தினமும் காலையில் நூலகத்தின் கதவுகள் திறந்தவுடன்...
இஷான் காற்றைப் போல வேகமாக உள்ளே வருவான். நூலகத்தின் கடைக்கோடியில் இருக்கும் தன்னுடைய மூலைக்கு விரைந்து சென்று மரங்கள் ஒன்றுடன் ஒன்று என்ன பேசிக்கொள்கின்றன என்பதைப் படித்துத் தெரிந்து கொள்வான்.
மரியம், தன்னுடைய கார்களுடன் உட்கார்ந்து புதிய பத்திரிகைகளைப் புரட்டிக்கொண்டிருப்பாள். ரேஸ் கார் ஓட்டுனராக வேண்டும் என்பது அவளது ஆசை. உலகத்திலேயே அதிவேகமான ஸ்போர்ட்ஸ் கார் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் அவளுக்கு.
ஆபிர் எழுத்துகள் இல்லாத படக்கதைகளைத்தான் விரும்புவான். எழுத்துகளைப் போல படங்கள் நொண்டிக் குதித்து, விழுந்து எழுந்து நடனம் ஆடாதல்லவா.
திவ்யாவும், அவளது அம்மா, அப்பாவும் புத்தகங்களை வைத்து சிறிய புத்தகக் கோபுரத்தை உருவாக்குவார்கள். கோபுரம் சரிந்து, ஒரு புத்தகம் அதன் பக்கங்கள் விரியக் கீழே விழும். அதுதான் அவர்கள் அன்று வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகம்.
பள்ளியில் நடக்க இருக்கும் மேஜிக் ஷோவுக்கு உதவத் தேவையான மேஜிக் புத்தகங்களை அடுக்கி வைக்க ஸ்னேகாவும் அப்துல் அண்ணாவும் ஒரு வாசிப்பு மேஜையைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.
மதிய நேரங்களில் நூலகம் சிரிப்பு, பேச்சு மற்றும் விளையாட்டு சாமான்களின் கலகல ஒலிகளால் நிறைந்து இருக்கும். அது கதை நேரம்!
இன்று, ஒரு சிறுவன் மற்றும் அவனது பாட்டியின் சாகசங்களைப் பற்றிய கதையை எல்லோரும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்ரிதா, குமாயில் இருவருக்கும் புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கப் பிடிக்கும். புத்தக மருத்துவமனையில் அவற்றைச் செப்பனிடவும் பிடிக்கும். ஒருநாள் நூலகர் ஆக வேண்டும் என்பதே அவர்களது ஆசை.
பர்மீத் எப்போதும் பூதக்கண்ணாடிகள் உள்ள பெட்டியுடன் வருவான். கூடவே – “எதற்குத்தான் புத்தகங்களை இவ்வளவு சிறிய எழுத்தில் அச்சிடுகிறார்களோ?” என்ற கேள்வியும் வரும்.
கபீரின் அம்மா கடற்கரைக்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்கள், சேகரித்த கூழாங்கற்கள் மற்றும் மணலை வைத்து ஒரு அழகிய புத்தகத்தை உருவாக்கி இருந்தார். கபிருக்கு மிகவும் விருப்பமான புத்தகம் அது.
இரு வருடங்களுக்கு முன்பு ஹயா சித்தியும், பிரமிளா அக்காவும் நூலகத்தின் படக்கதைப் புத்தகப் பிரிவில் சந்தித்தனர். இன்று, அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். விரல்களால் தொட்டு வாசிக்கும் குழந்தைகளுக்கானப் புத்தகங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
ரையான், பிரியங்கா அக்கா இருவரும் இருட்டான ஒரு மூலையில் அமைதியான ஒரு குகையை உருவாக்கியுள்ளனர். ரையான் அதற்குள் அமர்ந்துகொண்டு டார்ச் ஒளியில் வாசிப்பான்.
ஜில் கோபமாகவோ வருத்தமாகவோ இருக்கும் நாட்களில், சூரிய ஒளி புத்தகங்களின் பக்கங்களில் நடனமாடுவதைப் பார்த்துக்கொண்டே தனது முழு நேரத்தையும் நூலத்திலேயே கழிப்பாள்.
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் மாற்றுத்திறனாளி இளைஞர்களின் புத்தக மன்றம் கூடும். அப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளின் கமகம வாசனையாலும், அரட்டை மற்றும் சிரிப்புச் சத்தங்களாலும் நூலகம் நிரம்பி இருக்கும்.
அண்ணா இப்போது நமக்காக ஒரு கதை சொல்லப் போகிறார். எங்களுடன் இணைந்து கொள்ள நீங்களும் வருகிறீர்களா?