா?” என்று கூவுகிறாள். மருந்தகத்தில் டாக்டர் மாலையில்தான் வருவார். அவள் தன் மருத்துவ அறிவுடன் அவரைப் பார்க்க விரைந்து வருகிறாள். புதிதாகக் கட்டப் பெற்றிருக்கும் ஆஸ்பத்திரிக்குப் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு டாக்டர் வந்து மேட்டுத் தெருவில் குடியேறி இருக்கிறார். வந்து நாலைந்து நாட்களே ஆகின்றன. அவரைத் தேடிப் போகச் சொல்கிறாள். வாயைத் துடைத்து முகத்தைத் துடைத்து அவரருகில் அமர்ந்து அமுதா யாரும் எதுவும் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.
“இதொண்ணும் சீக்கில்ல. இதொரு ஏவல்... இந்துக்கார மந்திரவாதி வச்சிருக்கியா, முள்ள முள்ளாலத்தா எடுக்கணும். கூடங்கொளத்தில ஒரு தொள்ளாளி இருக்கா - அவ கழிப்புக் கழிச்சா எப்பேர்க்கொத்த ஏவலும் நிக்க ஏலாது” என்று கண்களை உருட்டி, முகத்தைச் சுழற்றி, கத்தி மீசைக்கிடையே சிவந்த நாவிலிருந்து வழியும் வெற்றிலைச் சாற்றை மணலில் பீச்சிவிட்டுக் கருத்துத் தெரிவிக்கிறான் மொடுதவம்.
“இவெ அந்தப் பக்கம் போயிட்டாண்டு கெருவில எதோ ஏவிரிக்கியா. அந்தோணியாருக்கு அசனம் நேந்துக்குங்க மயினி, மச்சானுக்குப் பொட்டுனுவிட்டுப் போவும்...” என்று அறிவுரை நல்குபவர் ஜெபமாலையான்.
ஆத்தா, பிள்ளைச்சுறா அடுப்பில் நீர் வற்றித் தீயும் வாசனையையும் புரிந்து கொள்ள இயலாமல் சிலையாக நிற்கிறாள்.
இருதயராஜின் வாழ்வில் கடல் மேல் செல்லும் அத்தியாயம் முடிந்துவிட்டது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனக முடியாமல் முனகுகிறார். சில சமயங்களில் புறக்கடை வாயிற்படியில் அமர்ந்து கடலையும் கடற்கரைக் காட்சிகளையும் ஆற்றாமையுடன் பார்க்கிறார். குடிப்பதற்கு ஒரு பொட்டுச் சாராயம் கிடையாது என்று கட்டிப்போட்டு விட்டார்கள். உள்ளத்தினுள்ளே ஒரு துடிப்பு மிகுந்த நாவாய் ஆற்றாமைகளை வசைகளாகப் பொழிந்து கொட்டிக் கொண்டிருந்த எதிர்ப்புணர்வு உயிரிழந்து விட்டது. அவர் பார்வை சில சமயங்களில் கடலையும் தாண்டிச் சூனியத்தில் நிலைக்கிறது. கட்டுமரங்களும் பாய்த்தோணிகளும் பாயில்லா விசைப்படகுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடலில் வலை வைக்கும் காட்சிகளைக் கண் முன் பார்ப்பது போல் சில சமயங்களில் உதடுகள் கோணக்கோண முணமுணக்கிறார். வீட்டையும் தொழில் சாதனங்களையும் பணயம் வைத்துத் தோற்றுவிட்ட குற்ற உணர்வில் சில சமயங்களில் கண்ணீர் வடிகிறது. துடைக்கக் கைவராமல் அமர்ந்திருக்கிறார். பீற்றருடன் இப்போது எட்வினின் மாமன் மகன் மான்யுவல் கூலிமடியாகத் தொழில் செய்கிறான்.
அன்றாடம் அவன் தொழிலுக்குச் செல்கையில் அப்பன், “மாதாவே, இன்று நிறையப் படி அருளும்... கணபதி, முருகா, உம்மையும் சேவிக்கிறேன்...” என்று மனசோடு வேண்டுதல்கள் செய்து கொள்கிறார். இரவு உறக்கமே வருவதில்லை.
“ஏக்கி, கதரினாளே, உள்ளுவியாட்டீ? அந்த டாக்கிட்டர்... எதோ மாத்திர கொடுத்தாருண்ணு அமலிப் பொண்ணு குடுத்தாளே, ரொம்ப நோக்காடாயிருக்குட்டீ... அது குடு...” என்று கெஞ்சுகிறார்.
ஆத்தா கதிரவனின் முன் பனியாக உருகிப் போகிறாள்.
“சுக்குக் கருப்பட்டி போட்டு வெந்நி எதமா வச்சித் தரட்டுமா?” என்று பரிவோடு கேட்டு, தொட்டாலே உள் நோக்காடு அழன்று நோவைப் பயங்கரமாக உசுப்பி விடுகிறதென்று கூக்குரலிட்டாலும் வயிற்றை இதமாகத் தொட்டுத் தடவுகிறாள்.
நோவென்று சொல்லவே பிடிக்காத ஜீவன். அவளுக்கு நினைவு தெரிந்து, முன்பு சில நாட்கள் காய்ச்சல் வந்து படுத்த போதுதான் முடங்கி இருந்தார். கடலுக்குப் போகாத நாட்களை வீண் நாட்களாகக் கருதும் ஜீவன்... சுருண்டு அணையும் தருவாயில் மங்கிக் கிடக்கிறார்.
“கதரினாளே...! ஏக்கி...!”
“இங்கத்தானிருக்கே...”
அவளுடைய கை இருட்டில் அவள் முகத்தில் படிகிறது. அவளோடு எத்தனை வருஷ வாழ்க்கை தொடர்ந்து சென்றிருக்கிறது...? மணவாழ்வின் வெள்ளி விழாவைக் கொண்டாட வேண்டுமென்று கனவு கண்டதை எல்லாம் நெஞ்சம் எண்ணிப் பார்க்கிறது.
“கதரினாளே, நா மண்ணோடு போயிட்டப் பொறவு, எனக்காவ மனஸ்தாவப்படுவியா...ட்டீ...!”
“இப்பம் இதல்லா என்ன பேச்சு... நாதா மொதல்ல மண்ணுக்குப் போவ. பாத்திட்டே இரிம்...”
“நீ இரிக்கணம்... ஒன்னால ஒதவியுண்டு. ஜயாளுக்குக் கலியாணம் கட்டணும். ஊமைப்பய்யனுக்கும் ஒரு பொண்ணு கட்டி மவெ பிறக்கணும். ஏக்கி, அந்தப்பய அவன வாரச் சொல்லுட்டீ... இந்த வீடு நெரச்சி எம்புள்ளங்க, எம் புள்ளங்கோட புள்ளங்க எல்லாரும் இருப்பானிருந்தே. ஆருமில்லாம போயிட்டா. நா... ஆருமில்லாம தனிச்சி இருட்டில வழி நடக்கே...”
அப்பனின் கண்ணீரை ஆத்தா துடைக்கிறாள்.
வாசலில் கொடி மரத்தில் பட்டுக் கொடி ஏறுகிறது. பெரிய கோயில் திருநாள். ஊர் முழுதும் வண்ண வண்ணங்களாய் மக்கள் நடமாடுகின்றனர். காந்த விளக்குகளை வைத்துக் கொண்டு ஏதேதோ பொருள்களைப் பளபளப்பும் மினுமினுப்புமாக வியாபாரம் செய்யும் கோலாகலமான கடைகள். ஜெயாளின் கையைப் பற்றிக் கொண்டு திருவிழாக் கடைகளைப் பார்க்க நடக்கிறார். ஆனால் கோயில் முன் கெபி வரையிலும் கூட நடக்க முடியவில்லை. பஸ்ஸில்தான் எத்தனை கூட்டம்? இளவட்டங்கள் மிதிபலகையிலும் சன்னல்களிலும் தொத்திக் கொண்டு போகின்றனர். வலை நிறைய வாரிவரும் மீன் கூட்டங்களைப் போல் மனிதர்கள்...
ஜான் இறால் வண்டியில் மேரியைக் கூட்டிக் கொண்டு வந்து இறங்குகிறான். ஒரு சுற்றுப் பருத்திருக்கிறாள் மேரி.
“திருநாளுக்கு இருக்கட்டும்” என்று விட்டுவிட்டுப் போகிறான். அவள் புறக்கடையில் சென்று சுழற்றிச் சுழற்றி வாந்தி எடுக்கிறாள். கடற்கரையின் வாரிசுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
“அப்பச்சி நோவாப் படுத்திருக்காண்ணு ஏஞ் சொல்லி அனுப்பல...?” என்று கேட்கிறாள்.
“உம் புருசன் இங்க வந்து ஒருநா விசாரிச்சானா...?” என்று ஆத்தா சீறுகிறாள்.
மாதா சுரூபம் சப்பரத்தில் வீதிவலம் வருகிறது. வாணங்களும் வாத்திய கோஷங்களும் அதிர்வெடிகளுமாக முழங்குகின்றன.
மொடுதவம் ஆமை திருப்பினானாம். வக்கட்டாமை.
சுகமான ஆணம் வைத்திருக்கிறாள்.
சோறும், ஆமை - வார் சூப்பும் ஆத்தா வைத்துக் கொடுக்கிறாள். அவரால் ஒருவாய் கூட உண்ண முடியவில்லை.
புனிதம் கைக் குழந்தையைக் கொண்டு வந்து அவர் மடியில் வைக்கிறாள்.
“மாமா சேவிக்கிறேன்?” என்று நெற்றி நிலத்தில் தோய இந்துவாகப் பணிகிறாள், ஆசீர் வேண்டுகிறாள்.
அந்த நாட்களில் மரியான் பகல், கோயிலுக்கு அழைத்துச் சென்றால் உயர்ந்த மாடத்திலிருந்து புனித நீர் எடுத்து நெற்றிக்கு வைத்துக் கொள்ள தூக்கிக் காட்டச் சொல்வான். விரலால் நீரெடுத்துத் தங்கச்சியின் நெற்றியில் சிலுவை இட்டு, “ஆண்டவன் ஏசு கிறீஸ்து மண்ணிலே பிறந்து...” என்று சாமி மாதிரியே பேசுவான். அப்போது அவனை அணைத்து முத்தம் வைப்பார். எவ்வளவு மாறுதல்?
சாமியென்பதுதான் என்ன, கடலின் ஓலத்தில், உயிரைப் பணயம் வைத்துச் செல்கையில் ஆண்டவனே என்று பற்றிக் கொள்கிறார்கள். முருகா, மாதா, கடல் நாச்சி... எல்லாம் ஒண்ணு தானா?
