இன்னிக்கு நாம எல்லாம் சேர்ந்து ஒரு ஏணியில் ஏறப் போறோம். இது ரொம்ப அபூர்வமான ஏணி. இந்த ஏணியில் ஒவ்வொரு படிக்கும் இடையிலான தூரம், ஒவ்வொரு படியிலும் பத்து மடங்கு அதிமாகிட்டே போகும். சில சமயம் ஒவ்வொரு படியா ஏறிப் போகணும். மற்ற நேரங்களில் ஒரே மூச்சில் பல படிகளைத் தாண்டிப் போயிடலாம்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னன்னா நமக்கு எது கடைசி படி என்பதோ, இல்லை கடைசி படின்னு ஒண்ணு இருக்கா என்பதோ கூட தெரியாது. துவங்கட்டும் இந்த அதிசயப் பயணம்!
படி 0: 1 மீட்டர்ஒரு ஐந்து வயது பையன், இப்போது பிறந்த யானைக்குட்டி, மற்றும் ஒரு கிரிக்கெட் மட்டை - இந்த மூணுக்கும் நடுவில என்ன ஒற்றுமை இருக்க முடியும்? இவை எல்லாமே ஏறக்குறைய 1 மீட்டர் (சுருக்கமாக 1m) உயரம் உடையவை! ஒரு அறையின் கூரை 3 யானைக்குட்டிகளின் உயரம்னு சொன்னால் வேடிக்கையாக இருக்கும்தானே? அதனால, நாம ரொம்ப புத்திசாலித்தனமா, அந்த அறையின் கூரை 3m உயரத்தில் இருக்குனு சொல்றோம்.
படி 1: 10 மீட்டர்இப்போ 1 மீட்டருக்கான அளவு தோராயமாக உங்களுக்கு புரிஞ்சதுனால நாம 10 மீட்டர்ல இருக்கற அடுத்த படிக்கு ஏறத் தயார். ஒரு மூன்று மாடிக்கட்டிடம், ஒரு வளர்ந்த மாமரம் இதெல்லாம் கிட்டத்தட்ட 10 மீட்டர் உயரம். ஒரு கிரிக்கெட் ஆடுகளம் அதைவிட இரண்டு மடங்கு நீளமானது.10m நீளமோ உயரமோ கொண்ட வேற ஏதாவது பொருட்களை உங்களால யோசிச்சு சொல்ல முடியுமா?
படி 2: 100 மீட்டர்நாம ஒவ்வொரு படியிலும் முந்தைய படிக்கான எண்ணின் கடைசியில் ஒரு பூஜ்ஜியம் சேர்ப்பதையும், ஒவ்வொரு படியின் எண்ணும் அந்த படியில் இருக்கும் பூஜ்ஜியத்தின் எண்ணிக்கையும் ஒண்ணாக இருப்பதை கவனிச்சீங்களா? நாம மேலே ஏற ஏற இதை கவனத்தில வெச்சுக்கோங்க!
நீங்க பள்ளியில, விளையாட்டு நாள் அன்னிக்கு 100m ஓட்டப்பந்தயத்துல ஓடியிருந்தாலோ, இல்லை டி.வி யில ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடுவதைப் பார்த்திருந்தாலோ உங்களுக்கு 100m எவ்வளவு தூரம்னு தெரிஞ்சிருக்கும். இப்போ அந்த 100 மீட்டரை நிமிர்த்தி வைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க! அது 2 "கோல் கும்பஜ்*"களின் உயரம் இருக்கும்.
படி 3: 1000 மீட்டர்1000 மீட்டருக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அது, 1 கிலோமீட்டர் அல்லது 1km நீங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10 முறை ஓடினாதான் இந்தத் தூரத்தைத் தாண்டமுடியும். அப்பாடா! நீங்க எவரெஸ்ட் சிகரத்தை அடையணும்னா 9km ஏறணும்!
