amma neengalum vaanga

அம்மா, நீங்களும் வாங்க

ஆத்யா, அவள் அம்மா இல்லாமல் எதையும் செய்யமாட்டாள். அது விடுமுறையைக் கழிக்க அசாமுக்குச் செல்வதற்கு தன் பையில் தேவையானவற்றை எடுத்து வைப்பதானாலும் சரி, ஆற்றில் விளையாடுவதானாலும் சரி. இந்தப் பயணம், தானாக எல்லாவற்றையும் செய்ய அவளைப் பழக்குமா?

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“அம்மா, நீங்களும் வாங்க!” என்றாள் ஆத்யா.

ஆத்யா தானாகவே பையை எடுத்து வைக்க வேண்டுமென்று அம்மா விரும்பினார். அவர்கள் அசாமில் உள்ள  மஜூலி  தீவுக்குச் செல்கிறார்கள். “ஏன் உன் பையை நீயே எடுத்து வைத்துக்கொள்ளக் கூடாது?” என்றார் அம்மா. ஆனால், ஆத்யா அம்மாவை விட்டு நகரவில்லை.

“அம்மா, நானும் வருகிறேன்!”

இது பெரிய படகு. நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சுற்றிலும் தண்ணீர்.

அம்மா டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். ஆத்யா ஓடிச் சென்று அம்மாவுடன் நின்று கொண்டாள். மஜுலி வெகு தொலைவில் உள்ளது. நாங்கள் விமானத்தில் பயணித்து, காரில் வந்து இப்போது படகில் போய்க்கொண்டிருக்கிறோம்.

“நானும் உங்களோடே வருகிறேன், அம்மா” என்றாள் ஆத்யா.

அவள் அம்மாவுடன் அதே ஸ்கூட்டரில் செல்ல விரும்பினாள். அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு பள்ளியில் தங்கியிருக்கப் போகிறார்கள்.

அடுத்த நாள், அம்மாவும் ஆத்யாவும் பள்ளிக்குச் சென்றார்கள்.

“ஹாய்! நான் கிம்-கிம். இவள் என் தங்கை…” “அலோ” என்றாள் முவாங்-முவாங். “விளையாட வருகிறாயா?”

“அம்மா, நீங்களும் வாங்க!” என்றாள் ஆத்யா.

சில நிமிடங்களுக்குள் அவர்கள் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தனர். “அம்மா, இங்கே பாருங்கள்.”

மரக்கட்டைகளில் தாவிக்குதித்து விளையாடினர்.

மரக்குதிரை ஓட்டினர்.

மணலில் விளையாடினர்.

விறகு வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓடினர்.

அதும்ப்! அதும்ப்பா!

டுடுக்! டுடுக்!

டொக்-டொக்!   டொக்-டொக்!

சர்ர்-டிக்-டிக்! சர்ர்-டிக்-டிக்!

டுர்ர்ர்ர்-டுர்ர்ர்!

“அம்மா, என்னைப் பாருங்கள்.” குடு-குடு-குடு-குடு. அடிகுழாய் அருகே ஓடினர். சப்-சப்-சப்-சப். தண்ணீரைத் தெளித்து விளையாடினர்.

“ஆத்யா, சாப்பி்டும் நேரமாகிவிட்டது,வா! என்றார் அம்மா. “அம்மா, ஊட்டிவிடுங்கள்” என்றாள் ஆத்யா. மம்-மம்-மம்-மம். அவர்கள் சோறும் பருப்பும் சாப்பிட்டனர். ஏவ்வ்வ்!

டொப்-டப் டப்-டப் டப்-டப் டொப்-டொப். வானிலிருந்து மழைத்துளிகள் விழுந்தன.

“ஆத்யா, வா! நாங்கள் ஆற்றுக்குப் போகிறோம்” என்றாள் கிம்-கிம்.

குடு-குடு-குடு-குடு

ஊஊ-ஊஊஊ

தூப்-தும்-துப்-தொம்

விர்ர்ர்ர்-ஷ்ஷ்ட்ட்ட்

நொம்நொம்நொம்நொம்!

தொப்-தொப்-தொப்-தொப்

ஆத்யா தன் புதிய நண்பர்களுடன் ஆற்றிலிருந்து திரும்பி வருவதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் சிரித்தபடியே இலந்தைப் பழங்களை தின்று கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் அம்மாவும் ஆத்யாவும் வீடு திரும்பத் தயாரானார்கள். “ஆத்யா, வா! ஷு நாடாக்களைக் கட்டி விடுகிறேன்” என்றார் அம்மா.

“நானே கட்டிக்கொள்வேன், அம்மா!”