அப்புஸாவின் வீட்டுக்குச் செல்ல போபோவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பீன்ஸ், சேனைக்கிழங்கு, வெங்காயத் தாள், பெரில்லா, கடுகு, மிளகாய், செர்ரி தக்காளி போன்றவற்றை தன் தோட்டத்தில் வளர்த்து வந்தார்.
அப்புஸா என்றால் சுமி-நாகா மொழியில் பாட்டி என்று அர்த்தம்.
“பாருங்க, அப்புஸா! நட்சத்திரத் துளைகள்!” என்றாள் போபோ.
“அடடா! இந்தப் புழுக்களும் பூச்சிகளும் துளை போடுறத தடுக்கத்தான் முயற்சிக்கிறேன், போபோ!” என்றார் அப்புஸா.
“இந்தத் துளைகள் ரொம்ப அழகா இருக்குதே!” என்றாள் போபோ.
“ஆனா இந்தச் செடிகளை எல்லாம் புழுக்களும் பூச்சிகளும் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருச்சுன்னா, கோடைக்காலத்துல நமக்கு சாப்பிட பீன்ஸே இருக்காது, போபோ!” என்றார் அப்புஸா.
“அப்படின்னா இந்த பீன்ஸ் கொடிகளை நாம பாதுகாத்தாகணுமே” என்றாள் போபோ.
போபோவுக்கு ஒரு புது யோசனை உதித்தது.
“அப்புஸா! தோட்டத்துல இருக்கிற எல்லாப் புழுக்களையும் நான் பிடிச்சுட்டேன். ஒல்லியானது, குண்டானது, நெளியுறது, எல்லாத்தையுமே! இனிமே பீன்ஸ் கொடிகளைப் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்!” என்றாள் போபோ.
“மிக்க நன்றி, என் செல்ல தோட்டக்காரியே! ஆனா கடின உழைப்பாளிகளான இந்த நண்பர்களை மறுபடியும் தோட்டத்திலேயே விட்டுட்டு வந்திடுவோம்” என்றார் அப்புஸா.
“நண்பர்களா? புழுக்கள் செடிகளுக்கு கெட்டதுதானே?” என்று கேட்டாள் போபோ.
“எல்லா புழுக்களும் கெட்டவை கிடையாது, போபோ. அவை செடிகளை ஆரோக்கியமா வெச்சுக்கும். காய்கறிச் செடிகளோட இலைகள், தண்டுகளைச் சாப்பிடுற அந்த பச்சை நிறக் கம்பளிப் புழுக்களைத்தான் அகற்ற நினைத்தேன்” என்றார் அப்புஸா.
“சரி அப்புஸா, இந்தப் மண்புழுக்களை திரும்ப தோட்டத்திலேயே விட்டுரலாம்” என்றாள் போபோ.
மண்புழு உரம் என்பது மண்புழுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரம்.
தோட்டங்களில் உள்ள இயற்கைப் பொருட்கள் இயல்பாக காலப்போக்கில் சிதைபவை. ஆனால் புழுக்கள் அவை விரைவாக சிதைய உதவுகின்றன. அவை மண்ணைக் குடைந்து உருவாக்கும் சுரங்கப்பாதைகள் வேர்களுக்கு காற்றும் நீரும் கிடைக்க உதவுகின்றன.
புழுக்கள், சிதையும் இயற்கைப் பொருட்களைத் தின்று கழிவாக வெளியேற்றுகின்றன. மண்புழு விலக்கிய மண் எனப்படும் இந்தக் கழிவுகள், மண்ணை வளமாகவும் செழிப்பாகவும் ஆக்குகின்றன.