படி 6: 1000000 மீட்டர் இப்போ நாம இரண்டு படிகளைத் தாண்டி 6ஆவது படிக்கு போகலாம். இங்கே 1க்கு பின்னாடி 6 பூஜ்யங்கள் இருக்கு.இந்தியாவோட வடக்கு முனையான காஷ்மீரிலிருந்து, தெற்கு முனையான கன்னியாகுமரி வரையிலான தூரம், இதைவிட 4 மடங்கு, அதாவது 4 முறை 1,000,000m அல்லது 4,000,000m. 4,000,000 மீட்டர் சொல்ல ரொம்ப பெரிதா இருக்கறதுனால நாம 4000kmனு சொல்லுவோம்- இரண்டும் ஒண்ணேதான்.
படி 8: 100,000,000m வானத்தில அழகா பிரகாசிக்கிற நிலா எவ்வளவு தூரத்தில இருக்கு? அதுக்கு நாம நம்மோட ஏணியின் 8ஆவது படிக்கு போகணும். இங்கதான், நம்ம பூமியிலிருந்து 4 முறை 100,000,000m அல்லது 400,000km தொலைவில் நிலா இருக்கு.
படி 11: 100000000000m
இன்னும் இரண்டு படிகளைத் தாண்டினா நாம சுட்டெரிக்கும் சூரியனை அடையலாம். அது எத்தனை தூரத்துல இருக்கு தெரியுமா? 100,000,000km கற்பனைப் பண்ணி பாருங்க. அது கூட இன்னும் ஒரு 50,000,000km சேர்த்தா, சூரியன் நம்ம பூமியிலிருந்து எவ்வளவு தொலைவுல இருக்குனு புரியும்.அவ்வளவு தூரத்தில இருந்தாலும் சூரியன் நமக்கு வெளிச்சமும் வெப்பமும் கொடுப்பதும், வெயில் காலத்தில் வியர்க்க வைப்பதும் ஆச்சரியமா இல்லை?
கடைசி படி ???நம்ம ஏணியில கடைசி படின்னு ஒண்ணு இருக்கா? அது யாருக்குமே தெரியாது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை வெச்சு விஞ்ஞானிகள், சூரியனையும் தாண்டி ரொம்ப தூரம் வரை பார்த்திருக்காங்க. அவங்க இதுவரை பார்த்ததுலேயே ரொம்பத் தொலைவுல இருக்கும் ஒரு பொருள் நம்ம ஏணியின் 26ஆவது படியில, அதாவது 100,000,000,000,000,000,000,000,000m தொலைவுல இருக்கு! அப்பப்பா, யோசிச்சுப் பார்த்தாலே தலை சுத்துது!நீங்க வளர்ந்து பெரியவங்களானா இதைவிட தொலைவில, 28ஆவது படியிலேயோ 29ஆவது படியிலேயோ எதையாவது கண்டுபிடிக்கலாம். அதை நினைச்சா உங்களுக்கு உற்சாகமா இல்லை?
அளந்து விளையாடலாம்
கீழ்க்கண்ட செயல்பாடுகள், வகுப்பறையில் குழந்தைகளை ஒன்றாகவோ அல்லது தனித்தனி குழுக்களாகவோ ஈடுபடுத்துவதற்கும், அவர்களுக்கு நெடுந்தொலைவுகளைப் பற்றி ஒரு அறிமுகம் ஏற்படுத்துவதற்கும் உபயோகமாக இருக்கும்.1. குழந்தைகளை பழைய செய்தித்தாள்களிலிருந்து நீளமான கீற்றுகளைக்(ஒவ்வொன்றும் ஒரு அங்குல அகலத்தில்) கத்தரிக்கச் சொல்லவும்.2. இந்தக் கீற்றுகளை நுனியோடு நுனியாக பசையால் ஒட்டி 1 மீட்டர் நீளத்திற்குச் செய்யச் சொல்லவும்(அளவுகோல் அல்லது அளவுநாடாவால் அளந்து கொள்ளவும்).