பூங்குழந்தையின் தொட்டுணர்வில் உடல் சிலிர்க்கிறது. முத்தம் வைக்கிறார். கைகளால் உயரத் தூக்கி.
மானுவல் கோட்மாலைக் கொண்டு வந்து மணலில் போடுகிறான். “எம்பிட்டுலே...?”
“றாலில்லை. களர், அயிரம் பதினெட்டு...”
“ஒரு வலையில கூட றால் படல...?”
பதினெட்டில் பத்துக் கொன்று பொதுஃபண்ட்... வட்டக்காரன் வரி ஆறிலொன்று... ஏலக்காரன் காசு...
“கதரினாளே...?”
“இங்கிய...”
மாதாவே! இது சோதனையா?
“நொடிக்கு நூறு தரம் அப்பச்சி கதரினாளக் கூப்பிடுது. இப்பம் ரொம்பக் காதல்!” என்று சிரிக்கிறாள் மேரி.
“பொதுமை எல சுரூபத்துப் பாதத்தில வச்செடுத்து மரத்துக்கொங்கயிலே கட்டுலே. அல்லாட்ட கணவதி மேல மாலை போட்டிருந்தா சாமிட்ட கேட்டு வாங்கி மரத்துக் கொங்கையில கட்டுலே...” என்று றால் படுவதற்கானதொரு வழியைச் சொல்லுகிறார்.
“கூடங்கொளத்து அந்தத் தொள்ளாளி ரெண்டு ரூவா குடுத்தா எதோ எழுத்தெழுதிக் காயிதத்தில தாராராம். அத்த வச்சிட்டா நல்ல பாடு இருக்கிண்ணும் சொன்னானுவ. பத்து நூறுரூவாக்கி மீன் படுதுண்ணா ரெண்டு ரூவா பிரமாதமா?...”
மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்க்கிறார். கோயிலுக்குச் சென்று மரத்தில் தெளிக்க மந்திர நீர் வாங்கி வரவேண்டும் என்று அவா உந்தினாலும் ஓர் அடியும் நிலத்தில் எடுத்து வைக்க முடியவில்லை. மழைக்காலம் துவங்கிவிட்டது. கடலின் மேல் சென்று வலையிழுக்கத் தெம்பு குறைந்தாலும் முதிய தலைமுறைகளும் இளைய தலைமுறைகளும் மரத்தைத் தள்ளுவதற்கும் கரையேற்றுவதற்கும் மீன் தட்டுவதற்கும் உதவிகள் செய்வார்கள். தம்மால் எதுவுமே செய்ய இயலவில்லையே என்று வருந்துகிறார். பல்லி முட்டைபோல் டாக்டர் கொடுத்திருக்கும் மாத்திரையைச் சாப்பிடாமல் உறக்கமே பிடிக்கவில்லை. இரவெல்லாம் விழிப்பு, விடியற்காலையில் பையன் தொழிலுக்குப் போகும்போது அர்த்தமில்லாத அச்சங்கள் அவரைக் கவ்விக் கொள்கின்றன.
“லாஞ்சிக்கார மரத்தும் மேல ஏத்தி காத்தாடியால ஒடம்பச் சீவிடப் போறா. செக்கிள் தொழில் போதும்லே...”
பீற்றர் தண்ணீர், சோற்றேனம், மிதப்புக் கட்டை எல்லாவற்றையும் சுமந்து செல்கையில் அவனைப் பற்றி முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
“முருகா...! மீன்படாத நாட்களில், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த நாட்களிலும் மிதப்பாவை வீசிப் போடுகையில், “திருச்செந்தூர் மச்சானுக்கு?” என்றுதான் சொல்லுவார்கள். முருகன் அவர்கள் இனத்தில் பெண்ணெடுத்த மச்சானல்லவா?”
சாமியெல்லாம் மனிதனைப் போல்தானென்று சொல்கிறார்கள். ஆனால் மனிதனுக்குள்ள சாமியுமிருக்கிறது; மிருகமும் இருக்கிறது. மிருகமாயிருந்து தெம்பெல்லாம் போன பிறகுதான் மனிதன் மிருகத்துக்கு மேல் என்று தெரிகிறது.
மழை அடித்துக் கொட்டுகிறது. நடுவீடு ஒன்றுதான் பத்திரமாக இருக்கிறது. நாடார் குடியிலிருந்து சொர்ணத்தாச்சி பாம்படமும் காதுமாகப் பால் கொண்டு வந்து ஊற்றுகிறாள். அவருக்குத்தான். காய்ச்சிக் கருப்பட்டி போட்டுக் குடிக்கச் சொல்லியிருக்கிறார், டாக்டர். ஆத்தா கருப்பட்டி வாங்கக் கடைக்குச் சென்றபோது கணேசு அவளுடன் ஓடி வந்து விடுகிறான். புனிதம் நாற்தோறும் மாலையில் மாமனுக்கு ஏதேனும் நாவுக்கு ருசிக்கப் பழமோ பணியாரமோ கொண்டு வருகிறாள். இப்போது கணேசு, ஆத்தா சுள்ளியைப் போட்டுப் பாலைக் காய்ச்சுமுன் அருகில் அமர்ந்து ‘எனக்கு...? எனக்கு...?’ என்று ‘ரிஜிஸ்தர்’ செய்து கொள்ளுகிறான். பாலை ஆற்றிக் கருப்பட்டிச்சில்லைப் போட்டுக் கலக்கி ஒரு சிறு தம்ளரில் அவனுக்கு ஊற்றித் தந்துவிட்டு லோட்டாவைப் பாட்டனுக்குக் கொண்டு வருகிறாள். பாட்டன் எழுந்து பாலைப் பார்க்கு முன் பயல் தன் தம்ளரைக் குடித்து முடித்துவிட்டு “இன்னும்... இன்னு...” என்று ஓடி வருகிறான்.
பாட்டி ஒரே வாய் ஊற்றிவிட்டு, “ஏக்கி, ஜயா, இவன அந்தால தூக்கிட்டுப்போ. அப்பெ ஒருவாய் பால் குடிக்க விடமாட்டா... அந்த ஆச்சி, தங்கம் கணக்கில் பால் அளக்கா... எந்திரிச்சி இதக் குடிச்சிக்கிங்க. வவுத்தில் ஒண்ணில்லேண்ணா காந்தல் நெம்பப் புரட்டும்...”
ஜயா பையனைத் தூக்க வருகிறாள். ஆனால் அவன் அசைகிறானா? பாட்டியிடம் தம்ளரும் கையுமாக ஒட்டிக் கொண்டு லோட்டா பாலை விடச்சொல்கிறான். பாட்டன் அந்த இளங்குறுத்தை வெளுத்துச் சுருங்கிக் காய்ந்த கையினால் பற்றுகிறார். புதிய தளிர், சூடுள்ள இரத்தம் பாய்ந்து கடல் புறத்தை உயிருடன் வைக்க இருக்கும் சந்ததி.
“அவெ ஒங்கக்க ஒருவாய் பாலில்லாம குடிச்சிப் போடுவா. நீங்க ஒருவா முழுங்கிக்குமுன்ன மடுக்கு முடுக்குண்ணு குடிச்சிடுவா. அவெக்கு நா இட்டிலி மாவாட்டி வச்சிருக்க, சுட்டுத்தார. பாலு, நீங்க குடிச்சிக்கிங்க...” என்று பாட்டி கூறினாலும் பாட்டன் விடவில்லை.
“அவெ குடிச்சா, நா குடிச்சாப்பல...” அவன் கைத் தம்ளரில் லோட்டாவைச் சரித்துப் பாலை ஊற்றுகிறார். அவன் குடிப்பதை, கன்னங்கள் உப்ப தம்ளரைக் கவிழ்த்துக் கொண்டு மொடுக்மொடுக்கென்று குடிப்பதை ஆர்வத்துடன் பார்க்கிறார். குண்டு முகம், மருமகளைப் போல். அவள் நல்ல பெண். பிள்ளையாகப் பெற்று, வாழவைக்கிறாள்.
“என்னம்ப்பு - நீங்க குடியும்... ஏலே, பாட்டா பாலு குடிக்கட்டும்லே, பாட்டா, நீங்க குடியுமிண்ணு சொல்லு...”
பாட்டி சொல்லிக் கொடுப்பதை ஏற்க அவனுக்கு விருப்பமில்லை. போலியாகத் தன் ஆசைகளை மறைத்துக் கொண்டு பேசும் பண்பு அவனை இன்னும் தொடவில்லையே?
“இவெ எப்படிக் காலயில இங்க வந்தா?...”
“கருப்பட்டி இல்ல, கடதொறக்க இல்ல. அங்க போனம். புடிச்சிட்டான்” என்றுரைக்கிறாள் அவள்.
கடை திறக்கவில்லை என்பது பொய்... அவர் அதை ஊகிக்க மாட்டாரா? கருப்பட்டி வாங்கக் கையில் துட்டு இல்லை.
“இவெப்ப எப்பம் வாரான்?”
“கோயில் திருநாளுக்கு முன்ன ஒருநா வந்திற்று, புள்ளயப் பாத்திட்டு, ராவோட வாழத் தோட்டத்துல வேலையிருக்கிண்ணு போயிட்டானாம். மெனக்கி நாள்ளல்லா அங்க போயிடறா. செலவுப்பணம் மாட்டும் ஆல்பர்ட் பய வந்தா கொண்டாரா. அவதா முப்பது நாப்பதுண்டு செலவுக்குக் குடுக்கா, மாம மருந்து மாத்திரய்க்கு நீங்க பணங்குடுக்காண்ட மிண்ணா...”
“நல்ல பொண்ணு. குணமுள்ளவ.”
“அந்தப் பொண்ணு மேனிய அகுஸ்தீனுக்கே கெட்டிச் சிரிந்தா இம்மாட்டு வட்டக்காசு கொடுக்காண்டாம். கூலி மடி போலச் சாவ வேண்டா...” என்று அவர் சொல்லிக் கொள்கிறார்.
“ஜான் பயல வூட்டுக்கு வா வாண்ணு வாராக்காட்டி கல்யாண ஆசயப்போட்டவ நாந்தா அந்தச் சிறுக்கி, திருநாளுக்கு வந்தவ, அப்பச்சி நமக்காவத்தானே கடம்பட்டுப் போனாருண்ணில்லாம, சீலையெடுக்கல, பலகாரம் பண்ணல, அதெல்லாம் செய்யாக்காட்டி மாமியா ஏசுவாண்ணு சொன்னா, கழுதச்சிறுக்கி, அப்பச்சிக்கி ஒரு கா ரூபாக்கிக் கருப்பட்டி மிட்டாய் வாங்கியாறத் தோணல. அவெ, மயினர் கணக்க, வண்டியக் கொண்டாந்து நிறுத்திட்டு இவள வாரச் சொல்லி ஏத்திட்டுப் போறா, மாமா எப்படியிருக்கீயிண்ணு கேட்டானா? நன்னியத்தவ... நசரேன் தா கொணமுள்ளவ...”
