திருநீர்மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில் 'கிரெட்னா கிரீன்' என்னுமிடத்தைப் பற்றிச் சொல்கிறார்களே, அந்த மாதிரி நம் தமிழ்நாட்டுக்குத் திருநீர்மலை என்று கேள்விப்பட்டிருந்தேன். தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாட்டை இந்தக் காலத்தில் திருநீர்மலையில் காணலாம் என்றும் சொன்னார்கள். அதாவது காதல் மணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவனும் ஒருத்தியும் திருநீர்மலையைத்தான் சாதாரணமாய்த் தேடி வருவது வழக்கமாம். எனவே அந்த ஊர்க் கோவிலில் அடிக்கடி காதல் திருமணங்கள் நடைபெறுமாம். இக்காரணங்களினால் தான் திருநீர்மலையைப் பார்க்க எனக்கு ஆசை உண்டாகியிருந்தது. எனவே, சமீபத்தில் ஒருநாள் திருநீர் மலையைப் பார்ப்பதற்காகப் பயணம் கிளம்பிச் சென்றேன். 'விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது' என்பார்களே அது மாதிரி, நான் போன சமயம் பார்த்துத் திருநீர்மலை வேறு எங்கேயாவது போயிருக்குமோ என்று கொஞ்சம் மனதில் பயம் இருந்தது. நல்ல வேளையாக திருநீர்மலை அப்படியொன்றும் செய்துவிடவில்லை. திருநீர்மலைக்கோவிலும் ஊரிலேதான் இருந்தது. இன்னும் நான் போன அன்று அந்தக் கோவிலில் ஒரு கல்யாணமும் நடந்தது. கல்யாணம் என்றால் எப்பேர்ப்பட்ட கல்யாணம்? மிகவும் அதிசயமான கல்யாணம். தம்பதிகளையும் புரோகிதரையும் தவிர, ஒரே ஒரு விருந்தாளி தான் கல்யாணத்துக்கு வந்திருந்தது! அந்த விருந்தாளி மணமகனின் தாயார் என்று தெரிந்து கொண்டேன்.
திருமாங்கல்ய தாரணம் ஆகி மற்ற விவாகச் சடங்குகளும் முடிந்த பிறகு, புரோகிதர் "சுவாமி சந்நிதிக்குப் போய் முதலில் நமஸ்காரம் செய்யுங்கள்; அப்புறம் அம்மாவுக்கு!" என்றார். ஆனால், தம்பதிகள் இருவரும் சொல்லி வைத்தாற்போல், அம்மாவுக்கு முதலில் நமஸ்காரம் செய்தார்கள். ஆனந்தக் கண்ணீர் என்பதை அப்போது நான் பார்த்தேன். மணமக்களை அன்புடன் அணைத்து ஆசீர்வதித்த அந்த அம்மாளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. கண்ணீர் என்றால் எப்படி? ஒரே அருவிதான்!
இதையெல்லாம் பார்த்து என்னால் தாங்கவே முடியவேயில்லை. இந்தக் கல்யாணத்தில் ஏதோ விஷயமிருக்கிறதென்றும், அதைத் தெரிந்து கொள்ளாமல் திருநீர்மலையை விட்டுக் கிளம்புவதில்லையென்றும் முடிவு செய்து கொண்டேன். மாப்பிள்ளைப் பையனுடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து சிநேகம் செய்து கொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுடைய வரலாற்றை அறிந்தேன். இதோ அந்த வரலாறு...
சாம்பமூர்த்தி பி.ஏ. அவனுடைய தாயாருக்கு ஒரே பிள்ளை; அவர்கள் பரம ஏழைகள். சாம்பமூர்த்தியினுடைய சிறு பிரயாத்தில் அவன் தாயார் பட்ட கஷ்டங்கள் சொல்லத்தரமல்ல. ஓட்டலில் இட்லிக்கு மாவு அரைத்தும், இன்னும் பிரபுக்கள் வீட்டில் ஊழியம் செய்தும், அவள் காலட்சேபம் நடத்தியதுடன் பிள்ளையையும் படிக்க வைத்தாள். சாம்பமூர்த்தி நல்ல புத்திசாலி. கொஞ்சம் விவரம் தெரிந்ததும், பள்ளிக்கூடத்தில் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டதோடு, அவனை விடச் சின்ன வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினான். வறுமையின் கஷ்டம் எவ்வளவோ இருந்த போதிலும், தாயும் பிள்ளையும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பின் காரணமாக, அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க் கொண்டிருந்தது.
கடைசியாக, அவர்களுடைய தரித்திரம் தீரும் காலமும் வந்தது. பி.ஏ. பரீட்சையில் சாம்பமூர்த்தி முதல் தரமாகத் தேறினான். சுருக்கெழுத்து, டைப் அடித்தல் முதலியவையும் கற்றுக் கொண்டிருந்தான். எனவே, சென்னைப் பட்டினத்தில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு உத்தியோகம் கிடைத்தது. அதாவது, உத்தியோகத்துக்கு உத்தரவு வந்து விட்டது. சென்னைக்குப் போய் ஒப்புக் கொள்வது தான் பாக்கி.
ஊரைவிட்டுப் போகுமுன்னம் சாம்பமூர்த்தி நிச்சயம் செய்து கொள்ள விரும்பிய காரியம் ஒன்றே ஒன்று பாக்கியிருந்தது. அது அவனுடைய கல்யாண விஷயந்தான்.
கல்யாணம் என்றாலே சிக்கலான விஷயம். அதில் காதலும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை.
சாம்பமூர்த்தியின் கல்யாணம் அவ்வாறு சிக்கலடைந்திருந்தது.
ஆமாம்; சாம்பமூர்த்தி காதல் நோய்க்கு ஆளாகியிருந்தான்.
ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு சாம்பமூர்த்தி அவர்கள் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த வக்கீலின் இளம் சகோதரி ஒருத்தியும் வீட்டில் இருந்தாள். அவள் லட்சணமான பெண். எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவள்.
"காதல் ஏன் வளருகிறது? எப்படி வருகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அது தேவ ரகசியம்!" என்று ஒரு பிரசித்தி பெற்ற ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அத்தகைய தேவரகசியமான காரணத்தினாலே, ரங்கநாயகிக்கும் சாம்பமூர்த்திக்கும் காதல் வந்து விட்டது.
வேடிக்கை என்னவென்றால், சாம்பமூர்த்தியும் ரங்கநாயகியும் தங்களை காதல் நோய் பீடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அந்த விஷயத்தை வீட்டிலுள்ள மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்களானாலும் காதலுக்கு வசமாகி விட்டால், அவர்கள் முகத்தில் ஒரு மாதிரி அசடு தட்டி விடுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது அசடு வழியப் பார்க்கிறார்கள்; அசடு வழியப் பேசுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு மாதிரி மாறுதல் அடைந்து காணப்படுகிறார்கள். இதையெல்லாம் மறைத்துக் கொள்ளச் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை.
