amma eppodhu thirumbi varuvaar

அம்மா எப்போது திரும்பி வருவார்?

ரோஜாவின் அம்மா அதிகாலையில் வேலைக்குக் கிளம்புகிறார். இரவில் ரோஜா உறங்கும் நேரத்திற்குள் திரும்பி வந்துவிடுவதாக உறுதி அளிக்கிறார். அம்மா இல்லாமல் ரோஜா நாள் முழுவதும் என்ன செய்வாள்?

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரோஜா வருத்தமாக இருக்கிறாள். அம்மா வேலைக்குக் கிளம்புகிறார்.

“தூங்கும் நேரத்துக்கு முன்பே நான் திரும்பி வந்துடுவேன், கண்ணம்மா!” என்று விடைபெற்றார் அம்மா.

“ஆனால் அது எத்தனை மணிக்கு, அம்மா?” என்று ரோஜா கேட்டாள். “சரியாக இரவு 9 மணிக்கு!” என்று பதிலளித்தார் அம்மா.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது காலை 6 மணியாகிறது.

“அம்மாதான் எனக்கு பால் தர வேண்டும். நீங்கள் தர வேண்டாம்!” என்று ரோஜா அப்பாவிடம் சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது காலை 8 மணியாகிறது.

“உருளைக்கிழங்கு வாங்கலாம், தாத்தா!” என்றாள் ரோஜா. “ஆனால், நேற்று தானே உருளைக்கிழங்கு சாப்பிட்டோம்! இன்று கத்திரிக்காய் வாங்கலாமா?” என்று தாத்தா கேட்டார்.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது காலை 10 மணியாகிறது.

“பாட்டி! சாப்பிடலாம் வாங்க! தாத்தா பப்படம் பொரிக்கிறார்!” என்று ரோஜா கத்தி அழைத்தாள்.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது பிற்பகல் 1 மணியாகிறது.

கீங்க்! கீங்க்! ரோஜாவின் அக்கா பள்ளியிலிருந்து திரும்பி விட்டாள்.

“இந்தக் கோடைக்காலம் முடிந்ததும், நானும் உன்னோடு பள்ளிக்குப் போவேன் என்று பாட்டி சொன்னார். ஜாலியாக இருக்கும் இல்லையா, அக்கா?” என்று ரோஜா உற்சாகமாகக் கூறினாள்.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது பிற்பகல் 3 மணியாகிறது.

“வீட்டுக்குத் திரும்பும் நேரம் ஆச்சு, வா ரோஜா!” என்று அப்பா கூப்பிட்டார்.

“இன்னும் ஒரே ஒரு முறை கடைசியாக!” என்று உரக்கச் சொன்னாள் ரோஜா.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது மாலை 5 மணியாகிறது.

“செல்வி! நீ உன் தோசையை சீக்கிரமாகச் சாப்பிடு! அப்போதுதான் நீ பெரிதாகவும் பலசாலியாகவும் ஆகலாம்” என்றாள் ரோஜா.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது மாலை 7 மணியாகிறது.

“அப்புறம் அந்த தொப்பி வியாபாரி தனது தொப்பியை கீழே எறிந்தவுடன், அந்தக் குரங்குகளும் தங்கள் தொப்பிகளை கீழே எறிந்தன...’’

“அம்ம்மா!” என்று ரோஜா கூவினாள்.

“நாள் முழுவதும் என்ன செய்தாய், ரோஜா?” என்று கேட்டார் அம்மா.

டிக் டாக்! டிக் டாக்! இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு 9 மணியாகப் போகிறது.

“இன்றைக்கு ஒரே ஜாலிதான், அம்மா!” அப்பா எனக்குக் காலைச்சாப்பாடு ஊட்டினார். தாத்தாவுடன் சென்று கத்தரிக்காய் வாங்கி வந்தேன். அவர் மதிய உணவுக்குப் பப்படம் பொரித்துக் கொடுத்தார்.

அக்காவை பள்ளிப் பேருந்திலிருந்து அழைத்து வந்தேன். பூங்காவில் விளையாடினேன். செல்விக்கு இரவுச் சாப்பாடு கொடுத்தேன். அப்பா எனக்குக் கதை சொன்னார். இப்போது நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள்!” என்று ரோஜா பெரிய சிரிப்போடு சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக்! இப்பொழுது இரவு 9 மணி!

என்னுடைய நாள்

காலையிலிருந்து இரவு வரை வெவ்வேறு நேரங்களில் ரோஜா என்னென்ன செய்கிறாள் என்று கீழே சொல்லப்பட்டிருக்கிறது. நேற்று, அதே நேரங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களோ அவற்றை ஒரு காகிதத்தில் படமாக வரைந்து காட்டுகிறீர்களா?

1. ரோஜா காலை 8 மணிக்கு காலை உணவு சாப்பிட்டாள். நீங்கள் நேற்று காலை 8 மணிக்கு என்ன செய்தீர்கள்?

2. ரோஜா காலை 10 மணிக்கு கடைக்குப் போனாள். நீங்கள் நேற்று காலை 10 மணிக்கு என்ன செய்தீர்கள்?

3. ரோஜா மதியம் 1 மணிக்கு மதிய உணவு சாப்பிட்டாள். நீங்கள் நேற்று மதியம் 1 மணிக்கு என்ன செய்தீர்கள்?

4. ரோஜா மதியம் 3 மணிக்கு தன் அக்காவை பள்ளிப்பேருந்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாள். நீங்கள் நேற்று மதியம் 3 மணிக்கு என்ன செய்தீர்கள்?

5. ரோஜா மாலை 5 மணிக்கு பூங்காவில் விளையாடினாள். நீங்கள் நேற்று மாலை 5 மணிக்கு என்ன செய்தீர்கள்?

6. ரோஜா இரவு 7 மணிக்கு தன் நாய்க்குட்டி செல்விக்கு சாப்பாடு போட்டாள். நீங்கள் நேற்று இரவு 7 மணிக்கு என்ன செய்தீர்கள்?