"பொய்களில் எல்லாம் பெரிய பொய்யை சிருஷ்டித்தவனுக்கு ஒரு பரிசு கொடுப்பதாயிருந்தால், அந்தப் பரிசு நிராட்சேபணையாக ஈசுவரனைத்தான் சேரும். அது விஷயத்தில் பகவானுடன் போட்டி போடுவதற்கு யாராலும் முடியாது" - இம்மாதிரி சொல்லுகிறார்கள் வேதாந்திகள்.
இந்த உலகத்தைவிடப் பெரிய பொய் வேறு ஒன்றும் இல்லையென்பது அவர்களுடைய கொள்கை. இந்த உலகத்தின் இன்ப துன்பகளெல்லாம் பொய்; தேகம் பொய்; மனம் பொய்; விருப்பு வெறுப்பு, ஆசை பகைமை, கோபம் தாபம் எல்லாம் பொய் என்று சொல்லுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்கள், இதை நம்புவது இலேசான காரியமல்ல. இவ்வுலகின் சுக துக்கங்களெல்லாம் நமக்கு ரொம்பவும் வாஸ்தவமாயிருக்கின்றன. அந்தந்தச் சமயத்தில் அததை விட நிஜமானது வேறு ஒன்றுமில்லையென்று தோன்றுகிறது.
ஆனால் வேறொரு விதத்தில் இந்த உலகம் பொய்யுலகம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். உலக வாழ்க்கையில் நாம் அநேக சம்பவங்களைக் கண்ணால் பார்க்கிறோம்; காதால் கேட்கிறோம். அவற்றை நாம் உண்மையென்றும் நம்பி விடுகிறோம். நம் கண்களும் காதுகளும் நம்மை அநேக முறைகளில் ஏமாற்றி விடுகின்றன. "கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்தறிவதே மெய்" என்னும் பழமொழி மிகவும் உண்மையானது.
சாதாரணமாய் வாழ்க்கையின் வெளிப்படையான நிகழ்ச்சிகள்தான் நமது கவனத்தைக் கவருகின்றன. நாம் பார்க்கும் வெளி உலகத்துக்குப் பின்னால் மனோலோகம் ஒன்றிருக்கிறதென்பதை மறந்து விடுகிறோம். ஆற்று வெள்ளத்தில் மேலே மிதந்து வரும் நுரைத்திரள்களும், உதிர்ந்த இலைகள், மலர்களும், குப்பை கூளங்களும் நம் கண்ணில் படுகின்றன. ஆனால் ஜலப் பரப்பின் அடியில் உள்ள சுழிகளையும் சுழல்களையும் நாம் அறிவதில்லை. தினந்தோறும் நாம் பார்த்துப் பழகிவரும் மனிதர்களைப் பற்றி நமக்கு எல்லாந் தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமற்ற வெளிப்படையான அம்சந்தான் நமக்குத் தெரிந்தது. அவர்களுடைய உள்ளத்தில் பொங்கிக் குமுறும் ஆசாபாசங்கள், விரோத வைஷம்யங்கள், இன்ப துன்பங்கள் இவை ஒன்றும் நமக்குத் தெரியாது.
சில சமயம் வாழ்க்கையின் வெளிப்படையான சம்பவங்களைப்பற்றிக் கூட நாம் பொய்யை மெய்யாக நினைத்து ஏமாறுவதுமுண்டு. உதாரணமாக, ஸ்ரீமதி பவானியைப் பற்றி உலகினர் அறிந்திருந்ததைக் குறிப்பிடலாம். அவளுக்கும் பாரிஸ்டர் சேஷாத்ரிக்கும் ஏற்பட்ட நேசத்தைக் குறித்து அறியாத வக்கீல் இருக்க முடியாது. மூன்று நான்கு வருஷத்துக்கு முன்னால், இரண்டு வக்கீல்கள் சேருமிடமெல்லாம் இதைப் பற்றியே பேசினார்கள். கிளப்புகளிலும் ஹோட்டல்களிலும், கடற்கரைகளிலும், டிராம்வண்டியிலும் வேறு வம்பு கிடையாது. கடைசியாக, பவானியும் சேஷாத்ரியும் கப்பலேறி உலக யாத்திரை சென்றார்கள் என்று அறிந்த பின்னர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பேச்சு ஓய்ந்தது. அவர்களைப் பற்றித் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை யென்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனாலும் ஜனங்கள் நினைத்ததற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம்?
அகஸ்மாத்தாக, நான் சற்றும் எதிர்பாராத முறையில், எனக்கு அவர்களைப்பற்றிய உண்மை தெரியவந்தது. சென்றவருஷம் கோடைக்காலத்தில், நான் ஒரு பிசகு செய்தேன். ஒரு வார காலம் காரியாலயத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிலே இருந்து விட்டேன். இதனால் உடம்பு கெட்டுப் போய் விட்டது. டாக்டரிடம் காட்டியதில், அவர், "அடடா! உங்களுக்கு அவ்வளவு பெரிய வியாதி எப்படி வந்தது? இது ரொம்ப ரொம்ப பெரிய மனுஷர்களுக்கு அல்லவா வரும்? இதற்கு 'வேலையில்லாத வியாதி' என்று பெயர். பூரண ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் இதற்குச் சிகிச்சை! அதுவும் குளிர்ந்த இடத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். போங்கள்; நீலகிரிக்கு உடனே போங்கள்" என்று ஆக்ஞாபித்தார். அப்படியே நான் போய் நீலகிரியில் சில காலம் தங்கியிருந்தேன். அப்போது, ஒரு நாள் கூனூரில் மாஜி புரொபஸர் பிரணதார்த்தி அவர்களின் பங்களாவுக்குப் போக நேர்ந்தது. சென்னையிலே இவரிடம் எனக்குச் சொற்பப் பழக்கமுண்டு. நீலகிரிக்கு வந்தால் தம்மை வந்து கட்டாயம் பார்க்க வேண்டுமென்று அவர் வற்புறுத்திச் சொல்லியிருந்தபடியால் போனேன். அவருடைய பங்களா கூனூரில் மிகவும் அழகான, ஏகாந்தமான ஓரிடத்தில் அமைந்திருக்கிறது. அந்தப் பங்களாவுக்கு அவர், 'சாந்தி நிலையம்' என்று பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார்.
"வெயிலின் அருமை குளிரில் தெரியும்" என்ற பழமொழியின் உண்மையை நீலகிரியில் நன்கு தெரிந்து கொள்ளலாம். நான் போயிருந்த அன்று மாலை நாலு மணிக்கு நானும் புரொபஸரும் பங்களாவின் வாசல் புறத்தில் இளம் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம். அங்கிருந்து பார்த்தால், சுற்றிலும் வெகு தூரத்துக்கு வரிசை வரிசையான மலைத் தொடர்களும், பசுமையான காடுகளும், பள்ளத்தாக்குகளும், மலை வீழருவிகளுமே காட்சியளித்தன. யூகலிப்டஸ் மரங்களின் கிளைகளில் ஜிலு ஜிலுவென்று இளங்காற்று வீசியபோது ஏற்பட்ட 'ஙொய்' என்ற மனோகரமான சப்தத்தைத் தவிர வேறு சப்தமே கிடையாது. இதைச் சற்று நேரம் கவனித்து விட்டு, "அடாடா! இந்த இடந்தான் எவ்வளவு அமைதியாயிருக்கிறது!" என்று நான் என்னையறியாத உற்சாகத்துடன் சொன்னேன். அப்போது புரொபஸர் பிரணதார்த்தி "ஆமாம்; இந்த இடம் இப்போது அமைதியாய்த்தான் இருக்கிறது. ஆனால் மூன்று வருஷத்துக்கு முன்னால் இங்கே ஒரு சமயம் பெரும் புயல் அடித்தது; பூகம்பம் நிகழ்ந்தது; எரிமலை நெருப்புக் கக்கிற்று; ஆமாம், இதெல்லாம் மனோலோகத்திலேதான் நடந்தது" என்றார்.
உடனே, எனக்கு பவானி சேஷாத்ரி இவர்களின் ஞாபகம் வந்தது. ஸ்ரீமதி பவானியினுடைய சித்தப்பாதான் பேராசிரியர் பிரணதார்த்தி என்பது நினைவுக்கு வந்தது. மூன்று வருஷத்துக்கு முன்பு பவானியும் சேஷாத்ரியும் கூனூரில் இந்தப் பங்களாவில் இருந்தபோதுதான் இங்கே தப்பியோடிய கைதி ஒருவன், பிடிபட்டான். அச்சமயம் பத்திரிகைகளில் இதைப்பற்றிச் சில விவரங்கள் வெளியாயின. ஆனால் வெளியாகாத விஷயங்கள் சில கட்டாயம் இருந்திருக்க வேண்டும் என்று மட்டும் எனக்கு அப்போதே தோன்றிற்று. அந்தச் சம்பவத்தையடுத்து உலக யாத்திரை சென்ற பவானியும் சேஷாத்ரியும் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை.
இன்றைய தினம் ஏனோ புரொபஸர் பிரணதார்த்திக்குத் தமது மனக்கதவைத் திறக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவற்றையும் விண்டுவிண்டு அவர் சொல்லவில்லையென்றாலும், உண்மையை நான் தெரிந்து கொள்ளும் அளவுக்கு விஷயங்களை வெளியிட்டார். அது தான் எப்படிப்பட்ட உண்மை! எவ்வளவு பயங்கரமானது! எவ்வளவு ஆச்சரியமானது!
ஏற்கனவே எனக்குத் தெரிந்த விஷயங்களையும், ஆசிரியர் பிரணதார்த்தி அன்று சொன்னவற்றையும் வைத்துக் கொண்டு, பெயர்களை மட்டும் மாற்றி, இந்தக் கதையை எழுதுகிறேன்! - என்ன, கதையென்றா சொன்னேன்? ஆமாம்; கதைதான்! நிஜமென்றால் யார் நம்புவார்கள்?
ஸ்ரீமதி பவானி, பி.ஏ.,பி.எல். என்றைய தினம் ஹைகோர்ட்டில் அட்வகேட்டாகப் பதிவு செய்யப்பட்டாளோ, அன்றுமுதல் ஹைகோர்ட்டு கட்டிடமே ஒரு புதிய களையுடன் விளங்கிற்று. பிரம்மஹத்தி கூத்தாடிய வேலையற்ற வக்கீல்களின் முகத்திலே கூட ஒரு புதிய தேஜஸ் பிறந்தது. ஊமைக் கோட்டான் போல் இருந்த ஜட்ஜுகள் எல்லாம் கொஞ்சம் கலகலப்பாய்ப் பேச ஆரம்பித்தார்கள். தஸ்தாவேஜிக் கட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கோர்ட் குமாஸ்தாக்களின் கண்கள் ஒரு புதிய பிரகாசம் பெற்று அங்குமிங்கும் நோக்கி விழித்தன. அந்தக் கண்கள், குறுக்கே நெடுக்கே எங்கேயாவது ஸ்ரீமதி பவானி போகிறாளா என்றுதான் அப்படித் திருதிருவென்று விழித்தன என்று சொல்ல வேண்டியதில்லை.
இதற்கு முன்னாலும், ஐந்தாறு ஸ்திரீகள் ஹைகோர்ட்டில் அட்வகேட்டுகளாகப் பதிவானதுண்டு. அவர்களால் எல்லாம் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. அவர்கள் தங்களுடைய மேனியின் சௌந்தரியத்தையும், முகவசீகரத்தையும் பரீட்சையென்னும் பலிபீடத்தில் பலி கொடுத்துவிட்டு வந்தார்கள். அவர்களில் சிலரை பார்க்கும்போது, சோளக் கொல்லைகளிலே காக்காய்களைப் பயமுறுத்துவதற்காக வைத்திருப்பார்களே, அந்த உருவங்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால், பவானியோ இந்தச் சம்பிரதாயத்துக்கு முற்றும் மாறுபட்டவளாயிருந்தாள். அவள் ஹைகோர்ட் தாழ்வாரத்தில் நடந்து வருவதைப் பார்த்தால், யாரோ, தேவ கன்னிகை தேவேந்திரனுடைய சபைக்குப் போக வேண்டியவள் வழி தவறி இங்கே வந்து விட்டதாகவே தோன்றும். அஸ்தமன சூரியனது பொன்னிறக் கிரணங்களின் நிறம் அவளுடைய மேனி நிறம் தேவலோகச் சிற்பியினால் ஆக்கபட்ட ஸ்வர்ண விக்கிரகம் உயிர் பெற்று நடமாடுகிறதோ என்று ஒரு நிமிஷம் பிரமித்துப் போவார்கள். பவானியைத் திடீரென்று சந்திப்பவர்கள். அவள் தன்னுடைய முத்தான அழகிய பற்கள் சிறிது தோன்றும்படி புன்னகை புரிந்தால், அந்த இருளடைந்த ஹைகோர்ட்டு அறைகளில் பளிச்சென்று நிலவு வீசுவதுபோல் இருக்கும். அவளுடைய கண்களில் கூரிய வாள்கள் ஒளி வீசும்; வயிர நெஞ்சு பெற்ற பெரிய பெரிய ஸீனியர் வக்கில்களின் இருதயங்களைக் கூட அந்த வாள் வீச்சுப் பிளந்துவிடும்.
ஸ்ரீமதி பவானி கோர்ட்டுக்கு வர ஆரம்பித்ததிலிருந்து, பிரபல அட்வகேட்டுகளின் நடை உடை பாவனைகளில் எல்லாம் வித்தியாசம் ஏற்படத் தொடங்கியது. அட்வகேட் நீலமேகமய்யங்கார் தம்முடைய தலைப்பாகையின் சரிகைக் கரையை அரை அங்குலத்திலிருந்து முக்கால் அங்குலமாக மாற்றத் தீர்மானித்து விட்டார். வக்கீல் மதனகோபால சாஸ்திரி இதற்கு முன்னால் அரை மணி நேரம் நிலைக் கண்ணாடியின் முன் நின்று நெற்றியில் கடுகளவு சாந்துப் பொட்டு இட்டுக் கொள்வது வழக்கம். இப்போது அவர் முக்கால் மணி நேரம் செலவழித்து அரையேயரைக்கால் கடுகளவு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு வரத் தொடங்கினார்.
மொத்தத்தில் ஹைகோர்ட் வக்கீல்களில் பாதிப் பேர் பவானியினால் அரைப் பைத்தியமானார்கள்; பாக்கிப் பாதிப் பேரோ முழுப் பைத்தியமாயினர். அவள் கோர்ட்டுக்கு வரும் வரையில் வக்கீல்கள் அநேகர் கோர்ட் தாழ்வாரத்தில் ஏதோ பிரமாதமான காரியம் உள்ளவர்களைப் போல் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருப்பார்கள். அவள் வந்துவிட்ட பிறகோ, அவள் எந்தக் கோர்ட்டில் ஆஜராகிறாளோ, அங்கே போய்க் கூட்டம் போடுவார்கள்.
இது விஷயமாக ஒருவரையொருவர் அவர்கள் பரிகாசம் செய்து கொள்வதுமுண்டு. "ஸீனியர் வக்கீல் நரசிம்மாச்சாரி ஜுனியர் வக்கீல் வராகாச்சாரியாரைப் பார்த்து, "ஏண்டா, வராகம்! எதற்காகடா இங்கே நிற்கிறாய்?" என்பார். "உங்களுக்காகத்தான் ஸார் நிற்கிறேன்" என்பார் வராகாச்சாரி. "அடே போக்கிரி! எனக்குத் தெரியாதா? இருக்கட்டும், இதைக் கேளு. சாகுந்தலத்தில் காளிதாஸன் சகுந்தலையின் கண்களை வர்ணிக்கும் போது, 'இளம் மாந்தளிரின் நிறத்தை ஒத்திருந்தது அவளுடைய கண்ணின் நிறம்' என்கிறான்; இத்தனை நாளாய் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. பவானியின் கண்களைப் பார்த்த பிறகுதான் புரிந்தது" என்பார் நரசிம்மாச்சாரி.
