azhagiyai kaanavillai

அழகியைக் காணவில்லை

டெஸ்ஸம்மாவின் செல்ல எருமையைக் காணவில்லை! அவளுக்கு என்னாச்சு என்று யாருக்குமே தெரியவில்லை. அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று கான்ஸ்டபிள் ஜின்ஸி தீர்மானமாக இருந்தார். கிராமம் முழுக்க அலைந்து திரிந்து, மக்களிடம் பேசி, ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என முயற்சி செய்துகொண்டே இருந்தார். ஜின்ஸியால் அழகியைக் கண்டுபிடிக்கமுடியுமா? இசையை நேசிக்கும் எருமையைக் கண்டுபிடிப்பதற்கான புதிர் விளையாட்டு இங்கே தொடங்குகிறது.

- M. Gunavathy

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒருநாள் ராத்திரி அழகி காணாமல் போய்விட்டாள். அதுக்கு அடுத்தநாள் காலையில் எருமன்னூர் காவல் நிலையத்தில் ஒரே சிரிப்புச் சத்தமாக இருந்தது.

ஹூஊஊ… ஹாஹாஹாஹாஹா!

“யாருங்க எருமைக்கு அழகின்னு பேர் வைச்சது!” குலுங்கிக் குலுங்கி சிரித்தபடியே கேட்டார் இன்ஸ்பெக்டர் கோபி.

இருவருக்கு மட்டும்தான் அங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துச் சிரிப்பு வரவில்லை.

செல்லமாக வளர்த்த எருமை அழகியைத் தொலைத்த டெஸ்ஸம்மாவும், எருமன்னூர் காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் ஜின்ஸி ஜோஸும்தான் அந்த இருவர்.

ஜின்ஸி உடனே வேலையில் இறங்கினார்.

“உங்க அழகியைப் பத்திச் சொல்லுங்க” என்று கேட்டார் ஜின்ஸி.

“ஒரே வார்த்தையில சொல்லணும்னா, அவ ஒரு அழகி” என்றார் டெஸ்ஸம்மா.

பாம் பாம்! பாம்ம்ம்ம்ம்!

“நிஜமாவே அவ ரோட்டுல போற வண்டிங்க எல்லாத்தையும் நிறுத்தி வச்சுடுவா!”

“காலையில பால் கறக்கும்போது, அவளோட ரேடியோவுல மேற்கத்திய க்ளாசிக்கல் இசையைக் கேக்கணும்னு சொல்லுவா!”

“புல் மேயும்போது, இந்திப் படப் பாட்டுதான் கேப்பா.”

“தன்னை அழகாவே வெச்சிக்குறதுக்காகவும், குளிர்ச்சிக்காகவும் குளத்துல நின்னுக்கிட்டு இருப்பா - அப்படி நிக்கும்போது அவளுக்கு மலையாள காதல் பாட்டுகளைப் போட்டுவிடணும்.

அதுதான் அவளுக்குப் பிடிக்கும். ராத்திரி ஆச்சுதுன்னா, மென்மையான வாத்திய இசையைக் கேட்டாத்தான் தூங்குவா”

“என்ன ஒரு அற்புதமான இசை ரசனை” என்று நினைத்தார் ஜின்ஸி.

கிராமம் முழுவதும் சுற்றி அழகியைப் பற்றி விசாரிக்க ஜின்ஸி முடிவு செய்தார்.

வழியில் பார்த்த தொம்மச்சனிடம் விசாரித்தபோது அவர் அழகியைப் பார்க்கவேயில்லை என்று சொன்னார்.

“மன்னிச்சிடு, எனக்கு அழகின்னு எந்த எருமையையும் தெரியாது. அது மட்டுமில்ல உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு எருமைங்களையே பிடிக்காது. எனக்கு என்னோட பசுமாடு சந்தனக்குட்டியைத்தான் பிடிக்கும். அவ எருமைங்களை மாதிரி சேத்துல விழுந்து புரள மாட்டா.”

உள்ளூரில் இருக்கும் குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த சகோதரிகள் ரமணியையும் சாவித்திரியையும் கூட ஜின்ஸி விசாரித்தார். அவர்களும் அழகியைப் பார்க்கவே இல்லை என்றுதான் சொன்னார்கள்.

“அழகியை மூக்கணாங்கயிறு மாட்டாம அங்கயும் இங்கயும் அலைய விடாத டெஸ்ஸம்மான்னு நாங்க நூறு தடவை சொல்லிட்டோம். ஒரு குச்சியை வெச்சு நாலு அடி கொடுத்தா என்ன கெட்டுப்போயிடும்? ஆனா, அழகிக்கு வலிக்கும். மென்மையான தோலுன்னு சொல்லுவாங்க.

ம்ம்கும்! எப்படியா இருந்தாலும் அந்த உருப்படாத எருமையை யாரு திருடப்போறாங்க?” என்றார் ரமணி.

“ஹிஹி,” என சிரித்த சாவித்ரி, “அவ அழகான பசுமாடா இருந்தா நானே அவளைத் திருடியிருப்பேன்” என்றார்.

கொஞ்சநேரத்துக்கு முன்னால் தன் லாரியை ரிப்பேர் செய்துகொண்டிருந்த ஒருவரை ஜின்ஸி பார்த்திருந்தார். அவரது லாரியில் இருந்து சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.