ரங்கநாயகியின் இந்த நிலைமை வீட்டிலுள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. அதற்கு முன்னாலெல்லாம் ரங்கநாயகி படிப்பிலேதான் அதிக ஆசையுள்ளவளாயிருந்தாள். பள்ளிக்கூடத்து பரீட்சைகளில் முதலாவதாகத் தேற வேண்டுமென்பதே அவளுடைய வாழ்க்கையின் இலட்சியம் போல் தோன்றியது. ஆடை அலங்காரம் முதலியவற்றில் அவள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.
கொஞ்ச காலமாக இந்த நிலைமை மாறி விட்டது. வீட்டிலே ஒரு வருஷத்துக்கு ஆகும்படியாக மை கூட்டி வைத்திருந்தது. அதையெல்லாம் ரங்கநாயகி வழித்து வழித்துக் கண்களில் பூசிக் கொண்டு தீர்த்து விட்டாள். அது மாதிரியே சோப்புக் கட்டிகள், பவுடர் பெட்டிகள், கூந்தல் தைலங்கள் எல்லாம் மளமளவென்று தீரத் தொடங்கின. தினசரி அலங்காரத்துக்கு அதிக நேரம் செலவாயிற்று. நெற்றியில் பொட்டு, சிறிதாயும், பெரிதாயும், நீளமாயும், அகலமாயும், உயரமாயும் - இப்படிப் பல உருவங்கள் எடுத்தது.
இவ்வாறெல்லாம் ரங்கநாயகி தன்னை அழகு செய்து கொள்வதற்கும், சாம்பமூர்த்தி பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வருவதற்கும் ஒரு வகையான சம்பந்தம் இருப்பதை வீட்டார் சீக்கிரத்தில் கண்டு கொண்டார்கள்.
இன்னும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சாம்பமூர்த்திக்குக் கவனக்குறைவு ஏற்பட்டதையும் அவர்கள் கவனித்தார்கள். பாடத்தைக் கவனித்துப் படிக்கும்படி சாம்பமூர்த்தி பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பிள்ளைகள் "என்ன ஸார்! பாடத்தைக் கவனிக்காமல் எங்கேயோ பார்க்கிறீர்களே?" என்று கேட்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் முடிவான பலன் என்ன ஆயிற்று என்றால், வீட்டு எஜமான், சாம்பமூர்த்தியிடம், "பிள்ளைகளுக்குப் பாடமெல்லாம் வந்து விட்டது; நீர் சொல்லிக் கொடுத்தது போதும்" என்று சொல்லி, அவனை நிறுத்தி விட்டார்.
சாம்பமூர்த்தி, ரங்கநாயகி இரண்டு பேருக்குமே அப்போது தான் தங்களுடைய வியாதி எவ்வளவு தூரம் முற்றிப் போயிருக்கிறது என்று தெரிய வந்தது. ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் உயிர் வாழ முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். உயிர் வாழ்வதே முடியாத காரியம் என்றால், சாம்பமூர்த்தி சென்னைப் பட்டணத்துக்குப் போய் உத்தியோகம் பார்ப்பது எப்படி?
அப்போதுதான் ரங்கநாயகி, தான் படித்த பெண், அதோடு மேஜரானவள் என்பதை நினைவு கூர்ந்தாள். பெண் சுதந்திரத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிக்காண்பிக்க ஆரம்பித்தாள். அவளுடைய தமையனாரிடம் தனக்காக அவன் வரன் தேட வேண்டிய அவசியம் இல்லையென்றும் சாம்பமூர்த்தி மேல் தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரையே தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் மனம் விட்டுச் சொன்னாள். இதை யார் ஆட்சேபித்த போதிலும், தான் பொருட்படுத்தப் போவதில்லையென்றும் கண்டிப்பாகத் தெரியப்படுத்தினாள்.
இதெல்லாம் சாம்பமூர்த்திக்கு ஒருவாறு தெரிந்த போது, அவனும் தைரியத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். (தைரியம் என்பது இங்கே பேனாவைக் குறிக்கும்) ரங்கநாயகியின் தமையனுக்கு ஒரு கடிதம் எழுதினான். ரங்கநாயகியைத் தான் காதலிப்பதாகவும், வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் வைத்துக் காப்பாற்றுவதாகவும், அவளைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் மரியாதையாகக் கேட்டுக் கொண்டான். அதோடு, ரங்கநாயகியும் தன்னைக் காதலிக்கிறபடியால், மனமொத்த தங்களுக்கிடையில் குறுக்கே வந்து நிற்பதற்கு யாருக்குமே பாத்தியதை கிடையாது என்பதையும் குறிப்பிட்டிருந்தான்.
மேற்படி கடிதம் எழுதிச் சில நாள் வரையில் அதற்குப் பதில் வருமென்று சாம்பமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் வராமற் போகவே, நேரிலேயே பதிலைத் தெரிந்து கொண்டு திரும்புவதென்று சாம்பமூர்த்தி வக்கீல் வீட்டுக்குக் கிளம்பினான்.
வக்கீல் வீட்டு வாசலை அடைந்ததும், சாம்பமூர்த்திக்கு உள்ளே ஏதோ ரகளை நடந்து கொண்டிருக்கிறதென்று தெரிய வந்தது. நாலைந்து பேர் சேர்ந்தாற் போல் பேசுகின்ற சத்தம் கேட்டது. அந்த இரைச்சலுக்கிடையே ஒரு விம்முகின்ற குரல் - ஆங்காரம் நிறைந்த குரல் - சாம்பமூர்த்தியின் காதில் விழுந்தது; அவனுடைய நெஞ்சைப் பிளந்தது. அந்தக் குரல் ரங்கநாயகியினுடையதுதான் என்று சொல்ல வேண்டுமா?
ஒரு கண நேரத்திற்குள் சாம்பமூர்த்தி உள்ளே நடப்பது என்னவென்பதைக் கற்பனை செய்து கொண்டான். ரங்கம் தன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் பிடிக்கிறாள். மற்றவர்கள் கூடாது என்று சொல்லி அவளை வற்புறுத்துகிறார்கள்! இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தன்னுடைய கடமை என்னவென்பதை நிர்ணயிக்கவும் அவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ரங்கநாயகிக்குத் துணையாகப் போய் அவள் அருகில் நிற்க வேண்டியதுதான்; நின்று, அவளைச் சுற்றியுள்ள துஷ்ட மிருகங்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியதுதான்; சந்தேகம் என்ன?
இலேசாகச் சாத்தியிருந்த வாசற் கதவைப் படீரென்று திறந்து கொண்டு சாம்பமூர்த்தி உள்ளே போனான். ஏறக்குறைய அவன் எதிர்பார்த்தக் காட்சிதான் அங்கே காணப்பட்டது. ரங்கநாயகி கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் மையுடன் கலந்து வழிந்து கொண்டிருந்தது. வக்கீல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவி, வயதான விதவை அத்தை, அக்கா, அத்திம்பேர் ஆகியவர்கள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் பயந்த தோற்றத்துடன் அங்குமிங்கும் நின்றார்கள்.