இப்படியெல்லாம் நான் சொல்லும் போது சென்னையிலுள்ள ஹைகோர்ட்டு வக்கீல்கள் எல்லாருமே 'விடபுருஷர்கள்' என்று தோஷாரோபணம் செய்வதாய் யாரும் எண்ணக்கூடாது. உண்மையில் சென்னையில் வக்கீல்களில் முக்கால்வாசிப்பேர் பரம யோக்யர்கள்; பாக்கிப் பேரோ தங்கள் சம்சாரங்களுக்குப் பயந்தவர்கள். அப்படியிருந்தும், அவர்கள் எல்லாரும் ஸ்ரீமதி பவானியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள் என்றால், நமது தற்போதைய சமூக வாழ்க்கையின் நிலைமையில் இது சகஜமாக எதிர்பார்க்கக் கூடியதேயாகும். நம் நாட்டில் ஸ்திரீகளின் வாழ்க்கைக்கும் புருஷர்களுடைய வாழ்க்கைக்கும் ஒரு பெரிய பிளவு வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இந்நிலைமையில் யாராவது ஒரு ஸ்திரீ அந்தப் பிளவைத் தைரியமாகக் கடந்து வந்து புருஷர்களுக்கு மத்தியில் சரிசமானமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால், புருஷர்கள் பிரமித்துவிடுவது சகஜமேயல்லவா? புருஷர்களின் மத்தியில் ஒரு ஸ்திரீ பேசி விட்டாலே அவர்களுக்கு ஆச்சரியம்; அவள் புத்திசாலித்தனமாகவும் பேசிவிட்டால் மகா ஆச்சரியம்; அப்படிப் புத்திசாலித்தனமாகப் பேசக்கூடிய ஒரு ஸ்திரீ சௌந்தரியவதியாயும் இருந்துவிட்டால் எந்தப் புருஷன் தான் கொஞ்சம் அரைகுறையாகவாவது புத்தியை இழக்காமல் இருக்க முடியும்?
இந்தப் பிரமையெல்லாம் கொஞ்ச காலந்தான் நீடித்திருந்தது. பவானிக்கும் சேஷாத்ரிக்கும் சிநேகம் முற்றி வருகிறதென்றும் அவர்கள் கலியாணம் செய்து கொள்ளக் கூடுமென்றும் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது பவானியை பற்றிய வியப்புப் பேச்செல்லாம் வம்புப் பேச்சாக மாறியது; புகழ்ச்சியெல்லாம் இகழ்ச்சியாயிற்று.
பாரிஸ்டர் சேஷாத்ரியின் வாழ்க்கை அத்தகைய வம்புப் பேச்சுக்கு இடங் கொடுக்கக்கூடியதாகவே இருந்தது.
சேஷாத்ரி நாற்பத்தைந்து வயதுக்கு மேலானவர். ஆனாலும் அவர் 'பிரம்மச்சாரி'. அவர் பிரம்மச்சாரியோ இல்லையோ அவருக்கு மனைவி கிடையாது. மனைவி உண்டோ என்னவோ, சென்னையில் அவருடைய பங்களாவில் அவள் இல்லையென்பது நிச்சயம்.
நாற்பத்தைந்து வயதுக்கு மேலாயிற்று என்று சொன்னேனல்லவா? ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு தோன்றாது. பத்து வயது குறைவாகத்தான் தோன்றும். 'அவருக்கு ஸ்திரீ முகம்; அதனால் தான் வயதானது தெரியவில்லை' என்று சிலர் சொல்லுவார்கள். இது எப்போதாவது அவர் காதில் பட்டதனால் தானோ என்னவோ, சேஷாத்ரி மீசை வளர்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் முகம் வசீகரமான ஸ்திரீ முகமாய்த்தான் காணப்பட்டது. அதிக இளமைத் தோற்றமே குடிகொண்டிருந்தது.
அவருடைய பிரம்மச்சரியத்தைப் பற்றியும் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதாக அநேகர் நம்பினார்கள். அவருக்கு இளம் வயதிலேயே கலியாணமாகியிருந்ததாகவும், மனைவியைக் கொலை செய்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அயல்நாட்டுக்கு ஓடிப் போய் வெகுநாள் இருந்துவிட்டு வந்ததாகவும் சிலர் சொன்னார்கள். வேறு சிலர் அது சுத்தத் தப்பென்றும், அவருக்கு ஜப்பானில் ஒரு மனைவி இருப்பதாகவும் இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஜப்பானுக்கு அவர் போய்ச் சில மாதம் இருந்து விட்டு வருவதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் 'கிடையவே கிடையாது! அவருடைய தர்மபத்தினி இங்கிலாந்தில் தான் இருக்கிறாள். வாரத்துக்கொரு தடவை அவருக்குச் சீமைத் தபால் வருகிறதே, தெரியாதா?' என்றார்கள்.
இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் அடிக்கடி அவர் கப்பல் பிரயாணம் செய்வதை ஆதாரமாக எடுத்துக் காட்டினார்கள். "இல்லாவிட்டால் பப்ளிக் பிராஸிகியூடர் வேலையை ஒருவன் விடுவானோ, ஸார்! ஒவ்வொருத்தன் அந்த வேலை கிடைக்காதா என்று தபஸ் செய்து கொண்டிருக்கிறான். இந்த மனுஷர் இரண்டு வருஷம் வேலை பார்த்துவிட்டு, 'எனக்கு வெளிதேசப் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது' என்று விட்டுவிட்டாரே! சம்சாரம் சீமையிலிருந்து சவுக்கடி கொடுக்கக் கொண்டுதானே வேலையை விட்டார்? இல்லாவிட்டால் விட்டிருக்க முடியுமா?" என்றார்கள்.
இதெல்லாம் சுத்த அபத்தம் என்று நன்றாய்த் தெரிந்திருந்த ஒருவர் இருந்தார். அவர் பாரிஸ்டர் சேஷாத்ரி தான்.
பாரிஸ்டர் சேஷாத்ரி உண்மையிலேயே பிரம்மசாரி. அவர் இதுகாறும் கலியாணம் செய்து கொள்ளாததற்குத் தகுந்த காரணங்கள் இருந்தன.
சேஷாத்ரியின் இருபதாவது வயதில் அவருடைய தந்தை காலமானார். அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்திருந்த சேஷாத்ரி தம்முடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருந்தார். அவருடைய தந்தையின் எதிர்பாராத மரணத்தினால் அந்தக் கனவுகள் நிறைவேறுவது அசாத்தியமாயிற்று. இதனால் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர், மனத்தை வேறு விஷயங்களில் செலுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யப் புறப்பட்டார்.
ஜப்பான், அமெரிக்காவெல்லாம் சுற்றிவிட்டுக் கடைசியில் இங்கிலாந்துக்கு வந்தார். அங்கே பாரிஸ்டர் பரீட்சை கொடுத்துவிட்டு, சென்னைக்குத் திரும்பி வந்து 'பிராக்டிஸ்' செய்யத் தொடங்கினார்.
சேஷாத்ரிக்குப் பெற்றோர்கள் இல்லாதபடியால் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவோர் யாருமில்லை. சிநேகிதர்கள் யாராவது அந்தப் பேச்சை எடுத்தால் வாலிழந்த நரியின் கதையைச் சொல்லிப் பரிகாசம் செய்வார். கலியாணம் செய்து கொண்ட தம்முடைய சிநேகிதர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது "மனிதர்கள் ஏன் இவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள்!" என்று ஆச்சரியப்படுவார். "இப்படி யாராவது வலிந்து சென்று நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பார்களா? ஒரு ஸ்திரீயைக் கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் எதற்காக மாரடிக்க வேண்டும்?" என்பார்.
சேஷாத்ரி நிறையப் பணம் சம்பாதித்தார்; நிறையச் செலவும் செய்தார். சம்சார பந்தங்கள் எதுவுமில்லாமல் கவலையின்றிக் காலம் கழித்தார். வாழ்க்கையில் அவருக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது பிரயாணந்தான். குறைந்து இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வெளிநாட்டு யாத்திரை செய்யாமல் இருக்கமாட்டார். இப்படி இருபது வருஷம் சுதந்திரமாகவும் சுகமாகவும் காலம் கழித்த பிறகு, அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை அடியோடு மாற்றும்படியான இந்தச் சம்பவம் நேரிட்டது.
அவருடைய சிநேகிதர் புரொபஸர் பிரணதார்த்தி ஒரு நாள் பவானியை அழைத்துக் கொண்டு சேஷாத்ரியின் வீட்டுக்கு வந்தார். அவளை அறிமுகப்படுத்தி வைத்து, அவள் பி.எல். பரீட்சை கொடுத்திருக்கிறாளென்றும், சேஷாத்ரியின் ஆபீஸில் ஜுனியராக வைத்துக் கொண்டு வேலை பழக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்வளவையும் கேட்ட பின்னர், சேஷாத்ரி தலை நிமிர்ந்து பவானியை பார்த்தார். அந்த க்ஷணத்திலேயே அவளுடைய சௌந்தரியமாகிற மதுவில் தலை குப்புற விழுந்துவிட்டார். இத்தனை நாளும் எவ்வளவுக்கெவ்வளவு வைராக்கிய புருஷராக இருந்தாரோ, அவ்வளவுக்கு இப்போது அவருடைய வீழ்ச்சியின் வேகமும் அதிகமாயிருந்தது.
பவானி, சேஷாத்ரியிடம் ஜுனியராக அமர்ந்தாள். நாளாக ஆக, சேஷாத்ரியின் பிரேமையும் வளர்ந்து வந்தது. பவானி இல்லாத உலகம் பாலைவனமாகவும் அவள் இல்லாத வாழ்க்கை வெறும் சூனியமாகவும் அவருக்குத் தோன்றத் தொடங்கியது. என்றாவது ஒரு நாள் அவள் நேரங் கழித்து வந்தால் அவருடைய மனம் அமைதியை இழந்து தவிக்கும். அவள், வேறு இளம் வக்கீல் யாருடனாவது பேசக் கண்டால் அவருக்கு எரிச்சல் உண்டாகும்.
சமூக விஷயங்களில் அவருடைய கொள்கைகள் வெகு விரைவாகப் பிற்போக்கு அடைந்து வந்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் சமமாகப் பழக வேண்டுமென்னும் கொள்கைகளெல்லாம் சுத்த அபத்தமென்றும், அதிலும் பவானியைப் போன்ற பெண்கள் புருஷர்கள் மத்தியில் பழகுவது ரொம்ப அபாயகரமென்றும் அவர் கருதினார்.
இப்படி இரண்டு வருஷங்கள் சென்றன. சேஷாத்ரிக்குத் தமது இருதயத்தின் நிலைமையைப் பற்றி இப்போது எவ்விதச் சந்தேகமும் இருக்கவில்லை. பவானி இல்லாமல் ஒரு கணமேனும் தாம் உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று அவர் நிச்சயம் செய்து கொண்டார். முடிவாக, தம்மைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அவளைக் கூடிய சீக்கிரம் கேட்பது என்று தீர்மானித்தார்.
ஆனாலும் அந்தக் 'கூடிய சீக்கிரம்' சீக்கிரத்தில் வருவதாக இல்லை. நாட்கள் சென்று கொண்டே யிருந்தன. பவானியை இது விஷயமாகக் கேட்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இன்னதென்று சொல்ல முடியாத மானஸீகத் தடையொன்று குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது. 'நாளைக்குக் கேட்கலாம்' 'இன்னொரு நாள் சொல்லலாம்' என்பதாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் சேஷாத்ரி.
கடைசியாக, இந்த வருஷம் கோடைக்காலத்தில் கூனூருக்குப் போகும்போது, புரொபஸர் பிரணதார்த்தியின் முன்னிலையிலேயே இது விஷயமாகப் பேசித் தீர்மானித்து விடுவதென்று அவர் உறுதி கொண்டார். கூனூரிலேயே கலியாணத்தை நடத்திவிட்டு, உடனே பவானியுடன் ஐரோப்பாவுக்குச் சென்று வருவதென்றும் தீர்மானித்தார். இதற்காக, பாஸ்போர்ட், கப்பல் டிக்கெட் எல்லாங்கூட வாங்கித் தயார் செய்துவிட்டார். தாம் பவானியைக் கேட்காமல் இருப்பது ஒன்றுதான் தடையேதவிர, தமது மனோரதம் நிறைவேறுவதற்கு வேறு இடையூறு எதுவும் ஏற்படக் கூடுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
பவானியின் தகப்பனார் தாசில்தார் உத்தியோகம் பார்த்தவர். ஆரம்ப நாட்களில் அவர், வைதிக ஆசாரத்தில் அதிகப் பற்று உள்ளவராயிருந்தார். ஏதாவது புறம்போக்கு ஆக்கிரமிப்புச் சம்பந்தமாய் ஒரு பட்டாதார் பத்து ரூபாய் நோட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் அதை அவர் வாங்கிக் கொள்ள மாட்டார்; போ போ என்று திருப்பி அடிப்பார். அந்த மிராசுதார் போய் இன்னும் ஐந்து ரூபாய் போட்டு ஒரு தங்கப் பவுனாக வாங்கிக் கொண்டு வந்தால் தான், "ஸ்வர்ணம் பவித்திரமானது; அதற்குத் தோஷமில்லை" என்று சொல்லி வாங்கிக் கொள்வார்.
யாராவது ஒரு கிராம முன்சீப் அவருக்கு ஒரு கூடை ஒட்டு மாம்பழம் அனுப்பி, அதை அவருடைய சேவகன் அப்படியே வாங்கி வைத்துவிடும் பட்சத்தில், அவனைத் திட்டு திட்டு என்று திட்டுவார். "எந்தப் பறையன் தொட்டுப் பறித்ததோ அதை அப்படியே வாங்கி வைக்கிறாயேடா? கிணற்று ஜலத்தைவிட்டு அலம்பி எடுத்து வையடா!" என்பார்.
இவ்வளவு ஆசார சீலமுள்ளவர் தம்முடைய மூத்த பெண்ணுக்கு சாஸ்திர ரீதியாகப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் செய்து வைக்க விரும்பியதில் ஆச்சரியமில்லையல்லவா? அதிலும் அந்தச் சமயம் அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் தாசில்தாராய் இருந்தபடியால் கடப்பை முதலிய காட்டுப் பிரதேசங்களுக்கு மாற்றலாவதற்கு முன் கலியாணம் பண்ணிவிடத் தீர்மானித்தார். தஞ்சாவூர் ஜில்லாவில் கலியாணம் என்றால் வைதிகர்கள் ஏராளமாய் வருவார்கள்; தாராளமாய் தட்சிணை கொடுத்துச் சாஸ்திரோக்தமாய்க் கலியாணம் செய்யலாம். அதோடு, தட்சிணைச் செலவும் தம்முடைய சொந்தப் பொறுப்பில்லாமல் போய்விடும்! யாராவது ஒரு பெரிய மனுஷன் அந்தச் செலவை ஒப்புக் கொள்வான். உண்மையில் கலியாணச் செலவு எதுவுமே அவர் கைப் பொறுப்பாகாது. கடப்பை ஜில்லாவில் காலணா யார் கொடுக்கிறார்கள்?
இவ்வாறு தீர்மானித்து, அவர் பவானியின் தமக்கைக்குப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் பண்ணினார்.
ஆனால் சாஸ்திரத்தின் தலையெழுத்து சரியாயில்லை! அவருக்குச் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாமல் போவதற்கு அந்தக் கலியாணமே காரணமாயிற்று. பவானியின் தமக்கை புக்ககத்தில் படாதபாடு பட்டாள். பதினேழு வயதுக்குள் இரண்டு பிரசவமும், மூன்று கர்ப்பச் சிதைவும் ஏற்பட்டு, இதனாலெல்லாம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து கடைசியில் இறந்தே போனாள்.
அந்தப் பெண்ணின் அகால மரணத்தினால் பவானியின் தகப்பனாரின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் அடியோடு மாறி விட்டது. சாஸ்திரத்தில் நம்பிக்கை போனதுபோல், பணங் காசிலும் அவருக்கு நம்பிக்கை போயிற்று. அதற்குப் பிறகு, புத்தம் புதிய பவுனைக் காவேரி ஜலத்தைவிட்டு அலம்பி யாராவது கொண்டு வந்தால் கூட அவர் வாங்கிக் கொள்வதில்லை. "அடே! எனக்கு லஞ்சம் கொடுக்க வருகிறாயாடா! உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்" என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்.
