bale burli

பலே புர்லி!

அனுபவ அறிவு வாய்ந்த கோண்டு மலைவாழ் மக்கள் அடர்ந்த காடுகளின் அருகே வாழ்கின்றனர். அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டின் ஒவ்வொரு குறுக்கு-நெடுக்கான பாதை, ஒவ்வொரு பெரிய குங்கிலிய மரம், இலுப்பை மரம், கீரிப் பிள்ளையின் தடம், புலியின் தடம், அத்தனையும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும்! அது மட்டும் இல்லை, அதற்கும் மேலே பல விஷயங்கள் தெரியும்! சிறுமி புர்லி இயற்கையின் குறிகளை அறிந்து கொண்டு அதன்படி நடக்கக் கற்றுக் கொள்கிறாள். ஆனால், அவள் இந்த பயங்கரமான சோதனையைச் சந்திக்க தயாரா?

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு கூரை வீட்டின் திண்ணையில் பாட்டி ஒருவர் அவர் பேத்தியுடன் அமர்ந்திருந்தார். “எனக்கு ஒரு கதை சொல்லுங்ளேன்” என்று அந்தக் குழந்தை பாட்டியின் கையை பிடித்துக் கெஞ்சினாள். “கதையா! ம்ம்ம், என்ன சொல்லலாம்? ஒரு துணிச்சலான குட்டிப் பெண்ணின் கதை சொல்லவா?” என்று பாட்டி கேட்டார். ஆர்வத்துடன் அந்தக் குழந்தை தலையாட்டினாள். “சரி, சொல்கிறேன் கேள்!” என்று பாட்டி கதையை ஆரம்பித்தார். “ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே…

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் தாழ்ந்த கூரையுள்ள பல குடிசைகள் இருந்தன. அந்தக் குடிசைகளில் ‘கோண்டு’ என்னும் மலைவாழ் மக்களின் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டின் ஒவ்வொரு குறுக்கு-நெடுக்கான பாதை, ஒவ்வொரு பெரிய குங்கிலிய மரம், இலுப்பை மரம், கீரிப் பிள்ளையின் தடம், புலியின் தடம், அத்தனையும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும்!

அது மட்டும் இல்லை, அதற்கும் மேலே பல விஷயங்கள் தெரியும்! புர்லிமுண்டி ஒரு சிறிய மலைவாழ் இனப் பெண். அவள் தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து, அவள் குடிசையின் அருகில் இருக்கும் ஓடையில் குளித்துவிட்டு, அவள் அம்மாவுக்கு மாண்டியா–ஜா என்னும் கேழ்வரகு-அரிசிக் கஞ்சி செய்ய உதவி செய்வாள். என்ன சுவை! புர்லிமுண்டி அவள் கஞ்சிக் கிண்ணத்தை வழித்துச் சாப்பிட்டு விட்டு ஓடையில் பாத்திரம் கழுவி, அவள் அம்மாவுக்கு உதவுவாள்.

பிறகு, எல்லாப் பெண்களும் சேர்ந்து, அவரவர் வீட்டுக் கதவுகளை இழுத்துப் பூட்டிவிட்டு சுள்ளி, கிழங்கு, பழங்கள் ஆகியவற்றைப் பொறுக்குவதற்காக காட்டின் அருகில் இருக்கும் மலை மீது ஏறுவார்கள். அந்தப் பாதை மிகவும் செங்குத்தானதாகவும் நீண்டதாகவும் இருக்கும். ஆனால், புர்லிமுண்டி உறுதியும் குரங்கு குட்டி போலச் சுறுசுறுப்பும் முயல் குட்டி போல வேகமும் உடைய பெண் ஆயிற்றே! இதற்கிடையில், கிராமத்தில் இருக்கும் சில இளைஞர்களும் புர்லிமுண்டியின் தந்தையும் அவளின் இரு அண்ணன்களும் காட்டினுள்ளே வேட்டையாடச் செல்வார்கள். மற்றவர்கள், உழுவதற்காக வயலுக்குச் செல்வார்கள்.

ஒரு நாள் புர்லிமுண்டி, அவள் அம்மாவின் மணிமாலைகளை பார்த்துக் கொண்டே, ‘நான் எப்போழுது உங்களைப் போல மூக்கு காது குத்தி, முகத்தில் பச்சை குத்திக் கொள்வேன்?’ என்று கேட்டாள். ‘ஓ! புர்லி, அதற்கு வெகுகாலம் இருக்கின்றது. உனக்குத் தக்க வயதாகும் போது நீ மணிமாலைகள் போட்டுக் கொள்ளலாம். ஆனால், நான் உன்னை முகத்தில் ஊசியால் பச்சை குத்திக்கொள்ள விடமாட்டேன்!’ என்று பெருமூச்சுடன் அவள் அம்மா கூறினார். புர்லிமுண்டி, முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள். வளர்வதற்கு நிறைய நாள் ஆகும் போலிருக்கிறதே. ஆனால், இப்போது விளையாட உகந்த நேரம்!

