ஒரு நாள், கிராமத்தில் வசிக்கும் சாங் என்ற வயதான பெண்மணிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம், பீஜிங்கிலிருந்து தூரத்தில் வசிக்கும் அவள் மகனிடம் இருந்து வந்திருந்தது. அவளுக்கு படிக்க தெரியாது. அதனால், தன் வாசல் வழியே யாராவது வந்தால் படிக்க சொல்லலாம் என்று காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து, அவ்வழியே மாவீரர் வெண் தன் வளைந்த கொம்பை ஆட்டி கொண்டு வந்தார். வயதான சாங் அவரை நிறுத்தி, "தைரியமான மாவீரனே, எனக்கு ஒரு தயவு செய்வாயா? என் மகனிடம் இருந்து வந்த கடிதத்தை எனக்காக சத்தமாக வாசிப்பாயா? "
மாவீரர் வெண் உடனே ஒப்புக்கொண்டார். வெண் அந்த வயதான பெண்மணியிடம் கடிதத்தை வாங்கி பிரித்தார். சாங் தன் மகனிடம் இருந்து வந்த செய்தியை கேட்க ஆவலோடு இருந்தாள். ஆனால், அந்த கடிதத்தை பார்த்தவுடன் வெண் சத்தம் போட்டு அழுதார்.
"என்ன வெண், என்ன ஆயிற்று? என்னிடம் சொல்லுங்கள். என் மகனுக்கு ஏதாவது ஆபத்தா?" என்று சாங் ஆர்வத்துடன் கேட்டார். ஆனால் வெண் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. வெண் சாங்கை பார்த்து இன்னும் அதிகமாக சத்தம் போட்டு அழுதார்.
பாவம் சாங். தன் மகனுக்கு ஏதோ பயங்கரம் நடந்துவிட்டது என்று நம்பினாள். அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவள் சத்தமாக ஓலமிட்டாள்.
பச் பச் பச்... என்று இருவர் கன்னங்களிலும் கண்ணீர் வடிந்தது.
சிறிது நேரம் கழித்து, அவ்வழியே சுற்றி திரிந்து வியாபாரம் செய்பவன் ஒருவன் வந்தான். அந்த வியாபாரி அந்த வயதான பெண்ணும் மாவீரனும் சேர்ந்து அழுவதை பார்த்தான். அந்த வியாபாரி அவர்களோடு சேர்ந்து அழ ஆரம்பித்தான். மூவரும் என்ன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அந்த மூன்று அழுமூஞ்சிகளும் நெஞ்சு உடைய அழ ஆரம்பித்தார்கள். பா பா...பூ பூ....ஹூ ஹூ ஹூ....
அவர்கள் அழுவதைக் கேட்ட மாஸ்டர் மிங், தன் அருகில் இருந்த பள்ளியில் இருந்து ஓடி வந்தார். நிறைய சிறுவர்கள் ஆர்வமாக அவர் பின்னால் ஓடி வந்தனர். அந்த சிறுவர்கள் சிரித்தார்கள், அரட்டை அடித்தார்கள், கிசு கிசுத்தார்கள். ஆனால் எல்லோரும் பள்ளி சிறிது நேரம் தடைப்பட்டதால், உற்சாகமாக இருந்தார்கள்.
அவர்கள் கூட்டமாக அழுவதைப் பார்த்து, அவர்கள் அருகில் கவலையுடன் ஓடி வந்தார். இப்படி அழுவதற்கு என்ன கெட்ட செய்தியாய் இருக்கும் என்று அவர் ஆச்சரியப்பட்டார். பா பா...பூ பூ....ஹூ ஹூ ஹூ.... என்ற சத்தம் தான் வந்தது.
மாஸ்டர் மிங் தன் பொறுமையை இழந்தார். "கத்தும் கழுதை புலிகளே, உங்கள் வாயை மூடுங்கள்," என்று இடி போல முழங்கினார். மிங்கின் குரல் அவர்களை விட சத்தமாக இருந்ததால் அழும் மூவரும் பின் வாங்கினார்கள். முதலில் வியாபாரி பெங் தான் பதில் சொன்னான்.