இத்தகைய மூர்க்க குணம் உத்தியோக விஷயத்துடன் நில்லாமல் சமூக ஆசார விஷயங்களிலும் வெளிப்பட்டது. சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அவர் அடியோடு நிராகரிக்கலானார். முன்னர் எவ்வளவுக்கெவ்வளவு வைதிகப் பற்றுள்ளவராயிருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது நவநாகரிகப் பற்று உடையவரானார். அவருடைய இரண்டாவது பெண் பவானியின் தலையிலே அதன் பலன் விடிந்தது. அவளை அவர் இளம் வயதில் விவாகம் செய்து கொடுப்பதில்லையென்றும், இங்கிலீஷ் படிக்க வைப்பதென்றும் தீர்மானித்தார். இந்தச் சாஸ்திர விரோதமான காரியம் தாம் தலைசாய்வதுடன் நின்று போவதுகூட அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு அந்திய காலம் நெருங்கியிருந்தபோது, புரொபஸர் பிரணதார்த்தியை அருகில் அழைத்து, "தம்பி! பவானிக்கு உன்னைத்தான் கார்டியனாக நியமித்திருக்கிறேன். எனக்கு நீ ஒரு சபதம் செய்து கொடுக்க வேண்டும். அவளுடைய படிப்பை நிறுத்தக் கூடாது. கலியாணம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது. அவளுக்குத் தக்க வயது ஆன பிறகு அவளாக இஷ்டப்பட்டு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால் கொள்ளட்டும்" என்றார். பிரணதார்த்தி அவருக்கு அவ்வாறே பிரதிக்ஞை செய்து கொடுத்தார்.
மரணத்தறுவாயில் தம் தமையனுடைய விருப்பத்தை மறுக்க மனோதிடமின்றிப் பிரணதார்த்தி பிரதிக்ஞை செய்து கொடுத்தாரே தவிர, அவருடைய மனம் அது விஷயத்தில் நிம்மதி அடையவில்லை. நாளாக ஆக, அவருடைய கவலை அதிகமாயிற்று. பவானியைத் தம் தலையில் கட்டிவிட்டுத் தமையனார் போய்விட்டாரே என்ற கவலையன்று அது; பிரணதார்த்திக்கு புதல்வர்கள் பலர் உண்டு; ஆனால் பெண் கிடையாது. ஆகவே, பவானியிடம் தம் சொந்தப் பெண்ணுக்கு மேலாகவே அதிகப் பிரியம் வைத்திருந்தார். அவளுடைய பிற்கால வாழ்க்கை சந்தோஷமாயிருக்க வேண்டுமே என்ற கவலைதான் அவரை வாட்டிற்று.
படித்துப் பட்டம் பெற்றுச் சுதந்திர வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பெண்கள் சிலரைப் பற்றி அவருக்குத் தெரியும். பரீட்சை முடியும் வரையில் அவர்களுடைய கவனமெல்லாம் படிப்பிலேயே இருக்கிறது. ஆண்பிள்ளைகளை விட அதிக ஊக்கத்துடனும் ரோஸத்துடனும் படிக்கிறார்கள். முதலில் கொஞ்ச காலம் உத்தியோகமும் உற்சாகமாய்த்தான் பார்க்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அதிலெல்லாம் ரஸம் குறைந்து, கலியாணம் செய்து கொள்ளலாமென்று தோன்றும்போது, அது சாத்தியமில்லை யென்பதைக் காண்கிறார்கள். அவர்களுக்குத் தக்க பிராயமுடைய புருஷர்கள் எல்லாரும் ஏற்கனவே கலியாணமானவர்களாயிருக்கின்றனர். அப்படி யாராவது தப்பித் தவறி இருந்தால், அவர்களுக்கு இந்தப் பெண்களை மணம் செய்து கொள்ளத் தக்க படிப்போ, அந்தஸ்தோ, வேறு யோக்கியதையோ இருப்பதில்லை. எனவே, அத்தகைய பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் துக்ககரமாய் முடிகிறது.
இதையெல்லாம் அறிந்துதான் ஆசிரியர் பிரணதார்த்தி பெரிதும் கவலைக்குள்ளாகியிருந்தார். பவானி பி.எல். பாஸ் செய்ததும், இனி நாள் கடத்தினால் அவளுக்குக் கலியாணமே ஆகாமல் போய்விடலாமென்று அவர் பயந்தார். இப்போது கூட அவளுக்குத் தக்க கணவனாகக் கூடியவர் ரொம்பப் பேரில்லை. பிரணதார்த்திக்குத் தெரிந்தவரையில் பாரிஸ்டர் சேஷாத்ரி ஒருவர்தான் அத்தகைய யோக்கியதையுடையவராயிருந்தார். எனவே, பவானியை சேஷாத்ரியிடம் ஜுனியராக வேலை செய்ய அமர்த்தியபோது, பிரணதார்த்தியின் நோக்கம் என்னவாயிருக்கக் கூடுமென்று நாம் எளிதில் ஊகிக்கலாம் அல்லவா?
ஆரம்பத்தில், ஸ்ரீமான் பிரணதார்த்தி தம்முடைய நோக்கம் விரைவில் நிறைவேறிவிடும் என்பதற்கு அறிகுறிகளைக் கண்டு சந்தோஷமடைந்தார். பவானி பாரிஸ்டர் சேஷாத்ரியின் உயர்குணங்களைப் புகழ்ந்து பேசப் பேச, அவருடைய நம்பிக்கை உறுதிப்பட்டு வந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சீக்கிரமாகக் கலியாணப் பிரஸ்தாபம் ஏற்படவில்லை. வருஷம் இரண்டு சென்ற போது அவருடைய கவலை முன்போல் அதிகமாயிற்று. "சுத்த அசடுகளாயிருக்கிறார்களே! இதில் நாம் தலையிட்டுத்தான் காரியத்தை ஒப்பேற்ற வேண்டும்போல் இருக்கிறதே!" என்று கருதலானார்.
இத்தகைய நிலைமையிலேதான், சேஷாத்ரி தாமும் இவ்வருஷம் கோடைக்குக் கூனூர் வர உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால்தான் கொண்டது என்று தீர்மானித்த புரொபஸர், தம்முடைய பங்களாவிலேயே அவர் வந்து இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். இதை முன்னிட்டே வழக்கமாகக் கூனூருக்கு வரும் தமது குடும்பத்தினரையெல்லாம் அவர் பங்களூருக்குப் போகச் சொல்லிவிட்டு, பவானியை மட்டும் கூனூருக்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார். "இந்த வருஷம் மட்டும் இந்தக் கலியாணத்தை நான் பண்ணிவைக்காவிட்டால் என் பெயர் பிரணதார்த்தி அல்ல" என்று அவர் தமக்குள் சபதம் செய்து கொண்டார்.
"உலகத்திலேயே நீலகிரியைப் போன்ற சுகமான இடம் கிடையாது; நானும் எவ்வளவோ நாடுகளில் எத்தனையோ இடங்கள் பார்த்திருக்கிறேன்" என்றார் சேஷாத்ரி.
"நீலகிரியிலும் கூனூருக்கு அப்புறந்தான் மற்ற இடங்கள் எல்லாம்" என்றார் புரொபஸர்.
"கூனூரிலும் எங்கள் சித்தப்பாவின் பங்களாவைப் போன்ற சுகமான இடம் வேறில்லை; ஸ்வர்க்கத்தில் கூட இராது" என்றாள் பவானி.
அந்த மூன்று பேரும் இப்படிச் சொன்ன வார்த்தைகளில் அவர்களுடைய அப்போதைய மனநிலை பிரதிபளித்தது. தங்களுடைய வாழ்க்கையில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லையென்று அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணினார்கள்.
அவர்கள் மூவரும் அங்கு வந்து ஒன்றரை மாதத்துக்கு மேலாகிவிட்டது. மலைப் பிரதேசத்தில் சுற்றி அலைவதிலும், பேசுவதிலும், படிப்பதிலும், சூடான தேத் தண்ணீர் அருந்துவதிலுமாகப் பொழுது சென்று வந்தது.
ஆயினும் சேஷாத்ரி தம்முடைய மனோரதத்தை வெளியிடுவதற்கு இன்னும் தைரியம் பெறவில்லை. நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியாக, இன்னும் இரண்டு வாரந்தான் கூனூர் வாசம் பாக்கியிருந்தபோது, இனிமேல் தாமதிப்பதில் பிரயோஜனமில்லை யென்று தீர்மானித்து முதலில் பிரணதார்த்தியிடம் கலந்து கொள்ள எண்ணினார்.
"உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்றிருக்கிறேன்..." என்று சேஷாத்ரி ஆரம்பித்தபோது, "இன்றைக்கு மட்டும் நீங்கள் அந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசாவிட்டால் நானே ஆரம்பித்துவிடுவதென்று இருந்தேன்" என்றார் பிரணதார்த்தி.
அப்போது மாலை நாலு மணி. தினசரி வழக்கம் போல் பவானி, உயர்ந்த காஷ்மீர் கம்பளிச் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு, வெளியே உலாவச் செல்வதற்குத் தயாராக வந்தாள்.
"ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியில் வரவில்லையா, என்ன?" என்று கேட்டாள்.
"ஆமாம்! நாங்கள் இன்றைக்கு வரவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம்."
"ரொம்ப முக்கியமான விஷயந்தான். இராத்திரிக்குச் சமையல் திட்டம் போடப் போகிறீர்களாக்கும்; வாருங்கள் சித்தப்பா; போகலாம்."
"இல்லை, அம்மா! உண்மையாகவே முக்கியமான விஷயம்; ரொம்ப அழகான விஷயங்கூட" என்று சொல்லி, பிறகு மெதுவான குரலில், "அது, மேலே காஷ்மீர் கம்பளிச் சட்டை போட்டுக் கொண்டு மலைப் பிரதேசத்தில் உலாவச் செல்லும்" என்றார். இப்படிக் கூறிப் புன்னகையுடன் சேஷாத்ரியைப் பார்த்தார்.
பவானி, பங்களாவின் முகப்பில் கொழுகொழுவென்று வளர்ந்திருந்த ரோஜாச் செடியிலிருந்து அப்போதுதான் இதழ் விரியத் தொடங்கியிருந்த ஒரு ரோஜா மொட்டைப் பறித்துத் தலையில் செருகிக் கொண்டாள். பிறகு, அவர்களைக் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து, "மலைவாசத்திற்கு வந்தால் இந்த மாதிரி இரண்டு கிழங்களைக் கூட்டிக் கொண்டு தான் வரவேணும்" என்று மெதுவான குரலில் கூறிவிட்டு ஒயிலாக நடந்து சென்றாள்.
அவள் கூறியது அவர்களுடைய காதில் அரைகுறையாய் விழுந்தது. பிரணதார்த்தி அப்போது பவானி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாராதலால், சேஷாத்ரியின் முகத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த முகத்தில் ஒரு கணம் தோன்றி மறைந்த வேதனையைக் கண்டு பயந்தே போயிருப்பார்.
சேஷாத்ரியின் மனச் சோர்வும் தயக்கமும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாயிருந்தன. உண்மையில், அவர் இந்தச் சமயம் தம்முடைய சொந்தக் 'கேஸை' எடுத்துச் சொல்வதில் பட்ட சிரமம், வேறு எந்தக் கேஸ் விஷயத்திலும் பட்டதில்லை. பிரணதார்த்தி மட்டும் ரொம்பவும் குறுக்குக் கேள்விகள் போட்டிராவிட்டால் அன்றைய தினமும் அவருடைய கேஸ் தள்ளிப் போடப்பட்டிருக்கலாம். எப்படியோ அவர் கடைசியாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பவானியைக் கலியாணம் செய்து கொள்ளத் தமக்கு விருப்பமென்றும், அதைப் பற்றிப் பிரணதார்த்தியின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டுவிட்டார்! அதற்குப் பிரணதார்த்தி அதைவிடத் தமக்குச் சந்தோஷம் அளிக்கக் கூடியது உலகத்திலே வேறொன்றுமிராது என்று பதில் சொன்னார். பவானிக்கு அது விருப்பமாயிருக்குமா என்று சேஷாத்ரி கேட்டதற்கு, "நல்ல கேள்வி கேட்டீர்கள்! உங்களை விட நல்ல கணவன் அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறான்? பூர்வ ஜன்ம புண்ணியம் என்று எண்ணி அவள் சந்தோஷப்பட வேண்டாமா?" என்றார் பிரணதார்த்தி.
அப்புறம் அவர்கள் மேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்துச் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும். திடீரென்று, "சித்தப்பா! சித்தப்பா! இங்கே உடனே வாருங்கள்!" என்று பவானியின் குரல் கேட்டது. அந்தக் குரலில் தொனித்த கலவரமும், இரக்கமும் அவர்களை மயிர்க் கூச்செறியச் செய்தன. பவானிக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி அவர்கள் பதறிப் போய் விரைந்து வாசலில் ஓடி வந்தார்கள். தவறி விழுந்து விட்டாளோ அல்லது ஏதாவது காட்டு மிருகம் வந்து விட்டதோ என்று ஒரு கணத்தில் நூறு எண்ணம் எண்ணினார்கள். பங்களா வாசற் புறத்தின் முகப்பில் நின்று குரல் வந்த திசையை நோக்கிக் கீழே பார்த்தார்கள். கிழே பங்களாவுக்கு வரும் பாதையில் பவானி நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.
பவானி அவர்களைப் பார்த்ததும், "சீக்கிரம் வாருங்கள்! என்று சொல்லிக் கையாலும் சமிக்ஞை செய்தாள். மலைப்பாதையில் அவர்கள் விரைந்து இறங்கிச் சென்றார்கள்.
பவானி அன்று வெகு குதூகலத்துடனே வெளியே கிளம்பினாள். பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் வரவில்லை யாதலால், தான் இன்று வழக்கத்தைவிட அதிக தூரம் நடந்துவிட்டு வரலாமென அவள் எண்ணினாள். மலைப் பிரதேசங்களுக்குச் சென்றிருப்பவர்களுக்கு மலைப் பாதைகளில் நடப்பதன் சுகமும் கஷ்டமும் தெரிந்திருக்கும். அநேகமாய் இரு புறமும் புதர்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளிலேயே நடக்க வேண்டும். அந்தப் பாதைகளும் ஓயாமல் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கும். சம தரை என்பது அநேகமாய் கிடையாது. உஷ்ணப் பிரதேசங்களில் என்றால் அம்மாதிரி ஏறி இறங்கும் பாதைகளில் ஐந்து நிமிஷம் நடந்தாலும் களைத்துப் போய் விடுவோம். ஆனால் குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் எவ்வளவு நேரம் நடந்தாலும் சிரமம் தோன்றுவதில்லை.
பவானி சுமார் பத்து நிமிஷம் நடந்திருப்பாள். பக்கத்திலேயே எங்கேயோ இருந்து, "ஓ தெய்வமே!" என்று ஒரு துயரம் நிறைந்த தீனமான குரல் கேட்டது போல் இருந்தது. பவானியின் இருதயம் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து விட்டது. உடம்பெல்லாம் வியர்த்தது. அங்கேயே நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றையும் காணவில்லை. உண்மையில், அங்கே ஒன்றையுங் காணவும் முடியாது. பாதையின் இருபுறமும் அடர்த்தியான புதர்கள் மண்டியிருந்தன. எங்கே என்னத்தைப் பார்க்கிறது? தான் அந்தக் குரலை உண்மையில் கேட்கவில்லை. ஏதோ சித்தப்பிரமை என்ற முடிவுக்கு வந்தாள். அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தலையை விரைவாக நாலு தடவை குலுக்கிவிட்டு மேலே நடக்கலானாள்.
ஆனாலும் அவளுடைய குதூகலம் போய்விட்டது. என்னவோ சொல்ல முடியாத பாரம் ஒன்று அவளுடைய இருதயத்தை அமுக்குவது போல் இருந்தது. ஏதேதோ பழைய ஞாபகங்கள், சோகத்துடன் கலந்து, தெளிவில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. இத்தனை நாளும் தோன்றாத எண்னங்களெல்லாம் தோன்றின. "இந்த வாழ்க்கையின் பொருள்தான் என்ன? எதற்காக பிறக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?" என்று இப்படியெல்லாம் சிந்தனை சென்றது.