மனம் எதிலெல்லாமோ விழுந்து கொட்டுகிறது.
அன்றொரு நாள் பிரிந்து போவென்று சொன்ன பிறகு மரியானை அங்கே அப்பன் பார்க்கவேயில்லை. இப்போது, அவன் இந்த வீட்டுக்கு வரவேண்டுமென்று ஏங்கி மனம் அழுகிறது. ஆனால் அதை வெளியிட அவருக்குத் தகுதி இல்லை. உடம்பில் சூடும் சொரணையுமுள்ள பயல், அப்பனானால் என்ன, யாரானால் என்ன, அப்படித்தானிருப்பான்... அவன்... இருதயராஜின் மகனல்லவா? இந்த எண்ணத்தில் நெஞ்சு பெருமிதம் கொள்கிறது.
கடற்கரை ஓரத்து ஊர்களிலுள்ள மரக்காரர்களும் வள்ளக்காரர்களும் ஆங்காங்கு கூடிக்கூடிப் புகை கிளப்புகின்றனர். மடைகளில் உள்ள இறால்களெல்லாம் அவர்களுக்கு எட்டாமல் லாஞ்சிக்காரர்கள் கொள்ளையடிக்கிறார்கள். தூத்துக்குடியில் இருப்பவனும் மன்னார் மடையில் தொழில் செய்பவனும் கொல்லத்தில் தொழில் செய்பவனும் இந்தக் கரைகளுக்கும் எதற்கு வரவேண்டும்?
“இவனுவளைத் தொலைக்க வேண்டும்!”
சீனுவாசன் சொன்னான்: “நம்மைப் போல் தொழில் செய்தவனுக்கில்ல கஷ்டம் தெரியும்? பஞ்சாயத்துலியும், சருக்காரிலும் இருப்பவனுவளுக்குக் கடல் தொழிலப்பத்தி என்ன தெரியும்? அவனுவகிட்ட நமக்கு நாயம் பெறக்காது. நாம புரட்சி பண்ணித்தா காட்டணும். எல்லா ஊரிலும் போயி இந்தச் சங்கதியச் சொல்லி நம்ம கட்சிய வலுவாக்குவோம்!”
“சவாசு மச்சான்” என்று சைகை காட்டி பீற்றர் கையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறான்.
“நம்ம வலையெல்லாம் கிளிச்சிப் போடுறானுவ! காத்தாடியச் சுழலவிட்டு அறுக்கிறானுவ! அந்த எரச்சல்ல மீனெல்லாம் ஓடிப் போவுது?”
“செறுக்கிமவனுவ, மடையம்புட்டும் வளர்ச்சி, றால் கூனிப் பையல்லாம் கலக்கிப் போடுறானுவ? மீனு எப்பிடிக் கவிச்சிப் பெருகும்?”
“அப்பமே நாம இந்த லாஞ்சிகளுக்கு எடமே குடுக்காம தடுத்திருக்கணும். நசரேன் மாம இங்கிய மொதல்ல வந்தப்பமே கொரல் எழுப்பி நிப்பாட்டிருக்கணும்!”
“பெஞ்ஜமின், ஆல்பர்ட்டு, இப்பம் மரியான், அல்லாம் துரோகிகளாயிட்டா. கொச்சிக்கரயல்லாம் றாலில்லாம துத்துட்டு இங்கேயும் நம்ம பாட்டில மண்ணடிக்க வந்திருக்கானுவ. நமக்கு ஒரு கிலோ றால் படுறதில்ல. அவனே அள்ளிட்டுப் பணக்காரனாவுறா. ஒழக்யாம நிழல்ல குந்தி சொகம் அனுபவிக்கிறவ லாஞ்சி வாங்கிவுட்டு பணத்துமேல பணஞ்சேக்குறா. தொழில் விருத்திக்கு வரணுண்ணா, சருக்காரு எல்லாரையும் ஒண்ணாப்பாக்குகணமில்ல? எல்லா லாஞ்சித் தொழிலையும் சருக்காரு வச்சிக்கட்டும். பாட்டுக்குத் தக்கின கூலி கொடுக்கட்டும்! மரத்தையும் வள்ளத்தையும் எடுத்துக்கட்டும்! நமக்கு எல்லாருக்கும் ஒருப்போல சம்பளம், போட்டு குடுக்கட்டும்! பாட்டுக்குத் தக்கின கூலி குடுக்கட்டும்!”
“சவாசு... சவாசு மாப்பிள...? நீதா எங்க தலவரு” என்று சூசை கூத்தாடுகிறான்.
“ஆனா, இந்த யோசன அவனுவளுக்குத் தெரியலியே? நாம பஞ்சாயத்துத் தலைவர் செல்லையாட்ட, சொன்னம்; லாஞ்சிக்கார பொழப்பில மண்ணைப் போடுறா. அவன வரவொட்டாம பண்ணணுமிண்ணு - அவரு எல்லாம் பெரட்டிடுவாண்ணாங்க. ஒண்ணுமில்ல. மீனவர் சங்கமின்னா, எல்லா ஊரிலும் அவனுவளும் இதுக்கு ஒண்ணுஞ் செய்யல. றால எடுத்திட்டு மத்தமீனச் சாவடிச்சிட்டுக் கடல்ல போடுறானுவ. அந்த நண்டுக உண்டு பெருத்துப் போவுது. நண்டு கொளுத்தா குண்டுல தாங்குமா? அதுங்க வலையிலபட்டு வலயக் கிளிச்சிக் குதறுதுண்ணோம்! மினிஸ்டர் வருவாறு. பேசுவோமிண்ணா, ஆரும் வார இல்ல. அதனால, அவனுவள இவனுவள நம்பினா நம்ம பொழப்பு இதிலும் மோசமாயிடும். அதுக்காவ நாம தா இப்பம் புரட்சி செஞ்சி, அவங்களுக்கு ஒரு பாடம் கல்பிக்கணும்...”
“ஆமா! ஆமா...!”
சீனிவாசனாகிவிட்ட எட்வின் தலைவனாகிவிட்டான். மீனைத் தட்டிவிட்டுப் பஸ்ஸில் ஏறி மணப்பாடு செல்கிறான். இவனுக்குப் பீற்றர் வலதுகை போலிருக்கிறான்; சூசை இடது கை. புதிய உற்சாகம் இந்தப் படை திரட்டலில் பெருகுகிறது. மணப்பாடு, ஆலந்தலை, அமலி, தாழை என்று தொழிலில் பாதிக்கப் பெற்றவரின் இதய ஒலிகளை எல்லாம் செவியேற்றுத் தெம்பு பெறுகின்றனர். பீற்றருக்கு வீட்டைப் பற்றிய கவனமே இப்போது இல்லை.
முன்பெல்லாம் கடற்கரை ஊர்களில் கிறிஸ்துமஸ் பெருநாள் ஒன்றுதான் வரும். இப்போது எல்லாக் கடைகளிலும் வெடிகளும் மத்தாப்பு வகைகளும் தீபாவளிக்கே முந்திக் கொண்டு வந்து விடுகின்றன. பட்டாசு ஒலியுடன் கணபதி கோயில் மணியும் ஓம் ஓம் ஓம் என்று முழங்குகிறது. பெரிய கோயில் திருப்பலிப் பூசை மணியின் நாதம் வேறு விதம். அதில் ஆழமும் கார்வையும் கலந்திருக்கும். இந்தக் கணபதி கோயில் மணி, பிள்ளைகளின் துருதுருப்பைப் போன்று கலகலக்கும் ஓசையைச் செவிகளில் நிரப்புகிறது. இங்கே இளம் பிள்ளைகள் தாமே புதிய சமயத்தார்.
அப்பன் உற்சாகமாக எதை எதையோ நினைத்துக் கொள்ள முயன்றாலும் நோவின் கடுமை அவரை ஆட்டிக் குலைக்கிறது. பல்லி முட்டை மாத்திரை இரண்டு மூன்று விழுங்க வேண்டியிருக்கிறது. அப்படியும் நோவு மறக்கவில்லை.
திடீரென்று நினைவு வருகிறது.
முன்பு திருச்செந்தூருக்குச் சென்றுதான் கணேசுவுக்கு மொட்டையடித்துக் காதுகுத்தி வந்தான் மரியான். அங்கே பன்னீர் இலையில் திருநீறு கொடுக்கிறார்கள். அதை வாங்கிச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும் என்று வாங்கி வந்தான். அவர் அப்போது அதைப் பொருட்படுத்தவில்லை.
“ஜயா... ஏக்கி? இங்கிய வாட்டீ?”
“என்னப்பச்சி?...”
“தீவாளிக்கி ஒன்னக்க அண்ணே வாரானாட்டீ?”
“ஆமா...? மயினி சொன்னா... வாருவாண்ணு...”
“திருச்செந்தூர் போயிக் கும்பிடுவால்ல?...” அவருக்குக் கூச்சமாக இருக்கிறது.
“சொல்லுங்கப்பச்சி? நீங்களும் வாரீங்களா திருச்செந்தூருக்கு? பஸ் இதா போயிட்டேயிருக்கு. போவலாம்...”
“இல்லேட்டி. என்னக்க, அங்க பன்னீரெலயில திருநீறு குடுப்பாங்கண்ணு சொல்லுவா. அது வகுத்து நோவாத்துமா; மின்னக்கூட ஒன்னக்க சாலமோன் மாம அப்பச்சியெல்லா முருவந்தேரிழுக்கப் போவா. அப்ப சொல்லுவா, பன்னீரெலத் திருநூறுண்ணு...”
“திருநீறுதானே...? நா வாத்தியாரிட்டச் சொல்லி வாங்கியாரச் சொல்றே...” என்று ஜயா உடனே செல்கிறாள்.
மறுநாட் காலையிலேயே குலசேகர வாத்தியார் கதர் ஜிப்பாவில் தொங்கும் பையுடன் வருகிறார்.
“சாமி, வாங்க... வாங்க... கும்பிடறேன்...” என்று ஆத்தா வரவேற்கும் குரல் கேட்டு இருதயம் நிமிர்ந்து பார்க்கிறார்.
குலசேகர வாத்தியார் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு பைக்குள் கைவிட்டு மூன்று இலைத்திருநீறு எடுத்துக் கொடுக்கிறார். ஆத்தா பணிந்து வாங்கிக் கொள்கிறாள்.