அவன் தன் மூக்கை உறிஞ்சியபடியே, "நான் நூறு பானைகளை செய்திருந்தேன். ஆனால் என் கழுதை அதன் நிழலை பார்த்தே பயந்து சத்தம் போட்டது!
என் பானைகள் ஒன்று ஒன்றாக உருண்டு ஓடி மண்ணில் விழுந்து சுக்கு நூறாயிற்று. ஒரு அழகிய குடம் கூட உடையாமல் இல்லை. நான் மிகவும் வருந்தினேன். நான் அப்போதே அழுது தீர்த்திருக்க வேண்டும். ஆனால் நான் நஷ்டத்தை எப்படி சரி செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதனால் அழுவதை தள்ளி போட்டேன்.
இன்று இந்த இரண்டு பேரும் அழுவதை பார்த்தவுடன், என் உடைந்து போன அறிய பானைகளை நினைத்து அழ ஆரம்பித்தேன். ஆ ஆ ஆ ...
சாங், "எனக்கு பீஜிங்கில் இருக்கும் என் மகனிடம் இருந்து இன்றைக்கு கடிதம் வந்தது. எனக்குப் படிக்கத் தெரியாது. அதனால் நான் மாவீரர் வெண்ணை படித்து காட்ட சொன்னேன். ஆனால், அவர் கடிதத்தை திறந்ததும் அழ ஆரம்பித்தார். என் மகனுக்கு எதோ கஷ்டம். என்ன செய்வது? ஆ ஆ ஆ...
மாஸ்டர் மிங் சாங்கிற்கு ஆறுதல் சொன்னார். அப்போது, மாவீரர் வெண் பேச ஆரம்பித்தார். "உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் பள்ளியில் பாட புத்தகங்களை கூட படித்தது இல்லை. நான் ஆசிரியர்களையும் பாடங்களையும் கவனிக்காததால், எனக்கு படிக்கத் தெரியாது. அதனால் நான் வெட்கம் கொள்கிறேன்," என்று கூறி ஓவென அழ ஆரம்பித்தான்.
இதை கேட்ட மாஸ்டர் மிங் ஆச்சரியத்தில் வாயை பிளந்தார்!
விளக்கு செய்யலாம், வாருங்கள்:
காகிதம் முதலில் இந்த கதை வந்த சீனாவில் தான் உருவாக்கினார்கள். சீனாவில் காகித கைவினை பிரபலமானது. உங்கள் வீட்டில் ஒளியேற்ற ஒரு விளக்கு செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1. இரண்டு வண்ண காகிதங்கள் ( 21 சென்டிமீட்டர் x 29 சென்டிமீட்டர்)
2. கத்தரிக்கோல். 3. பசை
விளக்கு செய்யும் முறை:
1. நீட்டுவாக்கில் காகிதத்தை பாதியாக மடிக்கவும்.
2. கத்தரிக்கோலை வைத்து, படத்தில் காண்பித்தது போல மடித்த ஓரத்தில் வெட்டி கொள்ளுங்கள்.
3. காகிதத்தை மறுபடியும் விரியுங்கள்.
4. நீட்டுவாக்கில் காகிதத்தை வைத்து, வலது பாகத்தை இடது பாகம் மேல் வைக்கவும்.
5. ஓரங்களை ஒட்டி ஒரு வட்டம் போல செய்து கொள்ளவும்.
6. ஒரு காகிதத்தை வெட்டி படத்தில் காண்பித்தது போல வளைத்து மேலே ஒட்டவும்.
7. சிறு காகித துண்டுகளை படத்தில் காண்பித்தது போல கீழே ஓட்டுங்கள்.
காகித விளக்கு தயார் ஆகி விட்டது! வீட்டில் விளக்கை தொங்கவிடலாம்!