என் பள்ளியின் முதல் நாள் இன்று.என் அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்து வருகிறாள். "நான் பெரியவள், அம்மா! என் கையை விடு!" என்று நான் சொன்னேன்.
பள்ளிக்கு அருகில் பல சிறுவர் சிறுமியர் இருந்தார்கள்.. ஒரு சிலர் பேருந்தில் வந்தார்கள். ஒரு சிலர் காரில் வந்து இறங்கினார்கள். ஒரு சில பேர் ரிக்க்ஷாவிலும், மிதிவண்டியில் பள்ளிக்கு வந்தார்கள். மேலும் ஒரு சில பேர் என்னை போல நடந்து வந்தார்கள்.
பள்ளியின் வாயிற்கதவு அருகில் வந்தவுடன் என் அம்மா என் கையை விட்டாள்.அவள் வாயிற்கதவருகிலேயே நின்றுக்கொண்டாள். நான் இப்பது தனியாக பள்ளிக்கு உள்ளே செல்ல வேண்டும்.என்னைச் சுற்றி பல புதிய முகங்கள் தென்படுகின்றன.
நான் ஒரு அடி எடுத்து வைத்தேன். இன்னொரு அடி எடுத்து வைத்தேன். திரும்பிப் பார்க்கும்போது என் அம்மா சிறிதாகத் தெரிந்தாள். அப்படியே நான் நடந்து செல்ல செல்ல அவள் என் கண்ணில் இருந்து மறைந்து விடுவாளோ?உடனே அவளை நோக்கி திரும்பி ஓடி சென்றுவிட்டேன். இப்போது நான் பெரியவளாகவே உணரவில்லை. அவள் கையைப் பிடித்துக் கொண்டு "என்னை விட்டு போகாதே, அம்மா!" என்று சொன்னேன்.
இப்போது எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு உள்ளே, நான் மட்டும் தான் வெளியே நின்று கொண்டிருக்கிறேன். உள்ளே இருந்த ஆசிரியை வெளியே வந்தார். என்னை பார்த்து சிரித்தார். நானும் பதிலுக்கு சிரித்தேன். அம்மா என்னை பார்த்து, "ராணி! நீ பள்ளி முடிந்து வரும் வரை, நான் இங்கேயே உனக்காக காத்துக்கொண்டிருப்பேன்" என்று சொன்னாள்.அதை கேட்டவுடன் அவள் கையை விட்டேன். நான் செல்வதை பார்த்து அவள் கை அசைத்தாள்.
நான் பள்ளிக்கு உள்ளே ஓடிச் சென்றேன். பள்ளி முடிந்ததும் என் அம்மா வெளியே நின்றுக் கொண்டிருப்பாள்.