cheenuvirku kidaittha parisu

சீனுவிற்குக் கிடைத்த பரிசு

சீனு தன் அப்பாவிற்கு உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியும் குதூகலமும் கொள்வான். அப்படி உதவும் சில நேரங்களில், அவனுக்கு எதிர்பாராத பரிசும் காத்திருக்கும் !

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பள்ளிக்கூடம் முடிய ஐந்து நிமிடங்களே இருந்தன. சீனுவிற்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் வெளியே பார்த்தபோது ஒருவரும் இல்லை. அருகாமையிலிருந்து ஒரு மணி சப்தம் மட்டும் கேட்டது.

"சீனு, என்ன செய்கிறாய்?" என்றார் ஆசிரியை.

"ஸாரி, மிஸ்" என்ற சீனு, "நான் சும்மா..." என்று இழுத்தான்.

”பேபெருவாலா, காயிதாலு*! பேப்பெர் காயிதாலு!" என்று ராகம் பாடினார் சீனுவின் அப்பா, கபாடிவாலா**. வெளியிலிருந்தே அவனது சிரிப்பை அவரால் பார்க்க முடிந்தது.

* காயிதாலு - தெலுங்கு மொழியில் ‘காகிதங்கள், செய்தித்தாள்கள்’

** கபாடிவாலா - ஹிந்தி மொழியில் ‘பழைய பொருட்கள் வியாபாரி’

பள்ளி மணி அடித்ததும், சீனு முகம் நிறைய சிரிப்புடன் அப்பாவை நோக்கி ஓடினான். பள்ளியிலேயே அவன் ஒருவனுக்குதான் அழைத்துப்போக அவனது அப்பா வருவார்.

அவன் ஒரு காலி சாக்குப் பையை எடுத்துக்கொண்டு, அப்பாவுடன் போனான். அன்று கிடைக்கும் பொருட்கள் அந்தப் பைக்குள் போகும்.

இந்த வீட்டில் செய்தித்தாள் மட்டும். அந்த வீட்டில் செய்தித்தாளும் புத்தகங்களும். கீழ் வீட்டில் செய்தித்தாளும் புத்தகங்களும் காலி பாட்டில்களும்.

சீனு வண்டிக்கு ஓடிப்போய் இன்னுமொரு சாக்கை எடுத்து வந்தான். அவர்கள் லிஃப்டில் மேலே போனார்கள். அதிசயித்தில் சீனு கண்களை அகல விரித்துச் சுழற்றினான்.

ஐந்தாம் மாடியிலிருந்து செய்தித்தாள்கள், புத்தகங்கள், பாட்டில்கள், மேலும் டப்பாக்களும் கிடைத்தன.

அப்பா அந்த வீட்டுப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்த போது, சீனு எல்லாவற்றையும் சாக்கில் போட்டான். புத்தங்களை மட்டும் தன் பார்வையில் படும் வண்ணம் மேலாக வைத்துக்கொண்டான்.

இம்முறை, சீனு தன் அப்பாவிற்குத் துணையாக வண்டியைத் தள்ள வேண்டியிருந்தது.

வீட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தபின் அப்பா அவனைக் கூப்பிட்டார். "நான் உனக்கு ஒரு பொருள் வைத்திருக்கிறேன்" என்றார். அவர் கொடுத்தது, மதியம் முழுவதும் அவன் விடாமல் பார்த்துக் கொண்டேயிருந்த புத்தகம்!

"நன்றி, நாநா!"* என்றான் சீனு. அவ்வளவுதான், அதன் பிறகு சாப்பிடவே அவனை மூன்று முறை கூப்பிட வேண்டியிருந்தது. புத்தகம் படிப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம்!

* நாநா - தெலுங்கு மொழியில் ‘அப்பா’