echarikkai karunthulai

எச்சரிக்கை! கருந்துளை

சூரியக் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க பூமியிலிருந்து மூன்று நண்பர்கள் ஒரு விண்கலனில் ஏறிச் செல்கிறார்கள். அப்பொழுது திடீரென ஒரு கருந்துளையை நோக்கி இழுக்கப்படுகின்றனர். அவர்கள் தப்பித்தார்களா? இந்த விண்வெளிக் கதையில் என்ன நடக்கிறதென பார்க்கலாம் வாருங்கள்.

- Elavasa Kothanar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இடம்: பூமி. காலம்: 2563ஆம் வருடம்.

மாயாவின் குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு விண்கலன் இருக்கிறது. ஆனால் பெரியவர்களின் துணையின்றி அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அவளுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

ஏவா, மாயாவின் உற்ற தோழி. அவளுக்கு விண்வெளி, வானியல் பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுண்டு. ப்ளூட்டோவைப் பார்க்க வேண்டும் என்பது அவளது ஆசை. மாயா தன்னை விண்கலனில் ப்ளூட்டோவுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று ஏவா விரும்புகிறாள்.

“ப்ளீஸ், எப்படியாவது என்னை அழைத்துச் செல்லேன்” என்று கெஞ்சினாள் ஏவா. “என்னுடைய பெற்றோர் கோபப்படுவார்கள்” எனத் தயங்கினாள் மாயா. “அவர்கள்தான் இந்த வாரயிறுதியில் இங்கு இல்லையே. ப்ளூட்டோவும் அவ்வளவு தூரம் இல்லை. உன்னுடைய பெற்றோர் திரும்பி வருவதற்குள் நாம் திரும்பி வந்துவிடலாம்” என்றாள் ஏவா. மாயா அரை மனதுடன் சம்மதித்தாள். அவளுடைய தம்பி ரேஹானும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். சூடான கோடைக்காலத்தின் இரவுப் பொழுதொன்றில் நண்பர்கள் மூவரும் வானில் பறந்தனர். ஏவா உற்சாகத்தில் துள்ளினாள்.

சூரியக் குடும்பம் பற்றிய தகவல்களை வரிசையாக ஏவா சொல்லிக்கொண்டே வந்தாள். “என்றாவது ஒரு நாள் சூரியன் இறந்து போய்விடும், தெரியுமா?” என்றாள்.

“இருப்பதிலேயே வினோதமான விசயங்களை எல்லாம் சொல்கிறாய், ஏவா. அதெப்படி சூரியன் இறந்துபோகும்?” என்று கேட்டான் ரேஹான்.

“ஹைட்ரஜனை எரித்து ஹீலியத்தை வெளியிடுவதால்தான் சூரியனுக்கு ஆற்றல் கிடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதனுள் இருக்கும் ஹைட்ரஜன் முழுவதுமாகத் தீர்ந்துவிடும்; ஏறக்குறைய 5 பில்லியன் வருடங்களில்” என்றாள் ஏவா.

சூரியனின் அளவிலுள்ள விண்மீன் ஒன்று இறந்தால் அது வெண்குள்ளனாக மாறிவிடும். ஆனால் சூரியனை விட பெரிய விண்மீன் இறந்தால் அது கருந்துளையாக மாறிவிடும் என்றும் ஏவா ரேஹானிடம் சொன்னாள்.

திடீரென அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது. ‘எச்சரிக்கை! எச்சரிக்கை! கனமான பொருளின் ஈர்ப்பால் விண்கலனின் பாதையில் மாற்றம்!’ என விண்கலத்தில் இருக்கும் கணினி சொல்லியது.

நண்பர்கள் மூவரும் மிரட்சியுடன் திரையைப் பார்த்தார்கள். “எனக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்றான் ரேஹான்.

“இங்கு பார். ஒரையன் படிவத்தின் விண்மீன்கள் இப்போது நேர்க்கோட்டில் இல்லை” என்றாள் மாயா.

