ஆசிரமத்தில் ஏதோ பரபரப்பாகத் திட்டம் போடப்படுவதை உணர்ந்தான் தனி. ஆனால் யாரும் அவனிடம் அதைப்பற்றிப் பேசவில்லை. ”எனக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது என்பதால்தான்!” என்று சொல்லிக்கொண்டான் தனி. ”பெரியவர்கள் என்னை முட்டாள் என்று நினைக்கிறார்கள். நான் முட்டாள் இல்லை.”
தனி என்ற சிறுவன் ஒரு விசேடமான இடத்தில் தன் தாய் தந்தையருடன் வசித்து வந்தான். அந்த இடம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமம். சபர்மதி ஆசிரமத்தில் வசித்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காந்தியைப் போல் அவர்களும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபடுபவர்கள். தினமும் அங்கு சர்காவில் நூல் நூற்றும் பஜனைகள் பாடியும் காந்தியடிகளின் அறிவுரைகளைக் கேட்டும் பொழுதைக் கழித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தில் எல்லோரும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. சமையல் செய்து சுத்தம் செய்தல், துணி துவைத்தல், பால் கறத்தல், காய்கறிச் செடிகளைப் பராமரித்தல், ஆற்றிலிருந்து நீர் கொணர்தல் என்று எல்லோரும் ஆசிரம வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒன்பது வயதான தனிக்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அது பின்னி என்ற ஆட்டைப் பார்த்துக்கொள்ளுதல். தனிக்கு பின்னியைப் பிடித்திருந்தது. தனியும் பின்னியும் நண்பர்களாகப் பழகினர். தனிக்கு பின்னியுடன் பேசுவது பிடிக்கும்.
ஒருநாள் காலை பின்னிக்குப் புல் கொடுத்து, பின்னியின் தண்ணீர் சட்டியில் நீர் நிரப்பிக்கொண்டே தனி சொன்னான், “பின்னி, இங்கு ஏதோ நிகழவிருக்கிறது. எல்லோரும் காந்தி தாத்தாவின் அறைக்குள்ளே ஏதோ கலந்து பேசிக்கொள்கிறார்கள்.” பின்னியும் தனி சொன்னதைப் புரிந்துகொள்வதைப் போல் தலையை ஆட்டிக்கொண்டே புல்லை மென்றது. தனி பசியுடன் தன் தாயைத் தேடிச் சமையலறைக்குச் சென்றான். பின்னியும் உடன் சென்றது. தாயார் அங்கு அடுப்பைப் பற்றவைத்து விசிறிக்கொண்டிருந்தாள். அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது.“அம்மா, காந்தித் தாத்தா எங்கேயாவது செல்ல இருக்கிறாரா?” என்று கேட்டான் தனி. புகையினால் இருமியவண்ணம் தாய் சொன்னாள் “அவர்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.” “நடைப் பயணமா? எங்கு செல்ல இருக்கிறார்கள்?”
“கடற்கரையில் ஓர் இடம்... போதும் கேள்வி கேட்பதை நிறுத்து தனி, வேறெங்காவது செல், என்னை வேலை செய்யவிடு” என்றாள் பொறுமையிழந்த தாயார்.
தனியும் பின்னியுடன் காய்கறித் தோட்டத்திற்குச் சென்றான். அங்கு பிந்தா மாமா கிழங்குகளைத் தோண்டி அறுப்பதைக் கண்டான்.
“பிந்தா மாமா, நீங்களும் நடைப்பயணத்தில் செல்லவிருக்கிறீர்களா?”என்றான் தனி. தலையை ஆட்டியபடி வேலையில் கவனமாக இருந்தார் பிந்தா மாமா. “யார் யார் செல்லவிருக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்?”
கிழங்கு அறுப்பதை நிறுத்திவிட்டு பிந்தா மாமா சொன்னார் “உன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். முதலில் அந்த விஷமக்கார ஆட்டைக் கட்டிப்போடு. தோட்டத்துக் கீரையை மெல்லுகிறது பார்.”
தனியும் பின்னியை தூரமாகக் கூட்டிச் சென்று எலுமிச்சை மரத்தில் கட்டிப்போட்டான். “காந்தியடிகள் கடற்கரையோரம் உள்ள தண்டி என்ற இடத்திற்கு நடந்து செல்கிறார். கூடவே, ஆசிரமத்தில் உள்ள சிலரும் போகிறார்கள். குஜராத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் நகரங்களின் வழியாக நடப்பார்கள். தண்டிக்கு சென்று கடல் நீரிலிருந்து உப்பு எடுப்பார்கள்.”
