ரமேஷ் துறுதுறுப்பான பையன். எல்லாருக்கும் அவனைப் பிடிக்கும்.
அவனுடைய குடும்பம் வசதியானது அல்ல. அவனுடைய தாய் சில பணக்காரர்களின் வீடுகளில் தோட்ட வேலை செய்து பிழைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் சம்பளத்துக்குப் பதிலாகக் கொஞ்சம் அரிசி கொடுப்பார்கள். அவ்வளவுதான்.
இதனால், ரமேஷுக்கு வேண்டிய ஆடைகள், பொம்மைகள் போன்றவற்றை அவனுடைய தாயால் வாங்கித்தர இயலவில்லை. அதை எண்ணி அவர் மிகவும் வருந்தினார்.
ஆனால், ரமேஷ் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான்.
ஒருநாள், ரமேஷின் தாய் சந்தைக்குச் சென்றார். அவர் தன் மகனிடம் கேட்டார்:
தாய்: கண்ணு, உனக்குச் சந்தையிலேர்ந்து என்ன வேணும்?
ரமேஷுக்குக் கொஞ்சநாளாகவே மேளம் அடித்து விளையாடவேண்டும் என்று ஆசை. ஆகவே, அவன் சொன்னான்:
ரமேஷ்: எனக்கு ஒரு மேளம் வேணும்மா!
மேளம் வாங்கும் அளவு தன்னிடம் பணம் இருக்காது என்று தாய்க்குத் தெரியும். ஆகவே, அவர் எதுவும் சொல்லாமல் சந்தைக்குச் சென்றார். தன்னிடமிருந்த அரிசியை விற்றுக் கொஞ்சம் மாவும் உப்பும் வாங்கினார்.
ரமேஷை ஏமாற்றுகிறோமே என்று அவர் மனம் வாடியது. ஆகவே, சாலையோரமாக இருந்த ஒரு மரக்கட்டையை எடுத்துக்கொண்டார், ‘மேளத்துக்குப்பதிலா இதை வெச்சு அவன் தாளம் போடட்டும்’ என்று நினைத்துக்கொண்டார்.
மேளம் இல்லையே என்று ரமேஷ் வருந்தவில்லை. அம்மா தந்த மரக்கட்டையை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டான்.
உடனே, அவன் மரக்கட்டையோடு விளையாடச் சென்றான். மகிழ்ச்சியாக ஒரு பாடல் பிறந்தது:ரமேஷ்:டும்டும்டும் டும்டும்டும்மேளம் கேட்டேன், கட்டை வந்ததுடும்டும்டும் டும்டும்டும்இதனை எண்ணி மனசும் துள்ளுதுடும்டும்டும் டும்டும்டும்
அப்போது, சாலையோரத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அவர் தன்னுடைய அடுப்பில் வரட்டிகளைப் போட்டு எரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.ஆனால், வரட்டிகளில் நெருப்புப் பிடிக்கவில்லை. ஒரே புகை, அந்தப் பெரியவரின் கண்களில் நீர் வடிந்தது, அவர் சிரமப்பட்டு இருமினார்.
ரமேஷ் அவரிடம் ஓடினான்.ரமேஷ்: என்னாச்சு தாத்தா? ஏதாவது உதவி தேவையா?
பெரியவர்: தம்பி! நான் சமைக்க முயற்சி செய்யறேன், ஆனா, இந்த அடுப்பைப் பத்தவைக்கமுடியலை, ஊதி ஊதி வாய் வலிக்குது, ரொம்பப் பசிக்குது! எனக்கு ஒரு மரக்கட்டை கிடைச்சா, உடனே சமைச்சுச் சாப்பிடுவேன்.ரமேஷ்: கவலைப்படாதீங்க தாத்தா. என்கிட்ட ஒரு கட்டை இருக்கு, இதை வெச்சு உங்க அடுப்பைப் பத்தவைங்க!இதைக் கேட்டுப் பெரியவர் மிகவும் மகிழ்ந்தார். சட்டென்று அடுப்பைப் பற்றவைத்து ரொட்டி செய்தார். ரமேஷுக்கும் ஒரு ரொட்டி செய்து கொடுத்தார்.
