ஒரு பெரிய கிராமத்துல கொஞ்ச காலம் முன்னாடி நடந்த கதை இது. அந்த கிராமத்துல நிறைய பச்சை வயல்கள் இருந்தன.
ஒரு பச்சை வயல் நடுவுல ஒரு சின்ன வெள்ளை பள்ளிக்கூடம் இருந்தது.
அந்த சின்ன வெள்ளைப் பள்ளிக்கூடத்துல ஒரு மைதானம் இருந்தது.
அந்த மைதானத்துல நிறைய குழந்தைங்க இருந்தாங்க.
அந்த குழந்தைங்க வட்டமா உட்கார்ந்திருந்தாங்க.
“நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்று அக்கா கேட்டாங்க.
“விளையாடலாம்” என்று குழந்தைங்க சொன்னாங்க. வட்டம் சின்னதாச்சு.
“நாம நல்ல ஜாலியா ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்று அக்கா கேட்டாங்க. “விளையாடலாம், விளையாடலாம்!” என்று குழந்தைங்க சொன்னாங்க. வட்டம் இன்னும் சின்னதாச்சு. “நாம ரொம்ப ரொம்ப ஜாலியா விளையாடலாமா?” என்று அக்கா கேட்டாங்க.
“விளையாடலாம், விளையாடலாம், விளையாடலாம்!” என்று குழந்தைங்க சொன்னாங்க. குழந்தைங்க எல்லாம் அக்கா மடியிலயே உட்கார்ற அளவு வட்டம் ரொம்ப சின்னதாச்சு.
“நா ஒரு எழுத்து சொல்லுவேன்” என்று அக்கா சொன்னார்.
“நீங்க அந்த எழுத்துல ஆரம்பிக்கிற ஒரு வார்த்தைய சொல்லனும்.
இப்போ நா க சொன்னா, நீங்க என்ன சொல்வீங்க?” குழந்தைங்க யோசிச்சாங்க.
“க சொன்னா கணித வாத்தியார்!”
“க சொன்னா கறிகாய்!”
“க சொன்னா கம்பளி!”
சொற்கள் ஒன்றின் மீது ஒன்றாக வந்து விழுந்தன.
மிமி மட்டும் அமைதியாக இருந்தாள்.
“வா மிமி” அக்கா சொன்னார்.
“எங்களோட விளையாடேன். க சொன்னா?”
மிமி அக்காவைப் பார்த்தாள். மிமி சொன்னாள்…
“டமாரம்.”
“இல்ல இல்ல” என்று மற்ற குழந்தைகள் சொன்னார்கள்.
"நீ க-வுல ஆரம்பிக்கிற ஏதாவது வார்த்தைதான் சொல்லனும்.”
ஆனால் மிமி சொன்னாள் “டமாரம்”.
சரியென்று அவர்கள் வேறொரு எழுத்தை சொன்னார்கள். அக்கா சொன்னார் “ந”.
“ந சொன்னா நீர்மோர்.” “ந சொன்னா நண்பன். ந சொன்னா நீள ரிப்பன்.” “ந சொன்னா நல்ல தடி”
அக்கா மிமியைப் பார்த்து “ந சொன்னா” என்று கேட்டார்.
மிமி அக்காவைப் பார்த்தாள்.
மிமி எல்லாரையும் பார்த்தாள்.
மிமி சொன்னாள் “டமாரம்”.
அடுத்து அக்கா “ப” என்றார்.
அடுத்து அக்கா “ப” என்றார். “ப சொன்னா பழம்.” “ப சொன்னா பெரியவர்.” “ப சொன்னா பச்சத் தண்ணி.”
எல்லோரும் மிமியைப் பாத்து “மிமி, ப சொன்னா..?” என்று கேட்டனர்.
மிமி எல்லோரையும் பார்த்தாள். எல்லோரும் ஆர்வமாகப் பார்த்தார்கள்.
மிமி சொன்னாள் “டமாரம்.”
எல்லோருக்கும் அக்காவின் விளையாட்டு புரிந்தது.
எல்லோருக்கும் மிமியின் விளையாட்டும் புரிந்தது.
“சரி அப்போ.” அக்கா சொன்னார், “ட சொன்னா?”
எல்லோரும் மிமியைப் பார்த்து கத்தினர்.
“ட சொன்னா டமாரம்!”
மிமி முகத்தில் ஒரு பெரிய்ய்ய்ய புன்னகை. அவள் சொன்னாள்…
“ட சொன்னா டஃப்ளி மோளம்.”
கதையின் கதை
இந்தப் புத்தகம் உண்மையான ‘மிமி’க்கும், அவளது நண்பர்களுக்கும், சொற்களோடு விளையாடுவதை விரும்பும் எல்லா குழந்தைகளுக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இந்தக் கதை. இந்தக் கதையின் ஆசிரியர் அந்தப் பள்ளியின் 1, 2ஆம் வகுப்புக் குழந்தைகளோடு சேர்ந்து இந்த விளையாட்டுகளை ஆடினார், எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நாளை பின்னர் கதையாக்கினார்.