“உப்பா?” தனி முகம் சுளித்தான் “உப்பை எந்த மளிகை கடையிலும் வாங்கலாமே!.”
“அது சரிதான்” என்றார் பிந்தா மாமா, சிரித்தபடி. “ஆனால் மகாத்மாவிற்கு வேறொரு எண்ணம் இருக்கிறது. அவர் எப்பொழுதும் எதாவது ஒன்றை எதிர்த்துப் போராடுவார் என்று உனக்கு தெரியுமல்லவா?”
”ஆமாம், காந்தி தாத்தா, சத்யாகிரகச் செயல்களால் ஆங்கிலேய அரசாட்சியை ஒழித்து இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபடுகிறார்.
ஆனால் உப்பிற்கும் அதற்கும்...”
“சம்பந்தம் இருக்கிறது. ஆங்கில அரசு உப்பின்மீது வரி விதித்து இருக்கிறது. அதனால் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள்கூட, உப்பு சாப்பிடுவதால், வரி கட்ட வேண்டியிருக்கிறது!”
“இது அநியாயம்!” என்று கோபம் கொண்டான் தனி.
“அநியாயமும், அநீதியும் கூட! இந்தியர்கள் உப்பு தயாரிக்க தடை விதிக்கப்பட்டிக்கிறது. காந்தியடிகள் அரசிடம் இவ்வரியை நீக்கக் கோரியும் அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் எல்லோரும் காந்தியடிகளுடன் சேர்ந்து தண்டி வரை நடந்து சென்று உப்பு தயாரிக்கப் போகிறார்கள்.”
“ஒரு மாதம் நடப்பதா! காந்தி தாத்தா களைத்துப் போவாரே! பேருந்து அல்லது ரயிலில் செல்லலாமே.” “நடந்து செல்வதாலும். ஒரு மாதம் பயணம் மேற்கொள்வதாலும் அதிக அளவில் விளம்பரம் கிடைக்கும், பத்திரிக்கைகளில் புகைப்படங்களும் விவரங்களும் வெளியாகும். வானொலி மூலம் உலக அளவில் இந்நிகழ்ச்சி பற்றி விமரிசிக்கப்படும் அல்லவா! ஆங்கிலேயரைத் தலைகுனியவைக்க இது நல்ல வழி!” “நல்ல உபாயம்தான். இந்த காந்தி தாத்தா புத்திசாலிதான்.”
“காந்தியடிகள் வைசிராய் அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்கள் வியக்கப் போகின்றனர்.”
எல்லாவற்றையும் கேட்டுகொண்ட தனி, பின்னர் காந்தியடிகளின் குடிசையை நோக்கிச் சென்றான். வெளியில் நின்று சன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தான். அனைவரும் கூடி காந்தியடிகளுடன் தண்டி செல்லும் வழியைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தில் தன் தந்தையைப் பார்த்து மகிழ்ந்து பூரித்தான் தனி. பிற்பகல் ஆயிற்று. ஆசிரமம் அமைதியாக இருந்தது. தனி தன் அப்பாவைத் தேடிச் சென்றான். தந்தை, மரத்தடியில் சர்க்காவில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார்.
அப்பாவை நேர்கொண்டு கேட்டான் தனி, “அப்பா, தாங்களும் அம்மாவும்கூட நடைப்பயணத்தில் செல்லவிருக்கிறீர்களா?” “நான் மட்டுமே செல்வேன். அம்மா இங்கேயே இருப்பாள்.”
“நானும் உங்களுடன் வருவேன்” என்றான் தனி. “என்ன அசட்டுத்தனம் இது. அவ்வளவு தூரம் உன்னால் நடக்க முடியாது. ஆசிரமத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமே போகிறோம்.”
“எனக்கு ஒன்பது வயது. அதுமட்டும் அல்ல, நான் உங்களைவிட வேகமாக ஓடுவேன். உங்களால் நான் வருவதைத் தடுக்கமுடியாது” என்றான் தனி.தந்தையும் நூல் நூற்பதை நிறுத்திவிட்டுப் பொறுமையுடன் தனிக்கு விளக்கினார், “காந்தியடிகள்தான் முடிவுசெய்வார், யார் யார் உடன் செல்வார்கள் என்று.”“அப்படியானால், நான் அவரையே கேட்கிறேன்.”அடுத்த நாள் தனி விடியற்காலையில் எழுந்து காந்தியடிகளைத் தேடிச்சென்றான். அவர் மாட்டுக்கொட்டகையில் மாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்து தோட்டத்தில் காய்கறிகளைப் பார்வையிட்டுவிட்டு பிந்தாவுடன் பேசினார்.