“ஜயா வந்து சொல்லிச்சி, ராவே போயி வாங்கி வந்த, புதிசு புதிசாவே வாங்கி வந்து தர்றேன். நம்பிக்கைதானம்மா மருந்துக்குமேல் குணம் காணும்?”
“ஓரோரு சமயம் பொறுக்க முடியாம போவுது சாமி, நெம்ப மனஸ்தாபப்படுதே...”
“சரியாப் போவும். இலையோடு அருந்தும். முருகா...!”
அவர் எழுந்து செல்கிறார். இந்துக்கள் வீடுகளில் அரிசி இடிக்கும் ஓசையும், பணியம் பன்தோல் என்று இனிப்புகள் செய்யும் வாசமும் காற்றோடு குலவுகின்றன.
ஜயா, கணேசுவை வைத்துக் கொள்ளும் சாக்கில் பஸ் வந்து நிற்குமிடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அண்ணன் கையில் புதிய பெட்டியுடன் இறங்கிச் செல்வதைக் கண்டதும் வீட்டுக்கு ஓடி வருகிறாள்.
“அம்மா... அண்ணெ வந்திட்டா... இப்பம் பொட்டியத் தூக்கிட்டுப் போறா...”
சொல்லிவிட்டு, கணேசுவுடன் அந்த வீட்டுக்கு விரைகிறாள். மணியன் உடல் இளைத்துக் கறுத்து உழைப்பு அதிகமாக இருப்பதைச் சொல்லாமல் சொல்லுகிறான். வந்ததும் வராததும் மனைவியிடம் சண்டை போடுகிறான். அவள் அவன் வராமலிருந்ததற்கு நிட்டூரப்பட்டுக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாளாம்.
“துணியொண்ணும் என்னக்க எடுக்கத் தெரியாது...! பொறவு நாவந்ததும் வராததும் நாகர்கோயிலுக்குப் போவலாம்பே. எல்லாம் திருச்செந்தூரிலியே எடுத்திட்டேன். தா ஆத்தாளுக்குச்சீல, இது ஜயாவுக்கு... இது ஒன்னக்க...”
நீலமும் பச்சையும் ரோஸுமாக நைலக்ஸ் சேலைகள், குழந்தைச் சட்டை, ஆப்பிள் திராட்சைப் பழங்கள், மத்தாப்பு, வெடிகள், கணேசுக்குத் துப்பாக்கி.
“அப்பச்சிக்கு ஒண்ணும் வாங்க இல்லியா?”
“அவெக்கு தீவாளிகும்பிடற பய தா வேணாமே? கிறிஸ்துமஸ் கும்பிடுற பய வாங்கித்தாரா... மருமவெ, மவ...”
“சும்மா பேசாதீம். அவரப் பாத்தா, பாவமாயிருக்கி. எல்லுந்தொலியுமாயிட்டாரு. நோக்காடு ரொம்ப...”
“அது அப்பமே தெரிஞ்சிருக்கணும். நாஞ்சோறுண்ண நேர இல்லாம தொழில் செய்யிற. ரவநேரம் தல சாய்க்காம மெனக்கிண்ணாக்கூட ஓடி ஓடித்தோட்டம் பாக்கப் போற. வாழ குலசாஞ்சிருக்கி. அது வெட்டுற வரைக்கும் காபந்து பண்ணணும். இவுர யாரு குடிச்சிக் குடிச்சிக் குடல அழுவ வச்சிக்கச் சொன்னா? அவெ அவெ செய்ததன் பலன் அவெ அவெ அனுபவிக்கா?”
“என்னியண்ணாலும் அப்பெ... ஆத்தா மனசு சங்கட்டப்பட்லியா? அன்னிக்கு மரத்துமேல லாஞ்சி ஏறிடிச்சிண்ணு சங்கட்டப் பட்டுக்கிட்டு வந்து வுழுந்தாரு. வாயில ரத்தமா வந்திற்று. ஆத்தா இங்கக்க ஓடிவந்தா. அமுதா போச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டாரு. வகுறெல்லாம் வெந்து போயிருச்சிண்ணு சொல்லுதா. காலுகுத்தி நிக்கவே பிரயாசமாயிருக்கு. இப்பம் குடிக்கிறதில்ல. ஆத்தாகூட சண்டையே போடுறதுமில்ல. ஏக்கி, கதரினாள கதரினாளாண்ணு கூட்ட மணியந்தா. பாவம் பீற்றர் கடலுக்குப் போறா. ஆனா ஒண்ணும் கட்டிவார இல்ல... அவெ வீட்டுக்குத் துட்டே ஒழுங்காவும் குடுக்கறதில்ல...”
எல்லா சங்கதிகளையும் புனிதா சொல்லுகிறாள். அவன் முகம் இறுகி உணர்ச்சியற்றுக் கிடக்கிறது.
“இனி அது என்னக்க வூடில்ல. ஆத்தா அப்பன விட்டு வாரதா இருந்தா தனி வூடுபாத்து வைக்கிற. இல்லியேண்ணா போவட்டும்!”
“நீரடிச்சி நீர் பிரியுமா? அப்பெ ஆத்தா தானே யாருண்ணாலுமா?” என்று புனிதம் அவன் மனதை மாற்ற முயலுகிறாள்.
“ஏக்கி, ஒன்னக்க சோலியப் பாத்திட்டுப்போ? என்னக்கப் புத்தி சொல்ல வராண்டாம்!”
கணபதி கோயிலில் வாழைக்கன்று தென்னங்குறுத்துத் தோரணங்கள் எல்லாம் கட்டிச் சிங்காரித்திருக்கின்றனர். தீபாலங்காரங்களும் செய்திருக்கின்றனர். கணபதிக்குத் தனி பூசை, அபிஷேகம் செய்யத் திருச்செந்தூரிலிருந்து குருக்கள் வந்திருக்கிறார். பெண்கள் எங்கிருந்தோ மருதோன்றி கொண்டு வந்து அரைத்துக் கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொள்கின்றனர். ஜயா கணேசுவைப் பார்த்துக் கொண்டு கோயிலில் தான் இருக்கிறாள்.
ஆத்தாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஜயா பீடி சுற்றிச் சேர்த்த பணம் ஒரு பதினைந்து ரூபாய்தான் டப்பியில் இருக்கிறது. வேறு காசு இல்லை. அதை எடுக்க வேண்டாம் என்று பார்க்கிறாள். பீற்றர் தொழிலுக்குப் போய்விட்டு வரவில்லை. வந்தாலும் அவன் ஒரு ரூபாயோ எட்டணாவோதான் தருகிறாள். அவனிடம் சண்டை போடவும் முடியவில்லை.
அவன் வந்திருக்கிறான். இங்கே வருவானா?... ஏதோ காரியமாகச் செல்வதுபோல் வாயிலில் சிறிது தூரம் நடந்துவிட்டுத் திரும்பிவிடுகிறாள். தானாகப் போவதா?... சே? தாய் மகனுக்குள் என்ன கௌரவம்...!
இருந்தாலும் மனம் இடம் கொடுக்கவில்லை. அடுப்படியில் வந்து படுக்கும் நாயை விரட்டுகிறாள். அது சோம்பல் மூரிக்கொண்டு கட்டிலுக்கடியில் சென்று படுக்கிறது. சோம்பேறிப் பெட்டைநாய்; இது எப்படியோ வந்து மீன் கழிப்பைத் தின்று வளர ஒட்டிக் கொள்கிறது.
“ஏக்கி, கதரினாள... ஜயா எங்கிய காணம்?...”
“தீவாளியில்லியா... மணி வந்திருக்காம் போல...”
அவளுக்குத் துயரம் நெஞ்சை அடைக்கிறது.
“நோவு ரொம்பக் கொல்லுதட்டீ. அந்தப் பல்லிமுட்ட மாத்திர வச்சிருக்கியா...?”
இது ஒரு சாக்காகிவிட்டது. அவள் வெட்கத்தை விட்டுப் படியிறங்கிச் செல்கிறாள். பஞ்சாட்சரத்தின் வீடும், சுந்தரத்தின் வீடும் அருகருகேதான் இருக்கின்றன. இடைவெளியில் வலைகள் ஏதும் விரித்திருக்கவில்லை. விருந்தினர், குழந்தைகள், வெடி என்று கலகலப்பாக இருக்கிறது. வாசல் தெளித்துக் கோலமிட்டு, நட்சத்திரக் காகிதத் தீபங்கள் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள்.
இவளைக் கண்டதும் கணேசு கையில் பழமும் கருப்பட்டி மிட்டாய் பிதுங்கும் வாயுடனும் வருகிறான்.
புனிதம் பார்த்துவிடுகிறாள்.
“வாங்க மாமி, ஏன் வாசல்ல நிற்கிறீங்க...? ஒங்கக்க வூடு!”
“நாணங்கெட்டுத்தா நா வார, மாம... நோவால ரொம்ப ஆராளிப்படுதா. அமுதா இல்லியா? டாக்கிட்டர் குடுத்திச்சிண்ணு பல்லி முட்டாயாட்டும் மாத்திர குடுப்பாளே, கேட்டு வாங்கிற்று வாண்ணு சொன்னா...”
“அமுதா அவ மாப்ளயோட திர்நேலி போயிருக்கியா. இதா இப்பம் வந்திருவா, என்னிய மாத்திர சொல்லும். அந்த ஆசுபத்திரி டாக்டர் மோட்டுத் தெருவில இருப்பாரு. வாங்கியாரலா...”
அப்போது மச்சிப்படியின் உச்சியில் அமர்ந்து மணி மடியில் பிள்ளையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறான்.
தாய் கீழிருந்து அசைப்பில் பார்த்துவிடுகிறாள். அவன் கைலி, அந்தச் சாயல், எல்லாமே கண்களில் பட்டதும் உள்ளத்தில் அலைமோதும் பாசம் பொங்கி வருகிறது. கண்களில் நீர் மல்குகிறது.
புனிதம் உடனே கீழே இருந்து அவனைப் பார்த்து, “இங்கிய வாங்க... என்னிய ஒசக்கப் போயி உக்காந்திட்டிங்க? ஆத்தா வந்திருக்கு பாருங்க... வாங்க” என்று மெல்லிய குரலில் கடிந்தாற் போன்று அழைக்கிறாள்.
இதற்கு மேல் அவனும் உட்கார்ந்திருக்க இயலாமல் இறங்கி வருகிறான். கையில் முருகனை வைத்திருக்கிறான். முடி எண்ணெய் விட்டு தொட்டு வாரியிருக்கவில்லை. பறந்து விழுகிறது.
“என்னிய...?”
எங்கோ பார்த்துக் கொண்டு அவன் கேட்கிறான்.
