தாராவும் அவள் குடும்பத்தினரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்!
“வீட்டுக்குத் திரும்பியதும் எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா தாரா?” என்றார் அம்மா. ஆமாமென்று தலையசைத்தாள் தாரா. “எனக்குப் பசிக்கிறது!” மாதவும் வயிற்றைத் தடவினான். “எனக்கும் பசிக்கிறது” என்று சத்தமாகச் சொன்னான்.
“ஃபிரிட்ஜில் பாலும் முட்டையும் பிரெட்டும் காய்கறிகளும் இருக்கின்றன” என்றார் அம்மா. “நான் இரவு உணவைத் தயார் செய்கிறேன்!” என்றார் அப்பா. “அப்பா, ஃபிரைட் ரைஸ் செய்து தருவீர்களா?” என்று கேட்டாள் தாரா. “ஃபிரைட் ரைஸா, எனக்கும் அதுதான் வேண்டும்” என்றான் மாதவ்.
தாரா, மாதவ், அம்மா, அப்பா நால்வரும் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார்கள். ஏதோ ரொம்பவே சரியில்லை. “சீ! என்ன நாற்றம் இது?” என்று தாரா முகத்தைச் சுளித்தாள்.
“பூதம்!” என்று கத்தினான் மாதவ்.
வீடு இருட்டாகவும் சூடாகவும் இருந்தது. வீடு முழுவதும் நாற்றம் அடித்தது! எங்கிருந்து வருகிறது அந்த நாற்றம்?
அம்மா படுக்கையறையில் பார்த்தார்.
மாதவ் குளியலறையில் பார்த்தான்.
தாரா சாப்பாட்டு அறையில் பார்த்தாள்.
அப்பா சமையலறையில் பார்த்தார்.
ஃபிரிட்ஜை சுட்டிக்காட்டி, “இதோ! இங்கிருந்துதான் வருகிறது” என்றார் அப்பா. “என்னது, நாற்றமடிக்கும் ஃபிரிட்ஜ் பூதமா!” என்றாள் தாரா. “பயமாக இருக்கிறது” என்று அம்மாவைக் கட்டிக்கொண்டான் மாதவ்.
“சரி, ஃபிரிட்ஜைத் திறந்து உள்ளே என்னதான் இருக்கிறதென்று பார்ப்போம்” என்றார் அம்மா.
அம்மா ஃபிரிட்ஜைத் திறந்தார். உடனே எல்லோரும் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டார்கள்.அம்மா ஃபிரிட்ஜுக்குள் கையை விட்டுப் பார்த்துவிட்டு, “இதில் விளக்கு எரியவில்லை. சூடாகவும் இருக்கிறது” என்றார்.
“என்ன நடந்தது?” என்று கேட்டாள் தாரா.
“ஃபிரிட்ஜ் வேலை செய்யாமல் நின்றுபோய் நிறைய நேரம் ஆகியிருக்கிறது” என்று அப்பா விளக்கினார்.
“குளிர்ந்த காற்று இல்லாமல் எல்லாப் பொருட்களுமே கெட்டுப் போய்விட்டன” என்று அம்மா கவலையுடன் சொன்னார்.
“பால் கூடக் கெட்டுப் போய்விட்டதா?” என்று தாரா கேட்டாள். “ஆமாம், பார்! புளித்த வாடை வருகிறதல்லவா?” என்றார் அம்மா. “பால் கெட்டுப்போகாமலிருக்க அதைக் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும்” என்றார் அப்பா.
“பிரெட் கூட கெட்டுப் போய்விட்டதா?” என்று தாரா கேட்டாள். “ஆமாம், அதன்மேல் பச்சை நிறத்தில் ஏதோ தெரிகிறதல்லவா? இதுதான் பூசணம். இது பிரெட்டின் மேல் வளரும்” என்றார் அப்பா. “புசுபுசுவென்று இருக்கிறதே” ஆர்வத்துடன் சொன்னான் மாதவ். “அதைத் தொடாதே! அதைச் சாப்பிட்டால் நோய்வாய்ப்பட்டு விடுவாய்” என்றார் அப்பா.
“காய்கறிகளும் கெட்டுப் போய்விட்டனவா?” என்று தாரா சோகமானாள்.