ரொம்ப நேரம் சுற்ற வேண்டும் என்ற நினைப்புடன் கிளம்பிய பவானி, வழக்கத்தை விட முன்னதாக வீடு திரும்பலானாள். திரும்பி வருகையில், மேற் சொன்ன குரல் கேட்ட இடத்தில் சற்று நின்று கவனித்தாள். ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தைத் தாண்டி வந்தாள். கிட்டத்தட்டப் பங்களாவுக்குச் சமீபம் வந்ததும் அங்கே கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்தாள். அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால், அவர்களுடைய பங்களாவின் முகப்பும், அதன் முன் வாசல் பூந்தோட்டமும் தெரிந்தன.
பவானிக்குச் சங்கீத ஞானமும் சங்கீதத்தில் அபிமானமும் உண்டு. பாறையின் மேல் உட்கார்ந்தவள், ஊமைக் குரலில் பாடத் தொடங்கினாள். "சித்தமிரங்கவில்லையோ?" என்ற பாட்டு அவளையறியாமல் வந்தது. "தீவினையின் பயனோ, தெய்வக் குற்றமோ இது?" என்ற அடியைப் பாடியபோது, என்றுமில்லாதபடி அவளுடைய இருதயம் உருகிற்று. அதையே பலமுறை திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தாள்.
ஆ! அது என்ன சப்தம்! சிரிப்பா அது? ஐயா! சிரிப்பிலே அவ்வளவு துயரமும் இருக்க முடியுமா? - பவானி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கினாள். அவளுக்குப் பத்து அடி தூரத்தில் புதர்களுக்கு மத்தியில் கொஞ்சம் இடைவெளியிருந்தது. அங்கிருந்த பாறையில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். பவானி அந்தப் பக்கம் திரும்பியதும் அவளை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வை அவளுடைய நெஞ்சைப் பிளந்தது.
"ஆமாம் அம்மா! நீ கேட்டாயே, ஒரு கேள்வி. தீவினையின் பயனா தெய்வ குற்றமா என்று, அதைத் தான் நானும் மூன்று வருஷமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் சொல்பவரைத்தான் காணோம்" என்றான்.
அவன் வாலிபப் பிராயம் உடையவன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். நீலகிரித் தோடர்களைப் போல் ஒரு பெரிய துப்பட்டியைப் போர்த்திக் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து களைத்துப் போய்க் காணப்பட்டான். அவன் க்ஷவரம் செய்து கொண்டு பத்துப் பதினைந்து தினங்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனாலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம். அவன் கண்கள் பிரகாசம் பொருந்தி இருந்தன. அவன் முகத்தின் பளபளப்பைப் பார்த்த பவானி, "ஆகா! என்ன தேஜஸ்!" என்று எண்ணமிட்டாள். ஒரு வேளை பக்தர்களுடைய சரிதங்களில் வருவது போல், பகவான் தான் இந்த உருவத்தில் வந்துவிட்டாரோ என்று கூட ஒரு கணம் நினைத்தாள். அந்த முக தேஜஸ் சுரத்தின் வேகத்தினால் ஏற்பட்டது என்பதை அச்சமயம் அவள் அறியவில்லை.
"உன்னை எப்போதோ நான் பார்த்திருக்கிறேன். இல்லையா?" என்று அவன் கேட்டான்.
பவானிக்கும் அவனை எங்கேயோ எப்போதோ பார்த்தது போன்ற ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே எந்தச் சந்தர்ப்பத்தில் என்று நினைவுக்கு வரவில்லை.
"நீங்கள் ரொம்பக் களைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது" என்றாள் பவானி.
"ஆமாம்; காலையிலிருந்து சாப்பிடாமல் மலை ஏறினால் களைப்பாயிராதா? பசிகூட இல்லை; தாகந்தான் நாக்கை உலர்த்துகிறது."
"இதோ எங்கள் பங்களா ரொம்ப சமீபத்தில் தான் இருக்கிறது. வருகிறீர்களா?"
அந்த வாலிபன் எழுந்திருக்கத் தயங்கினான். அதற்குக் காரணம், அவனுடைய பலவீனம் என்பதை அறியாத பவானி "ஏன் தயக்கம்? என்னைப் பார்த்தால் தாகத்துக்குத் தண்ணீர் கொடாதவள் என்று தோன்றுகிறதா?" என்றாள்.
அதைக் கேட்டதும் அந்த வாலிபன் மெதுவாகத் தள்ளாடிக் கொண்டு எழுந்திருந்தான். ஓர் அடி எடுத்து வைக்க முயன்றான்; திடீரென்று கீழே விழுந்தான்.
அப்போது பவானி பதறிக் கூவியதைக் கேட்டுத்தான், பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் ஓடி வந்தார்கள்.
பவானி இருந்த இடத்துக்கு அவர்கள் வந்ததும் சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார்கள். பாறையின் மேல் ஒரு வாலிபன் ஸ்மரணையற்றுக் கிடந்தான். அவனுடைய தலையின் அடியில், பவானியின் கம்பளிச் சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது. பவானி தன்னுடைய புடவையின் தலைப்பினால் அவன் முகத்தின் மேல் விசிறிக் கொண்டிருந்தாள்.
பிரணதார்த்தி அவனுடைய மார்பையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார். "உயிர் இருக்கிறது; ஆனால் 105 டிகிரிக்கு குறையாத சுரம்" என்றார். பவானி சுருக்கமாக அவனைத் தான் சந்தித்த விதத்தைச் சொன்னாள்.
"சரிதான்! விஷயம் என்னவென்று அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது இவனைப் பங்களாவுக்குத் தூக்கிக் கொண்டு போவோம்" என்றார் பிரணதார்த்தி. இப்படிச் சொல்லி அவர் அவனுடைய தலைப்புறத்தைப் பிடித்துத் தூக்கினார். சேஷாத்ரி கால்புறத்தண்டை சென்று, கால்களின் கீழாகக் கையைக் கொடுத்தார். கொடுத்தவர், நெருப்பைத் தொட்டவர் போல், சட்டென்று கையை எடுத்தார். அதனால் அந்த மனிதனின் கால் சடக்கென்று பாறையில் விழவும், 'டங்' என்று இரும்பின் சப்தம் கேட்டது. வேஷ்டி சிறிது விலக, அவன் காலில் இருந்த இரும்புக் காப்பு தெரிய வந்தது. ஏககாலத்தில் மூன்று பேருடைய கண்களும் அந்த இரும்புக் காப்பின் மேல் சென்றன.
"அது என்ன?" என்று கலவரத்துடன் கேட்டார் பிரணதார்த்தி.
சேஷாத்ரி வியப்பும் வேதனையும் பொருந்திய குரலில் "இவன் கைதி. கைதிகளுக்குத் தான் காலில் இந்த மாதிரி இரும்புக் காப்பு இருக்கும். கோயமுத்தூர் சிறையிலிருந்து சமீபத்தில் தப்பியோடிய கைதிகளில் இவன் ஒருவனாயிருக்க வேண்டும்" என்றார்.
சில நிமிஷ நேரம் அவ்விடத்தில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு, பிரணதார்த்தி பவானியின் முகத்தை நோக்கினார். அவளுடைய முகத்தில் அவர் என்ன கண்டாரோ தெரியாது.
"எது எப்படியாவது இருக்கட்டும். பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இவனை இப்படி அனாதையாய்ச் சாகவிடுதல் மகாபாவம். பிடியுங்கள், சேஷாத்ரி!" என்றார்.
இரண்டு பேருமாக அவனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பவானியும் பின்னோடு சென்றாள்.
ஆசிரியர் பிரணதார்த்தி விசால மனம் படைத்தவர். அபிப்பிராய பேதங்களுக்கு, சாதாரணமாக மதிப்புக் கொடுக்ககூடியவர். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் பிடிவாதமான அபிப்ராயம் கொண்டிருந்தார்.
இங்கிலீஷ் டாக்டர்களாயிருந்தாலும் சரி, சுதேசி வைத்தியர்களாயிருந்தாலும் சரி, அவ்வளவு பேரும் அவ்வளவு எமதூதர்கள் என்பது அவருடைய கருத்து. வைத்தியங்களுக்குள்ளே இயற்கை வைத்தியம் ஒன்றிலே தான் அவருக்கு நம்பிக்கை. அந்த வைத்திய முறையைப் பரிசோதிப்பதிலே அளவில்லாத ஆர்வம். உண்மையில், இயற்கை வைத்தியத்தைக் கையாளுவதற்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால், அதைவிட அவருக்கு மகிழ்ச்சியளிப்பது வேறொன்றுமேயில்லை. அதற்குச் சமமான சந்தோஷம் அவருக்கு அளிப்பது ஒன்றே ஒன்றுதான்; இங்கிலீஷ் டாக்டரிடம் வைத்தியம் செய்து கொண்டவன் பிழைக்காமல் செத்துப் போவது தான்!
அவருக்குத் தெரிந்தவர்களில் - அவருடைய யோசனையைக் கேட்கக்கூடியவர்களில் - யாருக்காவது உடம்பு சரிப்படவில்லையென்று கேட்டால், அவருக்கு வெகு உற்சாகம். அதிலும், தலைவலி கால்வலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால் அவருக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. குறைந்த பட்சம் ஒருவனுக்கு 'டபிள் நிமோனியா'வாவது வரவேண்டும்; அப்போது பார்க்க வேண்டும் அவருடைய குதூகலத்தை.
ஆனால் அம்மாதிரி பெரிய பெரிய வியாதிகளை வரவழைத்துக் கொள்ளும் மனிதர்கள் சாதாரணமாய்ப் பரம முட்டாள்களாயிருக்கிறார்கள்; அவர்கள் பெரிய டாக்டர்களைத் தேடிச் சென்று நிறைய பணத்தையும் கொடுத்துவிட்டுச் சீரழிந்து சாகப் பிரியப்படுகிறார்களே தவிர, பிரணதார்த்தியிடம் போய் நல்லபடியாய்ப் பைசா செலவு இல்லாமல் சாவோமென்று ஒருவனுக்காவது புத்தி இருப்பதில்லை. இது விஷயத்தில் அவருக்குத் தம் இஷ்டமித்ரர்கள் எல்லாரிடத்திலும் மனம் கசந்து போயிருந்தது. "என்னிடம் எத்தனை பசங்கள் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் எவ்வளவு விதமான உதவி என்னிடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது நன்றி விசுவாசம் இருக்கிறதா? ஏதோ ஒரு டைபாய்டு, ஒரு டயபிடீஸ், ஒரு அப்பெண்டிஸைடீஸ், ஒரு ட்யூபர்குலோஸிஸ் என்று என்னிடம் சிகிச்சைக்கு வருகிறானா?" என்பதாக அவர் யாரிடமும் வெளிப்படையாகச் சொன்னதில்லை யாயினும், அவருடைய இருதய அந்தரங்கத்தில் இத்தகைய குறை குடிகொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை.
இப்படிப்பட்டவருக்கு 105 டிகிரி சுரத்துடன் ஒருவன் வழியிலே கிடந்து கிடைத்தானென்றால் உற்சாகம் எப்படியிருக்குமென்று சொல்லவேண்டுமா? அதிலும் தமக்கே தமக்கல்லவா கிடைத்திருக்கிறான்! தாம் கொடுத்தால் உயிர்; இல்லாவிட்டால் இல்லை. எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம்! ஆகவே, அவனைப் பிழைக்கவைத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிகிச்சை ஆரம்பித்தார் பிரணதார்த்தி.
இரவெல்லாம் கண்விழித்துச் சிகிச்சை செய்தார். தலையிலே ஈரக் களிமண்ணை வைத்துக் கட்டினார். முதலிலே குளுகோஸ், அப்புறம் பார்லிகஞ்சி, அப்புறம் பழரசம் - இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரம் கொடுத்து வந்தார். பவானியும் கண்விழித்துக் கூட இருந்து அவருக்கு ஒத்தாசை செய்து வந்தாள்.
சிறிது சிறிதாக சுரம் இறங்கிற்று. இரண்டு மூன்று நாளில் நோயாளி நன்றாய்க் குணம் அடைந்தான். அவனுடைய உடம்பில் ஏற்பட்டிருந்த கோளாறு முக்கியமாகப் பசி, தாகம், களைப்பு இவற்றினால் உண்டானதே. ஆதலின் நல்ல உணவும், ஓய்வும் குளிரில் அடிபடாமல் தங்க இடமும் கிடைக்கவே, அவன் உடம்பு தானே குணமாகி வந்தது. ஆனால் புரொபஸர் பிரணதார்த்தி தம்முடைய இயற்கை வைத்திய முறையினாலேயே யமபாசத்திலிருந்து அவன் உயிரை மீட்டுவிட்டதாகக் கருதினார். ஸ்ரீமான் சேஷாத்ரி அப்படி நினைக்கவில்லை. "ஏதோ அவனுடைய ஆயுள் கெட்டியாயிருந்தபடியால், பிரணதார்த்தி வைத்தியம் செய்துகூடப் பிழைத்துக் கொண்டான்" என்று அபிப்பிராயப்பட்டதோடு, அதைச் சொல்லியும் விட்டார். இதனால், பிரணதார்த்தியின் சிநேகத்தை முக்கால்வாசியும் இழந்து விட்டாரென்றே கூறலாம். பவானியோ, வெளிப்படையாக, சித்தப்பாவின் வைத்தியத்தினாலேயே போன உயிர் திரும்பி வந்தது என்று சொல்லி அவரை மகிழ்வித்த போதிலும், தான் தன்னுடைய இருதய அந்தரங்கத்தில் பகவானைப் பிரார்த்தித்ததன் பயனாகவே அவன் பிழைத்தெழுந்ததாக மனதிற்குள் கருதினாள்.
அந்த இளைஞனுடைய முகம் எங்கேயோ பார்த்த முகம் போல் பவானிக்குத் தோன்றியதல்லவா? "எங்கே பார்த்திருக்கிறோம்?" என்று அவள் மனம் இடைவிடாமல் தேடிக் கொண்டே இருந்தது. முதல் நாள் இரவே அது அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுரவேகத்தில் அவன் பிதற்றியபோது கூறிய சில வார்த்தைகளினால், அது அவள் ஞாபகத்திற்கு வந்தது.
'கத்தி யின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது!'
என்று அவன் பாடினான். பிறகு, "அடியுங்கள், ஐயா! அடியுங்கள்! வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!" என்று கதறினான். உடனே பவானிக்கு அவனைத் தான் பார்த்தது எங்கே என்று பளீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அந்தச் சம்பவம் முழுவதும் நேற்றுத்தான் நடந்தது போல அவள் இருதயத்தில் பதிந்திருந்தது அன்றோ?
அப்போது, பவானி காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் கலாசாலையின் ஹாஸ்டலில் வசிந்து வந்தாள். கலாசாலையின் ஆசிரியைகள் எல்லாரும் இங்கிலீஷ் நாகரிகத்தில் மூழ்கினவர்கள். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் எந்தவிதமான குறையும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆகவே தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த சத்தியாக்கிரஹ இயக்கத்தைச் சுத்தப் பைத்தியக்காரத் தனமென்று கருதினார்கள்.
ஹாஸ்டலில் வசித்த மாணவிகளில் முக்கால்வாசிப் பேரைப் போல், பவானியும் அத்தகைய கொள்கையுடையவளாகவே யிருந்தாள். ஒருநாள் அவள் துணி வாங்குவதற்காக, தான் வழக்கமாய் வாங்கும் பெயர்பெற்ற கரம்சந்த் பயான்சந்த் சீமை ஜவுளிக் கடைக்குப் போனாள். அப்போது சீமை ஜவுளிக் கடைகளில் தொண்டர்கள் மறியல் செய்கிறார்களென்றும், போலீஸ்காரர்கள் வந்து தொண்டர்களை அடித்து இழுத்துச் செல்கிறார்களென்றும் அவள் அறிந்திருந்தாள். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பயான்சந்த் கடைக்குச் சென்றாள்.
கடை வாசலில் காந்தி குல்லா அணிந்த தொண்டன் ஒருவன் கைகூப்பிக் கொண்டு நின்றான். 'பால் வடியும் முகம்' என்றால் அவன் முகத்தைத்தான் சொல்ல வேண்டும். அவன் இரக்கமும் கனிவுங் கொண்ட பார்வையுடன் பவானியைப் பார்த்தான். எத்தகைய கல் நெஞ்சையும் இளகச் செய்யும் சோகம் ததும்பிய புன்னகை ஒன்று புரிந்தான். "அம்மணி! கல்வியறிவு படைத்த தாங்கள் இப்படிச் செய்யலாமா? தயவு செய்து திரும்பிப் போங்கள்" என்றான்.
