amma en saambaaril vowaal

அம்மா! என் சாம்பாரில் வௌவால்!

தனது வீட்டிற்குள் வௌவால் பறப்பதைப் பார்த்து சுப்பி சிறிதும் மகிழவில்லை. சொல்லப்போனால், அவன் வௌவாலைப் பார்த்து பயந்து போயிருந்தான். சுப்பியும் அம்மாவும் அந்த வௌவாலை அதன் குடும்பத்தினரிடம் எப்படி திரும்பச் சேர்த்தார்கள்?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா! என் சாம்பாரில் ஒரு வௌவால் இருக்கிறது!

அய்யே! அவளைப் போகச் சொல்லுங்கள்!

நீங்கள் என்னை இந்த ஜன்னல்களை எல்லாம் நன்றாக அடைக்கச் சொன்னீர்கள். ஆனால் வலதுபக்கத்தில் இருக்கும் இந்த ஒன்றை மட்டும் நான் மறந்துவிட்டேன்!

அப்பாடா! இந்த வௌவால் என் சாம்பாரில் நீச்சலடிப்பதை நிறுத்திவிட்டாள். அவள் மிகவும் எரிச்சலாக இருப்பது போலத் தெரிகிறது.

அவள் என் முகத்துக்கு முன்னால் இறக்கையை ‘தடதட’வென அடித்துக்கொண்டு வட்டமடிக்கிறாள். அது என் இதயத்துடிப்பை ‘படபட’வென எகிற வைக்கிறது.

கவனம்! ஒளிந்துகொள்! உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடு! அவள் ஆய் குண்டுகளைப் போடுகிறாள். அவை படு மோசமாக இருக்கின்றன.

“சுப்பி! அமைதியாக இரு!” என்று அம்மா கிசுகிசுக்கிறார். “அவள் தன் அக்கா தம்பிகளிடம் திரும்பிப் போக விரும்புகிறாள் என்று நினைக்கிறேன்” என்றார்.

பின்னர், காற்றாடிகளையெல்லாம் நிறுத்திவிட்டு எல்லா விளக்குகளையும் அணைத்தார் அம்மா. நான் ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு, பரபரப்பை நிறுத்தி அமைதியானேன்.

அம்மா சொல்லியது சரிதான்(அவர் எப்போது தவறாகச் சொல்லியிருக்கிறார்?). அந்த வௌவால் தன்னுடைய நீளமான, சவ்வு இறக்கைகளை வீசிப் பறக்கத் தொடங்குகிறாள்.

அவளை வழியனுப்ப நான் ஜன்னல் அருகே ஓடினேன். வானைத் தொடுவதுபோல் வளர்ந்திருந்த ஒரு மரத்தின் உயரமான கிளையொன்றை அவள் கால்களால் பற்றிக்கொண்டாள்.

நான் சாப்பிடுவதற்காக மேசைக்குத் திரும்பினேன். ஆனால், இப்போது இந்தச் சாம்பாரைச் சாப்பிடலாமா என்று தெரியவில்லை.

உங்கள் வீட்டுக்கு வௌவால் வந்தால் என்ன செய்யவேண்டும்?

வௌவால் வட்டமடித்துப் பறப்பதைப் பார்த்து எப்போதாவது பயந்திருக்கிறீர்களா? வௌவால் உங்கள் முடிக்குள் புகுந்துகொண்டு தூங்குமோ என்று நினைத்திருக்கிறீர்களா?

வௌவால்களுக்கு உங்கள் முடியிலிருந்து தலைகீழாக தொங்குவதில் விருப்பம் கிடையாது. அவை ஒரு மரத்தின் கிளையிலோ அல்லது குகையின் கூரையிலோ அல்லது பெரிய கட்டிடங்களின் சுவரிலோ தொங்கிக்கொண்டு தூங்குவதையே விரும்பும்.

உங்கள் வீட்டிற்கு வௌவால் வந்தால் பயப்படாதீர்கள். நம் பறக்கும் நண்பரான வௌவால் கூட உங்களைப் போலவே பயந்திருக்கும். ஆகவே, பயப்படாமல் விளக்குகளையும் காற்றாடிகளையும் அணைத்துவிட்டு ஜன்னல்களை விரியத் திறந்துவிட்டுப் பொறுமையாகக் காத்திருங்கள். இருட்டில் வெளியே போகும் வழியை வௌவால் தானாகவே கண்டுபிடித்துக் கொள்ளும்.