bintikku theriyaatha enna

பின்ட்டிக்குத் தெரியாதா என்ன

பின்ட்டியால் சிலவற்றைச் செய்யமுடியாது என நீங்கள் அவளிடம் சொல்லலாம். ஆனால், பின்ட்டிக்குத் தெரியாதா என்ன!

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மலையை நகர்த்தும் புத்துணர்ச்சியோடு எழுவாள் பின்ட்டி.

இன்று அவளால் ஐந்து மலைகளை நகர்த்திவிட முடியும். ஏனெனில் இன்று ஒரு முக்கியமான நாள்.

வீட்டில் எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். பின்ட்டியும் அவர்களுக்கு உதவ விரும்பினாள்.

“பின்ட்டி, நில்! அடிபட்டுக் கொள்வாய்” என்றார் அப்பா.

“என்னால் முடியும், அப்பா! என்னால் முடியும்” என்றாள் பின்ட்டி.

பாட்டிக்காக சுவையான பிஸ்கட்டுகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு வெளியே ஓடினாள்.

“பின்ட்டி, வேண்டாம்! விழுந்துவிடுவாய்” என்றாள் அக்கா.

“என்னால் முடியும் அக்கா! என்னால் முடியும்” என்றாள் பின்ட்டி.

அந்தக் காரை இதற்கு முன் இல்லாத அளவுக்கு பின்ட்டி சுத்தமாக்கி விட்டாள்.

கிளம்பும் நேரம் வந்தது. பாட்டி தயாராவதைப் பார்ப்பது பின்ட்டிக்குப் பிடித்தமானது.

பாட்டி பின்ட்டிக்கு பரிசாகத் தந்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொடுத்தார் அம்மா.

அதன் வார் மணிக்கட்டை அரிக்கச்செய்யும் என்பதால் பின்ட்டிக்கு அதைக் கட்டிக்கொள்ளப் பிடிக்காது.

ஆனால் இன்று, சிரித்தபடியே அதைக் கட்டிக்கொண்டாள்.

அவர்கள் கிளம்பத் தயாராக இருந்தபோது துலி அத்தையும் பூரன் மாமாவும் பிங்க்குவுடன் வந்தார்கள்.

துலி அத்தை என்ன செய்வார் என்று பின்ட்டிக்குத் தெரியும். பின்ட்டியின் கன்னத்தைப் பிடித்து இழுத்து உருட்டுவார்.

ஆனால் இன்று, பின்ட்டி தப்பி நகர்ந்து விட்டாள்.

துலி அத்தையின் விரல்களிடமிருந்து தப்பித்தபோதுதான், தன் பொம்மை போரோ பிங்க்குவின் கைகளில் இருப்பதைப் பார்த்தாள்.

“என் போரோவை திருப்பிக்கொடு” என்றாள் பின்ட்டி.

பிங்க்கு போரோவின் வயிற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

“பகிர்ந்துகொள்வது நல்ல குணம், பின்ட்டி” என்று அப்பா சொன்னார்.

எல்லோரும் எப்போதும் அதையேதான் சொல்வார்கள்.

ஆனால் பிங்க்கு, பின்ட்டியின் பொம்மைகளுக்குச் செய்யும் கொடுமைகள் அவர்கள் யாருக்கும் தெரியாது.

“சென்ற முறை வந்திருந்தபோது அவன் போரோவின் கண்களில் குத்திவிட்டான், அப்பா” என்றாள் பின்ட்டி.

பிங்க்கு போரோவை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

“என்னுடைய போரோவைத் திருப்பிக்கொடு” என்று பின்ட்டி உறுமினாள். பின்ட்டியின் கைகளுக்குத் திரும்பி வந்து சேர்ந்ததில் போரோவுக்கு மகிழ்ச்சி.

நேரமாகிவிட்டது என்றார் அம்மா.

எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு சீக்கிரமாகக் கிளம்பினார்கள்.

பின்ட்டி அத்தனை பேரை ஒரே இடத்தில் பார்த்ததே இல்லை! அவளது பாட்டிதான் இருப்பதிலேயே மிடுக்காகத் தெரிந்தார்.

பாட்டி, தனக்கு எழுபது வயதானபோது இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவு செய்தார். அப்போது பின்ட்டி நடக்கக்கூடப் பழகியிருக்கவில்லை என்றார் அம்மா.

பாட்டி மூன்று வருட கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். அதற்காக அவர் கடினமாக உழைத்திருந்தார்.

பாட்டி பதக்கம் வாங்கும்போது எல்லோரும் கைத்தட்டினார்கள்.

பின்ட்டிதான் இருப்பதிலேயே சத்தமாகத் தட்டினாள்.

பாட்டி பதக்கம் வாங்கியதைக் கொண்டாட, பின்ட்டி ஒரு சுவையான கேக்கை வாங்கி வைத்திருந்தாள்.

“பின்ட்டி, நில்! கீழே போட்டுவிடுவாய்” என்றார் அம்மா.

“என்னால் முடியும் அம்மா! என்னால் முடியும்” என்றாள் பின்ட்டி.

ஐயோ! கேக் துண்டு நழுவி பாட்டியின் புடவையில் விழுந்துவிட்டது.

“பார், என்ன செய்துவிட்டாய் என்று! சொல்வதைக் கேட்கவே மாட்டாய் நீ, பின்ட்டி!” என்றாள் அக்கா.

“ஒரே ஒரு துண்டுதானே அக்கா! இப்போது இதைப் பாருங்கள்” என்றாள் பின்ட்டி. இந்த முறை பின்ட்டி கேக்கை மெதுவாக வெட்டி, ஒரு அழகான துண்டை எடுத்து பாட்டிக்கு ஊட்டினாள்.

“என் செல்ல பின்ட்டி! அவளுக்குத் தெரியாதா என்ன” என்று பாட்டி பின்ட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டார்.