captain arya

கேப்டன் ஆர்யா

ஆர்யா எப்போதும் பறப்பதைப் பற்றியே கனவு கண்டுகொண்டு இருந்தாள். ஆர்யா தன்னுடைய கனவுகளைப் பின்பற்றியதைப் பற்றிப் படித்து, அவள் முதல்முறையாக விமானம் ஓட்டும்போது அவளோடு நீங்களும் விமான ஓட்டுநர் அறையில் சேர்ந்துகொள்ளுங்கள். இது உண்மையிலேயே ரொம்ப விசேஷமான நாள்தான்!

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆர்யாவுக்கு பறக்க வேண்டுமென்றுதான் எப்போதும் ஆசை.

அவளுக்கு நான்கு வயதாக இருக்கும்போது ரோசம்மா ஆகவேண்டுமென ஆசைப்பட்டாள்.

ஆர்யா ரோசம்மாவை சர்க்கஸில் பார்த்தாள். அவர் கயிற்றில் தொங்கி ஆடும் கலைஞராக இருந்தார்.

ஒரு கயிற்றில் இருந்து இன்னொன்றுக்கு பறக்க ஆசைப்பட்டாள் ஆர்யா. அவள் ஆடையெல்லாம் ரோசம்மாவுடையது போல மினுமினுக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கானவர்கள் அவளுக்காக கைத்தட்டுவார்கள். தினமும் பஞ்சுமிட்டாய் சாப்பிடுவாள். அவள் நெருங்கின தோழி அவளுடன் கோமாளியாக இருப்பாள் என்றெல்லாம் கனவு கண்டாள்.

கயிற்றில் தொங்கி ஆடும் கலைஞர்கள், ஒரு உயரமான

ஏணியில் ஏறி, கயிற்றில் கட்டியிருக்கும் கம்பியைப்  பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவது போல ஆடுவார்கள்!

மறுபக்கத்தில் எப்போதும் இன்னொரு கலைஞர்  அவர்களைப் பிடித்துக்கொள்ள தயாராக இருப்பார்.

எட்டு வயதாக இருந்தபோது ஆர்யாவுக்கு தானும் கல்பனா சாவ்லா போல் ஆகவேண்டும் என்று ஆசை.

அவள் தனக்கு ஒரு ஆரஞ்சு வண்ண விண்வெளி ஆடை செய்துகொண்டாள். அதையே இரவும் பகலும் போட்டுக்கொண்டாள்.

"ஆர்யா, இந்த உடையில் உனக்கு வியர்க்கவில்லையா?"

"அம்மா, விண்வெளி வீரர்கள் அதற்கெல்லாம் பழகிக்கொள்வார்கள். விண்வெளி பூமியைப் போல பாதுகாப்பானது கிடையாது. என் ஆடைதான் எனக்குப் பாதுகாப்பு."

கல்பனா சாவ்லா இந்தியாவின் பஞ்சாப்பில் வளர்ந்தார். விண்வெளி வீரராக அவர் பூமியை 252 முறை சுற்றிப் பறந்தார்.

கல்பனா சாவ்லா பணியில் இருக்கும்போதே, அவர் பயணித்த விண்வெளிக் கப்பல் பூமிக்குத் திரும்பும்போது உடைந்ததால் இறந்துவிட்டார்.

ஆர்யாவுக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும்போது அவள் அமீலியா யேர்ஹார்ட் போல ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அவள் தன் பள்ளிக்கு ஒரு 'மாதிரி விமானம்' செய்து எடுத்துச் சென்றாள். அது பறக்காது, என்றாலும் அவளுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.

ஆர்யாவும் அமீலியா போலவே முடியை வெட்டிக்கொண்டாள்!

அமீலியாதான் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து தனியாகப் பறந்த முதல் பெண்.

அமீலியா பூமத்திய ரேகைக்கு மேலாக உலகத்தைச் சுற்றிப் பறக்க ஆசைப்பட்டார்.

அவர் அந்தக் கனவுப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், பசிஃபிக் கடலுக்கு மேல் பறக்கும்போது எங்கேயோ தொலைந்துவிட்டார்.

சீக்கிரமே அங்குலியா பாய், குமுதம்மாள், சரளா தக்ரால் என்று விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண்களைப் பற்றி ஆர்யா தெரிந்துகொண்டாள். அங்குலியா பாய் விமானம் ஒட்டியபோது அவருக்கு பதினாறு வயதுதான்.

"எனக்கு பதின்பருவம் ஆகும் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது!"

"ஏன் நீ வண்டி ஓட்டணுமா?"

"இல்லை."

"அப்போதான் நீ வாக்களிக்க முடியுமா?"

"இல்லை."

"பின் என்ன?"

"அப்போதான் நான் பறக்க முடியும்."

ஆண்டு 1935, மே மாதம் 30ஆம் தேதி, பத்தொன்பது வயது குமுதம்மாளும் பதினாறு வயது அங்குலியா பாயும் இந்தியாவில் 'ஏ' விமான ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண்கள் ஆனார்கள். அவர்கள் ’மெட்ராஸ் ஃப்ளையிங் க்ளப்’பில் பயிற்சி பெற்றவர்கள்.

ஆர்யாவுக்குப் பதினெட்டு வயதான போது அவள் போர் விமான ஓட்டுநராக ஆசைப்பட்டாள்.

"அவர்கள் யார் சேச்சி?"  சுவரில் ஒட்டியிருந்த படங்களைப் பார்த்து அவளுடைய தம்பி, ராஜு கேட்டான்.

"அவங்கதான் பாவனா, அவனி, மோஹனா. முதன்முறையாக

போர் விமானம் ஓட்டிய பெண்கள்."

"அவர்கள் எல்லாம் உன் தோழிகளா?"

ஆர்யா சிரித்தாள், "ஒரு நாள் ஆகலாம்."

மோஹனா, பாவனா, அவனி மூன்று பேரும் போர் விமான ஓட்டுநர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்கள் மட்டும்தான் போர் விமானம் ஓட்டமுடியும். அவர்கள் நாட்டின் எல்லைகளை வானத்தில் இருந்து பாதுகாத்தார்கள். வெள்ளம், பூகம்பம் போல் அழிவுகள் நடக்கும் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

ஆர்யா விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்காக பணம் சேர்த்து வைத்திருந்தாள்.

பல ஆண்டுகள் படித்தாள். விமான ஓட்டுநர்களோடு உட்கார்ந்து நிறைய கற்றுக்கொண்டாள். அவள் கடின முயற்சியுடன் படித்ததோடு நிறைய கேரட்டும் சாப்பிட்டாள்! கேரட் கண்ணுக்கு நல்லதென்று அம்மா எப்போதும் சொல்வார்.

கடைசியாக அவள் விமானம் ஓட்டத் தயாராகிவிட்டாள்.

இன்று ஆர்யாவுக்கு முக்கியமான நாள். அவள் விமான ஓட்டுநர் அறையில்(Cockpit) இருக்கிறாள். அவளுடைய விமானத்தில் இரண்டு சிறப்புப் பயணிகள் இருப்பதால், அதிக உற்சாகத்துடன் இருக்கிறாள்.

"லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இது உங்களுடைய கேப்டன், ஆர்யா. உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்."

"சேச்சி!"

"அது என்னுடைய மகள்."

ராஜுவின் கதையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்