அவனுடைய குரல், பார்வை, பணிவான பேச்சு எல்லாம் சேர்ந்து பவானியின் இருதயத்தைக் கலங்க வைத்துவிட்டன. அதனால் அவளுடைய கோபம் அதிகரித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று அவள் தன்னுடைய இங்கிலீஷ் ஆசிரியை சொல்லிக் கேள்விப்பட்டிருந்தாள். எனவே, "இந்த வேலைக்கு உங்களுக்கெல்லாம் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்?" என்று குரலை ரொம்பவும் கடுமைப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
"சம்பளமா? இன்னும் ஐந்து நிமிடத்தில் நீங்களே பார்ப்பீர்கள். கையில் குண்டாந் தடியுடன் சம்பளம் கொடுப்பதற்கு வருவார்கள்" என்றான் தொண்டன்.
"இம்மாதிரி முட்டாள் காரியம் செய்பவர்களை அடிக்காமல் என்ன செய்வது? எனக்குக் கூட இப்போது உம்மை இரண்டு அறை அறைய வேண்டுமென்று தோன்றுகிறது" என்றாள் பவானி.
"அப்படியெல்லாம் செய்யாதீர்கள், காரியம் விபரீதமாய்ப் போய்விடும். உங்கள் கையால் அடிபடலாமென்று தெரிந்தால் ஊரிலுள்ள வாலிபர்கள் எல்லாம் மறியல் செய்ய வந்துவிடுவார்கள்!"
இப்படிச் சொல்லிவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான். பவானியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே அவள் "ஆமாம்; சீமைத்துணி வாங்கக் கூடாதென்று ஏன் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டாள்.
"நம் நாட்டில் ஏழைகள் எத்தனையோ பேர் தொழிலின்றிக் கஷ்டப்படுகிறார்கள்..."
"ஏழைகளில் நம் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன அயல் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன? என்னுடைய பணத்தைச் சீமையிலுள்ள ஏழைகளுக்கே அனுப்புகிறேன். உங்களைப்போல் குறுகிய மனோபாவம் எனக்குக் கிடையாது."
இவ்வாறு சொல்லி பவானி மேலே நடக்கத் தொடங்கினாள். தொண்டன் அப்போது அவளைப் பார்த்த பார்வை அவளுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றது. ஆனாலும், பின் வாங்கினால் அவனிடம் தொல்வியடைந்ததாகுமென்று அவள் கருதினாள். அம்மாதிரி தோல்வியை அவள் விரும்பவில்லை. ஆகவே அவனை இலட்சியம் செய்யாமல் நேரே பார்த்துக்கொண்டு விரைவாக நடந்தாள். கடையின் முன் வாசற்படியை அடைந்ததும், அவளுக்கு ஏனோ திரும்பிப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அவன் முகம் இப்போது எப்படி இருக்கும்? அதில் கோபம் அதிகமா இருக்குமா? ஏமாற்றம் அதிகமாயிருக்குமா?
திரும்பிப் பார்த்தாள். அதே சமயத்தில் கடைத்தெருவில் ஒரு மோட்டார் லாரி வந்து நின்றது; அதிலிருந்து திடுதிடுவென்று ஒரு கூட்டம் போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். அவர்களில் நாலுபேர் கையில் குண்டாந்தடியுடன் இவளுடன் பேசிய தொண்டனை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிஷம் பவானியின் இருதயம் ஸ்தம்பித்து நின்றது; அடுத்த நிமிஷமே கணத்துக்கு நூறு தடவை வீதம் அடித்துக் கொண்டது.
பட்! பட்! பட்!
பவானி கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் மூடிக் கொண்டிருக்கவும் முடியவில்லை.
"வந்தே மாதரம்!" "வந்தே மாதரம்!" என்று அத்தொண்டன் கதறும் குரல் கேட்டது.
பட்! பட்! பட்!
அவள் கண்ணைத் திறந்த போது, தொண்டன் கீழே விழுந்து கொண்டிருந்தான். அவன் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டது.
கீழே விழுந்த பிறகும் அவன் "வந்தே மாதரம்!" என்று கோஷித்தான். கரகரவென்று அவன் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். போலீஸ் லாரியில் தூக்கிப் போட்டார்கள்.
பவானி கடைக்குள் நுழையவில்லை. கடை வாசற்படியில் நின்றவள் சட்டென்று நெருப்பை மிதித்து விட்டவளைப் போல் அங்கிருந்து விரைந்து சாலைப் பக்கம் வந்தாள். தன்னுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து அளவுக்கடங்காத தாபத்துடன் பகவானிடம் ஒரு பிரார்த்தனை செலுத்தினாள்; 'போலீஸ் லாரி அங்கிருந்து கிளம்புவதற்குள் அந்த இளைஞன் தன் பக்கம் ஒரு தடவை திரும்பிப் பார்க்க வேண்டும்' என்பது தான் அந்தப் பிரார்த்தனை. 'அந்தப் பாழும் சீமை ஜவுளிக் கடைக்குள் தான் போகாமல் திரும்பி விட்டதை அவன் பார்க்க வேண்டுமே' என்று அவள் பரிதபித்தாள். சாதாரணமாய் ஓர் ஆயுள் காலத்தில் அநுபவிக்கக் கூடிய வேதனை அவ்வளவையும் பவானி அந்தச் சில நிமிஷ நேரத்தில் அநுபவித்து விட்டாள்.
மோட்டார் கிளம்பிற்று. ஐயோ! அவன் தன்னைப் பார்க்காமலே போய்விடுவானோ? ஆகா! இதோ பார்க்கிறான்; பார்த்து, அவள் அந்தக் கடைக்குள் போகாமல் திரும்பியதைக் கவனித்ததற்கு அறிகுறியாகப் புன்னகையும் புரிகிறான்!
பவானியின் தலை ஒரு கணநேரம் கரகரவென்று சுழன்றது. அப்போது அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று ஆகாய வெளியில் தேவர்களும் தேவிகளும் கூட்டங்கூடி நின்று,
'வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்'
என்று பாடிக்கொண்டு, அந்தப் போலீஸ் லாரியின் மேல் புஷ்பமாரி சொரிவது போலும், அவர்கள் சொரிந்த புஷ்பங்கள் லாரியின் மேற்கூரையை எப்படியோ கடந்து உள்ளே வந்து அந்தத் தொண்டன் மேல் சொரிந்து கிடப்பது போலும் அவளுக்குத் தோன்றியது! அடுத்த நிமிஷம் பிரமை தெளிந்தது. கண்ணைத் திறந்து பார்த்த போது போலீஸ் லாரியைக் காணோம்.
அன்றைக்குப் பார்த்த அம்முகத்தை அப்புறம் வெகு காலம் பவானி ஓயாமல் தேடிக் கொண்டிருந்தாள். வீதியில் வண்டியில் போகும்போதும், கடற்கரையில் காற்று வாங்க உலாவும் போதும், ரயில் பிரயாணம் செய்யும் போதும், நாடகம் பார்க்கும்போதும், அவளுடைய கண்கள் சுழன்று சுழன்று அந்த முகத்தைத் தேடிக் கொண்டேயிருந்தன. நாளாக ஆக, பவானி நிராசையடைந்தாள். கனிவு ததும்பிய கண்களும், சோகம் பொருந்திய புன்னகையும் கொண்ட அத்தொண்டனின் திவ்ய முகத்தை இந்த ஜன்மத்தில் தான் இனி பார்க்கப் போவதில்லையென்றே தீர்மானித்தாள். வேறு காரியங்களில் கவனம் செலுத்தி அந்த முகத்தை மறப்பதற்குப் பெரிதும் முயன்றாள்.
ஏறக்குறைய அந்த முயற்சியில் அவள் வெற்றியடையும் தறுவாயில் இருந்தபோது இந்த ஆச்சரியமான சம்பவம் நேர்ந்தது. சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவளுடைய மனோரதம் கைக்கூடிற்று. அதனால் பவானி எத்தகைய உள்ளக் கிளர்ச்சி அடைந்திருப்பாள் என்று சொல்லவும் வேண்டுமோ?
பவானி இப்போது ஒரு தனி உலகத்தில் வசித்து வந்தாள். அவ்வுலகில் அளவிலாத ஆனந்தமும், சொல்ல முடியாத துக்கமும், பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன.
ஆகாயத்தை அளாவி வளர்ந்திருந்த கற்பூர மரங்களின் மீது மலைக்காற்று அடிக்கையில் ஏற்பட்ட சப்தம் ஒரு சமயம் குதூகலமான சிரிப்பைப் போல் அவள் காதில் பட்டது. இன்னொரு சமயம் யாரோ விம்மி விம்மி அழுவது போல் காதில் விழுந்தது. காலை நேரத்தில் மரம் செடிகளிலிருந்து பனித்துளிகள் கலகலவென்று உதிரும் போது, ஒரு சமயம் அவை ஆனந்த பாஷ்பமாகவும் இன்னொரு சமயம் துக்கக் கண்ணீராகவும் தோன்றின. பட்சிகளின் கானம் ஒரு சமயம் அவளுக்குச் சங்கராபரண ராகத்தைப் போல் உற்சாகத்தை உண்டாக்கித் துள்ளிக் குதிக்கலாமா என்று தோன்றச் செய்தது; மற்றொரு சமயம் அதே பறவைகளின் கீதம் சோகரசம் பொருந்திய யதுகுல காம்போதியாக மாறி, அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்க்கச் செய்தது.
சேஷாத்ரியின் விஷயத்தில் ஏற்பட்ட மனமாறுதல் அவளுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. அவரைப் பார்ப்பதற்கோ பேசுவதற்கோ அவளுக்கு திடீரென்று பிடிக்காமல் போயிற்று.
சேஷாத்ரியின் நடத்தையிலும் ஒரு மாறுதல் காணப்பட்டது. அவருடைய உற்சாகமும் சந்தோஷமும் எங்கேயோ போய்விட்டன. சதா கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கலானார். அந்த நோயாளியைக் குணப்படுத்துவதற்குப் பிரணதார்த்தியும் பவானியும் எடுத்துக் கொண்ட முயற்சி ஒன்றும் அவருக்குப் பிடிக்கவில்லையென்பதைத் தெளிவாய்க் காட்டிக் கொண்டார். உண்மையில் அவன் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு அவர் அதிகம் வருவது கூட இல்லை. எப்போதாவது அருமையாக வந்தால், அவன் தூங்கும்போது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார். அவருடைய இந்த நடத்தை பிரணதார்த்திக்குக் கூட அவர்மேல் வெறுப்பு உண்டு பண்ணிற்று.
நாலாம் நாள் நோயாளி படுத்திருந்த அறைக்குள் சேஷாத்ரி வந்திருந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்தவன் தற்செயலாகக் கண்ணை விழித்தான். எதிரே நின்ற சேஷாத்ரியைக் கண்டதும், 'நிஜந்தானா' என்று சந்தேகப்படுபவன் போல் கண்ணை மூடிமூடித் திறந்து பார்த்தான்.
கடைசியாக, "நீங்கள் தானா? நிஜமாகப் பாரிஸ்டர் சேஷாத்ரியா?" என்று கேட்டான்.
"ஆமாம்; மிஸ்டர் உமாகாந்தன்! நிஜமாக நான் தான்" என்றார் சேஷாத்ரி.
உமாகாந்தன் பலமிழந்திருந்த தன்னுடைய கைகளினால் தலையிலே இரண்டு மூன்று தடவை அடித்துக் கொண்டான். "விதிவசம் என்பதில் இப்போதுதான் எனக்கு நம்பிக்கை வருகிறது. இந்த இடத்தில், எல்லாரையும் விட்டு, நீங்களா வந்திருக்கவேண்டும்?" என்றான்.
அப்போது பவானியின் உடம்பில் ஒவ்வோர் அணுவும் துடிதுடித்தது. பிரணதார்த்திக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.
"முன்னாலேயே உங்களுக்கு இவரைத் தெரியுமா, சேஷாத்ரி? எப்படித் தெரியும்?" என்று பிரணதார்த்தி கேட்டார்.
"ஹைகோர்ட்டுக்கு இவனுடைய கொலைக் கேஸ் அப்பீல் வந்த போது தெரியும். அப்போது நான் பப்ளிக் பிராசிகியூடர்; சர்க்கார் தரப்பிலே அப்பீல் நடந்தது" என்றார் சேஷாத்ரி.
கொலைக்கேஸ் என்றதும் பவானி தலையிலே பெரிய பாறாங்கல் விழுந்தது போல் திடுக்கிட்டாள்; இதுவரை அவள் மனத்தில் இவன் ஏதோ ராஜீயக் குற்றத்துக்காகத் தான் கைதியாயிருக்க வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்து வந்தது.
பிரணதார்த்திக்கோ திக்குத் திசை ஒன்றும் புரியவில்லை. ஸுகுமாரனான இந்த இளைஞன் கொலைக் குற்றத்துக்குத் தண்டனையடைந்த கைதி என்பதை அவரால் நம்பமுடியவேயில்லை. சேஷாத்ரியை விவரமாய்ச் சொல்லும்படி கேட்டார். "கேஸ் கட்டில் படித்தது மட்டுந்தானே எனக்குத் தெரியும்? அவனே பூரா விவரமும் சொல்லட்டுமே" என்றார் சேஷாத்ரி.
உமாகாந்தன் முதலில் தன் கேஸைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அதில் சில சம்பவங்கள் கேட்பவர்களுக்கு விளங்காமல் போகவே, அடியிலிருந்து தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் முழுவதையுமே சுருக்கமாகக் கூறினான். அவன் கூறிய வரலாறு பின் வருமாறு:
உமாகாந்தனுடைய தாயாருக்குப் பாக்கியக்ஷ்மி என்று பெயர். ஆனால், பெயரில் உள்ள பாக்கியத்தைத் தவிர அவள் வாழ்க்கையில் எவ்விதப் பாக்கியத்தையும் அடையவில்லை. உமாகாந்தனுடைய தந்தைக்கு அவள் இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டாள். இல்வாழ்க்கையின் இன்பத்தை அவள் ஆறு வருஷத்துக்கு மேல் அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
உமாவினுடைய தந்தைக்கு அவருடைய மூத்த தாரத்தின் மூலம் ஒரு பிள்ளை இருந்தான். அவர் மரணமடைந்த போது அவன் பி.ஏ. பாஸ் செய்துவிட்டு, சீமைக்கு ஐ.ஸி.எஸ். படிக்கப் போக வேணுமென்று தந்தையிடம் உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் திடீரென்று ஏற்பட்ட நோய் காரணமாகத் தந்தையின் மரணம் சமீபிக்கவே, அவர் தம் மூத்த புதல்வனை அருகில் அழைத்து, "குழந்தாய்! உனக்கு என்னால் ஆனதையெல்லாம் செய்து விட்டேன். பி.ஏ. படிக்க வைத்திருக்கிறேன். இனிமேல் நீ சம்பாதித்து உன் வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான். உன் சிறிய தாயாரையும் உன் தம்பியையுந்தான் அநாதையாக விட்டுப் போகிறேன். அவர்களுக்காக இதுவரையில் நான் ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய உயிரை நாலாயிரம் ரூபாய்க்கு இன்ஷியூர் செய்திருக்கிறேன். உன் சிறிய தாயாரைக் கலியாணம் செய்து கொண்டதற்கு முன்பே இன்ஷியூர் செய்ததாகையால் என் மரணத்திற்குப் பின் உனக்குத் தொகை சேரவேண்டுமென்று அதில் கண்டிருக்கிறது. நீ அந்தத் தொகையை வாங்கி உன் சிறிய தாயாருக்குக் கொடுத்துவிடு" என்று கூறி விட்டு இறந்து போனார்.
உமாவின் தமையனுக்கு, அவனுடைய சிறிய தாயாரை எப்போதுமே பிடிப்பதில்லை; தனக்கு விரோதியாகத் தன் தகப்பனாரின் அன்பைக் கவர வந்தவள் என்று அவளை வெறுத்து வந்தான். ஆனாலும், அவன் இப்படி மோசம் செய்வான், தகப்பனார் சாகும்போது சொன்ன வார்த்தைக்கு இப்படித் துரோகம் பண்ணுவான் என்று பாக்கியலக்ஷ்மி எதிர்ப்பார்க்கவில்லை.
