இன்னும் குளிர் தொடங்கவில்லை. ஆனால் நாங்கள் குளிர் காலச் சீருடைகளை வெளியே எடுத்துவிட்டோம். குளிர்காலத்துக்கு சமஸ்கிருதத்தில் ‘ஷிஷிரா ரிது’ என்று பெயர். நான் இந்த நேரத்தில் சூடாக எதையாவது சாப்பிட விரும்புவேன்!
நேற்று அம்மா எங்களைக் கடலைக்காய்த் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரில் உள்ள நந்தி கோயிலுக்கு அருகே சாலையின் இருபுறங்களிலும் கடலைக்காய்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. வெறும் கடலை, வேகவைத்த கடலை, உப்புப் போட்ட கடலை, வறுத்த கடலை, இன்னும் பல!
குஜராத்தில் உள்ள மக்கள் குளிர்காலத்தில் போங்க் திருவிழாவைக் கொண்டாடுவார்களாம். விவசாயிகள் கரி அடுப்புகளில் தானியக் கொத்துகளை வறுப்பார்களாம். பிறகு எல்லாரும் அந்த ‘போங்க்’கை விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
நான் திருவிழாவுக்கு ஒரு நீல நிற ஸ்வெட்டர் அணிந்து சென்றேன். அங்கே சாலையின் இருபுறமும் நிறைய கடைகள். மனு ரங்க ராட்டினத்தில் செல்ல விரும்பினான். நான் பாட்டிக்கு ஒரு கதகதப்பான, மென்மையான சால்வை வாங்க விரும்பினேன்.
இப்போது, குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. நான் பள்ளிக்கு நடந்து செல்லும்போது கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்கிறேன். என்னுடைய புதிய சிவப்பு வளையல்கள் இனிமையான ஒலியை எழுப்புகின்றன.
நான் பேசும்போது என் வாய்க்கு முன்னால் வரும் பனிப்புகை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! என் தோழி ரஜனி சிம்லாவில் வசிக்கிறாள். அவளுடைய தாத்தாவின் கிராமத்தில் அவர்கள் மூங்கில் கூடையில் பனியை அள்ளிக் கூம்பு வடிவக் குவியல்களைக் கூரைமேல் உருவாக்குவார்கள்.
அதன்பிறகு, குழந்தைகள் பெரியவர்களைச் சந்தித்து ஆசி பெறுவார்கள்.
பனிமனிதன் உருவாக்கும் போட்டிகூட நடக்குமாம்! ஸ்ரீநகரில் முதல் பனி விழுந்தவுடன், எல்லாரும் ‘நௌஷீன் முபாரக்’ என்று சொல்வார்களாம். சில பனித் தூவல்களை ஒரு காகிதத்தில் மடித்து யாராவது ஒரு நண்பருக்கு அனுப்புவார்களாம்.
அதன்பிறகு, அந்த நண்பர் இவருக்கு ஒரு விருந்து கொடுக்கவேண்டும். எனக்குப் பனியில் விளையாடவேண்டும், நானும் ரோகன் ஜோஷும் சாப்பிடவேண்டும் என்று மிகவும் ஆசை! மரங்கள் பனியால் போர்த்தப்பட்டிருக்கும்போது மிகவும் அழகாக இருக்கும் என்று ரஜனி சொல்கிறாள்.
எல்லாரும் சூடான டீயை விரும்பிக் குடிப்பார்களாம். ஆனால் அவளுக்குப் பாலுடன் வெல்லம் கலந்து சாப்பிடுவதுதான் பிடிக்குமாம். அவர்கள் ஜாக்கெட், தொப்பி, கை உறை, மஃப்ளர் போன்றவற்றையெல்லாம் அணிந்துகொள்ளாமல் வெளியே செல்லவே முடியாது. ஆனால் ஒருவர் மீது ஒருவர் பனிப் பந்துகளை வீசி எறிந்து விளையாடுவது மிகவும் கொண்டாட்டமாக இருக்குமாம்!
அடுத்த குளிர்கால விடுமுறையின்போது, நான் சிம்லாவுக்கோ ஜெய்சால்மருக்கோ செல்ல விரும்புகிறேன். ஜெய்சால்மரில் பனி இல்லை, வெறும் மணல்தான்.
அங்கே நான் பாலைவனத் திருவிழாவுக்குச் செல்வேன், ஒட்டகச் சவாரி செய்வேன், கிராமிய நடனங்கள், பொம்மலாட்டங்களைப் பார்ப்பேன், தலைப்பாகை கட்டும் போட்டியில் கலந்துகொள்வேன்!
சங்கராந்தித் திருநாள் வரப்போகிறது. அப்போது ஜானுவின் வீட்டில் ‘தில்குட்’ செய்வார்களாம். ரோஹன் வீட்டில் ‘எள்ளு’ செய்வார்களாம், நர்ஸி வீட்டில் ‘சிக்டி’ செய்வார்களாம்.
உங்களுக்குத் தெரியுமா? இவை அனைத்திலும் எள், வெல்லம் உள்ளது. குளிர்காலத்தில் அது நம் உடலுக்கு மிகவும் நல்லது.
எனக்குக் குளிர்காலம் மிகவும் பிடிக்கும், என் நண்பர்களைக் கட்டியணைப்பது பிடிக்கும், பாட்டிக்கு அருகே அமர்ந்து புத்தகம் படிப்பது பிடிக்கும்!
என்னுடைய மரம் எப்போதும் பனியால் போர்த்தப்படாது.
ஆனால், அந்த மரத்தில் நிறைய பறவைகளும் மாம்பழங்களும் அணில்களும் கிளிகளும் இருக்கவேண்டும் என்று எனக்கு ஆசை. விரைவில் அது நிறைவேறும்!