ஒரு நாள் அவனி சமயலறையில் உட்கார்ந்து தன் அம்மா சமைப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுடைய அம்மா குக்கரை தயார் செய்துக்கொண்டு இருந்தார்கள்.
'அந்த பட்டாணியை இங்கு எடுத்துக்கொடு, அவனி', என்றார் அவள் அம்மா.
அவனி மேஜையில் இருந்த ஒரு கிண்ணம் நிறைய பட்டாணியை எடுத்து அவள் அம்மாவிடம் கொடுத்தாள்.
கிண்ணத்தில் இருந்து ஒரு பட்டாணி விழுந்ததை அவளும் அம்மாவும் பார்க்கவில்லை.
அந்த பட்டாணி, மேஜை மேல் துள்ளி, தரையில் விழுந்து...
...மேஜை அடியில் உருண்டு சென்றது.
சிக்கி என்னும் பூனை அதை கண்டுபிடித்தது.
பூனை அதனை தள்ளியது, தொட்டுப் பார்த்தது, பின் நக்க முயன்றது.
அந்த பட்டாணி சமையலறையின் கதவின் அருகே உருண்டு சென்றது.
சிக்கி அதனை மீண்டும் தள்ளி விட்டது.
அது உருண்டு...
...தோட்டத்திற்குள் சென்றது.
ஒரு மைனா அந்த பட்டாணியை பார்த்தது. அது தன் அலகினால் பட்டாணியை கொத்தியது. ஆனால் அது கடினமாக இருந்தது.
மைனா அதனை மீண்டும் கொத்தியது. அப்போது பட்டாணி துள்ளி, நிலத்தில் ஒரு தக்காளிச் செடி அருகே விழுந்தது.
ஒரு மண்புழு பூமியில் இருந்து வெளியே வந்தது. அது அந்த பட்டாணியை பார்த்தது. ஆனால் அதற்கு பட்டாணி சுவாரசியமாக இல்லை. அதனால் அது பூமிக்குள் மீண்டும் சென்றது.
இப்போது பூமியில் ஒரு ஓட்டை இருந்தது!
அந்த பட்டாணி ஓட்டைக்குள் விழுந்து, மணல் அதனை மூடியது. இப்போது அது குளிர்ந்த, கருமையான மண்ணில் இருந்தது.
நாட்கள் கழிந்தன. மழை பெய்யத் தொடங்கியது.
அந்தப் பட்டாணி ஈரமாகி, வீங்கியது.
பின் மேலும் பெருத்தது.
அதற்கு ஒரு வால் வளர்ந்தது...
...மற்றும் ஒரு கிரீடம் வளர்ந்தது.
அந்தக் கிரீடம் பூமியில் இருந்து வெளியே வந்து, சூரியனை நோக்கி வளரத் தொடங்கியது.
அது உயர உயர வளரத் தொடங்கியது.
அவனி தோட்டத்தில் விளையாடும் போது அதனைப் பார்த்தாள்.
"அம்மா, இங்கே பாருங்கள்!", என்றாள்.
"பட்டாணிச் செடி!", என்றார்கள் அம்மா.
இருவரும் பட்டாணிச் செடியை பார்த்து, மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.
"நீ அதை நட்டு வைத்தாயா?", என்று அம்மா அவளிடம் கேட்டார்கள்.
"இல்லை அம்மா, நீங்கள் விதைக்கவில்லையா?",என்று அவானி கேட்டாள்.
"பின் யார் இதை செய்தார்கள்?", என்று அவர்கள் வியந்தனர். "யார் செடியை நட்டு வைத்தது?"
உங்களுக்கும் எனக்கும் தெரியும், இல்லையா?
இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்!
1. ஓரு சிறிய தொட்டியில் விதை விதைத்து, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள்.
2. தொட்டியை ஒரு இருண்ட, குளிர்ந்த இடத்தில் வைத்தால் அது வளர்கிறதா?
3. பல முளைத்த விதைகள் மற்றும் தானியங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
உங்களுக்கு சாப்பிட பிடித்த முளைப்பயிர்கல் எவை?