“எப்ப வந்தியலே...?”
“காலம...”
“புனிதா... இவெம் பாரு, ஒன்னுக்கிரிந்திட்டா. வேற துணி கொண்டு வந்து வாங்கிற்றுப் போ?”
மருமகள் வட்டத்தட்டில் சேலை ரவிக்கை, வெற்றிலை பாக்கு, மிட்டாய் பழம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வருகிறாள்.
மாமிக்கு அதைக் காண்கையில் ஆற்றாமை பொங்கி வெடிக்கிறது.
“இதெல்லாம் எதுக்குடீ எடுத்து வார? உன்னிட்ட பிச்ச கேக்க வந்தேண்ணா நெனச்சிட்ட? நா இதுக்கு வார இல்லட்டீ! பெத்த அப்பெ ஒரு சொல்லுத் தெறிச்சிட்டாண்டு பொஞ்சாதி வூட்ட வந்து பண்டியல் கொண்டாடுறாம் பாரு, போக்குக் கெட்டவெ, அவனப் பாத்து இந்தக் கேக்கணுமிண்டு வந்த... இவெ ரெண்டு பிள்ளயப் பெத்திருக்கா... அன்னாரு... சொல்லத் தெரியாம மனசில வச்சி மாஞ்சி போறா... ஆரும் இந்த ஒலவத்தில எம்மாண்டும் சீவிச்சிடறவ இல்ல...”
வார்த்தைகள் அலைக்கும் நீரிடையே பாறை முட்டுகளைப் போல் அந்தச் சோகத்தை விள்ளுகின்றன. அவள் விடுவிடென்று திரும்பிப் போய்விடுகிறாள். ஜயாவும் அவள் பின் செல்கிறாள். சிறிது நேரம் கடலும் ஓய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. புனிதா கையில் தட்டுடன் சிலையாக நிற்கிறாள். கணேசுதான், “பாட்டி போச்சி... பாட்டி...” என்று மழலை சிந்தி மௌனத் திரையை நீக்குகிறது.
“நாஞ்சொன்னே, நீங்க கேட்டீங்க இல்ல...” என்று கணவனிடம் குறை கூறுகிறாள் புனிதா.
“நீ என்னத்துக்காவ இத்தயெல்லா இப்ப கொண்டாந்த?...”
“பின்ன, நீங்க போவ இல்லன்னீங்க. நாங் கொண்டாந்தே...”
“இவங்க இஷ்டத்துக்கு நடக்கறப்ப நான் கேக்கக் கூடாது. இப்ப மட்டும் பய வரணுமோ? யாரக் கேட்டுட்டு அந்தக் கோயில்ல போயிக் குரிசு வரச்சிட்டாரு! யாரக் கேட்டுட்டு வீடு மரம் எல்லாம் பணயம் வச்சாங்க?”
“அதெல்லாம் காரியம் ஆன பிற்பாடு கேட்டு என்ன லாவம்? நீங்க அதொண்ணும் இப்ப கேக்கண்டா. இதெல்லா எடுத்திட்டுப் போய் வச்சி சேவியும். பெரியவங்க ஆசீர் வேணும். அப்பனப் பாத்தா ஒங்கக்கே மனசு எளகிப் போகும்!”
“அவரு பணயம் வச்சு வாங்கின கடம் நா ஏத்துக்க மாட்ட?...” பொங்கி விழுகிறான். மாலை குறுகுகிறது.
எண்ணெய் தொட்டு முடி வாரிக் கொள்கிறான். சட்டையைப் போட்டுக் கொண்டு, புனிதம் தரும் பையை வாங்கிக் கொள்கிறான். பிள்ளையார் கோயிலில் வாத்தியார் பஜனை சொல்லுகிறார். பிள்ளைகள் கூச்சல் போடுகின்றனர். எங்கோ வாணம் சீறும் ஒலி... ஈரக்காற்று சில்லென்று அடிக்கிறது. அவன் வாயில் விளக்கின் முன் பூச்சிகள் பறப்பதைப் பார்த்த வண்ணம் கதவைத் திறக்கிறான். முற்றத்தில் அடி வைக்கிறான். தாழ்வரைக் கதவை மெல்ல நீக்குகிறான். மின் விளக்கு இல்லை. மஞ்சளாகச் சிம்ணிதான் எரிகிறது. ஜயா எதோ துணி மடிப்பவள் அவனைப் பார்த்துவிட்டு உள்ளே குசினிக்குள் செல்கிறாள், அம்மையிடம் கூற. புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. கடல் அருகில் தெரிகிறது. இவர்கள் வீட்டில்தான் இவ்வாறு உள்ளிருந்து கடலைக் காணலாம். எட்வினின் வீட்டில்கூடச் சுவர் மறைக்கும். கடலுக்கு நேராக வாயில் கிடையாது.
கட்டிலின் மூலையில், அப்பச்சி கிழிந்த நாராக முடங்கி இருப்பதைப் பார்த்தவாறு அமருகிறான். ஆத்தா வருகிறாள். நிழலுருவமாகத்தான் தெரிகிறான்.
“கரன்ட் இல்லியா?... வெளக்கில்ல...?”
“...ஒறங்குறாப்போல இருந்திச்சி. ராவும் பகலுமா அல்லல்படுதா, முன்னக்க எப்பவும் இப்படி நொம்பரமில்லிய. அதனால வெளக்க அணச்சிட்டுப் போன...”
அவள் மகனின் முகத்தை நன்றாகப் பார்க்க இப்போது விளக்கைப் போடுகிறாள்.
எங்கோ ‘வீ...ஸ்’ என்று வாணம் சீறும் ஒலி...
“பீற்றர் எங்க...?”
“அவ தொழிலுக்குப் போயி வந்திற்று. சட்டயப் போட்டிட்டு எங்கியோ ஓடிப் போனா. துட்டும் தாரதில்ல, அவங்கிட்ட எதும் கேக்கறதுக்கில்லியா... சின்னப்பய, சினிமாண்ணு எங்கியோ தேசாந்தரம் ஓடிட்டா...”
அவன் அப்பனைப் பார்க்கிறான்.
வெளுத்துச் சூம்பி, கண்கள் இரு பொந்துகளாக... முற்றிலும் சப்பிய மாங்கொட்டையாக மண்டையும்... இவருடைய பிடிவாதமும் உறுதியும் முறுகிய அந்தப் பார்வை எங்கே?... அரைக் கண் மூடினாற்போல், சற்றே வாய் பிளந்த நிலையிலிருக்கும் அவரைப் பார்த்தவண்ணம் அவன் குரல் கொடுக்கிறான்.
“அப்போ...? அப்பச்சி...?” அனக்கமில்லை. ஓர் ஐயம் அம்பாய் அவனுள் சென்று கக்கலும் கரைசலுமாக உணர்ச்சியைப் பீறிட்டு வரக் குத்துகிறது.
“அப்பச்சீ...!”
அந்தக் கையைப் பற்றித் தூக்குகிறான். வலையிழுத்து, தண்டுகுத்தி, பொரிக்காஞ்சட்டியின் அடிப்பாகம் போன்று புரை புரையாகக் காய்த்த அந்தக் கை... அது துவண்டு விழுகிறது.
“அப்பச்சி... ஐயோ அப்பச்சி...! நா... நா வந்திருக்கே, அப்பா...” அவன் குரலுக்கு எதிரொலி கொடுப்பது போல் கடல் இரைகிறது; பட்டாசு வெடிக்கிறது. யாரோ பிள்ளைகள் கணபதி கோயில் மணியை இழுக்கின்றனர்.
‘போயிக்க லே... போயிக்க... இப்பமே போ! இந்த ஒடம்பில பலமிருக்கி’ என்று சொன்ன நா... அது கெலித்து விட்டது.
“அம்மா...! அப்பச்சியப்பாரே...?” என்று அவன் பெருங்குரலெடுத்துக் கூவுகிறான்.
ஆத்தா மூலையோடு உறைந்து போகிறாள்.
அன்று இரவு பீற்றர் வீடு வரவில்லை.
அவனும் அவனைப் போன்று கட்டுமரங்களிலும், பாய்த்தோணிகளிலும் தொழில் செய்யக் கடலில் பாடுபடுகையில், புற்றீசல் போல் வந்து படகுகளில் இறால் வேட்டையாடும் விசைப்படகுக்காரர்களுடன் போட்டியிட இயலாமல் அலைகளோடு அலைகளாய் இரத்தம் பொங்கி மறியக் குமுறுபவர்கள் எல்லாரும் கடலில் தீபாவளி கொண்டாடத் தீர்மானித்திருக்கின்றனர். அன்றொருநாள் தங்கள் கட்டுமரத்தில் விசைப்படகை ஏற்றி வலையைக் கிழிக்க வந்த போது பீற்றர் படகில் குதித்த போது காலைத் தூக்கிக் கடலில் அந்தப் படகுக்காரன் அவனை எறிந்தானே, அன்று முளைத்த வித்து, பூதாகரமாக வளர்ந்து இன்று கனிகளை உதிர்க்க முதிர்த்திருக்கிறது. முந்நூறுக்கும் மேற்பட்ட நெருப்புக் கனிகள்... பதினைந்து வள்ளங்களில் ஏறி அலைகடலில் வருகின்றனர். டீசல் குழம்பில் முக்கிய பெரிய துணிப் பந்துகள் சுற்றிய குச்சிகளுடன் வீரபாண்டிப் பட்டணத்தை நோக்கி அந்த இரவில் தீபாவளி கொண்டாட அவர்கள் விரைகின்றனர்.
தீவாளி...!
கடலில் தீவாளி!
“மடையச் ‘சீர்சாத் துடச்சி’ கூனிப் பையல்லாம் நாச அடிக்கிறா!”
“இவனுவளுக்குத்தா கடலா? அது எங்கக்குமிஞ்சித்தா உங்களுக்கு!”
“ஒளிச்சிட்டு மறு காரியம் பாப்பம்!”
“இவனுவள விட்டுவச்சா, மேலிக்குக் கடலயே துத்துப் போடுவானுவ!”
“கொட்ட நண்டு பெருத்து நம்ம தொளிலக் கெடுக்கு!”
“தீவாளி... வாங்கலே... ஒங்களத் தீவாளி குளிக்கச் செய்யிறம்!”
கரைகளில் பட்டாசு ஒலி கேட்கிறது. திருச்செந்தூர் கோபுர விளக்கும், கரை விளக்குகளும் அருகில் நெருங்குகின்றன. இவர்களுடைய கைகளில் உள்ள பந்தங்கள் டீசலில் குளித்திருக்கின்றன; இன்னும் நெருப்புச் சேலை உடுத்தவில்லை.