இதையெல்லாம் ஒரு கண நேரத்தில் சாம்பமூர்த்தி பார்த்தான். சகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, "அட பாவி! என்னை விபச்சாரி என்றா சொன்னாய்?" என்று கேட்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வந்த்து. அந்தக் காட்சியில் சகுந்தலையின்மேல் தனக்கு ஏற்பட்ட இரக்கம், துஷ்யந்தன் மேல் உண்டான கோபம் எல்லாம் அப்படியே உள்ளத்தில் தோன்றின. சகுந்தலைக்கு அச்சமயம் தன்னால் உதவியொன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், இப்போது ரங்கநாயகிக்கு உதவி செய்யும் சக்தி தன்னிடம் இருக்கிறது. அவளை அந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியது தன்னுடைய கடமை. இப்படியெல்லாம் சில விநாடி நேரத்திற்குள் சாம்பமூர்த்தி சிந்தித்துத் தீர்மானித்துக் கொண்டு ரங்கநாயகிகு எதிரே போய் நின்று, அவளுடைய முகத்தைக் கம்பீரமாய்க் கருணை ததும்ப நோக்கினான்.
"ரங்கம், இவர்கள் உன்னை..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
சாம்பமூர்த்தி வந்ததிலிருந்தே, அங்கிருந்தவர்கள் அவ்வளவு பேருடைய முகமும் ஒரு மாதிரியாகி விட்டது. ரங்கநாயகியும் சட்டென்று தலைகுனிந்து சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
சாம்பமூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே அவள் பளிச்சென்று தலை நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு விம்முகின்ற குரலில், "சார்! இவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினாள்.
இதற்குள் வக்கீல், கோபமான குரலில் "ரங்கம்! உனக்கு என்ன பைத்தியமா? இவனிடம் என்ன சொல்லப் போகிறாய்?" என்றார்.
ரங்கநாயகி இன்னும் ஆத்திரத்துடன் "ஆமாம், நீங்கள் சொன்னதைத்தான் சொல்லப் போகிறேன். ஏன் மறைக்க வேண்டும்? ஸார்! இவர்கள் எல்லாரும் உங்கள் தாயாரைப் பற்றி அவதூறு சொல்கிறார்கள். உங்கள் தாயார் நடத்தைப் பிசகு உள்ளவராம். இன்னும்...இன்னும்... அவர் விதந்துவான பிறகு உங்களைப் பெற்றாராம். இந்தமாதிரி அபாண்டமான பொய் சொல்லுகிறவர்களிடம் நான் எப்படி இருப்பேன்? என்னை உடனே அழைத்துப் போங்கள்!" என்றாள்.
இந்தக் கர்ண கொடூரமான வார்த்தைகளை ரங்கநாயகி சொல்லி முடித்த போது அங்கே எல்லையற்ற நிசப்தம் குடி கொண்டது.
எல்லோரும் ஒரேயடியாகச் சாம்பமூர்த்தியின் முகத்தை நோக்கினார்கள். அந்த முகத்தில் சொல்ல முடியாத குரோதம் பொங்கிற்று. அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
வக்கீல், 'இன்று இங்கே கொலை விழப் போகிறது!' என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படிச் சொல்லி அனுப்புவதென்று யோசிக்கத் தொடங்கினார்.
சாம்பமூர்த்தி ஏதோ பேசுவதற்கு முயன்றான். ஆனால், வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை.
அடுத்த வினாடி அவனுடைய முகம் தொங்கி விட்டது. முகத்தில் தோன்றிய குரோதமும் வேதனையாக மாறியது.
ஒரு நிமிஷம், இவ்விதம் சாம்பமூர்த்தி நின்று கொண்டிருந்தான். பிறகு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் யாருடைய முகத்தையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வீட்டு வாசற்படியைக் கடந்த போது, "இப்போது என்ன சொல்கிறாய் ரங்கம்!" என்று வக்கீலின் குரல் கேட்டது. யாரோ சிரிக்கும் சத்தமும் கேட்டது. சிரிப்புக்கு நடுவில் விம்மல் ஒலியும் கலந்து வந்தது.
சாம்பமூர்த்திக்குத் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தது எப்படியென்றே தெரியாது. வீட்டு வாசலை அடைந்ததும் தான் அவனுக்குக் கொஞ்சம் சுய நினைவு வந்தது. வீட்டுக்குள் நுழைந்து ரேழித் திண்ணையில் குப்புறப் படுத்துக் கொண்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்ற போது அது விம்மலாக வெளிப்பட்டது. அவனுடைய உடம்பைத் தூக்கித் தூக்கிப் போட்டது.
சற்று நேரத்துக்கெல்லாம் அவன் தாயார் அங்கே வந்தாள். குப்புறப் படுத்துக் கிடந்த புதல்வனைப் பார்த்தாள். கல்லும் கனியும் குரலில், "அப்பா! குழந்தை!" என்று சொல்லிக் கொண்டு, அவன் முதுகின் மேல் கையை வைத்துத் தடவிக் கொடுக்கப் போனாள்.
சாம்பமூர்த்தி வெடுக்கென்று அவளுடைய கையைப் பிடித்துத் தள்ளினான். மறுபடியும் பலமாகக் குப்புறப்படுத்துக் கொண்டான்.
தாயார் திடுக்கிட்ட குரலில் "குழந்தை! இதென்ன? ஏன் அழுகிறாய்? என் பேரில் என்ன கோபம்? நான் என்ன செய்தேன்?" என்றாள்.
சாம்பமூர்த்தி சட்டென்று எழுந்து உட்கார்ந்து, "என்ன செய்தாயா? என்னை எதற்காகப் பெற்றாய்?" என்று கத்தினான். கத்திவிட்டுத் தன் தலையில் இரண்டு தடவை அடித்துக் கொண்டான்.
தாயார் திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
சாம்பமூர்த்தி மேலும், "இந்த அவமானத்தை என்னால் இனி மேல் சகிக்க முடியாது. தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போகிறேன்" என்று கத்தினான்.
தாயார் வேதனை நிறைந்த குரலில் "குழந்தை! இது எனக்கு வேண்டியதுதான்" என்றாள்.
சாம்பமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் கண்களில் இரண்டு துளி ஜலம் துளித்து நிற்பதைக் கண்டான்.
"ஐயோ! அம்மா! உன்னைப் பற்றி ஏன் இப்படிச் சொல்லுகிறார்கள்" என்று அலறினான்.
தாயார் அவனை உற்றுப் பார்த்து, "குழந்தை! அவர்கள் வீட்டுக்குப் போனாயா? அவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ன சொன்னார்கள்?" என்று கேட்டாள்.
"என்னத்தைச் சொன்னார்கள்? ஊரிலே எல்லோரும் சொல்வதைத்தான் அவர்களும் சொன்னார்கள்."
"குழந்தை! ஊரிலே எல்லோரும் என்ன சொல்கிறார்கள்! அதைத்தான் சொல்லேன்!" என்றாள் தாயார்.
