நேற்றிரவு நான் கண்ட கனவு வினோதமானது. உலக வரைபடத்தில் இருந்த கோடுகள்...
அழுத்தமான கோடுகள்,கருப்புக் கோடுகள். கனமான கோடுகள், பெரிய கோடுகள். ஆழமான கோடுகள், விஷக் கோடுகள்
அவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் அந்தக் கோடுகள்... உருகி மறையத் தொடங்கின. கையிலிருக்கும் நீர் காய்ந்து போவது போல அத்தனை கோடுகளும் காணாமல் போகத் தொடங்கின.
துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், அந்தக் கோடுகளின் இருபுறமும் திகைப்புடன் வாய்பிளந்து நின்றனர்.
துப்பாக்கிகளைத் தூக்கியெறிந்தனர். நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். திடீரென வெடித்துச் சிரித்தனர்.
அங்குமிங்கும் மக்கள் மகிழ்வுடன் இருந்தனர். எங்கெங்கும் கொண்டாட்டங்கள் தொடங்கின. அங்கே எல்லைக் கோடுகள் இருந்தனவா, என்ன?
சிலர் ஈகைத்திருநாள் கொண்டாடினர். சிலர் ஹோலி கொண்டாடினர். குண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை. வண்ணப் பொடிகள்தான் எங்கும் பரவின.
யார் எந்தப் பக்கம்? யாருக்கும் தெரியவில்லை. நமது கிஸ்லய் மாமாவும் குழம்பிப் போனார்.
தலைவர்கள் சிலர் பதற்றமடைந்தனர். சில தலைவர்களோ குழம்பினர். யார் யாரோடு சண்டையிடுவர்? நாம் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது?
அவர்கள் உலக வரைபடத்தையும், கருப்பு மையையும் கையில் எடுத்தனர்.
அவர்கள் மீண்டும் எல்லைக் கோடுகளை வரையத் தொடங்கினர். அழுத்தமான கோடுகள், கருப்புக் கோடுகள். கனமான கோடுகள், பெரிய கோடுகள். ஆழமான கோடுகள், விஷக் கோடுகள்.
ஆனால் அவர்களுக்குத் தெரியாது எங்கு அன்பு, மண்ணெல்லாம் பரவியிருக்கிறதோ எங்கு வண்ணங்கள், சிந்தனைகளை ஊடுருவுகிறதோ எங்கு இதமான அணைப்புகள், நாளைத் துவக்குகின்றனவோ...
அங்கெல்லாம் இந்தக் கோடுகளை வரையவே முடியாது. வண்ணங்களினால் அக்கோடுகள் மறைந்துவிடும். வண்ணங்களினால் அக்கோடுகள் மறைந்துவிடும்.