“ஏம்ப்பா, இங்க அழகான கருப்பு எருமை ஒன்னு சுத்திக்கிட்டு இருந்ததை பார்த்தீங்களா?”

“என்னை எதுக்கு கேக்குறீங்க? நான் இந்த இடத்துக்கு புதுசு. என்னோட லாரியை ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட லாரி முழுக்க பலாப்பழங்களா இருக்கு. எருமைங்க ரொம்ப நல்லா பழகும். அதுங்க நண்பர்களோட எங்கேயாவது திரிஞ்சுக்கிட்டு இருக்கும். எப்படியா இருந்தாலும் நான் எதுக்கு ரேடியோ கேக்குற எருமையைத் தெரிஞ்சுக்கணும்? இன்னைக்கு மழை வரலாம். இன்னைக்கு மழை வரும்னு நினைக்கிறீங்களா?

நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”

ஜின்ஸி எருமன்னூர் முழுக்க அழகியைத் தேடி சைக்கிளில் சுற்றினார். ஆனால் அவருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

“மன்னிச்சுடுங்க, எருமைகள் எதையும் பாக்கல.”

“நடுராத்திரியில காணாமப் போச்சுங்களா? இந்த நேரத்துக்கு கறி மார்கெட்டுல வித்திருப்பாங்களே.”

“ஒருவேளை அங்க இருந்து தப்பிச்சுப்போனா போதும்னு நினைச்சிருக்கலாம்?”

“அழகியா? என் மகளோட பேரும் அழகிதான்!”

“மத்த எருமைகளுக்கும், இதுக்கும் வித்தியாசம் தெரியலண்ணா, அதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க?” இப்படி பல பதில்கள் வந்தன

துல்கர் இக்காவும் அழகியைப் பார்க்கவில்லை. ஆனால், அவருடைய டீக்கடையில் அழகியைப் பற்றி போஸ்டர் ஒட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

ஜின்ஸி களைத்துப் போய்விட்டார்.

ப்ஸ்ஸ்… ப்ஸ்ஸ்… ப்ஸ்ஸ்ஸ்… ஸ்குவாக்… ஃப்ஷு!

அப்போது

ப்ராஆஆஆஆங்!

ஜின்ஸிக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது!

மீண்டும் அழகியின் கொட்டகைக்கே ஜின்ஸி திரும்பிவந்தார்..

அழகியைக் காணவில்லைதான். ஆனால், அழகியோடு சேர்ந்து வேறு ஒன்றும் காணாமல் போயிருந்தது.

அன்றைக்கு இரவு ஜின்ஸிக்கு சில விஷயங்கள் புரியத் தொடங்கின. அந்த இருட்டில் , லாரியில் மின்மினிப்பூச்சி மட்டுமில்லாமல் வேறு ஏதோ ஒரு விஷயமும் மின்னிக்கொண்டிருந்தது.

ஸ்ஸ்ஸ்ஸ்க்க்க்ஸ்ஷ்யூ…

ஜின்சி அழகியைக் கண்டுபிடித்துவிட்டார்.

அழகியைக் கடத்திக்கிட்டுப்போன ஷாஜி குட்டப்பனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். “ஜின்ஸி, அழகிய எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று டெஸ்ஸம்மா கேட்டார். “ரொம்ப சுலபம்தான். ரேடியோ கேக்குற எருமையை நான் பாக்கலன்னு ஷாஜி சொன்னான். அழகி ரேடியோ கேக்கும்னு நான் சொல்லவே இல்ல. அன்னைக்கு ராத்திரி அழகியைத் திருடி, அடுத்த நாள் பக்கத்து கிராமத்துக் கறிக்கடையில அழகியை வித்துடலாம்னு நினைச்சிருக்கான். ஆனா அவன் நினைச்ச மாதிரி அவனோட திட்டம் பலிக்கல”

கொட்டகையை விட்டு அழகியை இழுக்க, ஷாஜி எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்கான்.

ஆனா அழகி நகர்ந்து போகாமயே இருந்திருக்கா.

அதனால ரேடியோவை எடுத்துக்கிட்டு போயிடலாம்னு ஷாஜி நினைச்சிருக்கான்.

ஆனா அவனுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரி ஒன்னு நடந்திருக்கு, ரேடியோ இல்லாம இருக்கமுடியாதுங்குறதால, ரிப்பேரா இருந்த லாரிக்கு அழகியும் அவனோட போயிடுச்சு.

தன் செல்லமான அழகி திரும்பி வந்த சந்தோஷத்தில் டெஸ்ஸம்மாவுக்கு தலைகால் புரியவில்லை.

“உண்மையிலே, அழகி நிஜமாவே அழகிதான்” என்று சொன்னார் இன்ஸ்பெக்டர் கோபி.

அழகியும், மற்ற எருமைகளும்

மற்ற எருமைகளுடன் நன்றாக ஒத்துப்போய் பழகும் சுபாவம் கொண்ட எருமைகள் புத்திசாலிகளும் கூட. சூரியக் கதிர்களிடம் இருந்தும், பூச்சிக்கடிகளில் இருந்தும் தங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ளதான் அவை சகதியிலும், புழுதியிலும் நிற்கின்றன. அவற்றுக்கு புல்மேயப் பிடிக்கும். எருமைகளுக்கு மென்மையான இசையைக் கேட்கப் பிடிக்கும் எனவும் இசை எருமைகளின் அழுத்தத்தைக் குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் சொல்கின்றன.