"என் வாயால் சொல்லச் சொல்கிறாயா? சரி சொல்கிறேன். 'எனக்குத் தகப்பனார் யார் என்று தெரியாது' என்று சொல்கிறார்கள். 'நீ விதந்துவான பிறகு என்னைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.' போதுமா? இன்னும் சொல்ல வேணுமா?" என்று சாம்பமூர்த்தி கூறித் தலையில் இன்னும் நாலு தடவை அடித்துக் கொண்டான். மறுபடியும் குப்புறப்படுத்துக் கொண்டான்.
இத்தனை நேரமும் நடையில் நின்று கொண்டிருந்த தாயார் திண்ணையில் சாம்பமூர்த்தியின் காலடியில் உட்கார்ந்தாள். தலைகுனிந்து முகத்தை வைத்துக் கொண்டு சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு தலையை நிமிர்த்திக் கொண்டு, "குழந்தை! சம்பு! எழுந்து உட்கார்! எத்தனையோ நாளாக உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று இருந்தேன். தைரியம் வரவில்லை. இப்போது கட்டாயம் சொல்ல வேண்டும் சமயம் வந்து விட்டது குழந்தை! எழுந்து உட்கார்ந்து கேள்!" என்றாள்.
சாம்பமூர்த்தி பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். "என்ன? உண்மையைச் சொல்லப் போகிறாயா! - என்ன உண்மை? ஐயோ! அவர்கள் சொன்னது நிஜந்தானா?" என்றான்.
அன்னை முன்பைவிட அதிக சாந்தத்துடன் கனிந்த குரலில், "குழந்தை! ஏன் பதறுகிறாய்? கொஞ்சம் பொறுமையாகக் கேள்!" என்றாள்.
"பொறுமையா? என்னைப் பொறுமையாயிருக்கச் சொல்கிறாயா? கடவுளே!"
"ஆமாம், சாம்பு! பொறுத்துத்தான் ஆக வேண்டும். கடவுள் எழுதின எழுத்தை அழித்து எழுத முடியுமா!"
"கடவுள்! கடவுள்! கடவுள் ஒருவர் இருக்கிறாரா! இருந்தால் என்னத்திற்காக அவளை நான் சந்திக்கும்படி செய்கிறார்! பிறகு இப்படிக் கொடூரமாகப் பிரிக்கிறார்? என்னத்திற்காக என்னை உயிரோடு வைத்திருக்கிறார்? டைபாய்டு சுரம் வந்ததே? அதிலேயே கொண்டு போயிருக்கக் கூடாதா?" என்று அலறினான் சாம்பமூர்த்தி.
தாயார் எங்கேயோ தொலை தூரத்திலுள்ள எதையோ பார்ப்பவள் போல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். சாம்பமூர்த்தியைத் திரும்பிப் பார்த்து, "ஆமாம் சாம்பு! உனக்கு டைபாய்டு சுரம் வந்த போது கடவுள் உன்னைக் கொண்டு போகத்தான் பார்த்தார். நான் தான் குறுக்கே நின்று காப்பாற்றினேன். இருபத்தொரு நாள் இராத் தூக்கம் - பகல் தூக்கம் இல்லாமல் கண் விழித்தேன். டாக்டர்கள் கூடக் கைவிட்டு விட்டார்கள் இன்னும் அரை மணி நேரந்தான் என்று கெடு விதித்தார்கள். நான் உன்னை விடமாட்டேன் என்றேன். நீ அப்போது கண்ணை மூடியிருந்தால் அரை நாழிக்குள் என் உயிரும் போயிருக்கும். இன்றைக்கு இந்த மாதிரி வார்த்தை உன்னிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை" என்றாள்.
சாம்பமூர்த்தி "ஐயோ! அம்மா! அதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்?" என்றான். அவன் குரலில் முன் போன்ற வெறியில்லை; சிறிது சாந்தம் ஏற்பட்டிருந்தது.
அவன் சொன்னது காதிலே விழாதவள் போல் தாயார் மேலும் சொன்னாள் "டைபாய்டு சுரம் வந்த போது மட்டுந்தானா? பதினோரு வயதில் உனக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. முப்பத்தைந்து நாள் கிடந்தாய். அப்போதும் யமன் வாயிலிருந்து காப்பாற்றினேன். அதற்கு முன்னால், உன் மூன்றாவது வயதில் கட்டி விழுந்தது. இரண்டரை வருஷம் ஆயிற்று குணமாவதற்கு. அந்த இரண்டரை வருஷ காலமும் நான் தேடிப் போகாத வைத்தியனில்லை. நான் வேண்டிக் கொள்ளாத கோவிலும் தெய்வமும் இல்லை. உன் அப்பா தொலைத்தது போக பாக்கியிருந்த சொத்தெல்லாம் அந்த இரண்டரை வருஷத்தில் தான் போயிற்று. கட்டிகரைந்தது போல் சொத்தும் கரைந்து விட்டது" என்றாள்.
"என் அப்பா... என் அப்பா..." என்று சாம்பமூர்த்தியின் வாய் முணுமுணுத்தது.
"ஆமாம் குழந்தாய்! உன் அப்பாதான்!"
"அப்படியானால், ஊரார் சொல்வதெல்லாம் பொய்தானே, அம்மா!" என்று சாம்பமூர்த்தி அளவற்ற ஆவலுடன் கேட்டான்.
"பொய்யோ! நிஜமோ? இந்த உலகத்தில் எது பொய், எது நிஜம் யாருக்குத் தெரியும்? நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன், சாம்பு! அப்புறம் நீயே பொய் எது, நிஜம் எதுவென்று தீர்மானித்துக் கொள். எங்கே ஆரம்பிக்கிறது, எப்படிச் சொல்கிறது என்று தெரியாமல் திண்டாடுகிறேன்" என்றாள் தாயார்.
பிறகு, இவ்விதமாக ஆரம்பித்தாள்.
"உன் அப்பாவுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்த போது நான் ஓட்டலில் மாவு அரைக்கும் படியான கதிக்கு வருவேன் என்று என் அப்பாவும் அம்மாவும் சொப்பனத்தில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பெண். அப்பா பணக்காரர். கிராமத்தில் ஐம்பது காணி நிலமும், இன்னும் நிறையச் சொத்துக்களும் இருந்தன. அந்தச் சொத்தெல்லாம் எனக்குத்தானே என்று சொத்து இல்லாவிட்டாலும் படித்த பிள்ளையாயிருக்க வேண்டுமென்று வரன் பார்த்தார்கள். கடைசியில் உன் அப்பாவுக்குக் கொடுத்தார்கள். அவர் உன்னைப் போலவே பி.ஏ. பரீட்சை தேறியிருந்தார். கல்யாணம் ரொம்பப் பிரமாதமாக நடந்தது."
