அன்று சீதாவின் பிறந்த நாள். அவளுடைய நண்பர்கள் எல்லாரும் அதைக் கொண்டாட அவள் வீட்டிற்கு வந்தார்கள்.
அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீதா! உன் அம்மா சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்" என்றான் அவள் நண்பன் ராஜா.
சீதாவின் அம்மா இருவரையும் அணைத்துக் கொண்டார். அவர் மிகவும் நல்லவர். எல்லோருக்கும் நிறைய உதவிகள் செய்வார். குழந்தைகள் என்றால் அவருக்கு ரொம்ப ஆசை. அவரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.
குழந்தைகள் எல்லோரும் புலியும் அதன் குட்டிகளைப் பற்றிய திரைப்படத்தைப் பார்க்க உட்கார்ந்தார்கள். படம் முடிந்த பிறகு எல்லோரும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்கள்.
ராஜா, "படம் மிகவும் நன்றாக இருந்தது. ஆமாம்! உன்னுடைய அப்பா எங்கே? நான் அவரைப் பார்த்ததே இல்லையே!" என்று கேட்டான்.
"அப்பாவா!" என்று யோசித்தாள் சீதா.
அவன் சென்ற பின் சீதா தன் அம்மாவிடம் சென்று, "என் அப்பா எங்கே? என்று கேட்டாள்.
அவள் அம்மா," சீதா. இரவு வெகு நேரமாகி விட்டது. தூங்கலாம் வா," என்று கூறினார்.
ஆனால்! ஆனால் !என்றாள் சீதா.
"சீதா! வந்து படுத்துக்கொள். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. இன்னொரு நாள் இதைப் பற்றிப் பேசலாம்," என்றார் அம்மா.
அடுத்த நாள் பள்ளி விடுமுறை. சீதாவும் ராஜாவும் கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள்.
சீதா, "ஆமாம்! உன் அப்பா காணாமல் போனால் எங்கு தேடுவாய்?" என்று கேட்டாள்.
"அவர் எப்பவும் குளியல் அறையில் தான் ஒளிந்து கொள்வார்," என்றான் ராஜா.
"ஆனால் என் அப்பா அங்கு இல்லையே! எனக்கு எங்கு தேடுவது என்றே தெரியவில்லை," எனறாள் சீதா.
"வா!என் கிளி முத்துவிடம் கேட்கலாம்," என்றான் ராஜா.
"கீ!!கீ!!வா சீதா!" என்றான் முத்து.
"முத்து! என் அப்பா யார்? எங்கு இருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?" என்றாள் சீதா.
அப்போதுராஜாவின் அம்மா அங்கு வந்தார்.
"வா சீதா! எப்படி இருக்கிறாய்?" என்றார்.
"என் அப்பாவைப் பற்றி முத்துவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்றாள் சீதா.
"முத்துவிற்கு ஒன்றும் தெரியாது.உன் அம்மாவிடம் போய்க் கேள். அவர் சொல்வார்," என்றார் ராஜாவின் அம்மா.
சீதாவிற்கு அவள் அப்பாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ரொம்ப ஆசையாக இருந்தது. தன் அம்மாவிடம் அதைப் பற்றி் பேச முடிவு செய்து அவரைத் தேடிச் சென்றாள்.அம்மா பால்கனியில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"அம்மா! என் அப்பா எங்கே? எனக்கு அவரைப் பற்றிச் சொல்லுங்கள்," என்றாள்.
அம்மா வானத்தைக் காட்டி," அங்கே பார்! மிக அழகாக மின்னுகின்ற அந்த நட்சத்திரம் தான் உன் அப்பா," என்றார்.
"என் அப்பா நட்சத்திரமா?" என்றாள் சீதா.
'ஆமாம்! நீயும் ஒரு நாள் அவரைப் போல் நட்சத்திரமாக ஆவாய்!" என்றார் அம்மா.
சீதா அப்பாவைப் பற்றித் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியுடன் இரவு நிம்மதியாகத் தூங்கினாள்.