புர்லி குட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். அது கோடைக்காலம். ஓடைகளில் நீர் வற்றி இருந்தாலும் மாமரங்களில் பச்சையும் மஞ்சளும் சிகப்புமாக நிறைய பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. புர்லி கிடுகிடுவென ஒரு மரத்தில் ஏறி அதன் இலைகளுக்கிடையே மறைந்து கொண்டாள்.

‘ஆயா! நான் எங்கிருக்கிறேன் என்று கண்டு பிடியுங்கள்’ என்று அவள் அம்மாவை நோக்கிக் குரல் கொடுத்தாள். புர்லிமுண்டியின் அம்மா பிரேம்சிலா மாஜி, அவர் மகளைத் தேடுவது போல நடித்து விட்டு, ‘அய்யோ! என் மகளைக் காணவில்லையே. ஒரு வேளை அவளை மர முனி தூக்கிக் கொண்டு போய் விட்டதோ? நான் அவளைத் திரும்பி அழைத்து வர, பூசாரி ஜானியை கூப்பிடுகிறேன்!‘ என்று குரல் கொடுத்தாள். மலைவாழ் மக்களுக்கு, குழந்தைகளைத் தூக்கிச் சென்று துரதிர்ஷ்டம் பரப்பும் மர முனி என்றால் மிகவும் பயம். ‘ஆயா! நான் இங்கிருக்கிறேன்‘ என்று பதற்றத்துடன் கத்திக் கொண்டே புர்லிமுண்டி, கையில் மாம்பழத்துடன் மரத்திலிருந்து குதித்தாள். எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். ‘ஓ புர்லி, இன்னும் நிறைய மாம்பழம் பறி. நாங்கள் உன்னை சும்மா பயமுறுத்துகிறோம்‘ என்று பிரேம்சிலா கூறினார்.

புர்லிக்குக் கோபம் வந்துவிட்டது. அவள், தன் அம்மாவை விட்டு விலகி, காட்டினுள்ளே ஓடினாள்.

முகத்தை சுனக்கிக் கொண்டு, ’ஆயாவுக்குப் பேய்க்கதை சொல்லி என்னைப் பயமுறுத்துவதே வேலை’ என்று முனகினாள். காடு மிகவும் அடர்ந்து, இருட்டாக இருந்தது. பறவைகளின் பாட்டும் குரங்குகளின் சத்தமும் சுற்றிலும் எதிரொலித்தது. புர்லி தைரியமாக தனியே நடந்தாள்.

அப்பா தினமும் வேட்டையாட இங்குதான் வருகிறார். ஆனால் என்னிடம் மட்டும், காடு சின்ன குழந்தைகள் விளையாடும் இடம் இல்லை என்று ஏன் சொல்கிறார் என்று யோசித்தாள். திடீர் என்று காட்டில் பயங்கரமான சப்தங்கள் கேட்டன. குங்கிலிய மர இலைகளினூடே வீசிய காற்றில், பறவைகளின் பதற்றமான சலசலப்பு சப்தம் கேட்டது. அணில்கள் பயத்துடன் கிறீச்சிட்டன. குரங்குகள் மரப் பொந்துகளில் ஒளிந்து கொண்டன.

’என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் புர்லி.

எதோ உருளும் சப்தம் கேட்டது. இடியாக இருக்கும் என்று ஆகாயத்தைப் பார்த்தாள் புர்லி. ஆனால் அது இடி சப்தம் இல்லை! என்ன சப்தமாக இருக்கும் என்று யோசிக்கும் போதே புர்லிக்கு ஒரு உறுமல் சப்தம் கேட்டது. இந்த முறை எந்தப் பிழையும் இருக்க முடியாது. ராட்சசனின் உறுமலைப் போன்ற தெளிவான அந்த சப்தத்தைக் கேட்டு குங்கிலிய மரங்கள் கூட நடுநடுங்கின. புர்லிமுண்டி அப்படியே நின்று விட்டாள். அது புலியின் சப்தம் என்று உணர்ந்தவளுக்குக் கால்கள் மரத்துப் போயின.

’அய்யோ என்ன செய்ய போகிறேன்?’ என்று முணுமுணுத்தாள் புர்லி. தனியே இருந்த அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. செடி கொடிகள் சலசலத்தன. சட்டென்று கருப்பு-மஞ்சள் நிறம் மரங்களுக்கிடையே பளபளத்தது. தீப்பொறி பறக்கும் கண்களுடனும் கூரிய பற்களுடனும் ஒரு பெரிய மிருகம் புர்லிமுண்டியின் முன் தோன்றியது. அதன் மீசை துடித்தது. அது பற்களை நறநறவென்று கடித்தபோது கூரிய கத்தியை சாணை பிடிப்பது போல சப்தம் உண்டாயிற்று. புர்லிமுண்டி ’வீல்’ என்று அலறியிருப்பாள். ஆனால், அவளுக்கு அவள் அப்பா கூறியது நினைவுக்கு வந்தது.

‘புர்லி, புலியை பார்த்தால் ஓடாதே. உன்னுடைய பயத்தை உணர்ந்து அது உன் மீது பாயும். அருகில் நெருப்பு இருந்தால், அதைச் சுழற்றி ஆட்டு. புலிகளுக்கு நெருப்பைக் கண்டால் பயம்.’