குருசுகள், பர்னாந்துகள், பீற்றர், ஜயசீலன் என்ற தனிப் பெயரில் இயங்குகிறவர்கள், எல்லோரும் அந்த இரவில் அழிக்கும் சக்திகளாக மாறி, இலட்சக்கணக்கான ரூபாய் கொண்டு முடக்கியிருக்கும் விசைப்படகுகளை நாசம் செய்யப் போகின்றனர்.
நள்ளிரவு கடந்து தீபாவளித் திருநாள் பிறந்துவிட்டது. முதல் படகிலிருந்து பந்தங்கள் பூப்பந்துகளாய்ச் சுழன்று கரையில் நங்கூரமிட்டு அணியாக நிற்கும் விசைப்படகுகளின் டீசல் தொட்டிகளில் விழுகின்றன.
ஒன்று, இரண்டு, மூன்று... கடலைக் கலக்கிக் கொண்டு இவர்கள் பிழைப்பில் மண்ணடிக்கும் அந்த யமன்கள், எதிர்ப்புச் சக்தியற்று, கரைக்கு அக்கினி விளிம்பு கட்டிக் கொண்டு வானில் ஒளிபரவ எரிகின்றன. தம் அலைக்கரங்கலால் கரையைத் தழுவ வரும் கடலை, “தழுவாதீர்” என்று அச்சுறுத்தும் வண்ணம் அக்கினி நாக்குகள் உயர்ந்து கொழுந்து விட்டெரிகின்றன. அந்தச் செவ்வொளியில் குளித்து எட்ட நிற்கும் கட்டுமரக்காரர்களின் முகங்களில் ஒரு குரூரமான மகிழ்ச்சி சுடரிடுகிறது.
“ஒழிஞ்சானுவ. இனிமே கடல் நமக்குதா...”
டீசல் தொட்டிகளோடு படகுகள் எரிகின்றன என்ற உணர்வு உறைத்துக் காவலர் பரபரக்கையில் வள்ளங்களை வேகமாகப் பின்னுக்குச் செலுத்துகின்றனர் அவர்கள். எனினும் துப்பாக்கிக் குண்டுகள் கடலின் பரப்பில் சீறிச் செல்கின்றன.
குலசையிலும் மணப்பாட்டிலும் ஒதுங்க அந்தப் படகுகள் விரைந்து செல்கின்றன.
சாலமோன் மாமன் மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டு மகனோடு செல்வதாகப் போனாலும், ஒத்துக் கொள்ளாமல் திரும்பி வந்து விட்டார். தரகராக இருக்கிறார். பீற்றர் இருளில் கரையேறி, அவர்கள் வீட்டில் வந்து கதவு தட்டுகிறான்.
இளைஞர் விசைப்படகுகளுக்கு எதிர்ப்புக் கொடி காட்டுவதை அவர் அறிந்திருக்கிறார். எனினும் இந்த இரவில் இவன் ‘அரக்கப்பரக்க’ ஓடிவந்து கதவைத் தட்டுவானேன்?
அந்தக் காரிருளிலும் கூதலிலும் கூட இவன் வியர்வை பளபளக்க நிற்கிறான்.
“என்ன லே?...”
அவன் பதிலேதும் கூறவில்லை. உள்ளே சென்று படுத்துக் கொள்கிறான். இவன் மொழியேதும் விளங்கவில்லை யெனினும் இவர்கள் திட்டம் கரச பெரசலாக அவருக்கு எட்டியிருக்கிறது. அந்த ஊரிலிருந்தும் சில விடலைகள் சென்றிருக்கிறார்கள்.
தெப்பமாக நனைந்தவனுக்கு மாமி வேறு துணி கொடுக்கிறாள். பாயை விரித்துப் படுப்பதுதான் தாமதம். உறங்கிப் போகிறான். போலீசுதான் தன்னை வந்து எழுப்பும் என்ற உள்ளுணர்வில் எழும் அச்சம் மெல்ல மெல்ல உயிர்பெற்று மேல் பரப்புக்கு வருகிறது. கடலின் ஆழத்தில் சஞ்சரிக்கும் ஓங்கல் மீன் மேல் பரப்புக்கு வருகையில் ஏனைய சிறு மீன்களை விரட்டியடிப்பது போல்... அவனுக்கு வேறு உணர்வே தெரியவில்லை. கண்டா ஓங்கல்... ஓங்கல்... மரத்தை முட்டுகிறது. கொம்புவாரிக்கல்லை நெட்டுக்கு உ யர்த்தி அதைக் குத்துகிறான். ஆனால் அது அவன் இலக்குக்கு நழுவிப் போகிறது.
“...லே... எந்திரிலே... என்னாத்த அழாவுழாண்ணு பெனாத்துதே பீற்றர்...?”
அவன் எழுந்திருக்க மறுத்துத் திரும்பிப்படுக்கிறான்.
“தண்ணிய அடி...” என்கிற குரல் விழுகிறது. “எந்த மயிரானாலும் எந்திரிக்க மாட்ட” என்று பிடிவாதமாக முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு படுத்திருக்கிறான். அவனுடைய நாவிலிருந்து உருப்புரியாத ஒலிகள் எழும்ப, மாமன் அவனை ஆட்டி உசிப்பி உட்கார்த்தி வைக்கிறார்.
“எந்திரிலே ஆளு வந்திருக்கி. ஒன்னக்க அப்பெ மரிச்சிட்டா... ஒன்னக்க அப்பெ...”
அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறான். நல்ல வெளிச்சம்...
“போலீசில்ல...!”
“அப்பச்சி மரிச்சிட்டாலே? எந்திரி இப்பம் பிறப்பட்டா தூத்துக்குடி நாகர்கோயில் பஸ் போவும்... எந்திரி...”
மாமன் மாமி எல்லோரும் சாவு வீட்டுக்குப் புறப்படுகின்றனர். பீற்றர் வெளி உலகைச் சந்தேகப் பார்வையால் பார்த்துக் கொண்டு பஸ்ஸுக்கு நடக்கிறான்.
அப்பனை இந்துவாக அடக்கம் செய்ய வேண்டுமென்று பஞ்சாட்சரம் நிற்கிறான். அன்றிரவு புதிய இந்துக்கள் யாரும் தீபாவளி கொண்டாடக் கூடாதென்றும் அவன் கட்டளை போல் வற்புறுத்தியிருக்கிறான். இந்து முறையில் சாவு சடங்குகளைப் பற்றிய விவரம் ஏதும் புரியாத இவர்கள் குலசேகர வாத்தியாரைத்தான் நம்பியிருக்கின்றனர். கோயிலுக்குத் தனிப் பூசைக்கு வந்த குருக்கள் காலையில் கோயிலை மூடிவிட்டுத் திருச்செந்தூர் சென்று விட்டார். குலசேகர வாத்தியார் தாளாச் சோகத்துடன் தலை கவிழ்ந்திருக்கும் மணியனிடம் வந்து, “அப்பன் கடைசி வரை உள்ளத்தில் இந்துவாகத்தானிருந்தார். வெளியிட்டுச் சொல்லத் தெரியாத முருக பக்தி இருந்தது. என்னைக் கூப்பிட்டுப் பன்னீர் இலை விபூதி கேட்டார். நான் உடனே போய் வாங்கி வந்தேன். மூணு நாள் கடைசியாக அந்தப் பிரசாதம்தான் அவருக்குப் போயிற்று. ஆனபடியால் நீ யாருக்கும் காத்திருக்க வேண்டாமப்பா?” என்று கரைகிறார்.
ஆனால் மணியனுக்குப் பஞ்சாட்சரமும் இவரும் முன்னின்று சட்டங்கள் சொல்வது பிடிக்கவில்லை. சாமியார் அவஸ்தைப் பூசலுக்கு வரவில்லை என்றாலும், எல்லோரும் லில்லியின் வரவுக்காகக் காத்திருக்கின்றனர் என்பதில் ஐயமே இல்லை. அவர் மரித்த செய்தியைத் தந்தி மூலம் காலையிலேயே அனுப்பியாயிற்று. கோயிலைச் சேர்ந்தவர் அனைவரும் வந்திருக்கின்றனர்; துக்கமணி ஒலித்திருக்கிறது. மணியன் இந்த நிலையில் தானாக எதையும் வரையறுக்க இயலாமல் இருக்கிறான்.
அப்பன் உண்மையில் எந்த மாறுதலையும் ஏற்கவில்லை. அவர் தாம் பாதிரியாரின் வீட்டில் சிறையிலிருந்து துன்பப்பட்டார். சுரூபத்தின் கண்ணிலிருந்து நீரொழுகும் என்று எதிர்பார்த்து அந்த அற்புதம் நிகழவில்லை என்று கண்டவர். அவர் உண்மையில் தம் வாழ்நாளில் பிறர்மதிக்க உயர்வாக வாழவேண்டும் என்ற இலக்கில் அவ்வப்போதைய பிரச்னைகளைப் பற்றித்தான் கவலைப்பட்டாரே ஒழிய, மரணத்தைப் பற்றியோ, மரணத்துக்குப் பின் பரலோக ராச்சியத்துக்குப் போவதைப் பற்றியோ சிந்தித்திருக்கவில்லை. அவர் அதனால்தான் இந்து சாமியையும் அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி வெறுக்கவில்லை. உண்மையில் அவர் மட்டுமல்ல, பொதுவாக எவருமே நடைமுறை வாழ்க்கைப் பிரச்னைகளை அகற்றிக் கொள்வதில் தான் நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். மோட்சத்தைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்காகச் சமயத்தைப் பற்றிக் கொண்டு விடவில்லை. அவ்வாறு ஒரு சமயம் என்று தீவிரமாகப் பற்றியிருப்பவர்களாக இருந்தால், இந்துவாகி விட்டோம் என்று பேர் மாறியவர்கள், அந்தக் கோயிலில் பால் பவுடரும் மரிக்கன் மாவும் கொடுக்கிறார்கள் என்று போகமாட்டார்கள்; கணபதி கோயிலில் பொங்கலும் வடையும் பிரசாதம் கொடுக்கின்றனர் என்று கிறிஸ்தவர்களாகத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் வரமாட்டார்கள். வயிற்றுக்குணவும், தங்க இடமும் நல்ல வாழ்வின் வசதிகளும்தான் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகளாக இருக்கின்றன. இதையொட்டியே அவன் இயங்குகிறான். அப்பன் கோயில் கூட்டங்களில் கூடக் கடை நிலையில் இருப்பதை ஏற்காமல் கடன்பட்டேனும் அந்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ நிலையை அனுபவிப்பதைத்தான் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அது ஒரு வெறியாகுமளவுக்கு அவரிடம் வேரூன்றியிருந்தது...
