உங்களுடைய உடலைப்போல் அச்சு அசலாக இன்னொரு உடல் இந்த உலகில் யாருக்கும் கிடையாது, தெரியுமா?
நமது உடலுக்கும் மற்றவர்களது உடலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு, வேறுபாடுகளும் உண்டு. ஆனால், ஒவ்வொரு உடலும் தனித்துவமானது. என்ன ஒரு அற்புதம், இல்லையா?
உங்கள் உடல் எப்படியும் இருக்கலாம்,
உயரமாக
குள்ளமாக
உருண்டையாக
தள்ளாடுவதாக.
சதுரமாக
முடியுடையதாக
உங்கள் உடல் எப்படியிருந்தாலும் சரி, அது மிகமிகச் சிறப்பு வாய்ந்ததே. உங்கள் உடல் உங்களுக்குச் சொந்தமானது.
உங்கள் உடலைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் அதோடுதானே வாழப்போகிறீர்கள்.
இந்த உடல் உறுப்புகளைப் பற்றி தெரியுமா?
நெற்றி
கன்னம்
தோள்
தொப்புள்
பெண்ணுறுப்பு
தொடை
கால்விரல்
கணுக்கால்
மார்பு
உள்ளங்கை
மூக்குத் துவாரம்
முழங்கை
பிட்டம்
ஆணுறுப்பு
நீங்கள் வளரும்போது உங்கள் உடலும் மாறுகிறது. நீங்கள் இதை கவனித்திருக்கிறீர்களா?
உங்கள் உடல் எப்படியும் மாறலாம்,
மிக உயரமாக
மிகக் குள்ளமாக
மிக உருண்டையாக
மிக முடியுடையதாக
மிகச் சதுரமாக
மிகத் தள்ளாடுவதாக.
உங்கள் உடல் எப்படி மாறினாலும், அது எப்போதும் மிகமிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றுதான்.
உங்கள் உடல் உங்களுக்குச் சொந்தமானது. எனவே, யாராவது உங்கள் உடலைத் தொடுவது பிடிக்கவில்லை என்றால் அதை சொல்லுங்கள். குறிப்பாக அப்படித் தொடும்போது வலித்தாலோ, அப்படித் தொடுவது சரியில்லை என்று தோன்றினாலோ கட்டாயம் அதைப் பற்றி சொல்லுங்கள்.
அது எப்போதும் அவ்வளவு சுலபமாக இருக்காதுதான். ஆனால் அதுதான் சரியானது. “நீங்கள் என்னைத் தொடுவது எனக்குப் பிடிக்கவில்லை” என்றோ, “இப்படிச் செய்யாதீர்கள்!” என்றோ சொல்லலாம். சத்தமாக, உறுதியான குரலில் “தொடாதே!” என்றும் சொல்லலாம்.
ஒருவேளை அவர்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து உடனே விலகிச் சென்றுவிடுங்கள். அல்லது சத்தமாகக் கூச்சலிடுங்கள்.
நினைவிருக்கட்டும், அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் நீங்கள் விரும்பும் ஒருவராக இருக்கலாம், ’உன்னை ரொம்பப் பிடிக்கும்’ என்று உங்களிடம் சொல்பவராகக்கூட இருக்கலாம். அவர்கள் உங்களைத் தொட்ட விதம் உங்களுக்கு சங்கடமாக இருக்கிறது, பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால், உங்கள் உடல் உங்களுடையது மட்டுமே! வேறு யாருடையதும் இல்லை.
உங்களைத் தவிர வேறு யாரும் அதன் மேல் உரிமை செலுத்த அனுமதிக்க வேண்டாம்.
ஏதாவது சில காரணங்களால் அந்த நபர் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அது உங்கள் தவறு கிடையாது. அது ஒருபோதும் உங்களுடைய தவறாகாது. என்ன நடந்தது என்று உங்கள் பெற்றோரிடமோ, நீங்கள் நம்பும், யாரிடம் சொன்னால் சரி என்று தோன்றுகிறதோ அப்படி ஒரு பெரியவரிடமோ சொல்லுங்கள். அது ஆசிரியராக இருக்கலாம், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என யாராகவும் இருக்கலாம். அவர், நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு உங்களைப் பாதுகாக்கும் வழியைக் காட்டுபவராக இருக்க வேண்டும்.
