முன்னொரு காலத்தில் குப்பி என்றொரு சிட்டுக்குருவி இருந்தாள். ஒருநாள் குப்பி சந்தைக்கு சென்று, நல்ல பழுத்த கொய்யாப்பழம் ஒன்றை தனக்காக வாங்கினாள். திரும்பி வரும்போது, கொய்யாப்பழம் குப்பியின் அலகிலிருந்து நழுவி, ஒரு முட்புதரில் விழுந்துவிட்டது. குப்பியால் பழத்தை இழப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அருகே வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுவனை அணுகினாள். “சின்னப்பையா, சின்னப்பையா! என் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொடேன்!” என்று கெஞ்சினாள். “முடியாது. ஓடிப்போ!” என்று விரட்டினான் சிறுவன்.
குப்பிக்கு மிகுந்த கோபம். அவள் நேராக விவசாயியிடம் சென்றாள். “முட்புதர்கள் நடுவே என் பழத்தை நழுவ விட்டுவிட்டேன். அதை எடுத்துத் தருமாறு அந்தச் சிறுவனைக் கேட்டேன், அவன் மறுத்துவிட்டான். நீங்கள் அவனை நன்றாக அடிக்க வேண்டும்” என்றாள். “நான் செய்ய மாட்டேன்! ஓடிப் போ!” என்றார் விவசாயி.
குப்பி அடுத்ததாக அந்த விவசாயியின் நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த பசுவிடம் சென்றாள். “நான் என் பழத்தை முட்புதர்கள் நடுவே போட்டுவிட்டேன். அதை எடுத்துத் தருமாறு அந்தச் சிறுவனைக் கேட்டேன், அவன் மறுத்து விட்டான். அந்தச் சிறுவனை அடிக்க விவசாயியிடம் உதவி கேட்டேன், அவரும் மறுத்துவிட்டார். இப்பொழுது நீ விவசாயியின் பயிரையெல்லாம் மேய்ந்து தின்றுவிடவேண்டும்” என்றாள் குப்பி. “என்னால் முடியாது” என்று சொல்லிவிட்டு பசு தலையைத் திருப்பிக் கொண்டாள்.
குப்பி நேராக ஒரு மீனவரிடம் பறந்துசென்றாள். “நான் என் பழத்தை முட்புதர்கள் நடுவே போட்டுவிட்டேன். அதை எடுக்க, அந்தச் சிறுவன் எனக்கு உதவவில்லை. விவசாயியும் உதவவில்லை. பசுவும் எனக்கு உதவி செய்யவில்லை. எனக்காக நீங்கள் அந்தப் பசுவை சாட்டையால் அடிக்கவேண்டும்” என்றாள். “நான் செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு மீனவர் மீண்டும் வலைவீசத் தொடங்கினார்.
குப்பி இப்பொழுது எலியிடம் சென்றாள். “நான் என் பழத்தை முட்புதர்கள் நடுவே தவற விட்டுவிட்டேன். அதை எடுக்க, அந்தச் சிறுவன் எனக்கு உதவவில்லை. விவசாயியும் உதவவில்லை. பசுவும் எனக்கு உதவி செய்யவில்லை. கடைசியாக, மீனவரும் உதவவில்லை. நீ அவருடைய மீன்வலையைக் கடித்துத் துண்டாக்க வேண்டும்” என்றாள். “என்னால் முடியாது” என்று சொல்லிவிட்டு எலி விடுவிடுவென ஓடிவிட்டான்.
குப்பி நேராக ஒரு பூனையிடம் பறந்துசென்றாள். “நான் என் பழத்தை முட்புதர்கள் நடுவே தவற விட்டுவிட்டேன். அதை எடுக்க, அந்தச் சிறுவன் எனக்கு உதவவில்லை. விவசாயியும் உதவவில்லை. பசுவும் எனக்கு உதவி செய்யவில்லை. மீனவரும் உதவவில்லை, கடைசியாக கேட்ட எலியும் உதவ மறுத்துவிட்டான். எனக்காக அந்த எலியை நீ பிடிக்கவேண்டும்” என்றாள் குப்பி. “நான் மாட்டேன்” என்றாள் பூனை.
குப்பிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாராவது தான் சொல்வதைச் செய்யமாட்டார்களா என ஏங்கினாள். உடனே, அவளுக்கு தன்னுடைய நண்பன் எறும்பின் ஞாபகம் வந்தது. அவனால் அவளுடைய பழத்தை எடுத்துத் தரமுடியுமென குப்பிக்குத் தெரியும்.
குப்பி நேராக எறும்பின் வீட்டுக்குப் பறந்துசென்றாள். அவனைப் பார்த்ததும் குப்பி சாதாரணமாக, “எனக்காக ஒரு பூனையை கடிப்பாயா?” என்று கேட்டாள்! “நிச்சயமாக! எங்க இருக்கா அந்தப் பூனை?” என்றான் எறும்பு.
எறும்பு தான் சொன்னபடியே பூனையைக் கடித்தான்.
பூனை எலியின் பின்னால் ஓடி அதைப் பிடித்தாள்.
எலி வேகமாக மீனவரின் வலையைக் கடித்தான்.
மீனவர் பசுவை அடித்தார்.
பசுவும் விவசாயியின் பயிரையெல்லாம் தின்றாள்.
விவசாயி சிறுவனை அடித்தார்.
சிறுவன் முட்புதர்கள் நடுவே விழுந்திருந்த கொய்யாப்பழத்தை எடுத்து குப்பியிடம் கொடுத்தான். குப்பிக்கு ஒரே சந்தோஷம். தன் நண்பன் எறும்புக்கு இதயபூர்வமான நன்றியைச் சொன்னாள்.
பேராசைக்கார குப்பி பழத்தை உடனே சாப்பிட விரும்பினாள். ஒரு மரக்கிளையில் விருந்துண்ண வாகாக அமர்ந்தாள். ஒரு சிறிய துண்டைத்தான் கடித்திருப்பாள்; அதற்குள் அவள் தலையில் கனமான எதுவோ ஒன்று விழுந்தது. அவளுக்கு மேலே ஒரு பெரிய மரத்துண்டை அலகில் பிடித்தபடி பறந்து கொண்டிருந்த காக்கை ஒன்று, குப்பியின் தலையில் அதைத் தெரியாமல் போட்டுவிட்டது. குப்பி மயங்கிவிட்டாள்.
இப்படித்தான் குறும்புக்கார குப்பிக்கு சரியான தண்டனை கிடைத்தது. இப்படித்தான் இக்கதையும் முடிந்தது.