புர்லி முண்டி அசையாமல் நின்றாள். அந்த வீரமிக்க சிறிய பெண் குங்கிலிய மரத்தைப் போல நிமிர்ந்து நின்றாள். அன்று காலை சமையல் செய்யும் பொழுது வத்திப் பெட்டி ஒன்றை தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டது அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்போது ஏன் அப்படிச் செய்தாளோ, தெரியாது. ஆனால், அதுதான் விதி போலும். அந்த வத்திப் பெட்டிதான் இப்போது அவள் உயிரைக் காக்க போகிறது!

புலியின் கொழுந்து விட்டு எரியும் மஞ்சள் நிறக் கண்களும் புர்லியின் கரிய கண்களும் சந்தித்தன. புர்லி சற்றும் அசையவில்லை. புர்லி வீரம் மிகுந்த சின்னப் பெண். அம்மாவின் செல்லப் பெண். மின்னல் வேகத்தில் சட்டைப்பையில் கையை விட்டு வத்திப் பெட்டியை எடுத்து ஒரு வத்திக் குச்சியைக் கொளுத்தினாள். புலியின் பார்வை தடுமாறிய ஒரு விநாடி நேரத்தில் புர்லி ஒரு காய்ந்த சுள்ளியை எடுத்துப் பற்ற வைத்தாள். நெருப்பு சட்டென்று பிடித்துக் கொண்டு ராட்சனின் மஞ்சள் நிற நாக்கைப் போல எரிந்தது. புலி பயத்தில் பின்னால் குதித்தது.

நெருப்பு பந்தத்தை ஏந்தி நிற்கும் சிறிய பெண்ணைப் புலி பார்த்தது. நான் இவளைச் சாப்பிட வேண்டுமா என்று யோசித்தது. தனக்கு அவ்வளவாகப் பசியில்லை என்று உணர்ந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு சாப்பிட்ட குரங்கு அதன் வயிற்றைப் புரட்டுவது போல அதற்குத் தோன்றியது. ஒரு ஒல்லியான சிறிய பெண்ணுக்காக தன் உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா என்று யோசித்தது. வாலை சுழற்றிக் கொண்டு, ஒரு மெல்லிய உறுமலுடன் நகர்ந்து சென்றது. ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுடன் புர்லி வேகமாக அவள் அம்மாவை நோக்கி ஓடினாள்.

‘ஆயா, இப்போழுது தான் ஒரு புலியை பார்த்தேன். ஆனால் அது என்னைச் சாப்பிடவில்லை!’ என்று மூச்சு வாங்கிக் கொண்டு கூறினாள். அங்கிருந்த மற்ற பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ‘கொல்’லென்று சிரித்தார்கள்.

‘நீ எத்தனை இனிமையான குட்டி பெண். உன்னைப் புலி ஏன் சாப்பிடவில்லை புர்லி?’ என்று ஒரு பெண் கிண்டலாகக் கேட்டாள்.

புர்லி தலையைச் சொறிந்து கொண்டே,

‘ம்ம்ம்… தெரியவில்லை…. ஒரு வேளை எனக்கு நெருப்பு பற்ற வைக்கத் தெரியும் என்பதாலோ?’ என்று முணுமுணுத்தாள்.

‘நெருப்பு பற்ற வைத்தாயா? அது எப்படி உன்னால் முடியும்!’ என்று எல்லோரும் ஒரே சமயத்தில் கேட்டார்கள். ‘என்னால் முடியும்’ என்று கண்களில் நீர் மல்க அடம் பிடித்தாள் புர்லி. இந்தச் சமயத்தில் அவள் அம்மா குறுக்கிட்டார். ‘உஷ்! என் பெண்ணைக் கிண்டல் செய்யாதீர்கள். அவள் துணிச்சலானவள். அவளால் கண்டிப்பாக புலியைப் பயமுறுத்தித் துரத்த முடியும். அவளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!’ என்று பிரேம்சிலா கூறிவிட்டு புர்லியை ஆதரவாக அணைத்துக் கொண்டார். புர்லிமுண்டி அவள் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு சிரித்தாள். இருண்ட கோடைக்கால இரவுகளை ஜொலிக்க வைக்கும் புன்னகை அது!”

“புர்லிமுண்டி இப்பொழுது எங்கே இருக்கிறாள்?” என்று கதை கேட்ட சிறுமி அவள் பாட்டியை கேட்டாள். பாட்டி சிரித்துகொண்டே, “புர்லிமுண்டி வேறு யாரும் இல்லை, உன் முன்னால் உட்கார்ந்திருக்கும் உன் பாட்டியேதான் கண்ணே!” என்றார்.

இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் கண்கள் பளபளத்தன. “இந்த உலகத்திலேயே மிகவும் வீரமான பாட்டி நீங்கள்தான். நானும் உங்களைப் போல துணிச்சல் மிக்கவளாக இருக்க வேண்டும்!” என்று பெருமையுடன் கூறிவிட்டு, அவள் பாட்டியின் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தாள்.