அவர்களுடைய இல்வாழ்க்கையானது ஆனந்தமயமாக இருந்தது. அனந்தராமன் பி.ஏ சில காலம் தாலுகா குமாஸ்தா வேலை பார்த்து விட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆனார். மேலே மேலே உத்தியோக உயர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமையில் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைப் பார்த்துவிட்டுச் செல்லம்மாளின் தாயும் தகப்பனும் காலமானார்கள். செல்லம்மாளுக்கு ஏராளமான மஞ்சட் காணி சொத்தையும் வீட்டுத் துணைக்கு வயதான அத்தை ஒருத்தியையும் அவர்கள் வைத்து விட்டுப் போனார்கள்.
அதற்குப் பிறகு இன்னும் சில காலம் செல்லம்மாளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்து வந்தது. நாளாக ஆக, அவளுடைய மனத்திற்குள்ளே மட்டும் ஒரு அந்தரங்க வேதனை தோன்றத் தொடங்கியது. குழந்தையில்லையே என்ற வேதனைதான் அது. அத்தைக் கிழவி இந்த வேதனைக்கு அடிக்கடித் தூபம் போட்டு வளர்த்து வந்தாள். "அடிப் பெண்ணே! என் கண்ணை மூடுவதற்குள் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து பார்க்க மாட்டேனா?" என்று அவள் அடிக்கடி பிரலாபிப்பாள். அதைக் கேட்க கேட்கச் செல்லம்மாளுக்கு என்னமோ செய்யும். பகலிலும் இரவிலும் குழந்தையைப் பற்றியே நினைக்கவும் கனவு காணவும் தொடங்கினாள்.
அண்டை அயல் வீட்டுக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு ஒரு பக்கத்தில் எல்லையற்ற வாஞ்சை உண்டாகும். இன்னொரு பக்கத்தில் காரணமில்லாமல் கண்ணில் ஜலம் துளிக்கும்.
இப்படி இருக்கும் சமயத்தில், அவளுடைய வாழ்க்கையே பாழாக்கும்படியான இடி விழுந்தது.
அனந்தராமன் மேல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் ஏற்பட்டது. வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டதுடன் மேலே கிரிமினல் வழக்கும் நடந்தது. வழக்கு ஹைக்கோர்ட்டு வரையில் போய் முடிவதற்குள் மூன்று வருஷம் ஆயிற்று. கடைசியில் தண்டனை ஒன்றுமில்லாமல் உத்தியோகம் போனதுடன் அனந்தராமன் தப்பி வந்து சேர்ந்தான். இதற்குள்ளாக செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தில் பாதி போய்விட்டது.
உத்தியோகம் போன பிறகு அனந்தராமன் வீட்டில் சுகமாயிருந்து கொண்டு காலட்சேபம் நடத்தியிருக்கலாம். பாக்கி அவ்வளவு சொத்து. ஆனால் புருஷன் சம்பாத்தியம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது என்னும் விஷயம் அனந்தராமனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே வியாபாரத்துறையில் இறங்கினான். வியாபாரம் என்றால் கேவலம் ஜவுளிக்கடை, மளிகைக் கடை வைக்க அவன் விரும்பவில்லை. கமிஷன் எஜென்ஸி தொழிலில் புகுந்தான். பல சாமான்களுக்கு ஏஜென்ட் ஆனான். முதலில் ஜில்லாக்களுக்கு ஏஜென்ஸி எடுத்து, பிறகு தென் இந்தியா முழுவதற்குமே அனந்தராமன் ஏஜென்ஸி எடுத்துக் கொண்டான். இதனால் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஏஜென்ஸி தொழில் மேலும் மேலும் அபிவிருத்தியடைந்தது. இதனால் மூலதனமும் அதிகமாகவே தேவையாயிற்று. செல்லத்தின் மஞ்சட்காணிச் சொத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. வியாபார விருத்திக்காக நிலத்தை மேலும் மேலும் விற்க வேண்டியதாயிற்று.
இதற்கிடையில், செல்லத்தின் அத்தை, "அடி பெண்ணே! உன் வயிற்றில் ஒரு குஞ்சு பிறந்து நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? எனக்குக் கண் பார்வை மங்கி வருகிறதே!" என்று பிரலாபித்துக் கொண்டேயிருந்தாள்.
இந்த அத்தைக்கு மைத்துனன் பிள்ளை ஒருவன் இருந்தான். அத்தைக் கண்ணை மூடினால் இவன் தான் கர்மம் செய்ய வேண்டியவன். எனவே, தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்குரிய காலம் சமீபித்து விட்டதா என்று பார்க்கும் பொருட்டு, இவன் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து போவது வழக்கம்! அப்போதெல்லாம் செல்லத்தினிடம் உறவு கொண்டாடுவான். செல்லமும் அவனை அத்தான் என்று அழைத்துப் பிரியமாயிருப்பாள். சில சமயம் அவனுடைய நடவடிக்கை வரம்பு கடந்ததாக அவளுக்குத் தோன்றும். அவனுடைய பார்வையும் பேச்சும் விரஸமாகத் தோன்றும். ஆனாலும் தன்னிடம் உயிருக்குயிராயிருந்த அத்தையை உத்தேசித்து, அத்தானுடைய அசந்தர்ப்ப நடவடிக்கைகளையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து வந்தாள்.
கடைசியில், இந்த அத்தான் தான் இடியிலும் பேரிடியான செய்தியைக் கொண்டு வந்தான்.
முதலில் அவன் அதைச் செல்லம்மாளிடம் நேரில் சொல்லவில்லை. அத்தையிடம் கொஞ்சம் கொஞ்சமாக வத்தி வைத்தான். அதாவது, அனந்தராமன் வியாபார அலுவல் என்பதாகச் சொல்லிக் கொண்டு வெளியூருக்குப் போவதெல்லாம் வெறும் பொய் என்றும், தஞ்சாவூரில் ஒரு மாயமோகினியின் வலையில் அவன் விழுந்து விட்டதாயும் செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சொன்னான். அத்தையும் பிள்ளையும் அடிக்கடி காதைக் கடித்துக் கொள்வதையும் 'ஐயோ! இந்த அசட்டுப் பெண் இப்படிப் பேசாமல் இருக்கிறாளே!' என்று அங்கலாய்ப்பதையும் சில காலம் வரையில் செல்லம் சகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் என்னவெல்லாமொ சந்தேகங்கள் கொந்தளிக்கத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் அத்தானைக் கேட்டே விட்டாள். விஷயம் தெரிந்ததும் அவள் மகா ஆக்ரோஷத்துடன், "இப்படியெல்லாம் நீ அவர் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்வதாயிருந்தால், இனிமேல் இங்கே வரவேண்டாம்!" என்றாள். அத்தான் பிரமித்தவன் போல் நின்று, "நானா? நானா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறேன்? கடைசியில் நானா பொல்லாதவனாய்ப் போய்விட்டேன்? உண்மையும் பொய்யும் ஒரு நாளைக்கு உனக்கே தெரியப் போகிறது. அது வரையில், நான் இங்கே தலைகாட்டுவதில்லை" என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு அத்தையின் புலம்பல் அதிகமாயிற்று. "அடி பெண்ணே! உன் தலையில் இப்படியா எழுதியிருந்தது?" என்று ஓயாமல் அங்கலாய்க்கத் தொடங்கினாள். செல்லத்துக்கோ, அப்புறம் ஒரு வினாடி கூட மன அமைதி இல்லாமற் போயிற்று. அத்தான் மேல் அவள் எரிந்து விழுந்த போதிலும் அவன் சொன்னது உண்மைதான் என்று அவள் உள் மனத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று. மறுபடியும் அத்தானை வரவழைக்க வேண்டும் அவரைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கத்தில் மனம் துடித்தது. இன்னொரு பக்கம் தன்னுடைய அருமைத் தகப்பனார் கொடுத்த மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் இப்படியா பாழாய்ப் போய் கொண்டிருக்கிறது என்று எண்ணிய போது அவள் நெஞ்சம் கொதித்தது. தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் யாருக்குத் தத்தம் செய்திருந்தாளோ, யாரைத் தெய்வமாக எண்ணிப் பூசித்தாளோ, இம்மைக்கும் மறுமைக்கும் தன்னுடைய ஒரே கதியென்று யாரை நம்பியிருந்தாளோ அந்தப் புருஷன் இப்படித் தன்னை வஞ்சித்து வருகிறான் என்று எண்ணிய போது அவளுடைய இருதயம் 'படீர்' என்று வெடித்துவிடும் போலிருந்தது. மற்றொரு சமயம் அவரை இவ்விதம் மருந்து வைத்து மயக்கி விட்ட மாயக்கள்ளியைக் கொன்று விட வேண்டுமென்று ஆத்திரம் உண்டாயிற்று.