உத்தரக் கிரியைகள் ஆனதும், இன்ஷியூரன்ஸ் பாலிஸியை எடுத்துக் கொண்டு பணம் வாங்கி வருவதாகச் சென்னைக்குப் போனவன் போனவன் தான். திரும்பி வரவும் இல்லை; எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை.
ஐந்து வயதுக் குழந்தையுடன் நிர்க்கதியாய் விடப்பட்ட பாக்கியலக்ஷ்மி எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளானாள். முதலில் கொஞ்சநாள் ஒரு பணக்கார வீட்டில் சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, ஒரு புண்ணியவானின் சிபார்சினால் சென்னையில் தர்மப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்து படித்து உபாத்தியாயினி வேலைக்கு பயிற்சி பெற்றாள். பிறகு ஜில்லா போர்டு பெண்கள் பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயினியாக வேலை பார்க்கலானாள். அதில் கிடைத்த சொற்பச் சம்பளத்தில் செட்டாக ஜீவனம் செய்து, மிகுந்த பணத்தைக் கொண்டு உமாகாந்தனைப் படிக்க வைத்தாள். உமாவும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கி, உபகாரச் சம்பளங்கள் பெற்று, தாயார் அனுப்பும் சொற்பப் பணத்தில் மற்றச் செலவுகளை நடத்திக் கொண்டு படித்து வந்தான்.
அவன் சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த போது, மகாத்மாவின் உப்புச் சத்தியாக்கிரஹ இயக்கம் தீவிரமாக நடந்துவந்தது. உமாவின் மனம் அந்த இயக்கத்தில் ஈடுபட்டது. தேசத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பேரியக்கத்தில் சிறை சென்றும் அடிபட்டும் வரும் செய்திகளைப் படிக்கப் படிக்க அவன் ஹிருதயத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. படிப்பிலே புத்தி செல்லவில்லை. கடைசியாகச் சென்னைக் கடை வீதிகளில் தொண்டர்கள் மறியல் செய்வதையும், அவர்கள் அடிக்கப் படுவதையும் நேருக்கு நேர் பார்த்த போது அவன் மனம் பூராவும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட மகத்தான இயக்கத்தில் ஈடுபடாத வாழ்க்கையினால் என்னதான் பிரயோஜனம்? எனவே, அந்நியத்துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு மறியலுக்குச் சென்றான்.
பல தினங்கள் அவனை அடித்து இழுத்துச் சென்று எங்கேயாவது தூரமான இடத்தில் கொண்டு போய் விட்டு வந்த போதிலும் அவன் மறுபடியும் மறுபடியும் மறியலுக்கு வருவதைக் கண்ட போலீஸார் கடைசியில் அவனைக் கைது செய்துகொண்டு போனார்கள். விசாரணை நடந்தது. ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
உமா தன்னுடைய எண்ணத்தை முன்னமே தாயாருக்கு எழுதித் தெரிவித்திருந்தான். அவளுக்கு ஒரு பக்கத்தில் பெருமையாயிருந்தது. மற்றொரு பக்கம் அளவில்லாத துக்கமும் உண்டாயிற்று. ஆனால், அவள் அவனுக்கு எழுதிய பதிலில், "அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட வேண்டாம்" என்று தான் எழுதினாள். அவள் விடுமுறை பெற்றுச் சென்னைக்கு வருவதற்குள் உமா சிறைக்குப் போய் விட்டான். பிறகு பாக்கியலக்ஷ்மி மகனுக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சங்கூடத் தன் துக்கத்தைக் காட்டாமல், சந்தோஷமாய் ஒரு வருஷமும் சிறைச்சாலையில் இருந்து விட்டு வரும்படி தைரியம் சொல்லி எழுதினாள்.
முதலில் இரண்டு மூன்று கடிதங்கள் இப்படி உற்சாகமூட்டுவனவாக இருந்தன. அப்புறம் வந்த கடிதங்களில் சோர்வு அதிகம் காணப்பட்டது. 'தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வந்துவிட வழிகிடையாதா?' என்று கூட ஒரு கடிதத்தில் கேட்டிருந்தாள். இதனால் உமாவின் இருதயமும் கலங்கிற்று; ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.
உண்மையாகவே பாக்கியலக்ஷ்மிக்கு அப்போது பெரியதொரு துர்ப்பாக்கியம் நேர்ந்திருந்தது. அச்சமயம் அவள் எந்த ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தாளோ, அந்த ஜில்லா போர்டானது 'ரங்க சமுத்திரம் ராவணன்' என்று பெயர் பெற்ற ஒரு மகா பாபியிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் இல்லாத துர்க்குணத்தை உலகத்தில் வேறெங்கும் காண இயலாது. லஞ்சத்தினாலும், தடியடி ஆட்கள் பலரைத் தன்கீழ் வைத்துக் கொண்டிருந்ததனாலும் அவன் அப்படிச் செல்வாக்குப் பெற்றான். அதே முறைகளினால் அந்தச் செல்வாக்கை நாட்டிக் கொண்டும் இருந்தான். அவனுடைய கோர கிருத்தியங்களில் ஒன்று ஜில்லா போர்டுகளுக்குட்பட்ட பெண் பள்ளிக்கூடங்களின் உபாத்தியாயினிகளை உபத்திரவிப்பதாகும். அவனுடைய பொல்லாத கொடுங்கண், பாக்கியலக்ஷ்மியின் மீதும் விழுந்தது. அவள் அவனுடைய துராசைக்கு இணங்க மறுக்கவே, பள்ளிக்கூடத்துக்குப் பள்ளிக்கூடம் அவளை மாற்றிக் கொண்டும் இன்னும் பலவிதங்களில் உபத்திரவித்துக் கொண்டும் இருந்தான். பாக்கியலக்ஷ்மி இதைப் பற்றிச் சென்னையிலுள்ள பத்திரிகைகளுக்கும், அப்போது அதிகாரத்தில் இருந்த சர்க்கார் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதினாள். மந்திரிகளில் ஒருவர் அந்தக் கடிதத்தை மேற்படி ஜில்லா போர்டு பிரஸிடெண்டுக்கே அனுப்பி, "இப்படிப்பட்ட பொல்லாத பெண்பிள்ளையை ஏன் வேலையில் வைத்திருக்கிறாய்" என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு ஒருநாள், பாக்கியலக்ஷ்மியைத் துர்நடத்தை காரணமாக வேலையிலிருந்து நீக்கிவிட்டதாய் உத்தரவு வந்தது. அன்றிரவு அவள் குடியிருந்த வீட்டில் நாலைந்து தடியர்கள் புகுந்து அவளை அடித்து இம்ஸித்துக் குற்றுயிரும் குலை உயிருமாய் விட்டுச் சென்றார்கள்.
உமாகாந்தன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது தன் தாயாரை இத்தகைய கோலத்தில் கண்டான். அவனுடைய இரத்தம் கொதித்தது; நெஞ்சு தீய்ந்தது. விவரம் தெரிந்த போது, "அம்மா! அந்தப் பாவியைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை வந்து பார்க்கிறேன்" என்று அலறிக் கொண்டே பித்துப் பிடித்தவன் போல் ஓடினான்.
'ரங்க சமுத்திரம் ராவணன்' அப்போது தங்கியிருந்த இடத்தை அவன் விசாரித்துக் கொண்டு அங்கே போய்ச் சேர்ந்தான். பங்களாவில் அவன் நுழையும் போது துப்பாக்கியின் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான். சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினான். அங்கே தான் கொல்வதற்காக வந்த மனிதன் ஏற்கனவே சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தான்! உமாகாந்தனைப் போலவே பழி தீர்க்க வன்மங் கொண்ட வேறொருவன் இவனை முந்திக் கொண்டிருக்க வேண்டும். உமா அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துத் திகைத்து நிற்கையிலேயே ஜனங்கள் பலர் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.
விசாரணையில் உமாகாந்தன் ஒன்றையும் ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னான். ஜில்லா கோர்ட் ஜட்ஜு மகா நீதிமான். அத்துடன் அவர் 'ரங்க சமுத்திரம் ராவண'னின் கோரக் கிருத்தியங்களையெல்லாம் நன்கறிந்தவர். ஆகவே, அவர் குற்றம் ருசுவாகவில்லையென்று சொல்லி எதிரியை விடுதலை செய்துவிட்டார்.
சர்க்கார் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அப்போது சென்னை ஹைகோர்ட்டில் பாரிஸ்டர் சேஷாத்ரி பப்ளிக் பிராஸிக்யூடராயிருந்தார். உமாகாந்தன் தன்னுடைய கேஸைத் தானே நடத்துவதாகச் சொல்லி, கீழ்க்கோர்ட்டில் சொன்னதுபோலவே நடந்தது நடந்தபடி உண்மையே உரைத்தான். ஆனால் பாரிஸ்டர் சேஷாத்ரி தஸ்தாவேஜிகளையும் சாட்சியங்களையும் கொண்டு உமாகாந்தன் தான் கொலை செய்திருக்க வேண்டுமென்று திண்ணமாய் ருசுப்படுத்தினார். நீதிபதிகளும் அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு எதிரிதான் கொலை செய்தது என்று தீர்மானித்தனர். ஆனால் அதற்குத் தூண்டுதலாயிருந்த காரணத்தை உத்தேசித்துக் கைதிக்குத் தூக்குத்தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தனர்.
அப்போது, கோர்ட்டில் எதிரி நடந்துகொண்ட விதம் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அவன் நீதிபதிகளுக்கும், முக்கியமாய் பப்ளிக் பிராஸிகியூடருக்கும், தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தான். "என் கையால் அந்தப் பாதகனைக் கொல்லவில்லையேயென்று எனக்கு ரொம்பவும் மனஸ்தாபமாயிருந்தது. இப்போது நான் தான் கொன்றேன் என்று சட்டம் தீர்த்துவிட்டதல்லவா? ரொம்ப சந்தோஷம்!" என்று அவன் கூவிக்கொண்டிருக்கையிலேயே போலீஸார் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நாலு வருஷம் சிறையிலிருந்த பிறகு உமாகாந்தனுக்கு இம்மாதிரி ஆயுள் முழுவதும் சிறையில் காலங்கழிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தோன்றிற்று. சமயம் நேர்ந்த போது தப்பிச் செல்ல முயல்வதென்றும், அம்முயற்சியிலே உயிர் போனால் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று என்றும் தீர்மானித்தான். சென்ற வாரத்தில் அது மாதிரி சந்தர்ப்பம் நேரவே அவனும் இன்னும் ஐந்து கைதிகளுமாகச் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டார்கள்; மூன்று பேர் சுடப்பட்டு இறந்தார்கள். உமாகாந்தன் மட்டும் எப்படியோ தப்பித்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் புகுந்து அலைந்து கடைசியாக இங்கு வந்து சேர்ந்தான்.
கைதி சொன்ன இந்தக் கதையை கேட்டு வருகையில் பிரணதார்த்தி பலமுறை கண்களைத் துடைத்துக் கொண்டார். பவானி அழுதே விட்டாள். ஆனால் சேஷாத்ரி மட்டும் துளிக்கூட மனங்கலங்காமல் உட்கார்ந்திருந்தார். அவருடைய கடின சித்தத்தைக் கண்டு பிரணதார்த்தியும் பவானியும் பெரிதும் அதிசயித்தார்கள்.
நீலகிரியில் அவ்வருஷம் வழக்கத்திற்கு முன்னதாகவே மேற்கத்தி மழை தொடங்கிவிடக் கூடுமென்று அநுபவமுள்ளவர்கள் சொன்னார்கள். காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வந்தது. மரங்களும் செடிகொடிகளும் அசைந்தாடும்போது வரப்போகும் பெரு மழையை நினைத்து இவை நடுங்குவது போல காணப்பட்டது. மேற்குத் திக்கில் இருண்ட மேகங்கள் சூழத் தொடங்கின. திக்குத் திகந்தங்கள் எல்லாம் நடுங்கும்படி இடி முழக்கங்கள் கேட்டன. வேனிற் காலத்தில் இரை தேடி மலைக்கு வந்த பட்சிகள் கூட்டங் கூட்டமாகக் கீழ்த் திசையை நோக்கிச் செல்லலாயின. சுகவாசத்துக்காக மலைக்கு வந்திருந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் அவசர அவசரமாக மூட்டை கட்டினார்கள்.
கூனூரில் புரொபஸர் பிரணதார்த்தியின் பங்களாவில் வசித்தவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பெரும் புயல் அடித்துக் கொண்டிருந்தது. புயலின் உத்வேகம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.
"சட்டமாவது கோர்ட்டாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் சுத்த மோசம்! உமாகாந்தனைப் போன்ற ஒரு நிரபராதியைச் சிறையிலிடும் சட்டம் என்ன சட்டம்? அதை அநுமதிக்கும் ராஜாங்கம் என்ன ராஜாங்கம்?..." என்று பிரணதார்த்தி பொங்கினார்.
"குற்றமற்றவன் என்கிறீர்களே? உங்களுக்கு எப்படித் தெரியும்? குற்றம் சாட்டப்பட்டவன் சொல்வதுதானே?" என்றார் சேஷாத்ரி.
"ஆமாம்; அவன் சொல்லுவதுதான். ஆனால் அவன் சொல்வதே எனக்குப் போதும். அதற்கு விரோதமாய் நூறு பேர் சொன்னாலும் நம்பமாட்டேன். அப்படியே அவன் கொலை செய்ததாக இருக்கட்டும்; அப்போதும் அவன் குற்றவாளியில்லை. ஒரு பெரிய ரண பாதகனை இந்த உலகை விட்டு நீக்கியதற்காக அவனுக்குச் சமூகம் நன்றி செலுத்த வேண்டும். நானாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன். என்னுடைய தாயாரை ஒரு பாதகன் அப்படி துன்புறுத்தியிருந்தால் அவனைக் கட்டாயம் கொன்றிருப்பேன்" என்று ஆத்திரத்துடன் கூறினார் பிரணதார்த்தி.
"கட்டாயம் நீங்களும் தண்டனை அடைந்திருப்பீர்கள். சட்டத்திற்கு உயர்வு, தாழ்வு கிடையாது. குற்றம் செய்தவனைத் தண்டிக்கச் சட்டங்களும், கோர்ட்டுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தானே தண்டனை விதிப்பதென்று கிளம்பினால், அதற்கு முடிவு எங்கே? அராஜகந்தான் ஏற்படும்" என்று சேஷாத்ரி வாதம் செய்தார்.
"மிஸ்டர் சேஷாத்ரி! நான் சொல்கிறேன்; இந்தச் சட்டத் தொழில் உங்களை அடியோடு கெடுத்து விட்டது. நீங்கள் இவ்வளவு மோசமான மனிதர் என்று எனக்கு இதுவரையில் தெரியாது" என்றார் பிரணதார்த்தி.
இம்மாதிரியாக இந்த அத்தியந்த சிநேகிதர்களுக்குள்ளே விரோத பாவம் மூண்டது. ஒவ்வொரு நாளும் அது அதிகமாகி வந்தது.
அந்த வீட்டில் சேஷாத்ரி இப்போது ஒரு தனி மனிதரானார். பவானி அவருடன் அதிகமாய்ப் பேசுவது கூடக் கிடையாது. அவருடைய குணம் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்பதை மறைத்து வைக்கப் பிரணதார்த்தியாவது பவானியாவது சிரமப்படவில்லை. அப்போது சேஷாத்ரி தாம் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருந்தால், அவர்கள் நிச்சயமாய் ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் சேஷாத்ரி போவதற்கு விருப்பமுள்ளவராய்க் காணப்படவில்லை.
பவானி இப்போது மெய்மறந்த பரவச நிலையிலிருந்தாள். தன்னை மறந்ததுடன் உலகத்தையே மறந்துவிட்டாள். அவளுடைய உள்ளத்தில் உமாகாந்தன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் இடமே இல்லாமல் போயிற்று. உமாகாந்தனுக்குக் கொஞ்சம் தேக திடம் ஏற்பட்டபோது, அவனுடன் பவானியும் பிரணதார்த்தியும் மலையில் உலாவச் செல்வார்கள். கொஞ்சம் தூரம் சென்றதும் உமாகாந்தன் மேலே நடக்க முடியாமல் உட்கார்ந்துவிடுவான். பவானியும் அவனுடன் நின்றுவிடுவாள். பிரணதார்த்தி மட்டும் அதிக தூரம் போய்விட்டு வருவார்.
