en urimaigal enakku theriyum

என் உரிமைகள் எனக்குத் தெரியும்

குழந்தைகளின் உரிமைகள் என்னென்னவென்று ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஒரு பட்டியல் போட்டிருக்கிறது. எங்கு வாழ்கிறீர்கள், பெற்றோர் என்ன செய்கிறார்கள், எந்த மொழியைப் பேசுகிறீர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் ஆணோ பெண்ணோ இல்லை உங்கள் பாலினத்தை இன்னும் முடிவு செய்யவில்லையோ - உங்களுக்கு இந்த உரிமைகள் உண்டு. உங்களுக்கான உரிமைகள் சிலவற்றை இந்தப் புத்தகம் சொல்கிறது.

- M. Gunavathy

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உரிமைகள் உனக்கு, உரிமைகள் எனக்கு,

உரிமைகள் உண்டு எல்லோருக்கும் இங்கே.

உரிமைகள் உயர்த்தும், உரிமைகள் காக்கும்,

உரிமைகள் நமக்கு என்றும் உற்ற நண்பனைப் போலே.

தவறுகள் தடுத்திடும் உரிமைகள்,

நம்மை வலுவாய் ஆக்கிடும் உரிமைகள்.

காலத்தின் தேவை உரிமைகள்,

உன் அற்புத சக்திதான் உரிமைகள்!

ஒவ்வொரு சிறுமிக்கும் என்னைப்போலவே, இந்த உலகில் வாழ்ந்திட உரிமை உண்டு.

பிறந்திடும் உரிமை எனக்குண்டு.

கோ-கோ, கிரிக்கெட், கபடி,

ஊஞ்சல், சறுக்கு, கண்ணாமூச்சி.

விளையாடும் உரிமை எனக்குண்டு.

புதிய, பழைய நண்பர்களை வீட்டிலும் வெளியிலும் சந்திப்பேன்.

நண்பர்களைச் சந்திக்கவும், புதிய நண்பர்களைப் பெறவும் உரிமை எனக்குண்டு.

கூட்டத்தில் என்னைக் கண்டுபிடித்தல் கடிது. ஆனால், அங்கு உரத்து ஒலிக்கும் குரலோ எனது!

என் கருத்துகள் மதிக்கப்படவேண்டிய உரிமை எனக்குண்டு.

என்னைச் சுற்றி பாதுகாப்பு

வளையம் ஒன்று உள்ளது. அத்துமீறினால் பிரச்சினைகள் வந்திடும் உங்களுக்கு.

பாலியல் ரீதியாகவோ உடல்ரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு உரிமை எனக்குண்டு.

இந்த உலகை மாற்றும் குரலாக என் குரலும் ஒலிக்க வாய்ப்புண்டு. என் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை எனக்குண்டு.

சமைக்கவும் துவைக்கவும் தேவையில்லை. கார் பழுதும், தேநீர் கொடுத்தலும் என் வேலையில்லை.

வேலைக்கு அனுப்பப்படாமல் இருப்பதற்கு உரிமை எனக்குண்டு.

வீட்டில் முடங்கியோ ஒளிந்தோ இருக்கமாட்டேன். கல்வி கற்று உயர்ந்திடும் உரிமை எனக்குண்டு.

சிறந்த கவனிப்பையும், ஆதரவையும், கல்வியையும் பெறும் உரிமை எனக்குண்டு.

ஏன், எதற்கு, எங்கு, எப்போது?

என் கேள்விகளுக்கு பதில் வேண்டும் இப்போது!

தகவலைப் பெறுவதற்கான

உரிமை எனக்குண்டு.

என் உரிமைகளை அறிந்துகொள்ளும் உரிமை எனக்குண்டு.

1. 18 வயதுக்குக் கீழ் உள்ள எல்லோருக்கும் இந்த உரிமைகள் உண்டு.

2. யார், எங்கு வாழ்கிறார்கள், பெற்றோர் என்ன செய்கிறார்கள், எந்த மொழியைப் பேசுகிறார்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், ஆணா பெண்ணா, அவர்களது பண்பாடு என்ன, மாற்றுத்திறனாளிகளா, பணக்காரர்களா அல்லது ஏழைகளா போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த உரிமைகள் உண்டு. எதன் அடிப்படையிலும் குழந்தைகள் தவறாக நடத்தப்படக்கூடாது.

3. பெரியவர்கள் அனைவரும் உங்களுக்கு எது சிறந்ததோ அதையே செய்யவேண்டும்.

4. உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் கடமை அரசுக்கு உள்ளது.

5. உங்களின் உரிமைகளைப் பயன்படுத்த உங்களுக்கு கற்றுக்கொடுப்பதும், உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் உங்கள் குடும்பத்தினரின் கடமையாகும்.

6. உயிரோடிருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.

7. உங்களுக்கென்று ஒரு பெயர் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. அரசாங்கம் அதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் தீர்மானங்கள், குழந்தைகளுக்கு எளிமையாகப் புரியும்படி இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன: https://static.unicef.org/rightsite/files/uncrcchilldfriendlylanguage.pdf

8. ஒரு நாட்டின் குடிமக்களாக இருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு (நாட்டைச் சார்ந்து இருத்தல்).

9. அடையாளத்துக்கான உரிமை உங்களுக்கு உண்டு – நீங்கள் யார் என்பதற்கான அதிகாரபூர்வ பதிவு.

10. உங்களுக்கு பாதிப்பு ஏற்படாத சூழலில் உங்கள் தாய் அல்லது தந்தை அல்லது பெற்றோர் இருவருடனும் வாழ்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் மீது அக்கறை செலுத்தும் குடும்பத்தினருடன் வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

11. நீங்கள் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும், பெற்றோர்களுடன் ஒரே இடத்தில் வாழ உங்களுக்கு உரிமை உண்டு.