அத்தான் மறுபடியும் ஏதோ வியாஜம் வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இந்தத் தடவை செல்லம்மாளே அவனிடம் எல்லா விபரமும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.
அடுத்த தடவை அனந்தராமன் வீட்டுக்கு வரும் போது, "உங்களுக்கு நான் வேண்டுமா? அவள் வேண்டுமா?" என்று கண்டிப்பாய்க் கேட்டுவிடச் செல்லம்மாள் தீர்மானித்துக் கொண்டாள். அவர் சரியான பதில் சொல்லாவிட்டால், அத்தையுடன் தன்னுடைய பிறந்த ஊருக்குப் போய் பிதிரார்ஜித வீட்டில் தனியாக இருப்பதென்றும் முடிவு செய்து கொண்டாள்.
ஆனால், அனந்தராமன் அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது செல்லம்மாள் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவன் வரும் போதே 104 டிகிரி சுரத்துடன் வந்தான். வந்து படுத்தவன் படுத்தவன் தான். இருபது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். செல்லம்மாள் அந்த இருபது நாளும் இராப் பகல் அவன் அருகிலேயே இருந்து சிச்ரூஷை செய்தாள். கழுத்துச் சங்கிலியை விற்று டாக்டர்களுக்குப் பணம் கொடுத்தாள். ஒன்றும் பிரயோஜனப் படவில்லை. இருபத்தோராம் நாள் அனந்தராமன் கண்ணை மூடினான். அந்த மகா உத்தமியின் உள்ளத்தில் தான் குத்திய முள்ளின் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே உயிரை விட்டான். கடைசி காலத்தில், அவன் ஏதோ செல்லத்திடம் அந்தரங்கமாய்ச் சொல்ல விரும்பியது போல் தோன்றியது. ஆனால் அதற்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ, அல்லது அவனுக்குத் தான் தைரியம் உண்டாகவில்லையோ, தெரியாது. அவன் ஒன்றும் சொல்லவும் இல்லை. செல்லம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை
அனந்தராமன் காலமான பிறகு அவனுக்குச் செய்ய வேண்டிய உத்திரக்கிரியைகளையெல்லாம் செல்லம் நடத்தியதுடன், அவன் பட்டிருந்த கடன்களையெல்லாம் தீர்த்தாள். எல்லாம் போக கடைசியில் சொற்பச் சொத்துத்தான் மிஞ்சியது. அதை வைத்துக் கொண்டு கிராமத்தில் நிம்மதியாய்க் காலங் கழிக்கலாமென்று சென்றாள்.
ஆனால், 'நிம்மதி' மட்டுந்தான் ஏற்படவில்லை. தெய்வமென்று போற்றிய கணவன் தனக்குச் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து, அவள் மனம் புண்ணாயிற்று. தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்காமல் போன துரதிர்ஷ்டத்தை நினைத்து அவள் வேதனை அடைந்தாள். கடவுளை நொந்து கொண்டாள். இவையெல்லாவற்றையும் விட, தன் பதியின் உள்ளத்தைத் தன்னிடமிருந்து திருடிக் கொண்ட மாயக்கள்ளி யார்? அவள் எப்படியிருப்பாள்? தன்னிடம் இல்லாத வசீகரம் அவளிடம் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள, அவள் மனம் துடித்துக் கொண்டேயிருந்தது.
அப்புறம் அத்தான் இரண்டொரு தடவை வந்தான். செல்லம்மாளிடம் மிகுந்த அநுதாபங் காட்டியதுடன், "இப்பேர்ப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்த பாவி"யைப் பற்றி இடித்துக் காட்டினான். அனந்தராமனுக்குச் செல்லம்மாள் எவ்விதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்தக் காலத்தில் விதவா - விவாகம் சாதாரணமாய் நடக்கிறதென்பதையும், ஜாடைமாடையாய்க் குறிப்பிட்டு வந்தான்.
ஆனால், செல்லம்மாளோ அவனை விஷம் போல் வெறுக்க ஆரம்பித்தாள். தன்னுடைய மனம் இப்போது நிம்மதியில்லாமல் தவிப்பதற்கெல்லாம் காரணம் அத்தான் தான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியிருந்தது. அவனை யார் சனீசுவரன் மாதிரி அந்தத் தஞ்சாவூர்க்காரியைப் பற்றிச் சொல்லச் சொன்னது? அவன் சொல்லாமலிருந்தால் தான் புருஷனிடம் கொண்டிருந்த பக்தியில் சிறிதும் களங்கம் ஏற்படாமல் இருந்திருக்குமல்லவா? இப்போது இம்மாதிரி தன் உள்ளத்தை அரித்து எடுத்துக் கொண்டிருக்காதல்லவா?
ஒருநாள் செல்லம்மாள் இந்த ஆத்திரத்தையெல்லாம் அத்தானிடம் காட்டி, அவனை, "இனிமேல் இங்கே வரவேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அவனும் அத்துடன் ஒழிந்து போனான்.
அனந்தராமன் காலமாகிச் சுமார் ஒன்றரை வருஷ காலம் ஆயிற்று. அப்போது ஓர் அதிசயமான கடிதம் செல்லம்மாளுக்கு வந்தது. அது தஞ்சாவூரிலிருந்து வந்தது. கடிதத்தின் அடியில், "அனாதை அம்முலு" என்று கையெழுத்துப் போட்டிருந்தது. தான் சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் செல்லம்மாளிடம் ஒரு முக்கியமான் சமாசாரம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லாமல் செத்துப் போனால், தன்னுடைய நெஞ்சு வேகாது என்றும், ஆகையால் உடனே புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டுமென்றும், அந்த அனாதை ஸ்திரீ எழுதியிருந்தாள்.