பவானியும் உமாகாந்தனும் தனியாயிருக்கையில் பவானி அதிகம் பேசுவதாயில்லை; உமாவைப் பேசவிட்டுத் தான் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பாள். அவன் தன்னைப் பற்றியே தான் அதிகம் பேசுவான். தான் வருங்காலத்தைப் பற்றி என்னென்ன ஆசை வைத்திருந்தானென்றும், அவையெல்லாம் எப்படி நிராசையாயின என்றும் சொல்வான். தன்னை வளர்த்துப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவதற்காகத் தன் தாயார் பட்ட கஷ்டங்களைக் கண்ணில் ஜலம் ததும்பக் கூறுவான். தேச சேவையில் தன்னுடைய அநுபவங்களை எடுத்துரைப்பான். சுதந்திரப் போர் நடந்த காலத்தில், மேலும் மேலும் விழுந்த அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அசையாமல் நிற்பதற்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அபூர்வ தைரியத்தைப் பற்றி வியப்புடன் கூறுவான். தன்னுடைய தாயார் அடிபட்டுக் கிடந்த காட்சியை விவரிக்க முயன்று, முடியாமல் அழுதுவிடுவான். சிறைச் சாலையில் தான் பட்ட கஷ்டங்களை விவரிப்பான். 'தூக்குத் தண்டனை விதித்திருக்கக் கூடாதா?' என்று எண்ணி எண்ணித் தான் ஏங்கியதைச் சொல்வான்.
திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொன்னாலும் பவானி சலியாமல் கேட்பாள். இம்மாதிரி ஒரு வாரப் பழக்கத்தில், உமாகாந்தனுடன் பிறந்தது முதல் பழகி அவனுடைய சுகதுக்கங்களையெல்லாம் பகிர்ந்து அநுபவித்தவள் போல் அவ்வளவு இருதய ஒற்றுமை அடைந்தாள்.
உமாகாந்தனை எந்தச் சந்தர்ப்பத்தில் முன்னே பார்க்க நேர்ந்தது என்பது தனக்கு ஞாபகம் வந்தது போலவே, அவனுக்கும் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது என்று பவானி தெரிந்து கொண்டாள். முதல் தடவை அவன் சத்யாக்கிரஹக் கைதியாகச் சிறைச்சாலையில் இருந்த போதெல்லாம், அவளை மறுபடியும் பார்க்கலாம் என்ற ஆசையும் நம்பிக்கையும் அவனுக்கு இருந்தன. இரண்டாந் தடவை கொலைக் குற்றத்துக்காகச் சிறைக்குப் போனபிறகு அந்த ஆசையை விட்டுவிட்டான். ஆனால், அவளுடைய எழில் முகத்தையும், துடுக்கான பேச்சையும், சீமை ஜவுளிக் கடையிலிருந்து அவள் அவசரமாகத் திரும்பிக் கருணை ததும்பும் கண்களால் தன்னைப் பார்த்த பார்வையையும் அவன் மறக்கவேயில்லை.
"கனவிலே நினைக்காத காரியம் நடந்துவிட்டது. எதிர்பாராத பேறு எனக்குக் கிடைத்து விட்டது. உன்னை மறுபடி பார்த்துவிட்டேன். நீ என்னை நினைவு வைத்திருக்கிறாய் என்பதையும் அறிந்து கொண்டேன். இனிமேல்..." என்று தயங்கி நின்றான் உமாகாந்தன்.
"இனிமேல் என்ன?" என்று பவானி கேட்க, "இனி மேல் இந்த உயிரின் மேல் எனக்கு இச்சை இல்லை, நிம்மதியாய்ப் பிராணத்தியாகம் செய்து கொள்வேன்" என்றான்.
பவானியை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. கொஞ்ச நேரம் கழித்து அவள், "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்த பிறகு இந்த உயிர் வாழ்க்கை வேண்டாமென்று தோன்றுகிறதா? அவ்வளவு கசப்பு உண்டாக்க நான் என்ன செய்தேன்?" என்றாள்.
"பகவானே! அப்படியா அர்த்தம் செய்து கொள்கிறாய்? ஆனால் அது உண்மையல்லவென்று உன் மனமே சொல்லும்."
"அப்படியானால் ஏன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?"
உமாகாந்தன் சற்று மௌனமாயிருந்தான். "நான் இறப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. என் வாழ்க்கையில் இதற்குமுன் நான் இவ்வளவு சந்தோஷமாய் எப்போதும் இருந்ததில்லை. இந்த நிலைமையிலேயே என் வாழ்க்கை முடிவது நல்லதல்லவா? மறுபடி சிறைக்குப் போக என்னால் முடியாது; முடியவே முடியாது! அதுவும் இந்தப் பத்து நாள் உன்னுடன் இருந்து பழகிய பிறகு, இனிமேல் சிறைவாசத்தை என்னால் நினைக்கக் கூட முடியாது" என்றான்.
பவானியின் இருதய அந்தரங்கத்தில், தான் தற்சமயம் அநுபவிக்கும் சந்தோஷம் நீடித்திருப்பதற்குப் பெரிய இடையூறு ஒன்று காத்திருக்கிறது என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அந்த எண்ணத்துக்குத் தன் மனத்தில் இடங்கொடாமல் இருக்க முயன்றாள். வருங்காலத்தைப் பற்றி நினைக்கவே அவள் விரும்பவில்லை. நிகழ்காலத்தின் பேரின்பத்திலேயே முழுகியிருந்து, வருங்காலத்தை மறந்துவிட விரும்பினாள்.
ஆனால் இப்போது உமாவே அந்தப் பேச்சை எடுத்ததும், அவள் அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது.
"அந்த இரண்டு வழியைத் தவிர மூன்றாவது வழி எதுவும் இல்லையா?" என்று பவானி கேட்டாள்.
"என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஏதாவது இருந்தாலும் பாரிஸ்டர் சேஷாத்ரியைப் போன்ற பப்ளிக் பிராஸிகியூடர்கள் இருக்கும் வரையில், அந்த வழி எனக்கில்லை. ஒன்று ஆயுள் பரியந்தம் சிறை; அல்லது மரணம், என் வரையில் நான் தீர்மானித்துவிட்டேன்."
"எனக்கு அப்படித் தோன்றவில்லை. யோசனை செய்து ஏதாவது வழி கண்டுபிடிப்போம். இல்லை, மரணம் ஒன்றுதான் வழி என்றால், இருவரும் சேர்ந்தே உயிர்விடுவோம்" என்றாள் பவானி. பிறகு, உமாவுடன் வெகு நேரம் வாக்குவதம் செய்து, தன்னைக் கேளாமல் ஒன்றும் செய்வதில்லையென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.
ஒரு நாள் சேஷாத்ரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கலவரமடைந்த குரலில், "இதைப் படித்தீர்களா?" என்று பிரணதார்த்தியைப் பார்த்துக் கேட்டார். பிரணதார்த்தி, பத்திரிகையை அவரிடமிருந்து வாங்கிக் குறிப்பிட்ட செய்தியைப் படித்தார்.
அதில், கோயமுத்தூர் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவன் இன்னும் பிடிபடவில்லையென்றும், அவன் நீலகிரி மலையில் எங்கேயோ ஒளிந்து திரிவதாகப் போலீஸார் ஊகித்துச் சுறுசுறுப்பாகத் தேடி வருகிறார்களென்றும், இது சம்பந்தமாகச் சில தடையங்கள் அவர்களுக்கு அகப்பட்டிருக்கின்றனவென்றும் கண்டிருந்தது.
இதைப் படித்துப் பிரணதார்த்தியும் அதிக கலவரமடைந்தார்.
"நாம் மூன்று பேரும் இப்போது சட்டப்படி பெரிய குற்றம் செய்து கொண்டிருக்கிறோம். சிறைக் கைதிக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறோம். இதற்குத் தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா?" என்று சேஷாத்ரி கேட்டார்.
"என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; எனக்குக் கவலையில்லை. உமாகாந்தனை நான் கைவிடப் போவதில்லையென்பது நிச்சயம்."
"கைவிடாமல் நீங்கள் என்னதான் செய்யமுடியும்? எத்தனை நாள் தெரியாமலிருக்கும்? கட்டாயம் ஒரு நாள் பிடித்துவிடுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?"
"மிஸ்டர் சேஷாத்ரி! உங்களுக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால், நீங்களே போலீஸுக்கு எழுதிப் போட்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே?" என்றார் பிரணதார்த்தி.
சேஷாத்ரி சட்டென்று குனிந்து பத்திரிகையை படிக்கத் தொடங்கினார். அதனால் அவர் முகம் அப்போது விகாரமாய்க் கறுத்ததைப் பிரணதார்த்தி கவனிக்கவில்லை.
அன்றைய தினம் பவானியும் உமாகாந்தனும் மட்டும் உலாவுவதற்கு வெளியே சென்றிருந்தார்கள். வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிக தூரம் இவர்கள் போனார்கள்.
கூனூரில் பிரணதார்த்தியின் பங்களா மிகவும் தனிமையான ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருந்தது. அதற்குச் சமீபத்தில் அரை மைலுக்கு வேறு பங்களா கிடையாது. ஆகையால், அந்தப் பங்களாவைச் சுற்றியுள்ள மலை வழிகளில் சாதாரணமாய் யாரும் எதிர்ப்படுவது வழக்கமில்லை.
ஆனால், இன்று தாங்கள் செல்லும் வழியில் எதிர்முகமாய் இருவர் வருவதைக் கண்டதும் பவானியின் மனம் தயக்கமுற்றது. வேறு வழி திரும்புவதற்கும் அங்கு இடம் இல்லை. எதிரே வந்தவர்கள் சமீபித்தபோது, அவர்களில் ஒருவர் பவானிக்குத் தெரிந்த மனிதராயிருந்தார். அவர் சென்னையின் பிரபல வக்கீல்களில் ஒருவர். பக்கத்துப் பங்களாவுக்கு அவர் வந்திருப்பதாகப் பவானி கேள்விப் பட்டிருந்தாள். பவானியைத் தூரத்தில் பார்த்தவுடனேயே அவர் புன்னகை புரிந்து ஒரு கும்பிடு போட்டார். அருகில் நெருங்கியதும், உமாகாந்தனை அவர் ஒரு கணம் உற்று நோக்கிவிட்டு, "என்ன மிஸ்டர் சேஷாத்ரி! இது என்ன தமாஷ்! எப்போது நீங்கள் மீசையை எடுத்தீர்கள்?" என்று கேட்டார்.
உமாகாந்தன் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். பவானிக்கும் அவருடைய கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஆயினும் அவள் சமாளித்துக் கொண்டு, "இவர் சேஷாத்ரியல்ல; சென்னையிலிருந்து வந்திருக்கும் என்னுடைய சிநேகிதர்" என்றாள்.
அதற்கு அந்த மனிதர், "நிஜமாகவா? என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட தவறு நான் எப்போதும் பண்ணியதில்லை. மன்னிக்கவேண்டும். ஒருவேளை சேஷாத்ரிக்கு ஏதாவது உறவோ?" என்று கேட்டார்.
"அதுவும் இல்லை" என்றாள் பவானி.
அதற்குள் வக்கீலுடன் வந்த இன்னொரு மனிதர், "இவரை நான் கூட எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறது. உங்கள் பேர் என்ன ஸார்" என்று கேட்டார்.
உமாகாந்தன் குழப்பத்துடன், "உங்களைப் பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லையே?" என்றான்.
"சரி, போய் வருகிறோம்" என்று பவானி விரைந்து கூறிவிட்டு மேலே நடக்கலானாள். பிறகு அவர்கள் சற்றுத் துரிதமாகவே நடந்து சீக்கிரத்தில் பங்களாவை அடைந்தார்கள். நடக்கும்போதெல்லாம் பவானியின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. உமாகாந்தன் பேசிக் கொண்டு வந்ததொன்றும் அவள் காதில் ஏறவேயில்லை.
அன்றிரவு மலையில் பிரமாதமான காற்று அடித்தது. மரங்கள் தடார் படார் என்று முறிந்து விழுந்தன. பங்களாவின் மீது காற்று வேகமாய் மோதியபோது அது அஸ்திவாரத்திலிருந்து ஆடுவதுபோல் தோன்றியது. அந்தப் பங்களாவில் வசித்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதைவிடப் பெரிய சண்டமாருதம் அடித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் பொழுது விடிய, காற்றின் வேகம் சற்று அடங்கிற்று. இன்றைக்கோ நாளைக்கோ மழை தொடங்கிவிடும். "இனிமேல் தாமதிக்காது" என்றார் மலை அநுபவமுள்ள பிரணதார்த்தி.
காலையில் வீட்டு வேலைக்காரன் மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். அங்கே யாரோ ஒருவன் அவனிடம் பேச்சுக் கொடுத்து, பிரணதார்த்தியின் பங்களாவில் புது ஆள் யாராவது வந்திருக்கிறார்களா என்று கேட்டதாகவும், தனக்குத் தெரியாது என்று பதில் சொன்னதாகவும் அவன் திரும்பி வந்து தெரிவித்தான். அன்று பங்களாவுக்கு வ்ந்த தபால்காரன், "ஏன் ஸார்! யாரோ புதுசா இந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறார்களாமே? அவர் பெயரென்ன? ஏதோ ரிஜிஸ்டர் தபால் வந்திருக்காம். போஸ்ட் மாஸ்டர் விசாரிச்சுண்டு வரச் சொன்னார்" என்றான்.
"இங்கே ஒருத்தரும் புதுசா வரவில்லை. எல்லாரும் பழைய மனிதர்கள் தான்" என்று பிரணதார்த்தி கோபமாய்ப் பதில் சொன்னார்.
சேஷாத்ரி அன்றெல்லாம் தம் அறையிலேயே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது கூட அவர் அதிகமாய் ஒன்றும் பேசவில்லை. தபால்காரன் விசாரித்ததைப் பற்றிப் பிரணதார்த்தி சொன்னார். "ஆமாம்; என் காதிலும் விழுந்தது" என்றார் சேஷாத்ரி. அதற்குமேல் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவருடைய நடத்தை பிரணதார்த்திக்கு அர்த்தமாகவேயில்லை. அவர் மேல் அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. ஆனால் அவரை என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
அன்று மத்தியானம் இவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எல்லோருடைய மனத்திலும் குமுறிக் கொண்டிருந்த விஷயத்தை உமாகாந்தனே பிரஸ்தாபித்தான்.
"உங்களுடைய மனம் எனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரயோஜனமில்லை. என்னை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் போகிறேன்; விடை கொடுங்கள்" என்றான்.
"போகிறாயா? எங்கே போவாய்? இன்றிரவோ, நாளையோ மழை பிடித்துக் கொள்ளப் போகிறது. மழை வந்துவிட்டால், மலைப்பிரதேசத்தில் திறந்த வெளியில் அரை மணி கூட ஜீவித்திருக்க முடியாது" என்றார் பிரணதார்த்தி.
"ஜீவித்திருப்பதற்குப் போனால் அல்லவா அந்தக் கவலை..."
"என்ன, என்ன சொன்னாய்?" என்று பிரணதார்த்தி பதறிக் கொண்டு கேட்டார்.
"இன்னொரு தடவை சிறைக்குப் போய் என்னால் வாழ முடியாது. எப்படியும் ஒரு நாள் உயிரை விடுவேன். இங்கே போலீஸ் வந்து என்னைக் கைது செய்து உங்களுக்கெல்லாம் மனக்கஷ்டமும் அவமானமும் ஏற்பட நான் ஏன் காரணமாயிருக்கவேண்டும்? நீங்கள் எனக்குச் செய்த உபகாரத்துக்கு அப்படியா கைம்மாறு செய்வது?" என்றான் உமா.
"எங்களிடம் உனக்கு நன்றியிருப்பது உண்மையானால், இப்போது நான் சொல்வதைக் கேட்க வேண்டும். உயிர்விடும் பேச்சை மறந்துவிடு. போலீஸார் வந்தால் பேசாமல் அவர்களுடன் போ. நான் ஆயிற்று உன்னை விடுதலை செய்வதற்கு" என்று பிரணதார்த்தி ஆவேசத்துடன் கூறினார்.