12. கடத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு.

13. உங்களின் கருத்தைத் தெரிவிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. பெரியவர்கள் அந்தக் கருத்தை அக்கறையோடு கவனித்துப் பரிசீலிக்கவேண்டும் என்பதைச் சொல்லவும் உரிமை உண்டு.

14. யாருக்கும் தீங்கு விளைவிக்காத, துன்புறுத்தாத விஷயங்களைக் கண்டறிவதற்கும், அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

15. ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும், உங்களுக்கான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதற்கும் உரிமை உண்டு.

16. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், யாருக்கும் தீங்கு விளைவிக்காதபடி குழுக்களை அமைப்பதற்கும் அல்லது குழுக்களில் இணைவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

17. உங்களது தனிப்பட்ட விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளாமலிருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

18. உங்கள் நலனுக்கான முக்கியமான தகவல்களைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

19. உங்கள் பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட வாய்ப்புகள் இருக்கும்போது அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.

20. உடலாலோ, மனதாலோ நீங்கள் தவறாக நடத்தப்படாமலும் யாராலும் துன்புறுத்தப்படாமலும் பாதுகாக்கக் கோரும் உரிமை உங்களுக்கு உண்டு.

21. உங்கள் பெற்றோருடன் நீங்கள் வாழமுடியாத நிலையில் இருந்தால், சிறப்புப் பராமரிப்பும், உதவியும் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு.

22. தத்தெடுக்கப்பட்டாலோ அல்லது பராமரிப்பு மையங்களில் இருந்தாலோ, நீங்கள் பராமரிக்கப்படுவதற்கும், பாதுகாக்கப்படுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

23. நீங்கள் அகதியாக இருந்தால், சிறப்புப் பாதுகாப்புக்கும் உதவிக்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

24. உங்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், சிறப்புக் கல்வியையும் பராமரிப்பையும் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இதன் மூலமாக நீங்கள் முழுமையான ஒரு வாழ்வை வாழமுடியும்.

25. சிறந்த சுகாதாரம், சுத்தமான குடிநீர், சத்தான உணவு, சுத்தமான,பாதுகாப்பான சூழல், நீங்கள் நலமுடன் வாழத் தேவையான தகவல் ஆகியவற்றைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

26. வீட்டிலிருந்து தொலைவிலிருக்கும் பராமரிப்பு மையத்திலோ வேறு சூழ்நிலையிலோ வாழ்ந்தால், அவை வாழத் தகுதியான, சரியான சூழலில் இருக்கிறதா என்பதை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தக் கோரும் உரிமை உங்களுக்கு உண்டு.

27. நீங்கள் ஏழ்மையிலோ அல்லது உதவிகள் தேவைப்படும் நிலையிலோ இருந்தால் அதை அரசிடம் கேட்டுப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

28. உணவு, உடை, பாதுகாப்பான வாழிடம் மற்றும் உங்கள் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

29. நல்ல தரமான கல்வியைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்குச் சாத்தியமான உயர்நிலைக் கல்வியைப் பெற நீங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

30. உங்களுக்குக் கிடைக்கும் கல்வி, உங்கள் அறிவையும் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும். அமைதியாக வாழவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பிறரை மதிப்பதற்கும் அந்தக் கல்வி உங்களுக்கு உதவ வேண்டும்.

31. நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த பண்பாட்டையும் மொழியையும் மதத்தையும் இன்ன பிறவற்றையும் பின்பற்ற உங்களுக்கு உரிமை உண்டு.

32. விளையாடுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

33. உங்களுக்கும் உங்கள் உடல் நலனுக்கும் கல்விக்கும் தீங்கு விளைவிக்கும் வேலைகளில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. ஒருவேளை நீங்கள் வேலை செய்தால், பாதுகாப்பாக இருக்கவும் சரியான ஊதியத்தைப் பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு.

34. தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்கள் மற்றும் போதை வணிகத்தில் சிக்காமல், பாதுகாப்பாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

35. பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

36. எல்லா விதமான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைப்பதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.

37. மோசமான அல்லது தீங்கு விளைவிக்கும் விதத்தில் உங்களை யாரும் தண்டிக்காமல் இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

38. போரிலிருந்து விலகியிருக்கவும் அதிலிருந்து பாதுகாப்பு வேண்டவும் உங்களுக்கு உரிமை உண்டு. பதினைந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளை ராணுவத்துக்குச் செல்லும்படியும், போரில் பங்கெடுக்கும்படியும் யாரும் வற்புறுத்த முடியாது.

39. நீங்கள் காயம் அடைந்தாலோ, புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது மோசமாக நடத்தப்பட்டாலோ உதவி பெறுவதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.

40. உங்கள் உரிமைகளை மதிக்கும் நீதி அமைப்பில் சட்ட உதவி பெறுவதற்கும் சரியாக நடத்தப்படுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

41. இந்த மாநாட்டில் விளக்கப்பட்ட சட்டங்களைவிடவும், உங்கள் உரிமைகளின் மீதான சிறந்த பாதுகாப்பை உங்கள் நாட்டுச் சட்டங்கள் வழங்கினால், அந்தச் சட்டங்களும் உங்களுக்குப் பொருந்தும். உங்கள் உரிமைகளை அறிந்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு!

குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள்

சபையின் மாநாடு, ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த எல்லா

உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ/

பலருக்கோ உரிமைகள் மறுக்கப்படும்போது,

பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசுங்கள்.

குழந்தைகளுக்கான உதவி எண்ணான 1098ஐ அழைத்து,

அவர்களிடம் பேசுங்கள்.

குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, www.unicef.org/crc/ என்னும் இணையதளத்தைப் படியுங்கள்.