ammachiyin adhisaya iyanthirangal

அம்மாச்சியின் அதிசய இயந்திரங்கள்

சூரஜும் அவன் அம்மாச்சியும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடிப்பதை விரும்புகிறவர்கள்! ஒருநாள், எளிய இயந்திரங்களைக் கொண்டு அவர்கள் தேங்காய் பர்பி செய்தார்கள். அந்தச் சாகசத்தில் நீங்களும் இணையுங்கள்.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"அம்மாச்சி! அம்மாச்சி! நாம இன்னிக்குத் தேங்காய் பர்பி செய்யலாமா?" சூரஜ் தன் பாட்டியிடம் கேட்டான்.

"தயவுசெஞ்சு, எனக்காக!"

"செய்யலாமே!” என்றார் அம்மாச்சி, “ஆனா, பர்பி செய்ய நீதான் எனக்கு உதவணும். சரியா?”

"ஹையா! ஜாலி!"

"தயாரா?" என்று கத்தினான் சூரஜ்.

"தயார்!"  என்று சொன்னார் அம்மாச்சி.

"நல்லா முத்தின தேங்காய்களைத்தான்பறிக்கணும், சரியா?அதாவது, பழுப்புநிறத் தேங்காய்களை!””இதோ வருது பாரு!"

வுஷ்ஷ்ஷ்! தொப்!

"இப்போ மட்டை உரிக்கணும்..."

சரக்! கிர்ர்! சரக்! கிர்ர்!

சூரஜின் வயிற்றிலிருந்து சப்தம் கேட்டது: "கிர்ர்!"

அதைக்கேட்ட அம்மாச்சி சிரித்தார்.

"அப்புறம் தேங்காய் ஓட்டை உடைக்கணும்... இதோ இப்படி!"

படால்!

"அப்புறம் தேங்காயை கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு துருவணும்!"

"தேங்காய்த் துருவலை மற்ற பொருட்களோடு சேர்த்து வாணலியில போடணும்..."

"அருமையான வாசனை வருது அம்மாச்சி!"

"பர்பி தயாரானதும், அதை ஒரு தட்டில் கொட்டணும்... சூடு ஆறும்வரை பொறுக்கணும், பையா!"

"இப்போ அதைச் சின்னச் சின்னத்

துண்டுகளா வெட்டணும்..."

கடக்

கடக்

"ஆஹா! நம்ம தேங்காய் பர்பி தயார். சாப்பிடலாமா?”

”ம்ம்ம்... நல்ல ருசி!"

எளிய இயந்திரங்கள்

அம்மாச்சியின் பர்பி  எளிய  இயந்திரங்களின் உதவியோடு செய்யப்பட்டது. எளிய இயந்திரங்கள் நம் வேலையை எளிதாகச் செய்ய உதவுகின்றன. எளிய இயந்திரங்கள் ஆறு வகைப்படும்:

1. சாய்தளம்

2. நெம்புகோல்

3. சக்கரமும் அச்சும்

4. ஆப்பு

5. கப்பி

6. திருகு

தேங்காய் பர்பி தயாரிப்பதற்காக சூரஜும் அம்மாச்சியும் பயன்படுத்திய எளிய இயந்திரங்கள் எவை என்று கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்!