செல்லம்மாள் அந்தக் கடிதத்தைத் திரும்பித் திருப்பிப் படித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். கடிதம் எழுதியது யார் என்று அவள் மனதிற்கு உடனே தெரிந்து போய்விட்டது. அதைப்பற்றி அவளுக்குச் சந்தேகமே இல்லை. போவதா, வேண்டாமா என்று தான் யோசனை செய்தாள். "செத்தால் சாகட்டுமே? இவளை நான் என்ன போய்ப் பார்ப்பது" என்று ஒரு சமயம் நினைத்தாள். "இதில் ஏதாவது சூது இருக்குமோ, என்னமோ?" என்று ஒரு பக்கம் பயமாயிருந்தது. இதையெல்லாம் மீறி அவள் எப்படித்தான் இருப்பாள், அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிற்று. அவள் அப்படி என்ன சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ளவும் அவா உண்டாயிற்று. அதோடு அவள் சாவதற்கு முன்னால் நேருக்கு நேராக அவளுக்குச் சாபம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு பக்கம் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
செல்லம்மாள் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது. உடனே புறப்பட்டு வராவிட்டால், தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியை செல்லம்மாள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்றும் அதில் எழுதியிருந்தது. எவ்வளவு அசௌகரியமிருந்தாலும், உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று ரொம்பவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது.
செல்லம்மாள் அன்றைக்கே கிளம்பி மறுநாள் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். சந்து பொந்துகளுக்குப் பேர் போன தஞ்சாவூரில் கடிதத்தில் கொடுத்திருந்த விலாசத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. கடைசியில், எப்படியோ கண்டு பிடித்தாள். கிழ வேலைக்காரி ஒருத்தி செல்லம்மாளை அழைத்துக் கொண்டு போய் மச்சு அறையில் விட்டாள். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலிலே ஒரு அனாதை ஸ்திரீ படுத்திருந்தாள். உண்மையிலேயே அவள் சாகக் கிடக்கிறாள் என்பது பார்த்தவுடனே தெரிந்து போயிற்று. அந்த நிலைமையில் கூட அவள் முகத்தில் ஒரு களை இருந்தது. அதைக் காட்டிலும் அந்த முகத்தில் குடி கொண்டிருந்த சோகம் செல்லம்மாளின் உள்ளத்தின் அடிவாரத்தில் மறைந்திருந்த இரக்க உணர்ச்சியை எழுப்பிற்று. செல்லம்மாள் தான் சாபங் கொடுக்க வேண்டுமென்று வந்ததையெல்லாம் மறந்து அவள் சொல்வதைக் கேட்கச் சித்தமானாள்.
செல்லம்மாளைக் கண்டதும் அந்தப் பெண் படுத்தபடியே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டாள். அவளை தன் அருகில் உட்காரச் சொன்னாள். மிகவும் ஈனமான குரலில், குழந்தைப் பிராயத்தில் சிறு தாயார் கொடுமைகளுக்கு ஆளானதிலிருந்து தொடங்கி, தன்னுடைய துயரக் கதையை 'மளமள'வென்று சொல்லி முடித்தாள். முடிப்பதற்குள் பல தடவை செல்லம்மாளின் கண்களில் ஜலம் துளிர்த்து விட்டது.
கடைசியாக, உலக வாழ்க்கையின் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல், அம்முலு தண்டவாளத்தில் விழுந்து பிராணனை விடுவதென்று தீர்மானித்தாள். அவ்விதம் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்த போதுதான் அனந்தராமன் வந்து அவளைத் தொட்டு எழுப்பினார். அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துப் போனார். அவளுடைய நிர்க்கதியான நிலைமையைத் தெரிந்து கொண்டு தஞ்சாவூருக்கு அழைத்துப் போய்த் தனி வீட்டில் குடி வைத்தார். வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தையைக் கேட்டறியாத அம்முலு அனந்தராமனிடம் தன்னுடைய இருதயத்தை ஒப்புவித்தாள். அனந்தராமன் அடிக்கடி செல்லம்மாளைப் பற்றியும் அவளுடைய உயர்ந்த குணத்தைப் பற்றியும் அம்முலுவிடம் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அம்முலுவின் மனம் படாத வேதனைப்படும் - அப்படிப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்கிறோமேயென்று. இப்படியே சில காலம் சென்றது. ஒரு நாளைக்கு அனந்தராமன் செல்லம்மாளின் அத்தானை ரயிலில் சந்தித்தார். அவனுடன் பேசியதிலிருந்து அத்தானுக்கு தன்னுடைய இரகசியம் தெரியுமென்று அறிந்து கொண்டார். அவன் போய்ச் செல்லம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன செய்கிறதென்று அனந்தராமன் பீதியடைந்தார். அம்முலுவிடம் "நானே போய்ச் செல்லம்மாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன்; அப்புறம் நடப்பது நடக்கட்டும்" என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஊருக்குப் போய்ச் சேரும் போதே 104 டிகிரி சுரத்துடன் போனதாகவும், 'காலா ஹஸார்' என்னும் விஷ சுரம் தன்னைப் பீடித்திருப்பதாகவும், பிழைப்பது துர்லபம் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு செல்லம்மாளிடம் உண்மையைச் சொல்லத் தனக்குத் தைரியம் வரவில்லை என்றும், அவளுடைய மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லையென்றும், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அம்முலுவே எல்லாவற்றையும் செல்லம்மாளிடம் சொல்லி விட வேண்டும் என்றும், அவள் அம்முலுவுக்கு உதவி செய்து காப்பாற்றுவாள் என்றும் எழுதியிருந்தார்.
அதற்குப் பிறகு அனந்தராமனிடமிருந்து கடிதம் ஒன்றும் வரவில்லை. துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அம்முலு ஒரு ஆளை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாள். ஆள் வந்து அனந்தராமன் இம்மண்ணுலகை நீத்த விவரத்தைக் கூறினான்.
"அக்கா அந்த நிமிஷத்திலேயே நான் பிராணனை விட்டிருக்க வேண்டியது. ஆனால், அதோ தொட்டிலில் இருக்கிறானே, அவனுக்காக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என் வயிற்றில் இருந்தான், ஆறுமாதம்" என்றாள் அம்முலு.
அம்முலுவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போது செல்லம்மாளின் கவனம் அடிக்கடி அதே அறையின் ஒரு மூலையில் தரையில் வைத்திருந்த தொட்டிலின் பக்கம் சென்று கொண்டிருந்தது. அந்தத் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அம்முலுவின் கதை முடியும் சமயத்தில் குழந்தை தன் கண்களை மலர விழித்து அப்புறமும் இப்புறமும் பார்த்து அழத் தொடங்கியது. செல்லாம்மாள் ஒரு பாய்ச்சல் பாய்ந்து தொட்டிலின் பக்கம் சென்றாள். குழந்தையின் முகம் அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல் இருந்ததைக் கண்டாள்.