ரமேஷ் துள்ளியபடி பாடினான்:ரமேஷ்:டும்டும்டும் டும்டும்டும்கட்டை போச்சு, ரொட்டி வந்ததுடும்டும்டும் டும்டும்டும்ரொட்டி தின்ன ஆசை பொங்குதுடும்டும்டும் டும்டும்டும்
ரமேஷ் தொடர்ந்து நடந்தான்.இப்போது அவன் ஒரு பானை செய்யும் பெண்ணைப் பார்த்தான். அவள் கையில் ஒரு குழந்தை. அது சத்தம் போட்டு அழுதுகொண்டிருந்தது.
ரமேஷ் கேட்டான்:ரமேஷ்: என்னாச்சுங்க? உங்க பொண்ணு ஏன் அழுதுகிட்டிருக்கு?அந்தப் பெண்: அவளுக்குப் பசிக்குது. காலைலேர்ந்து எதுவும் சாப்பிடலை. அதனாலதான் அழுதுகிட்டிருக்கு. ஏதாவது சாப்பிடக் கொடுக்கலாம்ன்னா, எங்க வீட்ல எதுவுமே இல்லை. எனக்கு இப்ப ஒரு ரொட்டி கிடைச்சா நல்லா இருக்கும்.
நல்ல மனம் கொண்ட ரமேஷ் தன்னிடமிருந்த ரொட்டியை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தான். அவள் அதைக் குழந்தைக்கு ஊட்டினாள். அது மகிழ்ச்சியாகச் சிரித்தது.
உடனே, அந்தப் பெண் ரமேஷுக்கு ஒரு பானை கொடுத்தாள்.ரமேஷ் பாடிக்கொண்டே சென்றான்.ரமேஷ்:டும்டும்டும் டும்டும்டும்ரொட்டி போச்சு, பானை வந்ததுடும்டும்டும் டும்டும்டும்குண்டுப் பானை, இனிமே என்னுதுடும்டும்டும் டும்டும்டும்ரமேஷ் ஆற்றங்கரைக்கு வந்தான். அங்கே சலவைத்தொழிலாளி ஒருவரும் அவருடைய மனைவியும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களை நெருங்கிய ரமேஷ் கேட்டான்:ரமேஷ்: என்னாச்சுங்க? ஏன் ரெண்டு பேரும் சண்டை போடறீங்க?
சலவைத் தொழிலாளி: இந்தப் பொண்ணு என்னோட பானையை உடைச்சுட்டா, அது இல்லாம நான் எப்படி என்னோட வேலையைச் செய்வேன்? இன்னொரு பானை வாங்க என்கிட்ட பணம் இல்லையே.ரமேஷ்: கவலைப்படாதீங்க, இந்தப் பானையை எடுத்துக்கோங்கஇதைக் கேட்டு மகிழ்ந்த சலவைத் தொழிலாளிக்கு ரமேஷை மிகவும் பிடித்துவிட்டது. அவனுக்கு ஒரு நல்ல சட்டையைக் கொடுத்தான்.ரமேஷ் பாடியபடி சென்றான்.
ரமேஷ்:டும்டும்டும் டும்டும்டும்பானை போச்சு, சட்டை வந்ததுடும்டும்டும் டும்டும்டும்சட்டை போட்டதும் குளிரு ஓடுதுடும்டும்டும் டும்டும்டும்
ரமேஷ் ஒரு பாலத்தின்மீது நடந்தான். அங்கே ஒரு மனிதன் குளிரில் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தான். அவன் வலியில் துடித்துக்கொண்டிருந்தான்.அவனிடம் ரமேஷ் கேட்டான்:ரமேஷ்: ஐயா, என்ன ஆச்சு? உங்க உடம்பெல்லாம் காயமா இருக்கே.அந்த மனிதன்: நான் என் குதிரையில வந்துகிட்டிருந்தேன், சில திருடங்க வந்து என்னை அடிச்சுப் போட்டுட்டுப் பணத்தையெல்லாம் எடுத்துகிட்டு, என் சட்டையைக்கூடப் பிடுங்கிட்டு ஓடிட்டாங்க.ரமேஷ்: அடடா, முதல்ல இந்தச் சட்டையைப் போட்டுக்கோங்க.