3. இந்த 1m கீற்றை அளவாகக் கொண்டு மேலும் 10 கீற்றுகள் செய்து அவற்றை நுனியோடு நுனியாக ஒட்டி 10m நீளமான கீற்றைச் செய்யவும். இந்த கீற்றை தரையில் பரப்பி குழந்தைகளை அதன் நீளவாக்கில் அடுத்தடுத்து படுத்துக் கொள்ளச் சொல்லவும். எத்தனைக் குழந்தைகள் இப்படிப் படுத்துக்கொண்டால், 10m நீளத்தை அளக்க முடியும்?4. பத்து 10m கீற்றுக்களை நுனியோடு நுனியாக ஒட்டி, வகுப்பறையைப் பல முறைச் சுற்றி வரும் ஒரு 100m கீற்றை உருவாக்கவும்.5. 1km கீற்றை உருவாக்கினால் எப்படி இருக்கும்? அது வகுப்பறையை எத்தனை முறை சுற்றி வரும்? எந்தக் குழு மிக வேகமாக 1km கீற்றை உருவாக்கியது?
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான குறிப்பு
1ஐத் தொடர்ந்து பல பூஜ்யங்கள் வரும் பெரிய எண்களை எழுதும்போது குழந்தைகள் மட்டுமல்ல , பெரியவர்களும் கூட அடிக்கடி தவறு செய்து விடுவோம். இதனால்தான், அடுக்குக்குறி அமைப்பில் எழுதுவது சிறந்தது. இப்புத்தகத்தின் வாயிலாக, குழந்தைகளுக்கு அடுக்குக்குறி வடிவில் எழுத எளிதாகக் கற்பிக்கலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1இன் பின் வரும் பூஜ்யங்களை எண்ணி அந்த எண்ணை 10ன் அடுக்கு அல்லது படியாக எழுத வேண்டியதுதான். உதாரணத்திற்கு, 1இன் பின் 3 பூஜ்யங்களைக் கொண்ட 1000ஐ 103 என்று எழுதலாம். 1இன் பின் 7 பூஜ்யங்களைக் கொண்ட 10000000ஐ 107 என்று கச்சிதமாக எழுதிவிடலாம்!இப்புத்தகத்தில் நாம் "தூரம் எத்தனை தூரம்" என்னும் விளையாட்டை சூரியனோடு நிறுத்திக் கொண்டோம். அதையும் தாண்டி இந்த விளையாட்டை நீட்டிக்க வேண்டுமென்றால், நீங்கள் சூரியனிலிருந்து 1016m தொலைவில் இருக்கும் நட்சத்திரமான " புரோக்சிமா செண்ட்டாரி" யை அறிமுகப் படுத்தலாம். மேலும், நம் பால்வழி(மில்கி வே)யின் ஒரு முனையிலிருந்து இன்னொன்றிற்கான தூரம் 1,000,000,000,000,000,000,000 (அல்லது 1021)m என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ள அனைத்து தூரங்களும் தோராயமான மதிப்பீடுகளே தவிர, துல்லியமானவை அல்ல. உதாரணமாக, 3984 கிலோமீட்டரை 4000 கிலோமீட்டர் என்று கொடுத்துள்ளோம். இது ’விஞ்ஞானபூர்வமற்றது’ அல்ல. தோராயமான மதிப்பீடுகள் விஞ்ஞானத்தில் மிக உபயோகமானவை! இந்தக் கருத்தை வலியுறுத்த நீங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் செயல்பாடுகளை அளிக்கலாம். ஒரு எழுதுகோலின் நீளம் 101cmக்கு நெருக்கமானதா அல்லது 102cmக்கு நெருக்கமானதா? பள்ளிப் பேருந்தின் எடை, தோராயமாக 103 கிலோவா அல்லது 104 கிலோவா? குழந்தைகளும் ஒருவருக்கொருவர் இதுபோன்ற புதிய கேள்விகளைக் கேட்டுக்கொள்ளட்டும்.