en nagaram en naaigal

என் நகரம், என் நாய்கள்

மும்பையின் தெருநாய்களைச் சந்திக்க வாருங்கள். தெருக்கள்தான் அவற்றின் விளையாட்டு மைதானம். தெருநாய்கள் மும்பையை தங்கள் சொந்த ஊராகவும் அதன் மக்களை தங்கள் சொந்தமாகவும் ஆக்கிக் கொண்டுள்ளன. இப்புத்தகத்தில் உள்ள படங்கள் நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. நிழற்படங்களை எடுத்தவர் ஹாஸிம் பதானி ஆவார். வரைபடங்களை வரைந்தவர் சுமேதா சா என்பவர்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மும்பை நகரம் முழுக்க மக்கள், ரயில்கள், வாடகைக்கார்கள் போன்றவற்றால் நிரம்பி இருக்கிறது. அதேபோல், நிறைய மகிழ்ச்சியான நாய்களும் மும்பையின் தெருக்களில் வசிக்கின்றன.

அப்படியே நடந்துபோய் மும்பையின் குறுக்கு சந்துகளில் புகுந்து அங்கிருக்கும் தெருநாய்களை சந்திக்கலாம் வாருங்கள்!

ட்ராஃபிக் என்னும் நாய்க்கு போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவப் பிடிக்கும்.

யாராவது போக்குவரத்து விதிகளை மீறினால், ட்ராஃபிக் அவர்கள் வண்டியைத் துரத்திப்போய் அதனருகே நின்றுகொள்வான். அவன் பார்வையிலிருந்து யாருமே தப்புவதில்லை.

சிக்கூ ஒரு திரைப்பட அரங்கத்தின் அருகில் வாழ்கிறான்.

அவன், அரங்கக் காவலாளிகளோடு

சேர்ந்து விளையாடுவான் ; சாப்பிடுவான்.

குளிரான இரவுகளில், தனது காவலாளி நண்பர்கள் தைத்துக்கொடுத்த வெதுவெதுப்பான மேலங்கிக்குள் நுழைந்துகொள்வான்.

பெரியப்பாவுக்குப் பிடித்தமான உணவுகள் இட்லியும் தோசையும்.

தினந்தோறும்   காலை, மதியம் மற்றும் இரவுச் சாப்பாட்டுக்கு மூன்று வெவ்வேறு உணவகங்களுக்குச் செல்வான்! பெரியப்பா எப்போதும் சாப்பிட்டுக் கொண்டோ அல்லது உணவைப் பற்றிக் கனவு கண்டுகொண்டோ இருப்பான்.

சம்ப்பி குழந்தைகள் மட்டைப்பந்தும் கால்பந்தும் விளையாடும் பெரிய மைதானத்தின் அருகில் வசிக்கிறாள்.

கரும்புச் சாறு விற்பவரான மௌர்யாஜிதான் அவளைக் கண்டுபிடித்தார். அப்போது அவர் ’சம்ப்பி’ எனப்படும் தலையைப் பிடித்துவிடும் ‘மசாஜை’ அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அப்படித்தான் சம்ப்பிக்கு இந்தப் பெயர் வந்தது.

ஹோல் குட்டியாக இருந்தபோது, ஒரு தேவாலயத்தின் மேலாளரால் எலிவளையில் இருந்து காப்பாற்றப்பட்டான். எனவே, வளைக்கான ஆங்கில வார்த்தையாக ‘ஹோல்’ என்று அவனை அழைக்க முடிவெடுத்தனர்.

ஹோல் திரையரங்கின் படிகளில் உட்கார்ந்து கொண்டு வாலை ஆட்டி திரைப்படம் பார்க்க வருபவர்களை வரவேற்பான்.

கேப்டன், சச்சின் டெண்டுல்கர் சிறுவனாக இருக்கையில் மட்டைப்பந்து விளையாடிய பூங்காவில் வசிக்கிறான். அவனுக்கு ஓடுவதென்றால் மிகவும் பிடிக்கும்.

கேப்டன் ஆண்டுதோறும் மும்பை மாரத்தானில் கலந்துகொள்பவர்களோடு சேர்ந்து தானும் ஓடுவான். அவன் ஓட்டத்தை முழுமையாக முடித்தும் விடுவான். யாரும் அவனுக்கு பதக்கம் தருவதில்லை. ஆனால் கிடைக்கும் பிஸ்கட்டிலேயே மகிழ்வான்.

போகிக்கு ரயில்களைக் கண்டால் ஒருவிதக் கவர்ச்சி.

அவளை ஒரு ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில்தான் கண்டுபிடித்தனர். போகி சாகசம் தேடி ரயிலில் ஏறிவிட்டிருந்தாள். ஆனால் அவளிடம் டிக்கெட் இருக்கவில்லை.

காலு நகரத்தின் பல பாகங்களுக்கும் தினமும் சென்று வருவான். அவனுக்கு வரைபடம் எதுவும் தேவையில்லை.

சில நாட்களில் கடற்கரையோரமாக நடந்து செல்வான்.

சில நாட்களில் ரயில் நிலையத்துக்குச் செல்வான். ஒருநாள் ஒரு நண்பரைப் பின்தொடர்ந்து செல்லும்போது ரயிலில் தாவி ஏறிக்கொண்டுவிட்டான்!

காளிக்கு குழந்தைகளுடன் விளையாடப் பிடிக்கும். குழந்தைகள் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டால் அனுபவித்து மகிழ்வாள். அவர்களை முதுகில் உட்காரவும் அனுமதிப்பாள்.

தெருவோரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அவளை கவனித்துக்கொள்கின்றனர்.

மும்பையின் நாய்கள்

மும்பையின் தெருக்களை தெருநாய்கள் இல்லாமல் கற்பனை செய்யமுடியாது. இந்த புத்தகத்தில் நீங்கள் பார்த்தவர்கள் மட்டுமல்லாது நிறைய நாய்களை நகரமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பராமரிக்கவும் உணவளிக்கவும் செய்கிறார்கள். அவர்கள், அங்கிருக்கும் காலணி துடைப்பவராகவோ, காவல்காரராகவோ, கடை வைத்திருப்பவராகவோ, தெருவோரம் வசிப்பவராகவோ அல்லது அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவராகவோ இருக்கலாம். காலு, டாமி, ஜூலி போன்ற பெயர்கள் தவிர, ஐஸ்வர்யா, சல்மான், ஷாரூக் என சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும் இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வெல்ஃபேர் ஆஃப் ஸ்ட்ரே டாக்ஸ்(WSD) என்ற மும்பையைச் சேர்ந்த தெருநாய்களின் நல நிறுவனம் கடந்த இருபது வருடங்களாக இந்த நாய்களின் மருத்துவத் தேவைகளையும் தடுப்பூசிகளையும் பார்த்துக்கொள்கிறது.

இப்புத்தகத்தில் உள்ள படங்கள் நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

நிழற்படங்களை எடுத்தவர்  ஹாஸிம் பதானி

வரைபடங்களை வரைந்தவர்  சுமேதா சா