“நா...நா...நாம் ஒரு கருந்துளையின் அருகே இருக்கிறோம் என நினைக்கிறேன்” என்று மென்று விழுங்கினாள் ஏவா. “தன்னூடாகச் செல்லும் ஒளியை ஒரு லென்ஸ் வளைப்பதுபோல கருந்துளையின் ஈர்ப்பினால் அதன் அருகேயுள்ள விண்மீன்களின் ஒளியும் வளைகிறது” என்றாள்.

‘உறுதிப்படுத்தப்பட்டது. சூரியனைவிட இருமடங்கு கனமான கருந்துளை. நம் விண்கலனின் வேகத்தில் நகர்கிறது. கருந்துளையின் விளிம்பு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்.’

“என்னது? கருந்துளையா?” மாயாவும் ரேஹானும் அதிர்ச்சியடைந்தார்கள்.

“நா...நா...நாம் இங்கிருந்து எ...எப்படியாவது தப்...தப்பித்தாக வேண்டும். கருந்துளையின் அருகே சென்றால் அது நம்மைக் கபளீகரம் செய்துவிடும்” என்று ஏவா திக்கினாள். “ஏன்?” என்று கேட்டான் ரேஹான். “முதலில் இங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைப் பார்ப்போம்” என்ற ஏவாவின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. மாயாவும் பயத்தில் நடுங்கத் தொடங்கினாள். “முழு ஆற்றல்… இரு மடங்கு ஆற்றலைப் பயன்படுத்து. கருந்துளையிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும். வேகத்தை அதிகப்படுத்து. இயக்கிகளின் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்து” என கணினிக்குக் கட்டளையிடத் தொடங்கினாள்.

‘நெருக்கடி நிலை ஊக்கிகள் இயக்கப்படுகின்றன...’ ஆனால் கருந்துளையின் ஈர்ப்பு வலுவாக இருந்தது.

‘கருந்துளையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். விளிம்பு 4 கிலோமீட்டரில்... 3 கிலோமீட்டரில்... 2 கிலோமீட்டரில்...’ “நாம் கருந்துளையிடம் இழுக்கப்படுகிறோம்” என்றாள் மாயா.

திடீரென கணினியிடமிருந்து அறிவிப்பு வந்தது: ‘1 கிலோமீட்டரில் நகராமல் நிற்க வைக்கிறேன். விளிம்பில் இருந்து 500 மீட்டர். அதிகபட்ச ஆற்றல். நிற்க வைக்கிறேன். நிற்க வைக்கிறேன். நிற்க வைக்கிறேன்...’

விண்கலன் அசைவற்று நின்றது.

கருந்துளை விண்கலனை ஒரு பக்கம் இழுக்க, அதி நவீன இயக்கிகள் அதை மறுபுறம் எடுத்துச் செல்ல முயலுவதாய் ஓர் இழுபறி ஆட்டம் நிகழ்ந்துகொண்டு இருந்தது.

கணினி சொல்லத்தொடங்கியது: ‘விலகிச் செல்கிறோம்... விளிம்பில் இருந்து 1 கிலோமீட்டர், 1.5 கிலோமீட்டர், 2 கிலோமீட்டர். கருந்துளையிடமிருந்து விலகுகிறோம்.’

பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டிருந்த நண்பர்கள் விலகி மெதுவாக அவரவர் இருக்கையில் தொப்பென விழுந்தார்கள்.

எப்படியாவது வீட்டுக்கு திரும்பிப் போனால் போதும்!

மாயா, விண்கலன் மீண்டும் சரியான பாதையில்தான் செல்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு, “ஏவா, இப்போது என்னதான் நடந்தது? கருந்துளை என்றால் என்ன?” என்று கேட்டாள்.

ஏவாவிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. “சூரியனை விடவும் அளவில் பெரிய விண்மீன் ஒன்று இறக்கும்போது தனக்குள்ளேயே சிதையத்தொடங்கும்.