"முடியாத காரியத்தைத் தாங்கள் சொல்கிறீர்கள். தலைவிதியை மாற்ற முடியுமா? விதியில் முன்னெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்போது அப்படியில்லை. இந்தப் பங்களாவில் எப்போது சேஷாத்ரியைப் பார்த்தேனோ அப்போதே விதியின் பலத்தை நான் உணர்ந்து கொண்டேன்."
"அதெல்லாம் சுத்தத் தப்பு ஆயிரம் விதிகளிலிருந்தும், நூறாயிரம் சேஷாத்ரிகளிடமிருந்தும் நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நேரே ஹைகோர்ட் ஜட்ஜுகளிடம் போகிறேன். கவர்னரைப் பார்க்கிறேன். இந்தியா மந்திரி வரையில் போய்ப் பார்த்தேனும் உன்னை விடுதலை செய்கிறேன். நீ மட்டும் பொறுமையாய் இருக்கவேண்டும். இத்தனை நாள் கஷ்டப்பட்டு விட்டாய்; இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்."
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணி நாலு இருக்கும். சேஷாத்ரி வாசற் பக்கம் போவதைப் பவானி பார்த்தாள். அவள் எழுந்து, "சித்தப்பா! நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுப் போனாள்.
பவானி வாசலில் போய்ப் பார்த்ததும், கீழே சேஷாத்ரி போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அவரை அவள் தொடர்ந்து சென்றாள். சுமார் அரை மைல் நடந்த பிறகு, சேஷாத்ரி ஒரு பாறையின் மீது உட்கார்ந்தார். மலைப்பாதைகள் வளைந்து வளைந்து செல்லுமல்லவா? சேஷாத்ரி உட்கார்ந்த இடம் ஒரு வளைவின் முனை. அங்கிருந்து பார்த்தால் மேலே பங்களாவுக்குப் போகும் பாதையும் கீழே கூனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் போகும் பாதையும் வெகு தூரத்துக்கு தெரிந்தன.
சேஷாத்ரி கீழே நோக்கிக் கொண்டிருந்தவர். காலடிச் சத்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்தார். பவானி வருவதைக் கண்டார். அவர் முகத்திலே அப்போது தோன்றியது கலக்கமா அல்லது மகிழ்ச்சியா? கலக்கம் என்றே பவானிக்குத் தோன்றியது.
"என்ன, தனியாய்ப் புறப்பட்டு வந்தீர்கள்?" என்று பவானி கேட்டாள்.
"அது உனக்கு வியப்பாயிருக்கிறதா, என்ன? நான் தான் இப்போது தனியாகிவிட்டேனே?" என்று கூறிச் சேஷாத்ரி புன்னகை புரிந்தார். அவருடைய கண்களிலே ஜலம் தளும்பிற்று.
பவானிக்கு அவர் மீது லவலேசமும் இரக்கம் ஏற்படவில்லை.
"சேஷாத்ரி! நீர் மகா வஞ்சகர். விஷப்பாம்பு. விஷப்பாம்பிலும் கொடிய வீரியன் பாம்பு..." என்று அவள் கூறி வந்த போது அவளே படமெடுத்தாடும் ஒரு நாக ஸர்ப்பத்தைப் போல் தோன்றினாள். அவள் கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் நஞ்சு தோய்ந்ததாயிருந்தது. சேஷாத்ரியின் முகம் கறுத்து அளவிலாத வேதனையைக் காட்டிற்று.
"உமது வேஷத்தை நான் கண்டறிந்தேன். நீர் மாத்ரு துரோகி, பித்ரு துரோகி, சகோதர துரோகி. உமாகாந்தனுடைய தமையன் நீர்தான். இல்லையென்று சாதிப்பீரா?" என்று கேட்டாள்.
சேஷாத்ரி ஒரு நிமிஷம் இடிவிழுந்தது போல் பிரமித்துப் போனார். "என்னுடைய கடிதத்தை..." என்று தடுமாறினார்.
"கடிதமா? என்ன கடிதம்?"
"வேலைக்காரனிடம் கொடுத்து வந்தேன்."
"எனக்குத் தெரியாது. உம்முடைய கடிதத்தை நான் படிக்கவில்லை; படிக்க இஷ்டமுமில்லை. நீர் எனக்கு மட்டுந்தானா எழுதினீர்? சத்தியமாய்ச் சொல்லும்; போலீஸுக்கு எழுதவில்லையா? உம்முடைய தம்பியை இரண்டு தடவையும் கெடுத்தீர். இப்போது மூன்றாம் தடவையும் அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறீர். உம்மைப் போன்ற துரோகியை இந்த உலகத்திலே பார்க்க முடியாது."
சேஷாத்ரி முகத்திலே ஒரு மாறுதல் உண்டாயிற்று. அவர் ஆத்திரம் ததும்பக் கூறினார்: "பவானி! நானா துரோகி? அவன் தான் துரோகி. என் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கே அவன் பிறந்தான். நான் ஐ.ஸி.எஸ். பரீட்சைக்குப் போகமுடியாமல் கெடுத்தான். அப்புறம் எப்படியோ நான் முன்னுக்கு வந்து 'பப்ளிக் பிராஸிகியூடர்' உத்தியோகத்தில் இருந்தபோது, அவன் கொலைக் கேஸில் வந்து சேர்ந்தான். தீர்ப்புக் கூறிய தினத்திலேதான் அவன் என்னைக் கெடுக்கப் பிறந்த என் தம்பி என்று எனக்குத் தெரிந்தது. அந்த வேதனையினாலேயே நான் 'பப்ளிக் பிராஸிகியூடர்' வேலையை விட்டுத் தொலைத்தேன். இப்போது மறுபடியும் அவன் என் வாழ்க்கையில் வந்து குறுக்கிட்டிருக்கிறான். பவானி! சத்தியமாய்ச் சொல்; அவன் வந்திருக்காவிட்டால் நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாயா?" என்று கேட்டார்.
பவானி சிரித்தாள். அந்தச் சிரிப்பிலே இருந்த வெறுப்பும் ஏளனமும் அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டன. ஆனாலும் பவானி அத்துடன் நிறுத்தவில்லை. "உம்மைக் கலியாணம் செய்து கொள்வதைக் காட்டிலும் ஒரு பிசாசைக் கலியாணம் செய்து கொள்வேன்" என்றாள்.
சேஷாத்ரியின் முகத் தோற்றம் மறுபடியும் மாறியது. அதில் அளவில்லாத சோகம் குடிகொண்டது. "பவானி! ரொம்ப சந்தோஷம். போலீஸுக்குப் புலன் தெரிவித்தது நான் தான். நீ சீக்கிரம் போய் உன்னுடைய காதலனைக் காப்பாற்ற முடியுமானால் காப்பாற்று" என்றார்.
பவானி, அவர் காட்டிய திசையில் கீழே நோக்கினாள். பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.
அவள் சேஷாத்ரியைப் பார்த்துப் பயங்கரமான குரலில் கூறினாள்: "சேஷாத்ரி! உம்முடைய பாபத்துக்குப் பிராயச் சித்தமே கிடையாது. இந்தப் பூமி எப்படி உம்மைச் சுமக்கிறது என்றே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இந்த மலை பிளந்து உம்மை விழுங்கி விடாதது எனக்கு வியப்பாயிருக்கிறது. நான் சொல்வதைக் கேளும். இந்த நீலகிரியில் எவ்வளவோ மலையுச்சிகள் இருக்கின்றன. எவ்வளவோ அதல பாதாளமான பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. அவற்றில் எதிலாவது ஒன்றில் நீர் விழுந்து செத்தீர் என்று கேள்விப்பட்டேனானால் என் மனம் குளிரும்."
இப்படிச் சொல்லிவிட்டுப் பவானி விரைந்து பங்களாவை நோக்கிச் சென்றாள்.
பவானி அப்பால் சென்றதும் சேஷாத்ரி ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார். சட்டென்று தமது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு முகம் பார்க்கும் கண்ணாடியையும் ஒரு ஷவரக் கத்தியையும் எடுத்தார். ஒரு விநாடிப் பொழுதில் தமது முகத்திலிருந்த அழகான மீசையை அகற்றினார். மீசையை எடுத்ததும் அவர் முகத்துக்கும் உமாகாந்தன் முகத்துக்கும் துளிக்கூட வித்தியாசம் இல்லாமல் போயிற்று, கண்ணாடியால் ஒரு தடவை முகத்தைப் பார்த்துக் கொண்டு கத்தி, கண்ணாடி எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் எறிந்தார்.
உடனே போலீஸ்காரர்கள் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றார். அவர்கள் அருகில் நெருங்கியதும், "நான் வந்துவிட்டேன். உங்களுக்கு அதிகச் சிரமம் வைக்கவில்லை" என்று சொல்லி விலங்கு மாட்டுவதற்குக் கையை நீட்டினார்.
பங்களாவுக்கு விரைந்து சென்ற பவானி, "சித்தப்பா சித்தப்பா!" என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள். பிரணதார்த்தியின் முகத் தோற்றத்தைப் பார்த்ததும், தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல், "என்ன விசேஷம்?" என்று கேட்டாள்.
பிரணதார்த்தி ஒரு கடிதத்தை நீட்டினார். அது, சேஷாத்ரி உமாகாந்தனுக்கு எழுதிய கடிதம். "தயவு செய்து சாயங்காலம் ஐந்து மணிக்கு முன்னால் இதைத் திறக்க வேண்டாம். சரியாக ஐந்து மணிக்குப் பிரித்துப் பார்க்கவும்" என்று அதன் மேல் உறையில் எழுதியிருந்தது.
பவானி வியப்புடனும் பரபரப்புடனும் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
'தம்பி! உனக்கு நான் செய்திருக்கும் அபகாரங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். கட்டாயம் நான் சொல்கிறபடி நீ கேட்கவேண்டும்' என்று அக்கடிதம் ஆரம்பமாயிற்று.
உமாகாந்தனுக்குப் பதில் தான் கைதியாகப் போவதாகவும் அவன் தப்புவதற்கு இது ஒன்றுதான் வழியென்றும், அன்றிரவே அவர்கள் பிரணதார்த்தியின் மோட்டாரில் சென்னைக்குக் கிளம்பிச் செல்லவேண்டுமென்றும், மறுநாள் தமக்குப் பதிலாக உமாகாந்தன் கப்பல் ஏறிவிட வேண்டு மென்றும் அதில் கண்டிருந்தது. தமக்கு ஒன்றும் ஆபத்து விளையாதென்றும், பத்து நாளைக்குள் போலீஸாருக்கு அசட்டுப் பட்டம் கட்டிவிட்டுத் தாம் வெளியேறிவிட முடியுமென்றும் எழுதியிருந்தது.
"கப்பலுக்கு இரண்டு டிக்கட் வாங்கியிருக்கிறேன்; இன்னும் யாராவது உன்னோடு போவதாயிருந்தால் போகலாம்" என்று குறிப்பிட்டு, "இந்தக் கடிதம் வேறு யார் கண்ணிலும் படாதபடி நெருப்பில் போட்டுக் கொளுத்தி விடவும்" என்ற வேண்டுகோளுடன் கடிதம் முடிந்தது.
மூன்று பேரும் கலந்து யோசித்து, அந்தக் கடிதத்தில் கண்டபடி செய்வதே உசிதமென்று தீர்மானித்தார்கள். அஸ்தமிக்கும் சமயம் அவர்கள் மோட்டாரில் கிளம்பினார்கள். பிரணதார்த்திதான் வண்டி ஓட்டினார். மறுநாள் கப்பல் புறப்படும் சமயம் அவர்கள் சரியாகச் சென்னைத் துறைமுகம் சேர்ந்தார்கள்.
பிரணதார்த்தி கதையை மேற்கண்ட இடத்தில் முடித்து விட்டார்.
சற்று நேரம் பொறுத்து நான், "அப்புறம் என்ன ஆயிற்று? போலீஸாரின் தவறு எப்போது வெளிப்பட்டது?" என்று கேட்டேன்.
"அது வெளிப்படவெயில்லை."
"என்ன? அது எப்படி வெளிப்படாதிருக்க முடியும்? ஜெயிலுக்குக் கொண்டு போனதுமே கைரேகை அடையாளங்களிலிருந்து கண்டுபிடித்திருப்பார்களே!"
இந்தக் கேள்வியினால் எனக்குச் சிறையநுபவம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொண்டேன்.
பிரணதார்த்தி சொன்னார்: "வாஸ்தவந்தான். ஜெயிலுக்குக் கொண்டு போயிருந்தால் உடனே கண்டு பிடித்திருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி ஜெயிலுக்குப் போகவேயில்லை. நீங்களே உண்மையை ஊகித்திருப்பீர்களென்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்? பத்திரிகையில் எங்கேயோ மூலையில் வந்த செய்தியை எங்கே படித்திருக்கப் போகிறீர்கள்? படித்திருந்தாலும் ஞாபகம் இருக்காது. ஆனால் அந்த வருஷத்தில் பிரமாதமான மழையும் புயலும் நீலகிரியில் அடித்து ரொம்பவும் சேதமான விவரம் உங்களுக்குக் கட்டாயம் ஞாபகமிருக்குமே. நாங்கள் புறப்பட்ட அன்று இரவிலே தான் அப்படி ஊழிகாலத்து மழை போல் பெய்யத் தொடங்கியது. மறுநாள் கூனூரிலிருந்து மேட்டுப் பாளையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற ரயில், வழியில் பாதையை விட்டு விலகி விழுந்து விட்டது. ரயிலில் போனவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களெல்லாம் உயிர் தப்பினார்கள். ஒரே ஒருவன் தான் மரணம் அடைந்தான். அவன் தப்பியோடிப் பிடிபட்ட கைதி..."
"ஆஹா!" என்று என்னையறியாமல் ஒரு பலமான கூச்சல் போட்டேன். சேஷாத்ரியைப் பார்த்துப் பவானி சொன்ன கொடும் மொழிகள் அப்போது எனக்கு ஞாபகம் வரவே, என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவள் சாபம் பலித்துவிட்டது! ஆனால் எப்பேர்ப்பட்ட தப்பெண்ணத்தின் பேரில் அவள் அவரைச் சபித்தாள்? அந்தச் சாபம் இப்படிப் பலித்து விட்டதை அறிந்தால் அவள் உள்ளம் என்ன பாடுபடும்?
சற்றுப் பொறுத்து, "மரணம் தற்செயலாக நேர்ந்ததா? அல்லது தற்கொலையா? எப்படியென்று தீர்மானித்தார்கள்?" என்று கேட்டேன்.
"யாருக்குத் தெரியும்? ரயில் விழுந்த இடத்துக்குப் பக்கத்திலே அதல பாதாளமான கிடுகிடு பள்ளம் ஒன்றிருந்தது. அதில் அவன் விழுந்துவிட்டான். உருத் தெரியாமல் போன அவனது தேகத்தைப் போலீஸார் கண்டெடுத்துத் தகனம் செய்தார்கள். "தப்பியோடிய கைதி கூனூரில் பிடிபட்டுக் கொண்டுவரப்படுகையில் தெய்வாதீனமாக ரயில் விபத்தில் மரணமடைந்தான்" என்று பத்திரிகைகளில் ஒரு சிறு செய்தி வெளியாயிற்று. அத்துடன் கதை முடிந்தது," என்று கூறிப் பிரணதார்த்தி பெருமூச்சு விட்டார்.
சேஷாத்ரி இறந்த காரணத்தைப் பற்றி ஆசிரியர் பிரணதார்த்தி தம்முடைய அபிப்பிராயம் என்னவென்று சொல்ல மறுத்து விட்டார். என் வரையில், சேஷாத்ரியின் மரணம் தெய்வாதீனமென்று நான் நினைக்கவில்லை. அவர் ஆத்மத் தியாகம் செய்து கொண்டார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் ஒரு விதத்தில் தற்கொலையும் தெய்வாதீனந்தான் அல்லவா?
"இந்த உலகம் பொய், வாழ்வு பொய்" என்று நம் பெரியோர்கள் சொன்னது அமுத வாக்கு என்பதில் சந்தேகமில்லை. உலகத்தைப் பொய்யென்று கொண்டால்தான் ஏதோ ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு ஜீவ யாத்திரையை நடத்திக் கொண்டு போக முடியும். இந்த உலகம் நிஜமாக மட்டுமிருந்தால் இவ்வளவு தவறுகளுக்கும் துயரங்களுக்குமிடையில் உயிர் வாழ்வது சாத்தியமா?