அவன் இப்படிக் கருணையுடன் பேசியது அந்த மனிதனுக்குப் பிடித்திருந்தது. நன்றி சொல்லித் தான் ஓட்டிவந்த குதிரையைக் கொடுத்தான்.ரமேஷுக்கு மிகவும் மகிழ்ச்சி. குதிரையைப் பிடித்துக்கொண்டு பாடியபடி நடந்தான்:ரமேஷ்:டும்டும்டும் டும்டும்டும்சட்டை போச்சு, குதிரை வந்ததுடும்டும்டும் டும்டும்டும்குதிரை யேற வானம் எட்டுதுடும்டும்டும் டும்டும்டும்
இப்போது ரமேஷ் ஒரு திருமண மண்டபத்தை நெருங்கினான். அங்கே எல்லாரும் வருத்தத்தில் அமர்ந்திருந்தார்கள்.ரமேஷ் அவர்களிடம் கேட்டான்.ரமேஷ்: என்னாச்சு? ஏன் எல்லாரும் வருத்தமா இருக்கீங்க?மணமகனின் தந்தை: என் மகனுக்குக் கல்யாணம், ஆனா, அவன் ஏறிப்போகவேண்டிய குதிரை வரலை, அதனால, கல்யாணத்தை எப்படி நடத்தறதுன்னு நாங்க கவலையில இருக்கோம்.
மணமகன்: எனக்கு ஒரு வேகமான குதிரை உடனே வேணும்.மற்றவர்கள்: ஆமா, ஆமா! ஒரு வேகமான குதிரை உடனே வேணும்.
ரமேஷ் உடனே தன்னுடைய குதிரையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டான். எல்லாரும் மிகவும் மகிழ்ந்தார்கள். பதிலுக்கு அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.
யோசனையோடு சுற்றிப் பார்த்தான் ரமேஷ். அங்கே இருந்த மேளம் அவன் கண்ணில் பட்டது.ரமேஷ்: எனக்கு ஒரு மேளம் வேணும், தருவீங்களா?மணமகன் உடனே ரமேஷுக்கு மேளத்தைத் தருமாறு சொன்னான். மேளக்காரனும் சட்டென்று மேளத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டான்.
ரமேஷ் பாடியபடி வீடு திரும்பினான்.டும்டும்டும் டும்டும்டும்அம்மா தந்தது மரக்கட்டை,அதுவோ தந்தது அதிர்ஷ்டத்தை!டும்டும்டும் டும்டும்டும்கட்டை கொடுத்து ரொட்டி வாங்கினேன்டும்டும்டும் டும்டும்டும்ரொட்டி கொடுத்துப் பானை வாங்கினேன்டும்டும்டும் டும்டும்டும்பானை கொடுத்துச் சட்டை வாங்கினேன்டும்டும்டும் டும்டும்டும்சட்டை கொடுத்துக் குதிரை வாங்கினேன்டும்டும்டும் டும்டும்டும்குதிரை கொடுத்து மேளம் வாங்கினேன்டும்டும்டும் டும்டும்டும்உதவி செஞ்சா உலகத்திலேஉயர்வு வரும் பக்கத்திலே!டும்டும்டும் டும்டும்டும்நீங்களும்கூட தெரிஞ்சுக்குங்க,உதவிசெஞ்சு மகிழ்ந்திடுங்க!டும்டும்டும் டும்டும்டும்