பிற்பகல், ஒரு ஜீப்பில், லில்லி, மேரி, யேசம்மா, ஜான், நசரேன் எல்லோரும் வந்து இறங்குகின்றனர்.
ஆத்தா மூலையோடு சுருண்டு கிடக்கிறாள். குரலெழுப்பக் கூடச் சக்தியற்று ஓய்ந்திருக்கிறாள்.
லில்லி அப்பனின் சடலத்தின் பக்கம் சென்று சிலுவைக் குறி செய்து கொண்டு ஜபம் செய்கிறாள்.
மேரி சேலைத் தலைப்பைச் சுருட்டி வைத்துக் கொண்டு கண்களைக் கசக்கிக் கொள்கிறாள். அவள் அழுகிறாளா, அல்லது துயரக்காட்சிக்காக நிற்கிறாளா என்று தெரியவில்லை. அப்போது... ஒரு பஸ் வந்து நிற்க, பரபரப்பாக ஆட்கள் வருகின்றனர். பஞ்சாட்சரம் பஸ்ஸை எதிர்நோக்கிச் செல்கிறான்.
“தீவாளி கொண்டாடிட்டானுவ, மிசின் போட்டெல்லாம் எரிஞ்சி போச்சி!”
“வீரபாண்டியில பத்து முந்நூறு போட்டு...!”
“என்னது...?”
தீபாவளிக்கு வந்த ஆதித்தன் கத்துகிறான். “நம்ம போட்டுக்கு இன்சூர் கூடக்கெடயாது. கைப்பணம் இருபத்தஞ்சாயிரம் போட்டிருக்கமே...! பாவிப்பயலுவ, முட்டாப் பயலுவ, அடுத்தவ வாழப் பொறுக்காத துரோவிப் பயலுவ...”
பஞ்சாட்சரத்துக்குக் கண்ணீர்முட்டி அழுகையே வந்து விடுகிறது. அந்தப் பஸ்ஸில் அங்கேயே ஏறிவிடுகின்றனர் அவர்கள். வானில் இருள் கவிகிறது.
லாஞ்சிகளை எரிய விட்டுட்டானுவ... மடப்பயமவனுவ! கிறிஸ்துவம் இதாஞ் சொல்லியிருக்கா? இந்து போட்டு, கிறிஸ்தவம் போட்டு, சாயபு போட்டு எல்லாந்தா எரியவுட்டிருக்கானுவ...!
“பீற்றர் பய ஏ வார இல்ல?”
“அவெ எங்கே!...”
மீனெடுக்க வந்த கௌஸ் சாயபு மணலில் குந்திக் கொள்கிறார்.
“நேத்து நா மணப்பாட்டுல பாத்தே. ஆத்து மடையில வள்ளங்க நீட்டமா நிக்கிமே? கொறவா இருந்திச்சி. சிலுவையார் மலக்கிப் பக்கமா இளவட்டப் பயலுவ காக்காக் கூட்டமாண்டு கத்திக்கிட்டிருந்தானுவ... ரொம்ப நஷ்டம்... ஒரு போட்டு அம்பதாயிரம் அறுபதாயிரம் மிண்ணாவுமே?”
“இவனுவ அநியாயமா றால் கூனியெல்லாம் கலச்சிப் போடுறாவ...”
“நம்ம கரையில எட்வின்பய, பீற்றர், இன்னம் சூசைப்பய எல்லாந்தா போயிருக்கானுவ. இந்நேரம் போலீசு முடுக்கிப் போட்டிருப்பா... எதுக்கும் துணிஞ்சாத்தா நியாயம் பெறக்கும். அப்பம் துவிச்சண்ட போட்டானுவ. தெறிப்பு போச்சி. இப்ப இது... எங்கக்கப்பெங் காலத்தில மொத்தமே கொச்சிக்கரை இங்கெல்லா அறுநூறு மிசின் போட்டுத்தா இருந்திச்சாம். இப்பம் றாலுக்குமட்டும் ஆறு லட்சம் விசைப்படவு - அது விசப்படவுதா வந்திருக்காம்...” என்று மொடுதவம் நியாயம் பேசுகிறான்.
குலசேகர வாத்தியார், சாமியார் வருவதைப் பார்த்துக் கொண்டு மணியனிடம் மீண்டும் வருகிறார்.
“நீ... இந்துவாகிவிட்ட பையன். இந்து முறைப்படி, அவருக்குக் கடைசிக் கடன் செய்யணுமப்பா. முடிநீக்கிக் குளித்து விட்டுவா...” என்கிறார்.
மணியனுக்கு வெறுப்பாக இருக்கிறது.
“சாமி, இப்போது சூழல் சரியில்ல. மனசு ஒரேயடியாக் குழம்பிக் கிடக்கு. அதது நடக்கிறபடி நடக்கட்டும். இப்ப இவங்களைத் தடுக்கிறாப்போல எதும் செய்ய வேணாம்...”
முன்பு புயலடித்தபோது குடல் வெளியே குழல் போல் பிதுங்க அவனுடைய சிவப்பு நாய் கண்களில்லாமல் வாயைப் பிளந்து கொண்டு கரையில் கிடந்த கோலம் அவன் கண்முன் தோன்றுகிறது.
அவன்தான் குழி தோண்டி அதை ஒரு பக்கம் புதைத்தான். ஏலி அழுகிக் கிடந்தாளாம். அந்தக் குழந்தையை - அவர்கள் புதைத்தார்கள். இந்துவென்ற மண் தன் கடமையைச் செய்யாமல் இந்தச் சடலங்களைத் தனதாக்கிக் கொள்ளாமலிருக்கவில்லை. கிறிஸ்தவமானாலும் இந்துவானாலும் சாயபுவானாலும் மனிதன் மனிதன்தான். எல்லா ஜீவராசிகளையும், இலை குப்பைகளையும் கூட மண் தனதாக்கிக் கொள்கிறது.
இந்த அப்பனைப் போலீசு அடிக்க உடந்தையாக இருந்த கிறிஸ்தவம் இன்று பரலோக ராச்சியம் செல்வதில் அக்கறை காட்டுகிறது. சாமியார் ஜபம் செய்கிறார்.
விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவனான இருதயராஜின் சவ அடக்கம், அவர் பெரிதும் விரும்பியிருக்கக் கூடிய அளவில் நடக்கிறது. அவருடைய குடும்பத்திலிருந்து புனித சேவைக்கும், தேவப்பணிக்குமாக ஒரு கன்னியை அளித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே, முழு ஜபத்துடன் கோயிலின் முன் அவரது உடல் இறக்கி வைக்கப் பெறும் மரியாதையையும் பெறுகிறது. மணியன் அருகே சென்று நிற்கிறான். குடிமகன் தோண்டிய குழியில், சாமியார் மந்திரம் ஜபித்து, உடலை இறக்கி முதல் மண்ணைப் போட்டபிறகு, அவனும் போடுகிறான்.
அவருடைய மையம் புதைக்கப் பெற்ற இடத்தில் அழகியதொரு கட்டிடம் எழுப்பவும் லில்லி ஏற்பாடுகள் செய்து விடைபெறுகிறாள்.
கணவன் என்ற பந்தம் கழன்று விட்டது. ஆத்தாளிடம் அதற்கு அடையாளமாக இருந்த பொற்றாலி வெகு காலத்துக்கு முன்பே போய்விட்டது. இந்து சமயம் தழுவிய போது மஞ்சள் கயிறும் குங்குமமும் தரித்துக் கொண்டாள். வாழ்க்கைப் பாதையின் மேடு பள்ளங்களில் அல்லாடும் போது, அதுவும் புதுப்பிக்கப்படாமல் முக்கியத்துவமிழந்தது; பிறகு எதுவுமே யில்லை.
இரண்டு பையன்கள்... அப்பனின் இறுதிச்சடங்குக்குக் கூடச் சொந்தமில்லாமல் போய்விட்டார்கள். ஏனெனில் பீற்றரைப் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே போலீசு பிடித்துப் போயிற்று. இளையவன் ஊரை விட்டு ஓடிப் போனான். அகன்ற உலகில் சொந்தமும் பந்தமும் துச்சமென்று ஒதுக்கி வாலிபத்தின் எழுச்சியில் கிளர்ந்து வரும் வேட்கைகளைக் குறியாகக் கொண்டு போனான். இளரத்தத்தின் சூடுகள் ஆறும் போது வீட்டின் நினைவு வருமோ?...
நாள் முழுதும் கடற்கரையில் மீன்பாடு வந்து விழுந்தாலும், காலையின் சௌந்தரியத்தில் அதன் கவர்ச்சிகளையும் உற்சாகங்களையும் சொல்லி முடியாது. இருள் முழுதும் அலைகளுடன் போராடி, வெள்ளாப்புப் பூத்துக் கதிரவன் ஒளி பரப்பும் நேரத்தில் வலைகளில் கடல் செல்வங்களை வாரிக் கொண்டு கரையை நோக்கி வரும் கட்டுமரங்களில் மிதந்து வரும் ஒவ்வொரு கடல் மகனும் உழைப்பென்னும் காவிய நாயகனாகவே காட்சியளிக்கிறான். கரையில் ஏறியதும் இறால் படவில்லை என்றால் ஆற்றாமையால் பொங்கிச் சீறுகின்றனர்; அடித்துக் கொள்கின்றனர். சிறுமைகளை மறக்க குடிக்கின்றனர்; வாழ்வின் இன்பங்களுக்காக ஆணும் பெண்ணும் காலமெல்லாம் துன்பம் அனுபவிக்கின்றனர். பாரில் பட்டு வலை கிழிந்துவிட்டால் எவரும் ஓய்ந்து விடுவதில்லை. பெண்சாதியின் தாலியும் அற்பமாகிவிட அதையும் விற்று வலையில் போடுகிறான். மணியன் வாழைத்தோட்டத்தில் வந்த இலாபத்தையும் பெண்சாதி நகைகளையும் போட்டு, பஞ்சாட்சரத்துடன் கூட்டுச் சேர்ந்து விசைப்படகு சொந்தத்தில் பங்கு பெற்றிருக்கிறான். அகலக்கால் வைத்து, மேலும் தவணை கட்டும் சுமை ஏற்றிருக்கிறான். ஆத்தா மருமகளுடன் இருக்கிறாள். ஜயாவை அநந்தனுக்குக் கட்டியிருக்கின்றனர். வழக்கு வலுப்பெறாமல் பீற்றர் இரண்டு நாட்கள் லாக்கப்பிலிருந்து வந்துவிட்டாலும், மரக்காரர்களுக்கும் ‘மிசின்’காரர்களுக்குமான புகைச்சல் மேலும் மேலும் தீனிகள் கொண்டு புகைவதும், அடிதடிகள் நிகழுவதுமாகக் கடற்கரை மக்களின் வரலாற்றில் விசுவரூபப் பிரச்சனையை எழுதிவைக்கிறது.
