“அம்மா! என் பல் ஆடுகிறது!” என்றாள் புனு. புனுவின்
பற்களில் ஒன்று ஆட்டம் காண்பது இதுதான்
முதல்முறை. அவளுக்கு கொஞ்சம் பயமாகவும்
ஆனால் பரபரப்பாகவும் இருக்கிறது.
“நாக்கால் அதைத் தள்ளு!” என்று அம்மா சொன்னார்.
புனு தள்ளுகிறாள், தள்ளுகிறாள்,
தள்ளிக்கொண்டே இருக்கிறாள்.
“அது இன்னமும் விழத் தயாராகவில்லை.
கொஞ்சம் பொறு. அது தானாகவே விழுந்துவிடும்” என்றார் அம்மா.
புனு அப்பாவிடம் சென்றாள். “அப்பா! என் பல் ஆடுகிறது!” என்றாள். அப்பா அந்தப் பல்லை மென்மையாக ஆட்டிப்பார்க்கிறார்.
“ஓ! அது இன்னமும் விழத் தயாராகவில்லை. கொஞ்சம் பொறு.
அது தானாகவே விழுந்துவிடும்” என்றார் அப்பா.
ஆனால், புனுவுக்கு காத்திருப்பதில் விருப்பமில்லை. ஒரு நீளமான நூலை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு ஓடுகிறாள்.
நூலின் ஒரு முனையை ஆடும் பல்லைச் சுற்றிக் கட்டிவிட்டு, இன்னொரு நுனியை கதவின் பிடியைச் சுற்றிக் கட்டினாள்.
புனு தரையில் அமர்ந்தபடி காத்திருக்கிறாள், காத்திருக்கிறாள், காத்துக்கொண்டே இருக்கிறாள்.
காத்திருந்து, காத்திருந்து புனு சோர்ந்துவிட்டாள். பின்னர், கதவின் பிடியைச் சுற்றிக் கட்டியிருந்த நூலை அவிழ்த்துவிட்டு சத்தமாக பெருமூச்சு விட்டபடி படுக்கையில் உட்கார்ந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், புனுவின் அக்கா சுன்னு அவள் அறைக்குள் வந்தாள். கதவைச் சுட்டிக்காட்டி, “இது பயங்கரமான திட்டம்” என்றாள். பின், “நான் வேண்டுமானால் நூலைப் பிடித்து இழுக்கட்டுமா? உன் பல் அப்படியே வந்துவிடக்கூடும்!” என்றாள் சுன்னு.
சுன்னு தன் விரல்களால் நூலைக் கெட்டியாகப் பிடித்தாள். புனு தன் கண்களை மூடிக்கொண்டு வாயைத் திறந்து கொண்டாள்.
“ஒன்று, இரண்டு, மூன்று!” என்று சொல்லி
சுன்னு நூலை இழுத்தாள்.
“ ஆ...!” என்று புனு அலறினாள்.
“ஓ! அது இன்னமும் விழத் தயாராகவில்லை.
கொஞ்சம் பொறு. அது தானாகவே
விழுந்துவிடும்” என்றாள் சுன்னு.
“இந்தப் பல் விழவே போவதில்லை!” என்றாள் புனு.
“நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்கள் பற்களைக் கூரைமேல் வீசிவிடுவோம். பின்னர் மூசாவிடம், அந்தப் பல்லுக்கு பதிலாக அதன் பல்லைத் கொடுக்கச் சொல்லிக் கேட்போம். ஏனென்றால் எங்களுக்கு எலியின் பற்கள் போலவே பலமான பல் வேண்டுமென்று ஆசை” என்றார் அம்மா.
உடனே, புனு வெளியே ஓடிவந்து, “மூசா, மூசா! இதோ பார், உனக்காக என்னுடைய பெரிய பலமான பல். உனக்கு இது பிடித்திருந்தால், தயவுசெய்து வந்து இதை எடுத்துக்கொண்டு போய்விடு!” என்று கத்தினாள்.
அன்றிரவு புனுவின் கனவில் ஒரு பெரிய எலி வந்தது. மூசா தன் பற்களுக்கிடையே மின்னும் எதையோ வைத்திருந்தது. நின்று அவளை உற்றுப்பார்த்துவிட்டு ஒரு ஓட்டைக்குள் ஓடிவிட்டது.
காலையில் எழுந்தவுடன், புனு ஆடிய அந்தப் பல்லை நாக்கால் தள்ள முயற்சித்தாள்.
ஆனால் அதைக் காணோம்! அதை விழுங்கிவிட்டாளா, என்ன? அல்லது அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது யாராவது பிடுங்கிவிட்டார்களா? எங்கே அது?
இதோ இங்கே! தலையணைக்கு அருகிலேயே கிடக்கிறது.
புனு பல்லை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
"மூசா, மூசா! இந்தப் பல்லை எடுத்துக்கொண்டு தயவுசெய்து எனக்கு புதிய பல்லைக் கொடு!” என்றாள். பல்லைக் கூரையின் மேல் எறிந்துவிட்டு அம்மாவிடம் சொல்வதற்காக வீட்டிற்குள் ஓடினாள்.