ஏனெனில், உங்கள் உடல் உங்களுடையது, வேறு யாருடையதும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் உங்கள் அம்மாவுடையது அல்ல. அப்பாவுக்குச் சொந்தமானதும் அல்ல. அது உங்கள் சகோதரனுக்கோ சகோதரிக்கோ உரிமையானதும் அல்ல. உங்கள் நெருங்கிய நண்பருடையதும் அல்ல. உங்கள் செல்லப்பிராணியுடையதும் அல்ல!.
உங்கள் உடல் உங்களுக்கு மட்டுமேயானது.
உங்கள் உடல் விலைமதிப்பற்றது. எனவே அதை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அது எல்லா நேரங்களிலும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை, சரிதானே?
இங்கே உங்களுக்கு உதவக்கூடிய சில கேள்விகள் மற்றும் பதில்கள் உள்ளன. இவை உங்கள் உடலை சிறப்பாகப் பாதுகாப்பது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.
என் உடலில் யாரும் தொடக்கூடாத உறுப்புகள் எவை? உங்களின் தனிப்பட்ட உறுப்புகளை யாரும் தொடவோ பார்க்கவோ அனுமதிக்கக்கூடாது. நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, உங்கள் பெற்றோர் உங்களைக் குளிப்பாட்டவோ, உடை மாற்றிவிடவோ, உடல்நிலை சரியில்லாதபோதோ இந்தப் பகுதிகளைத் தொடலாம். நீங்கள் வளர வளர, இதையெல்லாம் நீங்களே செய்து கொள்ள முடியும். ஒரு மருத்துவரோ செவிலியரோ உங்கள் உடலை பரிசோதிப்பதற்காக இந்த உறுப்புகளைத் தொடலாம். ஆனால் அப்போதும் உங்கள் பெற்றோர் உங்களுடன் இருப்பது நல்லது.
நீங்கள் மற்றவர்களின் பாலுறுப்புகளைப் பார்ப்பதோ தொடுவதோ கூட சரியானதல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட உறுப்புகள் என்பவை தனிப்பட்ட உறுப்புகள்தான். இதை நினைவில் கொள்ளுங்கள். தனிப்பட்ட என்பதன் பொருள், அது உங்களுக்கு மட்டுமேயானது என்பதாகும்.
எவையெல்லாம் எனது தனிப்பட்ட பாகங்கள்?
நம் ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது. எனவே இப்படி வைத்துக்கொள்ளலாம் - இங்குள்ள படத்தில் துணியால் மூடப்பட்டிருக்கும் பாகங்கள் எல்லாம் தனிப்பட்ட பாகங்கள்.
என்னை யாரோ ஒருவர் தொட்டபோது நான் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால் அவர் என்னுடைய தனிப்பட்ட உறுப்பைத் தொடவில்லை. அது சரியா?
இல்லை! தனிப்பட்ட உறுப்பைத் தொடவில்லை என்றாலும், நீங்கள் சங்கடமாக உணர்ந்தீர்கள் என்றால், அது ஒருபோதும் சரியான தொடுதல் அல்ல. இது போன்ற நேரங்களில், ”நீங்கள் இப்படி செய்வது எனக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்வது நல்லது. உங்கள் உடல் உங்களுக்குச் சொந்தமானது, வேறு யாருடையதும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த விதமான தொடுதலும் உங்களுக்குக் குழப்பத்தைக் கொடுப்பதாக இருந்தால் உங்கள் பெற்றோரிடமோ நீங்கள் நம்பும் பெரியவர்களிடமோ பேசுங்கள்.
எல்லா தொடுதல்களும் பாதுகாப்பற்றதா?
நிச்சயமாக இல்லை! பெற்றோரின் முத்தங்கள், உறவினரின் அணைப்பு, நண்பர்களின் கைகோர்ப்பு - போன்றவை அக்கறை காட்டுவதற்கானவை. இருந்தாலும் இத்தொடுதல்களால் நீங்கள் பாதுகாப்பாக உணராவிட்டால், தொட வேண்டாம் என்று சொல்லுங்கள். அதேபோல், உங்களிடம் யாராவது தொட வேண்டாம் என்று கூறினால், நீங்களும் அதை மதித்து செயல்பட வேண்டும்.
உங்களைத் துன்புறுத்தவோ சங்கடப் படுத்தவோ யாராவது உங்கள் உடலைத் தொட்டால், உங்களுக்கு உதவி தேவை என்று நீங்கள் உணரலாம், அப்போது 1098 எண்ணை அழையுங்கள். 1098 எண் உங்களை குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசியுடன் இணைக்கும். இது கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் அமைப்பாகும்.