பிறகு தன் குடிசைக்குச் சென்றார்.
தனியும் பின்னியும் அவரைப் பின் தொடர்ந்தனர். தன் குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து சர்க்காவை செலுத்தியபடி காந்தியடிகள் தனியைப் பக்கத்தில் அழைத்தார். தனி சென்றான், பின்னியும் உடன் சென்றது.
“பையா, உன் பெயர் என்ன?”
“என் பெயர் தனி.”
“இது உன்னுடைய ஆடா?” என்றார் பின்னியைப் பார்த்து. “ஆமாம். பின்னியின் பால்தான் தாங்கள் தினமும் காலையில் அருந்துவது. நான்தான் அவளைப் பார்த்துக்கொள்கிறேன்.”
“அப்படியா, மிக்க மகிழ்ச்சி! ஆனால் பின்னியும் நீயும் காலைமுழுவதும் என்னைப் பின்தொடர்ந்து வரக் காரணம் என்ன?” என்று காந்தியடிகள் வினவினார்.
”தங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். உங்கள் எல்லோருடனும் தண்டி பயணத்தில் நானும் உடன் வரலாமா?” காந்தியடிகள் புன்னகையுடன் சொன்னார், “தண்டி மிக தூரத்தில் உள்ளது... 250 மைல்கள் செல்ல வேண்டும். நீயோ, சிறுபையன். உன்னுடைய தந்தையைப்போல், இளைஞர்கள்தான் செல்ல முடியும்.”
“ஆனால், தங்களுக்கும் வயதாயிற்றே. தாங்கள் களைத்துப்போகமாட்டீர்களா?” “இல்லை தனி. என்னால் நடக்கமுடியும். நான் நடப்பதில் தேர்ந்தவன். அது எனக்குப் பழக்கம்.”
“எனக்கும் பழக்கம்தான்” என்றான் தனி.
“சரி” என்று யோசித்தார் காந்தியடிகள், “ஆனால் ஒரு பிரச்சினை... நீ எங்களுடன் வந்துவிட்டால் பின்னியை யார் கவனிப்பார்? நான் தண்டியிலிருந்து திரும்பும்போது இளைத்திருப்பேன். அதனால் திரும்பியதும் நிறைய பால் குடிக்கவேண்டியிருக்கும். திரும்ப பலத்தைப் பெற பின்னியின் பால் எனக்கு அவசியம் இல்லையா?” என்றார் காந்தியடிகள்.
தனி பெருமையோடு, ”பின்னி நான் தீனி கொடுத்தால்தான் சாப்பிடுவாள். எனக்கு மட்டுமே பின்னிக்குப் பிடித்தவை என்ன என்று தெரியும்” என்றான்.
“சரியாகச் சொன்னாய்! அதற்குத்தான் நீ இங்கே ஆசிரமத்திலே தங்கி பின்னியை நன்றாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்காக...”
“அப்படியே செய்கிறேன். பின்னியும் நானும் தங்கள் வருகைக்காகக் காத்திருப்போம்” என்றான் தனி ஆர்வத்தோடு.
வரலாற்றுக் குறிப்புக்கள்
1. 1930ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கினார். அவர் தன் தொண்டர்களோடு 24 நாட்கள் குஜராத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். சென்ற இடம் எங்கும் அவர்களை மக்கள் பூக்களாலும் பாடல்களாலும் வரவேற்றனர். உலகின் பிரபல பத்திரிகைகளில் இப்பயணத்தைப் பற்றிய செய்தி வெளிவந்தது.
2.தண்டியில் காந்தியடிகளின் சீடர்கள் கடலிலிருந்து உப்பு எடுத்ததால் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கபட்டு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மக்கள் மறியல் செய்தனர். ஆனால் இந்தக் கதையின் தனியும், பின்னியும் கற்பனையில் தோன்றியவர்கள் என மனதிற்கொள்க.
3. அந்த நடைப்பயணத்தில் காந்திஜியுடன் 78 தொண்டர்கள் பங்கு கொண்டு, 385 கிலோமீட்டர் நடந்தனர்.
4. அந்த நடைப்பயணம் 1930ஆம் ஆண்டு 12 மார்ச் அன்று தொடங்கி 5 ஏப்ரல் அன்று முடிவு பெற்றது. அந்தக் குழுவில் பங்கு கொண்ட மிக இளைய தொண்டருக்கு வயது 16 தான்!
5. 2005ஆம் ஆண்டில் தண்டி யாத்திரையின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.