காலையில் ரோஹன் கண்விழித்ததும் தனது நாய் ஜிம்மியுடன் விளையாடத் தொடங்கினான்.
அக்கா ரியா அவனிடம், "முதலில் நீ செய்யவேண்டியது வேறொன்று உள்ளது" என்றாள், "காலை எழுந்தவுடன் பல் தேய்க்கவேண்டும்!"
பௌவ் பௌவ்!
"எனக்குப் பல் தேய்க்க இஷ்டமில்லை. ஜிம்மி பல் துலக்குவதில்லையே!"
"மிருகங்களும் தங்களுடைய பற்களைப் பராமரிக்கும். அதற்கு வேறு வழிமுறைகள் உள்ளன. கிருமிகளை ஒழிப்பதற்கு மனிதர்கள் பல் தேய்ப்பது அவசியம்."
"கிருமிகளா? அப்படியென்றால் என்ன?"
"கிருமிகள் என்பவை நம் கண்களுக்குத் தெரியாத மிகச்சிறிய ஜந்துக்கள். நீ சரியாகப் பல் தேய்க்காவிட்டால் அவை வாய்க்குள்ளே தங்கி உனக்குத் துன்பம் கொடுக்கும்."
"அப்படியா!"
"ஆமாம். அதனால்தான் தினமும் காலை மற்றும் இரவு என்று இருமுறை பல் துலக்கிப் பற்களைப் பாதுகாக்கவேண்டும்."
"ஆனால், பல் தேய்க்க எனக்கு போர் அடிக்கிறது!"
"ரோஹன் உனக்கொரு ரகசியம் சொல்கிறேன்" என்றாள் ரியா. அவனுடைய காதில் அதைச் சொன்னாள்.
"ஆனால் ஜிம்மி தன் கைகளைக் கழுவுவதே இல்லையே!"
"ஜிம்மி சாப்பிடுவதற்குக் கைகளை உபயோகிப்பதில்லை, ஆனால், நாம் உபயோகிக்கிறோம். ஆகவே, கிருமிகளை ஒழிக்க நாம் கைகளைச் சோப்பால் நன்றாகக் கழுவவேண்டும்."
"கிருமிகள் கைகளிலும் இருக்குமா?"
"கிருமிகள் எல்லா இடங்களிலும் இருக்கும்."
பௌவ் பௌவ்!
ரியாவுக்குத் தும்மல் வந்தது. வாயைத் தன் கைகளால் மூடியபடி "ஹச்" என்று தும்மினாள். "அப்படிச் செய்யாதே!" என்றான் ரோஹன், "கைகளால் வாயை மூடிக்கொண்டு தும்மக்கூடாது என்று என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்."
"ஏன் அப்படி?"
"கைகளால் வாயை மூடித் தும்மினால், கிருமிகள் நம் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அதன்பிறகு நாம் கை கழுவவில்லை என்றால் அது மற்றவர்களுக்குப் பரவும், நோயைத் தரும்."
ரியா தன் அழுக்குக் கைகளை வீசியபடி, "இதோ கிருமிகள்!" என்று கூவினாள், ரோஹனைத் துரத்தினாள்.
பௌவ் பௌவ் பௌவ்!
பின்னர், கைகளைச் சரியாகக் கழுவுவது எப்படி என்று ரோஹனுக்குச் செய்து காட்டினாள் ரியா. "முதலில் கைகளைக் குழாய் நீரில் நனைத்துக்கொண்டு குழாயை மூடிவிடவேண்டும். பிறகு, சோப்பை எடுத்து உள்ளங்கை, புறங்கை, விரல் இடுக்குகளில் பரவும்படி தடவவேண்டும். 20 வினாடிகளுக்கு இரு கைகளையும் நன்றாகத் தேய்க்கவேண்டும். அதன்பிறகு, கைகளை நீரில் கழுவி உலர்த்தவேண்டும்."
"இதைச் செய்ய ரொம்ப நேரம் ஆகுமே!"
"நான் சொன்ன இரகசியம் நினைவில் இருக்கிறதா?" என்று கேட்டாள் ரியா.
ரோஹன் முகத்தில் புன்னகை.
அவர்கள் விளையாடிவிட்டு வீடு திரும்பினார்கள், ரியா ரோஹனைத் தொட்டு, "நாம் முதலில் செய்யவேண்டியது ஒன்று இருக்கிறது" என்றாள்.
"என்ன? இன்னும் விளையாடவேண்டுமா?" அவர்களுடைய தாய் கேலியாகக் கேட்டார்.
"குளிக்கவேண்டும்."