ஜயா மாசமாக இருக்கிறாள். அநந்தனும் பீற்றரும் பழைய மரத்தில் இணைந்தவர்களாகத் தொழில் செய்கின்றனர். கோடைக்காற்று வீசும் காலம். அலைகள் ஆளுயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரிக்கின்றன. காலைத் தொழிலுக்குக் கிளம்பிச் செல்லும் கட்டுமரங்களைத் தடையில் தள்ளி மறித்து இந்த மனிதர்களை என்ன செய்கிறேன் பார் என்று ஆத்திரம் கொண்டு அலைகள் எழும்பிச் சுருண்டு உள்ளே சென்று கரையை நோக்கிச் சாடுகின்றன. கரையிலிருந்து பார்ப்பவர்கள் அஞ்சும் வண்ணம் தன் வலிமையைக் காட்டினாலும் இறுதியில் தன்னிடம் அகப்பட்டவர்களை ‘எனக்கெதற்கு, பிழைத்துப்போ!’ என்று கரையில் தூக்கி எறிகிறது.
ஆத்தா செம்பில் கருப்பட்டி நீரும், மீன்வாங்கும் வட்டியுமாகக் காத்து இருக்கிறாள். வயோதிகத்தின் முதிர்ச்சியும் அனுபவங்களின் கீறல்களும் அவள் முகத்துக்கு என்றுமில்லாத அழகைக் கூட்டியிருக்கின்றன. கடல் நாச்சி, தன் மக்களை விளையாட்டுப் பிள்ளைகளாக நினைத்து விளையாடுகிறாள்; தன் மக்களுக்கு இந்த விளையாட்டின் வாயிலாகவே நெஞ்சுரத்தையும் அஞ்சாமையையும் நேர்மையையும் சொல்லிக் கொடுக்கிறாள்.
கணேசுவும் முருகனும் மணலில் சிப்பி பொறுக்கி விளையாடுகின்றனர். கணேசு அலையில் வந்து நின்று கை கொட்டுகிறான். மணலில் நடக்கத் தடுமாறும் முருகனும் விழுந்தும் எழுந்தும் கடலைப் பார்க்க வருகிறான்.
அவள் முருகனைத் தூக்கிக் கொண்டு மணலில் வந்து அமருகிறாள். “லே, கணேசு? பள்ளிக்கொடம் போண்ணு உன்னாத்தா சீவிச் சிங்காரிச்சி விட்டிருக்கா, எங்கியலே வந்தே? இவெ வேற...? போலே? பள்ளிக்குடம் போ!”
அவன் பாட்டிக்குப் பராக்குக் காட்டிவிட்டுக் கடற்கரையின் இன்னொருபுறம் ஆடப்போகிறான்!
மரம் கரைக்கு விரைந்து வருகிறது. பீற்றர் சுக்கான் பிடிக்கும் நிலையில் நிற்கிறான். அநந்தன் தண்டு வலிக்கிறான். சுக்கானில் பீற்றரைப் பார்க்கையில், தந்தையின் மறு வடிவாகவே காட்சி தருவதாக அன்னைக்குத் தோன்றுகிறது.
மச்சானும் மாப்பிள்ளையும்!
இன்று றால் பட்டிருக்குமோ?...
இவ்வளவு விசைப்படகுகள் வராமுன்னர், ஒரு நாளைக்கு நாநூறு ஐநூறு என்று வாரி வந்தனரே!... விசைப்படகுக்காரருடன் அடியும் தடியும் சண்டையும் வழக்கு மன்றமுமாகத் தொழில் வாழ்க்கைக் காற்றில் அலைபடும் மரமாக அலைபடுகிறது. இவர்கள் கரை சேர்ந்து ஓமலையும் வலைகளையும் எடுத்து வருமுன் இறால் பையுடன் அநந்தனின் தம்பி ஜகன் வருகிறான். பள்ளிக்கூடம் விட்டு, இறால்பையும் கையுமாகக் கரையில் அலைகிறான். பத்து இராலுக்கு ஒரு ரூபாய் வருமானம்.
இறாலில்லி.
பீற்றரின் முகம் கனலுகிறது.
களரும் வாளையும் அற்பமாகப் பட்டிருக்கின்றன. நண்டுகள்.
அநந்தன் வலையைத் தட்டுகையில் நண்டுகளைத் தூக்கி எறிகிறான். அப்போது வட்டக்காரனாக என்றோ அப்பன் பணயம் வைத்து வாங்கிய கடனுக்கு ஆறில் ஒரு பங்கு வருவாங்க, தானியல் வருகிறான்.
தானியலுக்குப் பீற்றர் வயசுதானிருக்கும். மினிமினுச் சட்டை, கைலி. தங்கப்பட்டையில் பெரிய கடிகாரம், மோதிரங்கள், புலிநகம் கோத்த மாடல் சங்கிலி... என்று வண்மைச் செழிப்புடன் வட்டக்காரரின் வாரிசாக நோட்டைத் தூக்கிக் கொண்டு வருகிறான். அருகில் ஒரு பயல் இவன் வசூல் செய்யும் மீன்களைச் சேமித்துச் செல்லக் கூடையுடன் தொடருகிறான்.
பீற்றர், அநந்தன் மீனைக் கூடையில் போடுமுன் குறுக்கே பாய்ந்து வருகிறான்.
அந்தப் பயலைப் பிடித்துத் தள்ளுகிறான்.
வட்டக்கார தானியலிடம் கைமுட்டியைக் காட்டி, ‘உனக்கு எதுக்குடா மீனு? உனக்கு எதற்கடா எங்கள் பாட்டைக் கொடுக்க வேண்டும்?’ என்று அவன் கேட்பது ஆத்தாளுக்குப் புரிகிறது. அதே சமயம் இனம் புரியாததொரு திகில் அவளைக் கவ்வுகிறது.
“லே ஊமை, போப்பால...” என்று ஒதுக்கி விட்டு, வலையிலிருந்து விழும் ஒரு சிறு பிள்ளைச் சுறாவைத் தானியல் எடுத்துக் கூடையில் போடக் கை வைக்கிறான். அடுத்தகணம் அவன் மூக்கில் ஒரு குத்து... தானியலின் இளம் பச்சை நிற உயர்ந்த மினுமினுப்புச் சட்டையில் செங்குருதி வழிகிறது. ஆத்தா திடுக்கிட்டுப் போகிறாள்.
“ஏலே... போதும்... லே...”
தானியல் நோஞ்சானல்ல, இருவரும் கரையில் மோதிக் கொள்கின்றனர். மணலில் இவன் தள்ள எழுந்து அவன் உதைக்கப் போர் அங்கே நடப்பதைப் பலரும் கவனிக்காமல் செல்கின்றனர். கடற்கரையில் இத்தகைய மோதல்கள் சகஜமானவை, ஆனால்... ஆனால்...?
அவர்கள் போராடிக்கொண்டு தள்ளிப் போகிறார்கள். மணலும் குருதியுமாக உடலில் ஒற்றிக் கொள்ள பீற்றர் பார்ப்பதற்குச் சூரியனொளியில் பயங்கரமாகக் காட்சி தருகிறான்.
யாரைக் கூப்பிடுவாள் அவள்? அநந்தன் சண்டையை ரசிப்பவன் போல் நிற்கிறான். மரங்கள் வருகின்றன; ஏலக்காரர் ஏலம் கூவுகிறார்... இவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்கச் சிறுவர்கள் வட்டம் கூடுகின்றனர்.
ஆத்தா கத்துகிறாள், “லே கணேசு! அங்கிய சுந்தர மாம இருக்காரு, போலே, கூப்பிடு...! ஐயோ, அடிச்சிக்கிறானுவ, அந்த நாக்கில்லாப் பய... அவனுக்கு வெவரம் புரியாது. மொரடன். ஏலக்காரரே, அத சண்டய நிறுத்தும்... சண்ட சண்ட...”
அவளே ஓடி வருகிறாள், சிறுவர் கூட்டத்தைப் பிளந்து கொண்டு. குலசேகர வாத்தியார்... “வாத்தியார் சாமி! சண்டை... வேணான்னு விலக்குங்க சாமி!”
அவளுக்குக் குரல் எழும்பாமல் பீதியில் நெஞ்சடைக்கிறது. பையன்கள் விலகி நின்றாலும் உள்ளே நெருங்க வாத்தியார் அஞ்சுகிறார்.
இவன்... நெற்றி நரம்பு புடைக்க, செக்கச் செவேலென்று தானியலைக் கீழே தள்ளிக் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
“வாணாம்... வாணாலே... நெத்தம்” ரத்தத்தைக் கண்டு அவனுக்கு அச்சம் எவ்வாறு வரும்? ஆயிரமாயிரமாய் உயிர்கள் துடித்துச் சாவதைத் தொழிலின் வெற்றியாக மகிழ்ந்து கொண்டாடும் பண்பில் ஊறியவனுக்கு, இவன் உயிரின் அருமை எப்படித் தெரிந்திருக்கும்? வட்டக்காரன் அவன்.. வட்டக்காரன்... இவன் உழைப்பைக் கொள்ளையிடும் அக்கிரமக்காரன். அவனை... அவனை...
உயிர்களை மண்ணிலே ஏந்தும் கிளர்ச்சியில் சிலிர்த்துப் போய்ப் பரவசமடைந்திருக்கும் ஆத்தா பதறி உடல் துடிக்கக் கத்துகிறாள்.
“லே... வேணாம். வேணாமின்ன, என்ன காரியம் செஞ்சி போட்டேலே...”
பாறைகளில் மோதி அடித்துக் கொண்டு சமவெளியில் நீண்டு செல்லும் அருவியாக ஓலக்குரல் கடற்கரையில் பரவுகிறது. ஓமலில் வெள்ளித்துணுக்குகளாய் கிடக்கும் மீன்களில் நைலான் கயிறு அறுத்து வடிந்த குருதியில் ஈக்கள் குந்துகின்றன.
திடீரென்று பீற்றர் தன் உணர்வு பெற்றாற்போல் ஓட முயலுகிறான்.
“யோ... ஓடியாங்க... கொல...! கொல...” என்று யாரோ குரலெழுப்புகிறான்.
மணற்கரையின் மூலை முடுக்குகளிலெல்லாமிருந்து மக்கள் அவனைச் சூழ ஓடி வருகிறார்கள்.
ஆத்தா நாடி நரம்புகளெல்லாம் அடங்கி ஓய்ந்தாற் போன்று பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
(முற்றும்)