“ஆமாம், அவை அழுகிப் போய்விட்டன. நம்மால் இனி அவற்றைச் சாப்பிட முடியாது” என்றார் அம்மா.
மாதவ் ஒரு முட்டையை எடுத்து கீழே போட்டான். “மாதவ், நீ நாற்றத்தை இன்னும் மோசமாக்கிவிட்டாய்!” என்று கத்தினாள் தாரா. “அடடா! இவையும் கூட கெட்டுப் போய்விட்டன!” என்றார் அப்பா.
இனிமேல் தன்னால் எப்போதும் முட்டை சாப்பிட முடியுமென்று தாராவுக்குத் தோன்றவில்லை.
“ச்சீய், ச்சீய், ச்சீய்!” என்று கத்திக்கொண்டே மாதவ் அங்கிருந்து ஓடிவிட்டான். அப்பா அவற்றை சுத்தம் செய்தார்.
கெட்டுப்போன உணவுப் பொருட்களை எல்லாம் குப்பைப் பைகளில் போட்டு கட்டிவைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை சுத்தம் செய்தனர். “பொருட்கள் ஏன் கெட்டுப்போகின்றன?” என்று தாரா கேட்டாள். “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எல்லாப் பொருட்களுமே கெட்டுப்போய்விடும். ஃபிரிட்ஜின் உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று பொருட்களை சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். வெப்பமாக இருந்தால் பொருட்கள் மிக வேகமாகக் கெட்டுப்போய்விடும்” என்றார் அம்மா.
“எல்லா உணவுப் பொருட்களுமே கெட்டுப்போகுமா?” “இந்த அரிசி கெட்டுப்போகாது. இந்த உருளைக்கிழங்குகளும் இன்னும் சில நாட்களுக்காவது கெடாது” என்றார் அம்மா.
“இந்த ஊறுகாயும் கெட்டுப்போகாது” என்றார் அப்பா. “இந்த நெய்யும் கூட!” என்றார் அம்மா. “நாம் நெய்ச்சோறும் உருளைக்கிழங்கும் சாப்பிடலாம்” என்று மகிழ்வுடன் சொன்னாள் தாரா.
கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் தாராவும் மாதவும் தங்கள் வீட்டில் கண்ணுக்குத் தெரியாத பூதம் ஒன்று இருப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் பூதம் எதுவும் இல்லையென்றாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருப்பதாக அவர்கள் நினைத்தது சரிதான்!
உணவுப் பொருட்கள் ‘கெட்டுப்போவது’–அதாவது மனிதர்களால் சாப்பிட முடியாமல் போவது–நம் கண்களுக்குப் புலப்படாத ஏதோ அவற்றைத் தின்னத் துவங்குவதால்தான். நம் கண்களால் பார்க்க முடியாத இவற்றின் பெயர்தான் நுண்ணுயிரிகள்.
உண்மையில் நுண்ணுயிரிகள் பார்க்கவே முடியாதவை கிடையாது: அவை மிக மிக மிகச் சிறியவை (நீங்கள் பார்த்ததிலேயே மிகச் சிறிய பூச்சியை விடச் சிறியவை). அவற்றைப் பார்ப்பதற்கு நுண்ணோக்கி என்ற கருவி வேண்டும். அவை இந்தப் படத்தில் உள்ளதுபோலத் தோற்றமளிக்கும்.
உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும்போது
சில உணவுப் பொருட்கள் விரைவாகக் கெட்டுப்போய்விடும். சில மெதுவாகக் கெட்டுப்போகும். ஈரப்பதமான உணவுகளான காய்கறிகள், பழங்கள் போன்றவை வேகமாகக் கெட்டுப்போகும். உலர்ந்த உணவுகளான சமைக்காத அரிசி, பருப்பு போன்றவை மெதுவாகக் கெட்டுப்போகும். முட்டை, இறைச்சி, சீஸ் போன்றவை மிகவேகமாகக் கெட்டுப்போகும். பதனிடப்பட்ட உணவுகளான ஊறுகாய், நெய் போன்றவை மிக மெதுவாக கெட்டுப்போகும். அடைக்கப்பட்ட உணவுகளான பிஸ்கட்டுகள், இனிப்புகள் போன்றவை மிகமிக மெதுவாகத்தான் கெட்டுப்போகும்.