இது தான் சோமுவின் வீடு. அவன் காய்கறிகளை சாப்பிடுவதில் மிகவும் பிடிவாதக்காரன். எப்போது தன் சாப்பாட்டில் காய்கறிகளை பார்த்தாலும் முகத்தை சுளிப்பான். காய்கறிகள் அவனை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும் என்பதை அவன் நம்பவில்லை.
சோமு அவனுக்கு பிடித்தமான உணவுகளில் காய்கறிகளை சேர்க்க வேண்டாம் என்று அம்மாவிடம் கெஞ்சுவான். ஆனால் அம்மா அம்மா தான். அம்மாவிற்குத் தெரிந்திருந்தது அவர் குழந்தைகளுக்கு எது நல்லதென்று.
காய்கறிகளை கண்டாலே சோமு சிடுசிடுவென மாறிவிடுவான். அவனுக்கு குடைமிளகாய், ப்ரோக்கோலி, கேரட், பட்டாணி, முள்ளங்கி எதுவுமே பிடிக்காது!
ஒரு நாள் அவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது, சமயலறை காலியாக இருப்பதை பார்த்தான். அவன் வயிறு வித்யாசமான சத்தங்களை எழுப்பிக்கொண்டு இருந்தது. அவனுக்கோ பயங்கர பசி. அவன் தங்கை சோனிக்கும் நல்ல பசி.
அவன் தன் அம்மா படுக்கையில் பலவீனமாக நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தான். சோனி பதற்றம் அடைந்தாள். சோமு உடனடியாக தன் பாட்டியை கைபேசியில் அழைத்தான். பாட்டி நல்ல சூடான காய்கறி சூப்பை அம்மாவிற்கு தருமாறு பரிந்துரை கூறினார்கள்.
பாட்டி சூப்பின் செய்முறையை கூற கூற, சோமு அதனை எழுதிக்கொண்டான். பாட்டிக்கு நன்றி கூறிவிட்டு, குளிர்சாதன பெட்டியை திறந்து என்னென்ன காய்கறிகள் இருக்கிறது என்று பார்த்தான். பின் சூப் தயார் செய்ய என்ன தேவைப்படும் என பட்டியலிட்டனர்.
சோமு மற்றும் சோனி எல்லா காய்கறிகளையும் எடுத்து நன்றாக சுத்தம் செய்தனர். பின் காயமடையாமல் காய்கறிகளை நறுக்கினார்கள்.
சோனி அம்மாவிற்கு உடல்நிலை சரியாக இல்லை என்பதை நினைத்து சோகமடைந்தாள். சோமு அம்மா அவனுக்கு காய்கறிகளை சாப்பிட கொடுத்த போதெல்லாம் ஆடம் பிடித்ததை நினைத்து வருந்தினான்.
பாட்டி சூப்பின் செய்முறையை கூறிய போது சுலபமாக இருக்கும் என இவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது மிக கடினமாக இருந்தது. இப்போது தான் சோமுக்கு தினமும் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டில் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார்கள் என புரிந்தது.
சோமுவும் சோனுவும் காய்கறிகளை வேகும் வரை பொறுமையாக காத்திருந்தனர். சூப் தயாரான பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் பரிமாறினர்.
வீட்டில் பெரியவர்கள் யார் உதவியும் இல்லாமல் இவர்கள் சூப் செய்துவிட்டனர். அதை நினைத்து சோமு மற்றும் சோனி மிகவும் மகிழ்ந்தனர். இப்போது அம்மா சூப் சாப்பிட்டு நலம் அடைவார்.
சூப் சாப்பிட்ட பிறகு அம்மாவின் உடல்நிலை முன்னேறியது. அம்மா தன் குழந்தைகளின் முயற்சிக்காக அவர்களை கட்டி அணைத்தார்கள். பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் கூட ஆச்சரியம் கொண்டனர். இப்போது சோமு காய்கறிகளை பார்த்து முகம் சுளிப்பதில்லை. அவற்றை விரும்பி சாப்பிடுகிறான். காய்கறிகள் அவனை வலிமையாக்கும் என அவனுக்கு புரிந்தது. அம்மா, சோமு, சோனி அனைவரும் தங்கள் காய்கறிகளை சாப்பிட்டனர். நீங்கள் சாப்பீட்டீர்களா?