படிப்படியாக சுருங்கி ஒன்றுமே இல்லாமல் ஆகி, விண்வெளியில் ஒரு துளை போல ஆகிவிடும். கருந்துளையின் அருகே நேரம் கூட வித்தியாசமாக ஓடும்.

ஒரு நொடி என்பது மற்ற எல்லா இடங்களிலும் ஒன்றாக இருந்தாலும் கூட கருந்துளையின் அருகே வித்தியாசமாக இருக்கும்” என்றாள்.

“நம்முடைய விண்கலன் போன்ற ஒன்று கருந்துளையின் உள்ளே விழுந்துவிட்டால் என்னாகும்?” என்று கேட்டான் ரேஹான்.

“கருந்துளையின் மையத்துக்கு உறிஞ்சி இழுத்துக் கொள்ளப்பட்டு உருக்குலைந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்” என்றாள் ஏவா.

“நிஜமாகவா?” என்று கீச்சிட்டான் ரேஹான். ஒரு பேராபத்தில் இருந்து தப்பித்திருக்கிறோம் என்பதை மாயாவும் ரேஹானும் உணர்ந்து கொண்டார்கள்.

“கருந்துளையிலிருந்து தப்பித்து எதுவுமே வெளியே வர முடியாதா?” எனக் கேட்டாள் மாயா.

வரவே முடியாது என ஏவா தலையசைத்தாள். “கருந்துளையிலிருந்து ஒரு சின்ன ஒளிக்கீற்று கூட வெளியே வர முடியாது. கருந்துளையின் விளிம்பில் இருப்பதுதான் நிகழ்வு எல்லை. இந்த எல்லையைத் தாண்டி கருந்துளைக்குள் என்ன விழுந்தாலும் அதை திரும்பப் பெற முடியாது” என்றாள்.

அதைக் கேட்டதும் ரேஹானின் உடல் நடுங்கியது. ஆனால், மாயாவிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. அவளுக்கு பேரண்டத்தில் எத்தனை கருந்துளைகள் இருக்கின்றன என்று தெரியவேண்டும்.

“அதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது” என்றாள் ஏவா.

“அண்டத்திலுள்ள ஒவ்வொரு ஆயிரம் விண்மீன்களுக்கு ஒரு கருந்துளை இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். இது உண்மையென்றால் நமது பேரண்டத்தில் பல கோடிக்கணக்கான கருந்துளைகள் இருக்கக்கூடும்.”

“சில கருந்துளைகளின் நிறை, நமது சூரியனை ஒத்து இருக்கும். ஆனால் பிற கருந்துளைகள் மிக மிகப் பெரியவை” என ஏவா விளக்கினாள்.

“நமது விண்மீன் திரளின் நடுவே ஒரு பெரிய கருந்துளை இருக்கிறது. அது பல கோடி சூரியன்களை விட அதிக நிறை உடையது” என்றாள் ஏவா.

ரேஹானும் மாயாவும் சற்றே பயந்தார்கள். “கவலைப்படவேண்டாம், அது இங்கிருந்து மிகத்தொலைவில் இருக்கிறது. ஏறக்குறைய சுமார் 30 மில்லியன் பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது” என்றாள் ஏவா.

விண்கலன் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

“சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்” என்றான் ரேஹான்.

“இதோ அருகில் வந்துவிட்டோம்” என்றாள் மாயா.

‘தரையிறங்குகிறோம். பூமிக்கு நல்வரவு’ என்றது கணிணி. மூவரும் நிம்மதியடைந்தார்கள்.

விண்கலன் நின்றவுடன் மூவரும் வெளியே குதித்து மாயா, ரேஹானின் வீட்டு கொல்லைப்புறத்தில் நுழைந்தார்கள். அவர்கள் முகத்தில் அறைந்த குளிர்காற்றால் திடுக்கிட்டார்கள்.

