ஜுனுகா, விடுமுறைக்காக தனது அனாய்தியோவின்* கிராமத்திற்குச் சென்றாள். விடுமுறை நாட்களில் நெல் வளர்ப்பதுதான் அவள் திட்டம்.
“அரிசி பூதங்களிடம் கவனமாக இரு!” என்றார் அனாய்தியோ. அந்த கிராமத்தில் இருந்தவர்கள் அரிசி பூதங்களைப் பார்த்து அஞ்சினர்.
*அனாய்தியோ என்றால் அசாமிய மொழியில் பாட்டி.
ஆனால் ஜுனுகா அதற்கெல்லாம் அஞ்சவில்லை.
நெல் விதைப்பதற்கு முன் சிறிய வயலை உழ வேண்டும். “இந்த வேலைக்கு முழுதாக ஒரு நாள் ஆகும். எனக்கு கொஞ்சம் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று நினைத்தாள் ஜுனுகா.
திடீரென்று, அவளை நோக்கி ஏதோ ஊர்ந்து வரும் சத்தம் கேட்டது.
கசமுச
கசமுச
கசமுச
“ஆஆஆ! அரிசி பூதம்!” ஜுனுகா அலறினாள்.
அந்த பூதம் தன் மின்னும் நகங்களைக் காட்டியது...
“ஆகா! உன் வயல் விதைக்கத் தயாராகிவிட்டது.”
கரக்
கரக்
கரக்
கரக்
கரக்
கரக்
“என் பெயர் உழவுப் பிசாசு” என்றது அந்த அரிசி பூதம். “என் மீது ஏறிக்கொள். விதைகளை விதைக்க நான் உனக்கு உதவுகிறேன்.”
ஜுனுகா ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு அவள் உழவுப் பிசாசின் முதுகில் ஏறிக்கொண்டாள். அவளைச் சுமந்தபடி அது விதைகளைத் தூவியது. அடுத்ததாக, இருவரும் வயலில் நீர் நிரப்பினர்.
நாளடைவில் விதைகள் நாற்றுகளாக வளர்ந்தன.
“இவற்றை பெரிய வயலுக்கு மாற்றும் நேரம் வந்துவிட்டது” என்றது உழவுப் பிசாசு. ஜுனுகா நாற்றுகளைப் பிடுங்க, உழவுப் பிசாசு அவற்றைக் கட்டியது. அதன்பின், இருவரும் பெரிய வயலைத் தயார் செய்யக் கிளம்பினர்.
உழவுப் பிசாசு பெரிய வயலை உழ, ஜுனுகா நீர் பாய்ச்சினாள். வயல் மண் மென்மையான சேறாகி நடவு செய்யத் தயாரானது.
அப்போது ஜுனுகாவுக்கு தண்ணீரில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது... ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்!
“ஆஆஆ! அரிசி பூதம்!” ஜுனுகா அலறினாள்.
“இவள் செடி யட்சி. இவள் நடவு செய்ய உதவுவாள்” என்றது உழவுப் பிசாசு. செடி யட்சி தன் பெரிய சிவப்பு நாக்கால் நாற்றுகளை எடுத்துக் கொண்டது. பிறகு சேற்றைக் கடித்தது. ஒவ்வொரு கடிக்கும் பல டஜன் நாற்றுகளை நட்டது.
விரைவில் வயல் நிரம்பியது.
நாற்றுகள் வளரத் தொடங்கியதும், ஜுனுகா சோளக்கொல்லை பொம்மைகளை அமைத்தாள்.
நெற்பயிர்கள் பூத்தன. அறுவடைக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. புதரில் ஏதோ சத்தம் கேட்டது...
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
“ஆஆஆ! அரிசி பூதம்!” ஜுனுகா அலறினாள்.
“இவள் அறுவடை அரக்கி. இவள் அறுவடை செய்ய உதவுவாள்” என்றது செடி யட்சி.
சஜக்!
முறுக்!
தூ!
அறுவடை அரக்கி பயிர்களை வெட்டியது
தண்டுகளைக் கடித்தது
தானியங்களைத் துப்பியது
...தானியங்கள் மலையாகக் குவிந்தன.
“இப்போது நாம் தானியங்களிலிருந்து உமியை அகற்ற வேண்டும்” என்றது அறுவடை அரக்கி. “வா, என் தோழன் தூற்றுப் பேயைப் பார்க்க ஆலைக்குப் போவோம்.”
ஆலையில், ஒரு இருண்ட மூலையில் இருந்த பெரிய பயமுறுத்தும் பூதத்தைச் சந்தித்தனர்.
“வணக்கம்” என்றாள் ஜுனுகா.
ஆஆஆஆஆஆஆ!
“மனிதக் குழந்தை!” தூற்றுப் பேய் அலறியது.
“இவள் பெயர் ஜுனுகா. இவளுக்கு கொஞ்சம் உதவி செய்யேன்” என்றது அறுவடை அரக்கி.
தூற்றுப் பேய் தன் வாயை அகலமாகத் திறந்தது. ஜுனுகா நெல்லை அதன் வாயில் கொட்டினாள். கடைசியில், பளபளவென்ற வெள்ளை அரிசி கிடைத்துவிட்டது.
அன்று இரவு, கிராமத்தில் விருந்து நடந்தது. ஜுனுகாவும் பூதங்களும் அணிவகுத்துச் சென்றனர்.
பூதங்களோடு சேர்ந்து அறுவடை செய்த அரிசியை எல்லோருக்கும் காட்டினாள் ஜுனுகா. “இந்த அரிசி பூதங்கள் நமக்கு உதவத்தான் விரும்புகிறார்கள்” என்றாள்.
ஏஏஏஏஏஏஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஜுனுகா அரிசி பூதங்களோடு விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்தாள்.
நெல் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்
நெல் வேளாண்மை என்பது நீண்ட மற்றும் கடினமான வேலை. ஆனால், நான்கு பூதங்களின் உதவியுடன் ஜுனுகா அரிசியை எளிதாக விளைவிக்கிறாள். அந்த நான்கு பூதங்களைப் போலவே, அரிசியை எளிதில் விளைவிக்க உதவும் வேளாண் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் சில:
உழவு இயந்திரம்
உழவுப் பிசாசைப் போல, இந்த இயந்திரம் விதை விதைக்க, மண்ணைத் தளர்த்த, பயிர் நட உதவுகிறது.
அரிசி நடவு இயந்திரம்
செடி யட்சி போல, இந்த இயந்திரம் உழவர்களுக்கு நாற்று நட உதவுகிறது.
அறுவடை இயந்திரம்
அறுவடை அரக்கியைப் போல, இந்த இயந்திரம் பயிரை வெட்டி சேகரித்து, நெல் தானியத்தையும் தண்டுகளையும் பிரிக்கிறது.
உமி அகற்றும் இயந்திரம்
தூற்று பூதத்தைப் போல, இந்த இயந்திரம் நெல்லில் உமியை நீக்கி, அரிசியாக்க உதவுகிறது.