"அம்மா! எல்லா இடங்களிலும் கிருமிகள் இருப்பது உனக்குத் தெரியாதா? நம்மால் அவற்றைப் பார்க்கமுடியாது. ஆனால், அவை நம் தோலிலும் துணிகளிலும் ஒட்டிக்கொண்டிருக்கும்."
"அதனால்தான் நாம் தினமும் குளிக்கவேண்டும்."
"...அப்போதுதான் கிருமிகள் நீங்கும்."
"முதலில் உடல்முழுவதையும் தண்ணிரீல் நனைத்துக் கொள்ளவேண்டும்" என்றார் அம்மா, "பின்னர், சோப்பை உடல்முழுவதும் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவேண்டும்."
தாய் தன் கைகளால் சோப்பைத் தேய்க்க, அந்தக் குறுகுறு உணர்வில் ரியாவும் ரோஹனும் நெளிந்தார்கள்.
பிறகு, மீண்டும் தண்ணீர் ஊற்றிக்கொண்டார்கள்.
"சுத்தமான துண்டால் நன்றாக உடம்பைத் துடைத்துக்கொள்ளுங்கள்."
"ஆஹா என்ன சுத்தம்!
பௌவ் பௌவ்!
"அடுத்தது, ஜிம்மி!"
"உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்றார் அவர்களுடைய அப்பா.
"அதற்குமுன் நாம் செய்யவேண்டியது ஒன்று உள்ளது" என்றாள் ரியா. "எடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக வைக்கவேண்டும்." "ஹ்ம்ம், இதைச் செய்யத்தான் வேண்டுமா?" ரோஹன் கொட்டாவி விட்டபடி கேட்டான். "அன்றைக்குப் பந்து கிடைக்காமல் நெடுநேரம் தேடினாயே, நினைவிருக்கிறதா? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டால், பின்னர் அவற்றை எடுப்பது எளிது."
"அதனால், வீடும் சுத்தமாக இருக்கும்!"
"நீங்கள் இருவருமே புத்திசாலிகள்" அவர்களுடைய அப்பா பெருமையுடன் சொன்னார். "இப்போது தூங்கப்போகலாமே!"
"அதற்குமுன் நாம் செய்யவேண்டியது ஒன்று உள்ளது" ரோஹனை தன்பக்கம் இழுத்தபடி சொன்னாள் ரியா. "நம் ரகசிய மந்திரத்தைச் சொல்லிக் கிருமிகளை மறையவைக்கவேண்டும்."
ரோஹனும் தலையாட்டினான்.
சிறிதுநேரத்திற்குப்பின் அவர்களுடைய வழக்கமான பாடல் கேட்டது.
"ஓ! இதுதான் உங்கள் ரகசிய மந்திரமா?" என்றார் அப்பா, "பல் தேய்ப்பதைச் சுவாரசியமாக்க ஒரு பாட்டா?"
"கைகழுவும்போதும்கூட இதைப் பாடுகிறார்கள்!"
"நல்ல யோசனை!" என்றார் அம்மா.
பௌவ் பௌவ்!
ரோஹனும், ரியாவும் தங்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் எப்படி?"
அவர்கள் கிருமிகளோடு ஒரு விளையாட்டை ஆடுகிறார்கள். அதில் யார் ஜெயித்தார்கள் தெரியுமா?
அசுத்தம் இருந்தா கிருமிக்குப் பிடிக்கும்!
கூட்டம் கூட்டமாய் அங்கேயே இருக்கும்!
பல்லைத் தேய்ப்போம், கைகளைக் கழுவுவோம்!
பாவம் கிருமிகள்! ஓட்டம் பிடிக்கும்!
குளித்தால் நேரம் வீணாய் போகும் என
கிருமிகள் சொல்வதைக் கேட்டால் சோகம்!
சோப்பைத் தேய்த்துக் குளித்தால் போதும்
கிருமிகள் பயந்து ஓடிப்போகும்!
சுத்தமான வீடு பார்க்கவே அழகு!
வேண்டும் பொருளைத் தேடுவதும் எளிது!
சுத்தம் என்பது வழக்கம் ஆகட்டும்!
ஒழுங்கு என்றுமே பழக்கம் ஆகட்டும்!
நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்,
இன்றும் என்றும் வாழ்க்கையில் சேரட்டும்!
நீங்களும் இதுபோல் உங்களுடைய ரகசியப் பாடலை உருவாக்கிப் பாடுங்கள், அதன்மூலம் ஒவ்வொரு வேலையிலும் சுவாரசியம் சேருங்கள்!