“நாம் இங்கிருந்து கிளம்பும்போது மிகவும் சூடாக இருந்ததுதானே? நாம் கிளம்பிப் போய் ஒரு சில மணி நேரங்கள்தானே ஆகியிருக்கும்...” என்றாள் மாயா.

“மாயா… ரேஹான்… இங்கே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது!” என்றாள் ஏவா. “கருந்துளையின் அருகே நேரம் கூட மற்ற இடங்களை விட வித்தியாசமாகக் கழியும்” என்று ஏவா சொல்ல வந்ததை மாயா சொல்லி முடித்தாள். கருந்துளைக்குள் மாட்டிக்கொள்ளாமல் போராடிய அந்த சில மணி நேரங்களில் பூமியில் ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன.

வார இறுதியை ஒட்டி வெளியே சென்றிருந்த மாயாவின் பெற்றோர்கள் வீடு திரும்பி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. மூவரும் இப்போது ஒரு பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார்கள்!

கருந்துளை என்பது என்ன?

பெரும் விண்மீன்கள் சிதைந்துபோய் கருந்துளைகளாக மாறுகின்றன என்பதை முதன் முதலில் கண்டறிந்தவர் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பேரண்டத்திலேயே அடர்த்தியானவை கருந்துளைகளே. அவற்றை ஒத்த நிறை கொண்ட வேறு எந்தப் பொருளுமே கருந்துளையைவிடக் குறைவான கன அளவு கொண்டதாக இருக்க முடியாது. கருந்துளைக்குள் பொருட்களைப் போட்டால் கருந்துளைகள் பெரிதாகிவிடும். ஆனால் அவற்றைச் சிறியதாக்க பெரும்பாலும் வாய்ப்பே இல்லை.

மூன்று கிலோமீட்டரை விடக் குறைவான ஆரம் கொண்ட கருந்துளைகள், நட்சத்திரங்கள் சிதைவதால் உருவாவதில்லை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், பேரண்டம் உருவானபோது ஏற்பட்ட சின்னஞ்சிறு கருந்துளைகளில் எஞ்சியவை இன்றும் எங்கேயாவது இருக்கக்கூடும்.

நிகழ்வு எல்லை: இதற்குள் சென்று விட்டால் திரும்பி வரமுடியாத எல்லை இது. இக்கோட்டின் வெளிப்புறம் இருக்கும் பொருட்கள் கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து தப்பி விடலாம். ஆனால் இக்கோட்டினைத் தாண்டி உள்ளே செல்பவற்றால் திரும்ப வெளியே வரவே முடியாது.

நிறை: ஏறக்குறைய ஒரு பொருளின் எடை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பொருளை நகர்த்துவது எவ்வளவு கடினம் என்பதன் அளவை.

கருந்துளையின் பண்புகளாக மேற்கூறிய கதையில் குறிப்பிடப்பட்ட வினோதங்கள் அனைத்தும் உண்மைதான். ஆனால், என்னதான் உயர் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் இதுவொரு கற்பனைக் கதைதான்.

ஒரு விண்கலன் ப்ளூட்டோ வரை சென்றுவிட்டு ஒரே நாளில் திரும்பி வரவேண்டுமானால், ஒளியின் வேகத்தில் கால்பங்கு வேகத்தில் (அதாவது நொடிக்கு 75,000 கிமீ) செல்ல வேண்டும். இந்த வேகத்தில் செல்லும்போது சில மணி நேரம் பயணிக்கும் பயணிகள் தங்கள் எடையை விட ஆயிரம் மடங்கு எடையின் விசையால் உந்தப்படுவார்கள். கருந்துளையின் அருகே செல்லும் பொழுது அத்தகைய விசைகள் இன்னும் பலமானதாக இருக்கும். மனித உடல்களினால் இத்தகைய விசைகளை தாங்கிக் கொள்ளவே இயலாது.

மேலும், பூமியில் எவ்வளவு நேரம் கடந்தது என்பது கதைக்காக பெருக்கிக் காட்டப்பட்டுள்ளது.