eli eli

எலி! எலி!

ஒரு வீட்டில் எலி புகுந்துவிடுகிறது. அவ்வளவுதான், வீடே தலைகீழாகத் திருப்பிப்போடப்பட்டு ஒரே களேபரம். அதன்பிறகு என்ன நடந்தது? பரபரப்பான இந்தக் கதையைச் சிறு குழந்தைகள் கும்மாளம் போட்டு ரசிப்பார்கள்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வீட்டுக்குள் எலி ஒன்று புகுந்துவிட்டது. அதை முதலில் பாட்டிதான் பார்த்தார்.

”எலி!” என்று கத்தியபடி அவர் சோஃபா மீது தாவி ஏறிக்கொண்டார்.

அதில் இருந்த குட்டித் தலையணைகள் எல்லாம் கீழே விழுந்தன.

”எங்கே?” என்று கேட்டபடி அப்பா ஜன்னலில் ஏறினார்.

அவர் இழுத்ததில் திரைச்சீலைகள் எல்லாம் கீழே விழுந்தன.

”அங்கே!” என்று கத்தியபடி மேசையின் மீது தாவினார் அம்மா. அதில் இருந்த தட்டுகள் கீழே விழுந்து உடைந்தன.

”எலியைப் பிடி” என்று பூனையைப் பார்த்துக் கத்தினான் மிதுன்.

பூனை எலியைப் பார்த்தது, பின் ஓடிப்போய்க் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டது.

”எலி!” என்று கத்தியபடி பூனைக்குப் பின்னால் ஓடினான் மிதுன்.

”நான் அந்த எலியை விரட்டுறேன்” என்று தைரியமாகச் சொன்னார் அம்மா.

ஒரு துடைப்பத்தை எடுத்து அங்கும் இங்கும் குத்தினார்.

”எலி!” என்றார் அப்பா. ஜன்னலில் இன்னும் கொஞ்சம் மேலே ஏறிக்கொண்டார்.

”உங்களோட இடது பக்கம்!”

பாட்டி எலியைப் பார்த்தார். அவரும் ஓடிவந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டார்.

”அடடா!” என்றார் அப்பா. அதற்கு மேலே அவரால் ஏற முடியவில்லை.

மெதுவாக ஜன்னலில் இருந்து இறங்கினார். எலியின் கண்ணில் படாமல் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டார்!

”எலி! எலி!” என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.

அந்தச் சத்தத்தில் பாப்பா விழித்துவிட்டாள்.

அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கண்களை மெதுவாகத் தேய்த்துக்கொண்டாள்.

அட, அங்கே தலையணையில் என்னது?

அதற்கு இரண்டு கண்கள், நான்கு கால், ஒரு நீண்ட வால் இருந்தது.

”எலி!” என்று மகிழ்ச்சியாக கை தட்டினாள் பாப்பா.

பாப்பா எலியைப் பார்த்தாள், எலி ஓட ஆரம்பித்தது. பாப்பாவும் பின்னாடியே ஓடினாள்!

சோஃபாவில் ஏறி, ஜன்னலில் தாவி, மேசை மேல் குதித்து, தலையணைகளில் உருண்டு...

...திரைச்சீலைகளுக்கு இடையே புகுந்து, தட்டுகளில் தடுமாறி, கதவைத் தாண்டி வெளியே ஓடிவிட்டது!