"குழந்தை! சாம்பு! அப்போது நீ உன்னுடைய பிஞ்சுக் கைகளை நீட்டிக் கொண்டு, மழலை வாயால் 'அம்மா' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் தாவி வந்தாய். நான் உன்னை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டேன். அந்த நிமிஷம் எனக்கு உலகமே மறந்து போய்விட்டது. எனக்குக் குழந்தை இல்லை என்ற குறையைப் பகவான் பூர்த்தி செய்துவிட்டார் என்ற ஒரு நினைவுதான் இருந்தது" என்றாள் செல்லம்மாள்.
அப்புறம் மூன்று நாள் அம்முலு உயிரோடு இருந்தாள். அந்த மூன்று நாளும் இறந்து போன அனந்தராமனைப் பற்றியே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய நல்ல குணத்தைப் பற்றி அனந்தராமன் கூறியதைப் பற்றிக் கேட்கக் கேட்க செல்லம்மாளுக்கு அனந்தராமன் மேலிருந்த கோபதாபமெல்லாம் போய் விட்டது. அம்முலு கண்ணை மூடிய பிறகு, செல்லம்மாள் கண்ணீரும் கம்பலையுமாய்க் குழந்தையைத் தோளோடு சாய்த்து எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.
ஊரில் செல்லம்மாளைப் பற்றி வம்பு வளர்க்கத் தொடங்கினார்கள். யாரோ ஒரு அனாதைக் குழந்தையை விலைக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னார்கள். சாதி தெரியாத குழந்தையை வைத்துக் கொண்டு வளர்ப்பதற்காக அவளைச் சாதியிலிருந்து தள்ளி வைத்தார்கள். இன்னும் சொல்லத் தகாத அவதூறையும் சிலர் வாய் கூசாமல் கேலியாகச் சொன்னார்கள். அதாவது செல்லம்மாளே குழந்தையைப் பெற்று எடுத்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். கிராமத்திலிருந்து செல்லம்மாள் பட்டணத்துக்குப் போன போதும், இந்தப் பொய் அவதூறு அவளைத் தொடர்ந்து போயிற்று. ஆனால் இதையெல்லாம் செல்லம்மாள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய சகல கஷ்டங்களையும் துயரங்களையும் குழந்தை சாம்புவின் ஒரு புன்சிரிப்பில் மறந்து வாழ்ந்து வந்தாள்.
இவ்விதம் செல்லம்மாள் கதையை முடித்ததும், உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி எழுந்திருந்தான். "அம்மா! கடவுள் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கோவிலிலும் குளத்திலும் போய்த் தெய்வத்தைத் தேடினேன். என் தெய்வம் வீட்டிலேயே இருக்கிறதென்பதை அறியாமற் போனேன். அம்மா! நீதான் என் தெய்வம்!" என்று சொல்லித் தரையில் விழுந்து, தாயின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தான். செல்லம்மாள் உணர்ச்சி நெஞ்சை அடைக்க ஒன்றும் பேசமுடியாதவளாயிருந்தாள்.
பிறகு, சாம்பமூர்த்தி எழுந்து நின்று, "அம்மா எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வாழ்நாளெல்லாம் நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். உனக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்க்கைக் கடமை கடவுள் அறிய..." சபதம் செய்யத் தொடங்கிய போது "நிறுத்து குழந்தை, நிறுத்து!" என்று செல்லம்மாள் நிறுத்தினாள்.
அதே சமயத்தில், முக்கால்வாசி சாத்தியிருந்த ரேழி நடைக் கதவு படீர் என்று திறந்தது. ஸ்ரீமதி ரங்கநாயகி ஆத்திரத்துடன் உள்ளே வந்தாள்.
"ரொம்ப அழகாயிருக்கிறது! நீங்கள் பிரம்மச்சாரியாயிருந்து விட்டால், என்னுடைய கதி என்ன? நானும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். நான் உங்களுக்காக உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும், உங்கள் அம்மாவுக்குப் பணிவிடை செய்வதற்காகவே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அம்மா! எனக்கும் நீங்கள் தான் தெய்வம்!" என்று சொல்லி, ரங்கநாயகியும் செல்லம்மாளின், பாதங்களில் நமஸ்கரித்தாள். அவளுடைய தலையைத் தொட்டுச் செல்லம்மாள் ஆசிர்வாதம் செய்தபோது, 'கலகல'வென்று அவளுடைய கண்களிலிருந்து நீர் பொழிந்தது.
சாம்பமூர்த்தி அவ்விதம் குனிந்த தலையுடன் வக்கீல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பிறகு, ரங்கநாயகியை அவள் வீட்டார் ரொம்பவும் பரிகசித்துப் புண்படுத்தினார்களாம். இதனால் ரங்கநாயகியின் மனம் உறுதிப்பட்டு விட்டதாம். "நான் அவரைத்தானே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய அம்மாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவருடைய அம்மா எப்படியிருந்தால் எனக்கு என்ன?" என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல், அவள் சாம்பமூர்த்தியின் வீட்டுக்கு வந்தாளாம். வாசற்படிக்கு அருகில் வந்த போது, உள்ளே தாயாரின் பேச்சுக் குரல் கேட்டதாம். அங்கு நின்றபடியே செல்லம்மாள் சொன்ன கதையின் பிற்பகுதியை எல்லாம் கேட்டுவிட்டுச் சாம்பமூர்த்தி சபதம் கூறும் சமயத்தில் உள்ளே வந்தாளாம்.
திருநீர்மலையில் கல்யாணம் ஆன அன்று பிற்பகல், மேற்படி வரலாறுகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டபின், "ஏன் மாப்பிள்ளை! உங்கள் மனைவியின் வீட்டார் அப்புறம் சமாதானம் அடையவே இல்லையா? இன்னும் கோபமாய்த் தான் இருக்கிறார்களா?" என்று கேட்டேன்.
"இல்லை; ரங்கநாயகியின் உறுதியைக் கண்டபின், அவர்கள் ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டார்கள். இந்தக் கல்யாணத்துக்குக் கூட வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனாலு திடீரென்று புயலும் மழையும் அடித்து ரயில் பாதை சீர்கெட்டு விட்டதல்லவா? அதனால் தான் வர முடியவில்லை" என்றான்.
அப்போது மணப் பெண் ரங்கநாயகி "அதுவும் எங்களுடைய அதிர்ஷ்டந்தான். அந்தக் கும்பல் எல்லாம் வந்திருந்தால், நாங்கள் இன்றைக்கு இவ்வளவு ஆனந்தமாக இருந்திருக்க முடியுமா?" என்றாள்.
இந்த வருஷம் வைகாசிக் கோடையில் திடீரென்று அவ்வளவு பெரிய புயலும் மழையும் அடித்து, ரயில் பாதை கெட்டதின் காரணம், அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.