ammaavin mookkukannaadi

அம்மாவின் மூக்குக்கண்ணாடி

அம்மா மீண்டும் தனது கண்ணாடியைத் தொலைத்துவிட்டார். இப்போது அதை நீமுவும் மிர்ச்சியும்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் தேடியதில் கண்ணாடியைத் தவிர வேறு எதையெல்லாம் கண்டுபிடித்தார்கள்?

- M. Gunavathy

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“என் கண்ணாடி!”

அடடே! இந்தக் குரலை எனக்குத் தெரியும். அம்மா தனது மூக்குக்கண்ணாடியைத் தொலைத்துவிட்டார். மறுபடியும்!

கவலை வேண்டாம். நானும் மிர்ச்சியும் இருக்கிறோம். நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.

சோஃபாவுக்கு அடியில் சாவி ஒன்று கிடந்ததைப் பார்த்தோம். கண்ணாடி இல்லை.

கம்பி மீது இரண்டு பறவைகளைப் பார்த்தோம். கண்ணாடி இல்லை.

சமையலறையில் மூன்று இழுப்பறைகளைத் திறந்தோம்.

அங்கே என் பிறந்தநாளுக்கு வாங்கிய நான்கு மிட்டாய்களைக் கண்டுபிடித்தோம்!

ஆனால் கண்ணாடி இல்லை.

“உஷ்ஷ்ஷ்…”

“இங்கே என்ன இருக்கிறது, பாருங்களேன்!”

மியாவ்

அட்டைப் பெட்டியில் ஐந்து பூனைக்குட்டிகள்!

கண்ணாடி அவற்றிடமும் இல்லை.

ஜன்னல் பக்கத்தில் ஆறு செடிகள் இடமும் வலமுமாய் அசைந்து கொண்டிருந்தன. அங்கும் கண்ணாடி இல்லை.

நாற்காலி மேல் தேடினோம். மேசைக்கு அடியிலும் ஏழு அலமாரி அடுக்குகளிலும் தேடினோம். எங்கும் கண்ணாடி இல்லை.

சாப்பாட்டு மேசை மீது எட்டு பைகளில் மளிகைப் பொருட்கள் இருந்தன. அதில் அவல் இருந்தது. பழங்கள் இருந்தன. ஒரு சாக்லேட்டும் கூட இருந்தது.

ஆனால், கண்ணாடி இல்லை.

அம்மாவின் கோட்டில் ஒன்பது பைகள் இருந்தன. அவற்றில் இருந்தவை...

ஒரு நாணயம் இரண்டு தேநீர்ப் பைகள் மூன்று பேனாக்கள் நான்கு அட்டைகள் ஐந்து கொண்டை ஊசிகள் ஆறு சாவிகள் ஏழு ரசீதுகள் எட்டு பொத்தான்கள் ஒன்பது வாதுமைக் கொட்டைகள்

கண்ணாடி மட்டும் இல்லை.

“பவ் பவ்!”

“அம்மா!”

“என்ன?”

“உங்கள் கண்ணாடி!”

“என் கண்ணாடியைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்! இருங்கள், உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்.”

அம்மா எனக்கும் மிர்ச்சிக்கும் பத்து பெரிய சுவையான லட்டுகளைச் செய்து தந்தார்!

“என் கைப்பேசி!” என்று அம்மா கத்தினார்.

மறுபடியுமா!